தேவனின் நீதியான கோபம்:
- Kirupakaran
- Jun 1
- 6 min read

பெற்றோர்களாகிய நாம் நம் பிள்ளைகளிடம் ஆழமான அன்பை வெளிப்படுத்துகிறோம். ஆனால் அவர்கள் நமக்குக் கீழ்ப்படியாமல் போகும்போது கோபப்படுகிறோம். சில பெற்றோர், தங்கள் குழந்தைகளை மீண்டும் ஒழுங்கிற்கு கொண்டுவருவதற்கு அவர்களைக் கடிந்துகொண்டு திருத்துகிறார்கள். அதேபோல், நம் பரலோகப் பிதாவாகிய இயேசு கிறிஸ்துவும் நம்மை நேசிப்பதோடு மட்டுமல்லாமல், நாம் வழிதவறும்போது நீதியான கோபத்தையும் வெளிப்படுத்துகிறார்.
தேவனின் கோபம் குறிப்பாக இரண்டு விஷயங்களால் தூண்டப்படுகிறது:
மாய்மாலம் - நாம் பாவத்தில் வாழ்ந்து கொண்டே நீதிமான்களாக நடிக்கும்போது, அது அவரை துக்கப்படுத்தி கோபப்படுத்துகிறது.
மனந்திரும்பாத இருதயம் - நாம் நமது பாவங்களை விட்டு விலக மறுக்கும்போது, அவருடைய இருதயம் மிகவும் கலங்குகிறது.
மத்தேயு 23 இல், இயேசு உனக்கு ஐயோ என்று ஏழு முறைக்கு மேல் அறிவிக்கிறார். முதன்மையாக மதத்தலைவர்களின் மாய்மாலத்தைக் குறிப்பிடுகிறார். மாய்மாலம் என்பது அவர் முற்றிலும் வெறுக்கும் ஒன்று.
அவருடைய நீதியான கோபத்தின் மற்றொரு உதாரணம் மத்தேயு 11 ஆம் அதிகாரத்தில் காணப்படுகிறது. இந்தப் பகுதியில், அவருடைய கோபத்திற்குப் பின்னால் உள்ள காரணத்தையும், அவருடைய சித்தத்துடன் நம் இருதயங்களை சீரமைக்க நாம் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் ஆராய்வோம்.
அப்பொழுது, தமது பலத்தசெய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற்போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார். கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள். நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும். நியாயத்தீர்ப்புநாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத்தேயு 11:20-24
இயேசு தாம் ஊழியம் செய்த பட்டணங்களைக் கண்டிக்கத் தொடங்குவதை இங்கே வாசிக்கிறோம்.
கப்பர்நகூம் - இயேசு தமது ஊழியத்தை இங்கு அடிப்படையாகக் கொண்டிருந்தார் (மத்தேயு 4:13). பல அற்புதங்கள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன: நான்குக்கும் மேற்பட்ட அற்புதங்கள் நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரனை குணமாக்கியது (மத்தேயு 8:5–13)
பேதுருவின் மாமியைக் குணமாக்கியது (மத்தேயு 8:14–15)
மேற்கூரையின் வழியாக இறக்கிவிடப்பட்ட ஒரு திமிர்வாதக்காரனைக் குணமாக்கியது (மாற்கு 2:1–12)
ஜெப ஆலயத்தில் அசுத்த ஆவியை விரட்டியது (மாற்கு 1:21–28)
பெத்சாயிதா
இயேசு இங்கு ஒரு குருடனைக் குணமாக்கினார் (மாற்கு 8:22–26).
இது பேதுரு, அந்திரேயா மற்றும் பிலிப்பு ஆகியோரின் சொந்தப் பட்டணமும் கூட (யோவான் 1:44).
ஐயாயிரம் பேருக்கு போஜனங்கொடுத்த இடம் இதுவாக இருக்கலாம் (லூக்கா 9:10–17).
கோராசின்
இங்கு நிகழ்ந்த அற்புதங்கள் எதுவும் சுவிசேஷங்களில் குறிப்பிடப்படவில்லை, ஆனால் இயேசு இங்கே அற்புதங்களைச் செய்ததாகக் கூறுகிறார். ஏனெனில், வேதத்தில் நம் பார்வைக்கு மறைக்கப்பட்ட பல விஷயங்கள் உள்ளன.
மத்தேயு 11:20 இல், ஒரு தெளிவான தருணத்தைக் காண்கிறோம்.
அப்பொழுது, தமது பலத்தசெய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற்போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார். மத்தேயு 11:20
கப்பர்நகூம், பெத்சாயிதா, கோராசின் ஆகிய பட்டணங்களில் இயேசு எண்ணற்ற அற்புதங்களைச் செய்திருந்தாலும், ஜனங்கள் தங்கள் பாவ வழிகளை விட்டுத் திரும்ப மறுத்துவிட்டனர். அவருடைய பதில் நீதி நிறைந்த கோபமாகவும், ஆழ்ந்த துக்கமாகவும், மனந்திரும்பாமற்போன இருதயங்களுக்கு எதிரான நியாயமான தீர்ப்பாகவும் இருந்தது.
இது இன்றைய நம் வாழ்க்கையுடன் எப்படிப் பொருந்துகிறது?
நாம் அந்தப் பட்டணங்களில் இருந்த ஜனங்களிலிருந்து வித்தியாசமானவர்கள் அல்ல. அவர்களைப் போலவே, நாமும் தேவனுடைய ஆசீர்வாதங்களையும், விடுதலையையும், அதிசயங்களையும் நமது வாழ்கையில் அனுபவித்துள்ளோம். ஆனாலும் இன்னும் நம்மில் பலர் எதுவும் மாறாதது போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
திரும்பிப் பாருங்கள்:
எத்தனை முறை தேவன் உங்களை ஆபத்திலிருந்து பாதுகாத்துள்ளார் அல்லது எதிரியின் திட்டங்களிலிருந்து உங்களை மீட்டுள்ளார்?
எத்தனை முறை அவர் உங்களை குணமாக்கி, உங்கள் பொருளாதாரத் தேவைகளை சந்தித்து, குடும்பம், வேலை, படிப்புகளுக்கான உங்கள் விண்ணப்பங்களுக்குப் பதிலளித்துள்ளார்?
இதை எல்லாம் பெற்ற பிறகும் கூட, நாம் எவ்வளவு விரைவாக பழைய பழக்கங்களுக்குத் திரும்பி, அவருடைய இருதயத்தைத் தேடாமல் உலக வழிகளைப் பற்றிக் கொள்கிறோம்.
நாம் எப்போதும் அவரிடம் அதிக ஆசீர்வாதங்கள், அதிக தயவு, அதிகமான தேவைகளை வேண்டுகிறோம். ஆனால், "பிதாவே, நீர் எனக்குக் கொடுத்த அனைத்தையும் கொண்டு, நான் எவ்வாறு உம்மால் பயன்படுத்தப்பட முடியும்? உமது நோக்கங்களுக்கான ஒரு கருவியாக இருக்க முடியுமா? நான் என் பலவீனத்தையும் என் வாழ்க்கையையும் உமது சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கிறேன்” என்று அரிதாகவே ஜெபிக்கிறோம்.
இவையே தேவன் கேட்க விரும்பும் ஜெபங்கள் - மனந்திரும்புதல், அர்ப்பணித்தல், தயாராக இருத்தல் போன்றவை.
உண்மை என்னவென்றால், நாம் மனந்திரும்பி தூய்மையாக நடக்கும்போது மட்டுமே அவரால் நம்மைப் பயன்படுத்த முடியும். எதிரி கர்ஜிக்கும் சிங்கத்தைப் போல அழிக்கத் தேடுகிறான், பாவத்தை வளர்க்கும்போது நம்மால் அவருக்குத் திறம்பட ஊழியம் செய்ய முடியாது. அவரது கோபம் நீதியானது, மேலும் அது மாய்மாலம், பெருமை மற்றும் மனந்திரும்பாத உள்ளங்களுக்கு எதிராக நிற்கிறது.
ஆனாலும், தம்முடைய கோபத்திலும்கூட, மீட்புக்கான வழியை வழங்குகிறார். மத்தேயு 11:21 இல், மனந்திரும்புதலின் அவசியத்தை இயேசு கூறுகிறார் – இது, வெறும் எச்சரிக்கையாக மட்டும் அல்லாமல், முழுமையாக அவரிடம் திரும்புவதற்கான அழைப்பாகவும் உள்ளது.
நாம் எப்படி மனந்திரும்ப வேண்டும்?
கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள். மத்தேயு 11:21
இரட்டையும் சாம்பலையும் பயன்படுத்தி மனந்திரும்பும்படி அவர் நம்மைக் கேட்கிறார். பழைய நாட்களில் ஒரு தீர்க்கதரிசி ஜனங்களின் பாவங்களைக் குறித்து எச்சரிக்கும் போது அவர்கள் அந்த வழியில் மனந்திரும்பினார்கள்.
ஜனங்கள் எப்படி மனந்திரும்பினார்கள் என்பதற்கு இரண்டு உதாரணங்களை நாம் காணலாம்.
1. ஆகாப் ராஜா (1 இராஜாக்கள் 21)
இஸ்ரவேலின் ஏழாவது ராஜாவாக ஆகாப் ராஜா இருந்தார். அவர் தனது தீய ஆட்சிக்காகவும், யேசபேலை மணந்ததற்காகவும், ஜனங்களை விக்கிரக வழிபாட்டிற்கு இட்டுச் சென்றதற்காகவும் நினைவுகூரப்படுகிறார். யேசபேல் அவரை தவறு செய்யத் தூண்டினாள். மேலும் ஆகாப் தேவனின் தீர்க்கதரிசிகளுக்கு, குறிப்பாக எலியாவுக்கு எதிராக நின்றார். நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை அபகரித்துக் கொண்டது அவரது மோசமான செயல்களில் ஒன்றாகும், இது தேவனிடமிருந்து கடுமையான எச்சரிக்கையைப் பெற வழிவகுத்தது.
1 இராஜாக்கள் 21 ஐ வாசிக்கும்போது, அவர் தேவனின் கோபத்திற்கு ஆளான பொல்லாத ராஜாக்களில் ஒருவராக இருந்ததைக் காணலாம் - தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்னின்று துரத்திவிட்ட எமோரியர் செய்தபடியெல்லாம், அவன் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, மகா அருவருப்பாய் நடந்துகொண்டான். 1 இராஜாக்கள் 21:25-26
தேவனின் பார்வையில் இருந்து ஆகாப் ராஜாவின் பாவங்கள்
விக்கிரகாராதனை - போலியான தெய்வங்களை வணங்கியது (1 இராஜாக்கள் 16:31–33)
தேவனின் தீர்க்கதரிசிகளைத் துன்புறுத்தியது (1 இராஜாக்கள் 18:4)
களவு மற்றும் கொலை - நாபோத்தின் திராட்சைத் தோட்டம் (1 இராஜாக்கள் 21)
தேவனின் சத்தியத்தை நிராகரித்தது (1 இராஜாக்கள் 22)
1 இராஜாக்கள் 21 இல் ஆகாப் ராஜாவின் பாவங்களைக் குறித்து தேவன் எலியா தீர்க்கதரிசியின் மூலம் எச்சரிக்கிறார்.
நாபோத்தின் இரத்தம் சிந்திய ஸ்தலத்திலேயே ஆகாபின் இரத்தம் சிந்தப்படும்; நாய்கள் அதை நக்கிக் குடிக்கும் (1இராஜாக்கள் 21:19).
யெரொபெயாம் மற்றும் பாஷாவைப் போல ஆகாபின் சந்ததி அழிக்கப்படும் (1 இராஜாக்கள் 21:21–22).
யேசபேலும் கொடூரமாக இறந்து போவாள், நாய்கள் அவளைத் தின்னும் (1 இராஜாக்கள் 21:23).
ஆகாப் தேவனின் நியாயத்தீர்ப்பைக் கேட்டபோது, ஆழமாக பாதிக்கப்பட்டார். ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான். 1 இராஜாக்கள் 21:27
தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டார்.
தன் சரீரத்தின்மேல் இரட்டைப் போர்த்துக்கொண்டார்.
உபவாசம்பண்ணி, தாழ்மையாய் நடந்துகொண்டார்.
தேவனின் இரக்கத்தைத் தேடினார் (1 இராஜாக்கள் 21:27).
ஆகாப் தன்னைத் தாழ்த்தியதால், தேவன் இரக்கம் காட்டினார். அவர் பொல்லாப்பைத் தள்ளிப்போட்டார். அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்: ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறபடியினால், நான் அவன் நாட்களில் அந்தப் பொல்லாப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின்மேல் வரப்பண்ணுவேன் என்றார். 1 இராஜாக்கள் 21:28-29
2. யோனாவும் நினிவேயும் (யோனா 3)
நினிவேயின் ஜனங்கள் பொய், பேராசை, விக்கிரகாராதனை, சூனியம், பெருமை மற்றும் அடக்குமுறை போன்ற பெரும் பாவத்தில் வாழ்ந்து வந்தனர். இது தேவனை மிகவும் கோபப்படுத்தியது. எனவே, அவர்களை எச்சரிக்கவும், அழிவை சந்திப்பதற்கு முன்பு மனந்திரும்ப ஒரு வாய்ப்பை வழங்கவும் அவர் யோனாவை அனுப்பினார் (யோனா 1:2).
தேவனிடமிருந்து ஓடிப்போய் ஒரு மீனின் வயிற்றில் சிறிது காலத்தைச் செலவிட்ட பிறகு, யோனா தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரது வார்த்தையைப் பிரசங்கித்தார் (யோனா 3:2–4).
ஜனங்கள் யோனாவின் செய்தியை விசுவாசித்தனர். அவர்கள் இரட்டுடுத்தி உபவாசம் இருந்தனர். அவர்களின் ராஜாவும் தன்னைத் தாழ்த்தினான். மேலும், அனைவரையும் தங்கள் பொல்லாத வழிகளிலிருந்து திரும்பும்படி அழைத்தான் (யோனா 3:5–9).
அவர்கள் உண்மையிலேயே மனந்திரும்பியதால், தேவன் அவர்கள் மீது இரக்கம் காட்டினார். மேலும் அவர் முன்னதாக எச்சரித்தபோல நகரத்தை அழிக்கவில்லை (யோனா 3:10). அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப்பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார். யோனா 3:10
தேவனின் எச்சரிக்கை வார்த்தைகள் (உனக்கு ஐயோ)
நாமும் கப்பர்நகூமைப் போலவே இருக்கிறோம் - தேவன் தம்முடைய வார்த்தையைக் கேட்கவும், அவருக்கு ஊழியம் செய்யவும், மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், மனந்திரும்பவும், அவருடைய கட்டளைகளைப் பின்பற்றி சீஷர்களாக வளரவும் நமக்கு வாய்ப்பளித்துள்ளார்.
ஆனால் இந்த ஆசீர்வாதங்களைப் பெறுவது மட்டும் போதாது. நாம் அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும்.
மத்தேயு 11:23-24 இல், வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும். நியாயத்தீர்ப்புநாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார், என்று கூறப்பட்டுள்ளது.
நியாயத்தீர்ப்பு நாள் கடுமையாக இருக்கும் என்பதை இது காட்டுகிறது - பாவம் நிறைந்த பட்டணமாகப் பெயர் பெற்றிருந்த சோதோம் கூட, தேவனின் சத்தியத்தை அனுபவித்த பிறகு அவரைப் புறக்கணிப்பவர்களை விட குறைவான நியாயத்தீர்ப்பை எதிர்கொள்ளும்.
அவரது வார்த்தையை அறிந்திருந்தும் மாற மறுப்பவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திப்பார்கள், அது தேவனிடமிருந்து நித்தியப் பிரிவை கூட உருவாக்கும்.
நீங்கள் எப்படி மனந்திரும்ப வேண்டும்? — தூக்கி எறியுங்கள்!
மத்தேயு 11:28–30 இல் இயேசு நம்முடைய எல்லா பாரங்களோடும் தம்மிடம் வரும்படி அழைக்கிறார், மேலும் அவர் நமக்கு இளைப்பாறுதல் தருவதாக வாக்குறுதி அளிக்கிறார். அவருடைய நுகம் மெதுவாயும், சுமை இலகுவாயும் இருப்பதாகக் கூறுகிறார். எனவே நாம் எவ்வாறு உண்மையிலேயே மனந்திரும்பி இந்த இளைப்பாறுதலை அனுபவிப்பது?
பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிடுங்கள் - ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; எபிரெயர் 12:1
நம்மைப் பின்னோக்கி இழுக்கும் அனைத்தையும் நாம் விட்டுவிட வேண்டும் - அது குப்பையை எறிவது போலவோ அல்லது கப்பலின் வேகத்தைக் குறைக்கும் பாசிகளை அதில் இருந்து சுத்தம் செய்வது போலவோ இருக்க வேண்டும்.
தூக்கி எறிவதற்கு முயற்சி தேவை - நாம் தீர்மானமாகவும் உறுதியுடனும் இருக்க வேண்டும்.
நம்மை வழுக்கி விழச் செய்யும் பாசியைப் போல, பாவங்களும் சுமைகளும் அகற்றப்பட வேண்டும். அப்படி செய்தால் நம்மால் விசுவாசத்தில் உறுதியுடன் நடக்க முடியும்.
எதை நாம் தூக்கி எறிய வேண்டும்?
தேவனுடனான உங்கள் நடையை பாரமாக்கும் எதையும்.
பதட்டமா? அதை இயேசுவின் மீது வையுங்கள் - அவர் உங்களை விசாரிக்கிறார்.
சந்தேகமா? ஒப்புக்கொள்ளுங்கள் - உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்த இயேசுவிடம் கேளுங்கள்.
பெருமையா? - அவருக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள்.
பாவமா? அதை அறிக்கையிடுங்கள் - அவர் மன்னித்து உங்களை விடுவிப்பார்.
நீங்கள் யாருக்கு அதைக் கொடுக்க வேண்டும்?
அனைத்தையும் இயேசுவிடம் கொடுங்கள். அவருடைய வாக்குறுதி தெளிவாக உள்ளது: வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். ... என்றார். மத்தேயு 11:28-30
அவர் ஏற்கனவே சிலுவையில் பாவத்தை வென்று விட்டார். நாம் உண்மையுடன் அவரிடம் வரும்போது நமக்கு ஜெயத்தைத் தருகிறார்.
தேவனின் இரக்கத்தையும் மனதுருக்கத்தையும் எவ்வாறு பெறுவீர்கள்?
ஆகாப் ராஜாவையும் நினிவே மக்களையும் போல, தேவனுக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள். மனந்திரும்புதலுக்கு ABC யை பயன்படுத்துங்கள்.
A – ஒப்புக்கொள்ளுங்கள்
நீங்கள் ஒரு பாவி என்பதையும், உங்கள் சிறந்த முயற்சிகள் போதுமானவை அல்ல என்பதையும் ஒப்புக்கொள்ளுங்கள்.
தேவன் இல்லாமல் நமது நீதிகளெல்லாம் அழுக்கான கந்தை போல இருக்கிறது என்பதை ஏசாயா 64:6 நமக்கு நினைவூட்டுகிறது.
உங்கள் வார்த்தைகளால் மட்டுமல்லாமல், உங்கள் இருதயத்தாலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
B – விசுவாசியுங்கள்
பாவம் எவ்வளவு கொடிதானதாக இருந்தாலும் சரி, அதிலிருந்து உங்களை விடுவிக்கக்கூடிய ஒரே இரட்சகர் இயேசு என்று விசுவாசியுங்கள்.
தேவனைப் பிரியப்படுத்த விசுவாசம் வேண்டும் என்றும், தம்மைத் தேடுகிறவர்களுக்கு அவர் பலன் அளிக்கிறவரென்று விசுவாசிக்க வேண்டும் என்றும் எபிரெயர் 11:6 கூறுகிறது.
C – பாவங்களை அறிக்கையிடுங்கள்
உங்கள் பாவங்களை தேவனிடம் நேர்மையாக அறிக்கையிடுங்கள்.
பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவன் இரக்கம் பெறுவான் என்று நீதிமொழிகள் 28:13 கூறுகிறது.
உங்கள் வலிகளையும், இலக்குகளையும், திட்டங்களையும் அறிக்கையிடுங்கள் - அவர் அவற்றைத் தம்முடைய மகிமைக்காக வடிவமைப்பார் (நீதிமொழிகள் 16:3-4).
Amen