சகரியாவின் போராட்டம் - சந்தேகப் பிரச்சனை
- Kirupakaran
- Jun 30
- 6 min read

மனிதர்களாகிய நாம், காண்பதை நம்புவதையே சார்ந்திருக்கிறோம். குறிப்பாக குற்றங்களும் ஏமாற்றுதலும் அதிகரித்து வரும் இன்றைய உலகத்தில், எல்லாவற்றையும் உண்மை என்று ஏற்றுக்கொள்வதற்கு முன்னதாக அதை இருமுறை சோதித்து உறுதி செய்ய விரும்புகிறோம். நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கின்றனவா என உறுதிப்படுத்த பல்வேறு ஆதாரங்களிடமிருந்து உறுதிப்படுத்தலை நாடுகிறோம்.
ஆனால் ஆன்மீக உலகத்தைப் பொறுத்தவரை, விசுவாசம் நம்மை ஆண்டவருடன் இணைக்கும் அத்தியாவசிய இணைப்பாக மாறுகிறது. விசுவாசம் இல்லாமல், அவரைப் பிரியப்படுத்துவது கூடாத காரியம். தேவனின் திறனை சந்தேகிப்பது நமது நம்பிக்கையின் அடித்தளத்தையே சவாலுக்கு உட்படுத்துகிறது. அவர் நம்மை உருவாக்கியவர் என்பதையும் அவரால் செய்ய இயலாததென்பது எதுவும் இல்லை என்பதையும் மறந்துவிடுகிறோம். அதற்கு பதிலாக, நம் சுயபலத்தை நம்பி எல்லாவற்றையும் நாமே கையாள முடியும் என்று நம்புகிறோம். மேலும் இந்த சுயசார்பானது சந்தேகத்தை வளர்த்து நமது ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கிறது.
நம்பிக்கையில் ஏற்படும் சந்தேகங்கள் தொடர்பாக, ஜனங்கள் பொதுவாக மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறார்கள்.
1. நாத்திகரின் சந்தேகங்கள் (100% சுயம் | 0% கடவுள்)
நாத்திகர்கள் (கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்) பெரும்பாலும் பெருமையையும் அறிவையும் நம்பியிருக்கிறார்கள். கடவுளை மறுத்து நம்பிக்கையை கேலி செய்கிறார்கள். அவர்கள் உண்மைத்தன்மையுடன் அல்லாமல், ஆணவத்துடன் நம்பிக்கையை சவால் செய்கிறார்கள். வேதம் அப்படிப்பட்டவர்களை மதிகெட்டவன் என்று அழைக்கிறது. தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. சங்கீதம் 14:1
2. கர்த்தரை ருசித்துப் பார்க்காத ஒரு விசுவாசியின் சந்தேகங்கள் ((50% சுயம் | 50% கடவுள்)
இவர்கள் இயேசுவை முழுமையாக சந்திக்காத ஆனால் உண்மையுள்ள போராடும் நபர்கள்.
அவர்களின் சந்தேகங்கள் பெரும்பாலும் அவர்களின் சுயக்கட்டுப்பாட்டிலிருந்து உருவாகின்றன.
கீழ்ப்படிய விரும்பும் மனம் சத்தியத்தை அங்கீகரிக்கும் என்று இயேசு யோவான் 7:17 இல் கற்பிக்கிறார். அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். யோவான் 7:17
3. ஒரு தீவிர விசுவாசியின் சந்தேகங்கள் (0% சுயம் | 100% கடவுள்)
உண்மையான விசுவாசிகள் கூட கடினமான காலங்களில் தங்கள் பார்வையை இயேசுவை விட்டு விலக்கும்போது சந்தேகிக்கலாம்.
புயலுக்கு மத்தியில் இருந்த இருந்த சீஷர்களைப் போல (மத்தேயு 8:25-26) அல்லது பிசாசு பிடித்த பிள்ளையின் தகப்பனைப் போல (மாற்கு 9:22-24) அவர்கள் உதவிக்காக கூக்குரலிடுகிறார்கள், இயேசு அவர்களின் விசுவாசத்திற்கு பதிலளிக்கிறார்.
சகரியா சந்தேகத்தை எதிர்கொண்டது மற்றும் சந்தேகங்களுடனான அவரது போராட்டம் மூலம் சந்தேகத்தைக் குறித்தும் அதை எவ்வாறு மேற்கொள்வது என்பதைக் குறித்தும் பயனுள்ள தகவல்களைப் பெறுகிறோம்.
இந்த சகரியா யார்?
யூதேயாவின் ராஜாவான ஏரோதின் ஆட்சிக் காலத்தில் சகரியா ஒரு ஆசாரியராக இருந்தார். அவரும் அவரது மனைவி எலிசபெத்தும் பிள்ளை இல்லாதவர்களாகவும், வயது முதிர்ந்தவர்களாகவும், ஒரு பிள்ளையை கருத்தரிக்க முடியாதவர்களாகவும் இருந்தனர்.
இருவரும் தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்தனர்.
இதை நாம் லூக்கா 1:5-7 இல் வாசிக்கிறோம்.
தேவனின் பார்வையில் நீதிமான்களாக இருந்ததால், சகரியாவும் எலிசபெத்தும் தங்களுக்கு பிள்ளை இல்லாததைக் குறித்து நீண்ட காலமாக ஊக்கமாக ஜெபித்து வந்திருக்கலாம். லூக்கா 1:12–16 இல், சகரியாவுக்கு ஒரு தேவதூதன் தோன்றி, அவர்களுக்கு ஒரு குமாரன் பிறப்பான் என்றும், அவர் பெயர் யோவான் என்று இருக்கும் என்றும் தேவன் அளித்த வாக்குறுதியை அறிவித்ததாக வாசிக்கிறோம்.
சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான். தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். லூக்கா 1:12-16
சகரியாவின் சந்தேகம்
அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்; தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன். இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான். லூக்கா 1:18-20
சகரியா தேவாலயத்தில் இருந்த போது, தேவ சந்நிதியில் நிற்கும் தேவதூதரான காபிரியேல், சகரியாவுக்கும் அவரது மனைவி எலிசபெத்துக்கும் ஒரு குமாரன் பிறப்பான் என்ற செய்தியைக் கொடுத்தார். பல வருட ஜெபம் மற்றும் காத்திருப்புக்குப் பிறகு, இது மிகுந்த மகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால் சகரியாவால் அதை நம்பவே முடியவில்லை. அவரும் எலிசபெத்தும் வயதுசென்றவர்களானதால், தங்களுக்கு இனி குழந்தை பிறக்காது என்பதை ஏற்றுக்கொண்டிருந்தார். அவர் தேவனின் சித்தத்தை விசுவாசித்து வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
எனவே வாக்குத்தத்தம் வந்தபோது, சகரியாவிற்கு அதை நம்புவது கடினமாக இருந்தது. மீண்டும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து வேதனையை அனுபவிக்க விரும்பவில்லை. அவரது சந்தேகத்தின் காரணமாக, வாக்குத்தத்தம் நிறைவேறும் வரை அவர் மௌனமாக்கப்பட்டார். விசுவாசம் மங்கும்போது சந்தேகம் எவ்வாறு வளரக்கூடும் என்பதையும், நமது விசுவாசம் தடுமாறும்போது கூட தேவனின் திட்டங்கள் எவ்வாறு நிலைத்திருக்கும் என்பதையும் அவரது கதை நமக்கு நினைவூட்டுகிறது.
சந்தேகத்தின் பிரச்சனை குறித்து சகரியா என்ன கற்பிக்க முடியும்?
1. நாம் அனைவரும் சந்தேகத்தின் பிரச்சனையில் போராடுகிறோம்.
a) நீதிமான்களுக்குக் கூட சந்தேகம் ஒரு பிரச்சனைதான்.
"கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்" என்று சகரியா விவரிக்கப்பட்டார் (லூக்கா 1:6). இது பரிசேயர்களைப் போல வெறுமனே வெளிப்புறக் கீழ்ப்படிதலாக அல்லாமல், உண்மையான உள்ளத்திலிருந்து வந்தது. பல ஆண்டுகளாக தேவனுடன் நெருக்கமாக நடந்து வந்த போதும் அவரும் சந்தேகத்துடன் போராடினார், யாரும் சந்தேகத்திலிருந்து முழுமையாக விடுபட்டவர்கள் அல்ல என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.
வேதத்தில் வலிமையான விசுவாசிகள் கூட சந்தேகப்படும் தருணங்களை சந்தித்திருக்கின்றனர். தேவன் அவளுக்கு ஒரு பிள்ளை பிறக்கும் என்று சொன்னபோது சாராளும் சந்தேகப்பட்டாள். அது முடியாத காரியமாக தோன்றியதால் சிரித்தாள் (ஆதியாகமம் 18:10–15).
சந்தேகம் தெய்வீக மக்களையும் பாதிக்கக்கூடும் என்பதை இது காட்டுகிறது. சகரியா சாராள் போன்ற உண்மையுள்ள ஜனங்கள் கூட சந்தேகமுற்றிருந்தால், நாமும் எப்போதும் விழிப்புடன் இருந்து நம் இருதயங்களை காத்துக் கொள்ள வேண்டும். சந்தேகம் எங்கேயிருந்து வருகிறது? என்று இது மேலும் ஒரு கேள்வியையும் எழுப்புகிறது.
b) ஆதாரங்கள் இல்லாததால் சந்தேகம் ஏற்படவில்லை, மாறாக சந்தேகம் நமது பாவமிக்க இருதயங்களிலிருந்து தோன்றுகிறது.
"நான் ஒரு அற்புதத்தைக் கண்டாலோ அல்லது தேவனிடமிருந்து நேரடியாகக் கேட்டாலோ விசுவாசிப்பேன்" என்று யாராவது சொல்வதை நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? ஆனால் அது எல்லா நேரமும் உண்மை இல்லை. ஒரு தூதன் தோன்றி தன்னிடம் பேசியபோது கூட சகரியா முழுமையாக நம்பவில்லை.
“சகரியாவின் கேள்விக்கும் மரியாளின் கேள்விக்கும் என்ன வித்தியாசம்?” என்று நீங்கள் யோசிக்கலாம்.
“அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே” (லூக்கா 1:18) என்று சகரியா கேட்டார்.
“அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே” (லூக்கா 1:34) என்று மரியாள் கேட்டாள்.
சகரியா ஒரு அடையாளத்தைக் கேட்டபோது, சந்தேகப்பட்டதற்காக அவர் தேவனால் கண்டிக்கப்பட்டார். ஆனால் மரியாளோ கடிந்து கொள்ளப்படவில்லை. அதேபோல், ஆபிரகாம் முதுமையின் காரணமாகக் கேள்வி கேட்டார், ஆனால் கடிந்து கொள்ளப்படவில்லை. கிதியோன் இரண்டு முறை அடையாளம் கேட்டபோதும், தேவன் அவருக்குப் பதிலளித்தார். மறுபுறம், சந்தேகத்தில் சிரித்ததற்காக சாராள் திருத்தப்பட்டாள்.
ஏன் இந்த வேறுபாடு? ஏனென்றால் தேவன் இருதயத்தைப் பார்க்கிறார். சகரியாவின் சந்தேகம் வெறும் குழப்பத்தால் அல்ல, அவிசுவாசத்தினால் வந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். வயதின் காரணமாக அது சாத்தியமில்லை என்று சகரியா முடிவுசெய்துவிட்டார் - அவர் மனித பகுத்தறிவால் தேவனை மட்டுப்படுத்தினார்.
காபிரியேல் பின்னர் மரியாளிடம், தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான். லூக்கா 1:37
சகரியா இதை நினைவில் வைத்திருந்திருக்க வேண்டும். நாம் பல வருடங்களாக தேவனைப் பின்பற்றிக் கொண்டிருந்தாலும், ஏதாவது சாத்தியமற்றது என்று தோன்றும்போது, நம் இருதயங்களை சரிபார்க்க வேண்டும். தேவன் எதையும் செய்ய வல்லவர் என்பதை வேதாகமத்தில் ஏற்கனவே அவர் பலமுறை காண்பித்திருக்கிறார். உண்மையான பிரச்சனை ஆதாரங்களின் பற்றாக்குறை அல்ல,தேவன் என்ன செய்ய முடியும் என்பதைக் கட்டுப்படுத்தும் நமது சொந்த இருதயங்கள் தான்.
c) சந்தேகம் பெரும்பாலும் ஏமாற்றங்களுடனோ அல்லது நீண்டகால சோதனைகளுடனோ தொடர்புடையதாக இருக்கிறது.
சகரியாவும் எலிசபெத்தும் பல தசாப்தங்களாக திருமணமானவர்களாக இருந்திருக்கலாம். அவர்களுடைய கலாச்சாரத்தில், குழந்தையில்லாமை ஒரு அவமானமாகக் கருதப்பட்டது. அவர்கள் பல ஆண்டுகளாக குழந்தைக்காக ஜெபித்து வந்தனர், ஆனால் எதுவும் நடக்காதபோது, அது தேவனுடைய சித்தமல்ல என்று அவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். எனவே தேவதூதன் இறுதியாக அவர்களுக்கு ஒரு குமாரன் பிறப்பான் என்று அறிவித்தபோது, சகரியா சந்தேகித்தார் - அது மிகவும் தாமதமாகத் தோன்றியது.
நாம் அனைவரும் அந்த நிலையைக் கடந்து இருக்கிறோம் - நீண்ட காலமாக ஜெபித்து இறுதியில் நம்பிக்கையை இழந்து விடுகிறோம்.ஆனால் ஒரு சிறிய நம்பிக்கை கண்ணுக்கு புலப்படும்போது மீண்டும் ஏமாற்றம் ஏற்படக்கூடுமோ என்ற பயத்தில் தயங்குகிறோம். உள்ளுக்குள்ளே நாம் தேவனை சந்தேகிக்கிறோம்.
ஆனாலும், தேவன் தம்முடைய கிருபையால் நம்முடைய சந்தேகங்களுக்கிடையிலும் நம்மை ஆசீர்வதிக்கிறார். இதுவே சகரியாவின் காரியத்திலும் நடந்தது. தேவன் அவரை ஒழுங்குபடுத்தினாலும், அவரது சந்தேகம் தேவனுடைய திட்டத்தைத் தடுக்கவில்லை.
சந்தேகத்தை மேற்கொள்ள வேண்டுமானால், அது எங்கிருந்து வருகிறது என்பதை முதலில் நாம் அறிய வேண்டும் - அது வலிகளாலும், ஏமாற்றங்களாலும் உருவாகிய நம் பாவமிக்க இருதயத்திலிருந்து வருகிறது. ஆனால் லூக்கா சொல்வது போல், தேவனின் உண்மைத்தன்மை நமது பரிபூரண விசுவாசத்தைச் சார்ந்தது அல்ல.
2. சந்தேகத்திற்கு ஒரே மருந்து — தேவன் சொல்வதை நிச்சயமாக செய்வார் என்ற விசுவாசம்.
நாம் எதிர்பார்க்கும் விதத்தில் அவர் பதிலளிக்காதபோது, ஏமாற்றமடைந்து சந்தேகப்படுவது எளிது. ஆனால் உண்மையான விசுவாசம் தேவன் இறையாண்மை கொண்டவராக இருப்பதை ஏற்றுக் கொண்டு, அவர் தம்முடைய வாக்குத்தத்தங்களை நிச்சயமாக நிறைவேற்றுவார் என்று விசுவாசிப்பதாகும், அது நாம் நினைத்ததைவிட வேறுபட்டதாக இருந்தாலும் கூட.
தேவன் நம்முடைய சந்தேகங்களுக்கிடையிலும் நம்மை ஆசீர்வதிக்கிறார், அதே சமயம் அன்புடன் நம்மை திருத்துகிறார். சகரியா தேவனுடைய செய்தியை சந்தேகித்ததற்காக, சிட்சையினால் மௌனமாக்கப்பட்டார் (கேட்க முடியாதவராகவும் ஆக்கப்பட்டிருக்கலாம் (லூக்கா 1:20,62)). தேவதூதனை சந்தேகித்ததன் மூலம், அவர் தேவனையே சந்தேகித்தார்.
இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான். அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள். லூக்கா 1:20,62
இதற்கு நேர்மாறாக, மரியாள் தேவனின் வாக்குத்தத்தை விசுவாசித்து, பாக்கியவதி என்று அழைக்கப்பட்டாள் (லூக்கா 1:45). இதுவே முக்கியமான செய்தி : தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுபவர் என்பதால், நாம் சந்தேகமின்றி, உறுதியான விசுவாசத்துடன் பதிலளிக்க வேண்டும்.
சகரியா தேவனைத் துதிக்க வேண்டிய நிலையில் அமைதியாகிவிட்டார். ஆனால் அந்த அமைதியான மாதங்களில், அவர் தன்னைத் தாழ்த்தி, தேவனுடைய வார்த்தையை ஆழமாகத் தியானித்து விசுவாசத்தில் வளர்ந்தார். இறுதியாக அவர் மீண்டும் பேசியபோது, அவரது வார்த்தைகள் துதியால் நிறைந்திருந்தன. (லூக்கா 1:68–79).
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்; தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று, அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்; ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே, தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு, தம்முடைய தாசனாகிய தாவீதின்வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார். நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும், நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய். அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான். லூக்கா 1:68-79
சந்தேகம் என்பது முடிவாக இருக்க வேண்டியதில்லை. சகரியாவைப் போல, தேவனின் சிட்சையை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டால், விசுவாசத்திலும் மகிழ்ச்சியிலும் நாம் பலப்படுவோம்.
சந்தேகத்தை மேற்கொள்வதற்கான திறவுகோல் எளிது: தேவன் சொல்வதைச் செய்வார் என்று விசுவாசியுங்கள்.
சுருக்கம்
நாம் உடனடி பதில்களை எதிர்பார்க்கும் உலகத்தில் வாழ்கிறோம், ஆனால் தேவனுடைய நேரம் நம்முடைய நேரத்தைவிட மாறுபட்டது.
நாம் கேட்பது அவரது சித்தத்துடன் ஒத்துப்போகவில்லை என்றால், அவர் பதிலளிக்காமல் போகலாம் - மேலும் தேவனுடைய மௌனமும் ஒரு பதில்தான், ஆனால் ஆவிக்குரிய வளர்ச்சி இல்லாவிட்டால் அதை ஏற்றுக்கொள்வதோ புரிந்துகொள்வதோ கடினமாக இருக்கும்.
சந்தேகத்திலும் மனச்சோர்விலும், நாம் அரிதாகவே சிந்திக்கிறோம். சில நேரங்களில், நம்முடைய பாவத்தை திருத்தவோ அல்லது ஆழமான பாடங்களை கற்பிக்கவோ தேவன் தாமதிக்கிறார், நம்முடைய வேண்டுகோளை நிராகரிக்க அல்ல.
நமக்கு விசுவாசம் இருக்கின்றது என்று கூறுகிறோம், ஆனால் நம்முடைய இருதயங்களில் இன்னும் முழு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். தேவனை முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும் நேசிக்க வேண்டும் என்று வேதாகமம் சொல்கிறது. இந்த மூன்றும் முழுமையாக சீரமைக்கப்படாவிட்டால், நம் ஜெபங்கள் தேவனைப் பிரியப்படுத்தாமல் போகலாம். இது பெரும்பாலும் பதில்களில் தாமதத்தை ஏற்படுத்துகிறது. இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; மத்தேயு 22:37
நாம் எல்லாவற்றையும் சரியாகச் செய்தாலும் கூட, நாம் உண்மையிலேயே அவரை விசுவாசிக்கிறோமா அல்லது சுயமாக செயல்படுகிறோமா என்று அவர் நம்மைச் சோதிக்கலாம். பொறுமையாகக் காத்திருப்பது ஆவிக்குரிய முதிர்ச்சியின் ஒரு பகுதியாகும் - இது ஆவியின் கனியாகும் (கலாத்தியர் 5:22-23). தேவனிடம் பொறுமை / இச்சையடக்கத்தைக் கேட்டு தொடர்ந்து ஜெபிக்கவும்.
இந்த எளிய ஜெபத்தைப் பயன்படுத்துங்கள்: நீங்கள் ஜெபம்பண்ணவேண்டியவிதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. மத்தேயு 6:9-10
நீங்கள் இப்படி ஜெபிக்கும்போது, அதை உங்கள் இருதயத்திலிருந்து / ஆத்துமாவிலிருந்து / மனதிலிருந்து அர்த்தப்படுத்தி ஜெபியுங்கள்.
"உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக" என்பது தேவனை கனம் பண்ணி ஆராதிக்கிறீர்கள் என்பதாகும்.
"உம்முடைய ராஜ்யம் வருவதாக" என்பது உங்கள் சொந்த விருப்பத்தை விட்டுக்கொடுத்து, தேவனுடைய திட்டமே நிறைவேற வேண்டுமென்று கேட்கிறீர்கள் என்பதாகும்.
"உம்முடைய சித்தம் … செய்யப்படுவதாக" என்பது அவருடைய முடிவுகளுக்கு நீங்கள் முழுமையாகக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதாகும்.
இந்த எளிய ஜெபத்தை உங்கள் இருதயம், மனம் மற்றும் ஆத்துமாவை முழுமையாக ஒருமுகப்படுத்தி, முழு மனதோடு அர்ப்பணித்து ஜெபித்தால், உங்கள் ஜெபங்களுக்கு உடனடியாக பதிலளிக்கப்படும் மற்றும் மனதில் உள்ள சந்தேகங்கள் நீங்கும்.
நமது சந்தேகங்களுக்கிடையிலும், தேவன் கிருபையால் பதிலளிக்கிறார். ஆனால் அவருக்கு நன்றி சொல்லவும் நம்முடைய அவிசுவாசத்தை ஒப்புக்கொள்ளவும் அரிதாகவே நேரம் ஒதுக்குகிறோம்.
பதிலாக, உங்கள் சந்தேகத்தை மன்னித்து, வளர உதவும்படி அவரிடம் கேளுங்கள்.
தேவனுடனான நமது உறவு ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு மட்டுமல்ல - அவருடைய சித்தத்திற்கு ஏற்ப நாம் வடிவமைக்கப்படுவதற்கும் ஆகும்.
விசுவாசத்தின் சாட்சியமாக மற்றவர்களைச் சென்றடைய அவர் உங்களைப் பயன்படுத்த விரும்புகிறார். அவரிடம் கேளுங்கள், அவர் உங்களைப் பயன்படுத்துவார்.



Yes. Good revelation. We never understand "Delays are not denials", and sometime it is hard to believe any positive hope only because of our past failures.
Very useful brother Thank you