top of page

விசுவாசத்தை அறிக்கையிடுதல்

  • Kirupakaran
  • Jun 5, 2022
  • 3 min read


கிறிஸ்தவர்களாகிய நம்மில் பலர் பொதுவெளியில் நம் விசுவாசத்தை அறிக்கையிட வெட்கப்படுகிறோம். ஆனால் அதே சமயம், கிறிஸ்தவர்கள் அல்லாத நண்பர்கள் சிலர் தங்கள் மதத்தை பொதுவில் ஒப்புக்கொள்வதற்கு வெட்கப்படுவதில்லை. ரோமானியர்களிடம் பவுல் பேசியதைக் குறித்து நான் தியானித்தபோது, நம் விசுவாசத்தை அறிக்கையிடுவது மற்றும் அதன் தாக்கங்கள் பற்றிய ஆழமான புரிதல் எனக்கு கிடைத்தது.


“என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்”. ரோமர் 10:9-13

பவுலின் போதனையின் பின்னணி

  • முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிறிஸ்தவர்கள் தெருவில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, "இயேசுவே ஆண்டவர்" என்று தங்களுக்குள்ளே வாழ்த்திக் கொள்வார்கள். அதே போல் ஒருவர் ஞானஸ்நானம் எடுக்கும்போது, "இயேசுவே ஆண்டவர்" என்று சொல்வார்கள். கிறிஸ்துவைப் பின்பற்றிய மக்கள், குழுவாக இருந்ததை அடையாளம் காண்பதற்கு, இது பல விசுவாசிகளின் பொதுவான விசுவாச அறிக்கையாக இருந்தது. அவர்களில் சிலர், "அவர் உயிர்த்தெழுந்தார்" என்று கூறுவார்கள். ஆனால் பெரும்பாலோர் "இயேசுவே ஆண்டவர்" என்று கூறுவார்கள். அது உண்மையில் முதல் நூற்றாண்டு தேவாலயத்தின் தனித்துவமான அறிக்கையாக மாறியது. நாளடைவில் இதுவே ஒரு கிறிஸ்தவ சகோதரரை வாழ்த்தும்போது, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லும் பழக்கமாக மாறியது என்று நம்புகிறேன்.

  • முந்தைய ரோமானிய கலாச்சாரம் பல ஆண் மற்றும் பெண் தெய்வங்களைக் கொண்டிருந்தது. "இயேசுவே ஆண்டவர்" என்று அவர்கள் சொன்னபோது, அது மற்ற எல்லா தெய்வங்களையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி, எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு தேவன் இயேசு மட்டுமே என்று சொன்னது.

இயேசுவே ஆண்டவர்

நாம் ஜெபத்தில் "ஆண்டவர்" என்ற வார்த்தையை பலமுறை பயன்படுத்துகிறோம். பைபிளிலும் இதை வாசிக்கிறோம். "ஆண்டவர்" என்ற வார்த்தை எங்கிருந்து வருகிறது? "இயேசுவே ஆண்டவர்" என்பதன் பொருள் என்ன?

  • உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, இயேசுவுக்குப் பயன்படுத்தப்பட்ட “ஆண்டவர்” என்ற பட்டம், மரியாதை, புகழ் பட்டத்தை விட அதிகமானது. இயேசு தம் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு சீடர்களுக்குத் தோன்றியபோது தோமாவின் ஆச்சரியத்துடன் இது தொடங்கியது. “தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்”.யோவான் 20:28. அப்போதிருந்து, அப்போஸ்தலர்களின் செய்தி, "இயேசுவே கர்த்தர்", "இயேசுவே ஆண்டவர்" என்பதாகும்.

  • "இயேசுவே ஆண்டவர்" என்ற கூற்றுக்கு இயேசுவே தேவன் என்று பொருள். "வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்" இயேசுவுக்கு உண்டு (மத்தேயு 28:18). "கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால்" என்று வெளிப்படுத்துதல் 17:14 இல் கூறப்பட்டுள்ளது.

ஏன் வாய்மொழி அறிக்கை

  • கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்”. என்று பவுல் கூறுகிறார். அவர் உங்களை இரட்சித்து, நீங்கள் இயேசுவைப் பின்பற்றும்படிக்கு உங்களுக்கு கிருபையையும் இரக்கத்தையும் வழங்குவதால், நீங்கள் அவருடைய கோபத்திலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்.

  • “இயேசுவே ஆண்டவர்” என்று உங்கள் வாயினால் அறிக்கை பண்ணும் போது நீங்கள் இரட்சிப்பின் வாசலில் நுழைகிறீர்கள். வாய்க்குள் முணுமுணுக்காமல் உங்கள் வாயைத் திறந்து இதை ஒப்புக்கொள்ள வேண்டும். பகிரங்கமாக உரக்கச் சொல்லுங்கள். அவருடைய இரட்சிக்கும் கிருபை வந்து உங்களை மூடும்.

  • இதைப் பற்றி இயேசுவும் மத்தேயு 10 இல் கூறுகிறார்.

“மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்”. மத்தேயு 10:32-33

  • "இயேசுவே ஆண்டவர்", "இயேசுவே தேவன்" என்று நாம் எல்லார் முன்பாகவும் ஒப்புக்கொள்ளும்போது, “நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்” என்று வேதம் கூறுகிறது.

  • ஆனால், “இயேசுவே தேவன்” என்பதை அறிக்கை பண்ண நாம் வெட்கப்பட்டால் , நியாயத்தீர்ப்பு நாளில் “நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்” என்று இயேசு சொல்கிறார்.

ஏன் வாய்மொழி அறிக்கை என்பதில் நினைவில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள்

1. வாயினால் அறிக்கை பண்ணும்போது நாம் ஆண்டவருடைய கோபத்திலிருந்து காப்பாற்றப்பட்டு, இயேசுவின் கிருபையையும் இரக்கத்தையும் பெற ஆரம்பிக்கிறோம்.

2. நாம் அறிக்கையிடும் போது, இயேசுவும் கடைசி நாளில் பரலோகத்திலுள்ள பிதாவுக்கு முன்பாக என் மகன் அல்லது மகள் என்று நம்மைக் குறித்து அறிக்கை பண்ணுவார்.

இருதய - வாய் தொடர்பு

“என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்”. ரோமர் 10:9

  • “இயேசுவே ஆண்டவர்” என்று ஏன் சொல்ல வேண்டும் என்று பார்த்தோம். “தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால்” என்ற முக்கியமான விஷயத்தை பவுல் வலியுறுத்துகிறார்.

  • நீங்கள் பேசும்போது, ​​இயேசுவே ஆண்டவர் என்றும் அவர் மரணத்தை வென்றார் என்றும் உங்கள் இருதயம் நம்ப வேண்டும்.

  • அவர் உங்களுக்காக மரித்தார் என்று நீங்கள் விசுவாசிக்கும் போது, அவருடைய மரணத்தில், அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்தார், சிலுவையில் அவர் சரீரத்தில் நம்மீது வந்த சாபங்களை ஏற்றுக்கொண்டார், மூன்றாம் நாளில் அவர் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டார். அவருடைய உயிர்த்தெழுதல் நம் பாவங்களின் மீது வந்த சாபத்தை வென்றது. மேலும் அவர் நமக்கு இரட்சிப்பைக் கொண்டிருக்கிறார்.

  • நீங்கள் நம்புவதை உங்கள் வாய் பேசுகிறது. “நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்;இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்”. லூக்கா 6:45

  • இயேசு நம் இருதயத்தைப் பார்க்கிறார். நாம் நம் இருதயத்தில் உணர்வதைப் பேசினால் மட்டுமே அவருடைய ஆசீர்வாதங்கள் நமக்கு வரும். நாம் அவரை விசுவாசியாமல் நம் உதட்டினால் மட்டும் பேசினோமானால் நம்மைக் காக்கும் அவருடைய ஆசீர்வாதங்களை நம்மால் பெற முடியாது. நீதிமொழிகள் இவ்வாறு கூறுகிறது, "மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்". நீதிமொழிகள் 21:2. "எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவவூற்று புறப்படும்". நீதிமொழிகள் 4:23

அறிக்கையிடுதலின் வெகுமதிகள்


1. ஒருபோதும் வெட்கப்படுவதில்லை - தேவன் உங்களுக்காகச் செய்யும் செயல்களை உங்கள் இருதயத்திலிருந்து விசுவாசித்தால், அவர் உங்களை ஒருபோதும் வெட்கப்படுத்த மாட்டார். "அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது". ரோமர் 10:11. “ஒருபோதும் இல்லை” என்றால் அது கடந்த காலத்திலோ எதிர்காலத்திலோ இல்லை. "இயேசுவே ஆண்டவர்" என்று சொல்லிக் கொள்வதற்காக அவர் நம்மை ஒருபோதும் வெட்கப்படுத்த மாட்டார் என்று அவர் நமக்குக் கொடுக்கும் வாக்குறுதி இது. ஆனால் அவர் உயிர்த்தெழுந்த தேவன் என்ற உண்மையான விசுவாசத்துடன் இது உங்கள் இருதயத்திலிருந்து வெளிவர வேண்டும்.

2. அவர் கைவிடுவதுமில்லை, விலகுவதுமில்லை - "இயேசுவே ஆண்டவர்" என்று நாம் ஒப்புக்கொள்ளும்போது, வேதம் சொல்கிறது, “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” எபிரேயர் 13:5

3. இயேசுவின் பெயரைக் கேட்டால் பிசாசுகள் நடுங்குகின்றன - துன்ப நேரங்களில், "இயேசுவே ஆண்டவர்" என்று சாத்தானை நோக்கி உரக்கச் சொல்லுங்கள். உங்களைக் காப்பாற்றும் வல்லமையான வீரர் என்றும் அவர் அவனை சிலுவையில் தோற்கடித்ததையும் அவனுக்கு நினைவூட்டுங்கள். உண்மையான விசுவாசத்தோடும் வலுவான நம்பிக்கையோடும் இதை சொல்லுங்கள். வேதம் இவ்வாறு கூறுகிறது,

“தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன”. யாக்கோபு 2:19

“பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார்”. லூக்கா 4:41


இயேசுவே ஆண்டவர் என்று கூறுவதற்கு தைரியமாக இருங்கள். மேலும், வாழ்க்கையின் போராட்டங்களில் இருந்து உங்களை மீட்டு விடுதலையாக்குவார் என்று பெருமையுடனும் உண்மையான விசுவாசத்துடனும் சொல்லுங்கள் "இயேசுவே ஆண்டவர்", "கர்த்தரால் ஜெயம்".

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page