top of page

சீஷனின் ஜெபம்

  • Kirupakaran
  • 1 hour ago
  • 6 min read

உலகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் தங்கள் பக்தியை வெளிப்படுத்த ஆச்சரியமான காரியங்களைச் செய்கிறார்கள் — நீண்ட தூரம் நடந்து புனிதப் பயணம் மேற்கொள்வது, பல மணிநேர உபவாசங்கள், மற்றும் விசுவாசிகளாகிய நம்மில் பெரும்பாலோர் ஜெபத்தில் அரிதாகவே காட்டும் ஒழுக்கத்துடனும் சீரான தன்மையுடனும் செய்யப்படும் சடங்குகள். இதை நீங்கள் எங்கும் காணலாம். மக்கள் தாங்கள் நேசிப்பவற்றிற்குத் தங்களின்  சிறந்ததைக் கொடுக்கிறார்கள், அது வெளியிலும் தெரிகிறது.

 

இது எழுப்பும் கேள்வி அமைதியானது: கிறிஸ்துவின் பக்தராக, உங்கள் பக்தி உண்மையில் எவ்வாறு காணப்படுகிறது?

 

நாம் எதிலும் ஏறவேண்டும் என்றோ அல்லது பல நாட்கள் உபவாசிக்க வேண்டும் என்றோ பவுல் நம்மிடம் கேட்கவில்லை. அவர் விசுவாசிகளிடம் இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் என்று கூறுகிறார். அவர் அதைச் சொல்லும் விதம், "நினைவிருந்தால் செய்யலாம்" என்ற போக்கிலான சாதாரண ஜெபமல்ல. அது உண்மையான கனத்தைத் தாங்கிநிற்கிறது.

 

[கொலோசெயர் 4:2]  இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.

 

கொலோசே பட்டணத்திலுள்ள திருச்சபையானது உண்மையான போராட்டங்களைக் கொண்ட ஒரு சபையாக இருந்தது. சத்து குறைபாடு உள்ள உடலுக்கு நாம்  எடுத்துக்கொள்ளும் வைட்டமின் மாத்திரைகளைப் போல, பவுல் அவர்களின் குறைவை நிறைவாக்க, வேண்டியதை வழங்குகிறார். இந்த நிருபமானது புறம்பே இருக்கிறவர்களுக்கல்ல, சபை விசுவாசிகளுக்கே எழுதப்பட்டது என்பதைக் கவனியுங்கள். இது, இந்த அழைப்பின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்குப் பதிலாக மேலும் அதிகப்படுத்துகிறது.

 

இரவில் வயல்வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும்  ஒரு காவலாளியை  நினைத்துப் பாருங்கள் — கண்கள் விழித்திருக்க, சுற்றிலும் நோட்டமிட்டு, அறுவடைக்குச் சேதம் விளைவிக்கும் எதையும் தடுக்க விழிப்புடன்  காவல் காக்கிறான். ஜெபம் என்பது அந்த மாதிரி ஒரு  காவல் பொறுப்பு. அது செயலற்ற நிலை அல்ல. அது விருப்பத்தின் பேரில் செய்வதும் அல்ல. அது நீங்கள் நிற்க வேண்டிய நிலை.

 

இதில், பவுல் தனக்காக ஜெபிக்கும்படி தன் சகோதரரிடத்தில் கேட்க வெட்கப்படவில்லை. ஒரு அப்போஸ்தலனாக இருந்தபோதிலும், அவருக்கு ஜெப ஆதரவு தேவைப்பட்டது. பவுலைப் போன்ற ஒருவருக்கே அந்தத் தேவை இருந்ததென்றால் — உங்களுக்கும் எனக்கும் அது எவ்வளவு அதிகமாகத் தேவைப்படும்?

 

 

1) இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் என்ற  வாக்கியம், ஒரு மென்மையான ஆலோசனை அல்ல. ஒரு படைவீரன் தான் சரணடையாத நிலையை எப்படிக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வானோ — அதுபோல ஜெபத்தைப் பிடித்துக்கொள்வது என்று பொருள்படும்; அதை விட்டுவிடாமல், உறுதியாய் அதில் நிலைகொண்டிருங்கள்.

 

பவுல் எப்போதாவது ஜெபம் செய்யுங்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்காத ஒன்றாக அதை ஆக்கிக்கொள்ளுங்கள் என்றே கூறுகிறார்.

 

ஆதித்திருச்சபை ஜெபத்தில் உறுதியாய் நிலைத்திருந்த ஒவ்வொரு முறையும் என்ன நடந்தது என்று பாருங்கள்:  

 

பெந்தெகொஸ்தேவுக்காகக் காத்திருத்தல்

[அப்போஸ்தலர் 1:14]  அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.

  • பரிசுத்த ஆவியானவர் இறங்கிவருவதற்கு முன்பாகவும், எதுவும் நடப்பதற்கு முன்பாகவும் — அவர்கள் ஒருமனப்பட்டு ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.

  • அதுவே பெந்தெகொஸ்தே நிகழ்ந்ததற்கான அஸ்திபாரமாய் இருந்தது.

 

நாளுக்கு நாள் வளரும் திருச்சபை

[அப்போஸ்தலர் 2:42]  அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.

  • உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட அந்தச் சபை, ஜெபத்திலே உறுதியாய் தரித்திருந்த ஒரு சபையாக இருந்தது.

  • அந்த அர்ப்பணிப்புள்ள ஜெபமானது, சபையை ஞானத்தோடும், அறிவோடும், ஐக்கியத்தோடும் மற்றும் தேவனுடனான பரிசுத்த திருவிருந்தோடும் வளரச் செய்தது. 

 

அப்போஸ்தலர்கள் தங்களின் முன்னுரிமையைப் பாதுகாத்தல்

[அப்போஸ்தலர் 6:2-7]  அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல. ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். நாங்களோ , பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு, அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள். தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

  • ஊழியம் தீவிரமடைந்தபோது, அப்போஸ்தலர்கள் ஒரு தெளிவான தீர்மானத்தை எடுத்தார்கள்: “இந்தக் காரியங்கள் அவசியமானவற்றை நெருக்கிப்போட நாம் இடங்கொடுக்கக்கூடாது; மாறாக, ஜெபத்திலே உறுதியாய் நிலைத்திருக்க வேண்டும்” — அதன் விளைவாக, ஸ்தேவானையும் மற்ற 7 பேரையும் தெரிந்தெடுத்தார்கள்.

  • 7 ஆவது வசனத்தை வாசியுங்கள் — தேவவசனம் விருத்தியடைந்தது, விசுவாசிகளின் தொகையும் வேகமாகப் பெருகியது. இதுவே உறுதியாய் தரித்திருந்து ஜெபிக்கும் ஜெபத்தின் வல்லமையாகும்.

  • திருச்சபை எப்போதெல்லாம் ஜெபத்தில் உறுதியாய் நிலைத்திருந்ததோ  அப்போதெல்லாம் வல்லமையான காரியங்கள் சம்பவித்தன. இதையே பவுல் கொலோசெ சபைக்கும் விரும்புகிறார். இதையே அவர் நமக்கும் விரும்புகிறார்.

 

இயேசுவும் தம்முடைய சீஷர்களுக்கு இதையே கூறுகிறார்:

[லூக்கா 18:1]  சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

 

2) விழிப்புள்ளவர்களாய்  இருத்தல்

“விழிப்புள்ளவர்களாய் இருத்தல்” என்றால் விழித்திருப்பது, காவல் காப்பது மற்றும் ஆவிக்குரிய தூக்கத்திற்குள் விழுந்துவிடாமல் இருப்பது என்று பொருள். இரவில் ஒரு நகரத்தின் மதிலின் மேல் காவலுக்கு நிற்கும் ஒருவரைக் கற்பனை செய்து பாருங்கள் — கண்கள் திறந்த நிலையில், சுற்றிலும் நோட்டமிட்டு, தன் காவல் நேரம் முடியும் வரை ஓய்வெடுக்காமல் இருப்பார். பவுல் இதை ஜெபத்தோடு சேர்த்துப் போதிக்கிறார்; ஏனெனில், விழிப்புணர்வு இல்லாத ஜெபம் வழக்கமாக மாறிவிடும், வெறும் வழக்கமாக மாறும் ஜெபம் நாளடைவில் ஜெபமே இல்லாமல் போய்விடும்.

அர்ப்பணிக்கப்பட்ட ஜெபத்திற்கு இரண்டு கண்கள் உண்டு — ஒன்று வரவிருப்பதை நோட்டமிடுகிறது, மற்றொன்று தேவன் ஏற்கனவே செய்தவைகளைத் திரும்பிப் பார்க்கிறது.

நம்முடைய ஜெபத்தில் நாம் எவைகளில் விழிப்பாய் இருக்க வேண்டும்?

 

1. உங்கள் ஜெபத்திற்கு வரும் ஆவிக்குரிய எதிர்ப்புகளைக் குறித்து விழிப்பாயிருங்கள்

  • ஆவி தொடங்கினதை மாம்சம் எப்போதும் முடக்கவே முயலும்.

  • கவனச்சிதறல், தூக்கம், விலகிப்போதல் — இவை தற்செயலாக நடப்பவை அல்ல.

  • கெத்செமனே தோட்டத்தில் சீஷர்கள் ஜெபிக்க வேண்டிய நேரத்தில், இயேசு அவர்களைத் தூங்கிக்கொண்டிருந்த நிலையிலே கண்டார்.

[மத்தேயு 26:41]  நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.

 

2. தேவன் அனுப்பும் பதில்களைக் குறித்து விழிப்பாயிருங்கள்

  • விழிப்புணர்வு இல்லாத  அர்ப்பணிக்கப்பட்ட ஜெபம், தேவன் தரும் பதில்களைக் கவனிக்கத் தவறிவிடும்.

  • ஆபகூக் ஜெபித்தார் — பின்னர் பதிலைக் காண்பதற்காகத் தன்னை மதிலின் மேல் காவலாளியாக நிறுத்தினார்.

  • ஜெபியுங்கள், பின்னர் விழிப்புடன் இருங்கள். பதில் நீங்கள் எதிர்பார்த்த வழியில் வராமல் இருக்கலாம். ஆனால் ஜெபத்திற்கானபதில்களைக் கேட்கவும் காணவும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

[ஆபகூக் 2:1]  நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கண்டிக்கும்போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும் கவனித்துப்பார்ப்பேன் என்றேன்.

 

3. திறந்த வாசல்களுக்காக விழிப்பாயிருங்கள்

  • அதற்கடுத்த வசனத்திலேயே, சுவிசேஷத்திற்காக  வாசல் திறக்கப்பட வேண்டும் என்று ஜெபிக்கும்படி பவுல் கொலோசெயர்களிடம் கேட்கிறார்.

  • விழிப்புணர்வுடன் இருப்பது என்பது, நமது பரிந்துரை ஜெபங்களுக்குப் பதிலாகத் தேவன் உருவாக்கும் வாய்ப்புகளைக் குறித்து விழிப்புடன் இருப்பதைக் குறிக்கிறது.

[கொலோசெயர் 4:3-4]  கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேச வேண்டியபிரகாரமாய்ப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு, திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.

 

தேவனுடைய சித்தத்திற்கு ஏற்பத் தனக்காக ஜெபிக்கும்படி பவுல் தனது விசுவாசிகளிடம் மன்றாடும்போது, ​​பவுலிடம் காணப்படும் அவருடைய தீவிரமான வாஞ்சையையும் தாழ்மையையும் பாருங்கள்.

  • தேவன் தம்முடைய ஊழியத்தில் அவர்களுக்கு வாசலைத் திறக்க வேண்டும்.

  • கிறிஸ்துவின் இரகசியத்தை அறிவிக்க வேண்டும் — இது அவிசுவாசிகளுக்குப் பிரசங்கிக்கப்பட வேண்டிய இரட்சிப்பின் செய்தியாகும்.

  • அவர் தேவ சித்தத்தின்படி பிரசங்கிக்க வேண்டும் — வார்த்தைகள் எளிமையாகவும், அவிசுவாசிகள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் பேசப்பட வேண்டும் என்பதற்காகத் தனக்காக ஜெபிக்கும்படி விசுவாசிகளிடம் அவர் கேட்கிறார்.

நாம் பவுலிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்; இந்த மனப்பான்மை நம்மைப் பற்றியது அல்ல, இது தேவனைப் பற்றியது — அவருடைய மகிமையையும் அவருடைய கிரியைகளையும் பற்றியது.

 

4. காலங்களையும் உலகத்தின் நிலைமையையும் கவனியுங்கள்

  • ஆவிக்குரிய சூழ்நிலையைப் பகுத்தறியுங்கள் — உலகில், திருச்சபையில் மற்றும் எதிராளியின் கண்ணுக்குத் தெரியாத அசைவுகளில் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

  • பய உணர்வோடு அல்ல; விழிப்புணர்வுடன் இருங்கள். நிகழ்வுகளின் மேற்பரப்பிற்குப் பின்னால் மறைந்திருப்பதைப் பகுத்தறிந்து,  அதற்காக ஜெபியுங்கள். ஏனெனில், எதிரியானவன் கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல, நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத புதிய தந்திரங்களோடு வருகிறான்..

[1 பேதுரு 5:8]  தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

 

5. ஜெபத்தில் உங்கள் சொந்த இருதயத்தைக் கவனியுங்கள்

  • அலைபாயும் மனதோடு ஜெபிக்கிறீர்களா? சுயநல நோக்கங்களோடு ஜெபிக்கிறீர்களா? அல்லது எந்திரத்தனமான மறுபடியும் மறுபடியும் சொல்லும் ஜெபமாகச் செய்கிறீர்களா?

  • விழிப்புடன் இருப்பது என்பது சுய விழிப்புணர்வையும் உள்ளடக்கியது — தேவனுடனான உங்கள் உறவின் தரத்தையும் உண்மையையும் தொடர்ந்து கண்காணிப்பதாகும்.

  • எசேக்கியேல் எவருக்கும் எச்சரிக்கை விடுப்பதற்கு முன்பாக, தேவன் முதலில் அவரையே கேட்கும்படி கோரினார். காவலாளி தேவனால் ஏற்படுத்தப்பட்டவன், தானாகவே நியமிக்கப்பட்டவன் அல்ல.

[எசேக்கியேல் 33:7]  மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவற்காரனாக வைத்தேன்; ஆகையால் நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.

ஆபத்து நாம் மோசமாக ஜெபிப்பதில் இல்லை; மாறாக, காவல்காக்கும் வேளையில் நாம் முற்றிலும் தூங்கிப்போவதுதான் உண்மையான ஆபத்து.

 

3) நன்றியுணர்வு

நன்றியுணர்வு என்பது ஜெபப் பட்டியலின் இறுதியில் சேர்க்கப்படும் ஒரு கூடுதல் அம்சம் அல்ல. அது ஒரு மனநிலை — தான் பெற்றுக் கொண்ட ஒவ்வொன்றும் தனக்குக் கிடைத்த கூலி அல்ல, அது ஒரு இலவச ஈவு என்பதை உணர்ந்த ஒருவரின் மனநிலை.

 

தேவன் தருவது எதுவாக இருந்தாலும் அது கிருபையே. அவர் எதை நிறுத்தி வைக்கிறாரோ, அதுவும் கிருபையே; அதை நாம் அந்த நேரத்தில் உணராவிட்டாலும் அதுவே உண்மை.

 

1. ஏற்கனவே பெற்ற கடந்த கால பதில்களுக்காக நன்றி செலுத்துதல்

  • நாம் ஒவ்வொரு முறை ஜெபத்தில் தேவனிடம் வரும்போதும், அவர் ஏற்கனவே நமக்குச் செய்த காரியங்களின் நினைவோடு வர வேண்டும்.

  • அவருடைய உண்மைத்தன்மையின் நினைவுகளே நமது விசுவாசத்திற்குரிய எரிபொருள்.

  • நன்றி செலுத்துதல் என்பது ஆரம்பப் பயிற்சி அல்ல — அதுவே அஸ்திபாரம்.

[சங்கீதம் 100:4]  அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

 

2. தேவனிடம் சேரும் பாக்கியத்திற்காக நன்றி செலுத்துதல்

  • ஜெபத்தில் நமக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஈவு அதற்கான பதில் அல்ல — தேவனை அணுகுகிற அந்த பாக்கியம் தான்.

  • பரிசுத்தமுள்ள தேவன் பாவியாகவும், உடைந்தவனாகவும் இருக்கும் ஒரு மனிதனின் ஜெபத்தைக் கேட்கிறார் என்பதே கிருபையின் மேல் கிருபையாகும்.

  • சிலுவையே தேவனை அணுகும் பாக்கியத்தைச் சம்பாதித்துக் கொடுத்தது. ஒருபோதும் இதைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு ஜெபத்திற்குள் செல்லாதீர்கள்.

[எபிரெயர் 4:16]  ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.

 

3. பதில் வருவதற்கு முன்பே நன்றி செலுத்துதல்

  • பவுல் விண்ணப்பத்திற்கு முன்பாகவே நன்றி செலுத்துகிறார் — பதில் கிடைத்த பிறகு அல்ல, கேட்பதற்கு முன்பாகவே.

  • இதன் பொருள், தேவனுடைய குணாதிசயத்தை நாம் நம்புவதால், அவர் செய்யப்போகும் காரியங்களுக்காக, அதை நாம் காண்பதற்கு முன்பாகவே அவருக்கு நன்றி செலுத்துகிறோம்.

[பிலிப்பியர் 4:6]  நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

 

4. நம்மைக் காத்த, பதிலளிக்கப்படாத ஜெபங்களுக்காக நன்றி செலுத்துதல்

  • கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, தேவன் எதைத் தடுத்து நிறுத்தினாரோ, அது ஒரு மறைமுகமான இரக்கமே என்பதை ஒரு விசுவாசி தெளிவாகக் காண முடியும்.

  • தேவன் நமக்குச் செய்த மிகச் சிறந்த காரியங்களில் சில, அவர் 'இல்லை' என்று சொன்ன ஜெபங்களாகும்..

  • அடைக்கப்பட்ட கதவுகளுக்காக நன்றி செலுத்துவதும் நன்றியறிதலில் அடங்கும்.

 

5. நம்மோடு சேர்ந்து ஜெபிக்கும் பரிசுத்த ஆவியானவருக்காக நன்றி செலுத்துதல்

  • நாம் தனியாக ஜெபிப்பதில்லை.

  • வார்த்தைகள் வராத தருணங்கள் உண்டு — பாரம் மிகவும் ஆழமாக இருக்கும்போதோ அல்லது குழப்பம் மிக அதிகமாக இருக்கும்போதோ அவ்வாறு நிகழும்.

  • பரிசுத்த ஆவியானவர் உள்ளே பிரவேசித்து, நம்மால் சுமக்க முடியாததைச் சுமக்கிறார்.

[ரோமர் 8:26]  அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.

 

6. இரட்சிப்பிற்காக நன்றி செலுத்துதல் — இதுவே எல்லா நன்றிசெலுத்துதலுக்கும் அஸ்திபாரம்

  • ஒவ்வொரு ஜெபமும் மீட்பின் அஸ்திபாரத்திலிருந்தே எழும்புகிறது.

  • நாம் மன்னிக்கப்பட்டவர்களாக, தத்தெடுக்கப்பட்டவர்களாக, தேவனை நமக்குள்ளே கொண்டவர்களாக, கரங்களில் தாங்கப்பட்டவர்களாக ஜெபிக்கிறோம் — இது சிறிய காரியம் அல்ல, இதுவே எல்லாமும் ஆகும்.

  • உங்கள் உதடுகளிலிருந்து விண்ணப்பம் வெளிப்படுவதற்கு முன்பாக, இந்த உணர்வு  உங்கள் இருதயத்தில் முதல் காரியமாக இருக்கட்டும்.

[2 கொரிந்தியர் 9:15]  தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.

 

 

ஒரு சீஷனின் அர்ப்பணிப்பு

உலகெங்கிலும் உள்ள அர்ப்பணிப்புள்ள மனிதர்கள் தாங்கள் நம்புகிற காரியத்திற்காக தங்களுடைய சிறந்தவற்றை — தங்கள் நேரத்தை,சுயகட்டுப்பாட்டை மற்றும் மாறாத உண்மையுள்ள தன்மையை கொடுக்கிறார்கள். அது வெளியில் தெளிவாகத் தெரிகிறது; அதற்கு அவர்கள் ஒரு கிரயத்தைக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

 

கிறிஸ்துவின் சீஷனாக — உங்கள் ஜெப வாழ்க்கை உங்களுக்கு என்ன கிரயத்தை ஏற்படுத்துகிறது? எவ்வளவு அடிக்கடி நீங்கள் தேவ சமூகத்தில் வந்து நிற்கிறீர்கள்? நன்மைகளுக்காக மட்டுமல்லாமல், கடினமான சூழ்நிலைகளுக்காகவும், பதிலளிக்கப்படாதஜெபங்களுக்காகவும் கடைசியாக எப்போது அவருக்கு நன்றி செலுத்தினீர்கள்?

இந்தக் கேள்விகள் உங்களைக் குற்றப்படுத்தி, வேதனைப்படுத்துவதற்காகக் கேட்கப்பட்டவை அல்ல. உங்களுக்குள் ஒரு ஆவிக்குரியத் தாகத்தைத் தூண்டி எழுப்புவதற்காகவே இவை கேட்கப்பட்டுள்ளன.

 

உண்மையான ஒரு புள்ளியிலிருந்து தொடங்குங்கள்: தினமும் காலையில் பத்து நிமிடங்கள் ஜெபிக்கத் தீர்மானியுங்கள். அவ்வளவுதான். இதில் உங்களுக்கு ஒரு உத்தரவாதம் உள்ளது — நீங்கள் ஜெபிக்கத் தொடங்கும் அந்த கணமே, நீங்கள் அதில் தனியாக இல்லை!

 

[ரோமர் 8:26-28]  அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார். அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

 

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் —  எத்தகைய பாரத்தைச்  சுமந்து கொண்டிருந்தாலும் — அவர் உங்கள் ஜெபத்தைக் கேட்கிறார். அதை உறுதிப்படுத்த அவர் தம்முடைய சொந்தக் குமாரனையே தந்தருளினார்.

 

[1 யோவான் 5:14]  நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.

 

அவர் உங்கள் ஜெபத்தைக் கேட்கிறார். இப்போது அதை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்;  ஒருபோதும் நழுவ விட்டுவிடாதீர்கள்.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page