top of page
  • Kirupakaran

சுதந்தரவாளி

இந்த வலைப்பதிவைப் படிப்பதற்கு முன்பாக இந்த சிறிய வீடியோவைப் பாருங்கள். உங்களுக்கு ரூத்தின் கதை ஏற்கனவே தெரியுமானால், தவிர்த்து விடவும்.



இந்தக் கதை வேதத்தில் பழைய ஏற்பாட்டில் உள்ள நகோமி என்ற பெண் மற்றும் அவரது மருமகள் ரூத் பற்றியது. நகோமியின் கணவர் மற்றும் மகன்கள் இறந்த பிறகு, அவள் தன்னை விட்டுச் செல்ல மறுத்த தன் மருமகள் ரூத்துடன் பெத்லெகேமுக்குத் திரும்பினாள். ரூத் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது, ஆஸ்திக்கார நில உரிமையாளரான போவாஸின் கண்ணில் பட்டாள். பின் அவன் அவளை மணந்து கொண்டான். அவர்களுக்கு ஓபேத் என்ற மகன் இருந்தான். இந்தக் கதையில் பல ஆவிக்குரிய பாடங்கள் உள்ளன.


ஒரு பெண் நகோமியிடம், தேவன் ரூத்தை அவளது சுதந்தரவாளியாக ஆக்கினார் என்று சொல்வதாக நாம் வாசிக்கிறோம்.


"அப்பொழுது ஸ்திரீகள் நகோமியைப் பார்த்து: சுதந்தரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயைசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்;அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது". ரூத் 4:14


இந்த சுதந்தரவாளி என்பதன் அர்த்தம் என்ன? இது ஆவிக்குரிய ரீதியில் நமக்கு எவ்வாறு தொடர்புடையது?


சுதந்தரவாளி என்பதன் வரலாறு

பழைய ஏற்பாட்டில், சுதந்தரவாளி என்பவர், இழந்த சொத்து அல்லது உரிமைகளை மீட்டெடுக்கும் பொறுப்பைக் கொண்டிருந்த ஒரு உறவினராவார். இது லேவியராகமத்தில் தேவன் மோசேக்குக் கொடுத்த நியமத்தின் படியாகும். “உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்”. லேவியராகமம் 25:25


தேவன் அவர்களுக்கு எவ்வாறு சுதந்தரவாளியை வழங்கினார்?

இதைப் புரிந்துகொள்ள ரூத் 1 முதல் 4 வரையுள்ள நான்கு அதிகாரங்களையும் நாம் படிக்க வேண்டும்.


1. நகோமியின் ஆதரவற்ற நிலை


ரூத் முதல் அதிகாரத்தைப் படிக்கும்போது, நகோமியின் நிலையைப் பற்றியும், அவளுடைய சூழ்நிலையில் அவள் எப்படி நடந்துகொண்டாள் என்பதைப் பற்றியும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம்.

  • துணையற்ற நிலை - நகோமி மோவாபில் வாழ்ந்து வந்த போது தனது கணவர் (எலிமெலேக்கு) மற்றும் இரண்டு மகன்கள் (மக்லோன், கிலியோன்) ஆகியோரை இழந்து துணையற்ற நிலையில் இருந்தாள். பஞ்சத்தின் காரணமாக, அவள் உதவிக்காகத் தேடி அலையும் பொழுது, அவளுக்கு உதவ தேவனின் கரம் இருப்பதாக அவள் கேள்விப்பட்டாள்.

"கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு; தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதா தேசத்திற்குத் திரும்பிப்போக, அவர்கள் வழிநடக்கையில்,". ரூத் 1:6-7

  • கசப்பு - நகோமி தனது வாழ்க்கையை கசப்பானதாகக் கருதியதால், தன்னை மாராள் என்று அழைக்கச் சொன்னாள். அவளுடைய கசப்பான உள்ளத்தைப் பற்றி இரண்டு இடங்களில் படிக்கிறோம் (வசனம் 13,20).

"அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்". ரூத் 1:20

  • கனிவான உள்ளம் - நகோமி தனது கசப்பான சூழ்நிலையிலும் ரூத், ஒர்பாள் என்ற தனது இரு மருமகள்களுக்கும் தயவு காட்டினாள்.

“நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப் போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயைசெய்வாராக. கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து:”. ரூத் 1:8-9


2. ரூத் மற்றும் போவாஸின் அன்பு


நகோமி தனது மருமகள்களை தன்னை விட்டு நீங்கிச் செல்லும் படி வற்புறுத்திய போதும், ஒர்பாள் மட்டுமே விலகிச் சென்றாள். அவளுடைய ஆதரவற்ற நிலையில் ரூத் அவளுடனே இருந்துவிட்டாள்.

  • ரூத் நகோமியிடம் அவளுடைய கசப்பான சூழ்நிலையில் அன்பைக் காட்டி, அவளுடன் இருப்பதற்கு உறுதி கொண்டு, தன்னை விட்டு விலகாமல் இருக்க வேண்டி வற்புறுத்தினாள். "உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம் பண்ணப்படுவேன்;” என்று அவள் தீவிரமாகச் சொன்னாள். “அதற்கு ரூத்: நான் உம்மைப்பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம் பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள். அவள் தன்னோடேகூட வர மனஉறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை”. ரூத் 1:16-18

  • போவாஸ் ஒரு ஆவிக்குரிய மனிதராக இருந்தார். “கர்த்தர் உங்களோடே இருப்பாராக” என்று வேலை பார்க்கும் இடத்தில் யாரேனும் வாழ்த்துவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?

"அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்". ரூத் 2:4

  • ரூத் காட்டிய அன்பின் காரணமாக, தேவன் ரூத்துக்கு போவாஸ் மூலம் இரக்கம் காட்டினார்.

“அப்பொழுது போவாஸ் ரூத்தைப்பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடுகூடவே இரு. அவர்கள் அறுப்பறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பிறகே போ; ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால்,தண்ணீர்க்குடங்களண்டைக்குப் போய், வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான். அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்”. ரூத் 2:8-10

  • ரூத் மற்றும் நகோமியின் ஆதரவற்ற நிலையின் காரணமாக போவாஸ் இருவரிடமும் இரக்கமும் அன்பும் காட்டினார். அவர் ரூத் செய்த வேலைக்காக அவளுக்கு ஆறு படி வாற்கோதுமையை கொடுத்தார். அவளை வெறுங்கையுடன் செல்ல அனுமதிக்கவில்லை.

“அவள் தன் மாமியினிடத்தில் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனுஷன் தனக்குச் செய்ததையெல்லாம் அவளுக்கு விவரித்தாள். மேலும் அவர், நீ உன் மாமியாரண்டைக்கு வெறுமையாய்ப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள்”. ரூத் 3:16-17


3. ரூத்தின் நேர்மை மற்றும் தாழ்மை


  • போவாஸ் நகோமியின் தூரத்து உறவினர் என்பதை ரூத் பயன்படுத்திக் கொள்ளவில்லை, அவள் வேலையில் மிகவும் நேர்மையாக இருந்தாள். அவள் ஒரு மரக்கால் வாற்கோதுமை பெற கடினமாக உழைத்தாள் (22 லிட்டருக்கு சமம்).

"அப்படியே அவள் சாயங்காலமட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துத் தீர்ந்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது". ரூத் 2:17


"அப்படியே கோதுமை அறுப்பும் வாற்கோதுமை அறுப்பும் தீருமட்டும் அவள் கதிர் பொறுக்கும்படிக்கு, போவாசுடைய வேலைக்காரிகளோடே கூடியிருந்து, தன் மாமியினிடத்தில் தங்கினாள்". ரூத் 2:23

  • ரூத் போவாஸிடம் பேசியபோது அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவள் அவரை எஜமானனாகவும் தன்னை ஒரு வேலைக்காரியாகவும் கருதி யாவரையும் விட தன்னைத் தாழ்த்தினாள்.

"அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள்". ரூத் 2:13


ரூத்துக்கு தேவன் அளித்த வெகுமதி

  • ரூத்தும் போவாஸும் சுதந்தரவாளி ஆனதால் அவள் ஓபேத் என்ற மகனைப் பெற்றாள், அவன் தாவீதிற்கு முற்பிதாவாக இருந்தான்.

"அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன். ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்". ரூத் 4:17,22

  • இயேசுவின் வம்ச வரலாற்றைப் படிக்கும்போது, ரூத் மற்றும் போவாஸைப் பற்றியும் படிக்கிறோம். தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமுறையாக அவர்கள் வெகுமதி பெற்றனர்.

"சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;" மத்தேயு 1:5-6


நமக்கான ஆவிக்குரிய பாடங்கள்

  • இயேசு நமது சுதந்தரவாளியாக இருக்கிறார், ஏனெனில் "இயேசு" என்ற நாமத்திற்கு "இரட்சகர்" என்று அர்த்தம். மேலும் அவர் ஜனங்களை அவர்களின் பாவங்களிலிருந்து மீட்க வந்தார். அவர் தான் நம்முடைய பாவங்களில் இருந்து நம்மை மீட்பதற்கான ஒரே வழி.

"அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்". மத்தேயு 1:21

  • நகோமியின் நிலைமையைப் போலவே, நம் குணங்கள் அல்லது தோற்றத்தின் அடிப்படையில் உலகம் நம்மை மதிப்பிடும் ஒரு ஆதரவற்ற நிலையில் நாம் நம்மைக் காணலாம். இருப்பினும், அவர் நம்மைக் குற்றப்படுத்த மாட்டார் என்ற உறுதி, இயேசுவின் விசுவாசிகளாக, நமக்கு இருக்கிறது. மாறாக, நம் உள்ளத்தில் இருந்து உண்மையாக பாவ மன்னிப்பை நாடினால், இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் நம்முடைய பாவங்களின் விளைவுகளிலிருந்து, அவர் நம்மை விடுவிக்கிறார்.

"ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே". ரோமர் 8:1-2

  • ரூத்தின் மனத்தாழ்மைக்கு தேவன் வெகுமதி அளித்ததைப் போலவே, அவருக்கும், பிறருக்கும் முன்பாக நாம் நம்மைத் தாழ்த்தும் போது அவர் நமக்கு கிருபையை அளிக்கிறார். இந்த கிருபை அவரை நேசிப்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள, தேவனிடம் இருந்து வரும் அளவிட முடியாத நிறைவான வெகுமதியாகும். இது நமது தாழ்மையின் விளைவினால் வருகிறது.

“அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது”. யாக்கோபு 4:6

  • நகோமியின் அறிவுரைகளை ரூத் பின்பற்றியது போலவே, நாமும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார். நாம் அப்படிச் செய்தால், அவருடைய அன்பு நம்மீது பெருகும், மேலும் அவர் தம்மை நமக்கு வெளிப்படுத்துவார்.

"என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்". யோவான் 14:21

  • போவாஸ் எப்படி ரூத்துக்கு ஆறு மரக்கால் வாற்கோதுமையைக் கொடுத்தாரோ, அதுபோலவே, ஆவியின் கனிகளின் மூலம், நாம் நீதிமான்களாவதற்கு உதவும் முதல் கனிகளை (பரிசுத்த ஆவி / அன்பு மற்றும் சமாதானம்) நம் மீட்பர் நமக்குத் தருகிறார்.

"என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக". யோவான் 14:26-27


“ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம்". கலாத்தியர் 5:22-25

  • ரூத் மற்றும் போவாஸைப் போலவே, நாம் கிறிஸ்துவில் இருக்கும் போது, தேவனின் அன்பைப் பகிர்ந்து கொள்கிறோம். மேலும் இந்த அன்பின் மூலம், "தேவனின் பிள்ளைகள்" என்ற புத்திர சுவீகாரத்தைப் பெறுகிறோம். ரூத்தும் போவாஸும் இயேசுவின் வம்சவரலாற்றில் பங்குகொண்டது போலவே, நாமும் தேவனுடைய குடும்பத்தின் பாகமாகவும் அவருடைய ராஜ்யத்தின் வாரிசுகளாகவும் ஆகிறோம்.

"நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை". 1 யோவான் 3:1

bottom of page