சோதனை வந்தால் — அடுத்து என்ன?
- Kirupakaran
- May 31
- 9 min read

நம்மில் பலர் ஊழியத்திலோ, வேலையிலோ அல்லது குடும்பத்திலோ ஒரு திருப்புமுனைக்காக ஜெபிக்கிறோம் — ஆனால் சூழ்நிலைகள் எளிதாவதற்குப் பதிலாக இன்னும் கடினமாகின்றன. நான் இதுபோன்ற சூழ்நிலைகளை பலமுறை எதிர்கொண்டிருக்கிறேன். ஒரு சூழ்நிலையில் ஒரு கதவு திறக்கப்பட வேண்டும் என்று ஜெபிக்கும்போது, அதற்குப் பதிலாக ஒரு புயல் வீசுகிறது; பாரம் இரட்டிப்பாகிறது. ஒரு கட்டத்தில், "தேவன் உண்மையிலேயே செவிகொடுக்கிறாரா? ஏன் இந்தப் போராட்டங்கள் வருகின்றன? நமக்கு முன்னால் என்ன இருக்கிறது?" போன்ற கேள்விகள் நமக்குள் எழுகின்றன.
அப்போஸ்தலர் நடபடிகள் 16-ஆம் அதிகாரத்தை வாசிக்கும் போது, பவுலும் சீலாவும் வழக்கமாக ஜெபம் பண்ணும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்கிறோம்; அது அவர்களுடைய அன்றாட வழக்கமாக இருந்தது (அப்போஸ்தலர் நடபடிகள் 16:13, 16). ஆனால், அதே வழியிலே ஒரு குறிசொல்லும் பெண்ணின் மூலமாக அவர்களுக்குப் பிரச்சனை வந்தது. அவர்கள் அவளைக் கண்டித்த பிறகு, அந்தப் பெண்ணின் எஜமானர்கள் அவர்கள் மேல் பொய் வழக்குகளைத் தொடுத்தனர். பிறகு, ஒரு கூட்டத்தினர் அவர்கள் மீது வீண் பழி சுமத்தி, அவர்களுடைய ஆடைகளைக் கிழித்து, முதுகில் அடித்து, கால்களைத் தொழுமரத்தில் மாட்டி சிறையிலடைத்தனர். இருப்பினும், அதே சிறைச்சாலையிலிருந்து, எவரும் திட்டமிடாத வழிகளில் தேவனுடைய மகிமை வெளிப்பட்டது.
அப்போஸ்தலர் நடபடிகள் 16-ஆம் அதிகாரம், நாம் கடந்துபோகும் சோதனைகளில் கடைப்பிடிக்க வேண்டிய 10 பாடங்களைக் கொண்டுள்ளது. இதில் உள்ள பல காரியங்கள் நாம் இன்று சந்திக்கும் சூழ்நிலைகளுக்கு முற்றிலும் இணையானவை. இவை எப்போதோ நடந்த பழைய விஷயங்கள் அல்ல; மாறாக, நிஜமான சூழ்நிலைகள், நிஜமான துன்பங்கள், உண்மையான துதி மற்றும் நள்ளிரவிலும் கிரியை செய்கிற ஒரு உண்மையான தேவன்.
பகுதி 1 — சத்துருவின் கண்ணி | அப்போஸ்தலர் நடபடிகள் 16:16-18
பிசாசு உங்களைப் புகழும்போது மயங்கிவிடாதீர்கள்!
பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணுகிற இடத்திற்குப் போய்க்கொண்டிருந்தபோது, குறிசொல்லுகிற ஆவியையுடைய ஒரு பெண் அவர்களுக்கு எதிர்ப்பட்டாள். இங்கே சத்துரு செய்த காரியம் மிகவும் நுட்பமானது, எளிதில் கவனிக்காமல் தவறவிடக்கூடியது.
அவள் பல நாட்கள் விடாமல் அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தாள்.
அவள் உண்மையைப் பேசினாள் — ஆனால் இருளின் பின்னணியிலிருந்து பேசினாள். சாத்தானால் தேவனுடைய தன்மையைப் பற்றிப் பொய் சொல்ல முடியாது, ஆனால் மக்களைக் குழப்புவதற்கும், தேவனுடைய ஊழியர்களை இழிவுபடுத்துவதற்கும் அவன் அந்த உண்மையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவான். அவள் பவுலையும் சீலாவையும் பார்த்து, "இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர்" என்று தொடர்ந்து சத்தமிட்டுக் கொண்டே வந்தாள்.
சுவிசேஷ சாட்சியை விரட்டுவதே அவளுடைய நோக்கமாக இருந்தது - அந்த அசுத்த ஆவியின் அங்கீகாரத்தை மக்கள் நம்பியிருந்தால், பவுல் பிரசங்கித்த நற்செய்தியானது பில்லிசூனியத்தோடு பிணைக்கப்பட்டிருக்கும்.
அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள். அப்போஸ்தலர் நடபடிகள் 16:17
பவுல் அவளுடைய புகழ்ச்சியினால் மயங்கிவிடவில்லை, மாறாக அவர் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டதால் மிகவும் சினங்கொண்டார். அவர் காத்திருந்தார், கவனித்தார், ஜெபித்தார், அதன் பிறகு கடைசியாக அவர் பேசினார். ஆவியானவரால் வழிநடத்தப்படும் பகுத்தறிவு ஒருபோதும் உணர்ச்சிவசப்படுவதில்லை. வல்லமையை வெளிப்படுத்துவதற்கு முன்பாக பொறுமை அவசியம். அவர் அந்த அசுத்த ஆவியைப் பார்த்துக் கட்டளையிட்டார்; "அந்நேரமே" என்று சொல்லப்பட்டிருப்பது அது உடனடியாக அவளை விட்டு நீங்கிப்போனதைக் குறிக்கிறது.
இப்படி அநேகநாள் செய்து கொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று. அப்போஸ்தலர் 16:18
பாடம் 1: சாத்தான் தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராகப் புகழ்ச்சி என்ற கண்ணியைப் பயன்படுத்துகிறான். சத்துரு உங்களைப் புகழும்போது ஒருபோதும் மயங்கிவிடாதீர்கள் — அது உங்களை வீழ்த்துவதற்கான ஒரு வலை.
பாடம் 2: ஆவியானவரால் நடத்தப்படும் பகுத்தறிவு என்பது ஒருபோதும் அவசரப்பட்டு உணர்ச்சிவசப்படுவதில்லை. எது தேவனிடமிருந்து வருகிறது, எது சாத்தானிடமிருந்து வருகிறது என்பதைப் பிரித்து அறியவும், எந்த நேரத்தில் நீங்கள் செயல்பட வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளவும் பரிசுத்த ஆவியானவரின் பகுத்தறியும் ஞானத்தைத் தரும்படி தேவனிடம் கேளுங்கள்; வல்லமையை வெளிப்படுத்துவதற்கு முன்பாகத் தேவையான பொறுமையை ஆவியானவர் நமக்குத் தருவார்.
பாடம் 3: தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு சத்துருவின் பலத்த அரண்களைக் கட்டவிழ்க்கும் வரத்தை தேவன் ஏற்கனவே கொடுத்திருக்கிறார். "..பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்..." மத்தேயு 16:19. நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள இந்த வல்லமையை நாம் நினைவில்கொள்ள வேண்டும்; பாதாளத்தின் வாசல்கள் நம்மை மேற்கொள்வதில்லை, மாறாக நாம் அவற்றை உடைத்தெறிய வேண்டும். |
பகுதி 2 — உலகம் உங்களுக்கு எதிராக மாறும்போது | அப்போஸ்தலர் 16:19–24
துன்புறுத்தலின் 4 கட்டங்கள் — இதை அறிந்துகொள்ளுங்கள், ஆனால் அஞ்சாதீர்கள்!
அசுத்த ஆவி அந்தப் பெண்ணை விட்டு புறப்பட்டுப்போன அடுத்த கணமே அவளுடைய எஜமான்கள் தங்களுடைய வருமான வழியை இழந்தார்கள். அதுவே எல்லாவற்றையும் தூண்டியது. சத்துருவானவன் தற்செயலாக நம்மைத் தாக்குவதில்லை — அவன் ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியான முறையைத்தான் பின்பற்றுகிறான்.
நீங்கள் அப்போஸ்தலர் 12, 17:5, 17:13, 18:12-17, 19:23–29, 21:27–36, 23:12-15, 24:1-9, 25:7, 28:22 ஆகிய பகுதிகளைத் தியானித்துப் பார்த்தால், சிறுசிறு மாற்றங்களுடன் இதே முறையைத்தான் சத்துரு கையாண்டிருப்பதை நீங்கள் காண முடியும். இதைக் கொண்டு உங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை ஆராய்ந்து பார்த்தால், அங்கும் இதே முறையைக் காணலாம். இந்தியாவில் சபைகளுக்கு எதிராக நடக்கும் துன்புறுத்தல்களைப் பார்த்தால், அவையும் இதே முறையில் நடப்பதைக் காணலாம்.
அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள். அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான். அப்போஸ்தலர் 16:23–24
இதை அறிந்துகொள்வது, சத்துருவின் தாக்குதலில் நாம் சிக்காமல் நம்மைப் பாதுகாக்கிறது.
கட்டம் 1 — பொருளாதாரத் தூண்டுதல்: சுவிசேஷம் அந்த இடத்தை வந்தடைந்த உடனே, அவர்களுடைய வருமானம் அடியோடு மறைந்தது. தேவனுடைய ராஜ்யம் உண்மையாகவே அசைவாடும்போது, அது இருளின் பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது. இதைத் தொடர்ந்து, திட்டமிடப்பட்ட எதிர்ப்புகள் உடனடியாக எழுகின்றன.
கட்டம் 2 — பொய்க் குற்றச்சாட்டு: அவர்களால் சுவிசேஷத்தின் செய்தியை எதிர்த்துப் போராட முடியாது, எனவே அவர்கள் ஊழியரைத் தாக்குகிறார்கள். உண்மையான இழப்பு (பணம்) பொதுமக்களின் நலனுக்கு எதிரான குற்றச்சாட்டிற்குப் (சட்ட ஒழுங்கு சீர்குலைவு, சட்டவிரோத மதம்) பின்பாக மறைக்கப்பட்டுள்ளது. இந்தப் பொய் வழக்குகள் எப்போதும் பார்ப்பதற்கு உண்மை போலவும், மக்களின் பயத்தைத் தூண்டுவதாகவும் இருக்கும்.
கட்டம் 3 — பொது ஜனக்கூட்டம்: கும்பல் ஒன்று கூடுகிறது. ஒரு காலத்தில் தேவனுடைய வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்த அதே மக்களுக்கு முன்பாகவே, தேவனுடைய ஊழியர்கள் குற்றவாளிகளைப் போலக் காட்டப்படுகிறார்கள். இங்கே மூன்று காரியங்கள் வேகமாக, ஒன்றன்பின் ஒன்றாக நடக்கின்றன:
கூட்டம் அவர்களுக்கு எதிராகத் திரும்புகிறது — ஜனங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்.
அதிகாரிகள் வஸ்திரங்களைக் கிழிக்கிறார்கள் — எந்த ஒரு விசாரணையும் நடப்பதற்கு முன்பாகவே, ஜனங்கள் அவமானப்படுத்துகிறார்கள் — அதிகாரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும், அவர்களை அடிக்கவும் சொல்லி .... கட்டளையிட்டார்கள்.
அடிக்கக் கட்டளையிட்டார்கள் — இந்தத் தீர்ப்பு வன்முறைக் கூட்டத்தின் தீர்ப்பு, நீதிமன்றத்தினுடையது அல்ல — அவர்களை அடிக்கவும் சொல்லி .... கட்டளையிட்டார்கள்.
கட்டம் 4 — மும்முனைத் தாக்குதல்: அவமானம் (பொதுமக்களுக்கு முன்பாக ஆடைகள் உரிக்கப்படுகின்றன — ஒரு காலத்தில் தங்களின் வார்த்தையைக் கேட்டு மதித்த ஜனங்களுக்கு முன்னால், தேவனுடைய மனுஷனை ஒன்றுமில்லாதவராக உணர வைப்பது), சரீரப் பிரகாரமான வேதனை (தடிகளால் கடுமையாக அடிக்கப்படுகிறார்கள் — ஏற்கனவே ஏற்பட்ட அவமானத்தோடு, இப்போது தாங்க முடியாத சரீர வலியும் கூட்டப்படுகிறது), தனிமைப்படுத்தப்படுதல் (உட்காவலறையிலே தள்ளப்பட்டு, கால்கள் மாட்டி வைக்கப்படுகின்றன — சுற்றிலும் இருள், அசைவற்ற நிலை, ஆதரவு இல்லாத சூழல்).
நினைவில் வையுங்கள்: ஜனங்களுடைய தீர்ப்பு ஒருபோதும் தேவனுடைய இறுதித் தீர்ப்பல்ல. எனவே, தேவனுக்கு விரோதமாக எதுவும் பேசிவிடாதீர்கள். எல்லாவற்றையும் இழந்து நின்றபோதும் யோபு இவ்வாறு கூறினார்: அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து: நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான். யோபு 1:20–21
புலம்புவதற்கான சோதனை: சத்துரு உண்மையில் காத்துக்கொண்டிருந்தது பவுலும் சீலாவும் அடி வாங்குவதற்காக அல்ல — அவர்கள் தேவனுக்கு விரோதமாகப் பேசும் ஒரு கசப்பான வார்த்தைக்காகவே காத்திருந்தான். அப்படி ஒரு கசப்பான வார்த்தை வந்துவிட்டால், நம் விசுவாசம் உள்ளுக்குள்ளேயே உடைந்துபோகும். ஆனால், பவுலும் சீலாவும் தங்கள் போராட்டங்களின் மத்தியில் புலம்பவில்லை என்பதைக் காண்கிறோம், பல நேரங்களில், நாம் சில காரியங்களைக் கற்றுக்கொள்ளவும், அனுபவிக்கவும், அதன் மூலம் தம்முடைய மகிமையை வெளிப்படுத்தவுமே தேவன் நம்மை இத்தகைய சோதனைகளின் வழியே கடந்துபோக அனுமதிக்கிறார்; பவுல் மற்றும் சீலாவின் விஷயத்திலும் இதுதான் நடந்தது.
பாடம் 4: பொருளாதார இழப்பு, பொறாமை மற்றும் ஆவிக்குரிய எதிர்ப்பு ஆகியவை துன்புறுத்தலைத் தூண்டுகின்றன. தேவன் இல்லாதிருப்பது போன்று தோன்றுவது ஒரு மாயையே — அவர் நமக்கு ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தத் துன்பமான தருணங்களில் நாம் விழுந்துவிடக் கூடாது; நெருக்கடி நேரங்களில் தேவன் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை. உபாகமம் 31:8 இல் கொடுக்கப்பட்டுள்ள தேவனுடைய வாக்குத்தத்தம்: கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.
பாடம் 5: இருண்ட சூழ்நிலையிலும் புலம்ப வேண்டாம். தவறான வார்த்தைகளைப் பேச வேண்டாம். யோபுவைப் போல நம் நாவைக் காத்துக்கொண்டு, அமைதியாய் இருக்க வேண்டும். யோபுவைப் போலவே "கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்" என்று தேவனைத் துதியுங்கள். |
பகுதி 3 — நள்ளிரவு துதி | அப்போஸ்தலர் நடபடிகள் 16:25–26
தேவனுக்கே உரிய பிரத்யேக நேரம் — கதவுகள் திறக்கப்படுவதற்கு முன்பே எழும் துதி!
அடிபட்ட முதுகுகள், பூட்டப்பட்ட கால்கள், இருண்ட சிறையறை. வெளியிலிருந்து வரக்கூடிய எல்லா ஆதரவுகளும் துண்டிக்கப்பட்ட சூழல். அப்படியிருந்தும், அந்த நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, துதிப்பாடல்களைப் பாடினார்கள். நானாக இருந்திருந்தால் அந்த வலியோடு அப்படியே படுத்துத் தூங்கியிருப்பேன், அல்லது "ஏன் எனக்கு மட்டும் இந்தச் சோதனை?" என்று தேவனிடம் கேள்வி கேட்டிருப்பேன். ஆனால், அதுதான் பவுல் மற்றும் சீலாவின் விடுதலைக்கான வித்தியாசம்.
நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று. அப்போஸ்தலர் 16:25–26
இது இயற்கையான தைரியம் அல்ல. இது தேவனுக்குள் மறைந்திருக்கும் வாழ்க்கையின் நிறைவாகும். இதை உங்களது மாம்சத்தினால் உருவாக்க முடியாது. வெளிப்புறத்தை விட உள்ளே அதிக உண்மையானதாக இருக்கும்போது தான் இது சாத்தியமாகும்.
நள்ளிரவு என்பது தேவனின் பிரத்தியேகமான நேரம் — அது எப்போதுமே அப்படித்தான் இருந்து வருகிறது. அவர் கிரியை செய்ய விடியற்காலை வரை காத்திருப்பதில்லை.
தேவன் பார்வோனுக்குச் செய்தது நள்ளிரவில் நடந்தது என்று மோசேயின் வரலாற்றில் வாசிக்கிறோம் - நடுராத்திரியிலே சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும், மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார். யாத்திராகமம் 12:29 — இஸ்ரவேலரின் முழு விடுதலையும் நடுராத்திரியில்தான் தொடங்கியது.
அப்போஸ்தலர் 16:25: பவுலும் சீலாவும் (நள்ளிரவில்) பாடி துதித்தார்கள் — அப்போது சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசைந்தன.
அந்தத் துதி எதைச் சாதித்தது என்று பாருங்கள் — அது பவுலுக்கு மட்டுமல்ல.
அது அஸ்திபாரங்களை அசைத்தது — சுவர்களை அல்ல. தேவன் கிரியை செய்யும்போது வேர் வரை செல்கிறார்.
எல்லா கதவுகளும் திறந்தன — பவுலின் சிறைக்கதவு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த சிறைச்சாலையின் கதவுகளும் திறந்தன.
எல்லா சங்கிலிகளும் அறுந்து விழுந்தன — ஒவ்வொரு கைதியும் விடுதலை பெற்றார்கள்.
யாரும் தப்பியோடவில்லை. அவர்கள் அங்கேயே தங்கி, தேவ வார்த்தையைக் கேட்டார்கள். அந்தக் கைதிகள் ஒரு சபையாக மாறினார்கள். உங்களது மிக இருண்ட சோதனைக் காலமே, மிக சக்திவாய்ந்த பிரசங்க மேடையாக மாறக்கூடும்.
பாடம் 6: நள்ளிரவு என்பது முடிவு அல்ல — அது தேவன் நியமித்த நேரம். உண்மையான துதிக்கு முன்னால் எந்தவொரு சங்கிலியும் நிலைத்திருக்க முடியாது. பாடம் 7: தேவன் விளிம்பிலிருந்து அல்ல, வேரிலிருந்தே விடுவிக்கிறார் — உள்காவலறையிலிருந்து திறந்த கதவுகள் வரை, தொழுமரத்தில் பூட்டப்பட்ட கால்களிலிருந்து எல்லா சங்கிலிகளும் கழன்று விழுவது வரை.
பாடம் 8: துன்பத்தின் மத்தியிலும் ஏறெடுக்கப்படும் உண்மையான ஆராதனை, ஒரு கண்ணுக்குத் தெரியாத சபையை உருவாக்குகிறது. உங்களது மிக இருண்ட சோதனைக் காலமே, மிக சக்திவாய்ந்த பிரசங்க மேடையாக மாறக்கூடும். |
பகுதி 4 — சிறைச்சாலை அதிகாரியின் இல்லம் (Oikos) | அப்போஸ்தலர் 16:27–34
மீட்பவரை தேவன் காக்கிறார் — உங்களது சோதனை என்பது எப்போதும் உங்களைப் பற்றியது மட்டுமல்ல.
சிறைச்சாலையின் கதவுகள் தானாய் திறந்தபோது, சிறைச்சாலை அதிகாரி பதற்றத்துடன் திடுக்கிட்டு விழித்தான். கைதிகள் அனைவரும் தப்பியோடிவிட்டதாக அவன் நினைத்தான். தற்கொலை செய்துகொள்வதற்காகத் தன் பட்டயத்தை உருவினான் — ஏனென்றால், ரோமானிய சட்டப்படி, கைதிகளைத் தப்பவிட்ட ஒரு சிறை அதிகாரி தன் உயிரையே அதற்கு விலையாகக் கொடுக்க வேண்டும். பிசாசு அவனுக்காக ஒரு திட்டத்தை வைத்திருந்தான்: அவமானம், விரக்தி, மரணம். ஆனால், தேவனோ வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தார்.
பவுல் அந்த இருளின் மத்தியிலிருந்து சத்தமிட்டுக் கூறினார்:
பவுல் மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ்செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான். அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அப்போஸ்தலர் 16:28-31
மாறுபட்ட ஆவி – சிறை அதிகாரி தன்னைத்தானே கொல்லப் பார்த்தார், ஆனால் பவுலின் மூலமாக கிரியை செய்யும் தேவஆவியோ, "நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம்" என்று உண்மையோடும் உத்தமத்தோடும் கூறி அவருக்கு ஆறுதல் அளிக்கிறது.
தேவனுக்குரிய சாட்சி – ஒரு சிறையில் இருக்கும்போது, அதன் கதவுகள் திறந்து சங்கிலிகள் அறுபட்டால், அங்கிருந்து தப்பி ஓடுவதுதான் மனித இயல்பு. ஆனால் பவுலும் சீலாவும் அப்படிச் செய்யவில்லை; அங்கிருந்த மற்ற கைதிகளும் தப்பியோடாமல் அங்கேயே இருந்தார்கள். சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், சிறை வைக்கப்பட்டிருக்கும் அந்த சூழ்நிலையிலும் உண்மையோடும் உத்தமத்தோடும் நிலைத்திருப்பதுதான் தேவனின் உண்மையான குணமாகும்.
பாதங்களில் விழுதல் – அவர்கள் கால்களில் விழும்போது மாற்றம் தொடங்குகிறது – தாங்கள் இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, அவர்கள் நடுக்கத்துடனே பவுல் மற்றும் சீலாவின் பாதங்களில் விழுந்தார்கள்.
ஒய்கோஸ் (OIKOS) தத்துவம் — இது 'குடும்பம்' அல்லது 'இல்லம்' என்ற அர்த்தம் தரும் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்ததாகும். ஒய்கோஸ் என்பது உங்களது குடும்பம், உங்களைச் சார்ந்த மக்கள் மற்றும் தேவனுடைய ராஜ்யத்திற்காக நீங்கள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உங்களது நட்பு மற்றும் உறவு வட்டாரத்தைக் குறிக்கிறது. பவுல் சிறையிலிருந்து வெளியே வர வேண்டும் என்பது மட்டுமே தேவனின் திட்டமாக இருக்கவில்லை. தேவன் அந்த சோதனை, சிறைவாசம் மற்றும் நள்ளிரவு நிலநடுக்கத்தை அனுமதித்தார் — ஏனென்றால், அந்த குறிப்பிட்ட இரவில், அந்த சிறை அதிகாரிக்கும் அவரோடு தொடர்புடைய அனைவருக்கும் பவுல் அங்கே தேவைப்பட்டார். அதுவே ஆத்துமாவிற்குள் செயல்படும் நற்செய்தியாகும். நாம் அடிக்கடி மறந்துவிடும் ஒரு காரியத்தை பவுல் புரிந்து வைத்திருந்தார்: அவருடைய சொந்த விடுதலை இங்கே முக்கியமல்ல; அந்த சிறை அதிகாரியின் குடும்ப இரட்சிப்பே முக்கிய நோக்கமாக இருந்தது.
மாற்றத்தின் கதை
மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான். அப்போஸ்தலர் 16:33–34
அந்த முழுமையான தலைகீழ் மாற்றத்தைப் பாருங்கள் — சிறை அதிகாரி என்ற அதே மனிதன், ஒரே மணி நேரத்திற்குள் எடுத்த முழுமையான யு-டர்ன் (U-turn)
மாற்றத்திற்கு முன் | மாற்றத்திற்குப் பின் |
சங்கிலிகளால் கட்டினார் | காயங்களைக் கழுவினார் |
உத்தரவுகளை நிறைவேற்றினார் | போஜனங்கொடுத்தார் |
பயத்தால் கட்டப்பட்டிருந்தார் | மகிழ்ச்சியால் நிரப்பப்பட்டார் |
அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாய் இருந்தார் | அவர்களின் தேவைகளை நிறைவேற்றினார் |
இவை அனைத்தும் நள்ளிரவில் நடந்தன. ஒரு நிலநடுக்கம். ஒரு நற்செய்தி. ஒரு முழு ஒய்கோஸ் (OIKOS) தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழைந்தது. பவுலைத் தண்டிப்பதற்காக தேவன் இந்தச் சோதனையை அனுமதிக்கவில்லை — அவர் அங்கே ஒரு சந்திப்பை திட்டமிட்டிருந்ததால் தான் அதை அனுமதித்தார். அதை நிறைவேற்ற பவுல் மட்டுமே தகுதியுள்ளவராய் இருந்தார். நினைவில் கொள்ளுங்கள், இவை அனைத்தும் விடியற்காலைக்கு முன்பாக, நள்ளிரவிலேயே நடந்தன; அவர்கள் இரட்சிக்கப்பட்டு, ஞானஸ்நானம் பெற்று, தேவனுடைய பிள்ளைகளாக மாற்றப்பட்டார்கள்.
பாடம் 9: தேவனால் உங்களது ஒய்கோஸை (குடும்பம்/உறவினரை) நள்ளிரவிலும் சென்றடைய முடியும். எந்த நேரமும் மிக இருண்டது அல்ல. உங்களது சோதனை உங்களைப் பற்றியது மட்டுமே அல்ல — தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழைய ஒரே ஒரு நிலநடுக்கத்தின் தூரத்தில் இருக்கும் உங்களது நட்பு அல்லது உறவு வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவருக்காகவே அது திட்டமிடப்பட்டிருக்கலாம். பல நேரங்களில் நாம் நம் மூலமாக நிறைவேற வேண்டிய தேவனின் நோக்கத்தை மறந்துவிட்டு, எப்போதும் நம்முடைய சொந்த சூழ்நிலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். உங்களது மூலமாக ஒரு ஒய்கோஸை (குடும்பத்தை) இரட்சிப்பதற்காக, நீங்கள் கடந்து செல்லும் இந்த போராட்டத்தின் வழியாய் தேவன் என்ன செய்ய விரும்புகிறார் என்று அவரிடமே கேளுங்கள்; யாரோ ஒருவரை இரட்சிக்க உங்களது வாழ்க்கைக் கதையைப் பயன்படுத்துமாறு அவரிடம் கேளுங்கள். |
பகுதி 5 — தேவனுடைய பகிரங்கமான நியாயத்தீர்ப்பு | அப்போஸ்தலர் 16:35–39
அவர் கணக்குகளை எல்லோருக்கும் முன்பாக (பொதுவில்) தீர்க்கிறார்.
இந்த வேதப்பகுதிகளை வாசிக்கும்போது, என் மனதில் தோன்றிய ஒரு கேள்வி என்னவென்றால்: பவுலும் சீலாவும் தங்கள் மீது பொய் குற்றம் சாட்டப்பட்டபோது தாங்கள் ரோம குடிமக்கள் என்கிற கேள்வியை ஏன் எழுப்பவில்லை? ஆனால், அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டிய நேரத்தில் ஏன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்? அதற்கான பதில்: அது தேவனுடைய இறையாண்மை.
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28
பவுலுக்கு அந்தச் சாட்டையடிக்கு முன்பாகவே தனக்குள்ள ரோம குடியுரிமையை நிலைநாட்டுவதற்கான முழு சட்டப்பூர்வ உரிமையும் இருந்தது. ஆனால், அவர் அதைச் செய்ய வேண்டாம் என்று தேர்ந்தெடுத்தார் — ஏனெனில், இந்த அநீதி முழுமையாகப் பொதுமக்களின் பதிவில் வர வேண்டும் என்றும், அதன் மூலம் தேவன் தரும் விடுதலையும் அதே அளவுக்குப் பகிரங்கமாக வெளிப்பட வேண்டும் என்றும் தேவன் விரும்பினார். அடுத்த நாள் காலையில் அதிகாரிகள், "அந்த மனுஷரை விட்டுவிடுங்கள்" என்று சொல்லி அனுப்பினார்கள். ஆனால், பவுல் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார்:
அதற்குப் பவுல்: ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம்விசாரியாமல், வெளியரங்கமாய் அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாய் எங்களை விடுதலையாக்குகிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை வெளியே அழைத்து அனுப்பிவிடட்டும் என்றான். அப்போஸ்தலர் 16:37
அவர்களை ஆடைகளை உரிந்து, சாட்டையால் அடித்த அதே அதிகாரிகள், இப்போது பயந்து நடுங்கி, மன்னிப்புக் கேட்டு, நேரில் வந்து அவர்களை வெளியே அழைத்துச் சென்றார்கள். பொதுவில் நடந்த அநீதிகளுக்கு, தேவன் ரகசியமான விடுதலையைத் தருவதில்லை.
தாங்கள் மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடும் என்று அவர்கள் பயந்தார்கள் - சேவகர் இந்த வார்த்தைகளை அதிகாரிகளுக்கு அறிவித்தார்கள். ரோமராயிருக்கிறார்களென்று அவர்கள் கேட்டபொழுது பயந்துவந்து, அப்போஸ்தலர் 16:38
அவர்களைப் போகும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள் - அவர்களுடனே தயவாய்ப் பேசி, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுபோய், பட்டணத்தை விட்டுப் புறப்பட்டுப்போகும்படி கேட்டுக்கொண்டார்கள். அப்போஸ்தலர் 16:39
பாடம் 10: தேவனுடைய நியாயத்தீர்ப்பு எப்போதும் நமக்கு இழைக்கப்பட்ட அநீதியின் அளவோடு ஒத்துப்போகிறது. உங்களுக்கு எதிராகப் பகிரங்கமாக என்ன செய்யப்பட்டதோ, அதற்கு அவர் பகிரங்கமாகவே பதிலளிப்பார். உங்கள் நிலையில் உறுதியாக நில்லுங்கள். தேவன் உங்களை ஒருபோதும் வெட்கப்படுத்த மாட்டார். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. ரோமர் 10:11 |
முடிவுரை பாடங்கள்
நாம் ஒரு கேள்வியோடு தொடங்கினோம்: நீங்கள் ஜெபித்தீர்கள், ஆனாலும் உங்களுக்குப் போராட்டங்கள் வந்தன. தேவன் உங்களைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறாரா என்று நீங்கள் ஆச்சரியப்பட்டிருக்கலாம்.
அவர் கேட்டுக்கொண்டுதான் இருந்தார், இப்போதும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார். பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணுகிற இடத்திற்குப் போய்க்கொண்டிருந்தபோதுதான் இந்தச் சோதனை அவர்களைத் தேடிவந்தது — தேவன் அங்கு இல்லாததால் அல்ல, மாறாக அந்த சிறைச்சாலை, அந்த நள்ளிரவு நேரம், அந்த நிலநடுக்கம் மற்றும் அந்த சிறையதிகாரியின் குடும்பம் ஆகியவை துல்லியமாகத் தேவைப்படும் ஒரு பெரிய திட்டத்தை அவர் வைத்திருந்ததால்தான் அது நடந்தது.
10 பாடங்கள். ஒரே ஒரு வேதப்பகுதி. விடியற்காலை வரை காத்திருக்காத தேவன்!
பவுல் மற்றும் சீலாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய 10 பாடங்களின் சுருக்கம் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
# | பாடம் | கவனிக்க வேண்டியவை | முக்கிய வசனம் |
1 | சத்துருவின் தந்திரம் | சத்துரு உங்களைப் புகழும்போது அசைக்கப்படாமல் இருங்கள் — அது ஒரு கண்ணி. | அப்போஸ்தலர் 16:17 |
2 | பகுத்தறிவு | வல்லமைக்கு முன்பாகப் பொறுமை — காத்திருங்கள்; | அப்போஸ்தலர் 16:18 |
3 | கட்டவிழ்க்கும் வரம் | சத்துருவின் பலத்த அரண்களைக் கட்டவிழ்க்கும் வரத்தை தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். | மத்தேயு 16:19 |
4 | சோதனையின் மாதிரி | 5 நிலைகள் — இந்த மாதிரியை அறிந்துகொள்ளுங்கள், சிக்கி ஏமாந்து போகாதீர்கள். | அப்போஸ்தலர் 16:19–24 |
5 | புலம்பாமல் பாடுபடுங்கள் | உங்கள் நாவைக் காத்துக்கொள்ளுங்கள் — தேவனுக்கு விரோதமாக ஒரு வார்த்தையும் பேசாதீர்கள். | யோபு 1:21 |
6 | நள்ளிரவில் துதி | கதவுகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே துதியுங்கள் — திறக்கப்பட்டதற்குப் பின்பு அல்ல. | அப்போஸ்தலர் 16:25 |
7 | தேவனின் அசாத்தியமான மீட்பு | அவர் வேர் வரை செல்கிறார் — வெறும் சுவர்களை மட்டுமல்ல, அஸ்திபாரங்களையே அசைக்கிறார். | அப்போஸ்தலர் 16:26 |
8 | துன்பத்தில் சாட்சியாய் நிற்றல் | உங்களுடைய மிக இருண்ட சோதனையே, உங்களுடைய மிகவும் சக்திவாய்ந்த பிரசங்க மேடையாக மாறக்கூடும். | அப்போஸ்தலர் 16:25 |
9 | ஒய்கோஸ் (குடும்ப) மாற்றம் | சோதனையில் நிலைத்திருங்கள் — ஒருவருடைய குடும்பத்திற்கு இந்த நள்ளிரவு நேரம் தேவையாக இருக்கிறது. | அப்போஸ்தலர் 16:31 |
10 | தேவனின் பகிரங்கமான நியாயத்தீர்ப்பு | பொதுவில் நடந்த அநீதிக்கு பொதுவில் பதில் கிடைக்கும் — உங்கள் நிலையில் உறுதியாக நில்லுங்கள். | ரோமர் 8:28 |



Comments