top of page
  • Kirupakaran

பொறாமை அறிவுரை: தாவீது மற்றும் சவுலின் பாடம்



நம் நண்பரோ அல்லது நெருங்கிய சக ஊழியரோ நம் மீது பொறாமை கொண்ட  சூழ்நிலைகள் நம் அனைவருக்கும் இருக்கும். காரணமே இல்லாமல் நம்மை  வெறுத்து நம் மேல் பொறாமைப்பட நான் என்ன செய்தேன் என்று சில சமயங்களில் ஆச்சரியப்படுவீர்கள். பழைய ஏற்பாட்டில் தாவீது மற்றும் சவுலின் வாழ்க்கையைப் படிக்கும்போது, நாம் கற்றுக்கொள்ளக்கூடிய சில வாழ்க்கைப் பாடங்கள் அதில் உள்ளன.

 

தங்களுக்கு ராஜா இல்லை என்ற இஸ்ரவேலர்களின் கூக்குரலின் நிமித்தம் அவர்களுக்கு தேவனால் நியமிக்கப்பட்ட ராஜா தான் சவுல். அவரது ஆட்சியில் அவர் பெலிஸ்தர்களாலும் கோலியாத்தாலும் துன்புறுத்தப்பட்டார். ஆடு மேய்க்கும் சிறுவனாக இருந்த தாவீது, பெலிஸ்தனாகிய கோலியாத்தை மரணத்திற்கு ஏதுவாக தோற்கடிக்கும் இந்த சவாலை ஏற்றுக்கொண்டார். கோலியாத்தின் மரணம் இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களைத் துரத்திச் சென்று அவர்களது முகாமைச் சூறையாட வழி வகுத்தது. முழு கதையை அறிந்து கொள்ள 1 சாமுவேல் 17 ஆம் அதிகாரத்தைப் படியுங்கள்.

 

பெலிஸ்தனைக் கொன்றுவிட்டுத் திரும்பிய தாவீதை சவுல் சந்திக்கிறார். அப்பொழுது தாவீது சவுலுக்கு இப்படித்தான் அறிமுகமாகிறார்.


தாவீது பெலிஸ்தனுக்கு எதிராகப் புறப்பட்டுப் போகிறதைச் சவுல் கண்டபோது, அவன் சேனாபதியாகிய அப்னேரைப் பார்த்து: அப்னேரே, இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்; அதற்கு அப்னேர்: ராஜாவே, எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்புகையில், அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவன் கையில் இருந்தது. அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக்கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாயிருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான். 1 சாமுவேல்17:55,57-58

 

தாவீது ஒரு அடியானின் மகன், அதுவும் ஆடு மேய்க்கும் சிறுவன். ஒரு இளைஞன், அவன் ராஜா சவுலுக்கு இணையானவன் அல்ல. ஆனால் 1 சாமுவேல் 18 இல், சவுல் பொறாமை கொண்டு தாவீதை இரண்டு முறை கொல்ல முயன்றதாக வாசிக்கிறோம். எனவே, சவுலுக்கு இந்த பொறாமை வர என்ன காரணம் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

 

தாவீதின் ஆசீர்வாதங்கள்

சவுலை தாவீது மீது பொறாமை கொள்ள வைத்த, தாவீதுக்கு தேவனிடமிருந்து கிடைத்த ஆசீர்வாதங்கள்.


1.   இளவரசனுக்கு (சவுலின் குமாரனாகிய யோனத்தான்) தாவீதின் மீதான அன்பு

அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான். சவுல் அவனை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக ஒட்டாமல், அன்று முதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான். யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப்போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள். யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் வஸ்திரத்தையும், தன் பட்டயத்தையும், தன் வில்லையும், தன் கச்சையையும் கூடத் தாவீதுக்குக் கொடுத்தான். 1 சாமுவேல் 18:1-4

  • சவுலின் குமாரனாகிய யோனத்தான் இளவரசனாக இருந்தார் என்றும், தாவீதைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தார் என்றும் வாசிக்கிறோம். அது வசனங்கள் 1 மற்றும் 3 இல் கூறப்பட்டுள்ளது, “அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்”.

  • யோனத்தான் தாவீதை நேசித்ததோடு மட்டுமல்லாமல், யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது, “யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது". மேலும், தாவீதுடன் ஒரு உடன்படிக்கை செய்தார், “அவனும் இவனும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்".

  • தாவீது செய்யும் எல்லாவற்றிலும் தேவன் அவரோடு இருக்கும் போது, ராஜாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் (ராஜாவின் குமாரன்) தாவீதை விரும்புவதற்கும், நேசிப்பதற்கும் சூழ்நிலைகளை தேவன் உருவாக்குகிறார். தாவீதைக் கனம் பண்ணும் விதமாக யோனத்தான் தான் அணிந்திருந்த ராஜ வஸ்திரங்களைக் கூட அவருக்குக் கொடுத்தார், "யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் வஸ்திரத்தையும், தன் பட்டயத்தையும், தன் வில்லையும், தன் கச்சையையும் கூடத் தாவீதுக்குக் கொடுத்தான்".

நமக்கான பாடம்

  • தேவனின் ஆசீர்வாதம் இருக்கும்போது, உங்களுக்குத் தெரியாத ஒருவரிடமிருந்து கூட அதிக கவனத்தைப் பெறுவீர்கள். ராஜாக்களுக்குக் கிடைக்கின்ற சிறந்த ஆசீர்வாதத்தால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

  • ராஜாவின் குமாரனின் கவனத்தைப் பெறும்படி தாவீது தேவனிடமிருந்து ஆவிக்குரிய ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்தார். ஏனெனில், அவர் தேவனிடம்  மனத்தாழ்மையுடன் இருந்தார்.

2.   ராணுவத்தில் உயர்ந்த பதவி உயர்வு

தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான். தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, ஜனங்கள் திரும்ப வரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள். அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள். 1 சாமுவேல் 18:5-7

  • தாவீது ஜெயம் கொண்டது மட்டுமல்லாமல், மிகவும் புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததாக இங்கே வாசிக்கிறோம். அவர் உண்மையான ஆவியுடன் செய்ததால், வெற்றி பெற்றார் என்று இது கூறுகிறது.

  • தாவீது தேவனின் இருதயத்திற்கு ஏற்றவராக இருந்தார், அவர் ஒரு வலிமையான வீரராக இருந்தபோதிலும், அவர் எந்த யுத்தத்திற்கும் தனது சொந்த திட்டங்களை நம்பியிருக்கவில்லை. எப்போதும் போராடுவதற்கு தேவனின் ஆலோசனையை நாடினார். இதை சங்கீதம்18 இல் எழுதியுள்ளார். என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப் போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார். வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார். உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும். என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன். அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு, என் பாதங்களின்கீழ் விழத்தக்கதாக அவர்களை வெட்டினேன். யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர். நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர். சங்கீதம் 18:32-40

  • இப்படிப்பட்ட மனத்தாழ்மையும் தேவனை சார்ந்திருந்ததும் தாவீதுக்கு ஜெயத்தைக் கொடுத்தது. அவர் யுத்தங்களில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், அவரது ஜனங்களாலும், சகஊழியக்காரர்களாலும் விரும்பப்பட்டார். "அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான்".

  • முழு பட்டணமும் தாவீதின் வெற்றியைக் கொண்டாடியது. பெரும்பாலும் தேவனின் ஆசீர்வாதங்கள் மற்றவர்களாலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. “ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்”.

3.   தாவீது செய்த எல்லாவற்றிலும் ஜெயம்

அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி, அவனை ஆயிரம்பேருக்கு அதிபதியாக வைத்தான்; அப்படியே அவன் ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான். தாவீது தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்தான்; கர்த்தர் அவனோடேகூட இருந்தார். அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான். இஸ்ரவேலரும் யூதா ஜனங்களுமாகிய யாவரும் தாவீதைச் சிநேகித்தார்கள்; அவர்களுக்கு முன்பாக அவன் போக்கும் வரத்துமாயிருந்தான். 1 சாமுவேல் 18:13-16

  • தாவீதின் ஆசீர்வாதம், அவர் செய்த எல்லாக் காரியங்களிலும் ஜெயம் கொள்ளும் அளவிற்கு மிகவும் அதிகமாக இருந்தது.

  • முழு இஸ்ரவேலும் யூதாவும் தாவீது செய்த வேலைக்காக அவரை  நேசித்தார்கள். ஏனெனில் தேவனின் கரம் தாவீதின் மேல் இருந்தது. பெலிஸ்தருடைய பிரபுக்கள் புறப்படுகிறபோதெல்லாம் தாவீது சவுலுடைய ஊழியக்காரர் எல்லாரைப்பார்க்கிலும் புத்திமானாய் நடந்துகொண்டான்; அவன் பேர் மிகவும் கனம்பெற்றது. 1 சாமுவேல் 18:30


பொறாமையின் காலடிகள்

1 சாமுவேல் 18 முழு அதிகாரத்தையும் படிக்கும்போது, தாவீதின் மீது பொறாமை கொள்ளும்படி, சவுலைத் தொந்தரவு செய்த பல விஷயங்கள் உள்ளதைப் பார்க்கலாம். பொறாமை படிப்படியாக வருகிறது.


1.   தேவன் ஆசீர்வதிக்கும் போது, எதிரி பொறாமையாகிறான்

தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, ஜனங்கள் திரும்ப வரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள். அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள். அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி, 1 சாமுவேல் 18:6-8

  • தாவீதுக்கு எதிராக சவுலிடம் பொறாமையின் ஆவி இருந்தது. தேவனை  விட தான் சிறந்தவன் என்று காட்ட நினைக்கும் சாத்தானின் செயல் தான் இது.

  • ஆசீர்வாதத்தின் காரணமாக, பொறாமையிலிருந்து அது கோபத்தின் ஆவியைப் பெற்றெடுக்கிறது. அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி, 1 சாமுவேல் 18:8

  • கோபத்திலிருந்து அது, ஒருவரைக் கொல்லும்படியான ஆவியைப் பெற்றெடுக்கிறது. சவுல் தாவீதைக் கொல்ல இரண்டு முறை முயற்சித்தார். மறுநாளிலே தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் இறங்கிற்று; அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்; அப்பொழுது தாவீது தினந்தோறும் செய்கிறபடி, தன் கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்; சவுலின் கையிலே ஈட்டியிருந்தது. அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டு தரம் அவனுக்குத் தப்பினான். 1 சாமுவேல் 18:10-11

2.   எதிரி பயப்படுவதால், ஆசீர்வதிக்கப்பட்டவர்களைத் தாக்குகிறான்

கர்த்தர் தாவீதோடே கூட இருக்கிறார் என்றும் தன்னை விட்டு விலகிப்போனார் என்றும், சவுல் கண்டு, தாவீதுக்குப் பயந்து, 1சாமுவேல் 18:12. அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான். 1 சாமுவேல் 18:15

  • கர்த்தர் சவுலை விட்டு விலகி தாவீதோடே கூட இருந்ததால் சவுல் தாவீதுக்குப் பயந்திருந்தார். “கர்த்தர் தாவீதோடே கூட இருக்கிறார் என்றும் தன்னை விட்டு விலகிப்போனார் என்றும், சவுல் கண்டு, தாவீதுக்குப் பயந்து,”, எனவே, சவுல் தாவீதைத் தாக்கினார்.

  • ஜனங்கள் பயப்படவில்லை, எதிரி மட்டுமே பயப்படுகிறான். இதை நன்கு புரிந்து கொள்ளுங்கள், தாவீதின் இருப்பில் ஜனங்கள் மகிழ்ச்சியடைந்ததாகத் தெரிகிறது. இஸ்ரவேலரும் யூதா ஜனங்களுமாகிய யாவரும் தாவீதைச் சிநேகித்தார்கள்; அவர்களுக்கு முன்பாக அவன் போக்கும் வரத்துமாயிருந்தான். 1 சாமுவேல் 18:16

3.   ஆசீர்வதிக்கப்பட்டவர்களை சிக்க வைக்க எதிரி வஞ்சனையானவைகளைத் திட்டமிடுகிறான்

என் கை அல்ல, பெலிஸ்தரின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல சேவகனாய் மாத்திரம் இருந்து, கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான். 1 சாமுவேல் 18:17

  • எதிர்கொள்வதற்கான ஞானத்தை தேவன் தருகிறார். எதிரி தோற்கடிக்கப்படும்படி, வஞ்சனைகளை எதிர்த்துப் போராட தேவன் ஒரு வழியை வழங்குகிறார்.

  • வஞ்சகத்தை எதிர்கொள்வதற்கான தேவனின் ஞானம் - அப்பொழுது தாவீது சவுலைப் பார்த்து: ராஜாவுக்கு மருமகனாகிறதற்கு நான் எம்மாத்திரம், என் ஜீவன் எம்மாத்திரம், இஸ்ரவேலிலே என் தகப்பன் வம்சமும் எம்மாத்திரம் என்றான். 1 சாமுவேல் 18:18

  • தேவன் வழியைக் கண்டறிய உதவுகிறார் - சவுலின் குமாரத்தியாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங்காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள். 1 சாமுவேல் 18:19


நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்


  • பொறாமை உலக மக்களிடமிருந்தோ, சபை மக்களிடமிருந்தோ அல்லது கிறிஸ்தவ வட்டத்திலிருந்தோ வரலாம். பொறாமை இல்லாதவர்கள்  யாரும் இல்லை. பொறாமையின் ஆவி சவுலுக்கு தாவீதின் மேல்  வந்ததை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அதே போல், இயேசு தம்முடைய ஊழியத்தைச் செய்தபோது பரிசேயர்களும் சதுசேயர்களும் பொறாமையால் நிறைந்தனர்.

  • தேவனின் ஆசீர்வாதம் இந்த பொறாமையை கொண்டு வர முடியும். அது தேவனின் ஆசீர்வாதத்தை அழிக்கிறது. எதிரி ஆசீர்வாதத்தை எவ்வாறு  அழிக்கிறான்? நீங்கள் பெருமை கொள்ளும்படிக்கும், தேவனைக் கனவீனம் பண்ணும்படிக்கும், உங்கள் வெற்றிக்கு நீங்கள் மட்டுமே காரணம் என்று நினைக்கும்படிக்கும் உங்களைத் தூண்டுவதற்கு பிசாசானவன் பின்பற்றும் பல்வேறு தந்திரங்கள் உள்ளன. வஞ்சகங்கள் இருக்கலாம், பாவம் செய்வதற்குத் தூண்டும்படியான கோப சூழ்நிலைகள் இருக்கலாம். இவை தேவனின் ஆசீர்வாதத்தை அழிக்க வழிவகுக்கின்றன.

  • மற்றவர்கள் உங்கள் மீது பொறாமைப்படும் போது, செய்ய வேண்டிய விஷயங்கள்.

    • தேவனை சார்ந்திருங்கள் - தாவீதைப் போல தேவனின் நிழலில் அடைக்கலம் தேடுங்கள். நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். சங்கீதம் 91:2-

    • பிசாசின் பின்னால் செல்லாதீர்கள் - பெருமை, வஞ்சனை, கோபம் போன்ற பிசாசின் வலையில் விழுந்துவிடாதீர்கள். உங்கள் சுய நீதியிலிருந்து உங்களைத் தூய்மைப்படுத்தும்படி தேவனிடம் கேட்க உங்களையே உள்நோக்கிப் பாருங்கள். தேவனோடு நெருங்கி நடப்பதால், நீங்கள் மிகவும் சிறந்தவர், நீதிமான் என்று உங்களை நினைத்துக் கொள்ளாதீர்கள். பவுலின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள். அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும். ரோமர் 12:3

    • தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையோடிருங்கள் - உங்களுக்கு எந்த பெலனும் இல்லை, அறிவும் இல்லை என்பதைக் காட்ட அவருக்கு முன்பாகத் தாழ்மையுடன் இருங்கள். தாவீது யுத்தத்தில் சிறந்தவராக இருந்தபோதும் தேவனுக்கு முன்பாக எப்படி அடிபணிந்திருந்தாரோ அதுபோல் இருங்கள். உங்களைத் தாழ்த்திக் கொள்ளும்போது, அவர் தம்முடைய கிருபையால் உங்களை உயர்த்துவார். எதிர்பாராத சமயங்களில் அறியாதவர்களிடம் இருந்து சரியான நேரத்தில் இரக்கம் கிடைக்கும்படி செய்வார். அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.  கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள்,அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். யாக்கோபு 4:6,10

    • உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபியுங்கள் - செய்வதற்கு மிகவும் கடினமான காரியங்களில் இது ஒன்றாகும். நம் மீது பொறாமைப்படுபவர்கள் அல்லது நம்மை வெறுப்பவர்களுக்கு எதிராக கசப்புணர்வைக் கொண்டிருப்பது மனிதர்களின் இயற்கையான போக்கு. அவர்களுக்காக ஜெபிப்பதோ அல்லது அவர்களை நேசிப்பதோ மிகவும் கடினம். நம் சுயம் அவர்களை வெறுக்கச் சொல்கிறது, தேவனின் ஆவியோ அவர்களுக்காக ஜெபித்து அவர்களை ஆசீர்வதிக்கச் சொல்கிறது. நீங்கள் ஜெபிக்கும்போது, சாத்தானின் பலமான பிடி பலவீனமடையும், "அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்". பிசாசின் திட்டங்கள் வீணாகிப் போகும்.

      • நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். மத்தேயு 5:44-45

      • உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார். நீதிமொழிகள் 25:21-22

    • தேவன் உங்களுக்காக யுத்தம் செய்ய அனுமதியுங்கள் - தாவீதின்  வாழ்க்கை ஏராளமான யுத்தங்கள் மற்றும் பல எதிரிகளைக் கொண்டிருந்தது. தாவீது தனது யுத்தங்களை தான் செய்யாமல், தேவன் அவருக்காக யுத்தம் செய்ததால் தாவீது வெற்றியாளராக இருந்தார். மிகவும் கடினமான காரியம், ஆனால் இந்த நல்லொழுக்கத்தை உங்களுக்கு வழங்க தேவனிடம் கேளுங்கள். அப்பொழுது, தாவீதைப் போல் ஜெயத்தைக் காண்பீர்கள். எவ்வளவு அதிகமாக வெறுக்கிறார்களோ, எவ்வளவு அதிகமாக  பொறாமைப்படுகிறார்களோ, எவ்வளவு அதிகமாக அவதூறு செய்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். சங்கீதம் 35:1


bottom of page