top of page

விசுவாசிகளுக்கு உள்ள பொறுப்புகள்

  • Kirupakaran
  • Jul 28
  • 5 min read
ree

வேதத்தில், அப்போஸ்தலர் பவுலின் புத்தகங்கள் நமக்கு சிறந்த விஷயங்களைக் கற்பிக்கின்றன. அவரது ஆவிக்குரிய பார்வைகள் நமக்குப் பல விஷயங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பையும், ஒரு சிறந்த கிறிஸ்தவராக மாற உந்துதலையும் அளிக்கின்றன.

 

பிலிப்பியருக்கு பவுல் எழுதிய கடிதம், பிலிப்பியில் உள்ள சபைக்காக எழுதப்பட்ட ஆழமான தனிப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான செய்தியாகும். பவுல் முதன்முறையாக பிலிப்பி பட்டணத்திற்குச் சென்றபோது கடுமையான எதிர்ப்பை சந்தித்தார். இருந்தும் புறஜாதியினருக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பணியில் இருந்து அவர் ஒருபோதும் பின்வாங்கவில்லை. அவரது இரண்டாவது வருகையின் போது எழுதப்பட்ட இந்தக் கடிதம் அவர் எதிர்கொண்ட சவால்களையும் இந்த விசுவாசமிக்க திருச்சபையுடன் அவர் பகிர்ந்து கொண்ட ஆழமான உறவையும் பிரதிபலிக்கிறது.

 

பிலிப்பியர் 1 ஆம் அதிகாரத்தில், கிறிஸ்துவில் விசுவாசிகளாகிய நமக்கான பல்வேறு பொறுப்புகள் குறித்து பவுலின் போதனைகளிலிருந்து நாம் அதிகம் கற்றுக்கொள்கிறோம்.

 

கிறிஸ்துவுக்குள் அழைக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புகள்

 

நாம் கிறிஸ்துவுக்குள் அழைக்கப்படுகிறோம் என்றால், அது வெறும் இரட்சிப்பைப் பெறுவது மட்டுமல்ல - நமக்குச் சில பொறுப்புகளும் ஒப்படைக்கப்படுகின்றன. பிலிப்பியர் 1 இல் பவுல் அந்த அழைப்பை உண்மையுடன் நிறைவேற்றுவது எப்படியென்பதை விளக்குகிறார்.

 

1. கிறிஸ்துவின் சரீரத்தை நினைவுகூருங்கள்

சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால் : பிலிப்பியர் 1:3

  • நாம் அனைத்து விசுவாசிகளையும், தனித்தனியாக மட்டுமல்லாமல், கூட்டாக திருச்சபையாக கிறிஸ்துவின் சரீரமாக நினைவுகூர அழைக்கப்பட்டுள்ளோம். பவுல் பிலிப்பியர்களை தனது எண்ணங்களில் வைத்திருந்தது போல, நாமும் சக விசுவாசிகளை அன்பிலும் நினைவிலும் சுமந்து, கிறிஸ்துவில் உள்ள நமது ஒருமைப்பாட்டை அங்கீகரிக்க வேண்டும்.

 

2. சந்தோஷத்தோடே ஒருவருக்கொருவர் விண்ணப்பம் பண்ணுங்கள்

நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி, உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி : பிலிப்பியர் 1:4-5

  • இடைபடும் ஜெபம் மிகவும் அவசியமானது. நமக்காக மட்டுமல்லாமல், மற்றவர்களுக்காகவும் மகிழ்ச்சியோடு ஜெபிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம் - கடமையாக இல்லாமல் அன்பினால், கிறிஸ்துவில் அவர்கள் பகிர்ந்து கொண்ட பயணத்தைக் கொண்டாடும் விதமாய் ஜெபிக்கவேண்டும்.    

  • நம்முடைய ஜெபங்கள், ஆண்டவரையும் இரட்சகரையும் அறிந்த மகிழ்ச்சியில் இருந்து பெருக்கெடுக்க வேண்டும்.

  • இந்த மகிழ்ச்சி, கிறிஸ்துவை அறிந்து கொள்வதிலிருந்து உருவாகிறது. அவரது அன்பினால் நாம் மகிழ்ச்சியுடன் ஜெபிக்கிறோம். அந்த அன்பு நம் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளிடையே பரவுகிறது; இதன்மூலம் அவர்கள் கிறிஸ்துவில் பலப்படுகிறார்கள். 

 

3. கிறிஸ்துவே ஆரம்பமும் முடிவும் என்பதை நம்புங்கள்

உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி : பிலிப்பியர் 1:5

  • நமது நம்பிக்கை நமது திறமையில் அல்ல, மாறாக நம்மில் அந்தச் செயலைத் துவக்கிய கிறிஸ்துவில் உள்ளது.

  • அதை நிறைவேற்ற அவர் உண்மையுள்ளவர். இறுதியில் இரட்சிப்பு மற்றும் மாற்றம் என்பவை கிறிஸ்துவுக்கே சொந்தமானவை என்பதை அறிந்து, மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும், ஆதரவாகவும் இருந்து, அவர்களுடன் நடக்க அழைக்கப்படுகிறோம்.

 

4. கிறிஸ்துவுக்காக கட்டப்பட்ட ஸ்தானாபதிகளாக வாழுங்கள்

என் கட்டுகளிலும், நான் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது. பிலிப்பியர் 1:7

  • நாம் கிறிஸ்துவின் ஸ்தானாபதிகளாக இருக்கிறோம் - நாம் இரட்சிப்பைப் பெற்றதும், நமது பணிகளிலும் செயல்களிலும் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ய வேண்டும்.

  • சங்கிலிக்கு இரண்டு முனைகள் உள்ளன.

    • நமது கிரியைகள், நாம் கற்றுக்கொண்ட கிறிஸ்துவை பிரதிபலிக்க வேண்டும்.

    • நமது செயல்கள் நாம் கற்றுக் கொண்ட எல்லா வழிகளிலும், கிறிஸ்துவைப் பிரதிபலிக்க வேண்டும்.

  • நாம் கிறிஸ்துவுக்காக வாழ்கிறோம் — ஒவ்வொரு நாளும் அதை உணரவேண்டும். எப்படி ஒரு ஆப்பிள் நிறுவன ஊழியர், அந்த நிறுவனத்தில் வேலை செய்வதை பெருமையாக கருதுகிறாரோ, அதேபோல், நமக்குக் கிறிஸ்துவுக்கான ஒரு அடையாளம் (tag) உள்ளது என்று உணர்ந்து அதற்கே உரிய வாழ்க்கையை நாம் வாழ்கிறோம். தாழ்மை மற்றும் ஊழிய மனப்பான்மையே நம் உலக வாழ்க்கையின் குறிக்கோள்.  

  • கிறிஸ்துவின் ஊழியத்தில், பவுல் தனது பாடுகளை மரியாதைக்குரிய அடையாளமாகக் கருதினார். சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக, நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள். எபேசியர் 6:19,20

  • கிறிஸ்துவில் இருப்பது என்பது கட்டாயத்தால் அல்ல, மாறாக விசுவாசத்தால் பிணைக்கப்படுவது - தாழ்மையுடனும், விசுவாசத்துடனும், ஊழிய மனப்பான்மையுடனும் வாழ்வதாகும்.

  • ஒரு விசுவாசியாக நமது முதன்மையான குறிக்கோள் இயேசுவைப் போல மாறுவதாகும்.

  • ஒரு ஸ்தானாபதிக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணம் இயேசுவைப் போன்று நடந்துகொள்வதாகும். இயேசு பூமியில் அந்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார். பிதாவுக்கு உண்மையாக இருப்பதும் பிரியப்படுத்துவதுமே அவருடைய இலக்காக இருந்தது. அவர் தம்முடைய வாழ்க்கையின் மூலம் தம்மை வெளிப்படுத்தி, 'நேர்மையின் மனிதர்' என்ற அடையாளத்தைப் பெற்றார். தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம். மத்தேயு 22:16

 

5. நோக்கமுள்ள ஜெபத்துடன் பரிந்து பேசுங்கள்

மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும், தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன். சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன். பிலிப்பியர் 1:9-11

 

சக விசுவாசிகளுக்காக நாம் ஜெபிக்க வேண்டிய விதமாவது :

1. அன்பில் பெருகுதல்

  • நமது அன்பு எதிர்பார்ப்புகளோடு கூடியது, கிறிஸ்துவின் அன்பு அதைக் கடந்து கட்டுப்பாட்டை எடுக்க ஜெபிக்க வேண்டும்.கிறிஸ்துவின் அன்பு 1 கொரிந்தியர் 13:4-8 இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

  • அந்த அன்பு நம் சுய அன்பை மேற்கொள்ளும் போது, கிறிஸ்து எதைச் செய்யவேண்டுமென்று அழைத்தாரோ அதைச் செய்யத் தொடங்குகிறோம்.

  • மற்ற விசுவாசிகளில் கிறிஸ்துவின் அன்பு வளர ஜெபியுங்கள்.

 

2. அறிவில் பெருகுதல்

  • நம்மில் பலர், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிறகு, அவரில் வளர்வதை நிறுத்திவிடுகிறோம். பவுல் கொரிந்து சபைக்கு எழுதிய கடிதத்தில்,  அவர்களை கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்று அழைக்கிறார். 1 கொரிந்தியர் 3:1

  • கிறிஸ்து யார் என்பதைப் பற்றிய ஆழமான அறிவிலும் ஆழத்திலும் அவரை அறியாவிட்டால், நமது ஆவிக்குரிய புரிதலில் நாம் மேலும் வளர முடியாது.

  • ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவைப் பற்றிய அறிவில் ஆழமாக வளர ஜெபியுங்கள் - இது தேவனுடைய வார்த்தையைப் படிப்பதிலிருந்து (வேதம்) வருகிறது. ஒவ்வொரு விசுவாசியும் வசனத்தைப் படித்து தியானித்து, தேவனைப் புரிந்துகொள்ளவும் ஆழமாக அறிந்து கொள்ளவும் ஜெபியுங்கள்.

 

3. ஆவிக்குரிய பகுத்தறிவு

  • நாம் வாழும் உலகம் பாவங்களால் நிரம்பியுள்ளது. மேலும், இது கடைசி நாட்களாக இருப்பதால், பல பொய்யான போதகர்களையும் பொய்யான ஆவிகளையும் காண்கிறோம்.

  • ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவில் எது சரி எது தவறு என்பதை அறியும் வகையில் நாம் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.

  • பல சமயங்களில் விசுவாசிகளாகிய நாம் சுயநலமாக காரியங்களைச் செய்து தேவனின் சித்தத்திலிருந்து விலகிச் செல்கிறோம். பகுத்தறியும் ஆவிக்காக நாம் ஜெபிக்கும்போது, தேவனின் பரிசுத்த ஆவியானவர்  அவருடைய சித்தத்தின்படி நம்மை வழிநடத்துவார்.

  • கிறிஸ்துவின் நன்மைக்கு ஏற்ப சிறந்ததை தேர்ந்தெடுக்க பகுத்தறியும் ஆவிக்காக ஜெபியுங்கள்.

 

4. பரிசுத்தம்

  • பரிசுத்தம் என்பது, கிறிஸ்துவை நம் ஆண்டவராகவும் இரட்சகராகவும் விசுவாசிக்கத் தொடங்கும் தருணத்தில் இருந்து, எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தேவையான ஒன்றாகும். பவுல் பிலிப்பியர் 1:1, எபேசியர் 1:1, கொலோசெயர் 1:2, 1 கொரிந்தியர் 1:2 என்ற நான்கு நிருபங்களிலும் விசுவாசிகளை கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்கள் என்றே எழுதினார்.

  • கிறிஸ்தவ வாழ்க்கை என்பது பரிசுத்த பர்வதத்தில் ஏறி தேவனின் பரிசுத்தத்திற்குள் பரிபூரணப்படுவது. நாம் முதல் நாளே அந்த பரிபூரண நிலையை அடைய முடியாது, 60 ஆண்டுகள் ஆனாலும் கூட, பரிசுத்தத்தில் முழுமையடையாமலிருக்கலாம். ஆனால் நம் இறுதி மூச்சுவரை பரிபூரணமாக ஆக முயற்சி செய்ய வேண்டும்; இறுதியில் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது தேவனே நம்மை பரிபூரணமாக மாற்றுவார். எனவே பரிசுத்தத்தை நோக்கி முன்னேறுகிறீர்களா என்பதை தொடர்ந்து சோதித்துப் பாருங்கள். யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? சங்கீதம் 24:3

  • நாம் கிறிஸ்துவுக்குள் இரட்சிக்கப்பட்டது பரிசுத்தமானவர்களாக மாறவே என்பதை நாம் நினைவுகூர வேண்டும். எனவே நீங்களும் நானும் தேவனால் பரிசுத்தத்திற்கு பரிபூரணமாக்கப்படுவது அசாதாரணமான ஒன்றல்ல, அது விசேஷித்தவர்களுக்கானது அல்ல, அது நமக்கானது. அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். 2 தீமோத்தேயு 1:9

  • சபையின் பரிசுத்தத்திற்காக ஜெபியுங்கள், உங்கள் திருச்சபையை பரிசுத்தமாக்கும்படி அவரிடம் கேளுங்கள், அவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்று கவலைப்பட வேண்டாம். சபையை மேம்படுத்துவது அவருடைய கிருபை.

  • விசுவாசிகளும் பரிசுத்தமாக்கப்பட ஜெபியுங்கள், நாம் சோதோம் & கொமோராவின்  நாட்களில் வாழ்கிறோம். இந்த காலத்தில் பரிசுத்தம்  நாளுக்கு நாள் குறைந்து, பாவம் எல்லாவற்றையும் ஆட்கொண்டு  மேலோங்கி வருகிறது, நாம் பரிசுத்தத்திற்காக ஜெபிக்காவிட்டால், தேவன் விரும்பும் இந்தப் பரிசுத்தத்தில் நாம் எந்த வகையிலும் பாதுகாக்கப்பட முடியாது.

 

5. ஆவியின் கனிகள்

  • அனைத்து விசுவாசிகளும் நீதியின் கனிகளால் நிரப்பப்பட ஜெபியுங்கள். நமது சுயநீதி எந்த பலனையும் தராது. நாம் தேவ நீதிக்காக ஜெபிக்கும்போது, அவர் நமக்கு நீதியின் ஆதாரமாகவும் அதை நமக்கு வழங்குபவராகவும் இருப்பார் என்ற விசுவாசத்தால் நிரப்பப்படுகிறோம்.

  • கலாத்தியர் 5:22–23 இல் எழுதப்பட்டுள்ள, அவருடைய நீதியின் கனிகளால் நாம் நிரப்பப்படுகிறோம், இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

 

6. தேவனுக்கு மகிமை

  • அனைத்து வளர்ச்சியும் முதிர்ச்சியும் இறுதியில் தேவனுக்கு துதியைக் கொண்டு வருகின்றன.

  • விசுவாசிகளிடத்தில் அவர் செய்த அற்புதங்களுக்காக தேவனைப் புகழ்ந்து அவருக்கு நன்றி செலுத்துங்கள், மற்றவர்களின் வாழ்க்கையில் அவர் செய்த அனைத்து காரியங்களுக்கும் மகிமை செலுத்துங்கள்.

 

7. பாடுகளை அழைப்பின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளுதல்

ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. பிலிப்பியர் 1:29

  • பல சமயங்களில் பாடுகளை நாம் கெட்டதாகக் கருதுகிறோம். கிறிஸ்துவில் விசுவாசம் என்பது நன்மைகளை அனுபவிப்பது மட்டுமல்லாமல்  பாடுகளைச் சகிப்பதும் ஆகும் என்று இங்கே பவுல் அதற்கு நேர்மாறாக கூறுகிறார்.

  • நீங்கள் பாடுகளில் கிறிஸ்துவை அனுபவிக்க ஜெபியுங்கள். உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும், உங்களை மாற்றி அவரில் வலிமை பெறச் செய்யும் வாய்ப்பாகவும் வந்த பாடுகளுக்காக நன்றி செலுத்துங்கள்.

  • பாடுகள் என்பது வளையத்திற்குள் நிற்கும் குத்துச்சண்டை வீரரைப் போன்றது, எந்த அளவுக்கு போராடுகிறாரோ அந்த அளவுக்கு அவரது தசைகள் வலுவடைகின்றன. இதில் விசேஷம் என்னவென்றால், துன்பத்தில் நாம் தோல்வியடைய கிறிஸ்து ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். நீதியோடு துன்பங்களைச் சகிப்பவர்கள், சுதந்தரிக்கும்படி  ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடையய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.1 பேதுரு 4:13-14

 

8. தினமும் சுயத்திற்கு மரித்து கிறிஸ்துவுக்காக வாழுதல்

  • கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். பிலிப்பியர் 1:21

  • பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். லூக்கா 9:23

  • அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12:1-2

 

 

நமது அன்றாட அழைப்பானது சுயத்தை மறுத்து தேவனிடம் ஒப்புக்கொடுப்பதாகும். ஆபிரகாம் கீழ்ப்படிதலினால் ஈசாக்கை பலியாகக் கொடுக்க முன்வந்தது போல கிறிஸ்துவுக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ நமது சுயநல ஆசைகளையும் லட்சியங்களையும் சிலுவையில் அறைகிறோம். ஒவ்வொரு நாளும் நம்மை இயேசுவுக்கு அர்ப்பணித்து, வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் அவரைப் பின்பற்றுவதன்  மூலம், அவர் நம்மை தம்மைப் போன்று மாற்றுகிறார்.

 

 

2 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Philip
Jul 28
Rated 5 out of 5 stars.

Amen

Like

Elizabeth
Jul 28
Rated 5 out of 5 stars.

Amen Glory to God 🙏

Like

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page