நோக்கத்துடன் கட்டியெழுப்பும் ஆண்டு
- Kirupakaran
- 1 day ago
- 8 min read

ஒவ்வொரு முறை, புதிய ஆண்டுக்குள் நாம் அடியெடுத்து வைக்கும்போதும், பெரும் நம்பிக்கைகளுடனும் உறுதியான தீர்மானங்களுடனும் ஆரம்பிக்கிறோம். ஆனால் திரும்பிப் பார்த்தால், அந்த ஆண்டு பெரும்பாலும் கலவையானதாகவே மாறியிருக்கும் - பல திட்டங்கள் நிறைவேறாமல் போகின்றன, பல நோக்கங்கள் பாதியிலேயே நின்று போகின்றன. உண்மையில், புத்தாண்டு என்பது கடிகாரத்தின் மீளமைப்பே (Reset) தவிர வேறில்லை. ஒரு நாள், நாளாகவே தான் இருக்கிறது. நேற்றைய வழக்கங்கள் இன்றைய தினத்திலும் தொடர்கின்றன. இருப்பினும், புதிய ஆண்டு ஆழமான எதிர்பார்ப்பைக் கொண்டு வருகிறது - மீண்டும் தொடங்க வேண்டும், மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும், இன்னும் உயர்ந்த ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆசை.
இந்த எதிர்பார்ப்புடன் நாம் நெகேமியாவின் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, ஐம்பத்திரண்டு நாட்களில் எருசலேமின் உடைந்த மதில்களை அவர் எவ்வாறு மீண்டும் கட்டி எழுப்பினார் என்பதைக் கற்றுக்கொள்ளலாம்.
நெகேமியா யார்? (நெகேமியா 1:1-3)
நெகேமியா ஒரு தீர்க்கதரிசியோ ஆசாரியனோ அல்ல, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டாவுக்கு (கிமு 464–423)பானபாத்திரக்காரராகப் பணியாற்றிய ஒரு சாதாரண மனிதர். அவரது பெயருக்கு "கர்த்தர் ஆறுதல் அளிக்கிறவர்" என்று அர்த்தம்.
பானபாத்திரக்காரரின் பதவி மிகுந்த நம்பிக்கையும் செல்வாக்கு மிக்கதாகவும் இருந்தது. ராஜாவின் மதுவை முதலில் சுவைத்துப் பார்க்கும் பொறுப்பு நெகேமியாவுக்கு இருந்ததால் தினமும் தனது உயிரை பணயம் வைத்தார். ராஜாவோடிருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக, ஞானியாகவும், பண்பட்டவராகவும், தேவைப்படும்போது ஆலோசனை வழங்கக்கூடிய திறன் உடையவராகவும் இருக்க வேண்டியிருந்தது. இந்தப் பதவி அவருக்குப் பெரும் செல்வாக்கை அளித்தது, இதைப் பின்னர் தேவன் தமது நோக்கத்திற்காகப் பயன்படுத்தினார்.
தேவன் தமது கிரியையை நிறைவேற்ற விரும்பும் போது, தமது ஊழியர்களை முன்கூட்டியே தயார் செய்து, அவர்கள் இருக்க வேண்டிய சரியான இடத்தில் அவர்களை வைக்கிறார். நெகேமியா அரண்மனையில் இருந்த காலம் தற்செயலானது அல்ல; எதிர்காலத்தில் நடைபெறவிருந்த கட்டியெழுப்பும் பணிக்கான தெய்வீக ஆயத்தமாக அது இருந்தது.
என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன். அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள். நெகேமியா 1:2-3
சாதாரணமாகத் தோன்றிய நாள் நெகேமியாவுக்கு ஒரு திருப்புமுனையாக மாறியது. யூதாவிலிருந்து வந்த தனது சகோதரன் ஆனானியிடம், நெகேமியா எருசலேம் குறித்து விசாரித்தார். அப்போது ஜனங்கள் துயரத்தில் இருப்பதையும், எருசலேமின் அலங்கம் இடிபட்டதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதையும் அறிந்துகொண்டார். அந்த நிலையை மூன்று வார்த்தைகளில் சுருக்கமாகக் கூறலாம்: மீதமுள்ளோர், இடிந்த நிலை மற்றும் நிந்தை.
இந்த வேதனையான செய்தி நெகேமியாவின் உள்ளத்தில் பாரத்தை ஏற்படுத்தியது. அவர் உடனடியாக காரியத்தில் இறங்கவில்லை, உபவாசமும், அழுகையும், ஜெபமுமே அவரது முதல் நடவடிக்கையாக இருந்தது. ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே உபவாசம் கட்டாயமாக இருந்த போதிலும், நெகேமியா பல நாட்கள் உபவாசமிருந்து, அழுது, ஜெபத்தில் நிலைத்திருந்தார். எருசலேமை மீட்க யாராவது ஏதாவது செய்ய வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார், அதற்காகத் தானே செல்லவும் தயாராக இருந்தார்.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
ஒரு புத்தாண்டைத் தொடங்கும் போது, நாம் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று அவரிடம் கேட்க வேண்டும். அவர்தாமே நம் இருதயங்களில் பாரத்தை வைக்கிறார். இவை வெறும் உலகப்பிரகாரமான பொருளாதார இலக்குகள் அல்ல; தேவனின் வார்த்தையில் வேரூன்றிய, அவரின் மகிமைக்காகக் கொடுக்கப்பட்ட தேவனுடைய நோக்கங்களே இவை.
நாம் செய்யும் காரியங்கள் தேவனின் நாமத்தை மேம்படுத்துமா என்பதைப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். நாம் தேவனுடன் நம்மை இணைத்துக் கொள்ளும்போது, கட்டுவதில் எந்த அனுபவமும் இல்லாத பானபாத்திரக்காரரான நெகேமியாவை தேவன் பயன்படுத்தியது போல, தேவன் யாரையும் தம்முடைய சித்தத்திற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியும்.
தேவனை ஜெபத்தில் நாடுவதே முதல் படி. இது விரைவான ஐந்து நிமிட ஜெபம் அல்ல; மாறாக, தேவனை நோக்கி காத்திருந்து, அவருடைய வழிகாட்டுதலைக் கேட்கும் நோக்கமுள்ள செயலாகும்.
நெகேமியாவைப் போல, உடைக்கப்பட்டவைகளுக்காகவும் புறக்கணிக்கப்பட்டவைகளுக்காகவும் நம் இருதயங்கள் பாரப்பட நாம் அனுமதிக்க வேண்டும். உபவாசத்தின் மூலமும் தேவனுடன் நீண்ட நேரம் - மணிநேரங்களோ நாட்களோ - செலவிடுவதன் மூலமும் அவருடைய வழிகாட்டுதலை நாட வேண்டும். அவர் மட்டுமே ஆதியிலேயே முடிவை அறிந்தவர், மேலும் அவர் ஆண்டிற்கான திட்டங்களை அமைப்பார், அவை ஒருபோதும் தோல்வியடையாது.
நெகேமியாவின் ஜெபங்கள் (நெகேமியா 1:5-11)
நெகேமியா ஆழமான விசுவாசம் கொண்டவர்; தேவன் அவருடைய இருதயத்தில் வைத்த பணியை நிறைவேற்ற அவர் முழுமையாக கர்த்தரையே சார்ந்திருந்தார். நெகேமியாவின் புத்தகம் ஜெபத்துடன் தொடங்கி, ஜெபத்துடன் முடிவடைவது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. அவரது வெற்றியானது உத்தியின் மேலோ பதவியின் மேலோ வேரூன்றவில்லை, தேவனை சார்ந்திருப்பதில்தான் இருந்தது.
அவர் எவ்வாறு ஜெபித்தார்?
நெகேமியா ஜெபித்த பாணியைக் கவனிப்பதன் மூலம், நம்முடைய ஜெப வாழ்க்கையில் பின்பற்றக்கூடிய ஒரு மாதிரியை நாம் கற்றுக் கொள்ளலாம்.
1. தேவனைத் துதித்தல்
"பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு,உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே" நெகேமியா 1:5
நெகேமியா "பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே" என்று தேவனை உயர்த்தி தனது ஜெபத்தைத் தொடங்கினார். இதன் மூலம் தேவனுடைய மகத்துவம், உண்மைத்தன்மை மற்றும் உடன்படிக்கை அன்பை வெளிப்படுத்தினார். "பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக" (மத்தேயு 6:9) என்று இயேசு கற்றுக் கொடுத்த ஜெபத்தைப் போல, எதையும் கேட்பதற்கு முன்பாக, தேவனை கனம் பண்ணி நெகேமியா தொடங்கினார். உண்மையான ஜெபம் ஆராதனையுடன் தொடங்குகிறது.
2. தாழ்மையான அணுகுமுறை
உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம். நெகேமியா 1:6
தேவன் தனது வேண்டுதலைக் கேட்கும்படி நெகேமியா மனத்தாழ்மையுடன் ஜெபித்தார். பரலோகத்தின் சர்வவல்லமையுள்ள தேவனிடம் பேசும் ஒரு ஊழியக்காரன் தான் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஜெபம் என்பது கோரிக்கை அல்ல, மாறாக தேவனுடைய இரக்கத்தை நாடி தாழ்மையுடன் செய்யப்படும் விண்ணப்பம் என்பதை அவரது நிலை நமக்கு நினைவூட்டுகிறது.
3. பாவஅறிக்கை மற்றும் பரிந்துரை
நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம். நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம். நெகேமியா 1:6-7
நெகேமியா தனது பாவம் மற்றும் தனது குடும்பத்தினரின் பாவங்கள் உட்பட இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். அவர், "அவர்கள்" என்று ஜெபிக்காமல், "நாங்கள்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி ஜெபித்து, தேசத்தின் பாவங்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். முந்தைய தலைமுறையினரைக் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, பொறுப்பைத் தன் மீது ஏற்றுக் கொண்டு ஜனங்களுக்காகத் திறப்பில் நின்றார். இப்படிப்பட்ட பரிந்துரை ஜெபத்தில் தேவன் மகிழ்ச்சியடைகிறார், மேலும் தம்முடைய பிள்ளைகள் தங்களுக்காக மட்டுமல்லாமல், பிறருக்காகவும் ஜெபிக்க வேண்டுமென அவர் அழைக்கிறார்.
அவர் இஸ்ரவேல் ஜனங்களுக்காகப் பரிந்துபேசி ஜெபித்தார். நாம் பல நேரங்களில் “நான் ஏன் பிறருக்காக, பிறர் பாவங்களுக்காக ஜெபிக்க பொறுப்பேற்க வேண்டும்?” என்று நினைக்கிறோம். ஆனால் உங்களையும் என்னையும் போன்ற விசுவாசிகள் மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காகப் பரிந்து பேச வேண்டும் என்று தேவன் ஆர்வமாக காத்திருக்கிறார்.
4. மனந்திரும்புதல் மற்றும் பாவ மன்னிப்பு
நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும், நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும். நெகேமியா 1:8-9
மோசே மூலம் கொடுக்கப்பட்ட உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களை நெகேமியா தேவனுக்கு நினைவூட்டினார். அவருடைய ஜெபம் வேதாகமத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது, அது மனந்திரும்புபவர்களை தேவன் மன்னித்து மீட்டெடுக்கிறார் என்ற அவரது நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. நெகேமியா 1:8-9, உபாகமம் 28:63-67 மற்றும் உபாகமம் 30:1-10 இல் காணப்படும் அவருடைய வார்த்தைகளை நெகேமியா தேவனுக்கு நினைவுபடுத்தினார்.
1 யோவான் 1:9 இல் கொடுக்கப்பட்டுள்ள கர்த்தருடைய வாக்குத்தத்தத்தை நாம் அவருக்கு நினைவூட்டுவது போல. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 1 யோவான் 1:9
நெகேமியா, தேவன் தாமே தம் ஜனங்களை மன்னித்து, அவர்களை தங்கள் தேசத்திற்கு மீண்டும் கூட்டிச் சேர்க்கவும், தம்முடைய ஆசீர்வாதத்துடனும் தயவுடனும் அவர்களை மீண்டும் நிலைநாட்டவும் வேண்டினார்.
5. தேவனின் வல்லமையில் விசுவாசம்
தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே. ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன். நெகேமியா 1:10-11
நெகேமியா தனது ஜெபத்தை அமைதியான நம்பிக்கையோடு முடித்தார். தான் வெறும் பானபாத்திரக்காரனாக இருந்தபோதிலும், தேவன் தயவையும் வெற்றியையும் தருவார் என்று அவர் நம்பினார்.
நெகேமியா தனது சொந்த திட்டங்களை தேவனிடம் முன்வைக்கவில்லை; பதிலாக, அவர் தேவனை வழிநடத்தும்படி கேட்டு, பின்பற்றுவதற்குத் தன்னை அர்ப்பணித்தார். எருசலேமை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தான் மிகவும் பலவீனமானவன் என்றும் தேவன் அதைச் செய்வதில் வல்லவர் என்றும் நெகேமியா அறிந்திருந்தார்.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
இந்தப் புத்தாண்டைத் தொடங்கும் போது, உங்கள் ஜெப வாழ்க்கையை நேர்மையாகவும் உண்மையாகவும் ஆராய்ந்து பாருங்கள்.
உங்கள் ஜெபங்கள் துதி, தாழ்மை, பாவஅறிக்கை, பரிந்துபேசும் ஜெபம், மனந்திரும்புதல், விசுவாசம் என்று இந்த மாதிரியைப் பிரதிபலிக்கிறதா என்பதை சிந்தியுங்கள்.
ஜெபத்தில் தேவனைத் தேடுவது முதற்கட்டமாகும். பேசுவதற்கு மட்டுமல்லாமல் கேட்பதற்கும் நேரம் ஒதுக்குங்கள். குறிப்பாக கடந்த காலத் தோல்விகள் அல்லது இன்னும் முடிக்கப்படாத பணிகள் என தேவன் எந்த விஷயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறார் என்று கேளுங்கள்.
நம்மை வழிநடத்தும்படி தேவனிடம் கேளுங்கள். பல நேரங்களில் நாம் திட்டங்களை வகுத்து, அவற்றை அவர் செய்து தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், நெகேமியா அதற்கு நேர்மாறாகச் செய்தார், அவர் தனக்கு முன்னால் இருந்த சவாலை தேவனின் முன்வைத்து, அவற்றில் தன்னை வழிநடத்த தேவன் மீது முழு நம்பிக்கையை வைத்தார்.
தேவன் உண்மையுள்ளவர் என்றும் தம்மை நம்புகிறவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை என்றும் வேதம் நமக்கு நினைவூட்டுகிறது.
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். சங்கீதம் 37:5
கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான். எரேமியா 17:7-8
ஜெபத்தின் மூலம் தேவன் தெளிவையும், சமாதானத்தையும், வழிநடத்துதலையும் வழங்குகிறார். அவர் பெரும்பாலும் வேதத்தின் மூலமாகவும் மற்றவர்கள் மூலமாகவும் (நண்பர்கள் / நலம் விரும்பிகள் / மூப்பர்கள் / தேவ மனிதர்கள்) தமது வழிகாட்டுதலை உறுதிப்படுத்துகிறார். இதன் மூலம் நாம் அவருடைய சித்தத்தில் நடந்து கொண்டிருக்கிறோம் என்பதை நமக்கு உறுதிப்படுத்துகிறார்.
மீண்டும் கட்டியெழுப்ப நெகேமியாவிற்கு தேவன் அருளிய கிருபை
அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து, ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன். அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்கு உமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின் கல்லறைகளிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, யூதா தேசத்துக்கு நீர் என்னை அனுப்ப வேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன். நெகேமியா 2:2-5
ராஜா நெகேமியாவின் பாரத்தைக் கவனித்து, அவர் ஏன் சோகமாக இருக்கிறார் என்று கேட்டார். ஆபத்தான தருணமாக இருந்த அது ஒரு தெய்வீக வாய்ப்பாக மாறியது. பதிலளிப்பதற்கு முன்பாக, நெகேமியா ஒரு குறுகிய ஜெபம் செய்து பின்னர் எருசலேமை மீண்டும் கட்டுவதற்கு அனுப்புமாறு தைரியமாகக் கேட்டார்.
ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார். நீதிமொழிகள் 21:1
அந்தப் பணிக்குத் தேவையான அதிகாரம், பாதுகாப்பு மற்றும் வளங்களையும். அவர் கோரினார். தேவனுடைய கரம் அவர் மேல் இருந்தபடியினால், அவர் கேட்ட அனைத்தையும் ராஜா வழங்கினார். நெகேமியாவின் ஆயத்தமும், ஜெபமும் சேர்ந்து, தேவனுடைய பணியைத் தொடங்குவதற்கான வழியைத் திறந்தது.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
நாம் தேவனை முழுமையாகச் சார்ந்திருக்கும்போது, அவர் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட கதவுகளைத் திறக்கிறார். ஒரு பானபாத்திரக்காரனுக்கு ஒரு நகரத்தின் அலங்கத்தை மீண்டும் கட்டுவதற்கான அரச அதிகாரம், பாதுகாப்பு மற்றும் வளங்கள் யாவும் கொடுக்கப்பட்டன.
தேவனால் கூடாதது ஒன்றுமில்லை. பணி பெரியதா, சிறியதா என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் மீது நம் முழு நம்பிக்கையை வைக்கும் போது, அசைக்க முடியாதது போல் தோன்றுவதையும் அவர் நகர்த்துவார். அவருடைய வழிகள் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டவை.
எதிரியின் திட்டங்கள் – மீண்டும் கட்டுவதற்கு எதிர்ப்பு
நெகேமியா 4 முதல் 6 வரையிலான அதிகாரங்கள் எருசலேமின் சுவர்களைக் கட்டுவதை எதிரி எவ்வாறு தடுக்க முயன்றான் என்பதை வெளிப்படுத்துகின்றன. தேவன் ராஜாவின் மூலம் கதவுகளைத் திறந்திருந்தாலும், பணி முடிவடைவதைக் காண நெகேமியா தினந்தோறும் தேவனை சார்ந்திருக்க வேண்டியிருந்தது. தேவனின் பணியைத் தொடங்குவது எப்போதும் எதிர்ப்பை அழைக்கிறது - ஆகையால் நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
நெகேமியா, எதிரியின் நான்கு பொதுவான தந்திரோபாயங்களையும், தேவஜனங்கள் எவ்வாறு அவற்றைக் கையாள்வது என்பதையும் காட்டுகிறார்.
1. பரியாசம் (நெகேமியா 4:1–6)
வேதம் முழுவதும் தேவனுடைய ஊழியர்கள் பரியாசம் செய்யப்பட்டிருப்பது போலவே, எதிரி அலங்கத்தைக் கட்டுபவர்களை பரியாசம் செய்து இகழ்ந்தான்.
நெகேமியா வாக்குவாதம் செய்யவில்லை, பழிவாங்கவில்லை; அவர் ஜெபித்து, கவனத்தை பணியிலேயே வைத்தார்.
பரியாசம் நம்மை திசைதிருப்பவோ சோர்வடையவோ அனுமதிக்காத வரை அவை நம்மை பாதிக்க முடியாது.
எதிரியின் வார்த்தைகளையே நாம் சிந்தித்துக் கொண்டிருந்தால், சாத்தானுக்கு நம் வாழ்க்கையில் ஒரு பிடிமானத்தைக் கொடுத்தது போலாகும்; அதிலிருந்து அவன் இன்னும் நெருக்கமான தாக்குதலை நடத்த முடியும்.
ஜெபித்து, முழு விஷயத்தையும் கர்த்தரிடம் ஒப்படைத்துவிட்டு, பின்னர் பணிக்குத் திரும்புவது தான் நாம் செய்ய வேண்டிய சிறந்த காரியம். தேவன் அழைத்த காரியத்தை செய்வதிலிருந்து உங்களைத் தடுக்கக் கூடிய எந்த விஷயமும் எதிரிக்கு மட்டுமே உதவும்.
2. அச்சுறுத்தலும் மிரட்டலும் (நெகேமியா 4:7–9)
எல்லாத் திசைகளிலிருந்தும் எதிரிகள் ஒன்றிணைந்து, மக்களை பயமுறுத்தி பணியை நிறுத்த முயன்றார்கள்.
நெகேமியா ஜெபித்து நடைமுறை நடவடிக்கைகளை எடுத்தார் - காவலர்களை நியமித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஊக்கப்படுத்தினார்.
தேவனின் பணிக்கு விசுவாசமும் ஆயத்தமும் தேவை: “விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்”.
அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். மாற்கு 13:33
எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். எபேசியர் 6:18
கிறிஸ்தவனின் போராட்டம் மாம்சத்திற்கும் இரத்தத்திற்கும் எதிரானது அல்ல. ஆண்டவருடைய கிரியைக்கு எதிராக மாம்சத்தையும் இரத்தத்தையும் பயன்படுத்தி செயல்படும் சாத்தானும் அவனுடைய தீய ஆவிகளுமே உண்மையான எதிரிகள்.
நாம் இந்த யுத்தத்தில் ஜெயம் கொண்டு, தேவன் கொடுத்த பணியை முடிக்க விரும்பினால், அவர் நமக்குக் கொடுத்துள்ள ஆவிக்குரிய ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும் (எபேசியர். 6:10–18; 2 கொரி. 10:1–6).
· கண்ணுக்குத் தெரிந்த எதிரியை மட்டும் கவனத்தில் கொண்டு, கண்ணுக்குத் தெரியாத எதிரியை மறந்துவிட்டால், நம் சொந்த பலத்தையே நம்பத் தொடங்குவது உறுதி, இது தோல்விக்கு வழிவகுக்கும்.
3. மனச்சோர்வு (நெகேமியா 4:10)
களைப்பும் சந்தேகமும் மக்களில் சிலரை பலவீனப்படுத்தியது.
நெகேமியா புகார்களைப் புறக்கணித்து, தேவனுடைய வாக்குத்தத்தங்களில் இருந்து பலத்தைப் பெற்றார்.
மனச்சோர்வு எதிரியின் சக்திவாய்ந்த ஆயுதம்; ஆனால் விடாமுயற்சியும் ஜெபமும் தேவனுடைய பணியை முன்னோக்கி நகர்த்துகின்றன.
நெகேமியா ஜெபத்திலிருந்தும் தேவனுடைய வாக்குத்தத்தங்களிலிருந்தும் ஊக்கத்தைப் பெற்றார். அவ்வப்போது சிலரிடமிருந்து வரும் புகார்கள் அவரை கலங்கச் செய்யவில்லை.
இருமனமுள்ளவன் விசுவாசமற்றவனும் நிலையற்றவனும் ஆக இருக்கிறான் (யாக்கோபு 1:5-8), மேலும் கர்த்தருடைய பணியைத் தடை செய்கிறான்.
4. பயம் (நெகேமியா 4:11–23)
பயம் எதிரியின் சக்திவாய்ந்த ஆயுதம். ஏனெனில் பயம் நம்மை செயலற்றவர்களாக்குகிறது; பயம் தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது, அது மற்றவர்களையும் செயலற்றவர்களாக்குகிறது.
பயத்தின் காலங்களில், தேவனுடைய மகத்துவத்தை நோக்கிப் பார்க்கும்படி நெகேமியா அவர்களுக்கு நினைவூட்டினார்.
அவர்கள் கர்த்தரை விசுவாசித்து ஒன்றிணைந்து நின்றபோது, தேவன் எதிரியின் திட்டங்களை முறியடித்தார், அதனால் பணியும் தொடர்ந்தது.
நம் இருதயங்களில் பயத்தை உருவாக்கும் சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளும் போது, தேவனுடைய மகத்துவத்தை நினைவுகூர வேண்டும். எதிரி உண்டாக்கும் அந்த பயத்தை தேவனிடம் ஒப்படைத்து, ஜெபியுங்கள்.
வாளும், (கொத்தன்) கரண்டியும்
தேவனுடைய ஜனங்கள் ஒரே நேரத்தில் கட்டியெழுப்பவும் போராடவும் வேண்டும். தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதையும் அவர் தமது பணியை காக்கிறார் என்பதையும் அறிந்து, நெகேமியாவின் பணியாளர்களைப் போல, நாம் ஒரு கையில் கரண்டியையும் (விசுவாசமுள்ள ஊழியம்) மறுகையில் வாளையும் (ஆவிக்குரிய ஆயத்தம்) பிடித்து செயல்படுகிறோம்.
சுவரைக் கட்டுவது மட்டும் போதாது; எதிரி அதை நம்மிடமிருந்து பறித்துவிடாதபடி நாம் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
நாம் விசுவாசமான சீஷர்களாக இருந்தால், கட்டுவதும் போராடுவதும் கிறிஸ்தவ வாழ்க்கையின் இயல்பான பகுதிகளாகும் (லூக்கா14:28-33).
நெகேமியா "உறுதியாகவும் அசையாமலும்" இருந்தார். மேலும், தமது மக்களை வழிநடத்தி 52 நாட்களில் பணியை முடித்தார்.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
நாம் ஜெபம் செய்து தேவனுடைய பணியைத் தொடங்கினாலும் கூட, எதிர்ப்புகள் வரும். எதிரி தேவனுடைய திட்டங்களை எதிர்க்கிறான்; ஆனால் தேவன் பெரியவர் என்றும் அவர் ஏற்கனவே சாத்தானைத் தோற்கடித்துவிட்டார் என்றும் நாம் உறுதியாக இருக்கலாம். தேவன் நம்மிடமிருந்து விசுவாசத்தையே எதிர்பார்க்கிறார் - நமக்கு முன் உள்ள மலைகளை அவர் நகர்த்துவார் என்ற விசுவாசம்.
எதிரி பெரும்பாலும் பரியாசம், வதந்திகள், மன சோர்வு மற்றும் பயத்தைப் பயன்படுத்தி நம்முடைய முன்னேற்றத்தைத் தடுக்க முயற்சிக்கிறான். ஜெபமும், தேவன் அழைத்த பணியில் உறுதியான கவனமுமே நம்முடைய பதிலாக இருக்க வேண்டும்.
கிறிஸ்தவ வாழ்க்கைப் பயணத்தில் போராட்டங்கள் ஒரு பகுதியாகவே இருக்கின்றன. இவை நம்முடைய விசுவாசத்தை வலுப்படுத்தி, தேவனை மேலும் ஆழமாக சார்ந்திருக்க நமக்குக் கற்றுக்கொடுக்கின்றன. சவால்கள் எழும்போது, உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பாருங்கள் - தேவன் உங்கள் பாவத்தைச் சரிசெய்கிறாரா அல்லது நீங்கள் சுயமாக எடுத்தத் தீர்மானங்களைத் திசைமாற்றுகிறாரா அல்லது சோதனைகள் உங்களைச் செம்மைப்படுத்த அனுமதிக்கிறாரா என்பதைப் பாருங்கள். தமது திட்டங்கள் நிறைவேறும்படி நம்மை வழிநடத்த தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்.
திட்டங்களை வகுத்துப் பின்னர் தேவனிடம் அவற்றை ஆசீர்வதிக்கச் சொல்லாதீர்கள். பதிலாக, தினந்தோறும் தேவனுடைய சித்தத்தை நாடி, அவர் நிறைவேற்ற விரும்புகிற காரியங்களுடன் உங்கள் செயல்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
தேவனுடைய நன்மைகளை தவறாமல் நினைவுகூருங்கள்; அவர் செய்த செயல்களுக்கு நன்றி செலுத்துங்கள். பதிலளிக்கப்பட்ட ஜெபங்களையும் முக்கியமான தருணங்களையும் பதிவு செய்து வைத்துக்கொள்வது, அவருடைய உண்மைத்தன்மையை நாம் மறக்காமல் நினைவுகூரவும், தொடர்ந்து அவரைத் துதிக்கவும் உதவுகிறது.
நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாத்திரம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வளங்கள், திறமைகள் மற்றும் செல்வாக்கு அனைத்தும் அவருடைய மகிமைக்காகக் கையாளப்பட வேண்டும். அவர் உங்களை எவ்வாறு பயன்படுத்த விரும்புகிறார் என்று தேவனிடம் கேளுங்கள். ஒவ்வொருவருடைய அழைப்பும் தனித்துவமானது; உங்கள் பயணத்தை பிறருடன் ஒப்பிடாதீர்கள். உங்களை செழிப்பாக்கவும் நிலைநிறுத்தவும் தேவன் உங்களுக்காகத் தனிப்பட்ட திட்டங்களை வைத்திருக்கிறார்.
2026 ஆம் ஆண்டிற்காக தேவன் நமது சபைக்கு அளித்த வாக்குத்தத்தத்துடன் முடிக்கிறேன். நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. எரேமியா 29:11



Comments