நோர் ஈஸ்டர் - வலுவான வடகிழக்கு புயல்
- Kirupakaran
- May 3, 2022
- 5 min read

இந்த வலைப்பதிவு கடந்த ஆண்டு எழுதப்பட்ட ‘Noreaster’ என்னும் ஆங்கிலப் பதிவின் தொடர்ச்சியாகும். நான் இந்த வார்த்தையை மீண்டும் தியானித்தபோது தேவன் எனக்கு புதிய வெளிப்பாடுகளைக் கொடுத்தார். நாம் ஆழமாக செல்வதற்கு முன், ஒரு சிறிய பின்னணியைப் பார்ப்போம். பவுல் எபேசுவில் தனது ஊழியத்தை முடித்துவிட்டு (அங்கு அவர் 2.5 வருடங்களுக்கும் மேலாக தங்கியிருந்தார்), தேவ சித்தத்தின் அடிப்படையில் எருசலேமுக்குச் சென்றார். அங்கு அவர் கைது செய்யப்பட்டு பேலிக்ஸ் / அகிரிப்பா ராஜா ஆகியோர் முன்பாக ஆலோசனை சங்கத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பவுல் ரோமானிய குடிமகனாக இருந்ததால் சீசரிடம் முறையிட்டார். எனவே , அவர் அகிரிப்பா ராஜாவால் எருசலேமிலிருந்து ரோமுக்கு அனுப்பப்பட்டார். அவர் எருசலேமில் இருந்து ரோமாபுரிக்கு பயணம் செய்ய 3 மாதங்கள் ஆனதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
அப்போஸ்தலர் 27 முழு அதிகாரமும் அவரது ரோம் பயணத்தைக் குறித்த தெளிவான பார்வையை அளிக்கிறது. ஆரம்பத்தில், வேதத்தை படிக்கும் போது அப்போஸ்தலர் 27 நமக்கு ஒரு கதை மாதிரியாக வருகிறது. ஆனால் இதில் நமது ஆவிக்குரிய விஷயங்களில் நமக்கு உதவக்கூடிய பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
பவுலின் பயணத்தில் கவனிக்க வேண்டிய சில நிகழ்வுகள்
மக்கெதோனியா தேசத்துத் தெசலோனிக்கே பட்டணத்தானாகிய அரிஸ்தர்க்கு பவுலுடனே கூட இருந்தான். அரிஸ்தர்க்கு பவுலுடன் ரோம் நகருக்குச் செல்ல விரும்பினான். பவுல் மீது ஜனங்கள் அந்த அளவு அன்பு கொண்டிருந்தார்கள்.
பரிகார நாள் - இது அவர்கள் பயணம் செய்த செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலத்தைக் குறிக்கிறது. இது பொதுவாக கடலில் பயணம் செய்வதற்கு ஆபத்தான நேரம்.“வெகுகாலம் சென்று, உபவாசநாளும் கழிந்துபோனபடியினாலே, இனிக் கப்பல் யாத்திரை செய்கிறது மோசத்திற்கு ஏதுவாயிருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி:” அப்போஸ்தலர் 27:9
பரிசுத்த ஆவியின் வெளிப்பாட்டின் அடிப்படையில் பயணிக்க வேண்டாம் என்று பவுல் நூற்றுக்கு அதிபதியை எச்சரித்தார். “மனுஷரே, இந்த யாத்திரையினாலே சரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி, அவர்களை எச்சரித்தான். நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினான்”. அப்போஸ்தலர் 27:10-11
வட கிழக்கன் - வடகிழக்கு புயலில் கப்பல் சிக்கியது. இன்று நாம் எதிர்கொள்ளும் பெரிய மெகா புயல்களுக்கு வட கிழக்கன் பெயரை இணை சொல்லாகப் பயன்படுத்துகிறோம். “கொஞ்சநேரத்துக்குள்ளே யூரோக்கிலிதோன் என்னுங்கடுங்காற்று அதில் மோதிற்று.” அப்போஸ்தலர் 27:14
புயலில் அவர்கள் அடைந்த துயரங்கள் யாவும் 18 முதல் 20 வரையிலான வசனங்களில் விளக்கப்பட்டுள்ளது. அவர்கள் கப்பலைச் சுற்றி தூக்கி எறியப்பட்டனர். தங்கள் உயிரைக் காப்பாற்ற கயிற்றில் தொங்கினார்கள். அந்த இடம் முழுவதும் பல நாட்கள் இருட்டாக இருந்தது. அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் பல நாட்கள் கயிற்றில் தொங்கியபடி புயலில் இருப்பவருக்கு எப்படி இருக்கும் என்று ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். அந்த நூற்றுக்கு அதிபதியின் சிந்தனை என்னவாக இருந்திருக்கும்.“மேலும் பெருங்காற்றுமழையில் நாங்கள் மிகவும் அடிபட்டபடியினால், மறுநாளில் சில சரக்குகளைக் கடலில் எறிந்தார்கள். மூன்றாம் நாளிலே கப்பலின் தளவாடங்களை எங்கள் கைகளினாலே எடுத்து எறிந்தோம்.அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக் கொண்டிருந்தபடியினால், இனித் தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று.” அப்போஸ்தலர் 27:18-20
இந்த ஆழமான தாழ்ந்த நிலையில், அவர்கள் பல நாட்கள் உணவின்றி இருளில் இருந்ததாகவும் , பலவீனமாக இருந்ததாகவும் வாசிக்கிறோம். பவுலும் அதே சூழ்நிலையில் தான் இருந்தார். ஆனால் அவர் எழுந்து நின்று ஊக்கமாகப் பேசி, சில தீர்க்கதரிசனங்களை கூறுகிறார். “அநேகநாள் அவர்கள் போஜனம்பண்ணாமல் இருந்தபோது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவை விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது. ஆகிலும் திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற் சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது.ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்து நின்று: பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும், இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான். ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன்.ஆயினும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான்.” அப்போஸ்தலர் 27: 21-26
எனக்கு இருந்த கேள்வி என்னவென்றால், பவுலும் மற்றவர்களைப் போல அதே புயலில் தான் இருந்தார். புயலின் மத்தியில் பவுலுக்கு எங்கிருந்து ஆறுதல் கிடைத்தது? அவர் ஏன் மற்ற மனிதர்களிடம் இருந்து வேறுபட்டார்?
நம் வாழ்வில் பயன்படுத்துவதற்கு கற்றுக்கொள்ளக்கூடிய பதில்களை தேவன் எனக்குக் கொடுத்தார். நாமும் வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொள்கிறோம். பவுலைப் போல மோசமான புயல்களில் நாம் கடந்து செல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு புயலும் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு “வடகிழக்கன்” ஆகும். அதை நாம் பவுலிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
தேவனை சார்ந்திருத்தல் - “என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன்”
“ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்து நின்று:” அப்போஸ்தலர் 27:23
”என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன்” - பவுலின் இந்த மாபெரும் கூற்றைக் கவனியுங்கள்,இந்த அறிக்கை பவுல் தேவனிடம் கொண்டிருந்த விசுவாசத்தை உறுதிப்படுத்துவதாக வருகிறது.
பவுல் தேவனுக்கு சொந்தமானவர். ஏனென்றால் இயேசு கிறிஸ்து தம் சொந்த இரத்தத்தால் அவரை விலைக்கு வாங்கினார் என்றும் அவர் தனது பாவங்களுக்காக மரித்தார் என்றும் அவர் தனது இருதயத்திலிருந்தும் மனதிலிருந்தும் நம்பினார்.
பவுல் ஆண்டவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஆண்டவரே பவுலைத் தேர்ந்தெடுத்தார் (சவுல் பின்னர் பவுல் என்று அழைக்கப்பட்டார்). தமஸ்குவில் அவர் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியபோது இயேசு அவருடன் பேசினார். ”அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக்கேட்டான்.அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.”அப்போஸ்தலர் 9:4-5
தான் தனக்கு சொந்தமில்லை, தேவனுக்குச் சொந்தமானவர் என்று அவர் திடமாக விசுவாசித்தார். இது இயேசுவின் அடிமை என்ற அணுகுமுறை. அது இல்லாமல், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன்” என்று சொல்ல முடியாது.
அவர் புயலில் தன்னைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக தேவனைச் சார்ந்திருந்தார். அதே சமயத்தில் மற்றவர்கள் தங்கள் சொந்த பலத்தையும் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்த கயிறுகளையும் சார்ந்து இருந்தனர்.
ரோமாபுரிக்கு செல்ல வேண்டும் என்ற தேவ சித்தத்திற்கு பவுல் கீழ்ப்படிந்தார். அதை எதுவும் மாற்ற முடியாது என்றும் வடகிழக்கன் புயல் தேவ சித்தத்திற்கு எந்த வகையிலும் ஈடு கொடுக்க முடியாது என்றும் அவருக்குத் தெரியும். “அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார்.” அப்போஸ்தலர் 23:11
அழுத்தமான சூழ்நிலையில், பவுல் கிறிஸ்துவை தன்னுடன் வைத்திருந்தார். மேலும், மரணத்தில் ஜெயம் கிடைக்கும் என்ற உறுதியும், எல்லாக் காரியமும் நன்மைக்கு ஏதுவாகவே நடக்கும் என்ற வாக்குறுதியும் அவருக்கு இருந்தது. மற்ற மாலுமிகள் அந்நிய தெய்வங்களை (ஜீயஸ் மற்றும் ஜுபிடர் போன்ற கிரேக்க, ரோமானிய தெய்வங்கள் ) வணங்கினர். அவைகளால் அவர்களுக்கு உதவ முடியவில்லை. ஆனால் கிறிஸ்து பவுலுக்கு அமைதியாக இருக்கவும் இந்த அவிசுவாசிகளை ஊக்குவிக்கவும் வல்லமை தந்தார். பவுலை வித்தியாசமானவராக கண்டதால் அவர்கள் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
கற்றுக்கொள்ளக்கூடிய பாடம்
புயல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் (அது வடகிழக்கன் அல்லது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடந்து செல்லும் அதை விட பெரிய புயலாக இருக்கலாம்) இயேசுவையே சார்ந்து இருங்கள். அவர் வானத்தையும் பூமியையும் படைத்தவராக இருப்பதால், அவரால் சூழ்நிலையை மாற்ற முடியும்.
நீங்கள் அவரைச் சார்ந்திருக்கும் போது அவர் உங்களை வழிநடத்துவார் என்ற உறுதியுடன் புயலின் மத்தியில் அமைதி இருக்கும்.
விசுவாசத்தின் சோதனை - "பவுலே, பயப்படாதே”
“பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும், இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்.” அப்போஸ்தலர் 27:24
பவுல் தேவனை சார்ந்திருந்தாலும், மற்றவர்களைப் போல அவரும் பயந்தார். இல்லையெனில் தேவதூதர்கள் " பயப்படாதே " என்று பவுலை வாழ்த்தியிருக்க மாட்டார்கள்.
எனவே விசுவாசத்தில் பயம் இருப்பது சாதாரணமானது. நமக்கு யாரும் இல்லை, நாம் தனியாக இருக்கிறோம் என்று நம்பும்படி சாத்தான் நம்மை ஏமாற்றுகிறான். இந்த பயங்கள் நாம் தனியாகப் போரிடுவதைப் போல நம்மை உணர வைக்கும். புயலின் நடுவிலும், பயத்தின் நடுவிலும் பவுல் ஜெபித்தார். அவர் தேவனை சார்ந்து இருந்ததால் இயேசுவிடம் வந்து சேர்ந்தார்.
பவுல் வேறு வகையான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்ததிற்கான ரகசியங்களில் ஒன்று, அவர் ஜெபவீரராக இருந்தார். ஜெபிக்கக் கற்றுக்கொண்ட ஒரு கிறிஸ்தவனின் வசம் எவ்வளவு வல்லமை இருக்கிறது.
நாம் ஜெபித்தால் மட்டுமே ஆண்டவர் நமக்குப் பதிலளிக்கிறார், நாம் அவரை அழைக்காவிட்டால் அவர் நமக்கு வெளிப்படுத்த மாட்டார். இந்த காரியத்தில் பவுல் ஜெபித்து தேவனிடம் இருந்து “உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார்” என்ற வார்தையைப் பெற்றுக் கொண்டார்.
கற்றுக்கொள்ளக்கூடிய பாடம்
புயலின் மத்தியில் இருக்கும்போது பயம் ஏற்படுவது சகஜம். பயத்தை அவிசுவாசத்தின் செயல் என்று குழப்பிக் கொள்ளாதீர்கள். பயத்தோடு சாத்தானின் வலையில் சிக்காதீர்கள்.
பயம் வரும்பொழுது இயேசுவை அணுகி ஜெபியுங்கள்.
பயத்தை நீக்குவதற்கும், ஆண்டவரிடம் இருந்து தைரியத்தின் ஆவியைப் பெறுவதற்கும் ஜெபம் முக்கிய மாற்று மருந்தாகும். அவர் தமது வார்த்தையின் மூலம் தமது செய்தியை நமக்கு வெளிப்படுத்துகிறார். பவுலின் காரியத்தில் அவரிடம் பேசுவதற்கு ஒரு தூதனை அனுப்பினார். நம் ஒவ்வொருவருடனும் பேசுவதற்கு வெவ்வேறு வழிகளைத் தேர்வு செய்கிறார். அவர் எப்படிச் செய்வார் என்பது அவருடைய விருப்பம். சிலருக்கு அது வார்த்தையின் மூலம் இருக்கும், சிலருக்கு போதகர் மூலமாக இருக்கும், சிலருக்கு அது ஒரு நலம் விரும்புபவர், நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் மூலமாக இருக்கும். சிலருக்கு ஆவியின் மூலம் வெளிப்படுத்துவார்.
விசுவாசத்தை மீண்டும் உறுதிப்படுத்துதல்
“ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன்.” அப்போஸ்தலர் 27:25
புயலின் மத்தியில் பவுலின் விசுவாச அறிக்கை விசுவாசத்தின் வரையறைக்கு ஒரு உண்மையான சாட்சி. “விசுவாசம் என்பது, நாம் எதிர்பார்த்திருக்கும் காரியங்களைக் குறித்த நிச்சயமும், நம்மால் காண முடியாதவற்றைக் குறித்த உறுதியுமாயிருக்கிறது.” எபிரேயர் 11:1
பவுல் மீண்டும் தேவனின் வாக்குறுதியின் மீது தனது முழு நற்பெயரையும் பணயம் வைத்தார். இது விசுவாசத்தின் மகத்தான வரையறை. இங்கே பவுல் என்ன செய்தார் என்றால் , தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொண்டு "எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும்” என்று மீண்டும் உறுதிப்படுத்தினார்.
விசுவாசம் என்பது தேவன் தம் வாக்குறுதிகளை உண்மையாக விசுவாசிக்கும் கிறிஸ்தவர்களுக்கு அவற்றை நிறைவேற்றுவார் என்ற உறுதி.
விசுவாசியான பவுல் கிறிஸ்தவர் அல்லாதவர்களைத் தொடரும்படி ஊக்குவித்தார். பவுல் ஜீவனுள்ள கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்து செயல்பட்டார். இது இரட்சிக்கப்படாத / நம்பிக்கை இழந்த / தளர்ந்து போன மற்றவர்களை பவுலைப் பின்பற்ற ஊக்குவித்தது. அவருடைய விசுவாசத்தின் காரணமாக, அவரால் 275 பேரின் மனப்பான்மையை மாற்றியமைக்க முடிந்தது. அதனால் அவர்கள் சாப்பிடுவதற்கும், அவர்களுக்கு முன்னால் இருந்த கடினமான காரியங்களுக்கு தயாராக இருக்கவும் முடிந்தது. “இப்படிச் சொல்லி. அப்பத்தை எடுத்து, எல்லாருக்குமுன்பாகவும் தேவனை ஸ்தோத்தரித்து, அதைப் பிட்டுப் புசிக்கத்தொடங்கினான்.அப்பொழுது எல்லாரும் திடமனப்பட்டுப் புசித்தார்கள்.கப்பலில் இருநூற்றெழுபத்தாறுபேர் இருந்தோம்.திருப்தியாகப் புசித்தபின்பு அவர்கள் கோதுமையைக் கடலிலே எறிந்து, கப்பலை இலகுவாக்கினார்கள்.” அப்போஸ்தலர்27:35-38
கற்றுக்கொள்ளக்கூடிய பாடம்
புயலின் மத்தியில் விசுவாசத்தைப் பிரகடனப்படுத்துவது, கிறிஸ்து நம்மில் வாழ்வதன் உண்மையான அர்த்தத்தை விசுவாசத்திற்கு வழங்குகிறது. நாம் என்ன செய்யப் போகிறோம் என்று நமக்குத் தெரியாவிட்டாலும் நாம் அவரை விசுவாசிக்கிறோம் என்று அது தேவனிடம் கூறுகிறது. நீங்கள் சொல்வது போல் அவர் புயலின் நடுவில் நம்மை வழிநடத்துவார் என்ற விசுவாசத்தை நாம் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
புயலடிக்கும் சூழ்நிலையில் நீங்கள் செல்லும்போது அவருடைய வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள் - பவுலும் அதையே தான் செய்தார். “எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும்” என்ற வார்த்தையைப் பற்றிக் கொண்டார். நாம் ஆண்டவருடைய வாக்குறுதிகளில் இருந்து விலகி பிரச்சனையில் மட்டுமே கவனம் செலுத்துவதால், பல நேரங்களில் புயலின் நடுவில் நாம் அவருடைய வார்த்தையை மறந்து விடுகிறோம்.
அவர் அளித்த வாக்குறுதியை உங்கள் மனதில் / இருதயத்தில் / வாயில் மீண்டும் சொல்லிக் கொண்டே இருங்கள். (பல சமயங்களில் அவர் பைபிள் மூலம் பேசுகிறார், அந்த சூழ்நிலையில் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார்). நீங்கள் புயலின் நடுவில் இருக்கும்போது வாக்குறுதியை திரும்பத் திரும்ப ஒப்புக்கொள்ளுங்கள், இதைச் செய்யும்போது இயேசுவின் மீது வைத்திருக்கும் உங்கள் விசுவாசத்தைப் பற்றி எதிரிகளிடம் சொல்கிறீர்கள். தேவ ஜனங்கள் புயலின் நடுவில் ஆண்டவருடைய வார்த்தையைப் பயன்படுத்துவதைக் கண்டு எதிரி நடுங்கிப் போவான்.
தேவன் எப்பொழுதும் தமது வாக்குறுதிக்கு உண்மையுள்ளவராக இருக்கிறார்
“உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார்” அப்போஸ்தலர் 27:24 என்று தேவன் பவுலுக்குக் கொடுத்த வாக்குறுதியைப் படித்தோம்.
“இவ்விதமாய் எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.” என்ற வசனத்தின் மூலம் வாக்குறுதி நிறைவேறியதை அறிந்து கொள்ளலாம்.
“மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பல் துண்டுகள்மேலும் போய்க் கரையேறவும் கட்டளையிட்டான்; இவ்விதமாய் எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.” அப்போஸ்தலர் 27:44
கப்பலில் இருந்த அனைவரும் காப்பாற்றப்படுவார்கள், அவர்களில் ஒருவர் கூட உயிரை இழக்க மாட்டார்கள் என்று தேவன் பவுலுக்கு வாக்குறுதி அளித்தார். இது அவருடைய இறையாண்மையான வாக்குறுதியாகும், அதை மீற முடியாது. ஆனாலும், அனைவரும் இரட்சிக்கப்படும் பொருட்டு கப்பலில் தங்க வேண்டியிருந்தது.
இது ஆண்டவருடைய இறையாண்மை மற்றும் மனிதனின் பொறுப்பு ஆகியவற்றிற்கு சரியான எடுத்துக்காட்டு. இவ்விரண்டுமே வேதத்தில் கற்பிக்கப்படுகிறது. ஆண்டவருடைய இறையாண்மை மனிதனின் பொறுப்பை உள்ளடக்கியது. மனிதனின் செயல்கள் ஆண்டவர் தமது திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிமுறையாகும்.



Comments