புத்தியுள்ள ஐந்து / புத்தியில்லாத ஐந்து பேர் : ஆவிக்குரிய தயார்நிலை
- Kirupakaran
- Jul 14
- 7 min read

நாம் பெரும்பாலும் ஞானத்தை புத்தியால் வரையறுக்கிறோம், மேலும் வெளிப்புற நடத்தையின் அடிப்படையில் முட்டாள்தனத்திற்கு முத்திரை குத்துகிறோம். ஆனால் தேவனின் பார்வையில், நமது செயல்களில் பிரதிபலிக்கும் ஆவிக்குரிய தயார்நிலையின் அடிப்படையில் ஞானமும் புத்தியீனமும் வெவ்வேறாக அளவிடப்படுகின்றன. இந்த வேறுபாடு பத்துக் கன்னிகைகள் பற்றிய உவமானத்தில் காட்டப்பட்டது போல வேறெங்கும் இவ்வளவு தெளிவாக சித்தரிக்கப்படவில்லை.
அப்பொழுது பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப்புறப்பட்ட பத்துக்கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள். மத்தேயு 25:1-2
பரலோக ராஜ்யம் ஏன் கன்னிகைகளுடன் ஒப்பிடப்படுகிறது?
1. ராஜ்யத்தின் தூய்மை: பரலோக ராஜ்யம் பரிசுத்தமானது. இயேசுவுடனான நமது உறவு, தனது மணவாளனை ஆவலோடு எதிர்நோக்கும் ஒரு கன்னிகையைப் போல் பரிசுத்தமாகவும், உலகத்திலிருந்து வேறு பிரித்து எடுக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
2. யூத கலாச்சாரப் பின்னணி: யூத மரபில், பெரும்பாலும் கன்னிகைகள் (மணமாகாத இளம் பெண்கள்) திருமண விழாக்களில் மணவாட்டியின் தோழிகளாகவோ அல்லது உதவியாளர்களாகவோ செயல்படுவார்கள். பரலோக ராஜ்யத்தை விளக்குவதற்கு இயேசு இந்த கலாச்சார உருவகத்தைப் பயன்படுத்தினார்.
“மணமகனைச் சந்திப்பது” எதைக் குறிக்கிறது?
· வேத காலங்களில் திருமணம் இரண்டு வேறுபட்ட நிலைகளைக் கொண்டிருந்தது.
1. மணவாளனும் அவரது நண்பர்களும் மணவாட்டியின் வீட்டிற்குச் சென்று அவளது பெற்றோரிடம் உரிமை கோருவார்கள்.
2. பின்னர் மணவாளனும், மணவாட்டியும் திருமண விருந்துக்காக மணவாளனின் வீட்டிற்குத் திரும்புவார்கள் என்று வெளிப்படுத்தின விசேஷம் 19:9 இல் வாசிக்கிறோம்.
இந்தச் சூழலில், மணவாளன் ஏற்கனவே தனது மணவாட்டியை பெற்றுக் கொண்டு இப்போது அவளுடன் வீட்டிற்குத் திரும்பும் வழியில் இருக்கிறான்.
எனினும், இந்த குறிப்பிட்ட உவமையில் திருச்சபையை மணவாட்டியாக வலியுறுத்துவதில் மிகைப்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் கிறிஸ்துவின் மணவாட்டியாக திருச்சபையின் பங்கைப் பற்றிய முழுமையான வெளிப்பாடு பவுலின் ஊழியத்தின் வாயிலாகத்தான் பின்னர் முற்றிலும் வெளிப்பட்டது. (எபேசியர் 5:22-32).
தீவட்டி எதைக் குறிக்கிறது?
கிரியைகளும் செயல்களும்: கன்னிகைகள் ஏந்திச் செல்லும் தீவட்டிகள் அவர்களின் நற்காரியங்களையும் செயல்களையும் குறிக்கின்றன. இவை சாதாரண தீவட்டிகள் அல்ல - அவை சிறப்பு வாய்ந்தவைகளாக இருந்திருக்கலாம்.
ஆவிக்குரிய வாழ்க்கையின் அடையாளம் : தீவட்டி (விளக்கு) நமது வெளிப்புற ஆவிக்குரிய வாழ்க்கையைக் குறிக்கிறது - மற்றவர்கள் நம்மில் காணும் விஷயங்கள் அதாவது தேவாலயத்திற்குச் செல்வது, பிறருக்கு ஊழியம் செய்வது, தேவனைப் பற்றிப் பேசுவது போன்றவைகள். இது நமது விசுவாசத்தை நடைமுறையில் வாழ்ந்து காட்டுவதற்கான தயார்நிலையையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
புத்தியில்லாத ஐந்து பேர்
புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோக வில்லை. மத்தேயு 25:3
எண்ணெய் எதைக் குறிக்கிறது?
புத்தியுள்ளவர்களை புத்தியில்லாதவர்களிடமிருந்து வேறுபடுத்தியது அவர்கள் எடுத்துச் சென்றதுதான். புத்தியில்லாதவர்கள் எண்ணெயைக் கொண்டு வரத் தவறிவிட்டார்கள் - அப்படியானால் இந்த எண்ணெய் உண்மையில் எதைக் குறிக்கிறது?
எண்ணெய் பெரும்பாலும் தேவனுடைய ஆவியின் அடையாளமாக கருதப்படுகிறது.
தாவீதின் அபிஷேகத்தை யோசித்துப் பாருங்கள். எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்ட போது, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின் மேல் இறங்கினார், அவர் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு வழிநடத்தப்பட்டார். அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம் பண்ணினான்; அந்நாள் முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான். 1 சாமுவேல் 16:13
தாவீதின் மீது அபிஷேக எண்ணெய் ஊற்றப்பட்டபோது, கர்த்தருடைய ஆவியானவர் அவர் மீது இறங்கி அவரை வழிநடத்தத் தொடங்கினார். இது அபிஷேகத்திற்கும் பரிசுத்த ஆவியின் அதிகாரமளித்தலுக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்துகிறது.
இரட்சிப்பில் ஆவியால் அபிஷேகம் செய்யப்படுதல்
நாம் மீண்டும் பிறக்கும்போது, குறிப்பாக ஞானஸ்நானம் மற்றும் பரிசுத்த ஆவியின் நிரப்புதல் மூலம் பரிசுத்த ஆவியின் இதே அபிஷேக எண்ணெயைப் பெறுகிறோம். இந்த அபிஷேகம் ஏசாயா 61 இல் குறிப்பிடப்பட்டுள்ள செயல்களைச் செய்வதற்கான ஒரு தெய்வீகப் பணியை நமக்கு அளிக்கிறது.
கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரகவருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள். ஏசாயா 61:1-3
பல விசுவாசிகள் தங்களுக்குள் உள்ள இந்த ஆவியின் அபிஷேகத்தை அங்கீகரிக்கத் தவறிவிடுகிறார்கள், இது பத்து முக்கிய ஆவிக்குரியப் பணிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது, அவை நம் ஒவ்வொருவருக்குள்ளும் எண்ணெய்க்குடங்களை உருவாக்குகின்றன.
1. சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவித்தல் - ஏசாயா 61:1a
2. இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதல் - ஏசாயா 61:1b
3. சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையை கூறுதல் - ஏசாயா 61:1c
4. கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலைக் கூறுதல் - ஏசாயா 61:1d
5. துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்தல் - ஏசாயா 61:2
6. தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும் (வருகை நாள் பற்றி கூறவும்) - ஏசாயா 61:2
7. துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் - ஏசாயா 61:3a
8. சமாதானத்தையும் மறுசீரமைப்பையும் வழங்குதல் - ஏசாயா 61:3a ("சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரம்")
9. ஆனந்த தைலத்தைக் கொடுத்தல் - ஏசாயா 61:3b
10. துதியின் உடையைக் கொடுத்தல் - ஏசாயா 61:3c ("ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக")
நாம் பெறும் அபிஷேகம், இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்தின் போது அவருக்கு அதிகாரம் அளித்த அதே ஆவியின் அபிஷேகம் தான்: நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். அப்போஸ்தலர் 10:38
இயேசுவுக்குக் கொடுக்கப்பட்ட அதே ஆவி நமக்கும் வாக்களிக்கப்பட்டுள்ளது. அவருடைய ஊழியர்களாகவும் சீடர்களாகவும், நாம் அந்த ஆவியினால் அவருடைய சித்தத்தின்படி வாழவும் செயல்படவும் அதிகாரம் பெற்றுள்ளோம். அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். ரோமர் 8:11
அவர்கள் ஏன் புத்தியில்லாதவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்?
அவர்கள் எண்ணெயை எடுத்துச் செல்லவில்லை – இது, வெளிப்புறமாக மதவாதிகளாக இருந்தாலும், கிறிஸ்துவின் பார்வையில் உண்மையான தேவபக்தி இல்லாதவர்களின் ஓர் உருவகமாகும். தேவபக்தி என்பது அவரில் தினமும் வளர்வதும், கிறிஸ்துவுடன் சேர்ந்து நடப்பதும், உள்ளான ஆத்துமா பிதாவின் சித்தத்துடன் ஒத்துப்போவதும் ஆகும். இதற்கு நேர்மாறாக, பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களைப் போலவே மதவாதிகளும் வெளிப்புற சடங்குகள் மற்றும் தோற்றங்களில் அதிக கவனம் செலுத்தி, தேவன் உண்மையிலேயே விரும்பும் உள் மாற்றத்தை புறக்கணிக்கிறார்கள்.
வெளிப்புற செயல்கள் எண்ணெயை உற்பத்தி செய்ய முடியாது - தேவாலயத்திற்கு செல்வது, சடங்குகளைச் செய்வது போன்ற மதப் பழக்கவழக்கங்கள் வெளிப்புறத்தில் நன்றாக தோன்றலாம்; ஆனால் அவை தேவன் மதிக்கும் எண்ணெயை உண்டாக்குவதில்லை. அவருடன் ஒரு ஜீவனுள்ள உறவு இல்லாமல், நாம் அவரது அழைப்பிலிருந்து தவறிவிடுகிறோம்.
அவர்களுக்கு விசுவாசம் இருந்தது, ஆனால் கிரியைகள் இல்லை - அது கிட்டத்தட்ட ஒரு இறந்த மனிதனைப் போன்றது. யாக்கோபு அதை நன்றாக விளக்குகிறார், அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். …. அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது. யாக்கோபு 2:17,26
ஆவிக்குரிய கனிகள் இல்லை - இயேசு திராட்சச் செடி; நாம் கொடிகள். அவருடன் இணைந்திருக்காமல், நம்மால் கனி கொடுக்க முடியாது - இது எண்ணையாக சித்தரிக்கப்படுகிறது. உண்மையான கனி அவரில் நிலைத்திருந்து அவருடைய ஆவியைச் சார்ந்திருப்பதிலிருந்து வருகிறது. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. யோவான் 15:4-5
கீழ்ப்படிதலின் ஆவி இல்லை - தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அதனை செயல்படுத்தாமல் இருப்பது புத்தியீனத்தின் மற்றொரு அடையாளமாகும். நம்மில் பலர் பிரசங்கங்களைத் தொடர்ந்து கேட்கிறோம், ஆனால் அதற்கு ஒருபோதும் கீழ்ப்படிவதில்லை. இயேசு அத்தகையவர்களை அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஓப்பிட்டார். என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன். என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். லூக்கா 6:47,49
புத்தியுள்ள ஐந்து பேர்
புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். மத்தேயு 25:4
தேவனுடைய ஆவியால் இயக்கப்படும் தீவட்டிகள் - இந்தப் பெண்கள் மெழுகுவர்த்திகளைப் போன்ற சாதாரண தீவட்டிகளை எடுத்துச் செல்லவில்லை. உருவகமாகப் பார்த்தால், அவர்கள் பரிசுத்த ஆவியால் இயக்கப்படும் "சூரிய விளக்குகளை" சுமந்து சென்றனர். அவைகளின் வெளிச்சம் மனித முயற்சியிலிருந்து வராமல், தெய்வீக எண்ணெயால் வந்தது.
எண்ணெய் பாத்திரங்கள் - ஒன்றல்ல, பல - அவர்கள் எண்ணெய் நிரம்பிய பாத்திரங்களைக் கொண்டு வந்தார்கள் - பாத்திரங்கள் என்று பன்மையில் கூறப்பட்டிருப்பது ஆவிக்குரிய கனிகளும் தெய்வீக செயல்களும் நிறைந்த வாழ்க்கையை அடையாளப்படுத்துகிறது. இந்த எண்ணெய் வெறும் காட்சிக்காக அல்ல; இது தேவனில் வேரூன்றிய ஒரு வாழ்க்கையின் சாட்சியாகவும், அவர் விரும்பும் கனிகளை விளைவிக்கும் வாழ்வின் அடையாளமாகவும் இருந்தது. ஆவியின் கனிகள் யாவை? 9 குணங்கள். ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. கலாத்தியர் 5:22-23
தேவன் அதிக கனிகளை விரும்புகிறார் - நீங்கள் இந்தக் கனிகளைக் கொண்டிருக்கும்போது தேவநீதியால் நிரப்பப்படுகிறீர்கள். அது உங்களிடம் உள்ள சுயநீதியான விஷயங்களை நீக்கிப் போடுகிறது. தேவன் நாம் அதிக கனிகளைப் பெற வேண்டும் என்று விரும்புகிறார். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. யோவான் 15:5
பல பாத்திரங்கள், பல வரங்கள் - தேவன் நம்மிடம் எண்ணெய் நிரம்பிய பல பாத்திரங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார், ஆனால் நாம் விரும்புவதை அடிப்படையாகக் கொண்டு அல்ல, அவர் பயன்படுத்த விரும்புவதின் அடிப்படையில். பரிசுத்த ஆவியானவர் நம்மை அபிஷேகம் செய்தவுடன், 1 கொரிந்தியர் 12:8–10 இல் விவரிக்கப்பட்டுள்ள ஆவியின் வரங்களால் நம்மை ஆசீர்வதிக்கிறார்.
ஞானத்தைப் போதிக்கும் வசனம் - தேவனின் திட்டம் அல்லது சத்தியம் குறித்த அதிசயமான உள்ளுணர்வு.
அறிவை உணர்த்தும் வசனம் - ஒரு நபர் அல்லது சூழ்நிலையைப் பற்றி இயற்கையாகக் கற்றுக்கொள்ள முடியாத தெய்வீக அறிவு.
விசுவாசம் - தேவனுடைய வல்லமையிலும் வாக்குத்தத்தத்திலும் ஒரு அசாதாரண நம்பிக்கை.
குணமாக்கும் வரங்கள் - பரிசுத்த ஆவியால் நோய்களைக் குணப்படுத்தும் வல்லமை.
அற்புதங்களைச் செய்யும் சக்தி - இயற்கை விளக்கத்திற்கு அப்பாற்பட்ட அதிசய செயல்கள்.
தீர்க்கதரிசனம் உரைத்தல் - தேவனிடமிருந்து வரும் செய்திகளைப் பேசுதல், பெரும்பாலும் ஊக்கம் அளிப்பதற்கும் எச்சரிக்கை செய்வதற்கும்.
ஆவிகளை வேறுபடுத்தி அறிதல் (பகுத்தறிதல்) - ஆன்மீக செல்வாக்கின் இருப்பு அல்லது ஆதாரத்தை (தேவன், மனிதன் அல்லது பிசாசு) அடையாளம் காணும் திறன்.
பற்பல பாஷைகளைப் பேசுதல் - பேசுபவருக்குத் தெரியாத மொழியில் பேசுவது.
பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல் - அந்நிய பாஷைகளில் பேசப்பட்டவற்றின் அர்த்தத்தை பரிசுத்த ஆவியால் புரிந்துகொண்டு மற்றவர்களுக்குத் தெரிவிப்பது.
தேவனின் வசனத்தாலும் ஆவியாலும் வழிநடத்தப்படும் வாழ்க்கை - தேவன் நம்மைத் தமது செயல்களுக்கான பாத்திரமாக உருவாக்கும் நோக்கத்தில், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களால் நம்மை அதிகமாக ஆசீர்வதிக்க விரும்புகிறார். ஏனென்றால் உங்கள் கால்களுக்குத் தீபமாகவும், அவருடைய கிரியைகளின் பாதைக்கு வெளிச்சமாகவும், அவருடைய வார்த்தையால் நீங்கள் வழிநடத்தப்படுகிறீர்கள். உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105.
புத்தியுள்ளவர்களுக்கும் புத்தியில்லாதவர்களுக்குமான எச்சரிக்கை
மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். மத்தேயு 25:5
தாமதம் பலரை நித்திரை மயக்கமடையச் செய்துள்ளது - "கர்த்தர் சீக்கிரம் வருகிறார்" என்ற சொற்றொடரை நாம் அடிக்கடி கேட்கிறோம். இது நோவாவின் காலத்திலும், இயேசுவின் காலத்திலும் சொல்லப்பட்டது. நம்முடைய பாட்டி, தாத்தாக்கள் அதை கேட்டிருக்கிறார்கள் – நாமும் கேட்கிறோம். ஆனாலும், வாழ்க்கை இயல்பாகவே தொடருவதால், பலர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
உறங்கும் திருச்சபை - இயேசு மீண்டும் வருவார் என்பதை திருச்சபை 2,000 ஆண்டுகளாக அறிந்திருக்கிறது, இருந்தாலும், பல விசுவாசிகள் சோம்பலாகவும் மந்தமாகவும் மாறிவிட்டனர். கர்த்தருடைய இரண்டாம் வருகையைப் பற்றிய எந்த உற்சாகமும் அவர்களிடம் இல்லை. இதன் விளைவாக, கர்த்தர் மீண்டும் வருகிறார் என்பதற்கு விளக்கமான சாட்சியம் அளிக்கப்படுவது மிகவும் குறைந்துவிட்டது.
இந்த நாட்களைப் பற்றி இயேசு ஏற்கனவே எச்சரித்திருக்கிறார் - வஞ்சனை, யுத்தங்கள், இயற்கை பேரழிவுகள், துன்புறுத்தல், துரோகம் மற்றும் அதிகரிக்கும் துன்மார்க்கம் போன்ற முடிவுக்கான அறிகுறிகளை இயேசு தெளிவாக விவரித்தார். பலர் வழிதவறிச் செல்வார்கள், அன்பு தணிந்துபோகும், அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகள் தவறாக வழிநடத்துவார்கள் என்று அவர் நம்மை எச்சரித்தார். ஆனால் முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான் என்றும் அவர் உறுதியளித்தார். (வசனம் 13) - பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப் படுவீர்கள். அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். மத்தேயு 24:3-14
பலர் உறங்கிக் கொண்டிருக்கின்றனர் — இயேசு நமக்குச் சொன்னது போல மத்தேயு 25:5 இல் சொல்லப்பட்டுள்ள உவமையை இன்றைய திருச்சபை பிரதிபலிக்கிறது. நித்திரை மயக்கமாக, விழிப்புணர்வின்றி, ஆயத்தமின்றி இருக்கிறது. ஏன்? ஏனென்றால் தாமதம் பலரை மெத்தனப்போக்கில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இயேசு நமக்கு ஒரு தெளிவான கட்டளையைக் கொடுத்துள்ளார்: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். மத்தேயு 26:41
அடையாளங்கள் ஏற்கனவே காணப்படுகின்றன - சுற்றிலும் பாருங்கள் - யுத்தங்கள், நோய்கள், அதிகரிக்கும் பாவங்கள், ஒழுக்கக் கேடுகள். அவர் திரும்புவதற்கான அடையாளங்கள் எதிர்கால எச்சரிக்கைகள் அல்ல; அவை தற்போதைய யதார்த்தங்கள். இதைவிட வேறு என்ன உறுதிப்படுத்தல் நமக்குத் தேவை?
நாமே அழைக்கப்பட்டவர்கள் - விசுவாசிகளாகிய நாம், நற்செய்தியை அறிவிக்கவும், சிறைகளிலிருப்பவர்களை விடுவிக்கவும், இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் இயேசுவை அபிஷேகம் செய்த அதே பரிசுத்த ஆவியை சுமந்து கொண்டு இருக்கிறோம். நாம் வெறுமனே நின்றுகொண்டிருக்கக் கூடாது. ஏசாயா 61:1-3 இல் விவரிக்கப்பட்டுள்ளபடி, தொலைந்து போனவர்களை அடையவும், எழுப்புதலுக்காக ஜெபிக்கவும் அழைக்கப்பட்ட கிறிஸ்துவின் ஊழியக்காரர் நாம்.
தயாராவதற்கு தாமதிக்காதீர்கள் - இந்த உவமை நம்மை எச்சரிக்கிறது: மணவாளன் வரும்போது வெளியே சென்று "எண்ணெய் வாங்க" நேரம் இருக்காது. தாமதமாகிவிடும் முன், நாம் இப்போதே விளக்கு (விசுவாசம்) மற்றும் எண்ணெய் (ஆவிக்குரிய தயார்நிலை) இரண்டையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
சுருக்கம்: கிறிஸ்துவுடனான உங்கள் ஆவிக்குரிய பயணத்தை ஆராயுங்கள்
சிறிது நேரம் ஒதுக்கி, இயேசுவுடனான உங்கள் உறவை நேர்மையாக மதிப்பீடு செய்யுங்கள். கீழ்க்காணும் கேள்விகள் நீங்கள் வாழும் ஆவிக்குரிய வாழ்க்கையைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க உதவும்.
1. நீங்கள் மதம் சார்ந்த வாழ்க்கை வாழ்கிறீர்களா அல்லது தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்கிறீர்களா?
தேவாலயத்திற்கு சென்று வழக்கமான செயல்களை மட்டுமே செய்கிறீர்களா? அல்லது, நீங்கள் உண்மையிலேயே கிறிஸ்துவுக்கு முழுமையாக ஒப்புக் கொடுத்து, உங்கள் சுய விருப்பத்திற்குப் பதிலாக அவரைப் பிரியப்படுத்தவும், அவரது சித்தத்தை நிறைவேற்றுவதையும் நாடுகிறீர்களா?
2. உங்கள் வாழ்க்கை பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறதா?
நீங்கள் நெருக்கடியில் இருக்கும்போது, யாரைச் சார்ந்திருப்பீர்கள்? நீங்கள் தேவ ஆவியால் வழிநடத்தப்படுகிறீர்களா? அல்லது உங்கள் சொந்த பலத்தை நம்பியிருக்கிறீர்களா? ஆவியால் வழிநடத்தப்படும் வாழ்க்கை தினமும் தேவனின் பிரசன்னத்தையும் வழிகாட்டுதலையும் சார்ந்து இயங்குகிறது.
3. நீங்கள் எந்த வகையான எண்ணெயை எடுத்துச் செல்கிறீர்கள்?
1 கொரிந்தியர் 12:8-10 இல் விவரிக்கப்பட்டுள்ள ஆவியின் வரங்களையும், ஏசாயா 61:1–3 இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பணியையும் கவனியுங்கள்.
இவற்றை உங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்:
தேவன் உங்களுக்கு என்ன வரங்களைக் கொடுத்திருக்கிறார்?
நீங்கள் என்ன பணிகளைத் தொடங்கினீர்கள் அல்லது நிறைவேற்றினீர்கள்?
ஆவிக்குரிய கனிகளைக் கொடுத்து, அவர் உங்களுக்கு நியமித்த காரியங்களைச் செய்கிறீர்களா?
4. நீங்கள் வளர்ந்து வருகிறீர்களா அல்லது இன்னும் ஆவிக்குரிய குழந்தையாக இருக்கிறீர்களா?
கிறிஸ்துவை ஆழமாகவும் விசாலமாகவும் அறிந்துகொள்வதன் மூலம் அவரில் வளர்ந்து முழுமையடைய பயணிக்கிறீர்களா?
இப்போது கிறிஸ்துவுடன் நடப்பது ஒரு வருடத்திற்கு முன்போடு ஒப்பிடுகையில் எப்படி உள்ளது? அது முதிர்ச்சியடைந்ததா அல்லது இன்னும் வேறொருவரைச் சார்ந்து இருக்கிறதா?
வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் ஆவிக்குரிய அனுபவங்கள் உங்களிடம் உள்ளதா? அல்லது ஊழியம் செய்வதிலும் அவருடைய ராஜ்யத்தை நோக்கி வழிநடத்துவதிலும் சிறிய முன்னேற்றத்தோடு, இன்னும் விசுவாசத்தின் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறீர்களா?
5. நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் விழித்திருக்கிறீர்களா அல்லது உறங்குகிறீர்களா?
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்:
ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் ஜெபத்தில் செலவிடுகிறீர்கள்?
வழக்கமாக தேவ பிரசன்னத்தில் குறைந்தது ஒரு மணிநேரமாவது கவனம் செலுத்துகிறீர்களா?
இயேசுவின் எச்சரிக்கையை நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். மத்தேயு 26:41
ஜெபம் தான் அவருடனான நடையில் விழித்திருப்பதற்கும் வலிமையாக இருப்பதற்கும் தேவையான கிருபையைப் பெறும் இடம். நீங்கள் விழித்திருந்து, எண்ணெயால் நிரப்பப்பட்டு, மணவாளனின் வருகைக்குத் தயாராக இருக்கிறீர்களா?
உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை மதிப்பிடுவதற்கும், சீரமைப்பதற்கும், மீண்டும் உயிர்ப்பிப்பதற்கும் இதுவே நேரம் - இதனால் அவர் வரும்போது, நீங்கள் வெறுமையாகவோ அல்லது ஆயத்தமில்லாமல்லோ காணப்படமாட்டீர்கள்.



Amen