பரலோகத்தின் முதல் அறிவிப்பு: மேய்ப்பர்களின் கதை
- Kirupakaran
- 1 day ago
- 5 min read

நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது, ஆனால் ஒரு சாதாரண பிறந்தநாளைப் போலல்லாமல், இயேசுவின் பிறப்பு இன்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அற்புதங்களால் சூழப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கதையை நாம் ஆழமாக நோக்கும் போது, தொட்டிலில் கிடந்த குழந்தையை மட்டுமே நாம் காண்பதில்லை - வானம் பூமியைத் தொடும் தருணத்தையும், இரவின் அமைதியை உடைக்கும் தூதர்களின் அறிவிப்பையும், தாழ்மையான இருதயங்களுக்கு முன்பாக வெளிப்படும் தெய்வீகத் திட்டத்தையும் காண்கிறோம். இவை மனித மனம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு ஆச்சரியமான தருணங்களாக இருக்கின்றன.
டிசம்பர் மாதத்தின் இந்தப் பருவம் முழுவதும், மரியாளின் விசுவாசத்திலிருந்து தொடங்கி, மேய்ப்பர்களின் சந்திப்பு, மரியாள் யோசேப்பின் பயணம் வரை, இயேசுவின் பிறப்பில் அடங்கியுள்ள ஆழமான சத்தியங்களை வெளிக்கொணர்வோம் - வானத்திலிருந்து வந்த நற்செய்தி எவ்வாறு சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றியமைத்தது என்பதைக் கண்டறிவோம்.
நமது கர்த்தரின் பிறப்பு மரியாளின் விசுவாசத்துடனும், யோசேப்பின் கீழ்ப்படிதலுடனும், தேவனுடைய ஒரே பேறாகிய நமது இரட்சகருடனும் தொடங்கியது.
இந்த வாரம், கிறிஸ்துமஸின் மையப் பகுதிக்கு நம் கவனத்தை செலுத்தலாம் - இதுவரை எப்போதும் கேள்விப்பட்டிராத மகத்தான அறிவிப்பு: அது பரத்திலிருந்து பூமிக்கு வந்த நற்செய்தி. குறிப்பிடத்தக்கது என்னவெனில், இந்த செய்தி ராஜாக்களுக்கோ, ஞானிகளுக்கோ அறிவிக்கப்படாமல், இரவில் தங்கள் மந்தைகளைக் காத்துக்கொண்டிருந்த எளிய மேய்ப்பர்களுக்கே அறிவிக்கப்பட்டது.
தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். லூக்கா 2:10
மாட்டுத்தொழுவம் - இயேசு பிறந்த இடம்
தேவதூதரால் மரியாளுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது - இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். லூக்கா 1:31-32
மரியாள் தன்னை கர்த்தருக்கு அடிமையாக ஒப்புக்கொடுத்த பிறகு, குழந்தை அவளுடைய வயிற்றில் வளர்ந்தது. மரியாளும் யோசேப்பும் பெத்லகேமில் இருந்தபோது, அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. வேதம் இதை லூக்கா 2:6–7 இல் பதிவு செய்கிறது.
அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். லூக்கா 2:6-7
மரியாள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
இயேசு தற்செயலாக தொழுவத்தில் பிறக்கவில்லை, தேவதிட்டத்தின்படியே இது நடந்தது.
2 சாமுவேல் 7:12–16 இல் சொல்லப்பட்டிருக்கின்ற தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறும்படி, அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனம் அவருக்கு வாக்குப்பண்ணப்பட்டிருந்தாலும், பிறப்பின்போது அவர் அரசர்களுக்கான கனம் எதையும் பெறவில்லை. ராஜாதி ராஜா தாழ்மையோடு இந்த உலகுக்கு வந்தார்.
தொழுவம் என்றால் என்ன?
தொழுவம் என்பது விலங்குகளுக்கு உணவளிக்கும் இடம்.
அந்தக் காலத்தில், ஆட்டுப்பண்ணைகளில் தொழுவங்கள் பொதுவாக இருக்கும்.
ஆனால் அது குழந்தைக்கான ஒரு இடம் அல்ல. குடும்பங்கள் பொதுவாக புதிதாகப் பிறக்கின்ற குழந்தைகளுக்கு சுகமான, அமைதியான இடத்தைத் தயார் செய்வார்கள். ஆயினும் இயேசு ஒரு தொழுவத்தில் கிடத்தப்பட்டார். அவர் உலகியலான பதவியோ மேன்மையோ இன்றி வந்தார் என்பதை அது காட்டுகிறது.
இந்த தாழ்மையான தொடக்கம் தேவனின் இருதயத்தை வெளிப்படுத்தியது. இயேசு பூமிக்குரிய அதிகாரத்துடன் வராமல், தெய்வீக நோக்கத்துடன் தாழ்மையுடன் வந்தார்.
அந்தத் தொழுவமும் ஒரு அடையாளமாக மாறியது. தேவதூதர் மேய்ப்பர்களிடம் கூறினார்: பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். லூக்கா 2:12
மேய்ப்பர்களும் நற்செய்தியும்: முதல் சாட்சிகளின் பாடங்கள்
அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். லூக்கா 2:9-12
மகிமையும் நற்செய்தியும் ஒன்றாக வந்தன
மேய்ப்பர்களுக்கு தூதன் தோன்றியபோது என்ன நடந்தது?
அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். லூக்கா 2:9
மேய்ப்பர்கள் எளிய மக்கள். அவர்கள் தங்கள் ஆடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அந்தக் காலத்தில், மேய்ப்பர்கள் சிறுமையானவர்களாகவும், ஒதுக்கப்பட்டவர்களாகவும் ஆடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் நகரங்களுக்கு வெளியே தங்கியிருந்தனர். ஆயினும்கூட, வரலாற்றின் மிகப்பெரிய செய்தியை முதலில் பெற்றுக்கொள்வதற்கு தேவன் அவர்களையே தேர்ந்தெடுத்தார்.
தேவதூதன் தோன்றிய போது, கர்த்தருடைய மகிமை மேய்ப்பர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது, அவர்கள் பயத்தாலும் பிரமிப்பாலும் நிறைந்தனர். சாதாரண பயமல்ல; தேவனுக்குரிய பயபக்தியுடனான பயமாக இருந்தது.
இது தேவன் தாழ்மையான இருதயங்களுக்குத் தம்முடைய மகிமையை வெளிப்படுத்துகிறார் என்ற ஒரு முக்கியமான உண்மையைக் காட்டுகிறது. மேசியாவின் நற்செய்தி தேவதிட்டத்தின்படி முதலில் தாழ்மையானவர்களுக்கே அறிவிக்கப்பட்டது - தேவன் தாழ்மையானவர்களைத் தம்முடைய ராஜ்யத்திற்குள் வரவேற்கிறார் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.
தாழ்மையானவர்களுக்கு நற்செய்தி
மேய்ப்பர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது - தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். லூக்கா 2:10-11
இது மனித ஞானத்திலிருந்து வேறுபட்ட தேவனின் ஞானத்தை வெளிப்படுத்துகிறது. மனிதர்கள் சக்திவாய்ந்தவர்களையோ அல்லது செல்வாக்கு மிக்கவர்களையோ தேர்வு செய்யும் போது, தேவன் தம்முடைய மகிமையை வெளிப்படுத்த தாழ்மையானவர்களைத் தேர்ந்தெடுத்தார்: ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். 1 கொரிந்தியர் 1:27-29
இரட்சிப்பின் செய்தி எல்லா மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாக இருந்தபோதும் அதிகாரமோ பதவியோ இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது, ஒவ்வொரு இருதயத்தையும் எவ்வாறு சென்றடைவது என்பதை பரலோகம் அறிந்திருக்கிறது.
அவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு அடையாளம்
பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். லூக்கா 2:12
தேவன் வெவ்வேறு மக்களுக்கு வெவ்வேறு அடையாளங்களைக் கொடுத்தார்:
சாஸ்திரிகளுக்கு, தேவன் ஒரு நட்சத்திரத்தைப் பயன்படுத்தினார் (மத்தேயு 2:1-2).
மேய்ப்பர்களுக்கு, தேவன் ஒரு எளிய அடையாளத்தைக் கொடுத்தார் - தொழுவம்
இந்த அடையாளங்கள் அவர்களிடம் நேரடியாகப் பேசியது. இது தேவன் மக்களை அவர்கள் இருக்கும் இடத்திலேயே சந்திக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
பரலோகத்தில் ஆராதிக்கப்படுகிற ராஜா
அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். லூக்கா 2:13-14
மேய்ப்பர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டபோது, பரலோகமும் மகிழ்ந்தது. அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: ... தேவனைத் துதித்தார்கள். லூக்கா 2:13-14
பரமசேனையின் திரள் தேவனைத் துதித்த போது அங்கே பெரிய கொண்டாட்டம் உண்டாயிருந்தது. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். லூக்கா 2:14
இயேசு பிறந்த தருணத்திலிருந்தே ஆராதிக்கப்பட்டார். பரமசேனை பூமிக்கு இறங்கி தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். நற்செய்தி பரத்தின் சமாதானத்தோடு நமக்கு வருகிறது.
இயேசு இன்றும் பரலோகத்தில் ஆராதிக்கப்படுகிறார், அவர் உயர்ந்த சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். பரலோகத்திலிருக்கின்ற ஜீவன்கள் அவரைத் துதிப்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை: " ... அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன". வெளிப்படுத்தின விசேஷம் 4:8
மேய்ப்பர்கள் பூமியில் அவரை ஆராதிக்கும் முன்பே, பரலோகம் முதலில் அவரை ஆராதித்தது, ஏனென்றால் அவர் உன்னதமானவரின் குமாரனாகவும் என்றென்றும் ராஜாவாகவும் இருக்கிறார்.
வேதம் அறிவிக்கிறது போல: அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான். லூக்கா 1:32–33
தேவனின் ஊழியத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட மேய்ப்பர்கள்
தேவன் தமது ஊழியத்திற்கு சாதாரண மேய்ப்பர்களைப் பயன்படுத்தினார். அவர்கள் எளிமையானவர்களாகவும் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் இருந்தபோதிலும், இயேசுவின் பிறப்பைக் குறித்து சாட்சி கூறவும், அவருடைய மீட்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் தேவன் அவர்களைத் தேர்ந்தெடுத்தார் என்று லூக்கா 2:15-20 இல் படிக்கலாம்.
தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, தீவிரமாய் வந்து, மரியாளையும் யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். கண்டு, அந்தப் பிள்ளையைக்குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள். மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள். மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். லூக்கா 2:15-20
மேய்ப்பர்களிடம் கீழ்ப்படிதலின் ஆவி
சாதாரண மக்கள் தேவனால் தொடப்படும்போது, கீழ்ப்படிதலின் ஆவி உடனடியாகப் பின்தொடர்கிறது. தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, லூக்கா 2:15
மேய்ப்பர்கள் தாமதிக்கவில்லை. இதுவே தேவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் உடனடியான கீழ்ப்படிதல்.
அந்த தொழுவம் அருகில் இல்லாததால் அவர்கள் நள்ளிரவில் நகரம் முழுவதும் தேடி சென்றிருக்க வேண்டும். நற்செய்தியுடன் சேர்த்து, புதிதாகப் பிறந்த ராஜாவைத் தீவிரமாகத் தேடி கனம் பண்ணுவதற்கு தேவன் அவர்களுக்கு வைராக்கியத்தையும் கொடுத்தார். தீவிரமாய் வந்து, மரியாளையும் யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். லூக்கா 2:16
நாம் அவரை உண்மையாகத் தேடும்போது, அவர் கிருபையுடன் தம்மை வெளிப்படுத்துகிறார்.
மேய்ப்பரிலிருந்து & சுவிசேஷகர்களாக
இயேசுவைப் பார்த்த பிறகு, மேய்ப்பர்களால் அந்த நற்செய்தியை தங்களுக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை. கண்டு, அந்தப் பிள்ளையைக்குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள். லூக்கா 2:17
எந்தவிதமான பயமோ, தயக்கமோ, சமூக நிலை குறித்த கவலையோ இல்லாமல், அவர்கள் பார்த்ததையும் கேட்டதையும் பற்றி தைரியமாகவும் எளிமையாகவும் பேசினார்கள்.
அவர்களின் சாட்சியத்தால் மக்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர். மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். லூக்கா 2:18
சாதாரண மேய்ப்பர்கள் சுவிசேஷகர்களாகவும் ஆராதிப்பவர்களாகவும் மாறினர். மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். லூக்கா 2:20
மரியாள் இவற்றையெல்லாம் தன் இருதயத்திலே காத்துக்கொண்டாள்
மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள். லூக்கா 2:19
மேய்ப்பர்கள் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டபோது, மரியாள் அமைதியாக அனைத்தையும் மனதில் குறித்துக் கொண்டு, இந்த அற்புதமான நிகழ்வைப் பற்றி தூதன் அறிவித்த செய்தியை முதலில் கேட்டது தானென்பதை நினைவுகூர்ந்தாள்.
மேசியாவை உலகிற்குக் கொண்டுவருவதற்குத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்த மரியாளின் இருதயம் எவ்வளவு நன்றியால் நிறைந்திருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
மேய்ப்பர்களின் நற்செய்தியிலிருந்து பெறும் ஐந்து பாடங்கள்
தேவன் தாழ்மையான இருதயங்களுக்குத் தமது மகிமையை வெளிப்படுத்துகிறார் - சாதாரண மேய்ப்பர்களைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் சமூக நிலையை விட தாழ்மை மிகவும் முக்கியம் என்பதை அவர் காட்டினார். அவர் நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார். நாமும் தாழ்மையாய் இருப்போமெனில், அவர் தமது மகிமையை நமக்கும் வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார்.
தேவனின் மிகப் பெரிய கிரியைகள் பெரும்பாலும் தாழ்மையான இடங்களில் தொடங்குகின்றன - இரட்சகர் ஒரு தொழுவத்தில் பிறந்தது மூலம் சிறிய தொடக்கங்களை அவமதிக்கக் கூடாது என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். நமக்குச் சிறியதாகவும் முக்கியமற்றதாகவும் தோன்றும் காரியங்களில் தமது பணியைத் தொடங்க அவர் நம்மை அழைக்கிறார். சிறிய பணிகளில் அவரிடம் முழுமையாக ஒப்புக் கொடுக்கும்போது அவருடைய மகிமை வெளிப்படும்.
தேவன் பேசும்போது, கீழ்ப்படிதல் உடனடியாக இருக்க வேண்டும் - மேய்ப்பர்கள் தாமதிக்கவில்லை; கர்த்தர் வெளிப்படுத்தியதைக் காண அவர்கள் உடனடியாகச் சென்றார்கள். அதேபோல், தேவன் நம்மோடு பேசும்போது, உடனடியாகக் கீழ்ப்படிய வேண்டும். தாமதப்படுத்துவதன் மூலமும் ஒத்திவைப்பதின் மூலமும் தேவனுடைய செயல்களுக்கு நம்மை கீழ்ப்படியாமல் இருக்க வைக்க சாத்தான் முயல்கிறான். இன்னும் தாமதியாதீர்கள். உடனடியாகக் கீழ்ப்படியுங்கள், இந்தக் கீழ்ப்படிதல் உங்களின் உள்ளத்திலிருந்தே வர வேண்டும். நீங்கள் உங்களை ஒப்புக்கொடுக்காவிட்டால், தேவன் உங்களை வலுக்கட்டாயமாகக் கீழ்ப்படியச் செய்ய முடியாது.
சமாதானம் நற்செய்தியின் அடையாளம் - மேய்ப்பர்களுக்கு மகிழ்ச்சி அறிவிக்கப்பட்டபோது, பரலோகம் பூமியில் தேவனின் சமாதானத்தை அறிவித்தது. அதேபோல், நற்செய்தி உங்களை அடைந்து, அவர் உங்களை உருவாக்கும் போது, உலகம் கொடுக்க முடியாத உள்ளார்ந்த சமாதானத்தை அவர் உங்களுக்குத் தருகிறார், அதுதான் நீங்கள் நற்செய்தியை ஏற்றுக்கொண்டதற்கும் அவர் அதை உங்களுக்கு வழங்கியதற்குமான அடையாளமாகும்.
இயேசுவுடனான உண்மையான சந்திப்பு சாட்சி கூறவும் ஆராதிக்கவும் வழிவகுக்கிறது - மேய்ப்பர்கள் நற்செய்தியைப் பகிர்ந்து, தேவனைத் துதித்து திரும்பினர். தேவன் தமது நற்செய்தியை அறிவிக்கும் போது, உள்ளார்ந்த மாற்றமும் வெளிப்புற மாற்றமும் ஏற்படுகிறது. மலையில் ஒளி பிரகாசிப்பதை எதுவும் தடுக்க முடியாது.



Comments