top of page

தேவனுக்கு சாட்சியாக வாழ்தல்

  • Kirupakaran
  • 4 days ago
  • 7 min read
ree

ஒரு விபத்து நிகழ்ந்த இடத்தில், நேரில் கண்ட சாட்சி மிக முக்கியமானது - உண்மையில் என்ன நடந்தது என்பதை அவர் வெளிப்படுத்துகிறார். அதே போலவே, ஒரு குற்றச் செயலின் நேரத்திலும் சாட்சி இல்லையெனில் உண்மை மறைந்தே போகும். இதை நாம் அன்றாட வாழ்க்கையில் நன்றாகவே புரிந்து கொள்கிறோம். ஆனால் தேவன் நம்மைத் தம்முடைய சாட்சிகளாக அழைக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? அதன் அர்த்தம் என்ன - அதை நாம் எவ்வாறு வாழ்ந்து காட்ட வேண்டும்?

 

இயேசு தம் சீடர்களிடம் இவ்வாறு கூறினார்: பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:8

 

அந்த அழைப்பு பன்னிரண்டு பேருக்கு மட்டுமானதல்ல - அது இன்று கிறிஸ்துவைப் பின்பற்றும் அனைவருக்குமானது.

 

தேவனுடைய சாட்சி என்பவர் வெறும் விசுவாசத்தைப் பற்றிப் பேசுபவர் அல்ல; இயேசுவின் குணத்தை தன்னுடைய வாழ்க்கையில் வெளிப்படுத்துபவரே சாட்சி என்னப்படுவார். வெற்று வார்த்தைகளாலும், மீறப்பட்ட வாக்குறுதிகளாலும் நிரம்பிய இந்த உலகத்தில், இயேசுவைப் பின்பற்றுபவர்கள் அன்பு, கீழ்ப்படிதல், சகிப்புத்தன்மை மற்றும் சத்தியத்தின் மூலம் தேவனின் உண்மைத்தன்மையைக் காட்ட வேண்டும்.

 

இயேசு வாழ்ந்தது போல் வாழ்ந்து, அவர் நேசித்தது போல் நேசித்து, அவர் சகித்திக் கொண்டது போல் நாமும் சகித்துக் கொள்ளும் போது, நம்முடைய வாழ்க்கை உயிர்த்தெழுந்த கிறிஸ்து உண்மையானவர் என்பதற்கான உயிருள்ள சாட்சியாக மாறுகிறது.

 

எபிரெயர் 10:23–39 வரையிலான இந்த சிந்தனையில் இருந்து, கிறிஸ்துவுக்கு உண்மையான சாட்சியின் ஒன்பது முக்கிய அடையாளங்களை ஆராயலாம் - நம்முடைய அன்றாட வாழ்க்கை, அவரது பிரசன்னத்தை உலகிற்கு எதிரொலிக்கச் செய்யும் ஒன்பது வழிகள்.

 

 

1. விசுவாசத்தில் உறுதியாக இருங்கள்

அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. எபிரெயர் 10:23

 

விசுவாசத்தில் உறுதியாக நிற்பது இயேசுவுக்கு சாட்சியாக இருப்பதற்கான அடித்தளமாகும். "இயேசுவே ஆண்டவர்" என்ற ஒரு தனிப்பட்ட அறிக்கையுடன் இது தொடங்குகிறது. இது ஒரு விசுவாச அறிக்கை மட்டுமல்ல - நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் என்பதையும், நம் வாழ்க்கையை அவர் அதிகாரத்திற்கு கீழ்படுத்தியிருக்கிறோம் என்பதையும், அவருடைய வாக்குத்தத்தங்கள் நமது தேர்வுகளையும் செயல்களையும் வழிநடத்துகின்றன என்பதையும் அறிவிக்கும் ஒரு அறிவிப்பு ஆகும்.

 

உறுதியாகப் பற்றிக் கொள்வது ஏன் முக்கியம்?

  • விசுவாசம் நம்மைக் கீழே விழுவதிலிருந்து காக்கிறது: வாழ்க்கை கவனச்சிதறல்கள், சோதனைகள் மற்றும் பாடுகளால் நிரம்பி இருக்கிறது. கிறிஸ்துவில் நாம் கொண்டிருக்கும் விசுவாசத்தைப் பற்றிக் கொள்ளும்போது, ​​உலகின் பாவப் பொறிகளிலும், அவரிடமிருந்து நம்மை விலகச் செய்வதற்கான பழக்கவழக்கங்களிலும் விழாமல் நம்மைப் பாதுகாக்கிறார்.

  • விசுவாசம் தேவனின் உண்மைத்தன்மையைக் காட்டுகிறது: நமது அர்ப்பணிப்பு உலகிற்கு ஒரு ஜீவனுள்ள சாட்சியமாகும். சவால்களின் போது நாம் உறுதியாக இருக்கும்போது, ​​சூழ்நிலைகள் நிச்சயமற்றதாகத் தோன்றினாலும், தேவன் நம்பத்தகுந்தவர் என்பதை அது பிரதிபலிக்கிறது.

  • விசுவாசம் பொறுமையை வலுப்படுத்துகிறது: சோதனைகள் தவிர்க்க முடியாதவை, ஆனால் உறுதியான விசுவாசம் அவற்றை சகித்துக்கொள்ள உதவுகிறது. உறுதியாக நிற்பது என்பதற்கு நாம் தடுமாற மாட்டோம் என்று அர்த்தமல்ல - விழுந்தாலும், தேவனுடைய வாக்குறுதியில் நம்பிக்கை வைத்து மீண்டும் எழுந்திருப்பதைக் குறிக்கிறது.

 

2. அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஒருவரையொருவர் ஊக்குவியுங்கள்

மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து: எபிரெயர் 10:24

 

அன்பு செலுத்துவதற்கும் நற்கிரியைகளை செய்வதற்குமான திறன் நம் இருதயங்களில் எழுதப்பட்ட புதிய உடன்படிக்கையால் உண்டான உள்ளார்ந்த மாற்றத்திலிருந்து வருகிறது.

அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்தபின்பு, அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். எபிரெயர் 10:16-17

 

  • நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் நம் இயல்பை உள்ளிருந்து மாற்றுகிறார்.

  • நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் கிருபைக்குள் நாம் ஞானஸ்நானம் பெறும்போது, ​​நாம் கிறிஸ்துவை தரித்துக்கொள்கிறோம். ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. கலாத்தியர் 3:27. நாம் வெளிப்புறமாக ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், ஒவ்வொரு விசுவாசியின் மீதும் கிறிஸ்துவின் கண்ணுக்குத் தெரியாத மறைப்பு உள்ளது - அவருடைய நீதியும் அவருடைய ஜீவனும் நம்மைச் சூழ்ந்துள்ளன.

  • நமக்குள் இருக்கும் கிறிஸ்துவின் ஜீவன், அன்பு மற்றும் நற்கிரியைகளை நோக்கி ஒருவரையொருவர் ஊக்குவிக்கவும் உந்துதலளிக்கவும் உதவுகிறது.

  • நாம் தேவனின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய ஆவி நம் எண்ணங்களையும் செயல்களையும் வடிவமைக்க அனுமதிக்கும்போது உண்மையான மாற்றம் தொடங்குகிறது, இதனால் நமது வெளிப்புற வாழ்க்கை நமது உள்ளார்ந்த புதுப்பிப்பை பிரதிபலிக்கிறது.

  • நமது அன்பும் இரக்கத்தின் செயல்களும் வெளிப்படையான சான்றுகளாக மாறி உள்ளார்ந்த மாற்றத்தின் வெளிப்புற சாட்சி ஆகின்றன.

 

இங்கே தேவனுக்கான சாட்சியாக இருப்பது என்பது உங்கள் செயல்கள் மூலம் இயேசுவின் அன்பை பிரதிபலிப்பதைக் குறிக்கும். உங்கள் மூலமாக அவரது இரக்கம், தாழ்மை மற்றும் நன்மை எப்படி இருக்கும் என்பதை உலகம் காணச் செய்வதே உண்மையான சாட்சியாகும்.

 

 

3. விசுவாசிகளின் ஐக்கியம்

சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். எபிரெயர் 10:25

 

ஐக்கியம் என்பது விசுவாசத்தின் உயிர்நாடி. விசுவாசிகள் கிறிஸ்துவின் நாமத்தில் கூடும்போது, ​​வல்லமையானவைகள் நிகழ்கின்றன - நமது விசுவாசம் வலுப்பெறுகிறது. மேலும் அவரது பிரசன்னம் சமூகத்தை நிரப்புகிறது.

 

உண்மையான ஐக்கியத்திற்குள்,

  • நாம் தேவன் செய்தவற்றின் சாட்சியங்களைப் பகிர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஊக்கமளிக்கிறோம் - ஓவ்வொரு சாட்சியும், வேறொருவரின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

  • நாம் ஒன்றாக ஜெபித்து, தேவனின் பிரசன்னத்தையும் வல்லமையையும் வரவேற்கிறோம். பரிந்து பேசும் ஆவியானவர் நம்மிடையே அசைவாடி, நமது தேவைகளுக்காக மட்டுமல்லாது, பிறருக்காகவும் ஜெபிக்க கற்றுக்கொடுக்கிறார் - மேலும் தேவனின் இரக்கமுள்ள கண்கள் மூலம் உலகைப் பார்க்கவும் கற்றுக்கொடுக்கிறார்.

  • பலவீனமானவர்களை ஆதரித்து, சோர்வடைந்தவர்களை உயர்த்தி, ஒருவருக்கொருவர் பாரங்களை சுமந்து, தொலைந்து போன  ஆத்துமாக்களுக்கான இருதயத்தை வளர்த்துக் கொள்ளுகிறோம்.

 

விசுவாசிகள் ஒருமனதாக நிற்கும்போது திருச்சபையின் சாட்சி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும். அன்பு, ஜெபம் மற்றும் ஊக்கமளித்தல் என்பவை உண்மையாகவே கிறிஸ்துவின் சரீரமாக வாழும் ஒரு சமுதாயத்தில் கிறிஸ்துவின் தெளிவான அடையாளங்களாக மாறுகின்றன.

 

 

4. வேண்டுமென்றே செய்யும் பாவங்களைத் தவிர்த்திடுங்கள்

சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள். எபிரெயர் 10:26-29

 

சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், எபிரெயர் 10:26

 

பாவம் இரண்டு வழிகளில் தோன்றலாம்:

  • தற்செயலான பாவம் - நாம் தினமும் தவறுகிற செயல்களை மனந்திரும்புதலுடன் தேவனுக்கு முன்பாகக் கொண்டுவரும்போது, அவை கிறிஸ்துவின் பரிந்துரையின் மூலம் தொடர்ந்து சுத்திகரிக்கப்படுகின்றன.

  • வேண்டுமென்றே செய்கின்ற பாவம் - இது சத்தியத்தை அறிந்த பிறகும் கீழ்ப்படியாமல் இருக்க வேண்டுமென்றே செய்யும் தேர்வு. இந்த வகையான பாவம் இருதயத்தைக் கடினமாக்கி தேவனின் கிருபையை அவமதிக்கிறது.

 

ஒரு விசுவாசி தெரிந்தே பாவத்தில் தொடர்ந்து இருக்கும்போது, ​​அவர் தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, உடன்படிக்கையின் இரத்தத்தை சாதாரணமானதாகக் கருதி, கிருபையின் ஆவியை அவமதிக்கிறார் என்று வேதம் கூறுகிறது (வசனம் 29).

 

தேவனுக்கு உண்மையான சாட்சியாக இருப்பது என்பது எங்கேயிருந்தாலும் நேர்மையுடன் வாழ்வதைக் குறிக்கிறது - தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொதுவாழ்க்கையிலும் ஒரேபோல் மாய்மாலம் இல்லாமல் பரிசுத்தத்தில் நடந்து கொள்வது. தூய்மையிலும் கீழ்ப்படிதலிலும் நமது நிலைத்தன்மை கிறிஸ்து உண்மையிலேயே நமக்குள் ஆட்சி செய்கிறார் என்பதற்கு சாட்சியளிக்கிறது.

 

 

5. தேவன் நடத்திய விதங்களை நினைவு கூருங்கள்

மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள். எபிரெயர் 10:28-29

 

வேதாகமம் முழுவதிலும், தேவன் தம் ஜனங்களை நடத்திய விதம் அவருடைய நீதியான நிலையான தீர்ப்புகளை வெளிப்படுத்துகிறது.

  • அவர் இஸ்ரவேல் ஜனங்களை பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி வழிநடத்தினார்.ஆனால் பின்னர் அவர்கள் அவருடைய கட்டளைகளை நிராகரித்து அவரிடமிருந்து விலகியபோது, ​​அவர்களைத் தண்டித்தார் (நெகேமியா 9:21–27).

  • தேவனின் ஆலயத்தைக் கட்ட தேவ ஞானத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட சாலொமோன் ராஜாவும் கூட, தனது இருதயம் பிற தெய்வங்களை நோக்கித் திரும்பியபோது விழுந்து போனார் - தேவன் அவரையும் தண்டித்தார் (1 இராஜாக்கள் 11).

  • தேவன் பாரபட்சம் காட்டுவதில்லை; அவருடைய நீதி எல்லா தலைமுறைகளிலும் ஒரே மாதிரியாகவே உள்ளது.

  • நியாயப் பிரமாணத்தை நிராகரித்த பழைய ஏற்பாட்டு ஜனங்கள் நியாயத்தீர்ப்பை எதிர்கொண்டால், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கிருபையின் முழுமையைப் பெற்ற நாம் எவ்வளவு அதிகமாகக் கணக்குக் கொடுக்க வேண்டும்?

 

தேவனுக்கு சாட்சியாக இருப்பது என்பது அவருடைய கிருபையை மதிப்பதாகும் - நம்மைப் பரிசுத்தப்படுத்திய பலிக்கு தகுதியான முறையில் வாழ வேண்டும், அவருடைய கிருபை வீண் போகவில்லை என்பதை நம் கீழ்ப்படிதலின் மூலம் காட்ட வேண்டும்.

 

 

6. நியாயத்தீர்ப்பை தேவனிடம் விட்டுவிடுங்கள்

 

பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம். ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே. எபிரெயர் 10:30-31

 

நியாயத்தீர்ப்பு தேவனுக்கு மட்டுமே சொந்தமானது. மனிதர்களாகிய நமக்கு மற்றவர்களை நியாயந்தீர்க்கும் அதிகாரமோ உரிமையோ இல்லை.

 

அப்படியானால், உலகம் நம்மைத் தவறாக நடத்தும்போது அல்லது நம்மைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும்போது நாம் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?

  • உங்கள் போராட்டங்களை தேவனிடம் ஒப்படையுங்கள்: ஒவ்வொரு அநீதியான சூழ்நிலையையும் அவருக்கு முன்பாகக் கொண்டு வந்து, "பிதாவே, இதில் எனக்கு உதவுங்கள். எனக்காக யுத்தம் செய்யுங்கள்" என்று ஜெபியுங்கள்.

  • தேவன் செயல்படும்வரை காத்திருங்கள்: அவர் நீதியாகவும், சரியான நேரத்திலும் யுத்தம் செய்கிறார். எனவே நமது பங்கு நம்பிக்கையோடு பொறுமையாகக் காத்திருப்பதுதான்.

  • பழிவாங்குவதைத் தவிர்க்கவும்: நாம் நியாயம் தீர்க்க முயலும்போது அல்லது பழிவாங்க விரும்பும்போது ​​நாம் தேவனின் நிலையை எடுத்துக்கொள்கிறோம். நாமே இறுதி நீதிபதி போல் செயல்படுகிறோம். நாம் இன்னும் பாவத்திற்கு உட்பட்ட வெறும் மனிதர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

இயேசுவே இதைத் தெளிவுபடுத்துகிறார்:

பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். யோவான் 5:21-22

 

நமது அழைப்பு எளிதானதாக இருந்தாலும் ஆழமானது: உங்களைத் துன்புறுத்துபவர்களுக்கும் நன்மையே செய்யுங்கள், நீதியை அவரது கரங்களில் விட்டுவிடுங்கள். இந்த வழியில் வாழ்வதே அவருடைய நீதி, இரக்கம் மற்றும் கிருபைக்கு ஒரு வலிமையான சாட்சியமாகும்.

 

 

7. விசுவாசத்தோடு பாடுகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்

முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே. நிந்தைகளாலும் உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமல்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள்.எபிரெயர் 10:32-34

 

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு சுலபமான பயணம் அல்ல. விசுவாசிகளாக இருக்கும்போது, நாம் சவால்களையும் போராட்டங்களையும் எதிர்கொள்ள நேரிடும் - பெரும்பாலும் உலகப் போராட்டங்களை விட ஆழமான ஆன்மீகப் .

போராட்டங்களாக இருக்கலாம். இதைத்தான் இயேசு நமக்கு முன்பே எச்சரித்தார்:

 

உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள். யோவான் 15:18-20

 

பாடுகள் என்பது தேவன் நம்மைக் கைவிட்டதற்கான அடையாளமல்ல; அது உண்மையான விசுவாசத்தின் சாட்சியாகும்.

  • பவுல் கிறிஸ்துவுக்காகக் கொடூரமான துன்பங்களைத் தாங்கினார் (2 கொரிந்தியர் 11:23–31). ஆனால், தேவனின் மகிமை அவருடைய பாடுகளின் மூலம் வெளிப்பட்டதால் அவற்றை அவர் மகிழ்ச்சியாகவே கருதினார்.

  • சோதனைகள் விசுவாசத்தையும், கிறிஸ்துவில் நம் வளர்ச்சியையும் வலுப்படுத்துகின்றன. இதனால் நாம் தேவனுடைய கிரியைக்கேற்ற பாத்திரங்களாக மாறுகிறோம்.

  • இந்தப் பாடுகள் யாவும் தற்காலிகமானவை, ஆனால் நாம் வளர்த்துக் கொள்ளும் சகிப்புத்தன்மைக்கு நித்தியத்தில் வெகுமதி அளிக்கப்படும்.

  • உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெறுவது போல் நினைத்துப் பாருங்கள்: போராட்டம் வலி நிறைந்தது. ஆனால் அந்த வலி சரீரத்தை வலுப்படுத்துகிறது, சகிப்புத்தன்மையை வளர்க்கிறது, நீடித்த பலன்களை தருகிறது.

 

தேவனுக்கு சாட்சியாக இருப்பது என்பது விசுவாசத்துடனும் மகிழ்ச்சியுடனும் சோதனைகளைத் தாங்குவதாகும். நமது நம்பிக்கை சூழ்நிலைகளில் அல்ல, மாறாக உயிர்த்தெழுந்த கிறிஸ்துவில் தான் உள்ளது என்பதை உலகுக்குக் காட்டுவதாகும்.

 

 

8. தேவனுடைய சித்தத்தைச் செய்வதில் பொறுமையுடன் இருங்கள்

நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. எபிரெயர் 10:36

 

தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்கு பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் அசைக்க முடியாத விசுவாசம் தேவை.

  • தேவனைப் பின்பற்றுவது எப்போதும் எளிதல்ல; சில சமயங்களில் முடிவுகளைப் பார்ப்பதற்குப் பல ஆண்டுகளான முயற்சியும், ஜெபமும், காத்திருப்பும் தேவைப்படும்.

  • பொறுமை என்பது வளர்ச்சி மெதுவாகத் தோன்றினாலும் அல்லது தடைகள் தோன்றினாலும் கூட, உறுதியாக இருப்பதைக் குறிக்கிறது.

  • ஒவ்வொரு தியாகமும் ஒவ்வொரு கீழ்ப்படிதலும் சரியான நேரத்தில் அவருடைய பலனைத் தரும் என்று நம்பி, அவர் உங்களுக்கு முன்பாக வைத்த பந்தயத்தை முடிப்பது பற்றியது.

  • தேவன் நம்மைத் தனியாக வாழ்க்கையை நடத்த விட்டுவிடுவதில்லை. அவர் பரிசுத்த ஆவியை நமக்குத் துணையாகத் தந்துள்ளார் - அவர் நம்மை வழிநடத்தி, கற்பித்துக் கொடுத்து, திருத்தி, நம் வாழ்க்கைக்கான அவரது தனித்துவமான சித்தத்தின்படி நடக்க நமக்கு அதிகாரம் அளிக்கிறார்.

 

நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன். யோவான் 14:15-18

 

தேவனுக்கு சாட்சியாக இருப்பது என்பது விசுவாசத்தோடு நிலைத்திருப்பதுதான், உங்கள் உறுதியான நிலைத்தன்மை மூலம், அவருடைய வாக்குறுதிகள் உண்மையானவை, அவருடைய வேளை சரியானது என்பதை உலகுக்குக் காட்டுவதாகும்.

 

 

9. விசுவாசத்தில் வளருங்கள், பின்வாங்கிப் போகாதீர்கள்

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம். எபிரெயர் 10:38-39

 

தேவன் விசுவாசிகளைப் பின்வாங்கிப் போவதற்கோ மெத்தனமாக இருப்பதற்கோ அல்லாமல், விசுவாசத்தில் மென்மேலும் வளர்வதற்கு அழைக்கிறார்.

  • பின்வாங்குவது அல்லது விட்டுக்கொடுப்பது தேவனின் வாக்குறுதிகளில் நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது.

  • உண்மையான சாட்சிகள் விசுவாசத்தில் முன்னேறி, பலத்திற்காகவும்  வழிகாட்டுதலுக்காகவும் தேவனை நம்பியிருக்கிறார்கள். ஆபிரகாமும் சாராளும் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தங்கள் முதிர்வயதில் தேவன் தங்களுக்கு ஒரு பிள்ளையைத் தருவார் என்று அவர்கள் விசுவாசித்தார்கள். அவர் வாக்குப் பண்ணியபடியே அவர்கள் பெற்றெடுத்தார்கள், நாமே அவருடைய சாட்சியாக இருக்கிறோம்.

  • விசுவாசத்தில் வளர்ச்சி என்பது ஒரு தனிப்பட்ட பயணமாகவும், வெளிப்படையான சாட்சியாகவும் இருக்கிறது. இது கிறிஸ்துவுக்காக வாழ்கின்ற ஒரு வாழ்க்கை, சகிப்புத்தன்மை, நம்பிக்கை மற்றும் ஆவிக்குரிய கனிகளை உருவாக்குவதை மற்றவர்களுக்குக் காட்டுகிறது.

 

தேவனுக்கு சாட்சியாக இருப்பது என்பது விசுவாசத்தில் வளர்வது, சோதனைகளில் உறுதியாக நிற்பது, கீழ்ப்படிதலில் வாழ்வது மற்றும் உங்களுக்குள் வாழும் கிறிஸ்துவின் உண்மையைப் பிரதிபலிப்பதாகும்.

 

 

 

சுருக்கம்

பரிசுத்த ஆவியினால் அதிகாரம் பெற்றவர்களாக, இயேசு கிறிஸ்துவின் சாட்சிகளாக அழைக்கப்பட்டுள்ளோம் (அப்போஸ்தலர் 1:8).

 

எபிரெயர் 10:23–39 வரையிலான வசனங்கள் உண்மையுள்ள சாட்சியாக வாழ்வது என்றால் என்ன என்பதைக் காட்டுகிறது. உலகில் கிறிஸ்துவைப் பிரதிபலிக்க, நாம்

1. விசுவாசத்தை உறுதியாகப் பற்றிக் கொள்ள  

2. மற்றவர்களை அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் தூண்ட

3. ஐக்கியத்தில் ஈடுபட

4. வேண்டுமென்றே பாவம் செய்வதைத் தவிர்க்க

5. தேவனின் நடத்துதல்களை நினைவில் கொள்ள

6. நியாயத்தீர்ப்பை தேவனிடம் விட்டுவிட

7. விசுவாசத்தோடு பாடுகளைத் தாங்கிக் கொள்ள

8. தேவ சித்தத்தைச் செய்வதில் நிலைத்திருக்க

9. விசுவாசத்தில் தொடர்ந்து வளர

அழைக்கப்பட்டுள்ளோம்.

 

இது மிகப்பெரியதாகத் தோன்றக்கூடும். ஆனால் சாட்சியாக இருப்பது உங்கள் பலத்தைச் சார்ந்தது அல்ல. அது கீழ்ப்படிதல், ஜெபம் மற்றும் கிறிஸ்துவைச் சார்ந்திருத்தல் மூலம் சிறியதாகத் தொடங்குகிறது. அவருடைய வல்லமையாலும் அவருடைய மகிமைக்காகவும், நீங்கள் அவருக்கு ஜீவனுள்ள சாட்சியாக இருப்பதற்கு உதவுகிறார். அவருடைய இரக்கத்திலும் கிருபையிலும் நம்பிக்கை வையுங்கள்; சாதாரண மக்களை உலகத்தில் தாக்கத்தை உண்டாக்கும்படி அவர் தயார் செய்கிறார்.

 

நான்கு வட்டங்களில் சாட்சியாக இருப்பது: பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:8

 

1.   உள்ளூர் - எருசலேம்: குடும்பம், சபை, பணியிடம், சுற்றுப்புறம் ஆகியவற்றிலிருந்து தொடங்குங்கள்.

2.   பிராந்தியம் - யூதேயா: அருகிலுள்ள நகரங்கள் மற்றும் சமுதாயங்களுக்கு விரிவுபடுத்துங்கள்.

3.   கலாச்சார வேறுபாடு - சமாரியா: கலாச்சார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தூரத்தில் இருப்பவர்களை சென்றடையுங்கள்.

4.   உலகளவு - பூமியின் கடைசிப்பரியந்தம்: உலகளவில் தேவனின் பணியில் பங்கு எடுத்துக்கொள்ளுங்கள்.

 

சாட்சியாக இருப்பது வாழ்நாள் பயணமாகும். அது விசுவாசம், அன்பு மற்றும் கீழ்ப்படிதலின் சிறு படிகளுடன் தொடங்கி, உலகை இயேசுவை நோக்கிச் செல்லச் செய்யும் சக்திவாய்ந்த சாட்சியமாக வளர்கிறது. அவருடைய ஆவியால், உங்கள் வாழ்க்கை உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு வட்டத்திலும் - அருகிலும் தொலைவிலும் - கிறிஸ்துவைப் பிரதிபலிக்க முடியும்.

 

 

 

 

 

 

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Philip
3 days ago
Rated 5 out of 5 stars.

Amen

Like

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page