top of page

புயலின் மத்தியில்

  • Kirupakaran
  • Nov 13, 2022
  • 6 min read

ree

நான் கடலின் நடுவே உண்டாகிற புயலை அனுபவித்ததில்லை. அதை டிஸ்கவரி சேனலில் பார்க்கும் போது பயங்கரமாக இருக்கும். நிஜமான புயல் வேடிக்கையாக இருக்காது. வாழ்க்கை எப்போதும் அமைதியாக இருந்தால், புயல்கள் மூலம் கற்றுக் கொள்ள வேண்டிய பல பாடங்களை நாம் கற்றுக் கொள்ள மாட்டோம். இதனால்தான், ஆவிக்குரிய வாழ்வில் நம்மை வளரச் செய்வதற்காக, இந்தப் புயல்களை நமக்குக் கொடுக்க தேவன் தேர்ந்தெடுக்கிறார். லூக்கா 8:22-25 இயேசுவின் அற்புதத்தை விவரிக்கிறது. அங்கே அவர் புயலின் மத்தியில் இருக்கும் போது, கடலில் புயலை அமைதிப்படுத்துகிறார். இந்த அதிசயங்கள், இயேசு யார் மற்றும் வாழ்க்கையின் சோதனைகளில் அவை என்ன சொல்கின்றன என்றெல்லாம் சீஷர்களுக்குக் கற்றுக் கொடுத்ததைப் போல நமக்கும் கற்பிக்க நிறைய வைத்துள்ளன.


பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள். படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல் காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது. அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்து போகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய்,, அமைதலுண்டாயிற்று. அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். லூக்கா 8:22-25


இந்தச் சுருக்கமான பத்தியின் முடிவில், சீடர்கள், “இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே” என்று பிரமிப்புடன் பார்த்தனர். “இவர் யாரோ” என்பது தான் லூக்கா நாம் சிந்திக்க விரும்பும் கேள்வி. இதற்கான தெளிவான பதில்,


இயேசுவே தேவன்

ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. கொலோசெயர் 1:16-17

வானமும் பூமியும் அவர் மூலமாகவும், அவருக்காகவும் படைக்கப்பட்டதாக வேதம் சொல்கிறது. “...சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது” கொலோசெயர் 1:16-17. இயேசுவே ஆண்டவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம், எனவே இந்த சொற்றொடரை நாம் எளிதாக திருப்பிச் சொல்லலாம். ஆனால் நாம் சந்திக்கும் அன்றாட சூழ்நிலைகளில் பெரும்பாலும் அவரை ஆண்டவராக அறிய மாட்டோம். எனவே சீடர்களுக்கு செய்ததையே அவர் நமக்கும் அடிக்கடி செய்கிறார்.


கர்த்தர் அவர்களைப் புயலுக்குள் வழிநடத்தினார்

லூக்கா இவ்வாறு கூறுகிறார். “பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள்”. லூக்கா 8:22.

  • அவர்களை எதற்குள் அழைத்து செல்கிறார் என்று இயேசு அறிந்திருந்தாரா? நிச்சயமாக அறிந்திருந்தார். அவருக்கு எல்லாம் தெரியும், அதனால் அவர்கள் இந்தப் புயலைச் சந்திப்பார்கள் என்று அவருக்குத் தெரியும். சீடர்கள் இந்த ஏரியை நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த மீனவர்கள் என்றாலும், அவர்கள் புயலை எதிர்பார்க்கவில்லை. அந்த மாலையில் வீசிய எதிர்பாராத புயல்களில் இதுவும் ஒன்று - சீடர்களுக்கு எதிர்பாராதது தான், ஆனால் கர்த்தராகிய இயேசுவுக்கு அல்ல. இது மிகவும் பெரிய புயலாக இருந்திருக்க வேண்டும், ஏனென்றால் இந்த அனுபவமுள்ள மீனவர்கள் கூட தங்கள் உயிருக்கு பயந்தனர். ஆனால் அது மிகவும் பயங்கரமானதாக இருந்த போதிலும், சர்வ வல்லமையுள்ள தேவன் அவர்களை நேரடியாக அதற்குள் வழிநடத்தினார்!

  • சீஷர்களைப் போலவே நாமும் அடிக்கடி எதிர்பாராத புயலில் சிக்கி, "தேவன் இந்த சோதனையை உருவாக்கவில்லை, அவர் அனுமதித்தார்" என்று கூறுகிறோம். நம்மில் சிலர் "இந்த சோதனையை சாத்தான் உருவாக்கினான், ஆனால், தேவன் எப்போதும் நல்லவர், அவர் ஏன் என் வாழ்க்கையில் சோதனையை அனுமதிக்கப் போகிறார்” என்று கூறுவோம். இதற்கான பதில் வேதத்தில் ஏசாயா / யோபின் வாழ்க்கையைப் பார்க்கும்போது இருக்கிறது.

    • தேவன் அன்பானவர் மற்றும் சர்வ வல்லமையுள்ளவர் என்பதை பைபிள் தெளிவாக உறுதிப்படுத்துகிறது. அவருடைய வல்லமையை மறுப்பதன் மூலம் நீங்கள் சோதனைகளில் எந்த ஆறுதலையும் பெற மாட்டீர்கள். யோபுவிற்கு நடந்ததைப் போலவே சோதனைகளைக் கொண்டுவர தேவன் சாத்தானைப் பயன்படுத்தலாம் என்பது உண்மைதான். ஆனால் அவர் ஏசாயா 45: 6-7 இல் தெளிவாகக் கூறுகிறார், "என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை. ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப்படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்".

    • அனுமதி பெற்ற பின்னரே கிறிஸ்துவின் அனைத்து விசுவாசிகளுக்கும், சாத்தான் சோதனைகளை ஏற்படுத்த முடியும். யோபின் வாழ்க்கை அதற்கு ஒரு சிறந்த உதாரணம். "கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல் மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டுப்போனான்" யோபு 1:12

  • இந்தப் புயல் கிறிஸ்துவுடன் சேர்த்து சீடர்களையும் தாக்கியது. உண்மை என்னவென்றால், கிறிஸ்தவர்களாகிய நாம் வாழ்க்கையின் புயல்களிலிருந்து மாயமான முறையில் விடுவிக்கப்படுவதில்லை. நீங்கள் இயேசுவின் படகில் இருப்பதாலேயே, அது சீராக செல்லும் என்று அர்த்தமல்ல. கிறிஸ்தவர்கள் சோதனைகளிலிருந்து விடுபட்டவர்கள் அல்ல. “ஆம், அது உண்மைதான். ஆனால் நான் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறேன்" என்று சிலர் நினைக்கிறார்கள். அர்ப்பணிப்புடன் இருப்பது புயல்களிலிருந்து சிறப்புப் பாதுகாப்பைப் பெற்றுத் தரும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் கவனித்துப் பாருங்கள்:


கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யும் கீழ்ப்படிதலுள்ள விசுவாசிகளை புயல் தாக்குகிறது.
புயல்கள் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரெனத் தாக்குகின்றன

தேவன் அவர்களிடம் இருந்து விலகி புயலில் அவர்களைத் தனியாக விட்டுவிடுவது போல் தோன்றியது.


"படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல் காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது" லூக்கா 8:23.


  • இயேசுவே ஆண்டவர், அவர் சீடர்களை புயலுக்குள் அழைத்துச் செல்கிறார் என்பதை முதலில் புரிந்துகொண்டோம். புயலின் மத்தியில் பார்க்கும்போது, ​​அவர் அவர்களை விட்டு விலகியது போல் தெரிகிறது, "படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார்”.

  • பல சமயங்களில் நாமும் அவ்வாறே உணர்கிறோம். நாம் ஆண்டவரோடு நெருக்கமாக நடந்தாலும் கூட, அவர் எங்கே இருக்கிறார்? என்று வியக்கிறோம். அழுது / ஜெபித்து உதவிக்காக அழைக்கிறோம். நாம் துன்பத்தில் இருக்கும் போது அவர் நம்மை விட்டு வெளியேறிவிட்டாரா என்று நினைக்கிறோம்.

  • உண்மையில் அவர் புயலின் மத்தியில் இருக்கிறார், அவர் எப்பொழுதும் இருக்கிறார். சில சமயங்களில் அவர் அங்கு இல்லாதது போல உணர்ந்தாலும், அவர் நமக்கு எவ்வளவு தேவைப்படுகிறார், நம் தேவை உண்மையில் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க இறுதிவரை காத்திருக்கிறார்.

  • தேவனுடைய வாக்குத்தத்தம் அவர் நமக்காக இருக்கிறார் என்ற இந்த ஆறுதலை நமக்குத் தருகிறது. "….நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" எபிரேயர் 13:5.

  • நாம் தேவனின் பிள்ளைகளாக மாறும்போது அவருடைய அன்பு நமக்கு இருக்கும். சோதனையின் மத்தியில் அவர் நம்மை தனிமையாக விடமாட்டார். ஒருபோதும் கைவிடவும் மாட்டார். பவுல் இதை ரோமர் 8:38-39 ல் நன்றாக விளக்குகிறார், "மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்".

  • எப்பொழுதெல்லாம் புயலின் மத்தியில் இருக்கிறீர்களோ, நீங்கள் முதலில், தேவன் அங்கே இல்லை என்று நினைத்தாலும், அவர் அங்கே தான் இருக்கிறார்! வாழ்க்கையின் புயல்களின் போது நாம் செய்ய வேண்டிய முதல் காரியம், இயேசுவே ஆண்டவர் என்பதை உறுதிப்படுத்துவதுதான்.

வாழ்க்கையின் புயல்களில் இயேசுவே தேவன் என்று விசுவாசித்தனர்ய தார்த்தத்தின் வெளிப்பாடு


  • புயலின் நடுவில் இல்லாதபோது நாம் யார் என்பதை நாம் அனைவரும் வித்தியாசமான முறைகளில் வெளிப்படுத்தலாம். நாம் முதிர்ந்த, சாந்தமான மனிதர்கள் போன்று நடந்து கொள்கிறோம். ஆனால், உண்மையாக சோதனைகள் வரும்போது நம் நிஜ முகத்தைக் காட்டுகிறோம். முதிர்ந்த அனுபவம் வாய்ந்த சீஷர்களாய் இருந்தபோதிலும், சீஷர்களின் நிலையும் அப்படி தான் இருந்தது. "அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்து போகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்;…" லூக்கா 8:24.

  • அவர்கள் அனைவரும் மூழ்கிவிடுவோம் என்று நினைத்தார்கள். சற்று நிதானித்து யோசித்துப் பார்த்தால், அவர்களுடன் கப்பலில் இருந்தவர் யார்? கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணிய மேசியாவாகிய இயேசு. அவர்கள் கடலில் மூழ்கிவிடுவார்கள் என்று நினைத்தது முற்றிலும் சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், சீஷர்கள் பதட்டத்தில் பிரச்சினையைப் பற்றிய தவறான பார்வையைக் கொண்டிருந்தனர்.

புயல்கள் பிரச்சனை பற்றிய நமது தவறான பார்வையை வெளிப்படுத்துகின்றன.

  • ஒரு நெருக்கடியானது, நாமே அறிந்திராத நமது ஒரு பக்கத்தை நமக்குக் காட்டுகிறது - அவரை விசுவாசிப்பதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டிய புதிய பகுதிகளை வெளிப்படுத்த தேவன் அதைப் பயன்படுத்துகிறார். நாம் நமது பலவீனத்தை அறிந்து கொள்ள வேண்டும், அப்பொழுது தான் அவருடைய பலத்தை சார்ந்திருப்போம். அமைதியான காலங்களில் நாம் பார்க்காத விஷயங்களை புயல்கள் நமக்கு அடிக்கடி காட்டுகின்றன.

  • அதிகப்படியான பயம் - சீடர்கள் தங்கள் உயிருக்கு பயந்தார்கள். எல்லா பயமும் தவறல்ல, ஆனால் சீடர்களின் பயம் அதிகப்படியாக இருந்ததால் இயேசு அவர்களைக் கடிந்து கொண்டார். சில பயம் பயனுள்ளதாக இருக்கும், ஏனென்றால் அது நமது பாதுகாப்பிற்காக எச்சரிக்கையாக இருக்க வழிவகுக்கிறது. சில சமயங்களில் பயம் நம் சொந்த உயிரையோ அல்லது ஆபத்தில் இருக்கும் நமக்கு அருமையானவர்களின் உயிரையோ காப்பாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வைக்கிறது. நம்மை பதட்டத்திற்குள்ளாக்கி, பிரச்சனையில் கவனம் செலுத்த வைத்து, அதில் தேவனுடைய கட்டுப்பாட்டை காண முடியாமல், அவரை விசுவாசிக்காமல் போகச் செய்யும் பயம் மிகையானது மற்றும் தவறானது.

  • எல்லாவற்றையும் ஒரு சமன்பாட்டிற்குள் கொண்டுவருவதன் மூலம் நமது பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கிறோம் - கிறிஸ்துவின் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையை தவிர. நெருக்கத்தின் மத்தியில், நாம் அடிக்கடி பிரச்சனையை மட்டுமே பார்த்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்கிற அற்புதமான நபரைப் பார்க்கத் தவறுகிறோம். லூக்கா அதைக் குறிப்பிடவில்லை என்றாலும், சீடர்கள் (பேதுருவாக இருக்கும் என்று நான் யூகிக்கிறேன்) “போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக்கவலையில்லையா” என்று கூறியதாக மாற்கு அதிகாரம் சொல்கிறது. கடுமையான சோதனையின் காலத்தில், கர்த்தர் நம்மீது வைத்திருக்கும் அன்பான அக்கறையை சந்தேகிப்பது எளிது. அதனால்தான், நம்முடைய சோதனைகளின் போது, விசுவாசத்தினால், நாம் எப்போதும் இரண்டு விஷயங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்: தேவனின் அன்பு மற்றும் அவரது வல்லமை. அவருடைய அன்பு நம்மை பலப்படுத்தி திடமாக்குகிறது."விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே. கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;" 1 பேதுரு 5:9-10

புயல்கள் நம்மை புயலின் தேவன் மீது விசுவாசம் வர வைக்க வேண்டும்.

சீடர்கள் உதவிக்கு அழைத்தபோது, “உங்கள் விசுவாசம் எங்கே?” என்று கேட்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜீவனுள்ள தேவனை விசுவாசிப்பது தான் அவர்களுக்கு மிகவும் தேவைப்பட்டது.


  • ஆனால் நெருக்கத்தில் தேவனை விசுவாசிப்பது பயனற்ற அறிவுரை அல்ல! அதுவே பல நூற்றாண்டுகளாக பல பயங்கரமான சோதனைகளில் இருந்து புனிதர்களை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. வாழ்க்கையின் புயல்களில் தேவனை எப்படி விசுவாசிப்பது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் விசுவாசத்தில் நடக்கவும் விசுவாசத்தில் கட்டியெழுப்பப்படவும் கட்டளையிடப்பட்டுள்ளோம். “ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக”. கொலோசெயர் 2 :6-7

நாம் தேவனை எவ்வளவு நன்றாக அறிவோமோ, அவ்வளவு அவரை விசுவாசிக்கலாம்.
  • நம் தேவன் முழுமையாக ஒரு மனிதர் மட்டுமல்ல, முழுமையாக தெய்வீகமானவரும் கூட. அவர் ஒரு வார்த்தையை மட்டுமே பேச வேண்டியிருந்தது. ஊளையிடும் காற்று நின்றது மற்றும் எழுந்த அலைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. ஜீவனுள்ள தேவனுக்கு எதுவும் கடினமானது அல்ல. காற்றின் மூச்சுக்காற்றோ, ஒரு துளி நீரோ அவரது வல்லமையான சித்தத்தை மீற முடியாது.


நாம் அவரை எவ்வளவு நன்றாக அறிந்திருக்கிறோமோ, அந்த அளவு நம் சோதனைகளில் அவரை விசுவாசிக்கலாம்.

இந்தப் புயலில் நாம் அவரை எவ்வளவு அதிகமாக நம்புகிறோமோ, அவ்வளவு அதிகமாக அவரை அறிந்து கொண்டு, அடுத்த புயலில் அவரை விசுவாசிக்க முடியும்.

  • இந்தப் புயல் கிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்தியது. அது நடக்காமல் இருந்திருந்தால் மறைக்கப்பட்டிருக்கும். "காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே" என்று கூறுவதிலிருந்து சீடர்கள் அவருடைய மகத்தான வல்லமையைப் பற்றி அறிந்து கொண்டதை புரிந்து கொள்ளலாம்.

  • பல சமயங்களில் நமது வாழ்க்கையின் பிரச்சனையைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துகிறோம். மேலும் பிரச்சனையைப் பற்றிய நமது கோணத்தையே எப்போதும் பார்த்து, ஆண்டவரின் கிரியையின் மகத்துவத்தை இழக்கிறோம். அவரது பிள்ளைகளுக்கு தமது வல்லமையை விளங்கப் பண்ணவும், அவரது அதிசயங்களைக் கண்டு வியக்கவும் வாழ்க்கையின் புயல்களை அனுமதிக்கிறார். சீடர்கள் இங்கு எவ்வாறு பிரதிபலித்தார்களோ அதைப் போலவே.

  • ஆண்டவர் மீது நம்பிக்கை என்பது தானாக நடக்கும் ஒன்று அல்ல. பல சமயங்களில் நமக்கு முன்னால் இருக்கும் நம் சூழ்நிலை, நாம் எதிர்பார்க்கும்படி அல்லது திட்டமிட்டபடி எதுவும் நடக்காமல் இருக்கும் போது, நம் நம்பிக்கை வீண்தானா என்று நம்மை ஆச்சரியப்பட வைக்கும். அந்த இடத்தில் தான் வாழ்க்கையின் சூழ்நிலைகளுக்கு நாம் எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதைக் காண அவர் நம் விசுவாசத்தைப் பார்க்கிறார்.


சுருக்கம்

நீங்கள் இப்போது எந்த வாழ்க்கைப் புயலில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இயேசு உங்கள் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறாரா என்று சீடர்களைப் போலவே நீங்களும் ஆச்சரியப்படலாம்.

  1. "இயேசுவே ஆண்டவர்", அவர் உங்கள் மீது அக்கறை காட்டுகிறார் என்பதில் உறுதியாக இருங்கள்.

  2. உங்கள் புயல்களை (சோதனைகளை) அவர் அறிவார். உங்கள் கண்கள் புயலின் மீது இருக்கிறதா அல்லது அவர் மீது இருக்கிறதா என்று அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் நெருங்கி வந்து உதவுவார், ஆனால் சீடர்கள் “ஐயரே, ஐயரே, மடிந்து போகிறோம்” என்று எப்படி அழைத்தார்களோ அது போல நீங்களும் அவரை அழைத்தால் மட்டுமே அவர் அதைச் செய்வார்.

  3. நீங்கள் அவரை எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறீர்களோ, அவ்வளவு நீங்கள் அவரை விசுவாசிக்கலாம். அவர் எவ்வாறு உதவ முடியும் என்பதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, உங்களை வழிநடத்துவதற்கு அவருடைய வாக்குத்தத்தங்களையும், வார்த்தைகளையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், அவருடைய வார்த்தையைப் (வேதம்) படித்து, ஜெபத்தின் மூலம் அவர் உங்களோடு பேசி, நீங்கள் அவரோடு பேசி, அவருக்கு நெருக்கமாக இருந்தால் மட்டுமே அது நடக்கும். நீங்கள் அவரை “ஐயரே, ஐயரே, மடிந்து போகிறோம்” என்று அழைக்கும் போது உங்களுக்கு உதவுவதற்கு இயேசுவுடனான உறவு நெருக்கமாக இருக்க வேண்டும்.

  4. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் புயல்கள் உங்கள் சவால்கள் மற்றும் உங்கள் கதையைப் பற்றியது அல்ல. அது நீங்கள் கடந்து சென்ற சோதனைகள், அவர் அதை எவ்வாறு தீர்த்து வைத்து, வழி நடத்தினார் என்பதில் இருக்கும் தேவனுடைய வல்லமையைப் பற்றியது. பழைய ஏற்பாட்டில் உள்ள ஒவ்வொரு நிகழ்வையும் (யோபுவின் வாழ்க்கைப் போராட்டம் / இஸ்ரவேலர்களை வனாந்தரத்தில் வழிநடத்தியது) புதிய ஏற்பாட்டில் உள்ள நிகழ்வையும் (இயேசு புயலை அடக்குதல் / நோயுற்றவர்களை குணப்படுத்துதல்) எடுத்துப் பாருங்கள். எல்லாவற்றிலும் தேவனுடைய இறையாண்மை திட்டம் இருக்கும், அதுதான் வாழ்க்கையின் புயலுக்கு காரணம்.

  5. தேவனுடைய இறையாண்மையைப் புரிந்து கொண்டால், அது ஆவிக்குரிய வாழ்வில் மேலும் முதிர்ச்சியடைய உதவுகிறது. அது இயேசுவோடு அதிக நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ள உதவுகிறது மற்றும் சீடர்களின் அனுபவத்தைப் போன்ற பிரமிப்பை உருவாக்கி உங்களை “இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே” என்று கேட்க வைக்கும். இது இயேசுவின் மீதான பிரமிப்பை இன்னும் பெரியதாக அனுபவிக்க வாழ்க்கையின் பெரிய புயல்களுக்கு உங்களை தயார்படுத்தும்.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page