போராட்டங்களை எதிர்கொள்வது எப்படி? - பாகம் 2
- Kirupakaran
- Feb 5, 2023
- 6 min read

இந்தப்பதிவு "போராட்டங்களை எதிர்கொள்வது எப்படி? - பாகம் 1", என்ற பதிவின் தொடர்ச்சியாகும்.
கடந்த பாகத்தில், ஆவிக்குரியப் போராட்டங்கள், எதிரியின் குணாதிசயங்கள் மேலும் எப்படி நாம் தேவனின் பலம் மற்றும் வல்லமையை குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதைப் பற்றியெல்லாம் பார்த்தோம்.
முன்பே கூறியபடி, நமது ஆவிக்குரிய போராட்டம் "சத்திய ஆவி" மற்றும் "வஞ்சக ஆவி" பற்றி தான்.
"நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும் வஞ்சக ஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்". 1 யோவான் 4:6
"சத்திய ஆவி"
நாம் இரட்சிப்புக்குள் நுழைந்தவுடன், தேவன் தம்முடைய சத்திய ஆவியினால் நம்மை முத்திரை குத்துகிறார். "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்". யோவான் 16:13
இவை அனைத்தும் எவ்வாறு நிகழ்கின்றன? இது பரிசுத்த ஆவியானவரால் நிகழ்கிறது. "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்". யோவான் 14:26
நாம் ஞானஸ்நானம் பெறும்போது, தேவன் சிருஷ்டித்தவைகளில் முதற்பலனாகும்படிக்கு "சத்திய வார்த்தை" நமக்குக் கொடுக்கப்படுகிறது. "அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்". யாக்கோபு 1:18. அதிலிருந்து பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்தி, நம் வாழ்க்கையில் திட்டமிடப்பட்டுள்ளவற்றிற்கு அவருடைய பரிபூரண சித்தத்தின்படி எடுத்துச் செல்கிறார்.
தேவன் தமது சத்திய ஆவியால் நம்மை முத்திரை குத்தும்போது இது தான் நம்மை உலகின் பிற காரியங்களில் இருந்து வேறுபடுத்துகிறது. அவர் நம்மோடு வாசம் செய்கிறார், நம்மோடு இருக்கிறார் என்ற நிச்சயம் நமக்கு உள்ளது, அதுதான் வித்தியாசம். "உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்". யோவான் 14:17
"வஞ்சக ஆவி"
குருடாக்கப்பட்ட கண்கள்
“தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்". 2 கொரிந்தியர் 4:4. வேதம் "பிரபஞ்சத்தின் தேவன்" என்று இங்கே ஒரு ஆளுமையை விவரிக்கிறது. இந்த ஆளுமை, கிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்துகிற சுவிசேஷத்தின் ஒளியைக் காணமுடியாதபடி அவிசுவாசிகளின் மனத்தைக் குருடாக்கிவிட்டது. நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆளுமை சத்தியத்திற்கு மக்களைக் குருடாக்குகிறது, கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளியைப் பார்ப்பதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. இந்த ஆளுமை வேறு யாருமல்ல அது சாத்தான் தான்.
இதனால்தான் பொது அறிவு தவறு என்று சொன்னாலும், பலர் முட்டாள்தனமான செயல்களைச் செய்வதைப் பார்க்கிறோம். ஏனெனில், அவர்கள் சுவிசேஷத்தின் வெளிச்சத்தைப் பார்க்க முடியாதபடி சாத்தான் அவர்கள் கண்களைக் குருடாக்கிவிட்டான்.
தேவ சாயல்
"அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே". 2 கொரிந்தியர் 11:13-14
சாத்தான் அவ/னது வஞ்சகத்தில் விழ வைக்க இரண்டு வகையான சாயல்களைப் பின்பற்றுகிறான்.
முதலாவது – கள்ள அப்போஸ்தலர்கள், கபட வேலையாட்கள் ~ அவர்களின் செயல்கள் "கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களின்" வேலையைப் பிரதிபலிக்க விரும்புகின்றன. இன்று கிறிஸ்துவைப் போதிக்கும் பல தேவாலயங்கள் / சுயாதீன போதகர்கள் உள்ளனர். அவர்களில் பலர் தேவனுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு ஊழியம் செய்வதில்லை. அவர்களை சத்தியத்தின் ஆவியிலிருந்து விலகி அழைத்துச் செல்வதற்காக, பலர் உலக "ஆசீர்வாதத்தை" தனது வஞ்சகத்தைத் தள்ளுவதற்கு மறைப்பாகப் பயன்படுத்துகின்றனர்.
இரண்டாவதாக - சாத்தான் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக் கொள்கிறான். வெளிச்சம் வரும்போது இருள் ஓடுகிறது என்று தேவனின் வார்த்தை கூறுகிறது. ஆனால் சாத்தான் தேவனைப் போல் பின்பற்றினால், வஞ்சக ஆவிக்குள் மக்களை கவர்ந்திழுக்க வஞ்சிக்கும் ஆவிகளை உருவாக்குகிறான்.
மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யர், தனிப்பட்ட வாழ்க்கைக்கு ஒன்று, பொது வாழ்க்கைக்கு ஒன்று என்று இரண்டு முகங்களுடன் மாய்மாலமானப் பொய்களைப் பேசுகிறார்கள்.
வஞ்சிக்கும் ஆவி மக்களை அவர்களின் சுய இச்சைகளுக்கு கவர்ந்திழுத்து, அவர்களின் மாம்சச் செயல்களின் மூலம் பாவங்கள் செய்வதற்கு வழி செய்கிறது. "மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள். பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே;இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்". கலாத்தியர் 5:19-21
நாம் ஏன் பாவம் செய்கிறோம் என்பது இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும். வஞ்சிக்கும் ஆவி நம்மைப் பாவம் செய்ய வைக்கிறது. அதே நேரம் சத்திய ஆவி நம்மை பாவத்திலிருந்து விலக்கி, தேவனுடைய சித்தத்தின்படி நடக்க வைக்கிறது. எனவே, இந்த உலகத்தில் நாம் வாழும் போது இது ஒரு போராக மாறுகிறது.
இந்தப் போராட்டங்களை எப்படி எதிர்கொள்வது?
போராட்டங்களைச் சமாளிக்க நாம் "தேவனுடைய ஆயுதவர்க்கத்தை" தரித்துக் கொள்ளவேண்டும் என்பதே தேவனின் அறிவுரையாக இருக்கிறது. "நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்". எபேசியர் 6:11
"தேவனின் ஆயுதவர்க்கம்" என்று பவுல் கூறுவதன் அர்த்தம் என்ன? பவுல் இதை ஒரு போர்வீரனின் கவசத்துடன் ஒப்பிடுகிறார். ஒரு போர்க்களத்தில் சிப்பாய் கவசத்தை அணிந்து போரிடும் ஒரு போருக்கு இதை ஒப்பிடுகிறார். ஆவிக்குரியப் போரில், போரிடுவதை விட தற்காப்பு முக்கியமானது. எபேசியர் 6:14-17 இல் பவுல் விவரிக்கும் ஐந்து தற்காப்பு கருவிகளும், ஒரு போராடும் கருவியும் உள்ளன.
ஐந்து பாதுகாப்பு கருவிகள்
1. "சத்தியம் என்னும் கச்சை"
"சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;". எபேசியர் 6:14
14 ஆம் வசனத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன.
(a) சத்தியம் என்னும் கச்சை (b) நீதி என்னும் மார்க்கவசம்.
சத்தியம் என்னும் கச்சை தான் தேவனின் சர்வாயுதவர்க்கத்தில் முதல் பகுதி என்றால் பொருத்தமாக இருக்கும். இயேசுவே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறார். அவர் மூலமாகத்தான் நாம் தேவனிடம் வருகிறோம். இந்த உண்மை ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையில் மிக முக்கியமானது.
"அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்". யோவான் 14:6
2. நீதியின் மார்க்கச்சை
எபேசியர் 6:14 (b) இல் பவுல் குறிப்பிடும் நீதியின் மார்க்கச்சை, இயேசு சிலுவையில் நமக்காகப் பெற்றுக் கொடுத்த நீதியைக் குறிக்கிறது. இதை பவுல் கோடிட்டுக் காட்டுகிறார் - "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்". 2 கொரிந்தியர் 5:21
கிறிஸ்துவில் இரட்சிப்பைப் பெற்றவுடன், ஒவ்வொரு மனந்திரும்பிய பாவிக்கும் "மார்க்கச்சை" வழங்கப்படுகிறது. இது தீமை மற்றும் வஞ்சகத்திலிருந்து நம் இருதயத்தையும் ஆத்துமாவையும் பாதுகாக்க தேவனால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய சொந்த நீதியான செயல்கள் சாத்தானின் தாக்குதல்களுக்கு இணையானவை இல்லை.
தேவனின் பார்வையில் யாரும் நீதிமான்கள் இல்லை. "அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;". ரோமர் 3:10. நீங்கள் உங்களை நீதிமான்களாகக் கருதினாலும், தேவனின் பார்வையில் நாம் இன்னும் பாவிகளாகவே இருக்கிறோம். நம் நீதியான செயல்கள் இன்னும் அவரின் பார்வையில் ஒரு அழுக்கான கந்தை போலவே உள்ளது. "நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது". ஏசாயா 64:6
நீதியின் மார்க்கச்சையின் மீது கிறிஸ்துவின் பெயர் முத்திரையிடப்பட்டவுடன், அவர் நம்மிடம், “உங்கள் நீதி உங்களைப் பாதுகாக்க போதுமானதாக இல்லை. என்னுடையதை அணியுங்கள்" என்று கூறுகிறார்.
3. சமாதானத்தின் சுவிசேஷம்
"சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;". எபேசியர் 6:15
சாத்தான் நம்மை வஞ்சனையால் தாக்குகிறான். “தேவன் உன்னை உண்மையாகவே நேசித்திருந்தால், இதை அவர் அனுமதித்திருக்க மாட்டார், உனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும்?” போன்ற பல சந்தேக ஏவுகணைகளை எறிகிறான்.
தேவன் தம்முடைய வார்த்தையின் மூலம் நமக்கு நினைவூட்டுகிறதைக் கூறுங்கள். "அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்". ரோமர் 8:28
சாத்தான் நம்மை ஏமாற்றி “நீ செய்தது நினைவிருக்கிறதா? நீ செய்த பாவத்தினால் நீ முடிந்து விட்டாய், உனக்கான எந்த நம்பிக்கையும் இல்லை” என்று நம் பின்னாலிருந்து குத்துகிறான். நாம் இன்னும் ஆழமாக ஆராய்ந்து பதிலளிக்கலாம். "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்". 1 யோவான் 1:9
4. விசுவாசம் என்னும் கேடகம்
"பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்". எபேசியர் 6:16
விசுவாசம் என்பது நமக்கும் சாத்தானின் சூழ்ச்சிகளுக்கும் இடையே ஒரு பாதுகாப்புத் தடையாக இருக்கிறது. நாம் தேவனை விசுவாசித்து, அவருடைய வார்த்தையின்படி அவரை ஏற்றுக்கொள்ளும்போது, நாம் சத்தியத்தில் நிலைத்திருப்போம், எதிரியின் பொய்கள் தங்கள் சக்தியை இழக்கின்றன. மேலும், நாம் ஜெயிப்பவர்களாக மாறுகிறோம். அந்த வகையில் விசுவாசமே நமது கேடகம்.
எபிரேயர் 11:6 இல் விசுவாசம் பற்றிய வாக்குத்தத்தம் உள்ளது. நாம் விசுவாசித்து அவரைத் தீவிரமாகத் தேடினால் அவர் நமக்கு பலன் அளிக்கிறார். "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்". எபிரேயர் 11:6
5. இரட்சிப்பின் தலைக்கவசம்
"இரட்சணியமென்னும் தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்". எபேசியர் 6:17
தலையைப் பாதுகாப்பதற்கு தலைக்கவசம் ஒரு முக்கியமான கருவியாகும். அதேபோன்று, இந்த தலைக்கவசத்தைக் கட்டி செயல்பட வைக்க ஒரு விசுவாசி எடுக்கக்கூடிய பல செயல்கள் உள்ளன:
நம் மனதை புதுப்பிக்க வேண்டும். நம் மனங்கள் போர்க்களங்கள். அந்த போர்களின் விளைவுகளே நம் வாழ்வின் போக்கைத் தீர்மானிக்கின்றன. "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்". ரோமர் 12:2. உலகத்திலிருந்து நாம் பார்க்கும் / கேட்கும் முரண்பாடான எதையும் அழிக்க தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தை அனுமதிப்பதன் மூலம் நம் மனதைப் புதுப்பிக்க பவுல் அறிவுறுத்துகிறார். நம் பழைய யோசனைகள், கருத்துகள் மற்றும் உலகப் பார்வைகள் யாவும் தேவனின் பிரியமான, பரிபூரணமுமான சித்தத்திற்கு அவரது ஆவியின் வழிகாட்டுதலால் மாற்றப்பட வேண்டும். உலகத்தின் அசுத்தங்கள், பொய்கள் மற்றும் குழப்பங்களை நம் மனதில் இருந்து துடைப்பதற்கும், தேவனின் கண்ணோட்டத்தைப் பின்பற்றவும் தேவனின் சத்தியத்தை நாம் தொடந்து அனுமதிக்க வேண்டும்.
சூழ்நிலையிலிருந்து எழும் சந்தேகங்களை நிராகரியுங்கள். மனிதர்களாகிய நாம் சூழ்நிலைகளுக்கு உணர்ச்சிவசப்படுகின்றோம். நமது உணர்ச்சிகளின் படி நடக்கிறோம். அநேக சமயங்களில், தேவனின் வார்த்தையை விசுவாசிப்பதை விட, நாம் பார்ப்பதும் கேட்பதும் தான் சரி என்று சாத்தான் நம்மை ஏமாற்ற முயற்சிக்கிறான். இந்த உணர்ச்சிகளை வைத்து நம் விசுவாசத்தை உடைத்து இயேசுவின் மீது நாம் கொண்டுள்ள விசுவாசம் தவறு என்று நம்ப வைப்பதற்கு முயற்சிக்கிறான். சந்தர்ப்பங்களையும், சூழ்நிலைகளையும் பயன்படுத்தி நம் விசுவாசத்தில் சந்தேகத்தைக் கொண்டு வருகிறான். ஒரே நேரத்தில் விசுவாசமும் சந்தேகமும் இருக்க முடியாது. அவர் நம்முடைய விசுவாசத்திற்கு பலன் அளிக்கிறார். அவருடைய வாக்குத்தத்தம் சத்தியமானது. "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்". எபிரெயர் 11:6
நித்திய முன்னோக்கு பார்வையை வைத்திருங்கள். நாம் தோல்வியடைந்து கீழே விழும் போது, நாம் மேலே பார்க்க நினைவில் கொள்ள வேண்டும். நமது இரட்சிப்பு நாம் பெற்ற மிக விலைமதிப்பற்ற பரிசு. அதன் மீது நம் கண்களை வைத்திருப்பது வாழ்க்கையின் புயல்களில் நமக்கு உதவும். நித்திய கண்ணோட்டத்தைப் பார்க்காமல், வாழ்க்கையின் புயல்களை சுயமாக எதிர்த்துப் போராட நாம் முடிவு செய்கிறோம். பிரச்சினைகளை நாமே தீர்ப்பதற்காக, உலக விஷயங்களை அடையாளம் காண விழைகிறோம்.
வெற்றி ஏற்கனவே பெற்றாகிவிட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாவத்திலிருந்தும், பாவத்தின் எல்லா சாபங்களிலிருந்தும் நமக்கு விடுதலை கிடைப்பதற்காக இயேசு மரணத்தை வெல்ல சிலுவையைத் தானே எடுத்துக்கொண்டார். நம்மை பாவத்திற்கு மரித்தவர்களாகவும் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக் கொள்ளும் போது சாத்தான் நம்மை சிக்க வைக்க முயற்சிக்கும் பல வாய்ப்புகளை நாம் அகற்றிவிடுகிறோம். "அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்" ரோமர் 6:11. பாவத்தைத் தேர்ந்தெடுப்பது இனி நமக்கு ஒரு விருப்பமாக இருக்காது, ஏனென்றால் நாம் "புதிய சிருஷ்டி". 1 யோவான் 3:9 "தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்". நாம் தோல்வியின் பல வழிகளை திறம்பட துண்டிக்கிறோம்.
நாம் ஒவ்வொரு நாளும் இரட்சிப்பின் தலைக்கவசத்தை அணியும்போது, எதிரி நமக்கு வைக்கும் ஆலோசனைகள், ஆசைகள் மற்றும் பொறிகளுக்கு எதிராக நம் மனம் மிகவும் காக்கப்படுகிறது. அதிகப்படியான உலக செல்வாக்கிலிருந்து நம் மனதைக் காத்துக்கொள்ளவும், அதற்குப் பதிலாக கிறிஸ்துவை கனம் பண்ணும் விஷயங்களைப் பற்றி சிந்திக்கவும் நாம் தேர்வு செய்கிறோம். அவ்வாறு செய்வதன் மூலம், நமது இரட்சிப்பை ஒரு பாதுகாப்பு தலைக்கவசமாக அணிந்துகொள்கிறோம், அது "கிறிஸ்து இயேசுவிற்குள் நம் இருதயங்களையும் மனதையும் காத்துக் கொள்ளும்". "கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்". பிலிப்பியர் 4:8
போராடுவதற்கான ஆயுதம்
ஆவிக்குரியப் போரில் நம்மிடம் ஒரே ஒரு போர்க்கருவி மட்டுமே உள்ளது, அதுதான் ஆவியின் பட்டயம்.
ஆவியின் பட்டயம்
ஆவியின் பட்டயத்தின் (வேதம்) நோக்கம் நம்மைப் பலப்படுத்துவதும், நம்முடைய எதிரியான சாத்தானின் தீய தாக்குதல்களைத் தாங்கிக் கொள்வதும் ஆகும். "வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே", "கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது". சங்கீதம் 119:9,89.
பரிசுத்த ஆவியானவர் வார்த்தையின் வல்லமையை பயன்படுத்தி ஆத்துமாக்களை இரட்சித்து, நாம் வாழும் இந்த பாழான, தீய உலகத்தை எதிர்த்துபோரிடுவதில் கர்த்தருக்கு முதிர்ந்த படைவீரர்களாக இருக்க நமக்கு ஆவிக்குரிய பலத்தைக் கொடுக்கிறார்.
நாம் எவ்வளவு அதிகமாக தேவனுடைய வார்த்தையை அறிந்து, புரிந்துகொள்கிறோமோ அவ்வளவு அதிகமாக தேவனின் சித்தத்தைச் செய்வதிலும், நம் ஆத்துமாவின் எதிரிக்கு எதிராக நிற்பதிலும் மிகவும் பயனுள்ளவர்களாக இருப்போம்.
பாதுகாப்பு மற்றும் போராடும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான பயனுள்ள வழிகள்
தினமும் வேதத்தைப் படியுங்கள் - இதை உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் இருதயமாக கருதுங்கள். தேவனின் வார்த்தை உங்களிடம் இல்லையென்றால், எதிரி இதை சாதகமாக பயன்படுத்தி, மெதுவாக நம்மை ஏமாற்றி, முழுமையாக கைப்பற்றிவிடுவான். இதை தினசரி வழக்கத்திற்காகப் படிக்க வேண்டாம். இதைப் படிப்பதன் மூலம், வார்த்தை உங்களுக்குள் சென்று கிரியை செய்கிறது. உங்கள் வாழ்க்கையில் கிரியையைக் கொண்டு வர நீங்கள் வார்த்தையைப் படித்து தியானிக்க வேண்டும்.
ஜெபம் - தேவனோடு தொடர்பு கொள்வதற்கான ஒரே வழி ஜெபம் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் தேவனிடம் ஜெபிக்கும்போது சாத்தான் நடுங்குகிறான், ஜெபத்திலிருந்து நம்மை விலக்கி வைக்க புதிய விஷயங்களை வடிவமைக்கிறான். ஜெபம் என்பது தேவனை வணங்குவது, உங்கள் வாழ்க்கையில் அவர் செய்த நன்மைகளுக்காக அவருக்கு நன்றி செலுத்துவது மற்றும் நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் அவர் தீர்த்து வைப்பதற்கு எல்லா கோரிக்கைகளையும் அவரிடம் வைப்பதாகும். எனவே, தேவன் அந்த சவாலை எதிர்கொள்ளும்போது சாத்தான் எதிர்த்துப் போராட வழி இல்லை. இந்தக் காரணத்திற்காகத் தான் நாம் ஜெபிப்பதை அவன் விரும்புவதில்லை.



Comments