top of page

உங்கள் ஆசீர்வாதத்தைத் தடுப்பது எது?

  • Kirupakaran
  • Apr 20
  • 7 min read

ree

நாம் ஒரு மலையில் ஏறும்போது, ​​மலைக்கு மேலும் கீழும் நம் கண்களை வைத்திருக்க வேண்டும். அநேக நேரம் நம்மை முன்னேறவிடாமல் தடுக்கும் பாறைகளை நாம் பார்க்க வேண்டும். நம் வாழ்க்கையிலும் அப்படித்தான். நாம் அனைவரும் தேவனின் ஆசீர்வாதங்களை விரும்புகிறோம், ஆனால் நம்மைத் தடுத்து நிறுத்துவது எது என்பதை நாம் உணர்வதில்லை. ஒரு பாறை நம் டயரை அடைக்கும்போது நாம் இன்னும் கடினமாகத் தள்ளி அதே இடத்தில் சிக்கிக் கொள்வது போல நாமும் சில நேரங்களில் தடைகளில் சிக்கிக் கொள்கிறோம்.

 

இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறிய வேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும், சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள். எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள். எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள். எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே. 1 கொரிந்தியர் 10:1-4

 

முற்பிதாக்களின் தெய்வீக நடத்தை


இஸ்ரவேலர்களின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும், அது பழைய வரலாறு,  நமக்குப் பொருந்தாது என்று கருதாமல் இருக்கவும் பவுல் கொரிந்து சபைக்கு எழுதுகிறார். எனவே, நம் முற்பிதாக்களுக்கும் நமக்கும் தேவன் எவ்வாறு ஒரே மாதிரியாக இருக்கிறார் என்பதற்கான ஒப்பீட்டை இங்கே காணலாம்.

 

கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான காரியங்கள் 

நம் முற்பிதாக்கள்

தற்போதைய உலகம்

தேவனின் அழைப்பு

பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவனால் இரட்சிக்கப்பட்டார்கள். இது ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தின் அடிப்படையில் அமைந்தது.

 

சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது. தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார். யாத்திராகமம் 2:23-25

 

 

தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த அதே வாக்குத்தத்தத்தை நமக்குக் கொடுத்தார், விசுவாசத்தின் மூலம் நம்மை இரட்சித்து, ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாக மாற்றினார். அதனால் அவர் நமக்கும் உதவ முடியும்.

 

ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று. கலாத்தியர் 3:14

ஞானஸ்நானம்

 

அவர்கள் மோசேயினால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

 

எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள். 1 கொரிந்தியர் 10:2

கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம், நாம் ஞானஸ்நானம் பெறுகிறோம். இயேசுவின் கட்டளைகளை நாம் பின்பற்றினால், நித்தியத்தில் அவருடன் என்றென்றும் இருப்போம் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்துள்ளார்.

 

நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. கலாத்தியர் 3:26-27

மேகஸ்தம்பத்தின் உதவியுடன் நடந்தார்கள்

தேவன் அவர்களை இரவும் பகலும் மேகத்தைக் கொண்டு வழிநடத்தினார். நெகேமியா புத்தகத்தில், அவர்கள் 40 வருடங்கள் வனாந்தரத்தில் தேவனோடு நடந்ததாக வாசிக்கிறோம்.

 

நீர் உம்முடைய மிகுந்த மனவுருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை; அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும் அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினிஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை. நெகேமியா 9:19

ஞானஸ்நானம் பெற்று அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படியும் போது, நாம் தேவனின் பரிசுத்த ஆவியானவரோடு நடக்க ஆரம்பிக்கிறோம்.

 

நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். யோவான் 14:15-16

ஆவிக்குரிய உணவு

தேவன் அவர்களுக்கு பாலைவனத்தில் உணவாக மன்னாவையும்  தண்ணீரையும் கொடுத்தார். அவர்களைப் பத்திரமாக வைத்திருந்தார். அவர்களுடைய வஸ்திரங்கள் பழமையாய்ப் போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை. அவர்களுக்குத் தேவையான அனைத்தும் இருந்தன.

 

அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல் ஆவியைக் கட்டளையிட்டீர்; அவர்கள் வாய்க்கு உம்முடைய மன்னாவை அருளி, அவர்கள் தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தீர். இப்படி நாற்பது வருஷமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு, அவர்களைப் பராமரித்து வந்தீர்; அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப் போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை. நெகேமியா 9:20-21

இயேசு நம்முடைய ஆவிக்குரிய தகப்பன், நாம் வாழ்வதற்கு தம்முடைய வசனத்தை நமக்கு அன்றாட உணவாகத் தருகிறார்.

 

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105

 

 

அப்படியிருந்தும் அவர்களில் அதிகமான பேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை என்று பவுல் முடிக்கிறார்.

 

அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். 1 கொரிந்தியர் 10:5

  • மோசே இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வழிநடத்திச் சென்றபோது, பெண்கள், குழந்தைகள், லேவி கோத்திரத்தை சேர்க்காமல், சுமார் 603,550 ஆண்கள் இருந்தனர் (எண்ணாகமம் 1:45-46). இறையியலாளர் மதிப்பீடுகளின் அடிப்படையில் மொத்த இஸ்ரவேலர்களின் மக்கள் தொகை சுமார் 2 முதல் 2.5 மில்லியன் வரை இருந்தது.

  • வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் எத்தனை பேர் பிரவேசித்தனர்? அந்த வயதுவந்த தலைமுறையைச் சேர்ந்த யோசுவாவும் காலேபும் மட்டுமே பிரவேசித்தனர். எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை. எண்ணாகமம் 14:30


யோசுவாவையும் காலேபையும் வேறுபடுத்தியது எது?

 

1. அவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்கள் - யோசுவா (ஊழியக்காரன்) மற்றும் காலேப் (தாசன்) இருவரும் மோசேயின் ஊழியக்காரர்கள்.

  • கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி: யோசுவா 1:1

  • என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றி வந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். எண்ணாகமம் 14:24

தேவனுடைய பிள்ளைகளாகிய நாமும் அவருடைய ஊழியக்காரர்களாக இருக்கும்படி அழைக்கப்படுகிறோம். முழுநேர ஊழியர்களாக இல்லாவிட்டாலும், அவருக்கு ஊழியம் செய்ய நாம் இன்னும் அழைக்கப்படுகிறோம். பல ஆண்டுகளாக வெறுமனே விசுவாசியாக இருப்பது மட்டும் போதாது - நம்மால் முடிந்த வழிகளில் ஊழியம் செய்வதற்கு, நமது வசதிகளை விட்டு வெளியே வர வேண்டும். தேவனிடம் கேளுங்கள், அவர் தமது வழியைக் காட்டுவார்.

 

2. இருவரும் வாலிபத்திலேயே தேவனைத் தேடினார்கள் - யோசுவாவின் வயதைக் குறித்து எந்தப் பதிவும் இல்லை, ஆனால் காலேபுக்கு 40வயது என்று காண்கிறோம். யோசுவா 14 இல், தேவன் காலேபுக்கு அவரது 85 வயதில் 40 வயது வாலிபனின் பெலனைக் கொடுத்தார் என்று வாசிக்கிறோம்.

  • இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன். மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள் வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது. யோசுவா 14:10-11

 

உங்களுடைய மிகச் சிறந்த வருடங்களை உலகிற்குக் கொடுத்து விட்டு, தேவனுக்கு ஊழியம் செய்ய முதுமை வரை காத்திருக்காதீர்கள். இப்போதே உங்களால் முடிந்ததைக் கொடுங்கள், இன்னும் தாமதமாகிவிடவில்லை - அவர் அதை மதிப்பார்.

 

3. அவர்கள் கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினார்கள் – ‘உத்தமமாய்’ என்ற வார்த்தைக்கு எதையும் முழு உண்மையுடனும், அர்ப்பணிப்புடனும், உற்சாகத்துடனும் செய்வது என்று பொருள்.

  • அந்நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார். யோசுவா 14:9

  • தேவன் அவர்களுடைய உத்தமமான கிரியைகளை ஆசீர்வதித்தார். அவர்களை மட்டுமல்லாமல், அவர்களுடைய தலைமுறையையும்  ஆசீர்வதித்தார்.

  • யோசுவாவின் கோத்திரம் எப்பிராயீம் கோத்திரம், இவர்களில் 32,500 ஆண்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்தனர்.

  • காலேபின் கோத்திரம் யூதா கோத்திரம், மொத்தம் 76,500 ஆண்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்தனர். யூதா கோத்திரத்திற்கு தேவன் வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை நாம் அறிவோம்.

  • உங்கள் சொந்த ஆசீர்வாதத்தில் மட்டும் கவனம் செலுத்தாதீர்கள் - நீங்கள் முழு இருதயத்தோடும் அவரை சேவித்தால் உங்கள் குடும்பத்தையும் எதிர்கால சந்ததியினரையும் ஆசீர்வதிக்க தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்.

 

 

நம் முற்பிதாக்களிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள்

 

அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது. 1கொரிந்தியர் 10:6

 

வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிப்பதைத் தடுத்த 6 பாவங்கள்

 

1. களியாட்டத்தின் பாவங்கள்:


இஸ்ரவேல் ஜனங்களின் மனம் எப்போதும் புசிப்பதிலும், குடிப்பதிலும், விருந்தில் (களியாட்டம்) ஈடுபடுவதிலுமே இருந்தது.

ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள். 1 கொரிந்தியர் 10:7

  • இது நமக்கு ஒரு எச்சரிக்கை மணி. இன்றைய உலகம் அதிகப்படியான உணவு, குடிப்பழக்கம் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. மேலும்,இதில் கலந்து கொள்ளாதவர்கள் (ஆண்களும் பெண்களும்) விசித்திரமானவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

  • விருந்து கலாச்சாரம் உலகத்திற்கானது, இது இயேசுவின் இரத்தத்தால் காப்பாற்றப்பட்ட விசுவாசிகளுக்கானதல்ல.

  • களியாட்டத்தின் பாவங்கள் / புசிப்பதும் குடிப்பதும் சாத்தானிடமிருந்து வருகிறது, நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பார்ப்பதன் மூலம் நாம் பாவம் செய்யத் தூண்டப்படுகிறோம். அவற்றை நாம் தேவனிடம் ஒப்படைத்து, உலக ஆசைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்படி அவரிடம் கேட்க வேண்டும்.

  • சோதோம் கொமோராவின் பாவங்களிலிருந்து லோத்தை பாதுகாத்த அதே தேவன், காலேபைப் போல நாமும் அவரிடம் கேட்டால், பாவமுள்ள நம் தலைமுறையையும் அவர் பாதுகாக்க முடியும்.

 

2. விக்கிரகாராதனையின் பாவங்கள்

" ...  அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள்". 1 கொரிந்தியர் 10:7

  • தேவனிடமிருந்து பத்து கட்டளைகளைப் பெற மோசே சீனாய் (ஓரேப்) மலைக்குச் சென்றபோது, ​​ஆரோன் ஒரு கன்றுக்குட்டியை உண்டாக்கி, ஜனங்கள் அதை வணங்கினார்கள் என்பதை அறிவோம். அவர்கள் புல்லைத் தின்கிற ஒரு மாட்டின் விக்கிரகத்தை தேவனாக வணங்கினர்.

  • அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை நமஸ்கரித்தார்கள். தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள். சங்கீதம் 106:19-20

  • கிறிஸ்துவின் விசுவாசிகளாகிய நம் வீட்டில் விக்கிரகங்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நவீன விக்கிரகங்களை நமக்குக் கொடுத்து அதில் நம் மனதை ஒருமுகப்படுத்தி, நம் கண்களை தேவனிடமிருந்து விலக்கி வைக்கும்படி செய்வதில் சாத்தான் புத்திசாலி. 

  • தேவனை இரண்டாம் பட்சமாக்கும் எதுவும் நவீன விக்கிரகம் தான்.

  • நீங்கள் பிணைக்கப்பட்டிருக்கும் விக்கிரகங்களிலிருந்து தப்பி ஓடும்படி அவைகளைக் காட்டுமாறு தேவனிடம் கேளுங்கள்.

 

3. வேசித்தனம்

அவர்களில் சிலர் வேசித்தனம் பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம் பண்ணாதிருப்போமாக. 1 கொரிந்தியர் 10:8

  • சித்தீமிலிருந்த இஸ்ரவேலர் வேறு கோத்திரத்தைச் சேர்ந்த மோவாபிய பெண்களோடு வேசித்தனம் செய்தனர்.

  • அது அத்துடன் நிற்கவில்லை. தங்கள் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட பலிகளை உண்ணும்படி மோவாபியப் பெண்கள் அவர்களை அழைத்த போது ஜனங்கள் போய்ப் புசித்தனர். இன்பத்திற்கு ஈடாக அவர்கள் பொய்யான தெய்வங்களைப் பணிந்துகொண்டார்கள். மெய்யான தேவனை விட்டு விலகி, பாவத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்கள்.

  • இது தேவனுடைய பார்வைக்கு மிகவும் பொல்லாததாயிருந்து, அவருடைய கோபத்தைத் தூண்டியது. இதைப் பற்றிய தேவனின் நியாயத்தீர்ப்பை எண்ணாகமம் 25 இல் வாசிக்கிறோம்.

  • இது நமக்கு ஒரு எச்சரிக்கை மணி. இஸ்ரவேலர்கள் செய்ததைப் போல நாம் விக்கிரகங்களுக்கு தலைவணங்காமல் இருக்கலாம், ஆனால் இன்றைய உலகம் புதிய வழிகளில் குறிப்பாக சமூக ஊடகங்கள் மூலம் பாவத்தைக் கொண்டுவருகிறது. தேவனுக்கு விரோதமான காரியங்களுக்கு நாம் வெளிப்படுத்தப்பட்டு பாவமான உறவுகளுக்குத் தூண்டப்படலாம். நாம் விழிப்புடன் இருந்து நம் இருதயத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.

  • இன்று பல பாவங்கள் மறைக்கப்பட்டு இரகசியமாக செய்யப்படுகின்றன, ஆனால் தேவனிடமிருந்து எதுவும் மறைக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் - அவருடைய கண்கள் எல்லோரையும் நோக்கிப் பார்க்கிறது. அவருடைய நியாயத்தீர்ப்பிலிருந்து யாரும் தப்ப முடியாது.

 

4. போஜனத்திற்காக தேவனை பரீட்சை பார்த்தனர்

அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக. 1 கொரிந்தியர் 10:9

  • இஸ்ரவேலர்கள் தாங்கள் விரும்பிய போஜனத்திற்காக தேவனை பரீட்சை பார்த்தனர். தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக் கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சை பார்த்தார்கள். சங்கீதம் 78:18

  • நாம் தேவனோடு நடக்கும்போது, ​அவர் ஆகாரம், தண்ணீர் இன்னும் நமக்குத் தேவையான அனைத்தையும் வழங்குகிறார். அவர் ஒரு அக்கறையுள்ள தேவன். அவர் ஒரு காகத்தைப் பயன்படுத்தி எலியாவுக்கு உணவளித்திருக்கும் போது நம்மையும் அவரால் கவனித்துக் கொள்ள முடியும், ஏனென்றால் அவருடைய வாக்குத்தத்தங்கள் உண்மையானவை. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? மத்தேயு 6:25-26

  • ஆவி தேவனால் உண்டானதா அல்லது கள்ள ஆவியா என்பதைப் பகுத்தறிவதற்கு மட்டுமே தேவனைச் சோதித்துப் பார்க்க உங்களுக்கு அனுமதி உண்டு. பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். 1 யோவான் 4:1

 

5. முறுமுறுக்கும் மனப்பான்மை


அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள். 1 கொரிந்தியர் 10:10

  • தேவன் அவர்களுக்குச் செய்த ஆசீர்வாதங்களைப் பொருட்படுத்தாமல் அவர்கள் முறுமுறுத்ததைக் குறித்து படிக்கிறோம். முறுமுறுத்தல் என்பது நம்மிடம் உள்ளவற்றில் திருப்தி அடையாமல், எப்போதும் குறைகூறும் மனநிலையில் இருப்பது. அவர்கள் இரவும் பகலும் கூக்குரலிட்டு அழுது முறுமுறுத்தார்கள்.

  • அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம். ... கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்? ... என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றி வந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள். எண்ணாகமம் 14:1-2, 11, 24

  • இவை எல்லாவற்றிலிருந்தும் காலேப், முறுமுறுக்காத ஒரு மாறுபட்ட ஆவியைக் கொண்டிருந்தார் என்று நாம் வாசிக்கிறோம் (எண்ணாகமம் 14:24).

  • வாழ்க்கையில் உங்கள் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள், நீங்கள் பெற்றுக் கொண்டதற்கு நன்றி செலுத்தாமல் எப்போதும் முறையிட்டுக் கொண்டிருக்கிறீர்களா? இரவும் பகலும் முறுமுறுத்துக் கொண்டிருந்தால், தேவன் தம்முடைய தூதனைக் கொண்டு உங்களை அழித்துவிடுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

6. விசுவாசமின்மை

சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். எபிரெயர் 3:12

  • 40 ஆண்டுகள் தேவனால் வழிநடத்தப்பட்டப் பிறகும், இஸ்ரவேல் ஜனங்கள் இன்னும் அவிசுவாசிகளாகவே இருந்தனர். அவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசிக்கவில்லை, அவர்களுடைய விசுவாசம் பயனற்றுப் போயிற்று.

  • அவர்கள் கிறிஸ்துவில் "உப்புத்தன்மையை" இழந்துவிட்டனர். அதன் காரணமாக வாக்குத்தத்தம் மறுக்கப்பட்டது.

  • அவர்களை மிகவும் உண்மையாகக் கவனித்துக்கொண்ட பிறகும், அவர்கள் அவ்வாறு இருந்ததால், தேவன் அவர்கள் மீது கோபமடைந்தார் (நெகேமியா 9:19-21). அவர்களின் விசுவாசமற்ற இருதயங்கள் அவரின் கோபத்தைத் தூண்டின. ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி; என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். எபிரெயர் 3:10-11

  • இன்று இது நமக்கு ஒரு எச்சரிக்கை மணி. வேகமாக நகரும், நாம் காண்பவற்றைச் சார்ந்திருக்கும் ஒரு உலகில், நம் வாழ்வில் கடந்தகாலத்தில் அவர் காட்டிய உண்மைத்தன்மையை நாம் மறந்துவிடக்கூடாது.

  • அவர் மீதான விசுவாசத்தை மீண்டும் பெற அவர் உங்கள் வாழ்க்கையில் என்ன செய்தார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள், கீழாகப் பார்க்காதீர்கள்.

 

சுருக்கம்

  • தேவன் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். ஆபிரகாம், மோசேயின் தேவனாகிய அவர் இன்றும் நம் தேவனாக இருக்கிறார். ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களின் மூலமாக, அவருடைய பாதுகாப்பின் அதே மேகத்தின் கீழ் நாம் நடக்கிறோம்.

  • யோசுவாவும் காலேபும் மட்டுமே வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைந்தார்கள், ஏனென்றால் அவர்கள் சிறு வயதிலிருந்தே தேவனை உத்தமமாய் பின்பற்றி அவருடைய ஊழியக்காரர்களாக அவரைச் சேவித்தார்கள்.

  • இஸ்ரவேலர்களை விழச் செய்த ஆறு பாவங்கள் நம்மையும் விழ வைக்கக்கூடும். அவை: விக்கிரகாராதனை, களியாட்டம், தேவனை பரீட்சை பார்த்தல், வேசித்தனம், முறுமுறுத்தல் மற்றும் விசுவாசமின்மை. இவை கடந்த கால பாவங்கள் மட்டுமல்ல - இவை இன்றும் நம் வாழ்வில் உள்ளன.

  • நேரம் ஒதுக்கி, உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பார்த்து, இந்தப் பாவங்களிலிருந்து விலகி, மனந்திரும்புங்கள். பவுல் கூறுவது போல, "பாவத்திற்கு விலகி ஓடுங்கள்". அப்பொழுது தேவன் நம் ஒவ்வொருவருக்கும் ஆயத்தம் பண்ணி வைத்திருக்கின்ற வாக்குத்தத்தங்களை நாம் பெற்றுக் கொள்ளலாம்.

 

2 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
May 23
Rated 5 out of 5 stars.

Thank you. God bless you.

Like

Philip C
Apr 20
Rated 5 out of 5 stars.

Amen

Like

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page