விழித்திருந்து ஜாக்கிரதையாய் இருங்கள்
- Kirupakaran
- Dec 11, 2022
- 7 min read

இயேசு தமது தேவாலயத்தைப் பெற மீண்டும் வருவதாகச் சொல்லி இப்போது 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அது நடப்பதை நாம் இன்னும் காணாததால், மந்தமாகி மனநிறைவு அடைந்துவிட்டோம். சோம்பேறித்தனத்தை நோக்கிய ஒரு போக்கு உருவாகியுள்ளது. நாட்கள் செல்லச் செல்ல, ஆவிக்குரிய காரியங்களில் தூங்கிவிட்டோம். ஆனால் இயேசு கூறுகிறார், லூக்கா 12:40 : “அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்”.
“ஆயத்தமாயிருங்கள்” என்று வார்த்தை சொல்கிறது. எனவே நாம் எப்படி ஆயத்தமாக இருக்க வேண்டும்? எவ்வளவு காலம் ஆயத்தமாக இருக்க வேண்டும்? என்று பார்ப்போம். நாம் சிறிது நேரத்திற்குப் பிறகு சோர்வடைந்து விடுகிறோம், “நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார்”என்று அவருடைய வார்த்தை கூறுகிறபடியால் நாம் எப்படி விழித்திருந்து ஆயத்தமாக இருப்போம்.
நீங்கள் எப்படி ஆயத்தமாக வேண்டும்?
நாம் ஏதேனும் இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும் போது மட்டுமே தயாராகிறோம். மற்றபடி, சில சமயங்களில் படுக்கையில் இருந்து வெளியே வருவதற்கு கூட எந்த மனநிலையும் இல்லாமல் சோம்பேறியாக இருப்போம். நாம் தயாராக இல்லாமல் இருப்பதனால் நேர்த்தியாக, நல்ல உடையணியாமல் இருக்கும் சில நாட்கள் இருக்கும். நமது ஆவிக்குரிய வாழ்க்கையிலும் அதே மனப்பான்மையுடன் இருப்போம்.
“ஆயத்தமாயிருங்கள்” என்று இயேசு கூறுகிறார். இதன் அர்த்தம் என்ன? சில ஆவிக்குரிய அடிப்படைகளோடு நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆண்டவர் இந்த உலகத்தையும் இந்த உலகில் உள்ள அனைத்தையும் படைத்தார். அவரால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினமும் அவருக்குக் கீழ்ப்படிகிறது, மனிதனைத் தவிர.
தேவன் மனிதனைத் தம்முடைய சாயலாகப் படைத்தார் - ஆதியாகமம் 1:27 "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்". ஒழுக்கம், நேர்மை, பண்பு மற்றும் சுயக்கட்டுப்பாடு எல்லாவற்றிலும் அவரைப் போலவே இருக்கும்படி நம்மை உண்டாக்கினார். சர்வ வல்லவருக்கு பதிலளிக்க வேண்டும் என்ற உணர்வு மனிதனுக்கு உள்ளது. பூமியில் தனது குறுகிய வாழ்க்கைக்காக மட்டுமே மனிதன் படைக்கப்படவில்லை. அவன் உலக இன்பங்களை அனுபவிப்பதற்காக மட்டுமே படைக்கப்படவில்லை, அவன் தேவனோடு நித்தியமாக வாழ்வதற்காக படைக்கப்பட்டான். நீங்கள் இந்த பூமியில் நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும், தேவன் மனிதனை அவருடன் நித்தியமாக வாழ்வதற்காகப் படைத்தார்.
நாம் இவ்வுலகில் இருப்பதால் தேவனுடைய நோக்கத்தை மறந்து விடுகிறோம். சாத்தானால் வஞ்சிக்கப்படுகிறோம். நமது மனம் "பாழ்பட்ட மனமாக" மாறி, உலக இன்பங்களால் நிறைந்துள்ளது.
ரோமர் 1:29-31 “அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய், உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்”.
நாம், பலவிதமான இன்பங்களைக் கொண்ட உலகின் சோதனைகளால் வழிநடத்தப்படுகிறோம். சாத்தான் உடனடியான இன்பத்தை மட்டும் காட்டி, அதன் விளைவுகளைப் பற்றி மக்களுக்குச் சொல்லாமல் விடுகிறான். இந்த விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் சோதிக்கப்படும் போதெல்லாம், சோதனையானது எப்போதும், பாவத்திற்கு வழிவகுக்கும் ஒரு குறிப்பிட்ட தடைசெய்யப்பட்ட இன்பத்தையே அளிக்கிறது. நீங்கள் பாவத்தில் இருந்தால், தேவனுடன் நித்தியத்தில் உங்களுக்கு எந்த இடமும் இல்லை.
இரட்சிப்பு விசுவாசத்தினால் வருகிறது, கிறிஸ்துவில் இரட்சிப்பு இல்லாமல் நித்தியத்தில் இடமில்லை. நீங்கள் தேவனை விசுவாசிக்க வேண்டும், அவர் நல்லவர், கனிவானவர், உங்கள் மீது அக்கறை கொண்டவர் என்று நம்ப வேண்டும். தேவன் நல்லவர் என்று நீங்கள் நம்பாதபோது பாவம் வருகிறது. எனவே அவர் செய்யக் கூடாது என்று உங்களுக்குச் சொல்லும் விஷயங்களையும், உங்களுக்குள் இருக்கும் மனசாட்சியின் மூலம் தவிர்க்கச் சொல்லும் விஷயங்களையும் செய்கிறீர்கள். அவர் கீழ்ப்படியச் சொல்வனவற்றிற்கு நீங்கள் கீழ்ப்படிவதில்லை. ஏன்? நீங்கள் அவரை விசுவாசிக்காததால், உங்கள் சுயத்தின்படி செய்ய முடிவு செய்கிறீர்கள், அதன் விளைவு பாவத்திற்கு வழிவகுக்கும்.
"ஆயத்தமாவதில்" முதல் படி இரட்சிப்பைப் பெறுவது - இரட்சிப்பு விசுவாசத்தின் மூலம் வருகிறது. வேதவசனங்களில் உள்ள கிறிஸ்துவின் போதனைகளுக்கு உங்கள் இருதயங்களைத் திறந்து, 'ஆண்டவரே, நான் உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிய விரும்புகிறேன்' என்று கூறுங்கள். வேதத்திற்குத் திரும்பி அதைப் படிக்கும்படி உங்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். நீங்கள் ஜெபிக்கும்போது, 'கர்த்தராகிய இயேசுவே, நீங்கள் என்னிடம் விட்டுவிடச் சொல்லும் அனைத்தையும் விட்டுவிடவும், நீங்கள் செய்யச் சொன்ன அனைத்தையும் செய்யவும் எனக்கு உதவுங்கள். நீங்கள் ஒரு நல்ல தேவன் என்று நான் விசுவசிக்கிறேன்’ என்று சொல்லுங்கள். நீங்கள் அதைச் செய்யும்போது, கலாத்தியர் 3:23-29 இல் எழுதப்பட்ட தேவனின் வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்.
கலாத்தியர் 3: 23-29 - "ஆதலால் விசுவாசம் வருகிறதற்கு முன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம். இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது. விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்".
சகோதரரே, கிறிஸ்துவைப் பின்பற்றும் இந்த மனப்பான்மை சில நாட்களுக்குத்தான் வருகிறது, அதன் பிறகு நான் தடம் புரளுகிறேன் என்று நீங்கள் கூறலாம். நம்மில் பெரும்பாலோர் ஆவிக்குரியவைகளில் வளர்வதில்லை, அதுதான் நாம் பாதையில் இருந்து விலகுவதற்கான பிரச்சினையின் வேர். "விழுங்கும் சிங்கமாக" இருக்கும் எதிரி இதைத் தட்டிச் செல்ல உலகின் இன்பங்களைக் கொண்டு நம்மைத் தூண்டுகிறான், அதினால் நாம் பாதையிலிருந்து வெளியேறுகிறோம். மாறாக, நீங்கள் தேவனுடைய வார்த்தையை அணிந்துகொண்டு அவருடைய செயல்களைப் பின்பற்றத் தொடங்கும் போது, பழைய வாழ்க்கை போய்விடுகிறது.
2 கொரிந்தியர் 5:17 – “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின”. புதிதாக்கப்பட்ட இரட்சிப்பு உங்களில் இருந்தால், நீங்கள் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய ஆரம்பித்து, நீதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழத் தொடங்குவீர்கள்.
ரோமர் 8:6-8,10 – “மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்”.
எவ்வளவு காலம் நாம் தயாராக இருக்க வேண்டும்?
நீங்கள் இரட்சிப்புக்குள் நுழைந்தவுடன், கிறிஸ்தவ வாழ்வு என்பது ஒரே முறை நிகழ்வல்ல. கிறிஸ்துவின் வழிநடத்துதலால், கிறிஸ்துவால் வாழும்,வாழ்நாள் முழுமைக்குமான ஒரு அர்ப்பணிப்பு. அதனால்தான் நாம் தேவனின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம். ரோமர் 8:14 - "மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்".
இந்த உலகில் வாழும்போது, நம்மை சோதனைகளுக்குள் விழச் செய்யும் பாடுகள் / சவால்கள் இருக்கும், அது பாவத்திற்கு வழிவகுக்கும். ரோமர் 6:23 - "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்". நாம் பாவத்திற்கு நம்மைக் கொடுக்கும் தருணத்தில், ஆயத்தமில்லாத நிலைக்குத் திரும்புவதற்கு நாம் நம்மைத் தளர்த்திக் கொள்கிறோம்.
நாம் உலகில் வாழும்போது, நம் எண்ணங்கள் உலகில் உள்ள மக்களைப் போல இருக்கக் கூடாது, நம் சிந்தனைகள், எண்ணங்கள் எல்லாம் கிறிஸ்துவால் வழிநடத்தப்பட வேண்டும், அது அவருக்குப் பிரியமான வாழ்க்கையை உருவாக்கும். 2 கொரிந்தியர் 10: 3-5 - "நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்".
தேவனுடன் நடக்கும்போது, நாம் உலகின் பல விஷயங்களை இழந்து எந்த இன்பமும் இல்லாமல் வாழ முனைகிறோம் என்ற ஒரு பொதுவான தவறான கருத்து உள்ளது. இது கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வாழ்க்கையிலிருந்து நம்மை விலக்கி வைக்க சாத்தான் பயன்படுத்தும் ஒரு அப்பட்டமான பொய். பூமியில் நமக்குத் தேவையான அனைத்தும் வழங்கப்படும் என்று தேவனின் வார்த்தை நமக்கு வாக்குறுதி அளிக்கிறது (இதில் அனைத்து உலக ஆசீர்வாதங்களும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும் அடங்கும்). லூக்கா 12: 30-31 - "இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார். தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்".
தேவன் தமது "கிருபையையும் இரக்கத்தையும்" தமது பிள்ளைகளுக்குத் தருகிறார். உலகில் உள்ள அனைத்தையும் நம்மால் சாதிக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும். எபிரேயர் அதிகாரத்தை எழுதியவர் இந்த உண்மையை இன்னும் வரைபடமாக முன்வைக்கிறார் ("நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத"... "இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும்" .. "கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்"). எபிரேயர் 4:15-16 - "நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்".
கிறிஸ்துவில் நடக்கும்போது, கிறிஸ்துவிடமிருந்து நாம் (ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகாரமான) ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்கிறோம். நம் பலத்தால் தான் இவற்றை சாதித்தோம் என்று நாம் பெருமை கொள்ளும்படி சாத்தானால் ஏமாற்றப்படுவோம். அந்த மனப்பான்மையைப் பெறும்போது நாம் உண்மையில் "கிருபையிலிருந்து விழுகிறோம்”.
ஆயத்தமாவது என்பது மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஓடுவது போன்றது. அதிக நேரம் ஓடுவதற்கு நமக்கு ஆற்றலும் வலிமையும் தேவை. ஆவிக்குரிய வார்த்தைகளில் சொல்வதானால், கிறிஸ்துவிடமிருந்து சுத்திகரிப்பைப் பெற்றவுடன் நமக்கு ஆற்றல் வருகிறது - நாம் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்பட்டு ஆயத்தமாக்கப்படுகிறோம். தேவன் முதலாவதாக "பாவியை" மன்னிக்கிறார், பின்னர் அவரது "பாவங்கள்" தானாகவே கவனித்துக் கொள்ளப்படும். பாவம் செய்வதால் நாம் பாவிகள் அல்ல; நாம் பாவிகள் அதனால் பாவம் செய்கிறோம். ஆதாம் பாவம் செய்தபோது பாவியானான்; ஆதாமின் வழித்தோன்றல்களாகிய நாம் பிறப்பால் பாவிகள். ரோமர் 5:12 "இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று".
இந்த சுத்திகரிக்கும் செயல்பாட்டில், தேவன் நம்மை மன்னிக்கும்போது என்ன செய்கிறார்?
அவர் நம்முடைய பாவங்களை ...கிழக்கிலிருந்து மேற்காக.. (கிழக்கிலிருந்து மேற்காக அளவிட முயற்சியுங்கள், அது ஒரு முடிவற்ற சுழற்சி). சங்கீதம் 103:12 – “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்”.
அவர் நம் பாவங்களை .... அவருடைய முதுகுக்குப் பின்னால் எறிந்து விடுகிறார். ஏசாயா 38:17(b) - "... என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்".
அவர் நம்முடைய பாவங்களை மேகங்களைப் போலவும், நம் பாவங்களை காலை மூடுபனி போலவும் அகற்றுகிறார். ஏசாயா 44:22 - "உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்".
நம் பாவங்களை அடக்குகிறார் ... நம் பாவங்களை சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார். மீகா 7:19 "அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்".
அப்படியானால் எவ்வளவு காலம் நாம் இந்த சுத்திகரிப்பை செய்ய வேண்டும்? இந்த உலகில் நம் வாழ்வின் கடைசி மூச்சு வரை இதை செய்தவுடன், நீங்கள் அவருடைய பார்வையில் நீதிமான்களாகவும் பரிசுத்தர்களாகவும் ஆகிவிடுவீர்கள். மரணம் நம்மை சந்திக்கும் போது, மனித உடல் அழிந்து, நாம் ஆவிக்குரிய உடலை அணிந்துகொள்கிறோம். 1 கொரிந்தியர் 15:51-52,54 - "இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்".
விழித்திருந்து ஜாக்கிரதையாய் இருத்தல்
நீங்கள் ஆயத்தமாகும் போது, தேவன் வரும் நேரம் ஆச்சரியமாக இருக்கும். வெளிப்படுத்தலில் இயேசு இவ்வாறு கூறுகிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் 16:15 - "இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்".
2 பேதுரு 3:10-14 - “கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும். இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போகும். அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். ஆகையால்,பிரியமானவர்களே இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்”.
நீங்கள் இதைப் படித்தால், அவர் வரும்போது எப்படி இருக்கும், நாம் எப்படித் தயாராக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு பார்வையை தேவனுடைய வார்த்தை நமக்குத் தருகிறது. 2 பேதுரு 3:14(b) - "நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படாமல் ஜாக்கிரதையாயிருங்கள்".
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நம்மை கறையற்றவர்களும் பிழையற்றவர்களாகவும் ஆக்குவதற்கான தேவனின் அழைப்பு, நம்மை பரிசுத்தமாக்குவதற்கான அவரது அழைப்பைத் தவிர வேறில்லை - 1 தெசலோனிக்கேயர் 4:7 - "தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்".
இயேசுவைப் பார்த்து, பரிசுத்தத்தின் பாதையில் செல்லுங்கள், பரிசுத்தம் என்பது நம் தேவனின் மிகச் சிறந்த தன்மை.
ஏசாயா 6:3 - "ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்".
வெளிப்படுத்தின விசேஷம் 4:8(b) - "... அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன".
வேறு எந்த குணநலனும் திரும்ப திரும்ப சொல்லப்படவில்லை. “பரிசுத்தம்” என்பது பைபிளில் 900 தடவைகளுக்கு மேல் வருகிறது.
நமது ஆவிக்குரிய போதனைகளில் பரிசுத்தம் என்பது மிகவும் புறக்கணிக்கப்பட்ட பாடம். பல விசுவாசக் கூட்டங்கள், வல்லமை கூட்டங்கள், வரமளிக்கும் கூட்டங்கள் போன்றவை நடக்கின்றன, ஆனால் பரிசுத்தக் கூட்டங்கள் எங்கே?
பரிசுத்தம் என்பது தேவனின் குணாதிசயம். மனிதனிடம் இந்த பரிசுத்த குணம் இல்லை, ஆனாலும் தேவன் மனிதனுடனான உறவை விரும்புகிறார். அதைச் செய்வதற்கு அவர் நம்மை பரிசுத்தமாக இருக்கும்படி எதிர்பார்க்கிறார். அப்படியானால் நம்மிடம் காணப்படாத,அந்த குணம் இல்லாமல் நாம் எப்படி பரிசுத்தமாக இருக்க முடியும்? அவரை முழுவதுமாகச் சார்ந்து தான் இதைப் பெற்றுக் கொள்ள முடியும். அவரால் மட்டுமே நம்மை பரிசுத்தமாக்க முடியும்.
பரிசுத்தம் பற்றிக் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம் இதுதான். அதாவது நானே அதைச் செய்ய முடியாது. என் பலத்தைச் சார்ந்திருக்க முடியாது.
என்னுடைய பரிசுத்தமாக்குதலுக்காக நான் முதன்மையாகவும் முழுமையாகவும் இறுதியில் தேவனையே சார்ந்திருக்க வேண்டும்!
பல சமயங்களில் நாம் நீதிமான்களாக உணர்கிறோம். நீதியின் மீதான நமது பார்வை ஆண்டவரின் பார்வையில் அழுக்கு கந்தல் போன்றது. சில சமயங்களில் சில நீதியான செயல்களை செய்வதன் மூலம் நாம் பரிசுத்தமானவர்கள் என்று ஏமாற்றப்படுகிறோம். ஏசாயா 64 : 6 - "நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது".
நீங்கள் உலகில் நடக்கும்போது, தேவனின் பார்வையில் உங்கள் வாழ்க்கை பரிசுத்தமாக இருக்கும்படி கவனித்துக் கொள்ளுங்கள். அதுதான் உங்களை விழிப்போடும் ஜாக்கிரதையாகவும் இருக்கும்படிச் செய்யக் கூடிய ஒரே வழி. விழிப்போடும் ஜாக்கிரதையாகவும் இருக்க நான்கு எளிய விதிகள் உள்ளன.
1. வழக்கமான வேத தியானிப்பு - வேதத்தைத் தியானிக்கும் போது அது தேவனைப் பற்றிய நமது அறிவை பலப்படுத்துகிறது - இது யாருக்கும் கொடுக்கப்படாத ஒரு ரகசியம். மேலும் மேலும் படிக்கும்போது நாம் வளர்கிறோம். நாம் வார்த்தையைத் தொடர்ந்துப் படிக்கும்போது தேவனைப் பற்றிய அறிவில் வளர்கிறோம். அது ஒவ்வொரு நற்கிரியையிலும் பலன்களைக் கொடுத்து அவரைப் பிரியப்படுத்தும் ஒரு நடைக்கு நம்மை வழிநடத்தும். கொலோசெயர் 1:10 - "சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்".
2. விழிப்பான ஜெபங்கள் - ஜெபம் எல்லா ஆயுதங்களையும் கூர்மைப்படுத்துகிறது - எபேசியர் 6:18 - "எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்". உலகில் அவருடைய சித்தத்தையும் வழிகாட்டுதலையும் தேட ஒவ்வொரு சூழ்நிலையிலும் எப்போதும் ஜெபியுங்கள்.
3. நிலையான ஐக்கியம் - ஊக்குவிப்பதன் மூலமும் செயலில் பார்ப்பதன் மூலமும் நாம் வேண்டுமென்றே செய்யக் கூடிய பாவங்களைத் தவிர்க்கிறோம். எபிரேயர் 10:24-26 - "மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து: சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,"
4. அவ்வப்போது சுயபரிசோதனை - நீங்கள் கிறிஸ்துவுக்குள் மீண்டும் பிறந்தவர்களாய் இருந்தால் உங்கள் உடலில் கறை நுழைவதற்கு மூலகாரணமாக இருக்கும் உங்கள் மனதை தினமும் கழுவ வேண்டும். குறிப்பிட்டு கூறுங்கள். பொதுமைப்படுத்தாதீர்கள். தேவன் உங்களிடம் பேசுகிற தினசரி பரிசுத்தத்தைப் பெற்றுக் கொள்ள பாவங்களைக் குறிப்பிட்டு மேற்கோள் காட்டுங்கள்.
கர்த்தர் எதிர்பாராத வேளையில் வருவார் என்பதை நினைவில் வையுங்கள். நாம் ஆயத்தமாய் இருப்போம். விழித்திருந்து ஜாக்கிரதையாய் இருப்போம். அப்பொழுது தான் அவருடன் ஒன்றாக வாழலாம். 1 தெசலோனிக்கேயர் 5:10 - "நாம் விழித்திருப்பவர்களானாலும், நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே".



Comments