கெத்செமனே தோட்டத்தின் பாடங்கள்
- Kirupakaran
- 13 minutes ago
- 6 min read

கெத்செமனே தோட்டம் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு ஜெபித்த இடமாக மட்டுமல்லாமல், அது ஆழமான கீழ்ப்படிதலின் இடமாகவும், தீவிரமான ஆவிக்குரிய போராட்டத்தின் இடமாகவும், பிதாவின் சித்தத்திற்கு முழுமையாக அடிபணிந்த இடமாகவும் இருந்தது.அந்த நேரத்தில், இயேசு, "என் சித்தத்தின்படி அல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்று ஜெபித்தார். அவருடைய கெத்செமனே ஜெபம், தேவனுடனான நமது வாழ்க்கையில் நாமும் பயன்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த பாடங்களை வழங்குகிறது.
இந்த சம்பவத்தைக் குறித்து மத்தேயு / மாற்கு / லூக்கா சுவிஷேங்களில் வாசிக்கிறோம். ஒவ்வொன்றும் இந்த ஜெபத்திற்கு சிறிது வித்தியாசமான கண்ணோட்டத்தை வழங்குகின்றன.
பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி, சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டு: அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார். பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். அவர் மறுபடியும் போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார். அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால், தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்லுவது இன்னதென்று அறியாதிருந்தார்கள். அவர் மூன்றாந்தரம் வந்து: இனி நித்திரைப்பண்ணி இளைப்பாறுங்கள்; போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார். என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார். மாற்கு 14:32-42
இந்த கெத்செமனே ஜெப அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஐந்து பாடங்களைப் பார்க்கலாம்.
1 நீங்கள் ஆழமான வேதனையிலும் கலக்கத்திலும் இருக்கும்போது, ஜெபியுங்கள்.
கெத்செமனே என்ற வார்த்தைக்கு ஆலிவ் எண்ணெய் பிழிதல் ("ஆலிவ் பிரஸ்") என்று பொருள், இது ஒலிவ மலையில் அமைந்திருந்த ஒலிவ மரங்கள் நிறைந்த தோட்டம்.
கெத்செமனே என்பது தங்குதல், தங்குகிறவர்கள், தங்கும் இடம் என்பதைக் குறிக்கிறது.
நாம் ஒரு தோட்டம் என்று சித்தரித்தாலும், அது உண்மையில் ஒரு பழத்தோட்டம். மேலும் கெத்செமனே என்ற பெயர் ஒலிவ மரங்களிலிருந்து எண்ணெயைப் பிழிந்தெடுக்கும் இடத்தைக் குறிக்கிறது. இது இயேசு அனுபவிக்கவிருந்த அழுத்தம் மற்றும் நொறுக்குதலைக் குறிக்கும் வலிமையான உருவகமாகும்.
இயேசு நசுக்கப்படுவதற்காக கெத்செமனேவுக்குச் சென்றார் - நமக்காகத் துக்கத்தின் பாரத்தைத் தாங்கவும், ஒப்புக் கொடுக்கவும் சென்றார்.
இயேசுவும் நம்மைப் போலவே உணர்வுகள் கொண்டவராக இருந்தார் - அவர் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானைத் தம்முடன் அழைத்துச் சென்றார், அப்போது அவர் மிகவும் துயரப்படவும், கலக்கமடையவும் தொடங்கினார்.
இந்த துயரத்தில் அவர் என்ன செய்தார்? – ஜெபித்தார்.
நாம் துன்பத்தில் இருக்கும்போது என்ன செய்கிறோம்? - இதற்கு நேர்மாறாக, பதட்டமடைந்து, அழுகிறோம். உலக இன்பங்களை நோக்கித் திரும்புகிறோம், மனிதர்களின் ஆலோசனைகளை நாடுகிறோம். வேதம் கூறுகிறது, நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம். ஏசாயா 2:22. ஆனால் நாம் முதலில் தேவனிடம் ஜெபிப்பதற்குப் பதிலாக, கடைசி வழியாக மட்டுமே அவரை நோக்கிச் செல்கிறோம்.
முக்கியமான பாடம் : நாம் "மிகுந்த துயரத்திலும், மன உளைச்சலிலும்" இருக்கும்போது இயேசு செய்தது போல், நாமும் தேவனிடம் உதவி கேட்டு ஜெபிக்க வேண்டும். வாக்குத்தத்தம் கூறுகிறது, நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். பிலிப்பியர் 4:6
2. ஜெபத்தில் ஐக்கியம் - பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானுடன் இயேசு
தம்முடன் ஜெபிப்பதற்கு இயேசு மூன்று சீஷர்களை மட்டுமே அழைத்துச் சென்றார்; இது மத்தேயு சுவிசேஷத்தில் அவர் கூறிய வாக்குத்தத்தத்தை பிரதிபலிக்கிறது. ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். மத்தேயு 18:20
இயேசு எல்லா சீஷர்களையும் அழைத்துச் சென்றிருக்கலாம், ஆனால் அவர் அவர்களிடம் "நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள்" என்றார். மாற்கு 14:32 (b)
துன்ப காலங்களில் நமக்குத் துணை வேண்டும் என்பதையும் இயேசு கற்றுத்தருகிறார். அவர் நமக்கு ஒரு முன்மாதிரியை வைத்து சென்றிருக்கிறார்: நாமும் துன்ப காலங்களில் ஆவிக்குரிய ஐக்கியத்தை நாட வேண்டும்.
இயேசு ஏன் இந்த மூவரையும் (பேதுரு / யாக்கோபு மற்றும் யோவான்) மட்டும் அழைத்துச் சென்றார்?
நான்கு சுவிசேஷங்களிலும், பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோர் மற்ற சீஷர்கள் காணாத சிறப்பு தருணங்களைக் காண்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மறுரூபம் (மத்தேயு 17:1-9)
யவீருவின் மகளின் உயிர்த்தெழுதல் (மாற்கு 5:37-43)
கெத்செமனே தோட்டத்தில் இயேசுவின் வேதனை (மத்தேயு 26:37-39)
இயேசு அவர்களை ஆதி திருச்சபையில் முக்கியத் தலைவர்களாக ஆக தயார்படுத்தினார்:
பேதுரு அப்போஸ்தலர்களின் தலைவராகி, பெந்தெகொஸ்தே நாளில் பிரசங்கித்தார்.
யாக்கோபு (செபதேயுவின் குமாரன்) இரத்தசாட்சியாக மரித்த முதல் அப்போஸ்தலர் (அப்போஸ்தலர் 12:2).
யோவான், யோவான் சுவிசேஷம், மூன்று நிருபங்கள் மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் ஆகியவற்றின் ஆசிரியரானார்.
இயேசு தமது சீஷர்கள் கீழ்கண்டவற்றை புரிந்துகொள்ள விரும்பினார்:
அவர் அனுபவித்த வேதனையையும், மீட்பின் விலையையும் அவர்கள் காண வேண்டும்.
தம்முடைய துன்பக் காலத்தில் தம்முடன் ஜெபிக்க வேண்டும்.
தம்முடைய சீஷர்களாக அவர்களும் எதிர்கொள்ள வேண்டிய பாடுகளுக்கு அவர்களைத் தயார்படுத்தினார்.
3. இயேசுவின் கெத்செமனே ஜெபம்
இயேசு ஏன் ஆழ்ந்த துக்கமும் கவலையும் அனுபவித்தார்? கீழ்கண்ட வசனத்தில் விவரிக்கிறார், அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி, மாற்கு 14:34
இயேசுவின் இருதயமும் ஆத்துமாவும், மனமும் துக்கமடைந்து கலங்கியபோது அவர் சங்கீதம் 88 இல் கோராகின் புத்திரர்கள் ஜெபித்தது போல் துக்கத்தால் நிரம்பிய ஒரு ஜெபத்தைச் செய்தார்.
ஏன் அவர் இவ்வளவு மிகுந்த மனவேதனையில் ஆழ்ந்திருந்தார்? - இயேசு
கெத்செமனே தோட்டத்தில் ஆழமான துக்கத்திலும் கலக்கத்திலும் இருந்தார் (மாற்கு 14:33-34, மத்தேயு 26:37-38). ஏனென்றால் அவர் மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய பாரத்தை எதிர்கொண்டார் - உலகத்தின் பாவங்களைத் தம்மீது ஏற்றுக்கொண்டு தேவனுடைய கோபத்தைத் தாங்கினார்.
1. உலகத்தின் பாவத்தைச் சுமத்தல்
நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். 2 கொரிந்தியர் 5:21
பாவமற்றவராக இருந்த இயேசு, மனிதகுலத்தின் பாவத்தின் முழு பாரத்தையும் ஏற்கவிருந்தார்.
இதன் பொருள், தேவனிடமிருந்து பிரிவை அனுபவிப்பதாகும், அதை அவர் இதற்கு முன்பு அறிந்திருக்கவில்லை. உலகில் இருக்கையில், அவர் பிதாவின் பிரசன்னத்தை அனுபவித்து நடந்துவந்தார்.
2. தேவனின் கோபத்தை அனுபவித்தல்
அவர் நமக்காக பாவநிவாரண பலியாகக் கொடுக்கப்பட்டு (2 கொரி. 5:21) நியாயப்பிரமாணத்தின் சாபத்தைச் சுமந்தார்.
மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி,நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். கலாத்தியர் 3:13
கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; ஏசாயா 53:10
இயேசு வெறும் சரீர துன்பத்தை எதிர்கொள்ளவில்லை - மனிதகுலத்தின் அனைத்து பாவங்களுக்கும் மற்றும் முழு உலகத்திற்குமான தேவனின் நீதியான நியாயத்தீர்ப்பை அவர் தாங்கவிருந்தார்.
இந்த நியாயத்தீர்ப்பு நமக்குப் பதிலாக அவர் மேல் விழும்.
3. ஆவிக்குரிய துன்பத்தின் தீவிரம்
இயேசு, உலகில் மிகக் கொடூரமான மரணங்களில் ஒன்றான சிலுவை மரணத்தை தாம் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்தார்.
ஆனால் சரீர ரீதியான வலியை விட, தேவனுடைய கோபத்தை சுமந்து, தேவனால் கைவிடப்படும் அந்த ஆவிக்குரிய வேதனையே உண்மையான வேதனையாகும். ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். மத்தேயு 27:46
நாம் அவரை அழைக்கும்போது நாம் கைவிடப்படாமல் இருக்க அவர் கைவிடப்பட்டார்.
சரீர ரீதியான துன்பம் அவரை "வேதனையிலும் துயரத்திலும்" மூழ்கடிக்கவில்லை, மாறாக பிதாவால் கைவிடப்பட்டதைப் பற்றிய சிந்தனையே அவரை கடும் வேதனைக்குள்ளாக்கியது. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். மாற்கு 15:34
அவருடைய வேதனை மிகவும் அதிகமாக இருந்ததால் அவர் வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் இருந்தது (லூக்கா 22:44) - அவர் நமக்காக ஆலிவ் எண்ணெய் பிழிந்தெடுக்கப்படுவது போல அழுத்தப்பட்டார். நாம் இரட்சிக்கப்படுவதற்காக ஜெபத்தில் தம்முடைய இரத்தத்தை சிந்தினார்,
அந்த ஜெபம் மிகவும் தீவிரமானதும் ஆழமானதுமாக இருந்தது. அது அவரது சரீரத்தை நசுங்கச் செய்து, இரத்தம் வியர்வையாக சிந்துமளவுக்கு ஆழமாயிருந்தது.
4. அவரது ஜெபம்: "இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்".
சற்று அப்புறம்போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். மத்தேயு 26:39
இயேசு முழங்கால்படியிட்டு ஜெபிப்பதை லூக்கா புத்தகம் பதிவு செய்கிறது (மற்ற நற்செய்திகள் இயேசு ஜெபித்தார் என்று மட்டுமே குறிப்பிடுகின்றன).
இது அவர் குடிக்க இருக்கும் "பாத்திரம்" (யோவான் 18:11).
"பாத்திரம்" என்பது தேவனின் கோபத்தைக் குறிக்கிறது (சங்கீதம் 75:8, ஏசாயா 51:17).
கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள். சங்கீதம் 75:8
எழும்பு, எழும்பு, கர்த்தருடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அவர் கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய். ஏசாயா 51:17
இரட்சிப்பை நிறைவேற்ற வேறு வழி இருக்கிறதா என்று அவர் கேட்டுக்கொண்டிருந்தார் - ஆனாலும் பிதாவின் சித்தத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தார்.
தம்முடைய ஆழ்ந்த வேதனையிலும் கூட, இயேசு பிதாவுக்குக் கீழ்ப்படிந்து நமக்காக சிலுவையைச் சகித்தார். அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். எபிரேயர் 12:2
கெத்செமனேயில் இந்த தருணம் அவருடைய மனிதநேயத்தையும், நம்மீது அவர் வைத்திருக்கும் அன்பையும், நமது இரட்சிப்பின் கற்பனை செய்ய முடியாத விலையையும் காட்டுகிறது.
எபிரெயர் 5:7-9 இன் படி, அவர் மரணத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கேட்காமல், மரணத்திலிருந்து இரட்சிக்கப்பட வேண்டும் அதாவது, மரித்தோரிலிருந்து எழுப்பப்பட வேண்டும் என்று கேட்டார். பிதா அவருடைய வேண்டுதலை நிறைவேற்றினார். அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லைமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, எபிரெயர் 5:7-9
4. தூங்கும் சீஷர்கள் - ஆவி உற்சாகமுள்ளது தான், மாம்சமோ பலவீனமுள்ளது
அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி, சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டு: மாற்கு 14:34-35
அவர் ஒரு மணி நேரம் ஜெபித்துவிட்டு திரும்பிய போது அவர்கள் தூக்கத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார்.
எப்படி மேற்கொள்வது என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினார் - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளது தான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். மாற்கு 14:38
தூக்கத்தின் சோதனையிலிருந்து எப்படி வெற்றி பெறுவது?
பாடம் 1 - விழித்திருந்து ஜெபிக்கவும்.
பாடம் 2 - ஆவி உற்சாகமுள்ளது, ஆனால் மாம்சமோ பலவீனமானது.
மூன்று சீஷர்களும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? தூங்கிக் கொண்டிருந்தார்கள். பேதுரு, ஆண்டவரோடு கூட மரிக்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்திருந்தார் - ஆனாலும் அவரோடு விழித்திருக்கக்கூட அவரால் முடியவில்லை! இயேசு எவ்வளவு மென்மையாக அவர்களைக் கடிந்துகொண்டு எச்சரித்தார்.
ஆவிக்குரிய பலவீனத்திற்கு இயேசு ஒரு நடைமுறை தீர்வைக் கூறுகிறார்: விழிப்புடன் இருங்கள், ஜெபத்தில் நிலைத்திருங்கள். "விழித்திருந்து ஜெபியுங்கள்" என்ற இந்த அழைப்பு வேதாகமம் முழுவதும் எதிரொலிக்கிறது.
ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, அவர்கள் நிமித்தம் இரவும்பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம். நெகேமியா 4:9
அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். மாற்கு 13:33
எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். எபேசியர் 6:18
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள். கொலோசெயர் 4:2
நீங்கள் தூக்கத்தில் இருந்து ஜெபிக்க முடியாதபோது, கவனச்சிதறல்களையும் சோர்வையும் ஜெயிக்க தேவனுடைய கிருபையை வேண்டிக்கொள்ளுங்கள்.
5. ஜெபம், பிறகு அழுத்தம்: ஜெபத்திற்கு பின் சோதனைகள் வரும் என்று எதிர்பாருங்கள்
இந்த ஜெபத்திற்குப் பிறகு சோதனை வருகிறது – என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார். மாற்கு 14:42
இந்த தீவிரமான ஜெப நேரத்திற்குப் பிறகு, இயேசு சமாதானத்திற்குள் நடக்கவில்லை - மாறாக துரோகத்திற்குள் சென்றார். ஜெபம் எல்லா நேரங்களிலும் பிரச்சனையை நீக்குவதில்லை, ஆனால் அதை வலிமையுடன் எதிர்கொள்ள நம்மை தயார்படுத்துகிறது.
தேவன் எப்போதும் சோதனையை அகற்றாமல் இருக்கலாம், ஆனால் அவருடைய சமாதானமும் பிரசன்னமும் நம்முடன் இருப்பது ஜெபத்தின் மூலம் நமக்கு உறுதியாகத் தெரியப்படுத்தப்படுகிறது.
எனவே, ஜெபத்திற்குப் பிறகு சோதனைகளை எதிர்பாருங்கள். நாம் அவரிடமிருந்து ஆசீர்வாதங்களை மட்டுமல்லாமல், இயேசு இந்த உலகில் அனுபவித்த பாடுகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் - (ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. பிலிப்பியர் 1:29). தேவனின் சமாதானம் இவை அனைத்திலிருந்தும் நம்மைக் காத்து, நம்மை எதிர்நோக்கி இருக்கும் சோதனைகளிலிருந்து வெளியேற வழி செய்யும் என்பதில் உறுதியாக இருங்கள்.
Yorumlar