பட்டங்களுக்கு அப்பால் : மூப்பராவதற்கான தகுதி என்ன?
- Kirupakaran
- Oct 5
- 5 min read

இன்றைய உலகில், பட்டங்களும் பதவிகளும் பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் வேதாகமம் தலைமைத்துவத்தை முற்றிலும் மாறுபட்ட விதத்தில் காட்டுகிறது. ஆதி திருச்சபை வளரத் தொடங்கிய போது, அப்போஸ்தலர் பவுல் பதவியை நாடவில்லை. மாறாக, கிறிஸ்துவின் செய்தி தூய்மையாகவும் உண்மையாகவும் வருங்காலத் சந்ததியினருக்கு கடத்தப்படுவதை உறுதிசெய்ய அவர் மூப்பர்களை நியமித்தார். இது தான் ஒரு ஆரோக்கியமான, வளர்ச்சி பெறும் சபைகளுக்கான தேவனின் திட்டம் ஆகும்.
இருப்பினும், காலப்போக்கில், சில சபைகள் இந்த அடிப்படைக் கொள்கையிலிருந்து விலகிச் சென்றுவிட்டன. அதனால்தான் பவுல் தீத்துவுக்கு எழுதிய கடிதம் மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. 1 & 2 தீமோத்தேயுவுடன் சேர்த்து எழுதப்பட்ட, அவரது போதகர் நிரூபங்களில் ஒன்றான இந்த குறுகியதும் சக்திவாய்ந்ததுமான புத்தகம் திருச்சபைத் தலைமைதத்துவம் மற்றும் தூய உபதேசங்களைக் குறித்த நடைமுறை வழிகாட்டுதலை வழங்குகிறது. கிரேக்க மார்க்கத்திலிருந்து மாறியவரும் பவுலின் மிகவும் நம்பகமான உடன் ஊழியர்களில் ஒருவருமான தீத்து (கலாத்தியர் 2:3), திருச்சபைகளை ஒழுங்கமைக்கவும் ஆவிக்குரிய தலைவர்களை நியமிக்கவும் கிரேத்தாவில் விடப்பட்டார் (தீத்து 1:5).வலுவான விசுவாசம் மற்றும் நிலையான தலைமைக்கு பெயர் பெற்ற அவர், கொரிந்துவில் ஏற்பட்ட கடினமான பிரச்சினைகளைத் தீர்க்கவும் உதவினார் (2 கொரிந்தியர் 7:6–7).
இதில், தீத்துவுக்கு பவுல் அளித்த அறிவுறுத்தல்களிலிருந்து, மூப்பர்களின் முக்கிய பங்கு பற்றி அவை என்ன வெளிப்படுத்துகின்றன என்பதையும், மேலும் இந்த வேதாகம மாதிரிக்குத் திரும்புவது இன்று திருச்சபைக்கு ஏன் மிகவும் முக்கியமானது என்பதையும் அறிந்துகொள்வோம். விசுவாசிகளுக்கு, நாம் கலந்துகொள்ளும் திருச்சபை இந்த உண்மைகளைப் பிரதிபலிக்கிறதா என்பதை ஆராய இது ஒரு அழைப்பு. இது, மூப்பர்களுக்கும் ஆசாரியர்களுக்கும், தலைமைத்துவம் தேவனுடைய வசனத்தோடு ஒத்துப்போகிறதா என்பதை சிந்தித்து, உறுதி செய்வதற்கான ஒரு அழைப்பாகும்.
மூப்பர் என்பவர் யார்?
வேதத்தில், மூப்பர்கள் கண்காணிகள் மற்றும் மேய்ப்பர்கள் (போதகர்கள்) என்றும் குறிப்பிடப்படுகிறார்கள் - இவை யாவும் ஒரே அழைப்பின் வேறுபட்ட அம்சங்களை வெளிப்படுத்தும் வெவ்வேறு பட்டங்கள். அவர்களின் பொறுப்புகளாவன:
ஆரோக்கியமான உபதேசத்தைக் கற்பித்தல் மற்றும் பாதுகாத்தல் - ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம்பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும். தீத்து 1:9
மந்தையை மேய்த்தல் - உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும். சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள். 1 பேதுரு 5:2-3
வியாதிப்பட்டவர்களுக்காக ஜெபித்து, அவர்களை பராமரித்தல் - உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். யாக்கோபு 5:14
மூப்பர் என்பவர் வெறும் நிர்வாகியோ அல்லது அது ஒரு பதவியோ அல்ல. அவர் ஒரு ஊழியக்காரத் தலைவர், அவருடைய வாழ்க்கை கிறிஸ்துவின் குணாதிசயங்களை வெளிப்படுத்த வேண்டும். அவருடைய குடும்பம் அவருடைய விசுவாசத்தைப் பிரதிபலிக்க வேண்டும், அவருடைய போதனை சபையை காத்திடும் வகையில் இருக்க வேண்டும்.
ஒரு சபை மூப்பரின் பண்புகள்
1 தீமோத்தேயு 3:1–7 மற்றும் தீத்து 1:5–9 இல் பவுல் குணாதிசய அடிப்படையிலான தேவைகளைப் பட்டியலிடுகிறார். இந்தப் பதிவில் தீத்துவிற்கு எழுதியதைக் கவனித்துப் பார்க்கலாம்.
நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேன். தீத்து 1:5
பவுல் தீத்துவை கிரேத்தா தீவில் (இது கிரேக்க நிலப்பகுதியின் தெற்கிலும் சைப்ரஸுக்கு மேற்கிலும் அமைந்துள்ளது. கி.பி. 1 ஆம் நூற்றாண்டில் இது ரோமானியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது) "குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், … பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும்" (வசனம் 5) விட்டுச் சென்றார். இந்தப் பகுதியில், ஒரு மூப்பருக்குத் தேவையான குணாதிசயங்கள் மற்றும் பொறுப்புகள் இரண்டையும் பவுல் கோடிட்டுக் காட்டுகிறார். அவையாவன: ஆவிக்குரிய முதிர்ச்சி, நெறிப்படுத்தும் நேர்மை மற்றும் தேவனுடைய ஜனங்களை ஞானத்துடன் வழிநடத்தும் திறமை.
1. ஒரு மூப்பரை அங்கீகரிப்பதற்கான அடிப்படை குணங்கள்
குற்றஞ்சாட்டப்படாதவர் - தேவன் முன்பாகவும் ஜனங்கள் முன்பாகவும் நேர்மையுடனும் தெளிவான மனசாட்சியுடனும் வாழ வேண்டும். பரிபூரணம் அல்ல, ஆனால் வெளிப்படையான தவறுகளிலிருந்து விடுபட்ட வாழ்க்கையாக இருக்க வேண்டும் (வசனம் 6a). "குற்றஞ்சாட்டப்படாதவனும் ... ". தீத்து 1:6
திருமணத்தில் உண்மையாக இருப்பவர் - தனது மனைவிக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டவராக, எவ்வகையான பாலியல் ஒழுக்கக்கேட்டையும் தவிர்த்தவராக இருக்க வேண்டும் (வசனம் 6b). “...ஒரே மனைவியையுடைய புருஷனும் ... ". தீத்து 1:6
தேவபயமுள்ள பிள்ளைகள் - அவரது பிள்ளைகள் துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளாக இருக்க வேண்டும் (வசனம் 6). " ... துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ... ". தீத்து 1:6
2. முக்கிய குணநலன்கள்
ஒரு மூப்பர் தேவனுடைய வீட்டின் உக்கிராணக்காரராக இருப்பதால் (வசனம் 7), அவரது வாழ்க்கை தேவனின் குணத்தை பிரதிபலிக்க வேண்டும்.
குற்றஞ்சாட்டப்படாதவர் - எல்லாப் பகுதிகளிலும் குற்றச்சாட்டுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். "ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்,". தீத்து 1:7
உபசரிக்கிறவர் - மற்றவர்களிடம் அன்போடும், இனிமையோடும் நடந்து கொள்ள வேண்டும். அந்நியரை உபசரிக்கிறவனும் தீத்`து 1:8
நன்மையானவற்றில் பிரியமுள்ளவர் - தேவனுக்குப் பிரியமானவற்றால் ஈர்க்கப்பட்டு தீமையை நிராகரிப்பவராக இருக்க வேண்டும்."நல்லோர்மேல் பிரியமுள்ளவனும்," தீத்து 1:8
இச்சையடக்கமுள்ளவர் - உணர்ச்சிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் முடிவுகளில் ஒழுக்கமானவர். "தெளிந்த புத்தியுள்ளவனும்,நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்". தீத்து 1:8
தெளிந்த புத்தியுள்ளவர் - நியாயமானவராகவும் பாரபட்சமற்றவராகவும், தேவனின் பார்வையில் சரியானதைச் செய்பவராகவும் இருக்க வேண்டும். தெளிந்த புத்தியுள்ளவனும். தீத்து 1:8
பரிசுத்தமும் ஒழுக்கமும் உடையவர் - தேவனுக்காகப் பிரித்தெடுக்கப்பட்டவர், அவருடைய திருத்தத்தை ஏற்றுக்கொண்டு அவருடைய வழிகாட்டுதலின் கீழ் வாழ்பவர். "நீதிமானும், பரிசுத்தவானும்" தீத்து 1:8
ஒரு மூப்பர் தவிர்க்க வேண்டியவை
ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும், தீத்து 1:7
இந்தப் பதவிக்கு ஒருவரைத் தகுதியற்றவராக்கும் மனப்பாங்குகளையும் நடத்தைகளையும் பவுல் பட்டியலிடுகிறார்:
தன் இஷ்டப்படி செய்யாதவர் - அகந்தையுள்ளவராகவோ, கட்டுப்பாடு போடுகிறவராகவோ ஆதிக்கம் செலுத்துகிறவராகவோ இருக்கக்கூடாது.
முற்கோபமில்லாதவர் - எளிதில் கோபப்படாமல் பொறுமையாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டும்.
மதுபானப்பிரியமில்லாதவர் - மது அல்லது கட்டுப்பாடற்ற இன்பங்களுக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்.
அடியாதவர் - ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யாதவரும் கடுமையான நடத்தை இல்லாதவருமாக இருக்க வேண்டும்
இழிவான ஆதாயத்தை இச்சியாதவர் - தனிப்பட்ட லாபத்திற்காக தலைமைத்துவத்தைப் பயன்படுத்தாதவராக இருக்க வேண்டும்.
3. சத்தியத்தின் போதகர் மற்றும் பாதுகாவலர்
ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம்பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும். தீத்து 1:9
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு மூப்பர் ஆரோக்கியமான உபதேசத்தைப் போதிப்பவராகவும் அதைக் காப்பவராகவும் இருக்க வேண்டும்.
இது தேவையானபோது தவறான போதனைகளை வலுவான எச்சரிப்புடன் எதிர்கொண்டு, சபையைத் தூய்மையாகவும், சுவிசேஷத்திற்கு உண்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள். அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள். கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களிலொருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான். இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல், விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள். தீத்து 1:10-14
பவுல் கூறுவது, புறாவைப் போல மென்மையாகவும், பாம்புகளைப் போல நுண்ணறிவுடனும் இருக்க வேண்டும், தேவனுக்கான வைராக்கியம் அவர்களை "கடுமையாக எச்சரிப்பதற்கு" வழிநடத்த வேண்டும்.
ஒரு மூப்பர் என்ன கற்பிக்க வேண்டும்?
நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு. தீத்து 2:1
கிறிஸ்துவில் வேரூன்றிய சத்தியமான ஆரோக்கியமான உபதேசங்களின்படி கற்பிக்கும்படி பவுல் மூப்பர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
சகோதர சகோதரிகளுக்கான உபதேசங்கள் மனித மனம் என்ன நினைக்கிறது என்பதன் அடிப்படையில் அல்லாமல் வேதத்தின் ஆரோக்கியமான போதனைகளுடன் ஒத்துப்போக வேண்டும்,
ஆரோக்கியமான உபதேசம் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட போதனைகளால் நடத்தப்படுகிறது. இது வேதாகமத்துக்கும் கிறிஸ்துவிற்கும் வெளியேயானது அல்ல.
ஆரோக்கியமான உபதேசம் பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்டது அல்ல.
முதிர்வயதுள்ள புருஷர்களுக்குக் கற்பித்தல் (தீத்து 2:2)
முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்திசொல்லு. தீத்து 2:2
மூப்பர்கள் முதிர்வயதுள்ள புருஷர்களுக்குக் கற்பிக்க வேண்டியவை:
ஜாக்கிரதையுள்ளவர்களாக இருங்கள் – உணர்ச்சிவசப்பட்ட, அவசரமான செயல்களைத் தவிர்த்து பொறுமையையும் இச்சையடக்கத்தையும் பேணுங்கள்.
நல்லொழுக்கமுள்ளவர்களாக இருங்கள் - மற்றவர்கள் உங்கள் அனுபவத்தையும் தலைமைத்துவத்தையும் மதிக்கும் வகையில் மரியாதையுடன் வாழுங்கள்.
தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருங்கள் - இது முதிர்வயதானவர்களுக்கும் வாலிபர்களுக்கும் அவர் கொடுக்கும் ஒரு பொதுவான அறிவுரை. இச்சையடக்கம் என்பது பாலியல் அடிமைத்தனம் மற்றும் இளம் பெண்களைப் பார்க்கும்போது வரும் ஆசைகளை கட்டுப்படுத்தும் மனநிலையைக் குறிக்கிறது. வயதான யோபு இதுபோன்ற ஒரு ஜெபத்தை ஜெபிக்கிறார். வாலிபனாக இருந்தாலும், முதியவராக இருந்தாலும் இது எல்லா ஆண்களுக்கும் பொருந்தும். என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? யோபு 31:1
விசுவாசத்திலும் அன்பிலும் உறுதியாயிருங்கள் - கிறிஸ்துவில் ஆழமாக வளர்ந்து, தேவன் மீதும் மற்றவர்கள் மீதும் அன்பை வெளிப்படுத்துங்கள்.
சோதனைகளைத் தாங்குங்கள் - சோதனைகளில் பொறுமையுடன் இருங்கள், இது நற்குணங்களையும் நம்பிக்கையையும் வளர்க்கும். (யாக்கோபு 1:12; ரோமர் 5:3–4).
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். யாக்கோபு 1:12
அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். ரோமர் 5:3–4
முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குக் கற்பித்தல் (தீத்து 2:3)
முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும், தீத்து 2:3
முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குக் கற்பிக்க வேண்டியவை:
பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடத்தல் - தேவனை மையமாகக் கொண்ட பரிசுத்தமான வாழ்க்கையை வெளிப்படுத்துங்கள்.
அவதூறு பண்ணாதவர்களாயிருத்தல் - வதந்திகள், பொய்யான குற்றச்சாட்டுகள் அல்லது எதிர்மறையான பேச்சுகளைத் தவிர்க்கவும்.
அடிமைத்தனத்திற்கு விலகியிருத்தல் - அதிகப்படியான மது, இன்பங்களுக்கு அடிமையாகாதீர்கள்.
நற்காரியங்களைப் போதிக்கிறவர்களாயிருத்தல் - கிறிஸ்துவைப் போன்ற நடத்தையை முன்மாதிரியாகக் கொண்டு மற்றவர்களுக்கு தெய்வபக்தியைக் கற்பியுங்கள்.
பாலிய ஸ்திரீகளுக்குக் கற்பித்தல் (தீத்து 2:4-5)
தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு. தீத்து 2:4-5
முதிர்வயதான பெண்கள் பாலிய பெண்களுக்கு வலியுறுத்த வேண்டியவை:
தங்கள் புருஷரிடத்திலும், பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களாயிருக்க வேண்டும் - குடும்பத்தை தங்கள் வாழ்க்கையின் மையமாக வைத்திருக்க வேண்டும்.
தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களுமாயிருக்க வேண்டும் - திருமணத்திற்குள் பாலியல் தூய்மையையும் நெறிப்பட்ட ஒழுக்கத்தையும் பேண வேண்டும்.
வீட்டில் தரித்திருக்கிறவர்களாக இருக்க வேண்டும் - வீட்டுப் பொறுப்புகளை கவனமாக நிர்வகிக்க வேண்டும்.
நல்லவர்களாக இருக்க வேண்டும் - இரக்கத்தின் மூலம் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துங்கள்
புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களாக இருக்க வேண்டும் - தேவனை மகிமைப்படுத்தும் விதத்திலும், தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்குக் காத்துக் கொள்ளும் விதத்திலும் வாழ வேண்டும்.
பாலிய புருஷர்களுக்குக் கற்பித்தல் (தீத்து 2:6)
அப்படியே, பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்திசொல்லி, தீத்து 2:6
மூப்பர்கள் பாலிய புருஷர்களை பின்வருமாறு ஊக்குவிக்க வேண்டும்:
தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருங்கள் – நெறிமுறைகள், ஆவிக்குரிய நடத்தை உட்பட வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
சுருக்கம்
தீத்துவின் இந்தப் பகுதியை நாம் படிக்கும்போது, நம்மோடு சேர்ந்து ஊழியம் செய்யும் போதகர்கள், மூப்பர்கள் அல்லது திருச்சபைத் தலைவர்களை நியாயந்தீர்க்கும் ஒரு கருவியாக இதைப் பயன்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களை நியாயந்தீர்ப்பதற்கு எதிராக வேதம் நம்மை எச்சரிக்கிறது, ஏனெனில் அவ்வாறு செய்யும்போது, நாமே பாவத்திற்குள் அடியெடுத்து வைக்கிறோம்.
மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள். லூக்கா 6:37
மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே. ரோமர் 14:4
இந்தக் கடைசிக் காலத்தில், பல பொய்ப் போதகர்கள் தனிப்பட்ட ஆதாயத்திற்காக தேவனுடைய வார்த்தையைத் திரித்துக் கூறுகிறார்கள். தீத்துவில் பவுலின் போதனை, சத்தியத்தை வஞ்சகத்திலிருந்து பகுத்தறிந்து, வேதாகமத்தில் உறுதியாக வேரூன்றி, கிறிஸ்துவை நோக்கி நம்மை வழிநடத்தும் தலைவர்களைப் பின்பற்ற நமக்கு உதவுகிறது.
தீத்து 1 மற்றும் 2 ஆம் அதிகாரங்கள், திருச்சபைத் தலைமைத்துவம் என்பது ஒருபோதும் பட்டங்கள் அல்லது கட்டுப்பாட்டைப் பற்றியது அல்ல என்பதை நமக்கு நினைவூட்டுகிறது - அது நற்குணம், உறுதியான நம்பிக்கை மற்றும் கிறிஸ்துவைப் போன்ற பராமரிப்பு ஆகியவற்றைக் குறித்ததாகும். மூப்பர்கள் ஆரோக்கியமான உபதேசங்களைப் பாதுகாக்கவும், தெய்வீக முன்மாதிரிகளாக வாழவும், ஒவ்வொரு தலைமுறையையும் வடிவமைக்கும் சத்தியத்தைக் கற்பிக்கவும் அழைக்கப்படுகிறார்கள். விசுவாசிகளாகிய நாம் செய்ய வேண்டியது அத்தகைய தலைவர்களுக்காக ஜெபிப்பதும், அவர்களை ஆதரிப்பதும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதும் ஆகும். அவர்கள் விசுவாசத்துடன் நடக்கும்போது, முழு சபையும் நம்பிக்கையிலும், அன்பிலும், பொறுமையிலும் பலப்படுத்தப்படும்.



Comments