top of page

இல்லத்தில் ஒரு தானியேல்

  • Kirupakaran
  • 2 days ago
  • 10 min read

பெரும்பாலான கிறிஸ்தவ பெற்றோரிடம் அவர்களின் பிள்ளைகளை வளர்ப்பதைப் பற்றிப் பேசினால், சில நிமிடங்களிலேயே அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான கதையைக் கூறுவதைக் கேட்கலாம்.

சபை ஆராதனை அல்லது ஜெபக் கூட்டத்திற்குப் பிறகு, பிள்ளைகள் மிகச் சிறப்பாக இருக்கிறார்கள் — ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு,ஆர்வத்துடன், கேள்விகளை எழுப்புகிறார்கள். ஆனால், அவர்கள் வாரநாட்களில் தங்கள் வழக்கமான வாழ்க்கைக்குள் (பள்ளி, கல்லூரி, வேலை போன்றவற்றிற்கு) செல்லும்போது ஒரு முற்றிலும் மாறுபட்ட உலகம் அவர்களுக்காகக் காத்திருக்கிறது.

அவர்களுடன் படிப்பவர்களும், வேலை செய்பவர்களும்

  • வார இறுதியில் அவர்கள் சென்ற பார்ட்டி

  • ஆயிரம் லைக்குகளைப் பெற்ற இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

  • அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படம்

  • பிரபலமாக இருக்கும் பாடல்கள்

  • உற்சாகமும் வேடிக்கையும் நிறைந்த வார இறுதி நாட்கள்

என இவற்றைக் குறித்து தான் பேசுகிறார்கள்.

தேவபக்தி உள்ள பிள்ளை, ஒரே நேரத்தில் இந்த இரண்டு உலகங்களிலும் எப்படி வாழ்வது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சித்துக்கொண்டு அங்கேயே நிற்கிறது. அவர்கள் கெட்ட பிள்ளைகள் அல்ல; சாத்தானின் தந்திரங்களைச் சமாளிப்பதற்கான முதிர்ச்சிதான் அவர்களிடம் இன்னும் இல்லை.

இன்றைய பிள்ளைகளுக்கும் இளைஞர்களுக்கும் இருக்கும் சவால் என்னவென்றால், கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு சிறிய, ஆரவாரமற்ற விருப்பத் தேர்வாக அவர்களுக்குத் தோன்ற ஆரம்பித்துள்ளது.

  • சபை ஆராதனை மெதுவாக நகர்கிறது. பிரசங்கம் நீளமாக இருக்கிறது. விதிமுறைகள் கட்டுப்பாடுகள் போல் தோன்றுகின்றன.

  • ஆனால், நண்பர்களின் பார்வையின் வழியே உலகத்தைப் பார்க்கும்போது — அது மிகவும் துடிப்புடன், உயிரோட்டத்துடன் காணப்படுகிறது. அங்கு அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அங்கு இருப்பவர்கள் யாரும் எதையும் இழந்ததாகத் தெரியவில்லை.

  • இதில் நீங்கள் மட்டும் தான் தனித்து, வித்தியாசமாகத் தெரிகிறீர்கள். இதனால், அவர்களில் சிலர் இது "தோற்றுப்போனவர்களின் வாழ்க்கை" என்று மெல்ல நினைக்கத் தொடங்குகிறார்கள்.


பெற்றோர்களாகிய நம்முடைய சொந்த வாழ்க்கையிலும் வேலை, பணம், வீட்டை நிர்வகிப்பது என பல அழுத்தங்கள் இருக்கின்றன. ஒரு காரியத்திலிருந்து அடுத்த காரியத்திற்கு ஓடுவதே வாழ்க்கையாகிவிடுவதால், பிள்ளைகளோடு செலவிட போதிய நேரம் இருப்பதில்லை. எனவே,பிள்ளைகளை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வைத்திருக்க எது உதவுமோ அதை அவர்களிடம் கொடுத்துவிடுகிறோம்: ஒரு போன், ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் அதிகப்படியான மொபைல்/டிவி பார்க்கும் நேரம்.


இதில் எல்லாமே தவறு என்று சொல்லிவிட முடியாது. ஆனால், அவர்கள் எதைப் பார்க்கிறார்கள், யாருடன் பேசுகிறார்கள், எங்கே சறுக்கல் நடக்கிறது என்பதை கவனிக்கும் திறனை நாம் மெதுவாக இழந்துவிடுகிறோம். பின்னடைவு என்பது இப்படித்தான் ஆரம்பமாகிறது — திடீரென எடுக்கப்படும் ஒரு பெரிய முடிவால் அல்ல, மாறாக சத்தமில்லாமல், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அது நடக்கிறது.


சாத்தான் மிகவும் தந்திரமானவன் — அவன் எல்லாவற்றையும் உண்மைப் போலக் காட்டுகிறான், ஆனால் உண்மை என்று தோன்றும் அந்த காரியங்களுக்குப் பின்னால், இந்த இளைய தலைமுறையை பறிக்கத் துடிக்கும் மற்றொரு வல்லமை இருக்கிறது. பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பிள்ளை மெல்ல மெல்ல திசைமாறிச் செல்லும்போது அதைக் கவனிப்பதில்லை; அவர்கள் முற்றிலும் வழிதவறிப் போன பிறகே அதைப் புரிந்து கொள்கிறார்கள்.


இங்கு பிரச்சனை உங்கள் பிள்ளையின் குணம் அல்ல. அவர்கள் வளர்ந்து வரும் இந்த உலகம், தேவனை விட்டு அவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது — அது அதிரடியாக நடப்பதில்லை, சத்தமில்லாமல் நடக்கிறது. இது சாத்தான் நம்மீது பயன்படுத்தும் புதிய தந்திரம் ஒன்றும் அல்ல.


நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருப்பதால், வாலிப ஆண் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள் மீது தமது ஆவியைப் பொழிந்தருளுவதாக தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். எனவே, இந்த இளைய தலைமுறைக்கு இடையே இப்போது நடக்கும் காரியங்களைக் கண்டு நீங்கள் ஏமாந்து போகாதீர்கள்.

கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள். அப்போஸ்தலர் 2:17-18


இந்தத் தலைமுறையைக் குறித்து தேவன் பதற்றமடைவதில்லை. உங்கள் குமாரர்கள் மற்றும் குமாரத்திகளைக் குறித்து அவர் ஏற்கனவே ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். எதிரியானவனுக்கும் இது தெரியும் — அதனால்தான் அடுத்த தலைமுறைக்கு எதிரான அவனுடைய தாக்குதல் இவ்வளவு திட்டமிட்டதாக இருக்கிறது. ஆனால், தேவனுடைய வாக்குத்தத்தமும் அதே அளவிற்கு உறுதியானதாக இருக்கிறது.

 

தானியேல் மற்றும் பாபிலோனிய ராஜாவான நேபுகாத்நேச்சாரின் கதையை வாசிக்கும்போது, 2,500 ஆண்டுகளுக்கு முன்பு பாபிலோனில் இருந்த யூத வாலிபர்களிடம் சாத்தான் இதே உத்தியைத்தான் பயன்படுத்தினான் என்பது தெரியும் — வற்புறுத்தலால் அல்ல, கவர்ச்சியால். சிறந்த உணவு, சிறந்த கல்வி, புதிய பெயர்கள், ராஜாவின் பந்தியில் ஒரு இடம் என எல்லாமே ஒரு பெரிய வாய்ப்பைப் போலத் தோன்றியது. தானியேலும் அவருடைய நண்பர்களும் தங்கள் வீட்டை விட்டு வெகு தொலைவில், தங்களுடைய தேவனுக்கு இடமே தராத ஒரு கலாச்சாரத்தினால் சூழப்பட்டிருந்தார்கள். அவர்கள் சத்தமில்லாமல் அந்த கூட்டத்தோடு கூட்டமாக கலந்துவிடுவதற்கு எல்லா காரணங்களும் இருந்தன. ஆனால், தானியேலின் உள்ளத்திலோ எதற்கும் அசைந்து கொடுக்காத ஒரு உறுதியான தீர்மானம் இருந்தது.

 

பகுதி 1 — நேபுகாத்நேச்சாரின் தேர்வு

தானியேல் 1:3-5 — எதிரி ஒருபோதும் தன்னை அறிவிப்பதில்லை

 

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரைக் கொண்டுவரவும், அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான். தானியேல் 1:3-4

ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படிசெய்யவும் கட்டளையிட்டான். தானியேல் 1:5


நேபுகாத்நேச்சார் பலவீனமான, தடுமாறிக்கொண்டிருந்த வாலிபர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. அவர் அறிவுக்கூர்மையுள்ள,திறமையானவர்களையேத் தேர்ந்தெடுத்தார் — குறை இல்லாதவர்கள், கூர்மையான அறிவுடையவர்கள், பெரும் திறமை வாய்ந்தவர்கள் (தானியேல் 1:3-4). சாத்தானும் இப்படித்தான் கிரியை செய்கிறான். அவன் ஏற்கனவே தேவனை விட்டுத் தூரமாக இருப்பவர்களைத் தேடிப் போவதில்லை. அவனுக்கு சிறந்தவர்கள்தான் தேவை. தேவனுடைய திட்டம் இருக்கிறவர்களைத்தான் அவன் குறிவைக்கிறான்.


அவர்களைத் தன்வயப்படுத்த உலகத்தின் மிகச் சிறந்த கருவிகளை அவன் பயன்படுத்துகிறான். ஆரம்பத்திலேயே வெளிப்படையான பாவ காரியங்களை அவன் காட்டுவதில்லை — மாறாக, உங்கள் பிள்ளை ஏற்கனவே விரும்புவதையே மிகவும் கவர்ச்சிகரமான வடிவத்தில் கொண்டுவந்து நிறுத்துகிறான்:

  • சபையை விட்டு அவர்களைத் தூர இழுத்துச் செல்லும் மிகச் சிறந்த ஒரு வேலை வாய்ப்பு

  • தேவனுக்குக் கொடுக்க வேண்டிய நேரத்தை அப்படியே விழுங்கும் வகையில், ஒவ்வொரு திரையிலும் தோன்றும் மிகவும் சுவாரஸ்யமான வீடியோக்கள் / பதிவுகள்.

  • சபை ஐக்கியத்தை மெதுவாக பின்னுக்குத் தள்ளி, அதன் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் மிகவும் கவர்ச்சிகரமான ஒரு நண்பர்களின் வட்டம்.

 

அவர்களைக் கெட்ட மனிதர்களாக மாற்றுவது இலக்கு அல்ல. அவர்களைத் தன்னுடைய ராஜ்யத்திற்குள் சௌகரியமாக வாழ வைப்பதுதான் அவனுடைய நோக்கம் — தேவனுடைய ராஜ்யத்திலிருந்து அவர்களை மெல்ல, சத்தமில்லாமல் துண்டித்துவிடுவதுதான் அவனுடைய திட்டம்.


ஆனால், இதன் மறுபக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும். உலகம் வழங்குவதெல்லாம் ஒரு வலை என்று சொல்லிவிட முடியாது. தேவனே தானியேலை பாபிலோனில் ராஜாவின் அரண்மனையில், ஒரு அந்நிய கலாச்சாரத்தின் மத்தியில் வைத்தார். அவர் தானியேலை இந்த உலகத்தை விட்டு எடுத்துவிடவில்லை; ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடுதான் அவரை அதற்குள் வைத்திருந்தார். ஒரு நல்ல வேலை, பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு, கூர்மையான அறிவு — இவை எல்லாமே தானாகவே "ராஜாவின் பந்தியாக" மாறிவிடுவதில்லை.


வித்தியாசம் என்னவென்றால் இந்த ஒரே ஒரு கேள்விதான்: அந்தப் பாதையை வழிநடத்துவது யார்?

  • உங்கள் பிள்ளையின் அடிகளை தேவன் ஆயத்தப்படுத்தினால், இந்த உலகம் ஒரு பணிக்களமாக  மாறும்.

ஒருவேளை எதிரியானவன் அதை வழிநடத்தினால், சபை ஆராதனை கூட ஜீவனற்ற ஒரு வெறும் சடங்காக மாறிவிடும்.

 

பகுதி 2 - பெயர் மாற்றம்

தானியேல் 1:6-7 எதை நீங்கள் முதலில் அழிக்கவில்லையோ, அதை உங்களால் மாற்ற முடியாது


அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள். பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான். தானியேல் 1:6-7


நேபுகாத்நேச்சார் முதலாவதாக மாற்றியது அவர்களுடைய பெயர்களைத் தான் (தானியேல் 1:6). தானியேல் 'பெல்தெஷாத்சார்' ஆனார் — தேவனுடைய பெயர் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஒரு பாபிலோனிய விக்கிரகத்தின் பெயர் வைக்கப்பட்டது. சாத்தானைப் பொறுத்தவரை, ஒருவருடைய அடையாளத்தை அழிப்பது தான் எப்போதுமே அவனது முதல் இலக்கு.


இது ஒன்றும் புதிய தந்திரம் அல்ல. பாபிலோனுக்கு பல காலத்திற்கு முன்பே, தேசத்தின் இராட்சதர்கள் மூலமாக இதை நாம் காண்கிறோம். கானான் தேசத்திற்குச் சென்ற பன்னிரண்டு வேவுகாரர்கள் திரும்பி வந்தபோது, அவர்களில் பத்து பேர் மனமுடைந்து போயிருந்தார்கள் — யுத்தத்தில் அடைந்த தோல்வியினால் அல்ல, தங்களைப் பற்றி அவர்கள் நம்பத் தொடங்கிய காரியங்களினால்.


அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள். எண்ணாகமம் 13:33


அந்த இராட்சதன் ஒருபோதும் யுத்தம் செய்ய வேண்டியிருக்கவில்லை. தேவனுடைய பிள்ளைகள் தங்களை வெறும் வெட்டுக்கிளிகளாகப் பார்க்கும்படி செய்தால் மட்டுமே அவனுக்குப் போதுமானதாக இருந்தது. யுத்தம் தொடங்குவதற்கு முன்பாகவே அவர்களுடைய அடையாளம் சிதைந்துபோனது.


இன்று, அதே ஆவி

  • உங்கள் பிள்ளை நாள்தோறும் காணும் காட்சிகள்

  • இணையத்தில் அவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள் மற்றும் தங்களை யாருடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்

  • தங்களைப் பற்றி அவர்கள் என்ன நினைக்க வேண்டும் என்பதை சமூக ஊடகங்களின் அல்காரிதம் (algorithm) தீர்மானிப்பது

  • இவற்றின் மூலமாக கிரியை செய்கிறது.

எந்தவொரு வியத்தகு சம்பவமும் இல்லாமல், மெதுவாக, "இந்த விசுவாசம் எனக்கு ஏற்றது அல்ல; தேவன் என்னிடமிருந்து தூரமாக இருக்கிறார்; நான் இனி இங்கே இருக்க வேண்டியவன் அல்ல" என்று ஒரு அமைதியான குரல் உள்ளுக்குள் பேசத் தொடங்குகிறது. பெயர் மாற்றப்படுகிறது — ஏதோவொரு படிவத்தில் அல்ல, மாறாக இருதயத்தில்.

 

பகுதி 3 — ராஜாவின் பந்தி

தானியேல் 1:5 — பாபிலோனைத் தங்கள் சொந்த வீடாக உணர வைப்பதற்கான மூன்று ஆண்டுகள்


ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படிசெய்யவும் கட்டளையிட்டான். தானியேல் 1:5


பாபிலோனிய மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் நேபுகாத்நேச்சார் ஏற்படுத்திய அந்த மூன்று ஆண்டுகால பயிற்சித் திட்டம் தற்செயலாக நடந்தது அல்ல. அது அவர்களைத் தங்களோடு முழுமையாக இணைத்துக் கொள்வதற்காக கவனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும். அவர்கள் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியிலும் ஒரு பலத்த அரண் ஏற்கனவே இருந்தது — இஸ்ரவேலர்கள் உள்ளே நுழைவதற்கு முன்பாகவே, ஒவ்வொரு பள்ளத்தாக்கையும் கானானியர்கள் ஆக்கிரமித்திருந்ததைப் போலவே.


ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம். அமலேக்கியர் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள்; ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் மலைநாட்டில் குடியிருக்கிறார்கள்; கானானியர் கடல் அருகேயும் யோர்தானண்டையிலும் குடியிருக்கிறார்கள் என்றார்கள். எண்ணாகமம் 13:28-29


கானானியர் உங்களை எல்லையில் சந்திப்பதில்லை. நீங்கள் அங்கு போய் சேருவதற்கு முன்பாகவே அவன் உள்ளே இருக்கிறான்.


இன்று காரியங்கள் அப்படித்தான் நடக்கின்றன. தவறான உள்ளடக்கங்களோடு கழியும் சில ஆண்டுகள், தவறான நண்பர்கள் குழுவோடு கழியும் சில ஆண்டுகள், எந்தவொரு பரபரப்பான சம்பவமும் இல்லாமல், சில மதிப்புகள் சத்தமில்லாமல் உள்ளே விதைக்கப்படும் சில ஆண்டுகள்.

  • முந்தைய தலைமுறையினர் பாவம் என்று அழைத்த ஒன்றை, ஒரு திரைப்படம் இயல்பானதாக மாற்றுகிறது.

  • ஒரு நட்பு மெதுவாக சபையின் ஐக்கியத்தை இடமாற்றம் செய்கிறது.

  • ஒரு சிறிய பழக்கம் புதிய இயல்பாக மாறுகிறது.

  • "இது வெறும் பீர் தான், மதுபானம் அல்ல" என்று குடிக்கும் ஒரு மடக்கு, அடுத்த வாசலைத் திறந்துவிடுகிறது.

  • புகைப்பிடித்தல் அடுத்த நிலைக்கு வழிவகுத்து, பின்னர் போதைப்பொருள் பழக்கத்திற்குள் கொண்டு சேர்க்கிறது.

  • ஒரு தவறான வீடியோ அடுத்தடுத்த வீடியோக்களுக்கு வழிவகுத்து, இறுதியில் ஆபாச அடிமைத்தனத்தில் கொண்டு போய் விடுகிறது.

அதன் முடிவில், உலகம் இயல்பானதாகத் தோன்றுகிறது — தேவனோ அந்நியராகத் தெரிகிறார்.

ராஜாவின் போஜனம் தான் கடைசிப் பரிட்சையாக இருந்தது. வெளிப்புற தோற்றத்திற்கு அது ஒரு சாதாரண உணவாகத் தெரிந்தது. ஆனால் ஆவிக்குரிய ரீதியில், அது தேவன் கட்டளையிட்டதற்கு எதிரான ஒரு மீறுதலாக இருந்தது. உலகத்தின் சலுகைகள் வெளிப்புறத்திலிருந்து பார்க்கும்போது எப்போதுமே நியாயமானதாகவே தோன்றும். தேவனுடன் நெருங்கி நடப்பவர்களால் மட்டுமே அது என்னவென்று பார்க்க முடியும்.

 

பெற்றோருக்கான பாடம்

பலத்த அரண்கள் ஒரே நாளில் கட்டப்படுவதில்லை — அவற்றை வீழ்த்தும் அஸ்திவாரமும் ஒரே நாளில் உருவாவதில்லை. உங்கள் பிள்ளையோடு நீங்கள் வாசிக்கும் தேவவார்த்தை, நீங்கள் இணைந்து உருவாக்கும் ஜெபப்பழக்கம், இரவு உணவு மேஜையில் இயல்பாக தேவனைப் பற்றிப் பேசும் உரையாடல்கள் — இந்தத் தினசரி முதலீடு தான், உலகம் அமைதியாக அமைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அரணையும் நேரடியாகத் தகர்க்கும் ஆயுதமாகும்.

 

 

பகுதி 4 — தானியேலின் தீர்மானம்

தானியேல் 1:8 — அவன் தன் இருதயத்திலே தீர்மானம் பண்ணிக்கொண்டான்

 

தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான். தானியேல் 1:8

சத்துருவின் மூன்று தந்திரங்களும் ஏற்கனவே தங்களது வேலையைச் செய்து முடித்திருந்தன.

  • வாசல் திறக்கப்பட்டிருந்தது

  • பெயர் மாற்றப்பட்டிருந்தது

  • பந்தி ஆயத்தமாக்கப்பட்டிருந்தது

 

ஆனால் தானியேல் மறுத்துவிட்டார்.

அவர் சத்தமாகவோ, போராட்டமாகவோ அதைச் செய்யவில்லை. அவர் வெறுமனே தன் இருதயத்திலே தீர்மானம் பண்ணிக்கொண்டார். அந்த அறையில் அவரோடு எந்த ஒரு போதகரும் நிற்கவில்லை. அவருக்கு நினைவூட்ட பெற்றோரும் அங்கே இருக்கவில்லை. அவரைத் தாங்கிப் பிடித்தது ஏற்கனவே உள்ளே இருந்தது — இந்தத் தருணத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அவருக்குள் அது கட்டப்பட்டிருந்தது.

 

இதனைத்தான் தானியேல் ஆரம்பத்திலிருந்தே செய்து வந்தார்:

தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான். தானியேல் 6:10

அவர் தேவனுடைய கட்டளைகளை அறிந்திருந்தார். ஒரு நாளைக்கு மூன்று வேளையும் ஜெபம் செய்து வந்தார். உலகம் தொட முடியாத ஒரு பலத்த அரணைத் தனக்குள் கட்டியெழுப்பியிருந்தார்.

அந்த உள்ளார்ந்த தீர்மானத்தைத் தான் ஒவ்வொரு பெற்றோரும் உண்மையில் கட்டியெழுப்ப முயற்சிக்கிறார்கள். யாராவது பார்க்கும்போது மட்டும் ஒழுங்காக நடக்கும் பிள்ளையை அல்ல, மாறாக யாரும் பார்க்காதபோதும் உறுதியாய் நிற்கிற ஒரு பிள்ளையையே அவர்கள் உருவாக்க விரும்புகிறார்கள்.

தானியேல் உறுதியாய் நின்றபோது, தேவன் உடனடியாகக் கிரியை செய்யத் தொடங்கினார்:

தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார். தானியேல் 1:9


தானியேலிடமிருந்து ஒரு அடி. தேவனிடமிருந்தோ நான்கு அடிகள். காரியங்கள் இன்றும் அப்படித்தான் செயல்படுகின்றன. சமரசம்செய்துகொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலையில் உங்கள் பிள்ளை தேவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும் போது, தேவன் அவர்களைத் தனித்து நிற்க விடுவதில்லை.

 

பெற்றோருக்கான பாடம்

நம் பிள்ளைகள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சோதனையையும் நாம் தடுத்துப் போராட முடியாது — அது நம் இலக்கும் அல்ல. நெருக்கடி வரும்போது அசையாமல் உறுதியாய் நிற்கக்கூடிய ஏதோவொன்றை நம் பிள்ளைகளின் உள்ளத்திற்குள் வளர்த்தெடுப்பது தான் நம் இலக்கு. எதிர்த்து நிற்கும் அந்தத் தீர்மானம், அது தேவைப்படும் தருணத்திற்கும் நீண்ட காலத்திற்கு முன்பே உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் அந்த ஒரு அடியை எடுத்து வைத்து தேவனுக்காக நிற்கும்போது, அவர்கள் பாபிலோனிய தேசத்தில் நின்றாலும், அமலேக்கியர்களின் தாக்குதலை எதிர்கொண்டாலும் அல்லது கானானியர்களின் அரண்களைக் கடந்து சென்றாலும், அவர்களுக்காக தேவன் யுத்தம் செய்வார்.

 

 

பகுதி 5 — சாத்தியமற்ற மதில்சுவர்

தானியேல் 1:15-20 — தேவன் உங்களோடு இருக்கும்போது, அரணான நகரம் வீழ்கிறது

இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார். அவர்களை ராஜாவினிடத்தில் கொண்டுவருகிறதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறினபோது, பிரதானிகளின் தலைவன் அவர்களை நேபுகாத்நேச்சாருக்கு முன்பாகக் கொண்டுவந்து விட்டான். ராஜா அவர்களோடே பேசினான்; அவர்கள் எல்லாருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவனும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள். ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான். தானியேல் 1:17-20


நேபுகாத்நேச்சாரின் கதைக்கு மீண்டும் திரும்புவோம். ஒட்டுமொத்த ராஜ்யத்தின் ஞானமிக்க வல்லுநர்களுக்கு முன்பாக நான்கு யூத சிறுவர்கள் நிற்கிறார்கள். அது ஒரு பலத்த மதில்சுவர் — தகர்க்கப்பட முடியாதபடி கட்டப்பட்டது. மனிதக் கணக்கீடுகளின்படி அவர்கள் வெற்றிபெற வாய்ப்பே இல்லை.


பாபிலோனில் இருந்த எல்லா சாஸ்திரிகள் மற்றும் ஜோசியர்களைக் காட்டிலும் தேவன் அவர்களைப் பத்து மடங்கு சிறந்தவர்களாக மாற்றினார்.

அவர்கள் பிழைத்திருக்க மட்டும் தேவன் உதவவில்லை; மாறாக, அவர்களை விழுங்குவதற்காகவே வடிவமைக்கப்பட்ட அதே இடத்தில் அவர்கள் தனித்து விளங்கி சிறந்து நிற்கும்படி செய்தார். இது அனைத்தும் சாத்தியமானதற்குக் காரணம், ஒரு வாலிபன் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணினதுதான்: ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான். 

  • ஞானம் — தேவன் கொடுத்தார்

  • அறிவு — தேவன் அதைப் பெருகப்பண்ணினார்

  • ராஜாவின் கண்களில் தயவு — தேவன் அதை ஏற்பாடு செய்தார்

  • உயர்வு — தேவன் அதை நிலைநாட்டினார் 

தேவன் அவர்களுக்குக் கிருபை தந்து, அவர்களுடைய வெளிச்சம் பிரகாசிக்கும்படி நிலைநாட்டினார். தேவன் இன்றும் அப்படித்தான் கிரியை செய்கிறார்.

  • சாத்தியமற்றதாகத் தோன்றிய அந்தத் தேர்வு — உங்கள் பிள்ளை அதில் தனித்து நிற்கும்படி தேவனால் செய்ய முடியும்

  • அவர்களை உடைத்தெறிந்திருக்க வேண்டிய அந்தச் சூழ்நிலை — அவர்களைக் கட்டியெழுப்ப தேவன் அதைப் பயன்படுத்துகிறார்.

  • திறக்கும் என்று யாரும் எதிர்பார்க்காத அந்த கதவு — தேவன் அதைத் திறக்கிறார்.

தேவன் உங்களோடு இருக்கும்போது, எப்பேர்ப்பட்ட அரணான மதில்சுவர்களும் தகர்ந்து விழும்.

 

பெற்றோருக்கான பாடம்

தானியேல், ராஜாவின் பந்தியிலிருந்த சுகபோகங்களை விட்டுக்கொடுத்து, முக்கியமான எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டார். அந்த மாற்றத்திற்குத்தான் நம் பிள்ளைகளை ஆயத்தப்படுத்துகிறோம் — இழப்பதற்காக அல்ல, இந்த உலகத்தால் ஒருபோதும் கொடுக்க முடியாத ஒன்றை அவர்கள் பெற்றுக்கொள்வதற்காக. தானியேலிடம் இருந்த அந்த தேவபயமும், அவர் காட்டிய மரியாதையும் தான் அவருக்கு ஞானம், கிருபை, உயர்வு என எல்லா வாசல்களையும் திறந்தது. அந்த தேவபயத்தைத்தான் நாம் நம் பிள்ளைகளுக்குள் முதலில் உருவாக்க வேண்டும். தம்மை கனம்பண்ணுகிற ஒருவருடைய வாழ்க்கையில் தேவன் தரும் ஆசீர்வாதம் சிறியதல்ல. பாபிலோன் தன் பந்தியில் வைக்கக்கூடிய எதையும் விட அது பத்து மடங்கு மேலானது.

 

 

பகுதி 6 — பெற்றோரின் பங்கு

உபாகமம் 6:5-7 — தானியேலை உருவாக்குவது வீட்டிலிருந்தே தொடங்குகிறது

நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி, உபாகமம் 6:5-7

பயபக்தியுடன் ஒரு அடி எடுத்து வைக்கும் பிள்ளைக்காக தேவன் என்றும் துணையாக நிற்கிறார் என்பதை தானியேலின் வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது. ஆனால், இன்றைய சிறுவர்களும் வாலிபர்களும் சாத்தானின் தந்திரமான வலைகளைக் கடந்து செல்ல போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்தத் தலைமுறைக்கான தேவனுடைய திட்டத்தில் பெற்றோர்கள் மிக முக்கியமான பங்கை வகிக்கிறார்கள்.


பெரும்பாலான பெற்றோர்கள் இந்தப் பொறுப்பை ஞாயிறு பள்ளியிடம் (Sunday Class) ஒப்படைத்து விடுகிறார்கள் — பிள்ளையைக் கொண்டு போய் விடுகிறார்கள், திரும்ப அழைத்து வருகிறார்கள். அதோடு வீட்டில் மிகக் குறைந்த வழிகாட்டுதலுடன் அவர்கள் தேவபக்தியுள்ளவர்களாக வளர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். சண்டே ஸ்கூல் மட்டுமே அதற்குப் போதாது. அது ஒருபோதும் அதற்காக வடிவமைக்கப்படவில்லை. ஒரு பிள்ளையை ஆவிக்குரிய ரீதியில் வடிவமைக்கும் நடைமுறை ரீதியான, தினசரிப் பணி என்பது பெற்றோரின் பொறுப்பே தவிர, போதகருடையது அல்ல.

அது இப்படித்தான் இருக்கும்:


வார்த்தையை விதைப்பது — தினந்தோறும் (தேவன் மீதான அன்பு தேவனுடைய வார்த்தையிலிருந்து வருகிறது - உபாகமம் 6:5)

  • பிள்ளையோடு அமர்ந்து வாசியுங்கள் — "பைபிள் படித்தீர்களா?" என்று கடமைக்குக் கேட்காதீர்கள். அவர்கள் என்ன வாசித்தார்கள், அதிலிருந்து என்ன புரிந்து கொண்டார்கள் என்று கேளுங்கள்.

  • சுவிசேஷங்களில் இருந்து தொடங்குங்கள் — மற்ற எல்லாவற்றிற்கும் முன்பாக, அவர்கள் இயேசுவை சந்திக்கட்டும். அதன் பிறகு நிருபங்களையும், பழைய ஏற்பாட்டையும் கற்றுக்கொடுங்கள்.

  • பழைய ஏற்பாட்டைத் தவிர்த்துவிடாதீர்கள் — நாம் நினைப்பதை விட, பழைய ஏற்பாட்டுச் சரித்திரங்கள் அதிகமான ஆவிக்குரிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.

  • பாவம் என்பது சாதாரணமான ஒன்று என்று இந்த உலகம் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு முன்பாகவே, பாவம் ஒரு மனிதனுடைய வாழ்க்கையை என்ன செய்யும் என்பதை நாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். பாவம் என்றால் என்ன என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அப்பொழுதுதான் அவர்கள் அதற்கு விலகி வாழ்வார்கள்.

 

குடும்ப ஜெப வாழ்க்கையை உருவாக்குங்கள் (தேவனுடைய கட்டளைகள், குடும்பமாக தேவனுடன் கொள்ளும் ஐக்கியத்திலேயே பிள்ளைகளுக்குக் கடத்தப்படுகின்றன).

  • ஜெபத்தை பிள்ளையின் தனிப்பட்ட நேரத்திற்கு மட்டுமே ஒதுக்கிவிடாதீர்கள் —குடும்பமாக இணைந்து ஜெபியுங்கள்.

  • தன் பெற்றோர் முழங்காலில் நின்று ஜெபிப்பதைப் பார்க்கும் எந்தவொரு பிள்ளையும், அந்த காட்சியைத் தன் வாழ்நாளில் ஒருபோதும் மறப்பதில்லை.

  • அவர்களோடு சேர்ந்து சத்தமாக ஜெபியுங்கள் — வெறும் மதச்சடங்கான வார்த்தைகளை மட்டும் பேசாமல், நிஜமான காரியங்களை நீங்கள் தேவனுடைய சமூகத்திற்குக் கொண்டு வருவதை அவர்கள் காதுகளால் கேட்கட்டும்.

  • ஜெபம் தன் குடும்பத்தில் கிரியை செய்வதை பிள்ளைகள் பார்க்கும்போது, யாரும் பார்க்காத நேரத்தில் அவர்கள் தாங்களாகவே ஜெபிக்கத் தொடங்குவார்கள்.

 

முதலாவது முன்மாதிரியாக இருங்கள் (உபாகமம் 6:7)

  • பிள்ளைகள் உங்கள் அறிவுரைகளைப் பின்பற்றுவதில்லை; மாறாக, நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்று பார்த்து அதைத்தான் பின்பற்றுகிறார்கள்.

  • நீங்கள் தினமும் பைபிள் வாசித்து, ஜெபம் செய்யும் வாழ்க்கையை வாழ்ந்தால், அவர்களும் தங்களை அதற்கேற்ப மாற்றிக்கொள்வார்கள். ஆனால், நீங்கள் செய்யாமல் அவர்களை மட்டும் செய்யச் சொன்னால், அவர்கள் ஒருபோதும் கேட்க மாட்டார்கள்.

 

அவர்களோடு நேரம் செலவிடுங்கள் — அவர்கள் பேச அனுமதியுங்கள் (உபாகமம் 6:7)

  • அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய ஒரு குழந்தையாக மட்டும் பார்க்காமல், ஒரு நண்பனைப் போல நடத்துங்கள்.

  • பைபிள் வாசித்த பிறகு, அவர்களோடு அமர்ந்து என்ன வாசித்தார்கள் என்று கேளுங்கள் — அது அவர்களைச் சோதிப்பதற்காக அல்ல, அவர்கள் ஆவிக்குரிய ரீதியில் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்காக. எது அவர்களோடு பேசியது? எது அவர்களுக்குக் குழப்பமாக இருந்தது? அவர்கள் எதைப் பற்றி இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

  • ஜெபத்திற்குப் பிறகு, அவர்கள் எப்படி ஜெபித்தார்கள், எதற்காக ஜெபித்தார்கள் என்று கேளுங்கள். அவர்களுக்கு மென்மையாக வழிகாட்டுங்கள் — "தேவனே எல்லோரையும் ஆசீர்வதியும்" என்ற பொதுவான ஜெபத்திலிருந்து, தங்களுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி தேவனிடம் குறிப்பிட்டுக் காரியங்களை, உண்மையாகப் பேச அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.

  • அவர்களோடு பேசும்போது அவர்களுக்குள் இருக்கும் ஆவிக்குரிய நெருப்பை மூட்டிவிடுங்கள் — பிள்ளைகளை எங்கே தட்டிக்கொடுக்க வேண்டும், எங்கே சரிசெய்து வளர்க்க வேண்டும் என்ற ரகசியம் ஒவ்வொரு பெற்றோர்க்கும் தெரியும். ஒருவேளை அதில் உங்களுக்குக் குறைவிருந்தால் தேவனிடம் கேளுங்கள் — இந்தத் தலைமுறையை நாம் கையாள்வதற்குத் தேவையான ஞானத்தை, தேவன் நமக்கு தாராளமாய் வழங்குவார் என்று யாக்கோபு 1:5 சொல்கிறது.

  • இப்படித்தான் நீங்கள் உங்கள் பிள்ளையைச் சீஷனாக்க வேண்டும் — ஒரு பெரிய உபதேசம் செய்வதன் மூலம் அல்ல, மாறாக வேதம் வாசித்த பிறகும் ஜெபித்த பிறகும் அவர்களோடு பேசும் இயல்பான உரையாடல்களின் மூலமே இது நடக்கும்.

  • தங்கள் மனதில் உள்ள ஏமாற்றங்கள், கோபம், மகிழ்ச்சி, குழப்பம் என  எல்லாவற்றையும் உங்களிடம் கொண்டு வர அவர்கள் பாதுகாப்பாக உணரும் ஒரு சூழலை தினமும் உருவாக்குங்கள். தன் பெற்றோரிடம் பேச முடியாத ஒரு பிள்ளை, பேசுவதற்கு வேறு யாரையாவது தேடிக் கண்டுபிடிக்கும். அந்த 'யாரோ' ஒருவராக நீங்களே இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

  • எல்லா நேரத்திலும் கண்டிப்புடன் இருக்காதீர்கள் — உங்கள் நீதியான கோபத்தை அதற்கேற்ற முக்கியமான தருணங்களில் மட்டுமே பயன்படுத்துங்கள்; அதாவது அவர்கள் தேவனை விட்டு விலகிச் செல்லும்போது பயன்படுத்துங்கள், தங்கள் அறையைச் சுத்தமாக வைக்காதபோது அல்ல.

 

குறிப்பாக ஜெபியுங்கள்

  • நேபுகாத்நேச்சார் எப்படி தானியேலைத் தன்வசப்படுத்த விரும்பினாரோ, அதேபோல பிசாசானவனும் உங்கள் பிள்ளையைத் தன்வசப்படுத்த விரும்புகிறான்.

  • அவர்கள் எதைப் பார்க்கிறார்கள் அல்லது எங்கெல்லாம் போகிறார்கள் என்பதை நம்மால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது — ஆனால் அவர்களுடைய வாழ்க்கையில் நாம் காணும் சோம்பேறித்தனம், தவறான நட்பு அல்லது அவர்கள் போராடும் ஒரு குறிப்பிட்ட பலவீனம் போன்ற காரியங்களுக்காக நம்மால் குறிப்பிட்டு ஜெபிக்க முடியும்.

  • உங்கள் ஜெபங்களை மேலோட்டமாக ஏறெடுக்காதீர்கள். துல்லியமாகவும், குறிப்பிட்டுக் காட்டியும் ஜெபியுங்கள். அவர் நம்முடைய பிதாவாக இருக்கிறார், நாம் அவரிடம் குறிப்பிட்டுக் கேட்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;  மத்தேயு 7:7

 

வெறும் வெற்றிக்காக மட்டுமல்ல, நிலைத்து நிற்பதற்காகவும் அவர்களை வளர்த்தெடுங்கள்  

  • நம் பிள்ளைகள் மிகச் சிறந்த வேலையைப் பெற வேண்டும் என்பதற்காக மட்டும் நாம் அவர்களை வளர்க்கவில்லை.

  • மாறாக, அவர்கள் இந்த பாபிலோனிலும் உறுதியாக நின்று, தேவனுக்காகப் பிரகாசிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை வளர்க்கிறோம்.

 

தானியேலின் தேவன் இன்றும் மாறாதவராகவே இருக்கிறார்


தேவன் இந்தத் தலைமுறையைக் கைவிட்டுவிடவில்லை. Gen Z அல்லது Gen Alpha குறித்த எந்தக் கவலையும் அவருக்கு இல்லை. அவர் இந்தத் தலைமுறையில் என்ன செய்யப் போகிறார் என்பதை ஏற்கனவே முடிவு செய்துவிட்டார் — அதை அவர் மிக நீண்ட காலத்திற்கு முன்பே அறிவித்தும் விட்டார்:

கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள். அப்போஸ்தலர் 2:17-18


சத்துருவின் நான்கு தந்திரங்களும் உண்மையானவை — அடையாளத்தின் மீதான தாக்குதல், வாசலில் பதுங்கி தாக்குதல், ஒவ்வொரு சந்திப்பிலும் இருக்கும் பலத்த கோட்டை மற்றும் சாத்தியமற்ற சுவர். ஆனால், பாபிலோனின் எல்லா ஞானிகளையும் விட தானியேலைப் பத்து மடங்கு சிறந்தவனாக மாற்றிய நம்முடைய தேவனும் உண்மையானவர்! அவர் இன்றும் மாறாத தேவன். அவர் அதையே இப்போதும் செய்வார்.

உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள், இது வெறும் ஒரு விருப்பம் அல்ல. இது தேவன் தந்த வாக்குத்தத்தம்.

ஒரு பெற்றோர் ஒரு தானியேலை வளர்க்க முடிவெடுப்பதில் இருந்து இது தொடங்குகிறது.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page