top of page

பின்னானவைகளை மறந்து

  • Kirupakaran
  • Dec 24, 2022
  • 4 min read

ree

மனித மூளையானது, நாம் வளரும்போது பல விஷயங்களை நினைவில் வைத்திருக்கும். சில நினைவுகள் பல ஆண்டுகளாக நினைவில் நீடித்து இருக்கும், பல நேரங்களில் நமக்கு சங்கடமாக இருக்கும் விஷயங்களை மறந்து விடுகிறோம். பல பிறந்தநாட்கள், திருமணநாள் இன்னும் நாம் மறந்த பலவற்றில் இருந்து, நம் ஒவ்வொருவருக்கும் சொந்த சங்கடங்கள் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.


எனவே மறப்பது என்பது ஒரு கெட்ட விஷயமா? அல்லது நல்ல விஷயமா? வேதம் இதைப் பற்றி என்ன சொல்கிறது? பவுல் பிலிப்பியர்களுக்கு எழுதிய நிருபத்தில் இவ்வாறு கூறுகிறார். "சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,". பிலிப்பியர் 3:13


“பின்னானவைகளை மறந்து” என்று பவுல் கூறுவதன் அர்த்தம் என்ன? அவருடைய அனுபவங்களிலிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாம்.


முந்தைய பாவங்களை மறந்துவிடுங்கள்

  • உங்கள் முந்தைய பாவங்களை நினைவுகூராதீர்கள். "இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்". 2 பேதுரு 1: 9 NIV

  • தேவன் தாமே நம் பாவங்களை மறந்துவிட்ட நிலையில், கடந்த கால பாவங்களை நினைவுகூர நமக்கு எந்த உரிமையும் இல்லை.

  • நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும்போது தேவன் நமக்கு அளிக்கும் வாக்குத்தத்தங்களைப் பாருங்கள்.

  • நம் பாவங்கள் "அவருடைய முதுகுக்குப் பின்னால்" வீசப்படுகின்றன. "...தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்". ஏசாயா 38:17 NIV

  • “சமுத்திரத்தின் ஆழங்களில்” போடப்பட்டன. “அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்”. மீகா 7:19 NIV

  • "வானத்தின் மேகங்களைப் போல" நீக்கப்பட்டது. "உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்". ஏசாயா 44:22 NIV

  • மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் அகற்றப்பட்டது. "மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்". சங்கீதம் 103:12

  • உங்கள் பழைய பாவங்களையோ அல்லது யாரிடமாவது நீங்கள் கொண்டிருக்கும் வெறுப்பையோ ஒருமுறை நினைத்துப் பார்ப்பது, நமது ஆவிக்குரிய முதிர்ச்சியில் வளராமல் பின்வாங்குவதற்கு சாத்தானுக்கு இடமளிக்கும்.

  • உங்கள் பழைய பாவங்கள் உங்களுக்கு அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே இருந்தால், நீங்கள் உங்கள் இருதயத்திலிருந்து ஆழமாக மனந்திரும்பாமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் அடிமைத்தனத்தில் இருக்கும் பாவங்கள் இன்னும் உங்கள் எண்ணங்களிலும் மனதிலும் ஆழமாக நீடிக்கின்றன. உங்கள் பழைய பாவங்களை உங்களால் மறக்க முடியாததற்கு இதுவே காரணம்.

  • நம் பாவங்களை நினைவூட்ட சாத்தானின் தந்திரமான "மாம்சத்தின் இச்சை" வருகிறது. "ஏனெனில், மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்". 1 யோவான் 2:16 NIV இந்த வஞ்சனைக்கு அடிபணியாதீர்கள்.


ஒப்புரவு

  • ஒருவர் அல்லது ஒரு கூட்டத்தினர் செய்த அவமானங்களையோ அல்லது அவர்கள் பேசிய வார்த்தைகளையோ மறக்க முடியாததால், நம்மால் ஒருவருக்கொருவர் ஒப்புரவாக முடியவில்லை. இது கசப்பு மற்றும் வெறுப்புக்கு வேரமைத்து, இயேசு நம்மை வாழ அழைக்கும் கொள்கைகளுக்கு எதிராகச் செல்கிறது.

  • ஒப்புரவாகுதல் முக்கியம் மட்டுமல்ல, அது நமக்குள் இருக்கும் பரிசுத்தத்தைக் காக்கும் என்பதால், அது உடனடியாக செய்யப்பட வேண்டும். நாம் பரிசுத்தமாக இல்லாவிட்டால், தேவனின் கிருபையைப் பெற முடியாது. "யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,". எபிரேயர் 12:14-15 NIV

  • நாம் ஒருவருக்கொருவர் ஒப்புரவாகாவிட்டால், அது இரு தனிமனிதர்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தி, பல பாவங்களுக்கு வழிவகுக்கும்.

  • கோபம் நீண்ட காலம் இருந்தால் அது கசப்பாக மாறும். இந்த A-N-G-E-R என்பது D-A-N-G-E-R என்பதை விட ஒரு எழுத்து தான் சிறியது என்று ஒரு போதகர் கூறினார்.

  • சூரியன் மறையும் முன் கோபத்தை விட்டுவிடுங்கள் என்று வேதம் அறிவுறுத்துகிறது. "நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்". எபேசியர் 4:26-27 NIV

  • நாம் தொடர்ந்து கோபத்தில் இருந்தால், கசப்பு வேரூன்றுவதற்கு ஏதுவாக பிசாசு கால் வைப்பதற்கு இடம் கொடுக்கிறோம். மாம்சத்தின் இச்சையை (பெருமை) கொண்டு வர பிடி கொடுக்கிறோம். தேவகிருபையையும் ஆவிக்குரிய முதிர்ச்சியையும் இழந்து பழைய வாழ்க்கை முறைக்கு மெதுவாகப் பின்வாங்குகிறோம்.

  • நம்மில் உள்ள பெருமை இந்த ஒப்புரவாகுதலை எளிதாக்குவதில்லை. இதை நாம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்?

  • நாம் பாவிகளாக இருந்தபோது இயேசு எப்படி நம்மீது தம் அன்பை வெளிப்படுத்தினாரோ அதே போல உங்கள் இருதயத்தில் அவருடைய அன்பை ஊற்றும்படி அவரிடம் கேளுங்கள். "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்". ரோமர் 5:8 NIV

  • ஜெபத்தோடு நிறுத்தாதீர்கள் - ஒப்புரவாக்குதலின் திசையில் செல்லுங்கள்.

    • உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத நபரை மன்னித்து ஒப்புரவாகும்படி செய்யும்படியான ஆசீர்வாதத்தை தேவனிடம் கேளுங்கள். "அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்". லூக்கா 17:4 NIV

    • அந்த நபர் இதையே மீண்டும் மீண்டும் செய்து வந்தால், அவருக்காக ஜெபித்து, இந்தக் காரியத்தை தேவனின் கைகளில் விட்டுவிட்டால், அவர் உங்களுக்காக யுத்தம் செய்வார். "பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்". ரோமர் 12:19 NIV

பாவங்கள்

பைபிள் பாவங்களை இரண்டாக வகைப்படுத்துகிறது.

  • "செய்யக் கூடாததை செய்வது (Sins of Commission)" - இது நம் எண்ணம், வார்த்தை அல்லது செயலால் செய்யும் பாவம். இந்த வகையான பாவங்கள் மனிதனுக்கு தேவனால் வரையறுக்கப்பட்டுள்ளன. "வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்". மத்தேயு 15:18-19 NIV

  • “செய்ய வேண்டியதை செய்யாமல் விடுவது (Sins of Omission)” – நன்மை செய்ய மறந்து விடும்போது இது ஏற்படுகிறது. ஆனால் நாம் தொடர்ந்து புறக்கணித்து, கொலை அல்லது விபச்சாரம் அல்லது பாலியல் ஒழுக்கக்கேடான விஷயங்களைச் செய்யாததால், நம்மைப் பூரணமாகவும் பரிசுத்தமாகவும் நினைத்துக் கொள்கிறோம். யாக்கோபு 4:17 இந்த வகையானப் பாவங்களைக் குறித்த வரையறையை வழங்குகிறது. "ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்". யாக்கோபு 4:17 NIV

  • எ.கா. - சாலையில் ஒரு பிச்சைக்காரன் வந்து கெஞ்சும்போது உங்களால் அவருக்கு உதவ முடியும் என்று தெரிந்தும் உதவி செய்வதிலிருந்து விலகி இருப்பது.

  • "நல்ல சமாரியன்" உவமையில், நாம் செய்ய வேண்டிய, நமக்குத் தெரிந்த நன்மைகளை செய்வதன் முக்கியத்துவத்தை இயேசு நமக்கு விளக்குகிறார் (லூக்கா 10:30-37).

  • செய்ய வேண்டியதை செய்யாமல் தவிர்க்கின்றதால் வரும் பாவங்களை எப்படி மேற்கொள்வது?

  • "அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்". எபிரேயர் 13:16 NIV

  • நாம் பெரும்பாலும் நல்ல நோக்கங்களைக் கொண்டிருக்கிறோம், ஆனால் நன்மை செய்வதற்கு நமது செயல்களைத் தொடர மறந்து விடுகிறோம். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் யாருக்காவது நன்மை செய்ய நேரம் ஒதுக்குங்கள். முடிந்தால், அதை நாம் மறந்துவிடாதபடி திட்டமிடுங்கள்.

  • பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை நினைவில் வையுங்கள், அது செய்த பாவமாக இருந்தாலும் சரி, புறக்கணித்த நன்மையாக இருந்தாலும் சரி. "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்". ரோமர் 6:23 NIV

நன்றியுள்ள இருதயம்

  • நம் வாழ்வில் பல நேரங்களில் தேவனிடமிருந்து பல நன்மையான விஷயங்களைக் கொண்டு ஆசீர்வதிக்கப்படுகிறோம். ஆனால் அவருக்கு நன்றி சொல்ல மறந்துவிடுகிறோம்.

  • இயேசு 10 குஷ்டரோகிகளைக் குணப்படுத்தினார். அவர்களின் மன்றாட்டைக் கேட்ட பிறகு அவர்களை சுகமாக்கினார். அதில் ஒருவன் மட்டுமே வந்து அவருடைய அற்புதத்திற்காக அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினான்.

  • லூக்கா 17 : 11-19 - "பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார். அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள். அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான். அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்".

  • · தேவன் நம் வாழ்வில் செய்த எல்லா நன்மைகளையும் மறந்துவிட, நாம் அந்த 9 குஷ்டரோகிகளைப் போல இருக்க வேண்டாம். அவரிடமிருந்து நீங்கள் பெறும் அனைத்து சிறிய ஆசீர்வாதங்களுக்கும் ஒவ்வொரு நாளும் அவருக்கு நன்றி செலுத்துங்கள்.

நம்மில் உள்ள தீமைகளை மறந்துவிட தேவ ஆவியால் வழிநடத்தப்படுவோம். மேலும் நம்மில் தொடர வேண்டிய நன்மைகளை மறக்காமல் இருக்க இயேசுவின் ஆவியால் நினைவூட்டப்படுவோம்.



Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page