top of page

ராஜாவின் பிறப்பு: இம்மானுவேல்

  • Kirupakaran
  • Jan 4
  • 5 min read

ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும், நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுகிறோம். அவருடைய பிறப்பு ஒரு சாதாரண பிறந்தநாள் போலல்லாமல் நம் இருதயங்களை ஆச்சரியத்தால் நிரப்பும் அதிசயங்களால் நிறைந்திருக்கிறது.

 

கடந்த டிசம்பர் மாதம் முழுவதும், இயேசுவின் பிறப்பைச் சுற்றியுள்ள ஆழமான சத்தியங்களை ஆராய்ந்து வருகிறோம். கடந்த இரண்டு வாரங்களாக, மரியாளின் விசுவாசம், யோசேப்பின் கீழ்ப்படிதல், அவர்கள் ஒன்றாக மேற்கொண்ட பயணம் ஆகியவற்றைக் குறித்து சிந்தித்தோம். பரலோக நற்செய்தி எவ்வாறு சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றியது என்பதைக் கண்டோம். மேலும் இந்த நற்செய்தி வானத்திலிருந்து பூமிக்கு எவ்வாறு மேய்ப்பர்களின் மூலம் அனுப்பப்பட்டது என்பதையும் பார்த்தோம். இந்த மேய்ப்பர்களே கிறிஸ்துவின் பிறப்பை முதலில் அறிவித்தனர். 

 

இந்த வாரம், ராஜாவின் பிறப்பை நோக்கி கவனம் செலுத்தலாம். புதிய ஏற்பாடு இயேசுவை "ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா" என்று அறிவிக்கிறது (வெளிப்படுத்தின விசேஷம் 19:16). அவருடைய பிறப்பின்போது ​​சாஸ்திரிகள், "யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?"என்று கேட்டார்கள் (மத்தேயு 2:2).

 

நான்கு சுவிசேஷங்களும் அவருடைய பிறப்பு குறித்த தனித்துவமான கண்ணோட்டத்தை எடுத்துரைக்கின்றன:

  • மத்தேயு இயேசுவை ராஜாவாக வெளிப்படுத்துகிறார்; இது யூத வாசகர்களுக்காக விசேஷமாக எழுதப்பட்டதாகும்.

  • மாற்கு அவரை ஊழியக்காரராக (சேவகராக) வெளிப்படுத்துகிறார்; இது ரோம வாசகர்களுக்காக எழுதப்பட்டது.

  • லூக்கா அவரை மனுஷகுமாரனாக சித்தரிக்கிறார்; இது கிரேக்க வாசகர்களுக்காக எழுதப்பட்டது.

  • யோவான் அவரை தேவனுடைய குமாரனாக அறிவிக்கிறார்; இது உலகமெங்கும் உள்ள எல்லா ஜனங்களுக்காகவும் எழுதப்பட்டது.

 

 

ஆபிரகாமின் வாக்குத்தத்தமும் நமது ஆவிக்குரிய அடையாளமும்

இயேசுவின் வம்சாவளி ஒரு காரணத்திற்காகவே ஆபிரகாமிலிருந்து தொடங்குகிறது. ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: மத்தேயு 1:1

 

தேவன் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையில் அவர் வாக்குத்தத்தம் பண்ணியவை: நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். ஆதியாகமம் 12:2-3

 

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திய அடிமைத்தனத்தின் கீழ் புலம்பியபோது தேவன்  ஆபிரகாமுடன் செய்த இந்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்.

தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். யாத்திராகமம் 2:24

 

அதேபோல, நாம் பாவத்திற்குக் கட்டுப்பட்டவர்களாகவும் அதற்கு அடிமைகளாகவும் இருக்கிறோம். ஆபிரகாமின் சந்ததியரான நம்மை அந்த நிலையிலிருந்து மீட்டு, ஆவிக்குரிய இஸ்ரவேலராக மாற்றவே அவர் நம்மை இரட்சிக்க விரும்புகிறார்.

 

விசுவாசம் பாவத்தின் அடிமைத்தனத்தை முறிக்கிறது. கிறிஸ்துவில் நாம் ஆவிக்குரிய இஸ்ரவேலராக, தேவனுடைய வாக்குத்தத்தத்தின் சுதந்தரராக மாறுகிறோம்.

7.ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக. 29.நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள். கலாத்தியர் 3:7, 29

 

எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நாம் அனைவரும் ஆபிரகாமின் சந்ததியினரே; நாம் பூமியிலுள்ள ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்துவைப் பின்பற்றுவதிலிருந்து மக்களை வஞ்சிப்பதற்காக சாத்தான் கூறும் பொய்களில் ஒன்று, இயேசு ஒரு "அந்நிய தேவன்" என்ற கூற்று. ஆனால் உண்மையில், இயேசுவே ஒரே மெய்யான தேவன், மனிதகுலத்தின் நம்பிக்கை அவரில் மட்டுமே காணப்படுகிறது.

 

 

தேவன் ஏன் இரட்சிப்பிற்கு மனித வழியைத் தேர்ந்தெடுத்தார்?

தேவன் எந்தவொரு முறையையும் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் அவரது நீதியும் ஞானமும் ஒரு குறிப்பிட்ட பாதையை வேண்டியது.

 

மனிதன் மூலமாக (ஆதாமின் பாவம்) மரணம் வந்தது - மனிதனின் மூலமாகவே ஜீவன் வரவேண்டும்.

 

மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 1 கொரிந்தியர் 15:21-22

 

  • முதல் மனிதனாகிய ஆதாம், பாவத்தையும் மரணத்தையும் உலகிற்கு கொண்டு வந்தான்.

  • பிந்தின ஆதாமாகிய இயேசு, (1 கொரிந்தியர் 15:45), ஜீவனையும் உயிர்த்தெழுதலையும் கொண்டு வந்தார்.

 

பாவம் மனிதன் மூலமாக உலகிற்குள் வந்ததனால், மீட்பும் மனிதன் மூலமாகவே வர வேண்டியதாக இருந்தது.

 

 

மரணத்தை ஜெயிக்க இயேசு மாம்சத்தை எடுத்தார்

ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். எபிரெயர் 2:14-15

 

நாம் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருப்பதால் பலவீனமானவர்களாக இருக்கிறோம்; நாம் முதலில் பாவம் செய்தோம். மாம்சம் பலவீனமானது என்பதை இயேசு அறிந்திருந்தார். அந்த மாம்ச பலவீனத்தை சாத்தான் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, சோதனையின் மூலம் நம் அனைவரையும் பாவத்தில் விழச் செய்தான். நாம் விழும்போது, பாவத்திற்கு அடிமைகளாக மாறுகிறோம்.

 

இயேசு அதே போர்க்களத்திற்குள் நுழைந்தார்:

  • நமது மனித இயல்பை அனுபவித்தார்

  • சோதனைகளை எதிர்கொண்டார்

  • மரணத்தின் வல்லமையை உடைத்தார்

  • நம்முடைய நிமித்தமாக சாத்தானை வென்றார்

 

ஆதாம் இழந்ததை கிறிஸ்து மீட்டெடுத்தார்.

 

வம்சாவளியில் வெளிப்பட்ட கிருபை: பாதிக்கப்பட்ட நான்கு பெண்கள்

யூத வம்சவரலாற்றில் பாரம்பரியமாக ஆண்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டனர்; ஆனால் மத்தேயு திட்டமிட்டு நான்கு பெண்களைச் சேர்த்துள்ளார் – அவர்கள் ஒவ்வொருவருக்கும் வேதனையான கடந்த காலம் இருந்தது.

 

தாமார்

  • யூதா பாரேசையும் சேராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்; மத்தேயு 1:3

  • தாமாரின் வரலாற்றை பழைய ஏற்பாட்டில் (ஆதியாகமம் 38:1–30) நாம் வாசிக்கிறோம்.

  • யூதாவின் வம்சாவளியைப் பாதுகாக்கும் பொருட்டு, தாமார் ஒரு விபச்சாரியாக மாறுவேடமிட்டாள்.

 

ராகாப்

  • சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; மத்தேயு 1:5

  • ராகாபின் வரலாற்றை பழைய ஏற்பாட்டில் யோசுவா 2 மற்றும் யோசுவா 6 அதிகாரங்களில் வாசிக்கிறோம்.

  • ராகாப் ஒரு கானானியப் பெண், எரிகோ பட்டணத்தில் இருந்த ஒரு விபச்சாரி. தனது பின்னணியைப் பொருட்படுத்தாமல், எரிகோவைக் கைப்பற்ற இஸ்ரவேலர்களுக்கு உதவ அவள் முக்கியப் பங்கு வகித்தாள்.

 

ரூத்

  • போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்; மத்தேயு 1:5

  • ரூத் / நவோமி பற்றிய வரலாற்றை ரூத்தின் புத்தகத்தில் வாசிக்கிறோம்.

  • ரூத் ஒரு மோவாபிய விதவை; தனது நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் மூலம் தேவனுடைய உடன்படிக்கைக்குள் நுழைந்தாள்.

 

பத்சேபாள்

  • ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்; மத்தேயு 1:6

  • சாலொமோனை ராஜாவாக அமர்த்துவதில் பத்சேபாளின் பங்கு குறித்து 2 சாமுவேல் 11, 12 மற்றும் 1 இராஜாக்கள் 1 அதிகாரங்களில் வாசிக்கிறோம்.

  • பத்சேபாள் தாவீதின் வீழ்ச்சியுடன் தொடர்புடையவளாக இருந்தாலும், மேசியாவின் வம்சவரிசையில் சேர்க்கப்பட்டாள்.

 

இந்த நான்கு பெண்களும் பாவிகளாக இருந்தாலும், அவர்களுடைய வம்சாவளியில் இயேசு பிறந்தது, மிகவும் உடைந்த ஜீவன்களையும் அவர் இரட்சிக்க வந்தார் என்பதை வெளிப்படுத்துகிறது. இது அவர்கள் தலைமுறை முதல் நமது தலைமுறை வரை தொடர்கிறது.

 

பரிபூரணத்தின் காரணமாக அல்ல, அவர்கள் கிருபையினால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

 

ராஜாவை வெளிப்படுத்தும் மூன்று பெயர்கள்

 

1. இயேசு - இரட்சகர்

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். மத்தேயு 1:21

  • இயேசு என்ற பெயர் தமது ஜனங்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிப்பதைக் குறிக்கிறது. பாவத்தின் அடிமைத்தனத்தை உடைப்பதே அவருடைய பிரதான நோக்கம்.

  • அவர் நமது இரட்சகர். பின்னணி, மதம் எதுவாயிருந்தாலும் ஆவிக்குரிய அடிமைத்தனத்திலிருந்து அவரால் எவரையும் மீட்க முடியும்.

  • யோசுவா என்பதற்கு "யெகோவா என் இரட்சிப்பு" என்று பொருள். இது ஒரு பொதுவான யூதப் பெயர்; கிரேக்க மொழியில், இந்தப் பெயர் இயேசு என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

 

2. கிறிஸ்து / மேசியா - அபிஷேகம் செய்யப்பட்ட ராஜா

யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார். மத்தேயு 1:16

  • இயேசு என்பது ஒரு பெயர் மட்டுமல்ல - அது அவரது பணியை வரையறுக்கிறது.

    • அபிஷேகம் செய்யப்பட்ட மீட்பர்

    • வாக்குறுதியளிக்கப்பட்ட மீட்பர்

  • அவர் மேசியா என்று அழைக்கப்படுகிறார், அதற்கு “அபிஷேகம் செய்யப்பட்டவர்” என்று பொருள்.

  • இயேசு பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்யப்பட்டார், அந்த அபிஷேகம் பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டதிலிருந்து ஆரம்பமாகியது.

  • ஒரு இரட்சகரை அனுப்புவதாக தேவன் அளித்த வாக்குத்தத்தம் அவரில் நிறைவேறியது - அபிஷேகம் செய்யப்பட்ட ராஜா, மீட்பர் மற்றும் தேவனுடைய குமாரன்

  • ஜனங்கள் அவரை "மேசியா" அல்லது "இயேசு கிறிஸ்து" என்று அழைக்கும்போது, ​​அவரே தேவனால் முன்னறிவிக்கப்பட்ட நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மீட்பர் என்பதை அவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.

 

3. இம்மானுவேல் - தேவன் நம்மோடிருக்கிறார்

அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். மத்தேயு 1:23

  • இயேசு ஒரு அந்நிய கடவுளோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட கற்பனையோ அல்ல.

  • அவர் ஜனங்களுடனே வாழ வந்த தேவன் - தேவன் நம்மோடிருக்கிறார்.

  • அவர் தமது ஜனங்களுடன் உறவையும் ஐக்கியத்தையும் விரும்பும் தேவன்; அதனால் தான் அவர் இம்மானுவேல் என்று சரியாக அழைக்கப்படுகிறார்.

  • இம்மானுவேல் என்ற பெயர் புதியதல்ல - இது பழைய ஏற்பாட்டிலேயே முன்னறிவிக்கப்பட்டது.

    • ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். ஏசாயா 7:14

    • யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து, கழுத்துமட்டும் வரும் என்றார். இம்மானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும். ஏசாயா 8:8

  • இயேசு மற்றும் இம்மானுவேல் இரண்டும் ஒருவரையே குறிக்கின்றன - நம்மோடு இருக்கும் தேவனாகிய இரட்சகர். 

 

ராஜாவின் பிறப்பு நமக்கு சொல்லும் செய்தி

இயேசுவின் பிறப்பு ஒவ்வொரு டிசம்பரிலும் நாம் நினைவுகூரும் ஒரு வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல - இது மனிதகுலத்திற்கான தேவனுடைய தனிப்பட்ட அழைப்பாகும்.

 

இயேசு ஒரு ராஜாவாகப் பிறந்தார், ஆனால் அரண்மனையில் அல்ல. அவர் ஒரு உடைந்த உலகிற்குள், குறைகளுள்ள குடும்ப வரிசையில், மனித பலவீனங்களுடன் நுழைந்தார் - கண்டனம் செய்வதற்காக அல்ல, நம்மைப் போன்றவர்ளை மீட்பதற்காக. அவரது வம்சவரலாறு நமக்கு சக்திவாய்ந்த செய்தியை சொல்கிறது: எந்த கடந்தகால பாவமும், எந்த சிதைந்த வாழ்க்கையும், எந்த அடிமைத்தனமும் அவருடைய கிருபைக்குத் தடையாகாது.

 

ஆபிரகாமின் மூலம், தேவன் எல்லா ஜாதிகளுக்கும் ஆசீர்வாதத்தை வாக்குத்தத்தம் பண்ணினார். இயேசுவின் மூலம், அந்த வாக்குத்தத்தம் நிறைவேற்றப்பட்டது. நாம் இனியும் நமது பின்னணி, தோல்விகள் அல்லது மத அடையாளங்களால் வரையறுக்கப்படுவதில்லை. கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் மூலம், நாம் தேவனின் வாக்குத்தத்தத்திற்கு சுதந்தரராயும், அவருடைய ராஜ்யத்தின் குடிகளாகவும் மாறுகிறோம்.

 

மனிதகுலம் பாவத்தை மேற்கொள்ள முடியாததாக இருந்ததால் இயேசு மாம்சமானார். ஆதாம் தோல்வியடைந்த இடத்தில், கிறிஸ்து வெற்றி பெற்றார். மரணம் ஆண்ட இடத்தில், இயேசு ஜீவனைக் கொண்டுவந்தார். பயம் நம்மை அடிமைப்படுத்திய இடத்தில், இயேசு சங்கிலிகளை உடைத்தார். நாம் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ராஜா பிறந்தார்.

 

 

அவருடைய நாமங்கள் நமக்கான அவருடைய இருதயத்தை வெளிப்படுத்துகின்றன:

  • இயேசு - நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கிறார்

  • கிறிஸ்து (மேசியா) - தேவனால் அபிஷேகம் செய்யப்பட்ட மீட்பர்

  • இம்மானுவேல் - அவர் நம்மோடு இருக்கிறார், அருகில் இருக்கிறார், நமக்காக இருக்கிறார்.

 

இயேசு ஒரு அந்நிய கடவுளோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனையோ அல்ல. தம் மக்களுடன் உறவு மற்றும் ஐக்கியத்திற்காக ஏங்கி, தாமே அருகில் வந்த தேவன்.

 

இயேசு வருடத்திற்கு ஒரு முறை போற்றப்படுவதற்கோ அல்லது கொண்டாடப்படுவதற்கோ மட்டும் வரவில்லை - அவர் நம் இருதயங்களில் ராஜாவாக ஆட்சி செய்ய வந்தார். இரட்சிப்பு என்பது செயல்களாலோ அல்லது மதத்தாலோ சம்பாதிக்கப்படுவதில்லை, மாறாக விசுவாசத்தாலும் அர்ப்பணிப்பாலும் பெறப்படுகிறது.

 

 

ஒரு எளிய ஜெபம்

கர்த்தராகிய இயேசுவே, உம்மை என் ராஜாவாகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்கிறேன்.

என் இருதயத்திற்குள் வாரும், என் பாவங்களை மன்னித்து, என்னை இரட்சியும்.

நான் இருக்கும் இடத்திலிருந்து என்னை மீட்டெடுத்து, உமது சித்தத்தின்படி வாழ என்னை வழிநடத்தும்.

என் வாழ்க்கையை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் - தயவுசெய்து வந்து என்னை மாற்றும். ஆமென்.


 

 

 

 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page