தேவனின் குரலைக் கேட்பது எப்படி?
- Kirupakaran
- Nov 24
- 7 min read

வாகனம் ஓட்டும்போது, நம் கவனம் சாலையில் நிலைத்திருப்பதால், நம்மைச் சுற்றியுள்ள ஒலிகளை பெரும்பாலும் நாம் கவனிப்பதில்லை. அதேபோல், நம் இருதயங்களும் மனங்களும் பிற விஷயங்களில் மூழ்கியிருக்கும்போது, ஆவிக்குரிய உலகில் தேவனுடைய சத்தத்தை நாம் எளிதில் தவறவிடுகிறோம்.
கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார். மத்தேயு 13:9
மத்தேயு 11:15 இல் கூறியதையே இயேசு மீண்டும் இங்கே கூறுகிறார். இதன் மூலம் தேவனுடைய சத்தத்தைக் கேட்பது என்றால் வெறும் காதுகளால் கேட்பது மட்டுமல்ல, இருதயத்தால் உணர்வது என்று அவர் நினைவூட்டுகிறார். பலர் வாழ்க்கையில் கண்டும் உணராமல், கேட்டும் புரிந்துகொள்ளாமல் நடந்து செல்கிறார்கள், ஏனெனில் அவர்களின் இருதயங்கள் உலகத்தின் கவலைகளாலும் ஆசைகளாலும் கடினமாகி விட்டன.
பரலோகமும் அதன் ரகசியங்களும்
சீஷர்கள் ஒருமுறை இயேசுவிடம் இவ்வாறு கேட்டார்கள்:
அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். மத்தேயு 13:10
அதற்கு இயேசுவின் பதில்:
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. மத்தேயு 13:11
உவமைகள் என்பது எளிய கதைகள் தான், ஆனால் அவற்றில் ஆவிக்குரிய சத்தியங்கள் - தேவனுடைய ராஜ்யத்தின் பொக்கிஷங்கள் மறைந்துள்ளன. சாதாரணமாகப் பார்ப்பவர்களால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாது; அதற்கு ஆவிக்குரிய உணர்திறன் தேவை. இயேசு தொடர்ந்து கூறுகிறார்:
உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். மத்தேயு 13:12
தேவனின் சத்தத்தைக் கேட்க வாஞ்சிப்பவர்கள் மேலும் அதிகமான புரிதலால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் உலகப்பிரகாரமான காரியங்களில் திருப்தி அடைபவர்கள் தமக்குள்ள சிறிதளவு ஆவிக்குரியப் புரிதலையும் இழக்கும் ஆபத்தில் இருக்கிறார்கள்.
தேவன் நம்மிடம் எவ்வாறு பேசுகிறார்?
1. தம்முடைய வார்த்தையின் மூலம் - தேவன் நம்மிடம் பேசுவதற்கான முதன்மையான வழி அவருடைய வேத வசனம் தான். இது சாதாரணமாகப் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் அல்ல; அது ஜீவனுள்ளதாகவும் வல்லமை வாய்ந்ததாகவும் இருக்கிறது. அவர் வேதவசனங்களின் மூலம் பேசும்போது, நம் இருதயங்களில் அவருடைய ஆறுதலையும், நமக்குள் அவருடைய சமாதானத்தையும் அனுபவிக்கிறோம். அவரது மென்மையான கண்டிப்பு நம்மை வழிநடத்துகிறது. அவருடைய வார்த்தையே நமது ஞானத்திற்கும், வழிகாட்டுதலுக்கும், ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் உண்மையான ஆதாரமாகும்.
வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 2 தீமோத்தேயு 3:16-17
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
2. பரிசுத்த ஆவியானவரின் மூலம் - இயேசு பரத்திற்கு ஏறிச் சென்றபோது, நம்மோடு இருப்பதற்காக பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதாக அவர் வாக்களித்தார். அவர் நமது ஆதரவாளராகவும், துணையாளராகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கற்பிக்கிறார், தேவனின் சத்தியத்தை நினைவூட்டுகிறார். நாம் வழிதவறும்போது நம்மை கண்டித்து உணர்த்தி, சரியான பாதையில் நம்மை வழிநடத்துகிறார். தேவனின் பரிசுத்த ஆவி என்ற இந்த விலைமதிப்பற்ற வரம் இரட்சிக்கப்பட்டு அவரோடு நடக்கும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். யோவான் 16:13
மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14
நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். 1 கொரிந்தியர் 2:10-11
3. ஜெபத்தின் மூலம் - ஜெபம் என்பது நமது தேவைகளை முன்வைப்பதற்கான நேரம் மட்டுமல்ல - அது நமது பிதாவுடனான ஒரு இருதயப்பூர்வமான உரையாடல். ஜெபத்தின் மூலம், நாம் அவருக்கான நமது அன்பையும், ஸ்தோத்திரத்தையும், ஆராதனையையும் வெளிப்படுத்துகிறோம். நாம் நெருங்கி வரும்போது, அவர் நம் இருதயங்களை ஆறுதல்படுத்துகிறார், நம் எண்ணங்களுக்கு தெளிவை அளிக்கிறார், மேலும் தமது சமாதானத்தினாலும் ஞானத்தினாலும் நம்மை வழிநடத்துகிறார். நாம் அவரை உண்மையாகத் தேடும்போது, அவர் உண்மையுடன் பதிலளிக்கிறார்.
என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். எரேமியா 33:3
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். சங்கீதம் 50:15
4. தேவ ஜனங்கள் மூலம் - சில நேரங்களில் நாம் தேவனின் சத்தத்தை தெளிவாகக் கேட்க முடியாமல் இருக்கலாம். அத்தகைய வேளைகளில், தேவன் தமது தேவபக்தியுள்ள மக்களைப் பயன்படுத்தி நம்மை வழிநடத்தவும், திருத்தவும், ஊக்குவிக்கவும் செய்கிறார். இளம் சாமுவேலை நினைத்துப் பாருங்கள் - அவர் ஆசாரியனான ஏலியின் ஆலோசனையின் மூலம் தேவ சத்தத்தை அடையாளம் காணக் கற்றுக்கொண்டார். சாமுவேலை வழிநடத்திய அதே தேவன் இன்று நம் வாழ்க்கையிலும் செயல்படுகிறார். நம்மைச் சுற்றி சரியான மக்களை வைத்து நமது சூழ்நிலைகளில் தம்முடைய ஞானத்தைப் பேச வைக்கிறார்.
ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும். நீதிமொழிகள் 11:14
சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான்; கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை. கர்த்தர் மறுபடியும் மூன்றாம் விசை: சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது கர்த்தர் பிள்ளையாண்டானைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து, சாமுவேலை நோக்கி: நீ போய்ப்படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல் போய், தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான். 1 சாமுவேல் 3:7-9
5. சூழ்நிலைகளின் மூலம் - பல நேரங்களில், தேவன் நம்முடைய சூழ்நிலைகளின் மூலம் நம்மிடம் பேசுகிறார். நாம் அவருடைய சித்தத்தைத் தேடும்போது, சில கதவுகளைத் திறந்து சிலவற்றை மூடி நம்மை வழிநடத்துகிறார். அப்போஸ்தலர் பவுலின் ஊழியம் இதற்கு வல்லமையான உதாரணம் ஆகும் - தேவன் அவரை ஆசியாவிற்குச் செல்வதிலிருந்து தடுத்து, அதற்குப் பதிலாக அவரை மக்கெதோனியாவுக்கு வழிநடத்தினார். அந்த தெய்வீக திசைதிருப்பல் புதிய பகுதிகளில் சுவிசேஷம் பரவுவதற்கு வழிவகுத்தது. தமது நோக்கத்திற்கேற்ப நமது பாதையை நிர்ணயிக்க சில கதவுகளைத் திறந்து, சிலவற்றை மூடுவதன் மூலம் இன்றும் தேவன் தமது பிள்ளைகளை இப்படித்தான் வழிநடத்துகிறார்.
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். வெளிப்படுத்தின விசேஷம் 3:8
மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார். அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்யவேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது. அப்போஸ்தலர் 16:7,9
6. தரிசனங்கள், சொப்பனங்கள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் மூலம் - தேவன் ஒவ்வொருவருடனும் எவ்வாறு பேசுகிறார் என்பதைத் தமது இறையாண்மையின்படி தேர்வு செய்கிறார். சில சமயங்களில், தரிசனங்கள், சொப்பனங்கள் அல்லது தீர்க்கதரிசன வெளிப்பாடுகள் மூலம் அவரது தெய்வீக நோக்கத்திற்கு ஏற்ப பேசுகிறார். தானியேலின் வாழ்க்கை இதற்கான வலுவான உதாரணமாகும். இத்தகைய வரங்கள் ஒருபோதும் தனிப்பட்ட மகிமைக்காக அல்லாமல் மாறாக, தேவனின் பணியை நிறைவேற்றவும் அவரது திட்டங்களை வெளிப்படுத்தவும் உள்ளன. கடைசி நாட்களில், தேவன் தமது ஆவியை ஊற்றி, வாலிபர் உட்பட பலரை எழுப்பி அவரது செய்தியை தைரியமாகப் பேச செய்வார் என்று வேதம் நமக்கு உறுதியளிக்கிறது (யோவேல் 2:28–29).
கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; அப்போஸ்தலர் 2:17
அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன். எண்ணாகமம் 12:6
ஏன் பலரால் கேட்கவோ காணவோ முடியவில்லை?
இயேசு விளக்குகிறார்:
அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே. மத்தேயு 13:13-15
கொழுத்த இருதயம் - "... அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள்... "
ஆவியில் கடினமான இருதயம் தேவனின் சத்தியத்தைப் பார்ப்பதைத் தடுக்கிறது. அழுத்தம் அல்லது உராய்வு காரணமாக காலப்போக்கில் உடல் ரீதியான கடினத்தன்மை உண்டாவது போல, பாவம் மற்றும் உலக ஆசைகளுக்கு மீண்டும் மீண்டும் கவரப்படுவதன் மூலம் இருதயம் கடினமடைகிறது.
பவுல் ரோமர் 1 ஆம் அதிகாரத்தில், நம் இருதயங்கள் எவ்வாறு கடினமாகி வருகின்றன என்பதன் ஆவிக்குரிய செயல்முறையை படிப்படியாகத் தருகிறார்.
தேவனுக்கு நன்றி செலுத்தாமல் இருப்பது - அவரை மகிமைப்படுத்தத் தவறுவது இருதயத்தை இருளாக்குகிறது. அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. ரோமர் 1:21
சுய ஞானத்தை நம்பியிருப்பது - பெரும்பாலும் சுய ஞானத்தை நம்பியிருந்து தேவ ஞானத்தைப் புறக்கணிப்பது முட்டாள்தனத்திற்கு வழிவகுக்கிறது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, ரோமர் 1:22
தேவனுக்குப் பதிலாக விக்கிரகங்களை முன்னிறுத்துவது - சிருஷ்டிகரை விட (தேவன்) சிருஷ்டிகளை (உலகப் பொருட்களை) முன்னுரிமைப்படுத்துவது. அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். ரோமர் 1:23
பாவ ஆசைகளை நியாயப்படுத்துவது - சுய இச்சைகளிலும் இன்பங்களிலும் ஈடுபடுதல் (ரோமர் 1:25-27).
சுயத்தால் ஆக்கிரமிக்கப்படுவது - கட்டுப்படுத்தப்படாத ஆசைகள் நம்மை அடிமையாக்குகின்றன (1 யோவான் 2:16). இது சுய ஆசைகள் / கண்கள் மற்றும் இருதயத்தின் பெருமை மனப்பான்மை மூலம் வருகிறது. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். 1 யோவான் 2:16
தேவனுடைய வார்த்தையைப் புறக்கணிப்பது - மனம் கெட்டு, சீரழிந்து போகிறது, அவர்கள் தேவனைப் புறக்கணித்து அவருக்குக் கீழ்ப்படியாமல் போகிறார்கள். தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். ரோமர் 1:28
உணர்திறனை இழப்பது - சொத்தையானது பல்லைக் கெடுப்பது போல, பாவம் ஆவிக்குரிய உணர்வை மந்தமாக்குகிறது (ரோமர் 1:29-32), ஆவிக்குரிய ரீதியாகக் கடினமாகவும் உணர்வில்லாதவர்களுமாக மாற்றி, கேட்கவோ காணவோ முடியாதபடி செய்கிறது. அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயக்கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து; உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். எபேசியர் 4:18-19
விளைவு: பலர் காண்கிறார்கள், ஆனால் உணர முடியவில்லை; கேட்கிறார்கள், ஆனால் புரிந்து கொள்ள முடியவில்லை; மேலும் ஆவிக்குரிய ரீதியிலே தேவனிடம் இருந்து பிரிந்திருக்கிறார்கள்.
ஆவியில் கேட்பதன் காண்பதன் ஆசீர்வாதம்
தேவனுடைய வார்த்தையைக் கேட்பதும் காண்பதும் மிகப்பெரிய ஆசீர்வாதமாகும் என்று இயேசு நமக்கு நினைவூட்டுகிறார். உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். மத்தேயு 13:16
பழைய ஏற்பாட்டு நாட்களில், தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் தேவனிடமிருந்து நேரடியாகக் கேட்கும் ஆசீர்வாதத்திற்காக ஏங்கினர். பெரும்பாலும் தேவனுடைய வழிகாட்டுதலைத் தெரிந்து கொள்ள பிற தீர்க்கதரிசிகளை நம்பியிருந்தனர். இயேசு இதை மத்தேயு 13:17 இல் குறிப்பிடுகிறார். அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 13:17
தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் இன்று நாம் காணவும் கேட்கவும் கூடியதை அனுபவிக்க விரும்பினர். இது தேவனுடைய கிருபை - அதிர்ஷடத்தினாலோ மனுஷரின் கிரியைகளினாலோ அல்ல. அவருடைய உண்மைகளையும் பொக்கிஷங்களையும் உணர முடிவது அவருடைய ஈவு. கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; எபேசியர் 2:8-9
ஆனால் இந்த ஆசீர்வாதத்திற்கு மனத்தாழ்மையும் ஒப்புக்கொடுத்தலும் தேவை. ஆவியில் கேட்பதும் காண்பதும் நிலைத்திருக்க, இது தினமும் செய்யப்பட வேண்டிய நடைமுறை (தேவனின் தேவை நமக்கு இருக்கும் போது மட்டும் செய்யும் செயலல்ல).
தினமும் சுயத்தை சிலுவையில் அறைதல் - உலகமும் அதன் இன்பங்களும் அடிக்கடி நம் வாழ்வின் மையமாக மாறி, சுய விருப்பங்களில் ஈடுபட நம்மை இழுக்கின்றன. கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்புவோர், இந்த சுய தேவைகளை சிலுவையில் அறைய வேண்டும். உதாரணமாக, நாம் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுகிறோமெனில், அதை தேவனிடம் ஒப்படைத்து, "ஆண்டவரே, என் பலவீனத்தை உமக்கு முன்பாக வைக்கிறேன்" என்று கூறி, அந்த ஆசையையும், பதிவுகள் மற்றும் ரீல்ஸ் பார்க்கும் கவனச்சிதறலையும் சிலுவையில் வைக்கலாம். பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். லூக்கா 9:23
ஆவியில் உணர்வுள்ளவர்களாக இருங்கள் - பாவம் மற்றும் கவனச்சிதறல்களால் ஏற்படும் ஆவிக்குரிய மந்தநிலையைத் தடுக்க, உங்கள் வாழ்க்கையை ஆராய உதவுமாறு தேவனிடம் கேளுங்கள். உங்கள் உள்ளத்தின் மறைவான பகுதிகள் பற்றியும் குடும்பத்தினர், நண்பர்கள், அண்டைவீட்டார் மற்றும் பிறருடனான உங்கள் உறவுகளைப் பற்றியும் சிந்தியுங்கள். மாற்ற வேண்டிய நட்புகள் உட்பட, மாற்றப்பட வேண்டிய விஷயங்களை அவர் வெளிப்படுத்துவார். தேவனின் வழிகாட்டுதலைத் தேடி அதன்படி செயல்படுவதில் தாவீதின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும். சங்கீதம் 139:23-24
தேவபக்தியையும் பரிசுத்தத்தையும் தேடுங்கள் - தேவபக்தி இருக்கும் இடத்தில், தேவனுடைய கிரியைகள் நிறைவேறுகின்றன, அவருடைய சித்தமும் நிறைவேறுகிறது. தேவபக்தி இல்லாமல், ஆவிக்குரிய வளர்ச்சி சாத்தியமற்றது (2 பேதுரு 1:5-9). பரிசுத்தம் என்பது தேவனின் முக்கியமான இயல்பு - தூய்மையானது, குற்றமற்றது மற்றும் பரிபூரணமானது. நாம் சுயமாக உண்மையான பரிசுத்தத்தை அடைய முடியாது; அவருடைய கிரியையின் மூலம் மட்டுமே நாம் பரிசுத்தமாக்கப்படுகிறோம். நாம் அவரைப் போல ஆக வேண்டும் என்பதே அவரது சித்தமாயிருக்கிறது. மேலும் அவர் நம்மைப் பரிசுத்தப்படுத்தத் தயாராக இருக்கிறார். நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, 1 தெசலோனிக்கேயர் 4:3
தேவனின் கிருபையைச் சார்ந்திருங்கள் - அவருடைய இரக்கத்தால் மட்டுமே நமது இருதயங்கள் மென்மையாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியவையாகவும் இருக்க முடியும். உலகில் வேறு யாருக்கும் இல்லாதபடி அவர் நம்மீது தமது கிருபையை பெருகப்பண்ணி, அவருடைய மீட்பின் வல்லமையால் நம்மை ரட்சிக்கிறார். அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார். எபேசியர் 1:7-8.
தேவனுக்கு முன்பாகத் தாழ்மையுடன் இருங்கள் - நீங்கள் ஜெபத்தில் தேவனிடம் வரும்போது, உங்களைத் தாழ்த்தி, ஆவிக்குரிய பெருமையின் எந்தத் தடயத்தையும் நீக்கும்படி அவரிடம் கேளுங்கள். மிகச்சிறிய அளவிலான பெருமை கூட உங்கள் பார்க்கும் கேட்கும் திறனைத் தடுக்கலாம், அது தேவனின் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறுவதிலிருந்து நம்மைத் தடுக்கலாம். பிலிப்பியர் 2:5-8 இல் பவுல் கூறுவதைப் பின்பற்றுங்கள், கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி,அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
சுருக்கம்: கிருபையில் நடந்து, இன்றே தேவனின் சத்தத்தைக் கேளுங்கள்
ஆவிக்குரிய ரீதியாகக் காணவும் கேட்கவும் முடிவது ஒரு தெய்வீக பாக்கியம். அது சம்பாதிக்கப்படவில்லை, அவருடைய கிருபையால் வழங்கப்படுகிறது. இருப்பினும், அதற்கு தொடர்ச்சியான ஒப்புக்கொடுத்தல், மனத்தாழ்மை மற்றும் உலகப்பிரகாரமான கவனச்சிதறல்களுக்கு எதிரான விழிப்புணர்வு தேவை.
நாம் கிறிஸ்துவுடன் நடக்கும்போது:
நம் இருதயங்களை மென்மையாகவும் உணர்வுள்ளதாகவும் வைத்திருப்போம்.
சுயத்தை தினமும் சிலுவையில் அறைவோம்.
இன்று தேவன் பேசுவதைக் கேட்கவும் காணவும் அனுமதிக்கும் கிருபையைப் போற்றுவோம்.
இவ்வாறு செய்வதன் மூலம், அவருடைய ராஜ்யத்தின் முழுமையையும் அவருடைய வேதத்தில் மறைந்திருக்கும் பொக்கிஷங்களையும் தீர்க்கதரிசிகளும் கூட காண விரும்பிய ஆசீர்வாதங்களையும் நாம் அனுபவிக்கலாம்.



Comments