top of page

தேவ இரக்கத்தைக் கற்றுக்கொள்தல்

  • Kirupakaran
  • Jun 8
  • 6 min read
ree

யாராவது நமக்கு இரக்கம் காட்டும்போது, ​​நம்மைப் பற்றி அக்கறை கொள்ளும் போது, ​​நம்மைப் பற்றி விசாரிக்கும்போது அல்லது கஷ்ட காலங்களில் நமக்கு உதவும்போது நாம் விசேஷமான அரவணைப்பை உணர்கிறோம். மனித இரக்கம் பெரும்பாலும் மற்றவர்களுடன் நாம் வைத்திருக்கும் உறவுகளிலும் தொடர்புகளிலும் இருந்து உருவாகிறது. இது மற்றவர்கள் நம்மை எப்படி நடத்துகிறார்கள் என்பதையே அடிப்படையாகக் கொண்டது - பொதுவாக நம்மிடம் அன்பாக நடப்பவர்களிடம் நாமும் அன்பாக நடக்கிறோம். இது பெரும்பாலும் சுயநலம் சார்ந்ததும் பரஸ்பர அக்கறைக்குள் மட்டுப்படுத்தப்பட்டதுமாக இருக்கிறது.

 

ஆனால் இயேசு வித்தியாசமானவர். அவருடைய இரக்கம் நாம் அவருக்காகச் செய்யும் செயல்களைச் சார்ந்தது அல்ல. மேய்ப்பன் இல்லாமல் தொலைந்து போன ஆடுகளைப் போல - உதவியற்றவர்களாகவும், பாவத்தில் சிக்கித் தவிப்பவர்களாகவும் அவர் நம்மைப் பார்க்கிறார். நாம் போராடும்போது அவருடைய இருதயம் உருகுகிறது. தொலைந்து போன ஒரு ஆட்டைக் காப்பதற்காக, தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு, அதைத் தேடிக் கொண்டு வந்து மீண்டும் ராஜ்யத்திற்குள் சேர்ப்பார் என்று வேதம் கூறுகிறது.

 

அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, மத்தேயு 9:36

 

மத்தேயு 15:29–39 இல், இயேசு 4,000 பேருக்கு உணவளிக்கும் அற்புதத்தைச் செய்தார் - அந்த எண்ணிக்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இல்லாமல் ஆண்கள் மட்டுமே அடங்குவர்.

 

இந்த வசனங்களை நாம் ஆழமாகப் பார்க்கும்போது, ​​அது வெறும் ஒரு அற்புத நிகழ்வாக மட்டும் இல்லாமல், ஒரு ஆவிக்குரிய வழிகாட்டியாகவும் உள்ளது. கர்த்தரின் இரக்கம், கிருபை மற்றும் தயையைப் பெறுவதற்கு நம் இருதயங்களை எவ்வாறு திறக்கலாம் என்பதை இது நமக்குக் கற்றுத் தருகிறது.

 

முழு கதையும் இந்தக் குறுகிய காணொளியில் விவரிக்கப்பட்டுள்ளது.

 

 


இயேசுவின் மனதுருக்கத்தைக் கற்றுக்கொள்தல்

 

4000 பேருக்கு உணவளிக்கும் அற்புதத்தில் இயேசுவின் இரக்கத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்.

 

அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து,அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார். ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். மத்தேயு 15:30-31

 

1. மலைப்பகுதி  

  • மத்தேயு 15:29 இல், இயேசு மலைப்பகுதிக்கு சென்றார் என்றும், திரளான ஜனங்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள் என்றும் வாசிக்கிறோம். 30 ஆவது வசனத்தில், சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை திரளான ஜனங்கள் அவரிடம் அழைத்துக்கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

  • ஆனால் யோசித்துப் பாருங்கள் - இந்த ஜனங்கள் எப்படி அங்கு வந்தார்கள்?

    • நடக்க முடியாதவர்கள் தாங்களாக வந்து இருக்க முடியாது.

    • குருடர்களால் உதவி இல்லாமல் தங்கள் வழியைக் கண்டுபிடிக்க முடியாது.

    • ஊனமுற்றவர்கள் கற்கள் நிறைந்த பாதையில் நடப்பதில் சிரமப்பட்டிருக்க வேண்டும்.

  • நிச்சயமாக யாரோ ஒருவர் அவர்களுக்கு உதவியிருக்க வேண்டும் -  நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது ஊழியர்கள் அவர்களை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள்.

  • சப்பாணிகள், குருடர், ஊனர் நடக்க அது எளிதான இடம் அல்ல. இவை (சப்பாணிகள், குருடர், ஊனர்) இன்று நம்மைச் சுற்றி நாம் காணும் ஆவிக்குரிய நிலைமைகளைக் குறிக்கிறது. பலர் வழிமறந்து, காயப்பட்டு, வேதனைப்படுகிறார்கள், உதவி தேவைப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, மத்தேயு 9:36

  • அதனால்தான் நமக்கு இன்று மற்றவர்களை இயேசுவிடம் கொண்டு வர விருப்பமுள்ள ஊழியர்கள் தேவை.

  • நீங்கள் அந்த நபராக இருக்கலாம். அது ஒரு நண்பராக இருந்தாலும் சரி, குடும்ப உறுப்பினராக இருந்தாலும் சரி, அல்லது அந்நியராக இருந்தாலும் சரி, அவர்களை வழிநடத்த தேவன் உங்களைப் பயன்படுத்தலாம்.

  • உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: யாரோ ஒருவர் உங்களிடம் சொன்னதற்காக நீங்கள் ஊழியம் செய்கிறீர்களா? அல்லது தேவனின்  உண்மையான ஊழியராக, உங்கள் இருதயத்திலிருந்து அதைச் செய்கிறீர்களா? மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். அடிமையானவனானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து, மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். எபேசியர் 6:6-8

இது நமக்குக் கற்றுத்தரும் பாடம்

  • நாம் உண்மையிலேயே தேவனை நேசித்து விசுவாசம் வைத்திருந்தால், எந்தக் கஷ்டத்தையும் கடந்து, எந்த மலையையும் ஏறி, அவருடன் இருக்க முயற்சிப்போம்.

  • ஊழியர்களாகிய நாம் மற்றவர்களை இயேசுவிடம் வழிநடத்த வேண்டும். அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டி அவர்களின் உடைந்த மனங்களைக் குணமாக்குவார்.

  • அப்படியானால், நீங்கள் மற்றவர்களை அவரிடம் வழிநடத்துகிறீர்களா? அல்லது உங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறீர்களா?

 

2. இயேசுவின் பாதத்தில் வைத்தல் - சரணடைதல்

  • மத்தேயு 15:30 இல், "..அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்;..." என்று சொல்லப்பட்டுள்ளது. இது சரணடைதலின் வல்லமையை நமக்குக் காட்டுகிறது.

  • ஜனங்கள் பிணியாளிகளை இயேசுவிடம் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை அவருடைய பாதத்தில் வைத்தார்கள். அதுதான் நாமும் செய்ய வேண்டியது: நமது பிரச்சனைகள் அனைத்தையும் இயேசுவின் பாதத்தில் வைத்து, அவற்றை அவர் கையாள அனுமதிக்க வேண்டும்.

  • பிணியாளிகளை அழைத்து வந்தவர்கள் எல்லாவற்றையும் தாங்களே சரிசெய்ய முயற்சிக்கவில்லை. அவர்களை இயேசுவிடம் அழைத்து வந்து, அவரிடம் ஒப்புவித்தார்கள்.

  • அதேபோல், பிணியாளிகளும் கூட அவர்களை அழைத்து வந்தவர்களைப் பற்றிக்கொள்ளவில்லை. அவர்கள் இயேசுவைப் பணிந்துகொள்ளத் தேர்ந்தெடுத்தனர்.

  • உண்மையான சரணடைதல் மனதுருக்கத்தைக் கொண்டுவருகிறது. தேவன் நம் மீது கோபமாக இருக்கலாம் என்று நாம் நினைத்தாலும், அவரிடம் ஒப்புவிக்கும்போது அது அவருடைய இருதயத்தை அசைக்கிறது. யோனா 3:9–10 இல் சொல்லப்படுவது போல, ஜனங்கள் தங்கள் பொல்லாத வழிகளிலிருந்து திரும்பியபோது, ​​தேவன் அதைக் கண்டு மனஸ்தாபப்பட்டு,  அவர்கள் மீது அழிவை ஏற்படுத்தவில்லை.

  • யாருக்குத் தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான். அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப்பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு,அதைச் செய்யாதிருந்தார். யோனா 3:9-10

  • நாம் இயேசுவின் பாதத்தில் தாழ்த்தி வணங்குகிறோம், ஏனென்றால் அவர் நம்மை உருவாக்கியவர், சகலத்தையும் படைத்தவர்.

  • மனிதரை நம்பி அவர்களை வணங்காதீர்கள். இயேசுவைப் பணிந்துகொண்டு அவரை மட்டுமே தொழுது அவரிடம் சரணடையுங்கள்.

    • அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப்போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரை பணிந்துகொண்டார்கள். மத்தேயு 28:9

    • நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; வெளிப்படுத்தின விசேஷம் 1:17

இது நமக்குக் கற்றுத்தரும் பாடம்

  • நமது போராட்டங்களையும் வெற்றிகளையும் இயேசுவின் பாதத்தில் வைக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

  • நமது உடைந்த, இயலாத நிலையை அவர் மட்டுமே மாற்றி நம்மை மீட்டெடுக்க முடியும் - பலவீனத்தை பலமாக மாற்றி, மீண்டும் நடக்க உதவுவார்.

 

3. இயேசு தம்முடைய வாக்குறுதியின் காரணமாக இரக்கம் காட்டுகிறார்

  • இயேசு நம்மை இருளில் சிக்கிய உதவியற்றவர்களாகக் காண்கிறார். அவர் இல்லாமல், நாம் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலபலவீனராகவும், சிங்கத்தால் கண்காணிக்கப்படும் இரையைப் போல ஆபத்தில் உள்ளவர்களாகவும் இருக்கிறோம். அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, மத்தேயு 9:36

  • இயேசு நம் பலவீனத்தைப் புரிந்துகொள்கிறார். வாழ்க்கை எவ்வளவு கடினம் என்பதை அவர் அறிவார் மற்றும், நமது வேதனையையும்உணர்கிறார். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். எபிரெயர் 4:15

  • நாம் பரிபூரணமாக இல்லாமல், உடைந்தவர்களாகவும் உதவி தேவைப்படுபவர்களாகவும் இருப்பதை இயேசு அறிந்திருக்கிறார் - அது அவருடைய இருதயத்தை நெகிழ வைக்கிறது.

  • நம் வாழ்க்கையோ, திருச்சபையோ ஆவிக்குரிய ரீதியாகவோ அல்லது வெளிப்புறமாகவோ உடைந்து போனது போல தோன்றும் போது, ​​அவர் அதைப் புறக்கணிப்பதில்லை. நமது சிதைவுகளைக் கண்டு அவர் இரக்கத்துடன் பதிலளிக்கிறார்.

  • அவர் சப்பாணியையும், குருடரையும், ஊமையரையும் பார்த்ததைப் போலவே, இப்போதும் மீட்டெடுக்கவும் குணப்படுத்தவும்விரும்புகிறார். கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச்செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும். ஏசாயா 51:3

இது நமக்குக் கற்றுத்தரும் பாடம்

  • நம் ஆண்டவராகிய இயேசு இரக்கத்தின் ஆண்டவராக இருக்கிறார், நாம் அவரிடம் பெற்றிருக்கும் வாக்குத்தத்தங்களின் காரணமாக அவருடைய இரக்கம் வெளிப்படுகிறது.

  • சங்கீதம் 103:11 இல் கூறப்பட்டுள்ளபடி, நம் ஆண்டவரின் இயல்பு முழுமையாக இரக்கத்தால் நிறைந்துள்ளது. பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.

 

4. இரக்கம் செயலுக்கு வழிவகுக்கிறது

  • மத்தேயு 15:30 இல், "...அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்." என்று சொல்லப்பட்டுள்ளது.

  • இயேசு ஜனங்களுக்காக பரிதாபப்பட்டது மட்டுமல்லாமல் - அவர் செயல்பட்டார். அவரது இரக்கம் எப்போதும் உண்மையான மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.

  • தெருவில் ஏழைகள், தரித்திரர்களைப் பார்க்கும்போது நாம் ஒரு சிறிய உதவியைச் செய்யலாம் - ஆனால் அது பெரும்பாலும் தற்காலிகமானது மட்டுமே.

  • ஆனால் இயேசு நம்மைப் போல வரம்புக்குட்பட்டவர் அல்ல. அவர் நிரந்தர சுகத்தையும் விடுதலையையும் அளிக்கும் ஒரு செழிப்பான வல்லமையான தேவன்.

  • கிறிஸ்துவில், நாம் விடுதலை பெறுகிறோம்:

    • விடுதலை - அவர் நம்மை ஆவிக்குரிய ரீதியில் விடுவிக்கிறார்.

    • அகற்றுதல் - அவர் நம் பாவங்களை முற்றிலுமாக அகற்றுகிறார்.

  • இது எப்படி சாத்தியம்? ஏனென்றால் இயேசு தேவனுடைய குமாரன், ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர். குணப்படுத்தவும், இரட்சிக்கவும், மீட்டெடுக்கவும் அவருக்கு முழு அதிகாரம் உண்டு. அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மத்தேயு 28:18

  • இந்த உண்மையை நம்மை மறக்கச் செய்ய எதிரி முயற்சி செய்கிறான் - தேவன் மீது சார்ந்திருப்பதற்குப் பதிலாக மனுஷர் மீது சார்ந்திருக்கச் செய்ய முயற்சிக்கிறான். ஆனால் நமது உதவி எல்லா வல்லமையும் கொண்ட இயேசுவிடமிருந்து வருகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இது நமக்குக் கற்றுத்தரும் பாடம்

  • நமக்கு அன்பும் இரக்கமும் கொண்ட ஒரு பிதா இருக்கிறார் என்பதை எதிரி மறக்கச் செய்ய முயற்சிக்கிறான். ஆனால் நாம் அவரை நோக்கிக் கூப்பிட்டால், அவர் எப்போதும் உதவத் தயாராக இருக்கிறார். அவரே இரட்சிப்பின் மூலகாரணரும், வானத்தையும் பூமியையும் படைத்தவருமாவார். நாம் எவ்வளவு கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டாலும், அவருடைய வல்லமைக்கு எல்லையே இல்லை.

  • தேவன் தற்காலிக தீர்வுகளை வழங்குவதில்லை - அவரிடம் முழுமையான சுதந்திரம் (விடுதலை) மற்றும் பிரச்சினையின் முழுமையான நீக்கம் (அழிப்பு) உண்டு. அவரது தீர்வுகள் நிலையானவை மற்றும் வாழ்க்கையை மாற்றக்கூடியவை.

 

5. தேவனை அவருடைய செயல்களுக்காகத் துதியுங்கள்

ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். மத்தேயு 15:31

  • தேவன் அற்புதமானவர், அவர் செய்யும் அனைத்தும் ஜனங்களை பிரமிக்க வைக்கின்றன.

  • ஜனங்கள் அற்புதங்களைக் கண்டபோது, ​​உதவியாளர்களையோ அல்லது ஊழியர்களையோ புகழ்ந்து பேசவில்லை - அவர்கள் எல்லா மகிமையையும் தேவனுக்கே செலுத்தினார்கள். அல்லேலூயா!

  • தேவனைத் துதிப்பது என்பது அவரைத் தொழுதுகொள்வதாகும் - நாம் படைக்கப்பட்டதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.

  • ஆனால், நாம் இதை பெரும்பாலும் மறந்து விடுகிறோம். தேவன் யார் என்பதற்காகவும், அவர் செய்த நன்மைகளுக்காகவும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும் என்று அவர் நமக்கு நினைவூட்டுகிறார்.

  • சங்கீதம் மற்றும் எபிரெயர் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதுபோல, நாம் இயேசுவின் மூலம் தேவனை ஆராதிக்கிறோம்.

    • பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.  சங்கீதம் 96:9

    • ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். எபிரேயர் 13:15

இது நமக்குக் கற்றுத்தரும் பாடம்

  • நாம் தேவனைத் துதிப்பதற்காகவே படைக்கப்பட்டவர்கள், ஏனெனில் அவர் நம்மைப் படைத்தவர். குணப்படுத்துதல் மற்றும் விடுதலையின் அனைத்து செயல்களும் அவரைத் துதிப்பதற்கே.

  • அவருடைய மகிமையான நாமத்தைத் துதிப்போம்!! அல்லேலூயா.

 

6. இயேசுவோடு ஐக்கியத்தில் இருங்கள்

பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்துபோவார்களே என்றார். மத்தேயு 15:32

  • ஜனங்கள் குணமடைந்த பிறகு அவ்விடத்திலிருந்து செல்லவில்லை - அவர்கள் மூன்று நாட்கள் உணவு இல்லாமல் இயேசுவுடன் இருந்தனர்.

  • அது அவர்களின் விசுவாசத்தையும், அவரை மேலும் அறிய விரும்பிய ஆவலையும் காட்டுகிறது. சரீரரீதியான குணப்படுத்துதலை மட்டுமல்லாது, அவரிடமிருந்து ஆவிக்குரிய குணப்படுத்துதலைப் பெற்று, நிலைத்திருக்கும் ஜீவ உணவைக் கொள்வதற்காகவே அவர்கள் இருந்தார்கள்.

  • இயேசு அவர்களின் பக்தியைக் கவனித்து, மீண்டும் இரக்கத்துடன் பதிலளித்தார்.

  • இயேசுவுடனான உண்மையான ஐக்கியம் இப்படித்தான் இருக்கும் - ஆசீர்வாதத்தைப் பெற்ற பிறகு அவசரமாக சென்றுவிடாமல், அவருக்காகத் தங்கி, அவரை ஆராதித்து, அவருக்காகக் காத்திருப்பது.

  • அவர் பரிசுத்த ஐக்கியத்தில் தம்முடைய சீஷர்களை ஆசீர்வதித்தது போலவே அவர்களை ஆசீர்வதித்தார். அப்பத்தை எடுத்து வானத்தை நோக்கிப் பார்த்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டு, அவர்களுக்கு சாப்பிடக் கொடுத்தார். அவர் அவர்களுக்குக் கொடுத்த ஆவிக்குரிய மன்னாவின் அடையாளமாக இது இருக்கிறது. அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள். மத்தேயு 15:36

  • இயேசுவிடமிருந்து நாம் பெறும் உணவில் ஆவிக்குரிய திருப்தி உள்ளது. எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள். மத்தேயு 15:37

இது நமக்குக் கற்றுத்தரும் பாடம்

  • தேவாலயத்திற்கு சென்று வந்த பிறகு அல்லது ஜெபத்திற்கு பதில் பெற்ற பிறகு, நாம் அவசரமாகச் செல்கிறோமா? அல்லது தங்கி அவருக்கு நன்றி சொல்ல நேரம் ஒதுக்குகிறோமா?

  • நாம் பெற்றுக்கொள்ள மட்டுமே காத்திருக்கிறோமா? அல்லது ஆராதிப்பதற்கும் காத்திருக்கிறோமா?

  • ஒரு தரித்திரன் மேலும் கேட்பதற்காக மட்டுமல்லாமல் நன்றி சொல்லத் திரும்பி வருவதைப்போல், நாமும், “நன்றி பிதாவே, நான் உம்மை ஆராதிக்கிறேன்!” என்று சொல்வதற்குத் திரும்பி வர வேண்டும்.

  • தேவனுக்காகக் காத்திருப்பவர்களுக்கு அவருடைய இரக்கம் வாக்குப்பண்ணப்பட்டுள்ளது. நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.  கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன். தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது. புலம்பல் 3:22-26

 

சுருக்கம்

  • இன்று நீங்கள் எவ்வாறான சூழ்நிலையிலிருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை - ஆனால் ஏதோ ஒரு வகையில், நாம் அனைவரும் ஆவிக்குரிய ரீதியில் முடவர்களாகவோ, குருடர்களாகவோ அல்லது ஊனமுற்றவர்களாகவோ இருக்கிறோம்.

  • உங்கள் இருதயத்தை நோக்கிப் பார்க்கவும், அவரது அன்பை உங்களில் மீண்டும் புதுப்பிக்கவும் வேண்டிக்கொள்ளுங்கள், அப்பொழுது அவருடைய ஒளி உங்கள் வாழ்க்கையில் பிரகாசிக்க முடியும்.

  • நீங்கள் ஏற்கனவே தேவனை அறிந்து, அவருக்கு ஊழியம் செய்து கொண்டிருந்தால், இந்த ஆசீர்வாதம் உங்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, பிறருடன் பகிர்வதற்காகவே கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  • இயேசு கட்டளையிட்டபடி, இயேசு கிறிஸ்துவே தேவன் என்பதை அனைத்து சிருஷ்டியும் அறியும் வகையில், பூமியின் எல்லையெங்கும் நற்செய்தியை அறிவிக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

  • அவரில் நாம் இரட்சிப்பு, சமாதானம் மற்றும் உண்மையான மகிழ்ச்சியைக் காண்கிறோம். ஏனென்றால் அவர் தான் நம்முடைய ஒரே இரட்சகர்.

 

 

 

 

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Philip C
Jun 15
Rated 5 out of 5 stars.

Amen

Like

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page