top of page

பவுலின் உறுதியான ஆவிக்குரிய மனப்பான்மை

  • Kirupakaran
  • Aug 17
  • 6 min read
ree

புதிய ஏற்பாட்டில் மிகவும் செல்வாக்குடைய ஆளுமைகளில் ஒருவராக அப்போஸ்தலர் பவுல் தனித்து நிற்கிறார். அவரது எழுத்துக்கள் ஆவிக்குரிய ஞானம், நடைமுறை வழிகாட்டல்கள் மற்றும் ஆழமான தெய்வீக கருத்துகளால்  நிரம்பியுள்ளன - இவை கிறிஸ்தவ வாழ்க்கையை ஒழுங்குபடுத்தவும் ஊக்கப்படுத்தவும் உதவும் காலத்தால் அழியாத பாடங்களை தொடர்ந்து வழங்குகின்றன. அவரது குணாதிசயங்களையும் அவரது வாழ்க்கையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதையும் ஆழமாகப் புரிந்து கொள்வதற்கு முன்,  அவரது பின்னணியைப் பற்றிய சில முக்கியமான தகவல்களை அறிந்து கொள்வது உதவியாக இருக்கும்.

 

முதலில் சவுல் என்று அழைக்கப்பட்ட பவுல், தேவனின் கிருபையால் மாற்றப்பட்டார். எபிரேய கலாச்சாரத்தில் பிறந்த அவர், பிறப்பால் யூதராகவும், நம்பிக்கையில் பரிசேயராகவும் இருந்தார். அந்தக் காலத்தில் மிகவும் மதிக்கப்படும் யூத ஆசிரியர்களில் ஒருவரான கமாலியேலின் கீழ் அவர் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கற்றார். சவுலாக இருந்தபோது, அவர் ஒரு பக்தியுள்ள மாணவராகவும், நியாயப்பிரமாணத்தின் போதகராகவும் வலுவான நற்பெயரைப் பெற்றிருந்தார். யூத பாரம்பரியத்தின் மீதான அவரது வைராக்கியம் ஆரம்பகால திருச்சபைக்கு எதிராக கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது - கிறிஸ்தவர்களை சிறையில் அடைக்கவும், அவர்களை அழிக்கவும் அவர் உறுதியுடன் செயல்பட்டார்.

 

இருப்பினும், புறஜாதி உலகத்துடன் தொடர்பு கொள்ள பவுல் தனித்துவமான முறையில் தயார் செய்யப்பட்டிருந்தார். ரோமானிய நகரமான தர்சீஸில் பிறந்த அவர், ஒரு ரோமானிய குடிமகனாக இருந்ததோடு, கிரேக்கம் மற்றும் ரோமர்கள் கலாச்சாரத்தை நன்கு அறிந்தவராகவும் இருந்தார். முழுமையாக யூதராக இருந்தபோதிலும், இரு உலகங்களுடனும் அவருக்கு இருந்த அனுபவம், கலாச்சார எல்லைகளைத் தாண்டி சுவிசேஷத்தை அறிவிக்கும் அரிய திறனை அவருக்குக் கொடுத்தது.

 

பவுல் எபேசு சபையிலிருந்து எருசலேமுக்கும், பின்னர் ரோமுக்கும் செல்ல தயாராகியபோது, அங்கேயிருந்த விசுவாசிகளை உற்சாகப்படுத்தவும் பலப்படுத்தவும் அவர் இருதயப்பூர்வமான கடிதங்களை எழுதினார். அவரது வாழ்க்கையும் வார்த்தைகளும், கிறிஸ்துவோடு நடப்பதற்கு 10 முக்கியமான பண்புகளை நமக்குக் கற்றுக்கொடுக்கின்றன.

 

நாம் பெற விரும்பும் பவுலின் இந்த 10 குணாதிசயங்களைப் பார்க்க, அப்போஸ்தலர் 20 இல் உள்ள வார்த்தையைத் தியானிக்கப் போகிறோம்.

 

 

பவுலின் குணாதிசயங்களிலிருந்து கற்றல்

 

1. வெகுவான மனத்தாழ்மை  

வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனையால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன். அப்போஸ்தலர் 20:19

  • பவுல் வெறும் தாழ்மையை காண்பிக்கவில்லை - அவர் மிகுந்த மனத்தாழ்மையுடன் ஆண்டவருக்கு ஊழியம் செய்தார் - அது எப்படி காணப்பட்டது?

  • இதனை புரிந்து கொள்ள, பவுல் பிலிப்பியருக்கு எழுதிய கடிதத்தில் மேலும் ஒரு ஆழமான விளக்கத்தை வழங்குகிறார்: ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. பிலிப்பியர் 2:3-4

  • மிகுந்த தாழ்மையை எவ்வாறு வரையறுக்கலாம்?

    • தேவனுக்கு முன்பாக நமது உண்மையான நிலையை உணர்தல் - அவரே எல்லாம் என்பதையும், நாம் வெறுமனே அவருடைய ஊழியக்காரர்கள் மட்டுமே என்பதையும் ஒப்புக்கொள்வது.

    • புகழ், அதிகாரம் அல்லது கட்டுப்பாட்டை தேடுவதிலிருந்து விடுபடுதல்.

    • கற்றுக்கொள்ளத் தயாராக இருத்தல் - திறந்த மனதுடன் திருத்தங்களை ஏற்றுக்கொள்ளுதல், மனந்திரும்புவதற்கும், வளர்வதற்கும் விரும்புதல்.

    • நமக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டாலும், மற்றவர்களுக்கு தியாகத்துடன் ஊழியம் செய்தல்.

    • சாதனைகளில் பெருமைப்படாமல், எப்போதும் தேவனின் கிருபையை சுட்டிக்காட்டி அவருக்கே மகிமையைக் கொடுத்தல்.

2. கண்ணீரோடு

வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனையால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன். ஆனபடியால், நான் மூன்று வருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்தி சொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள். அப்போஸ்தலர் 20:19,31

  • கண்ணீர், நம் உள்ளத்தின் ஆழமான வெளிப்பாடாகும். இது பெரும்பாலும் தேவனுடனான உண்மையான ஆவிக்குரிய உறவிலிருந்து வருகிறது.

  • மகிழ்ச்சி மற்றும் துக்கம் ஆகிய இரண்டு தருணங்களிலும் நாம் கண்ணீர் சிந்துகிறோம் - ஆனால் ஆவியில், பாரம் நிறைந்த இருதயத்திலிருந்து குறிப்பாக நாம் பிதாவுக்கு முன்பாகப் பரிந்து பேசும்போது கண்ணீர் பெருகுகிறது.

  • பவுல், சோதனைகளுக்கிடையே இரவும் பகலும் கண்ணீருடன் ஊழியம் செய்ததைப் பற்றிப் பேசுகிறார் - அனைவருடனும் கிறிஸ்துவைப் பகிர்ந்து கொள்ள அவர் சுமந்த ஆழமான பாரத்தை வெளிப்படுத்துகிறார்.

  • தேவன் உங்களை ஊழியம் செய்ய அழைத்த மக்களுக்காக நீங்கள் அந்தப் பாரத்தைச் சுமக்கிறீர்களா? அவர்களுக்காக நீங்கள் அழுகிறீர்களா?

  • பவுலின் கண்ணீர் நினிவேக்காகத் துக்கப்பட்ட இயேசுவின் அதே இருதயத்தையும் இரக்கத்தையும் பிரதிபலித்தது. வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார். யோனா 4:11

  • நம்மில் பலருக்கு, நம் உணர்ச்சிகள் பெரும்பாலும் நம் சொந்த வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளன - தேவனுக்கு முக்கியமான காரியங்களைப் பற்றி நாம் அரிதாகவே கண்ணீர் சிந்துகிறோம்.

  • ஆனால், தேவனுடைய உள்ளத்தை துன்புறுத்தும் காரியங்கள் உங்கள் உள்ளத்தையும் உடைக்கத் தொடங்கும்போது, பவுல் மூலமாக தேவன் செயல்பட்டதுபோலவே, உங்கள் மூலமாகவும் வல்லமையாக செயல்படுவார்.

 

3. சோதனைகள் மற்றும் விடாமுயற்சி

வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனையால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன். அப்போஸ்தலர் 20:19

  • பவுல் எதிர்கொண்ட சோதனைகள் வெளியிலிருந்து மட்டும் வரவில்லை. அவை உள்ளிருந்து அவரை எதிர்த்தவர்களின் மனங்களிலிருந்தும் திட்டங்களிலிருந்தும் வந்தன.

  • ஆம்ப்ளிஃபைடு பைபிள் இதை இவ்வாறு கூறுகிறது: “யூதர்கள் [எனக்கு எதிராக] செய்த சதித்திட்டங்களால் எனக்கு வந்த சோதனைகள்”. அப்போஸ்தலர் 20:19

  • பவுலுக்கு எதிரான சோதனைகளும் துன்புறுத்தல்களும் மத எதிர்ப்பு, பொதுமக்களின் நிராகரிப்பு, மன அழுத்தங்கள் மற்றும் அன்றாட சிரமங்கள் என பல வடிவங்களில் வந்தன. ஆனாலும் பவுல் இந்த கஷ்டங்களைப் பற்றி ஒருபோதும் முறுமுறுக்கவோ புலம்பவோ இல்லை.

  • நாம் கர்த்தரிடமிருந்து கிருபையைப் பெறுவது போலவே, அவருடைய நாமத்திற்காக சோதனைகளிலும் துன்புறுத்தல்களிலும் பங்குபெற அழைக்கப்படுகிறோம் என்பதை அவர் புரிந்துகொண்டார். ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. பிலிப்பியர் 1:29

 

4. வெளிப்படைத்தன்மை

பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி, ...... தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, அப்போஸ்தலர் 20:20,26

  • ஆவிக்குரிய ஊழியத்திலும் தனிப்பட்ட நடத்தையிலும் வெளிப்படைத்தன்மை இருப்பது மாய்மாலத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது - இதையே பவுல் எடுத்துக்காட்டினார்.

  • அவர் தனது நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்த மறைத்துவைக்காமல் என்ற வார்த்தையை திரும்பத் திரும்ப பயன்படுத்துகிறார். அப்போஸ்தலர் 20 ஆம் அதிகாரத்தில் மீண்டும் கூறுகிறார்.

    • வசனம் 20: பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல்

    • வசனம் 20(b): வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து

    • வசனம் 26: தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,

  • மறைத்துவைக்காமல்” என்ற இந்த வார்த்தை, நம் வாழ்விலும் ஒரு கொள்கையாக மாறட்டும்.

  • பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல் என்று பவுல் கூறுவது, தேவனின் பொருட்டு மற்றவர்களுக்கு ஊழியம் செய்யும்போது எதையும் மறைக்காமல், முழுமையாக அர்ப்பணிக்க வேண்டுமென நமக்கு நினைவுபடுத்துகிறது.

 

5. அவர் போதித்த சுவிசேஷம்

தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன். அப்போஸ்தலர் 20:21

  • பவுலின் நற்செய்தி செய்தி மூன்று முக்கிய கூறுகளை மையமாகக் கொண்டது:

    • தேவனை நோக்கி மனந்திரும்புதல் – பாவங்களை விட்டு விலகி, தேவனுக்கு முன்பாக பரிசுத்தத்தை தேடும் ஒரு அழைப்பு.

    • கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் - கிறிஸ்துவின் இரட்சிப்பு பணியில் முழுமையாக நம்பிக்கை வைத்தல்.

    • சாட்சியாக இருத்தல் - யூதர்களுக்கும் புறஜாதிகளுக்கும் தைரியமாக சாட்சியமளிப்பதன் மூலம் அவரது அழைப்புக்கு ஏற்ப வாழ்வது.

 

6. பரிசுத்த ஆவியுடன் நடப்பது / பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுவது இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன். கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன். அப்போஸ்தலர் 20:22-23

  • பவுலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மிஷனரி பயணங்களிலிருந்து, அவருடைய வாழ்க்கை மற்றும் பணியைப் பற்றிய ஆழமான புரிதல் கிடைக்கிறது.

  • அவர் கூட்டத்தைப் பின்பற்றவோ, மக்களின் ஒப்புதலை நாடவோ செய்யவில்லை - பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை அசைக்க முடியாத கீழ்ப்படிதலுடன் பின்பற்றினார்.

 

7. நேர்மை மற்றும் கடின உழைப்பு

ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூடி இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக்கைகளே வேலைசெய்தது. இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான். அப்போஸ்தலர் 20:33-35

  • உண்மையான நேர்மை மனநிறைவான இருதயத்திலிருந்து பிறக்கிறது. பவுல் இதை அழகாக விளக்குகிறார், என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. பிலிப்பியர் 4:11-13

  • மனநிறைவு இருதயத்தை பேராசையிலிருந்து பாதுகாக்கிறது.  "ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை" (அப்போஸ்தலர் 20:33) என்று பவுலால் தைரியமாக சொல்ல முடிந்தது, ஏனென்றால் அவருடைய திருப்தி பொருட்களின் மீதில்லாமல் தேவனின் மேல் வேரூன்றி இருந்தது.

  • பவுல் ஒரு வலுவான பணி (ஊழிய) நெறிமுறையை வெளிப்படுத்தினார். மற்றவர்களை நம்பியிருக்காமல், கடினமாக உழைப்பதற்கு தேவன் தனக்கு பலம் தருவார் என்று விசுவாசித்தார். நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூடி இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக்கைகளே வேலைசெய்தது. அப்போஸ்தலர் 20:34.

  • அவர் பெறுவதற்காக வாழாமல் கொடுப்பதற்காகவே வாழ்ந்தார். அவரது வாழ்க்கை "வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்" (அப்போஸ்தலர் 20:35), என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளைப் பிரதிபலித்தது. தனது உழைப்பு மற்றும் தாராள மனப்பான்மை மூலம் பலவீனமானவர்களுக்கு தொடர்ந்து உதவினார்.

 

8. ஜீவனை விட ஊழியத்திற்கே முன்னுரிமை

ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். அப்போஸ்தலர் 20:24

  • “ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், …. நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்” என்று அவர் கூறியது போல், பவுல் தனது சொந்த வாழ்க்கையை மிக உயர்ந்த முன்னுரிமையாகக் கருதவில்லை.

  • அவரது பணிக்கான நோக்கம் தெளிவாக இருந்தது: தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு

  • அதேபோல், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான அழைப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கேள்வி என்னவென்றால் - தேவன் நமக்குக் கொடுத்த குறிப்பிட்ட பணிக்கு நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா?

 

9. இரத்தப்பழிக்கு நீங்கி

தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையதினம் சாட்சிகளாக வைக்கிறேன். அப்போஸ்தலர் 20:26-27

  • தேவன் நம்மிடம் ஒப்படைத்த எதையும் மறைத்து வைக்காமல் முழுமையாக பேசுவது மிக அவசியம். நாம் அவருடைய செய்தியை மறைத்தால், இழந்து போன ஆத்துமாக்களுக்கு நாம் பொறுப்புக்கூற வேண்டியவர்களாகிவிடுகிறோம் - நாம் குற்றமற்ற இரத்தத்தின் பாரத்தை சுமக்கிறவர்களாவோம்.

  • பல நேரங்களில் இவற்றில் சில வார்த்தைகள் சங்கடமான உண்மைகளாக இருக்கலாம். தீர்க்கதரிசிகளைத் திரும்பிப் பாருங்கள், மக்களுக்கு சாதகமாக சொல்லாமல், தேவன் அவர்களிடம் சொல்லச் சொன்னதையே அவர்கள் சொன்னார்கள்.

  • NLT மொழிபெயர்ப்பு இதை இவ்வாறு கூறுகிறது: நான் உண்மையுள்ளவனாக இருந்தேன் என்று இன்று அறிவிக்கிறேன். யாராவது நித்திய மரணத்தை அனுபவித்தால், அது என் தவறு அல்ல – அப்போஸ்தலர் 20:26

  • இந்த இரத்தப்பழி என்பது தேவனுக்கு முன்பாக நாம் சுமக்கும் பொறுப்பைக் குறிக்கிறது - நாம் உண்மையைப் பேசத் தவறும்போது, நியாயத்தீர்ப்பு நாளில் அதற்கு நாம் பதிலளிக்க வேண்டியிருக்கும்.

 

10. தேவ கிருபையை சார்ந்திருத்தல்

  • மூப்பர்களுக்கு பவுல் அளித்த ஆலோசனைகள் அவரது சொந்த வாழ்க்கை நடைமுறையிலிருந்தும் தேவனை முழுமையாக சார்ந்திருந்ததிலிருந்தும் வந்தவை. இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். அப்போஸ்தலர் 20:32

  • பவுலின் பலம் அவரிடமிருந்து வரவில்லை, மாறாக தேவனின் கிருபையை முழுமையாக சார்ந்திருந்ததிலிருந்து வந்தது.

  • கிருபை என்பது நாம் பெற்றுக் கொள்ளத் தகுதியில்லாதவற்றைப் பெற்றுக் கொள்வது - அதாவது தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் தேவனின் ஆசீர்வாதம். பவுல் அந்தச் சத்தியத்தை உணர்ந்து வாழ்ந்தார்.

  • தனது பலவீனமான தருணங்களிலும் கூட, அவர் கர்த்தரைச் சார்ந்து இருந்தார். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். 2 கொரிந்தியர் 12:9

  • மூப்பர்களுக்கு அவர் அளித்த அறிவுரை, அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் அனுபவித்தவற்றின் அடிப்படையில் உருவானது. தேவனின் கிருபை நம்மைப் பலப்படுத்தவும், நிலைநிறுத்தவும், இந்த ஆவிக்குரிய பயணத்திற்கு அதிகாரம் அளிக்கவும் போதுமானது.

 

 

முடிவுரை

 

நாம் உண்மையிலேயே ஆவிக்குரிய ரீதியில் வளர விரும்புகிறோம் என்றால், நாம் இருக்கின்ற நிலையில் திருப்தியடைய முடியாது. ஆவிக்குரிய வளர்ச்சிக்கு கவனமான சுயமதிப்பீடும் தேவனின் கையால் வடிவமைக்கப்பட விரும்பும் மனப்பாங்கும் தேவையாகும். பவுலில் நாம் காணும் இந்த 10 குணாதிசயங்கள் சிறப்பானவைகள் மட்டுமல்ல தேவனால் பயன்படுத்தப்பட விரும்பும் எவருக்கும் அவை அவசியமானவை ஆகும்.

 

நாம் இப்போது அவற்றையெல்லாம் பிரதிபலிக்காமல் இருக்கலாம் - ஆனால் அதுவே நாம் தொடங்க வேண்டிய இடம்: இந்த குணங்களை நம்மில் வளர்க்கும்படி தேவனிடம் தாழ்மையுடன் வேண்டிக் கொள்ளுங்கள்.

 

பவுலைப் போல் உண்மையுள்ள, தைரியமான, தாழ்மையான, ஆவியால் வழிநடத்தப்பட்ட, கிருபையால் நிரம்பிய ஒரு பாத்திரமாக உங்களை உருவாக்குவதற்கு ஜெபியுங்கள்.

 

நாம் இந்த குணாதிசயங்களை நாடும் போது, நாம் தனிப்பட்ட முறையில் வளர்வது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாகவும் நம்மை அழைத்தவருக்கு மகிமையைக் கொடுப்பவர்களாகவும் இருப்போம்.

 

 

 

 

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Philip
Aug 18
Rated 5 out of 5 stars.

Amen

Like

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page