மகிழ்ச்சியை வடிவமைக்கும் சோதனைகள்
- Kirupakaran
- Sep 28
- 5 min read

நாம் வாழ்க்கையின் சோதனைகளை பெரும்பாலும் துயரமாகவே பார்க்கிறோம் –
அதைத் தவிர்த்து அமைதியான மகிழ்ச்சி நிரம்பிய வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். இதுவே இந்த உலகம் சோதனைகளைப் பார்க்கும் இயல்பான பார்வை. ஆனால், வேதம் நமக்கு ஒரு ஆச்சரியமான கண்ணோட்டத்தைத் தருகுகிறது: "... நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, ... அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் (யாக்கோபு 1:2). நம்முடைய இயல்பான எண்ணத்திற்கு முற்றிலும் மாறாக, சோதனைகள் மகிழ்ச்சிக்குத் தடைகள் அல்ல, மாறாக அதை வடிவமைக்கும் பாதைகள் என்பதை வேதம் நமக்கு நினைவூட்டுகிறது.
சோதனைகள் எவ்வாறு சந்தோஷத்தைத் தரும்?
என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது. யாக்கோபு 1:2-4
பல நேரங்களில் சோதனைகள் இல்லாத வாழ்க்கைக்காக ஜெபிக்கிறோம். ஏனெனில் சோதனைகள் இல்லாதபோது தான் மகிழ்ச்சி வரும் என்று நம்புகிறோம். ஆனால் வேதம் அதற்கு நேர்மாறாகக் கற்பிக்கிறது. தேவனின் விருப்பம் ஒரு மேலோட்டமான மகிழ்ச்சி அல்ல, மாறாக அவரை அறிந்து, தொழுது கொண்டு, அவரைச் சார்ந்திருப்பதன் மூலம் வரும் ஆழமான, நீடித்த மகிழ்ச்சியையே அவர் நாடுகிறார்.
"சகோதர சகோதரிகளே, நீங்கள் பலவிதமான சோதனைகளை எதிர்கொள்ளும்போதெல்லாம், அதை முழுமையான சந்தோஷமாகக் கருதுங்கள்" என்று யாக்கோபு கூறுகிறார். (புரிந்துகொள்ள எளிதாக இருப்பதற்காக வரிசை மாற்றப்பட்டுள்ளது).
யாக்கோபு “ஒரே ஒரு சோதனை” என்று கூறவில்லை, பலவிதமான சோதனைகள் என்று வலியுறுத்துகிறார். ஒரு சோதனை கூட பெரும்பாலும் நம்மை விரக்தியடையச் செய்கிறது, ஆனால் பலவிதமான சோதனைகள் வந்தாலும் கூட மகிழ்ச்சி கொள்ளும்படி தேவன் நம்மை அழைக்கிறார். ஏன்?
ஏனெனில் சோதனைகள் நம்மை இயேசு கிறிஸ்துவைச் சார்ந்து இருக்க கட்டாயப்படுத்துகின்றன.
இருண்ட பள்ளத்தாக்குகளில், அவருடைய கரம் நம்மை ஆறுதல்படுத்துகிறது: நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். சங்கீதம் 23:4
நாம் அவரை சார்ந்திருக்கும் போது, அவர் நம் விசுவாசத்தை பலப்படுத்துகிறார். யாக்கோபு நமக்கு நினைவூட்டுகிறார்: நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. யாக்கோபு 1:17
சோதனைகளில் கிறிஸ்து நம்முடன் நடக்கும்போது, எப்போதும் இரண்டு பலன்கள் உண்டாகின்றன:
குழப்பத்திற்குப் பதிலாக சமாதானம் (சாத்தான் குழப்பத்தைக் கொண்டுவருகிறான்).
பதட்டத்திற்குப் பதிலாக பொறுமை (சாத்தான் பதட்டத்தைத் தூண்டுகிறான்).
சமாதானமும் சகிப்புத்தன்மையும் ஒன்றாகச் சேர்ந்து பொறுமையை உருவாக்குகின்றன. பொறுமையானது விசுவாசத்தை முழுமையாக்குகிறது. நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி,பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது. யாக்கோபு 1:4
இது தேவனின் வாக்குத்தத்தம்: சோதனைகள் நம்மை அழிக்கும்படி அனுப்பப்படாமல் நம் வளர்ச்சிக்காகவே அனுப்பப்படுகின்றன. சோதனைகள் தான் ஆவிக்குரிய முதிர்ச்சி, முழுமை மற்றும் அசைக்க முடியாத மகிழ்ச்சியைக் கொண்டுவர அவர் பயன்படுத்தும் மாற்று மருந்தாகும்.
பவுல் அனுபவித்த பலவிதமான வாழ்க்கை போராட்டங்கள்
பவுலின் ஊழியம் பாடுகளால் நிரம்பியது, இருந்தும் அவர் அதிலிருந்து பின்வாங்கவில்லை. மாறாக, அவர் தனது போராட்டங்களின் நிமித்தம் பெருமிதம் கொண்டார் - அவற்றை அவமானமாகக் கருதாமல், மகிழ்ச்சியாகவும் பாக்கியமாகவும் கருதினார். பவுல் எதிர்கொண்ட ஒவ்வொரு சோதனையும் அவரது பலவீனத்தின் மூலம் தேவனின் மகிமை வெளிப்படும் ஒரு கட்டமாக மாறியது.
2 கொரிந்தியர் 11:22–33 இல் பவுல் தனது போராட்ட அனுபவங்களை விவரிக்கிறார், தனது சொந்த போராட்டங்களை பெரிதுபடுத்திக் காட்டுவதற்காக அல்லாமல், அவற்றின் மூலம் வெளிப்பட்ட தேவனின் மகிமையை எடுத்துக்காட்டுவதற்காக விவரிக்கிறார். இந்தக் கஷ்டங்கள், சுய பெருமைக்கு மாறாக, தேவன் தன்னை எவ்வாறு தாங்கி நடத்தினார் என்பதற்கான சாட்சியாக நிற்கின்றன.
பவுல் அனுபவித்த போராட்டங்களை ஆறு முக்கியமான வகைகளாக பிரிக்கலாம்.
1. பொதுவான போராட்டங்கள்: அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். 2கொரிந்தியர் 11:23
அதிகமாய்ப் பிரயாசப்பட்டார்.
அதிகமாய் அடிபட்டார்.
அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டார்.
அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டார்.
2. குறிப்பிட்ட துன்புறுத்தல்கள்: யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். 2 கொரிந்தியர் 11:24-25
ஐந்து முறை யூதர்களிடமிருந்து 39 சவுக்கடிகளைப் பெற்றார்.
மூன்றுதரம் மிலாறுகளால் அடிக்கப்பட்டார்.
ஒருதரம் கல்லெறியுண்டார் (அப்போஸ்தலர் 14:19, லீஸ்திரா).
மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தார்.
ஒரு இராப்பகல் முழுவதும் கடலிலே போக்கினார்.
3. பயணத்தில் எதிர்கொண்ட ஆபத்துகள்: அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; 2 கொரிந்தியர் 11:26
ஆறுகளால் வந்த மோசங்கள் (வெள்ளம், கடத்தல்கள்).
கள்ளரால் வந்த மோசங்கள்
சுயஜனங்களால் (யூதர்கள்) வந்த மோசங்கள்
அந்நிய ஜனங்களால் வந்த மோசங்கள்
பட்டணங்களில் உண்டான மோசங்கள்
வனாந்தரத்தில் உண்டான மோசங்கள்
சமுத்திரத்தில் உண்டான மோசங்கள்
கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான (துரோகங்கள்) மோசங்கள்
4. சோர்வு மற்றும் பற்றாக்குறை: பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். 2 கொரிந்தியர் 11:27
பிரயாசம், வருத்தம் - தொடர்ச்சியான கடின உழைப்பு
அநேகமுறை கண்விழிப்புகள்
பசி, தாகம்
அநேகமுறை உபவாசங்கள் (சில நேரங்களில் விருப்பத்தால், பெரும்பாலும் கட்டாயத்தால்).
குளிர், நிர்வாணம்
5. உள்ளான பாடுகள்: இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது. ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ? 2கொரிந்தியர் 11:28-29
எல்லாச் சபைகளைக் குறித்தும் உண்டாயிருக்கிற தினசரி கவலை - ஆவிக்குரிய பாரம்
மற்றவர்களின் பலவீனத்தை ஆழமாக உணர்ந்தார்
விசுவாசிகள் தடுமாறியபோது கோபத்தில் எரிந்தார்
6. ஒரு தனிப்பட்ட சம்பவம்: தமஸ்கு பட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய சேனைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டுமென்று தமஸ்கருடைய பட்டணத்தைக் காவல்வைத்துக்காத்தான்; அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, ஜன்னலிலிருந்து மதில் வழியாய் இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன். 2 கொரிந்தியர் 11:32-33
தமஸ்கு பட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய சேனைத்தலைவன் அவரைக் கைது செய்ய முயன்றார்.
பவுல் ஜன்னலிலிருந்து மதில் வழியாய் இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினார்.
பவுல் அனுபவித்த எல்லாப் பாடுகளையும் சிந்தித்துப் பார்த்து அவற்றோடு நம் சொந்தக் குறைகளை ஒப்பிடுகையில் குழந்தைத்தனமாகத் தோன்றுகின்றன. அவருடைய எண்ணற்ற சோதனைகள் போதாதென்று, பவுலுக்கு சரீரத்தில் ஒரு முள் கொடுக்கப்பட்டது - ஒரு நிலையான வேதனை. ஆனாலும், இதிலும் கூட, தேவனின் ஈவு அவரை மனத்தாழ்மையுடன் வைத்திருக்க உதவியது. அவர் இதனை 2 கொரிந்தியரில் ஒப்புக்கொள்கிறார்.
சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட மனதாயிருந்தாலும், நான் புத்தியீனனல்ல, ஆனாலும் ஒருவனும் என்னிடத்தில் காண்கிறதற்கும், என்னாலே கேட்கிறதற்கும் மேலாக என்னை எண்ணாதபடிக்கு அப்படிச் செய்யாதிருப்பேன். அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. 2 கொரிந்தியர் 12:6-7
பவுல் பாடுகளில் எப்படி மகிழ்ச்சி கண்டார்?
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன். 2 கொரிந்தியர் 12:9-10
பாடுகளில் மகிழ்ச்சியாயிருக்கும் பவுலின் திறன் ஒரு முக்கியமான உண்மையை அடிப்படையாகக் கொண்டது: தேவனின் கிருபை.
பாடுகளில் கிருபை: பவுல் எதிர்கொண்ட ஒவ்வொரு சோதனையும் தேவனுடைய கிருபையால் சந்திக்கப்பட்டது - வலியைத் தாங்கும் கிருபை மற்றும் பலவீனத்தில் பலப்படுத்தப்படும் கிருபை. கிருபை என்பது நமக்குத் தேவைப்படும் நேரங்களில் தேவன் அளிக்கும் ஆதரவாகும். அவருடைய கிருபையில், நாம் பெறத் தகுதியற்றதை நமக்குக் கொடுக்கிறார்; அவருடைய இரக்கத்தில், நாம் பெறத் தகுதியானதை அவர் தடுத்து நிறுத்துகிறார்.
போதுமான கிருபை: தேவனின் கிருபை ஒருபோதும் குறைவாக இருக்காது. அது நமது ஆவிக்குரிய அழைப்புக்கும் (2 கொரிந்தியர் 3:4–6), பொருளாதார தேவைகளுக்கும் (2 கொரிந்தியர் 9:8) மற்றும் நமது சரீர பலவீனத்திற்கும் (2 கொரிந்தியர் 12:9) போதுமானது. அவர் கிருபை நம்மைக் காப்பதற்குப் போதுமானதாக இருந்தால், நிச்சயமாக சோதனைகளின் போது நம்மைத் தாங்கவும் பலப்படுத்தவும் அது போதுமானது.
பலப்படுத்தும் கிருபை: தம்முடைய பலம் நம்மீது தங்கும்படி தேவன் பெரும்பாலும் நம்மை பலவீனப்படுத்த அனுமதிக்கிறார். கர்த்தர் பவுலிடம் சொன்னது போல்: "பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" (2 கொரிந்தியர் 12:9). இது ஒரு முறை நடக்கும் நிகழ்வு அல்ல, இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை.
மாற்று அல்ல மாற்றம்: பவுல் தனது மாம்சத்தில் இருந்த முள்ளை நீக்கும்படி ஜெபித்தபோது, நோய்க்குப் பதிலாக ஆரோக்கியத்தையும் வலிக்குப் பதிலாக விடுதலையையும் வேண்டினார். ஆனால் தேவனின் பதில் மாற்றமாக இருந்தது. அவர் வேதனையை நீக்கவில்லை; அதற்குப் பதிலாக, அந்த வேதனை பவுலுக்கு எதிராக இல்லாமல் உதவியாக அமையும்படி தேவன் அவருக்குக் கிருபை அளித்தார்.
முள் பரிசு: பவுல் தனது முள்ளை தேவனிடமிருந்து வந்த விசித்திரமான ஆனால் நோக்கமுள்ள பரிசாகக் கண்டார் - தன்னைத் தாழ்மையுடனும், தேவனை சார்ந்து இருப்பவராகவும் வைத்திருக்க வடிவமைக்கப்பட்டதாகக் கண்டார். இந்தப் பரிசை ஏற்றுக்கொண்டது தேவனின் கிருபை அவரது வாழ்க்கையில் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தது.
கிருபை வெளிப்பாட்டைக் கொண்டுவருகிறது: பவுல் ஜெபத்தில் தேவனைத் தேடியபோது, அவருக்கு விளக்கத்திற்குப் பதிலாக, “என் கிருபை உனக்குப் போதும்” என்ற வாக்குத்தத்தம் கிடைத்தது. நாம் விளக்கங்களின் அடிப்படையில் வாழ்வதில்லை; வாக்குத்தத்தங்களின் அடிப்படையில் வாழ்கிறோம். உணர்வுகள் மாறலாம், ஆனால் அவருடைய வாக்குத்தத்தங்கள் அசைக்க முடியாதவை. வாக்குத்தத்தங்கள் விசுவாசத்தை வளர்க்கின்றன, விசுவாசம் நம்பிக்கையை பலப்படுத்துகிறது.
நீதியான பாடுகள்: இறுதியில், பவுல் தனது பாடுகளை கிறிஸ்துவின் பொருட்டு ஒரு பாக்கியமாக ஏற்றுக்கொண்டார். மற்றவர்கள் சாபமாகக் கருதுவதை, பவுல் நீதியான பாடாக அங்கீகரித்தார் - கிறிஸ்துவின் வல்லமையும் மகிமையும் வெளிப்படுவதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதினார். ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும். நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். 1 பேதுரு 2:19-21
சுருக்கம்
சில சமயங்களில், நமது சொந்த தவறுகளாலோ அல்லது கீழ்ப்படியாமையாலோ நமக்கு சோதனைகள் வருகின்றன.
இருப்பினும், சோதனை தேவனின் கரங்களில், தெய்வீக குணத்தை வடிவமைப்பதற்கான ஒரு கருவியாகும் (ரோமர் 5:1–5).
ஒவ்வொரு சோதனையும் ஒரு நோக்கத்தைக் கொண்டுள்ளது: தேவன் அதனை நம்மைத் திருத்தவும், அவருடன் நடக்கும் பயணத்தில் நம்மை வளர்க்கவும் பயன்படுத்துகிறார். யாக்கோபு நமக்கு நினைவூட்டுகிறார்: உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது. யாக்கோபு 1:3-4
சோதனைகளுக்கு மத்தியில் சோர்ந்து போகாதீர்கள். அதற்கு பதிலாக, ஜெபத்தில் தேவனைத் தேடுங்கள் - அவர் உங்களில் என்ன மாற்ற விரும்புகிறார், உங்கள் மூலம் அவருடைய மகிமை எவ்வாறு வெளிப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று அவரிடம் கேளுங்கள். பலத்திற்காகவும் உங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்துவதற்காகவும் அவரை சார்ந்திருங்கள்.
தேவனின் வாக்குத்தத்தம் உறுதியானது: வாழ்க்கையின் புயல்களைக் கடந்து சென்றவுடன், வரவிருக்கும் இன்னும் பெரிய புயல்களை எதிர்த்து உறுதியாக நிற்க நாம் வடிவமைக்கப்பட்டு பலப்படுத்தப்படுவோம்.
போராட்டங்கள் தற்காலிகமானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். பேதுரு கூறுகிறார்: பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். 1 பேதுரு 4:12-13
தேவனின் பிள்ளைகளாக, நாம் அவருடைய ஆசீர்வாதங்களில் மட்டுமல்லாமல், அவருடைய பாடுகளிலும் பங்கு கொள்கிறோம்.ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. பிலிப்பியர் 1:29
ஆகையால், நீங்கள் போராட்டங்களை எதிர்கொள்ளும்போது, அவை தேவனை மகிமைப்படுத்துவதற்கான வாய்ப்புகளாக மாறட்டும் - அவ்வாறு செய்வதன் மூலம், வலியின் மத்தியிலும் நீங்கள் மகிழ்ச்சியைக் காண்பீர்கள்.



Comments