கிறிஸ்தவ வாழ்வின் போராட்டங்கள்
- Kirupakaran
- May 15, 2022
- 4 min read

நம்மில் பலர் போராட்டங்களை கடந்து செல்கிறோம் என்று நான் நம்புகிறேன். நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் போராட்டங்களைச் சந்திக்கும் போது, நாம் மனச்சோர்வடைந்து, நான் ஏன் இதைக் கடந்து செல்கிறேன் என்று கேள்வி எழுப்புகிறோம். நாம் தேவனுக்கு நெருக்கமாக இருக்கும்போது பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த மாதிரியான சமயங்களில், ஆண்டவர் என்னோடு இருக்கிறாரா? நான் மட்டும் ஏன் இந்தப் பிரச்சினைகளைப் பெற வேண்டும்? ஏன் எனக்கு? என்று பலமுறை நாம் கேள்வி கேட்கிறோம். மற்றவர்களின் வாழ்க்கையோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறோம். இந்தப் போராட்டங்கள் நாம் ஆவிக்குரிய முதிர்ச்சியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகத் தான் என்ற முக்கிய விஷயத்தை விட்டுவிடுகிறோம்.
நீங்கள் தேவனின் பிள்ளையாக இருந்தால், அவரிடமிருந்து நல்ல விஷயங்கள் மட்டுமே கிடைக்கும். நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை. நாம் தான் நல்லது கெட்டது என்று வகைப்படுத்துகிறோம். ஆனால் தேவனுக்கு எல்லாமே நல்லது தான்.
பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் இந்த விஷயத்தைப் பற்றி கற்பிக்கிறார்.
“அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” ரோமர் 8:28
“சகலமும்” என்று பவுல் கூறுகிறார் - ஆனால் நமது விருப்பத்திற்கு பொருத்தமான விஷயங்களை மட்டும் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுத்து இதைப் பிரிக்க முனைகிறோம். தேவனின் கரம் சகலவற்றின் மேலும் இருக்கிறது, அவர் நன்மைக்காகவே செயல்படுகிறார் என்று இங்கே பவுல் கூறுவதை கவனியுங்கள். ஆனால், தேவனிடம் இருந்து எல்லா நல்ல விஷயங்களையும் பெற இரண்டு திறவுகோல்கள் உள்ளன என்று பவுல் கூறுகிறார்.
1. முதல் திறவுகோல், “தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு” மட்டுமே.
2. இரண்டாவது திறவுகோல், “அவருடைய தீர்மானத்தின்படி”.
பவுல் தனது அனுபவத்திலிருந்து இவற்றை எழுதுகிறார். அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் நிறைய கற்றுக் கொண்டு, அதையே நம் வாழ்க்கையிலும் பயன்படுத்தலாம்.
தேவ அன்பு
“தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்”. இங்கே அவர் தேவனின் மீதான அன்பைப் பற்றி பேசுகிறார்.
இங்கு அன்பு என்பது தேவனிடம் இருந்து வேண்டியவைகளைப் பெறுவதற்கு மட்டுமல்ல. அன்பு என்பது நாம் விரும்புவதைப் பெறுவதற்கு மட்டுமல்ல.
பவுலுக்கு இருந்த அன்பானது, தேவன் அவருக்காக மரித்தார், அவராலே அவர் நித்திய ஜீவனுக்காக இரட்சிக்கப்பட்டார் என்ற ஊழிய மனப்பான்மையோடு இருந்த ஒரு உண்மையான அன்பு. அவர் போராட்டத்தில் இருந்தபோதோ அல்லது மகிழ்ச்சியாக இருந்தபோதோ அந்த அன்பு மாறவில்லை. இது எஃகு தூணில் கட்டப்பட்ட சிமென்ட் பிணைப்பு போன்றது. அதை எதுவும் பிரிக்க முடியாது. அவர் இயேசுவின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.
பவுலின் வாழ்க்கை பல பாடுகளால் சிதைந்தது, ஆனாலும் தேவனின் மீதான அவரது அன்பு மாறவே இல்லை. பவுல் தனது போராட்டங்களை
2 கொரிந்தியர் 11 :23-28 இல் சுருக்கமாக விளக்குகிறார். அப்போஸ்தலர் நடபடிகளின் மூலம் இதனைக் குறித்து விரிவாக வாசிக்கலாம். அவரது போராட்டங்களின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
“அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன்.யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன்;மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்.அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்;பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.” 2 கொரிந்தியர் 11:23-28
பவுலுக்கும் நம்மைப் போன்று "எனக்கு ஏன் தேவனே" என்ற தருணங்கள் இருந்தன. அவர் இவ்வாறு விளக்குகிறார், 'அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.' 2 கொரிந்தியர் 12:7-8. பவுலுக்கு ஏதோ ஒரு வியாதி இருந்தது. அதை அகற்றும்படி அவர் தேவனிடம் கெஞ்சி வேண்டினார். ஆனால் "என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" என்பதே தேவனுடைய பதிலாய் இருந்தது.
பவுல் தனது பலவீனத்தைப் பற்றி பெருமையாக இரண்டு நிகழ்வுகளில் கூறுகிறார்.
“அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்”. 2 கொரிந்தியர் 12:10
“நான் மேன்மைபாராட்டவேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்”. 2 கொரிந்தியர் 11:30
தேவனுடைய ஆழமான அன்பையும், சிலுவையில் அவர் நமக்கு அளித்த விலைமதிப்பற்ற தியாகத்தையும் புரிந்துகொண்டதன் மூலம் மட்டுமே பவுல் தனது பலவீனத்தைக் குறித்து மேன்மை பாராட்டும் மனோபாவத்திற்கு வருகிறார். பவுல் தனது வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்திருந்தாலும் அவை எதுவும் அவருக்காக தேவன் செய்த மகத்தான தியாகத்திற்கு ஈடுசெய்ய முடியாது.
அவருடைய தீர்மானத்தின்படி --- “தேவ சித்தம்”
பவுல் யாவற்றையும் தேவனுடைய சித்தத்தின்படியே செய்தார். அவர் எபேசு நகரத்தில் 2.5 ஆண்டுகள் தங்கி இருந்தார். அவர் இன்னும் சில காலம் அங்கேயே தங்கி இருந்து, பிரசங்கம் செய்து, ஒரு பெரிய தேவாலயத்தை உருவாக்கி தன்னை மேலும் தெரியப்படுத்தி இருக்கலாம். ஆனால் அவர் தேவ சித்தத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்தார்.
பவுல் எருசலேமுக்குப் புறப்படுவதற்கு முன் தேவனுடைய சித்தத்தை விளக்குகிறார்.
“இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன்.கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.” அப்போஸ்தலர் 20:22-24
தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதே தனது வாழ்க்கையின் குறிக்கோள் என்று பவுல் மிகவும் வைராக்கியம் கொண்டிருந்தார். அவருடைய வழியில் என்ன பிரச்சனைகள் வந்தாலும் அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. "என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.”
அவர் இந்த பணியில் ஒருபோதும் கர்வப்படவில்லை. தன்னிடம் உள்ள ஆவிக்குரிய வரங்களைக் குறித்து ஒருபோதும் பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை. தான் செய்ததை விட அல்லது சொன்னதை விட, தேவனை மேன்மைப்படுத்தும்படி அவர் எப்போதும் தன்னைத் தாழ்த்திக் கொண்டார். அவருடைய ஒவ்வொரு செயலும் அப்படித் தான் இருந்தது. பவுல் எழுதியதை படிக்கும்போது அது முழுவதும் தெளிவாகத் தெரிகிறது.
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
பவுல் தேவன் மீது கொண்டிருந்த மாதிரியான அன்பைப் போல நாமும் பெற வேண்டுமானால், இயேசு எனக்காகவும் என் பாவங்களுக்காகவும் மரித்தார், அந்த மரணம் எவ்வளவு விலைமதிப்பற்றது, அவர் நமக்காக மரிக்கவில்லை என்றால் நாம் ஆண்டவருடைய கோபத்தை எவ்வளவு மோசமாக எதிர்கொள்வோம் என்ற உண்மையான நன்றி உணர்வு நமக்கு இருக்க வேண்டும். இந்த உண்மையான உணர்வு நம் இருதயத்திலிருந்து வர வேண்டும். ஒரு பிரசங்கத்தை நாம் தனியாகக் கேட்கும்போது உண்டாகிற ஒரு வெதுவெதுப்பான / தெளிவற்ற உணர்வாக அது இருக்க முடியாது, அது 24x7 எப்போதும் நமக்குள் இருக்கும் நெருப்பாக இருக்க வேண்டும்.
இயேசுவின் மீதான அன்பு நமக்குள் ஒரு சரீர சம்பந்தமான உணர்வு போல இருக்க வேண்டும். இரத்தமும் சதையும் எப்படி ஒன்றாக இருக்கிறதோ, அது போல் இருக்க வேண்டும். சதை வெட்டப்படும்போது வலியை அனுபவிக்கிறோம். நம் இலக்கு நித்தியமான இடமாக இருப்பதால், நம்முடைய சூழ்நிலைகளால் அன்பை நிறுத்த முடியாது. இந்த உலகில் நம்மைச் சுற்றி நடக்கும் யாவும் தற்காலிகமானவை.
பவுலைப் போன்ற அன்பை நாம் கொண்டிருக்க வேண்டும், "மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்". ரோமர் 8:38-39. நான் எவ்வளவு போராட்டங்களைச் சந்தித்தாலும் தேவன் மீதான அன்பை ஒருபோதும் மாற்ற முடியாது.
நாம் தேவனிடம் அத்தகைய அன்பைக் கொண்டிருக்கும்போது, “சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று” நாம் நம்பிக்கையுடன் சொல்லலாம். நமக்கு எதிராக வரும் விஷயங்கள் நமக்குத் தீமையானவை என்று நம்பும்படிக்கு சாத்தானால் ஏமாற்றப்படுகிறோம். ஆனால், தேவனிடத்தில் இருந்து வரும் யாவும் நன்மையானவைகளே என்று வேதம் சொல்லுகிறது. அவருடைய அகராதியில் தீமையானது என்று ஒன்றும் இல்லை.
உங்களுக்கு ஏதேனும் தீமை வந்தால் அது, தேவனின் சித்தத்தின் படி இல்லை என்ற எச்சரிப்பாகும்.
உங்களுக்கு நடந்திருக்கக் கூடிய ஒரு கெட்ட காரியம் உங்கள் வாழ்க்கையில் தேவன் திட்டமிட்டுள்ள ஒரு நல்ல காரியத்திற்கான தொடக்கமாக இருக்கலாம்.
நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கும்போது அவர் நமக்கு நன்மையானதையும், “சிறந்ததையும்” தர விரும்புகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நாம் மனிதர்கள், போராட்டங்களின் போது நாம் சோர்வாகவும் பெலவீனமாகவும் உணர்கிறோம். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் பவுலின் அணுகுமுறையைப் பின்பற்றி உங்கள் பலவீனத்தை குறித்து மேன்மை பாராட்டுங்கள். இதனால் கிறிஸ்துவின் வல்லமையின் மூலம் உங்கள் பலவீனத்தை நீங்கள் மேற்கொள்ளலாம்.
உங்கள் பலவீனத்தில், “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோமர் 8:31) என்று உரக்கச் சொல்லுங்கள்.
தேவன் நம்மோடு இருக்கும்போது நாம் ஜெயம் கொள்ளுகிறவர்களாக இருக்கிறோம், “இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே”. ரோமர் 8:37. நாம் தோற்றவர்கள் என்று நம்பும்படி சாத்தானால் ஏமாற்றப்படுகிறோம், ஆனால் உண்மையில் நாம் தேவன் மூலம் ஜெயம் பெற்றவர்கள்.
தேவ சித்தத்திற்கு எப்போதும் ஒப்புக் கொடுங்கள்.
தேவனின் சித்தத்திற்கு ஒப்புக் கொடுப்பது என்பது நாம் ஜெபித்து, அவருடைய திட்டங்கள் என்ன என்று தேடும் போது மட்டுமே வரும். நம் சொந்த விருப்பங்களால் அல்ல. அவருடைய சித்தத்திற்காக அதிகமாக ஜெபித்து, நீங்கள் மனதில் வைத்திருப்பதை விட அவருடைய திட்டங்களின்படி உங்களை வழிநடத்தும்படி அவரிடம் கேளுங்கள்.
தாவீது இதை அழகாகக் கூறுகிறார்.
“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்”. சங்கீதம் 37:4
“அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக”. சங்கீதம்20:4
நாம் ஜெபித்து, அவருடைய சித்தத்திற்கு அடிபணியும்போது, அவர் திட்டமிட்டிருப்பதை நம் உள்ளத்தில் விருப்பங்களாகக் கொடுப்பார். அவருடைய சித்தத்தின்படி இல்லாத மனித ஆசைகளை நம்மிடம் இருந்து அகற்றுவார். நீங்கள் அவருடைய சித்தப்படி நடக்கிறீர்களா, நீங்கள் செய்வது சரியா இல்லையா என்று வேத வசனங்களின் மூலம் தொடர்ந்து உங்களிடம் பேசுவார்.
நீங்கள் தொடர்ந்து ஜெபித்து, உங்கள் எல்லா திட்டங்களையும் அவரிடம் சொல்லி அவரைத் தீவிரமாகத் தேடி, நான் ஒப்புக் கொடுக்கிறேன் என்று சொன்னால் மட்டுமே இது நடக்கும்.
நாம் கடந்து செல்லும் போராட்டங்கள் எல்லாம் பவுல் அனுபவித்ததற்கு எந்த அளவிலும் ஒப்பானது இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். பவுல் தன்னுடைய அனுபவத்தில் இருந்து சொன்னால், தேவனின் பார்வையில் பவுலைப் போல வெற்றிகரமாக வாழ அதை நாமும் அப்படியே பின்பற்றுவது நல்லது.
போராட்டங்கள் நமக்குத் தீமையானவை என்று நாம் எப்போதும் நம்ப வைக்கப்பட்டுள்ளோம், ஆனால் அவை நம் நன்மைக்காகவே வருகின்றன. "எல்லா நன்மைகளும் தேவனிடமிருந்து வருகின்றன“ என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



Comments