உயர்த்தப்பட்ட கரங்களின் வல்லமை
- Kirupakaran
- 2 days ago
- 7 min read

ஒரு யுத்தத்தில் யாராவது தங்கள் கைகளை உயர்த்தினால் அதன் அர்த்தம் என்ன என்பதை எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? அது சரணடைவதற்கான ஒரு அடையாளம் - "எனக்கு உதவி தேவை. எனக்கு பாதுகாப்பு வேண்டும்" என்று சொல்லும் ஒரு வழி அது.
அதேபோல், ஜெபத்தை மக்கள் பல்வேறு முறைகளில் வெளிப்படுத்துகிறார்கள்: சிலர் முழங்காலில் இருந்து ஜெபிக்கிறார்கள் சிலர் கைகளை உயர்த்தி ஜெபிக்கிறார்கள், சிலர் தேவனுக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து ஜெபிக்கிறார்கள். ஆனால் அவரிடத்தில் நம்முடைய கைகளை உயர்த்துவதில் ஒரு தனித்துவமான வல்லமை இருக்கிறது.
இதை வேதாகமம் மோசேயின் கதையின் மூலம் தெளிவாகக் காட்டுகிறது (யாத்திராகமம் 17:11–12). மோசேயின் கைகள் உயர்த்தப்பட்டிருந்தபோது, யுத்தத்தில் தேவனுடைய வல்லமை அவருடைய ஜனங்களுக்காக செயல்பட்டது. அவரது கைகள் தாழ்ந்தபோது, எதிரி பலமடைந்தான். இதைக் கண்ட அவரது துணையாளர்கள் வெற்றி தடைபடாமல் இருக்க அவரது கைகளைத் தாங்கிப் பிடித்தனர்.
கைகளை உயர்த்துவது ஒரு உடல் பாவனை மட்டும் அல்ல - அது நமது பலவீனத்திற்குள் தேவன் தமது வல்லமையைக் கொண்டு வரும்படி வேண்டிக் கொள்ளும் ஒரு வழியாகும். மோசே தனது கைகளை உயர்த்தியபோது தேவனின் உதவியை அனுபவித்ததைப் போல, யாக்கோபின் வாழ்க்கையிலும் மற்றொரு உதாரணத்தைக் காண்கிறோம். எவ்வாறு சர்வவல்லமையுள்ள தேவனை அணுகி உதவியைப் பெற வேண்டும் என்பதை அவருடைய வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
யாக்கோபின் கதை – அறிமுகம்
ஆதியாகமம் 29–32 இன் சுருக்கம் - யாக்கோபின் வாழ்க்கை போராட்டங்களாலும், தவறுகளாலும், எதிர்பாராத ஆசீர்வாதங்களாலும் நிறைந்ததாகக் காணப்படுகிறது..
யாக்கோபு தன் சகோதரன் ஏசாவை ஏமாற்றியதால், வீட்டை விட்டு ஓடிப்போக வேண்டிய நிலை ஏற்பட்டது. தூர தேசத்தில், அவன் தன் மாமா லாபானிடம் வேலை செய்தான். ஆனால் அந்த மனிதனும் அவனை ஏமாற்றினான். யாக்கோபு லேயாளையும் ராகேலையும் மணந்து, ஒரு பெரிய குடும்பத்தை உருவாக்கி, செல்வந்தனானான். ஆனால் இறுதியில், அவனுக்கும் லாபானுக்கும் இடையே பதற்றமும் மோதலும் அதிகரித்தது.
பின்னர் தேவன் யாக்கோபை வீட்டிற்குத் திரும்பிச் செல்லும்படி கூறினார். ஆனால் இது யாக்கோபுக்கு பயத்தை உண்டாக்கியது. ஏனெனில் அவர் தன் சகோதரன் ஏசாவை ஏமாற்றி, ஈசாக்கின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்தார். ஏசா தன்னை மன்னிப்பாரா அல்லது எதிர்த்து நிற்பாரா என்று யாக்கோபுக்குத் தெரியவில்லை.
யாக்கோபின் நிலை – எளிமையாகப் பார்ப்போம்
ஒரு புறம்: கடந்த காலத்தில் அவர் செய்த தவறுகளும் பாவங்களும், ஏசாவின் மூலம் இப்போது அவரை நோக்கி வந்துகொண்டிருந்தன.
மற்றொரு புறம்: அவருடைய மாமாவாகிய லாபான் கோபத்துடனும் குற்றச்சாட்டுகளுடனும் அவரைத் துரத்தி வந்து கொண்டிருந்தார்.
இன்னொரு புறம்: தனது முழுக் குடும்பத்தையும், சொத்துக்களையும் பாதுகாப்பாக நகர்த்த வேண்டிய பெரிய பொறுப்பு அவர் மேல் இருந்தது.
ஏசாவை சந்திக்கும்முன் அந்த இரவு, யாக்கோபு மிகுந்த பயத்தில் இருந்தார். பழிவாங்கப்படுவோம் என்று அஞ்சினார். ஆகவே அவர் தீவிரமாக ஜெபித்து, உதவிக்காக தேவனைப் பற்றிக்கொண்டார்.
யாக்கோபைப் போலவே, நாமும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறோம்
யாக்கோபைப் போலவே, பல திசைகளில் இழுக்கப்படுவது எப்படி இருக்கும் என்பது நம்மில் பலருக்குத் தெரியும்.
சில நேரங்களில் நாமே வருந்தும்படியான முடிவுகளை எடுக்கிறோம் - அவை நம்மை தேவனின் பாதையிலிருந்து விலக்கி, நம் மனதில் வருத்தத்தை ஏற்படுத்துகின்றன.
பில்கள், கடன்கள் மற்றும் பொருளாதாரப் பொறுப்புகள் நம்மை அழுத்தி சுவாசிக்க முடியாத நிலையைப் போன்று உணர்கிறோம். யாரிடமாவது உதவி கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறோம்.
வேலை மற்றும் வியாபார அழுத்தங்கள் நம்மை சோர்வடையச் செய்கின்றன. அதிலும் குறிப்பாக காலக்கெடுவை சந்திக்க முயற்சிக்கும் போது, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கும்போது அல்லது தினசரி சவால்களை சமாளித்து வாழ முயற்சிக்கும் போது சோர்வுகள் உண்டாகின்றன.
நமது சரீர நோய்கள் அல்லது குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள் நம்மை ஆழமாக அசைக்கின்றன. அவை நம்மை சோர்விலும் கவலையிலும் ஆழ்த்தி, மீண்டும் எழுந்து நாம் செய்ய வேண்டியவற்றை செய்யும் சக்தியே இல்லாத நிலை உருவாகிறது.
சில நாட்களில் எல்லாமே ஒரே நேரத்தில் நடப்பது போலத் தோன்றும் - எல்லாத் திசைகளிலிருந்தும் அழுத்தம், வெளியேறும் வழி எதுவும் தெரியாத நிலை.
நாம் ஒரு படி முன்னே செல்ல முயற்சித்தால், மூன்று நான்கு திசைகளிலிருந்தும் இழுத்து கீழே அழுத்தப்படுகிறோம்.
இந்த தருணங்களில் நாம் தனியாக இல்லை என்பதை யாக்கோபின் கதை நமக்கு நினைவூட்டுகிறது. நமது போராட்டங்களின் நடுவே தேவன் நம்மைச் சந்திக்கிறார்.
இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான். அவர்களையும் சேர்த்து, ஆற்றைக் கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான். யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி,அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று. அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான். அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான். அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார். அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார். அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான். ஆதியாகமம் 32:22–30
தேவனிடமிருந்து பதிலைப் பெறுவதற்காக யாக்கோபு தனது ஜெபத்தில் செய்த நான்கு காரியங்கள்
அவர் இரவில் எழுந்து ஜெபித்தார் - "இராத்திரியில் எழுந்திருந்து…” ஆதியாகமம் 32:22 - அவர் மறுநாள் வரை காத்திருக்கவில்லை, உடனடியாக செயல்பட்டார்.
அவர் தனது குடும்பத்தினரிடமிருந்தும் உடைமைகளிலிருந்தும் தன்னைப் பிரித்துக் கொண்டார் - “யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்;..." ஆதியாகமம் 32:24 - கவனச்சிதறல்கள் இல்லாமல் தேவனுடன் அமைதியான நேரம் அவருக்குத் தேவைப்பட்டது.
அவர் இரவு முதல் காலை வரை தேவனுடன் ஜெபித்துப் போராடினார் - "... அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி" ஆதியாகமம் 32:24(b) - அவர் விட்டுவிடவில்லை; பொழுது விடியுமளவும் அவர் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தார்.
தேவன் அவரை ஆசீர்வதிக்கும் வரை அவர் விடவேயில்லை. "... அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்". ஆதியாகமம் 32:26 - யாக்கோபு உறுதியுடனும் தீர்மானத்துடனும் தேவனைப் பிடித்துக் கொண்டார்.
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
பெரும்பாலும் நம் ஜெபங்கள் சுருக்கமாக இருக்கின்றன. நமக்காக ஜெபிக்க மற்றவர்களை சார்ந்து இருக்கிறோம். ஆனால் தேவன் இரக்கமுள்ளவர், நாம் அவரிடம் கேட்க வேண்டும், அவரைத் தேட வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். நாம் அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாலும், அவர் நமக்கு உதவ வானத்தையே அசைக்கிறார்.
அப்படியானால், உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்:
நான் யாக்கோபைப் போல எத்தனை முறை ஜெபித்திருக்கிறேன்?
நான் இரவில் ஜெபித்திருக்கிறேனா?
நான் தனியாக ஜெபித்திருக்கிறேனா?
என்னுடைய முன்னேற்றத்திற்காக ஜெபத்தில் கடுமையாக போராடியிருக்கிறேனா?
தேவனைப் பற்றிக்கொண்டு அவருடைய ஆசீர்வாதத்தையும் விடுதலையையும் தைரியமாக வேண்டியிருக்கிறேனா?
யாக்கோபின் உதாரணம், தேவனைப் பற்றிக் கொண்டு விடாமுயற்சியுடனும் ஆவலுடனும் ஜெபிக்க நம்மை அழைக்கிறது.
நாம் யாக்கோபைப் போல ஜெபிக்கும்போது என்ன நடக்கிறது?
1. பெத்தேல் அனுபவம்
யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி, ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான். அங்கே அவன் ஒரு சொப்பனங்கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். ஆதியாகமம் 28:10–12
ஆதியாகமம் 28:10–12 வசனங்கள் யாக்கோபு இரவில் ஓய்வெடுக்க நின்றபோது ஒரு கனவு கண்டதை நமக்குச் சொல்கிறது. அந்தக் கனவில், பூமியிலிருந்து வானத்தை எட்டியிருந்த ஒரு ஏணியையும், அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்ததையும் கண்டார். பின்னர் யாக்கோபு அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டார்; அதற்கு தேவனுடைய வீடு என்று பொருள்.
பெத்தேல் அனுபவம் என்றால் என்ன?
பெத்தேல் பின்வருவனவற்றைக் குறிக்கிறது:
வானம் பூமியைத் தொடும் இடம்.
தேவதூதர்கள் நகரும் இடம் (தேவதூதர் ஏறி இறங்குகிற ஏணி இருக்கும் இடம்)
தேவனின் பிரசன்னம் உணரப்படும் இடம் (பெத்தேல் என்றால் தேவனுடைய வீடு என்று பொருள்).
யாக்கோபு வாழ்க்கையில் முன்னதாகவே பெத்தேல் அனுபவத்தைச் சந்தித்தார். பின்னர், ஆழமான பயமும் பிரச்சினையும் நிறைந்த காலத்தில், இரவில் மீண்டும் ஜெபித்தார். இந்த முறை, தேவன் அவரை ஒரு புதிய வழியில் சந்தித்து, யாக்கோபை பெத்தேல் அனுபவத்திலிருந்து இன்னும் ஆழமான பெனியேல் அனுபவத்திற்குக் கொண்டு சென்றார். அங்கு யாக்கோபு தேவனுடன் போராடி ஆசீர்வாதத்தைப் பெற்றார்.
இன்று நாம் பெத்தேலை எப்படி அனுபவிக்கிறோம்?
விசுவாசிகளாகிய நாம், யாக்கோபைப் போலவே தேவனின் பிரசன்னத்தை அனுபவிக்க முடியும். எப்படி என்று பார்க்கலாம்.
அவருடைய நாமங்களைக் கொண்டு அவரைத் துதித்தல் – அப்பா பிதாவே, எல் எலியோன், எல்ரோயி, யேகோவாயீரே, யேகோவா ரப்பா, யேகோவா ஷாலோம், இம்மானுவேல், எபினேசர், எல்ஷடாய் போன்ற தேவனுடைய நாமங்களைப் பயன்படுத்தி அவரைத் துதிக்கும் போது, அவருடைய பிரசன்னத்திற்கு நமது இருதயம் திறக்கப்படுகிறது. (இன்னும் மேலான நாமங்களின் பட்டியலுக்கு இதைப் பயன்படுத்தலாம்: 1000 Praises – https://1000praises.weebly.com)
மீண்டும் மீண்டும் துதியுங்கள் - துதித்தல் எதிரியின் சக்தியை பலவீனப்படுத்துகிறது. தேவனின் நாமம் உயர்த்தப்படும் இடத்தில் பிசாசு தங்க முடியாது.
துதி வானங்களைத் திறக்கிறது - நாம் துதிக்கும்போது, பரலோகம் பதிலளிக்கிறது. தேவதூதர்கள் யாக்கோபின் ஏணியில் நகர்ந்தது போல, தேவன் நம் சூழ்நிலைக்குள் நுழைகிறார்.
துதி நம்மை பரலோக வழிபாட்டுடன் இணைக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் 4:8–11 இல் சொல்லப்பட்டுள்ளது போல், ஆராதனை பரலோகத்தில் ஒருபோதும் நிறுத்தப்படுவதில்லை. துதிக்கும்போது, நாம் அந்த பரலோக ஆராதனையில் பங்கேற்கிறோம், மேலும் தேவனின் பிரசன்னம் நம்மிடம் உண்மையாக உணரப்படுகிறது.
துதி சுத்திகரித்து மீட்கிறது - துதி நம் இருதயங்களைச் சுத்திகரித்து, தேவனின் வெளிச்சத்திற்குள் நம்மைக் கொண்டுவருகிறது.
துதி தேவனை செயல்பட அழைக்கிறது - யாக்கோபு பெத்தேலில் தேவனை சந்தித்தது போல துதி தேவன் நம்முடைய சூழ்நிலைக்குள் வர ஒரு கதவைத் திறப்பது போன்றது.
துதி ஆவிக்குரிய தடைகளை உடைக்கிறது - நாம் ஆவியில் துதிக்கும்போது (வெளிப்படுத்தின விசேஷம் 4:2), தடைகள் விழுகின்றன, தேவ பிரசன்னம் நம் இருதயங்களை நிரப்புகிறது.
யாக்கோபு தேவனை சந்தித்தார்; நாமோ பரிசுத்த ஆவியைப் பெறுகிறோம் - ஆதியாகமம் 32:24 இல் யாக்கோபு "ஒரு மனிதனுடன்" போராடினார் (பின்னர் அவர் தேவன் என்று அறிந்து கொண்டார்). ஆனால் நமக்கு இன்னும் மேன்மையான ஒன்று உண்டு - நம்மோடு என்றென்றும் இருப்பதாக வாக்குப்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவர் (யோவான் 14:16).
இந்த அனுபவம் தற்காலிகமானது அல்ல - தேவனின் பிரசன்னம் ஒரு முறை மட்டுமே அனுபவிக்கப்படும் ஒன்றல்ல. அவர் எப்போதும் நம்முடன் இருப்பதாக உறுதியளிக்கிறார்.
எந்த சூழ்நிலையாயினும், https://1000praises.weebly.com என்ற இணைப்பில் உள்ள 1000 ஸ்தோத்திரங்கள் பட்டியலில் இருந்து எடுத்துக்கொண்டு, குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் தேவனை ஸ்தோத்திரியுங்கள். அப்போது தேவன் உங்களுக்கு அளிக்கும் விடுதலைக்கரத்தை காண்பீர்கள்.
2. ஜெபத்தில் போராட்டம்
நாம் ஜெபிக்கும் போது, ஒரே நேரத்தில் இரண்டு போராட்டங்கள் நடக்கின்றன:
எதிரியுடன் போராடுதல்
உள்ளத்துடன் போராடுதல் – இது சில சமயங்களில் சத்துரு வெற்றிபெற அனுமதிக்கிறது.
பலமுறை, தேவன் ஏற்கனவே நமக்காக போராடியுள்ளார். ஆனால், நம்முடைய இருதயம், மனம் அல்லது பழக்கவழக்கங்கள் தேவன் திறக்க நினைக்கும் விடுதலைக் கதவைத் திறப்பதற்கு தடையாக இருந்தால், முன்னேற்றத்திற்கான கதவு மூடப்பட்டே இருக்கும். இதனால், போராட்டம் இருபக்கமாக உள்ளது, அதற்காக நம்முடைய இரு கைகளும் ஜெபத்தில் உயர்த்தப்படவேண்டும்.
எதிரி இரண்டு வழிகளில் செயல்படுகிறான்
உள்புறமாக:
நமது பலவீனமான சரீரம் - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். மத்தேயு 26:41
நமது தீர்மானம் பலவீனமாகும்போது, சோர்வடையும் அல்லது கைவிடும் நமது போக்கு - சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார். லூக்கா 18:1
நமது அறியாமை அல்லது புரிதல் இல்லாமை - அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ரோமர் 8:26.
வெளிப்புறமாக:
ஆவிக்குரிய வல்லமை மற்றும் தீய சக்திகள் (தானியேல் 10:12-14 / எபேசியர் 6:12-13)
நம்முடைய ஜெபத்திற்கான ஆதரவு இருவழியாக உள்ளது
பரிசுத்த ஆவியானவர் நமது உள்ளானப் போராட்டங்களைப் போராடி, பிதாவிடத்தில் நமக்காகப் பரிந்து பேசுகிறார் - அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார். ரோமர் 8:26-27
சிலுவையில் ஜெயம் கொண்ட இயேசு கிறிஸ்து நமக்காக வெளிப்புற சக்திகளுடன் போராடுகிறார் - ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. ரோமர் 8:34
இது அமலேக்கியர்களுக்கான யுத்தத்தில் அழகாக விளக்கப்பட்டுள்ளது (யாத்திராகமம் 17:11-12). அங்கு மோசேயின் உயர்த்தப்பட்ட கரங்கள் மூலம் தேவனின் வல்லமை செயல்பட்டது.
நமது தேவன் யேகோவா நிசி, தம் ஜனங்களுக்காகத் தலைமுறை தலைமுறையாகப் போராடுகிற தேவன் (யாத்திராகமம் 17:15-16). அவருடைய வாக்குத்தத்தம் இன்று நமக்கும் மாறாமல் அப்படியே உள்ளது.
3. யாக்கோபு விடாமல் பற்றிக் கொண்டதால் ஆசீர்வதிக்கப்பட்டார்
அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான். ஆதியாகமம் 32:26
"நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்" என்று யாக்கோபு சொன்னபோதுதான் அவருக்கு ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.
நாம் தேவனிடம் முழுமையாக அர்ப்பணித்து, "பிதாவே, என்னை வழிநடத்தி என்னை ஆசீர்வதியும்" என்று கூறும்போது, தேவனை முகமுகமாய் சந்தித்து அவரது ஆசீர்வாதத்தைப் பெறுகின்ற ஒரு பெனியேல் அனுபவத்திற்குள் நுழைகிறோம்.
தேவன் நமக்காக யுத்தம் செய்து, தமது ஆசீர்வாதங்களுக்கான கதவைத் திறந்து வைக்கிறார்.
நீங்கள் அறிவீர்களா? தேவன் தம்முடைய பிள்ளைகளை ஆசீர்வதிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். அவர் நமக்குச் சிறந்தவற்றை அருள விரும்புகிறார். மேலும் அவருடைய படைப்புகளே அவருடைய பரிவையும் தாராள மனப்பான்மையையும் வெளிப்படுத்தும் அழகான எடுத்துக்காட்டாக இருக்கின்றன.
ஒரு தகப்பன் தனது பிள்ளைகளுக்கு பரிசுகளைத் தருவது போல, அவர் நம் ஜெபங்களுக்கு வெகுமதி அளிக்க ஏங்குகிறார்.
வேதாகம உதாரணம்
யோசுவா எமோரியர்களுடனான யுத்தத்தின் போது தேவனை நோக்கி ஜெபித்தார், அவருடைய ஜெபத்திற்கு தேவன் பதிலளித்தார் - கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார். யோசுவா 10:8
எமோரியர்களுக்கு எதிரான யுத்தத்தில் யோசுவாவிற்கு அளித்த வாக்குறுதியின் பிரதிபலிப்பாக, தேவன் சூரியனை நிறுத்தி, இஸ்ரவேலுக்கு ஜெயம் அளித்தார். கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்து நில்லுங்கள் என்றான். அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும்மட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல் முழுதும் நடுவானத்தில் நின்றது. இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்த நாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம் பண்ணினார். யோசுவா 10:12-14
தேவன் அவர்களுக்காக யுத்தம் பண்ணினார், அவர்களுக்கு அதிசயமான சக்தியை அளித்து ஜெயம் பெறும்படி ஆசீர்வதித்தார்.
நாமும் போராடும் போது தேவனிடமிருந்து இந்த வாக்குறுதியைப் பெறுகிறோம். பாடுகளின் போது அவர் நம்முடன் இருப்பார். நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது. ஏசாயா 43:2
ஜெபம் மாற்றத்தை உண்டாக்குகிறது (யாக்கோபு - இஸ்ரவேல் / பெத்தேல் - பெனியேல்)
யாக்கோபுக்கான மாற்றத்திற்கான ஆசீர்வாதம்
யாக்கோபு தேவனால் முழுமையாக மாற்றப்பட்டு இஸ்ரவேலாக மாறினார்.
அவர் தேவனை நேருக்கு நேர் சந்தித்தார், அதன் பிறகு அவரது வாழ்க்கை ஒருபோதும் முன்பு போல இருக்கவில்லை.
அவரது விசுவாசம் பலப்படுத்தப்பட்டது, மேலும் அவர் தேவனை முழுமையாக நம்பி தைரியமாக நடந்தார்.
அவரது சொந்தத் திட்டங்கள் தேவனின் திட்டங்களுக்கு வழிவகுத்தன. சுவாரஸ்யமாக, யாக்கோபு வழங்கிய அனைத்தையும் ஏசா எந்தவித எதிர்ப்புமில்லாமல் ஏற்றுக்கொண்டார். இது யாக்கோபு எதிர்பார்த்ததற்கு முற்றிலும் எதிராக இருந்தது.
சில நேரங்களில், தேவன் தமது ஆசீர்வாதங்களைத் தாமதப்படுத்துகிறார். இந்த தாமதங்கள் நாம் உண்மையிலேயே அவரை நம்புகிறோமா அல்லது வெறும் ஆசீர்வாதங்களைத் தேடுகிறோமா என்பதை சோதிக்கின்றன.
எந்த சூழ்நிலையிலும், நாம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும், முழுமையாக நம்பிக்கை வைத்து விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.
தாமதங்கள் நம்மை தேவனின் சரியான திட்டத்துடன் மீண்டும் ஒருங்கிணைக்கத் தீர்மானிக்கப்பட்டவை.
பெரும்பாலும், பதிலளிக்கப்படாத ஜெபம் போல் தோன்றுவது, நாம் கேட்டதற்கும் மேலானதை நமக்குக் கொடுப்பதற்கான தேவனின் வழியாகும்.
வேதம் சொல்லுகிறபடி, தாமதங்களிலும் போராட்டங்களிலும் கூட நம்மால் தேவனை ஸ்தோத்திரிக்க முடியும், எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 1 தெசலோனிக்கேயர் 5:16-18
எனவே உங்கள் கைகளை உயர்த்தி ஜெபிப்பதற்கு ஒரு தீர்மானம் செய்யுங்கள். இரவில், நீங்களும் அவரும் மட்டுமே இருக்கும் அந்த நேரங்களில் தேவனைத் தேடுங்கள். அவருடைய ஆசீர்வாதம் உங்கள் மீது தங்கும் வரை ஜெபத்தில் போராடி, அவருடைய சமுகத்தைத் தொடர்ந்து தேடுங்கள்.



E