top of page

இரட்சிப்பின் முன்னோடி

  • Kirupakaran
  • 4 days ago
  • 7 min read
ree

முன்னோடிகள் பாதையை உருவாக்குகிறார்கள் - இவர்கள் இதற்கு முன் யாரும் சென்றிராத  இடங்களுக்கு முதலில் செல்லத் துணியும் பாதையமைப்பவர்கள். அவர்கள் புதிய சாத்தியக்கூறுகளைக் கனவுகாண்பதோடு மட்டுமல்லாமல் மற்றவர்கள் ஒரு நாள் பயணிக்கப்போகும் பாதைகளையே அவர்கள் செதுக்குகிறார்கள். மனிதகுலத்தை விண்ணுக்கு உயர்த்திய ரைட் சகோதரர்கள், ஆப்பிள் நிறுவனத்தின் மூலம் தொழில்நுட்பத்தை மறுவடிவமைத்த ஸ்டீவ் ஜாப்ஸ், குடிமக்கள் உரிமைகளுக்காக பேரணியில் பங்கேற்ற மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் அகிம்சையின் மூலம் பேரரசுகளை அசைக்க முடியும் என்பதை நிரூபித்த மகாத்மா காந்தி என்று வரலாறு இப்படிப் பட்ட துணிச்சலான முன்னோடி மனிதர்களால் நிறைந்துள்ளது. இருப்பினும், வேதம் அனைத்திலும் மகத்தான முன்னோடியாக இரட்சிப்பின் முன்னோடியான இயேசுவைத் தான் காட்டுகிறது. அவர் தேவனிடம் செல்லும் வழியைத் திறந்து நாமும் அவரைப் பின்பற்றுமாறு அழைக்கிறார்.

 

இரட்சிப்பை உண்மையாகப் புரிந்துகொள்ள, முதலில் தேவனின் படைப்பைப் பற்றியும் பாவம் எவ்வாறு உலகிற்குள் நுழைந்தது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். தேவன் அனைத்தையும் படைத்தார், மேலும் தாம் படைத்த அனைத்தையும் பராமரிக்க ஒருவர் தேவையென்று விரும்பினார். எனவே அவர் மனிதனைத் தமது சொந்த சாயலில் படைத்து, தமது சுவாசத்தை அவனுக்குள் ஊதி அவனுக்கு ஜீவனைக் கொடுத்தார்.  

 

பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1:26-27

 

தேவன் தாம் படைத்த அனைத்தையும் ஆளவும் பராமரிக்கவும் மனிதனை நியமித்தார். அதற்காக, அவனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். அந்தத் தோட்டத்தில் நன்மை தீமை அறியும் மரம் இருந்தது, அந்த மரத்தின் கனியைப் புசிக்கவேண்டாம் என அவனுக்குக் கட்டளையிட்டிருந்தார். ஆனால் மனிதன் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் பாவம் செய்தான். அதுவரை மரணம் இல்லாமலிருந்தது, மனிதன் தேவனுடன் நெருங்கிய ஐக்கியத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான். இந்த கீழ்ப்படியாமை அந்த உறவை உடைத்தது - பாவம் மனிதனை தேவனிடமிருந்து பிரிக்கும் தடையாக மாறியது. பாவத்தின் சம்பளம் மரணம். தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆதியாகமம் 2:15-17

 

தேவன், மனிதன் வாழ்வதற்கான வழியைக் காட்டவும், தம்முடைய இரட்சிப்பின் அவசியத்தை வெளிப்படுத்தவும் நியாயப்பிரமாணங்களை அளித்தார். ஆனால், ஜனங்கள் தங்கள் சொந்த பலத்தினால், அந்தப் பிரமாணங்களை முழுமையாகப் பின்பற்ற முடியவில்லை. அவர்கள் சிலவற்றைக் கடைப்பிடித்து, ஒன்றில் தவறினாலும் அது அவர்களைப் பாவிகளாக்கியது. ராஜாக்கள், தீர்க்கதரிசிகள், தேவஜனங்கள் ஆகியோரின் மூலம், தேவன் தம் ஜனங்களைப் பாவத்திலிருந்து திரும்பும்படி எச்சரித்துக்கொண்டே இருந்தார். ஆனாலும் பாவம் மனிதகுலத்தின் மீது இன்னும் வலுவான பிடியைக் கொண்டிருந்தது, யாராலும் தங்கள் சொந்த முயற்சியால் அந்தப்  பாவத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியவில்லை.

 

 

ஒரே பேறான குமாரன் இயேசு

தேவன் மனிதகுலத்தை பாவத்திலிருந்து காப்பாற்ற தமது ஒரே பேறான குமாரனை இந்த உலகிற்குத் தந்தருளினார். “பிறந்தவர் / தனிப்பட்டவர்” என்றால் தனித்துவமானவர் அல்லது ஒரே ஒருவரே என்பது பொருள். இயேசு தேவனுடைய ஒரே பேறான குமாரன்; பிதாவின் அதே இயல்பைக் கொண்டவர். அவர் முழுமையாக தேவன், ஒரு தூதரோ அல்லது தத்தெடுக்கப்பட்ட பிள்ளையோ அல்ல. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். யோவான் 3:16

 

இயேசு ஒரு முன்னோடியாக எவ்வாறு இரட்சிப்பைப் பெற்றார்?

என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது. எபிரெயர் 2:9-10

  • உலகில் பல தெய்வங்கள் உள்ளன, மக்கள் பல மதங்களைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் எந்தத் தெய்வமும் எந்த மதமும் மனுக்குலத்தைக் காப்பாற்றுவதற்குத் தங்களை அர்ப்பணிக்கவில்லை. பாவத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள நாம் சடங்கு / பாவப் பரிகாரம் என்ற வடிவத்தில் கடவுளுக்குக் காணிக்கை செலுத்த வேண்டும்.

  • வேதாகம அடிப்படையில் இரட்சிப்பு என்பது பாவத்திலிருந்தும் அதன் விளைவுகளிலிருந்தும் விடுதலையைக் குறிக்கிறது, இறுதியில் தேவனுடன் நித்திய ஜீவனை அடைய வழிவகுக்கிறது. இது தான் கிறிஸ்தவத்தின் மையச் செய்தியாகும், மேலும் இது இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் மூலம் சாத்தியமாகும்.

  • மனுக்குலத்தை இரட்சிப்பதற்கு இயேசு தம்மையே அர்ப்பணித்தார். நம்மால் ஒருபோதும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்ற போது, அவர் மனமுவந்து தமது ஜீவனைக் கொடுத்து, மரணத்தை எதிர்கொண்டார். அதை வென்று, அனைவருக்கும் இரட்சிப்பைப் பெற்றுத் தந்தார்.

    • தேவனுடைய குமாரனாகிய இயேசு, 33 ஆண்டுகள் முழுமையாக மனிதனாக வாழ்ந்தார் - தூண்டப்பட்டார், இகழப்பட்டார், சோதிக்கப்பட்டார் - இருந்தும் அவர் ஒருபோதும் பாவம் செய்யவில்லை (எபிரெயர் 4:15; 2 கொரிந்தியர் 5:21; 1 பேதுரு 2:22).

    • அவரது திட்டம் தெளிவாக இருந்தது: மனித குலத்தின் பாவங்களை ஏற்றுக் கொண்டு பலியிடப்படுகிற ஆட்டுக்குட்டியாக சிலுவையில் தாமாக முன்வந்து மரிப்பது. (ஏசாயா 53:3-9).

  • இயேசு தேவதூதரிலும் தம்மை சிறியவராக்கி, மனித பலவீனத்தின் முழு யதார்த்தத்தையும் அனுபவித்தார். ஆனால் இந்தப் பாடுகளின் மூலம், அவர் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டார். என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும்,மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். எபிரெயர் 2:9

  • இயேசுவை மேசியாவாகவும், ஆண்டவராகவும், இரட்சகராகவும் விசுவாசிப்பதன் மூலம், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையையும், அவர் நமக்காகப் பெற்றுத் தந்த இரட்சிப்பையும் பெறுகிறோம்.

  • இயேசு இரட்சிப்பின் உச்சமுன்னோடியாவார் - முதலில் அவர் தாமே மரணத்தை எதிர்கொண்டு, விசுவாசிக்கிற அனைவருக்கும் வழியைத் திறந்தார்.

  • இரட்சிப்பு கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமானது. இயேசு விசுவாசிகளுக்காக மட்டும் மரிக்கவில்லை - எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எத்தகைய பின்னணியைக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் யாவருக்காவும் மரித்தார்.

  • இரட்சிப்பு முற்றிலும் இலவசமானது. இயேசு அதை சிலுவையில் சம்பாதித்தார், இதற்காக நாம் எதையும் செலுத்தத் தேவையில்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம், "இயேசுவே, நீரே என் ஆண்டவரும் இரட்சகரும் என்று விசுவாசிக்கிறேன். தயவுசெய்து என்னை மன்னித்து, என் பாவத்திலிருந்து என்னை விடுவித்தருளும்" என்று நம் உள்ளத்திலிருந்து உண்மையாகச் சொல்வதுதான்.

  • எசேக்கியேல் 18:32 இல் கூறப்பட்டுள்ளபடி, யாரும் பாவத்தில் மரித்துப்போவதை தேவன் விரும்பவில்லை. அனைவரும் பாவத்திலிருந்து திரும்பி, அவருடைய கிருபையைப் பெற்று, அவருடன் நித்திய ஜீவனை அனுபவிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புவதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக்கியேல் 18:32

 

இரட்சிப்பு எவ்வாறு நம்மை பரிசுத்தமாக்குகிறது?

எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்; உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப்பாடுவேன் என்றும்; நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார். எபிரெயர் 2:11-13

  • ஜனங்களைப் பரிசுத்தமாக்குவது யார்? – இயேசு. அவர் தாம் சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலம் பரிசுத்தமாக்குகிறார்.

  • யார் பரிசுத்தமாக்கப்படுகிறார்கள்? - இயேசுவே தேவன் என்று விசுவாசிக்கிற அனைவரும் பரிசுத்தமாக்கப்படுகிறார்கள். நீங்கள் அவரை விசுவாசிக்கும் போது, நீங்கள் ஒரு விசுவாசியாகவும் கிறிஸ்துவைப் பின்பற்றுபவராகவும் அவரது சீஷராகவும் மாறுகிறீர்கள்.

  • இயேசு நம்மைப் பரிசுத்தமாக்குகிறார்: அவர் நம்மைப் பரிசுத்தமாக்கி, நம்மை அவருடைய குடும்பம் என்று அழைக்கிறார். இதன் காரணமாக, நாம் அவருடன் ஒன்றிணைக்கப்படுகிறோம். சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலம் இதைச் செய்கிறார். பரிசுத்தமாக்கப்பட்டவுடன், பாவங்களையும் அதன் அடிமைத்தனத்தையும் (குடிப்பழக்கம் / விபச்சாரம் / ஆபாசம் / போதைப்பொருள் போன்றவை) மேற்கொள்ள அவர் வல்லமையை அளிக்கிறார்.

  • கடந்த கால பாவங்களைப் பொருட்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளுதல்: நாம் பாவிகளாயிருந்தாலும் இயேசு ஒருபோதும் நம்மைக் குறித்து  வெட்கப்படுவதில்லை. அவர் பாவிகளின் நண்பர். அவர் நம்மைத் தம்முடைய சகோதர சகோதரிகள் என்று அழைத்து, மற்றவர்கள் முன் நம்மைக் கொண்டாடுகிறார்.

  • விசுவாசமும் கீழ்ப்படிதலும்: பாடுகளிலும் கூட இயேசு பிதாவாகிய தேவனை முழுமையாக விசுவாசித்தார். அதே போல நாமும் போராட்டங்களைச் சந்திக்கும்போது சகித்துக்கொள்ளவும் தேவனின் மகிமையைக் காணவும் அவர் நமக்கு நம்பிக்கையைத் தருகிறார்.

  • நாம் தேவனின் பிள்ளைகள்: இயேசுவின் மூலம், நாம் தேவனின் குடும்பத்தில் இணைக்கப்பட்டு, பிதாவை ஆராதிக்கக் கற்றுக்கொள்கிறோம்.

  • கிறிஸ்துவில் நமது அடையாளம்: அவரில் மனந்திரும்புதலின் மூலம் இரட்சிப்பு நம்மைப் பரிசுத்தமாக்குகிறது, அவர் நம்மைப் பிதாவுடன் இணைத்து, தேவனின் குடும்பத்தின் ஒரு பகுதியாக ஆக்குகிறார்.

 

 

இரட்சிப்பைக் கொண்டுவர இயேசு ஏன் மனித உருவம் எடுத்தார்?

பலர் ஆச்சரியப்படுகிறார்கள்: வேறு எந்தக் கடவுளும் இதைச் செய்யவில்லை, இயேசு கடவுளாக இருந்தால், நம்மை இரட்சிக்க அவர் ஏன் மனிதரானார்? நம்மை இரட்சிப்பதற்கு தேவன் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்து தம் ஒரே பேறான இயேசுவை அனுப்பியதற்குப் பல காரணங்கள் உள்ளன.

 

1. மரணம் மனிதன் வழியாக நுழைந்தது

  • பாவம் ஆதாம் வழியாக உலகிற்குள் நுழைந்து மரணத்தைக் கொண்டு வந்தது. பாவத்தின் சம்பளம் மரணம். ரோமர் 6:23

  • பிந்தின ஆதாமாகிய இயேசு (1 கொரிந்தியர் 15:45), மரணத்தின் சாபத்தை மாற்றியமைக்கவும், இந்தப் பாவத்திலிருந்து விடுபட ஒரு ஆவியைக் கொடுக்கவும் முழுமையாக மனிதரானார். அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். 1 கொரிந்தியர் 15:45

  • இயேசுவின் மூலம் நமக்கு ஜீவனைக் கொடுத்து, பாவங்களிலிருந்து விலகி ஓடச் செய்யும் ஜீவ ஆவி இருக்கிறது.

  • வசனம் இவ்வாறு கூறுகிறது, மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 1 கொரிந்தியர் 15:21-22

 

2. பாவத்தையும் மரணத்தையும் முறியடிக்க முழுமையாக மனிதராக வந்தார்

  • நமது மனித பலவீனம் (மாம்சம் / ரத்தம் மூலம்) சாத்தானுக்கு நம்மை எளிதாக இரையாக மாற்றியது. அவன் ஆதாமை பாவம் செய்யத் தூண்டி, மனுக்குலத்தின் மீது சாபத்தைக் கொண்டு வந்தான். ஆனால் இயேசு நமது பலவீனத்தை முழுமையாகப் புரிந்துகொண்டார் - எனவே அவர் தம்மைத் தாழ்த்தி, மனித உருவத்தை எடுத்துக் கொண்டு, நம்மை மீட்க நமது உடைந்த உலகத்திற்குள் வந்தார்.

  • மனிதர்கள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருப்பதால், உண்மையிலேயே பாவத்தையும் மரணத்தையும் வெல்ல இயேசு மனிதகுலத்தில் பங்கு கொள்ள வேண்டியிருந்தது. ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். எபிரெயர் 2:14-15

  • இயேசு நம்மைப் போலவே சோதனைகள், பாடுகள் மற்றும் பலவீனங்களை அனுபவித்தார். ஆனாலும் ஒருபோதும் பாவம் செய்யவில்லை (எபிரெயர் 4:15; 2 கொரிந்தியர் 5:21; 1 பேதுரு 2:22).

  • உலகில் 33 ஆண்டுகள் மனிதனாக வாழ்ந்ததன் மூலம், அவர் பிசாசின் வல்லமையை உடைத்து, பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவித்தார்.

 

3. ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுதல்

  • ஆபிரகாமின் சந்ததியினர் மூலம் அனைத்து ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் அவருக்கு வாக்குத்தத்தம் பண்ணினார். நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். ஆதியாகமம் 12:2-3

  • எகிப்தியர்களின் அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேலர்களை தேவன் தம்முடைய உடன்படிக்கையை நினைவு கூர்ந்து மோசேயின் மூலம் மீட்டார் - தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். யாத்திராகமம் 2:24

  • இஸ்ரவேலர்கள் எகிப்தியருக்கு அடிமையாக இருந்தது போல நாமும் பாவத்திற்கு கட்டுண்டவர்களாகவும் அடிமைகளாகவும் இருக்கிறோம். நாம் ஆபிரகாமின் சந்ததிகள் என்பதால், நம்மை ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாக மாற்றி இரட்சிக்க தேவன் விரும்புகிறார். கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலம், நாம் அடுத்த தலைமுறைக்கான விதைகளாக மாறி ஆபிரகாமின் சந்ததிகளாகிறோம். விசுவாசம் பாவத்தின் கட்டுக்களை உடைக்கிறது. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள். கலாத்தியர் 3:7,29

  • இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றாமல் இருக்க, சாத்தான் சொல்லும் பொய் "அவர் ஒரு அந்நிய தேவன்" என்பது தான். நாம் ஆபிரகாமின் சந்ததியினர். ஆபிரகாமின் சந்ததியினரான நமக்கு அவர் உதவுகிறார் என்று தேவனின் வார்த்தை கூறுகிறது. ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார். எபிரெயர் 2:16

 

4. அவர் நமக்காகப் பரிந்து பேசுபவர்

  • நம்முடைய பலவீனங்கள், நாம் கடந்து செல்லும் சோதனைகள், அனுபவிக்கும் உணர்வுகள், தாங்குகிற வேதனைகள் மற்றும் பாடுகள் ஆகியவைகளை உணர்ந்து கொள்ளக்கூடிய தேவன் வேறு எவருமில்லை. நம்மைப் புரிந்துகொள்வதற்கும், பிதாவிடம் நமக்காகப் பரிந்து பேசவும் இயேசு இவை அனைத்தையும் அனுபவித்தார். இதனால் நாம் கிருபையையும் இரக்கத்தையும் பெற்றுக் கொண்டு பாவத்தை மேற்கொள்ள முடியும்.

  • பாவத்திலிருந்து நம்மை இரட்சிக்க நியாயப்பிரமாணம் போதுமானதாக இல்லை, பிதாவாகிய தேவன், நம் பலவீனங்களையும் உணர்வுகளையும் உணர்ந்து கொள்ளக்கூடிய தம்முடைய குமாரனாகிய இயேசுவைக் கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் நமக்காக அந்தப் போராட்டத்தை முறியடிக்கும்படி பிதாவிடம் வேண்டக்கூடிய ஒரு பரிந்துரையாளர் (பிரதான ஆசாரியரின் பணி) நமக்கு இருப்பார். அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது. எபிரெயர் 2:17

 

5. அவர் நமது பாவ நிவாரணப் பலி

  • நாம் ஒரு பாவம் செய்தால், அதற்குப் பரிகாரம் செய்யும்படி பிரமாணம் கூறுகிறது - இயேசுவே நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரமாக ஆனார்.  "அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக ...  ". எபிரெயர் 2:17

  • அவர் ஒரேதரம் மரித்தார். அதனால் ஆடு, கோழி, புறா, காளைகள் போன்ற பலிகள் வேறு எதுவும் இனிமேல் தேவையில்லை. அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். ரோமர் 6:10 / இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். எபிரேயர் 10:10

  • காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தம் மனிதனின் பாவங்களை நிவிர்த்தி செய்ய முடியாது, அதனால் அவரே தம்முடைய இரத்தத்தைக் கொடுத்தார். அப்படி நிறுத்தப்படாதபடியால், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது. அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே. எபிரெயர் 10:3-4

  • பாவம் மனிதனுக்குள் நுழைந்தவுடன், மனிதன் பாவத்தைப் போக்க கடவுளுக்கு தினமும் பரிகாரங்களையும் மதக் கடமைகளையும் காணிக்கையாகச் செலுத்தினான். ஆனால் இயேசு நம்மை விடுவிப்பதற்காக எல்லாப் பாவங்களையும் தம்மேல் ஏற்றுக் கொண்டு, பாவநிவாரண பலியாகத் தம்மையே அர்ப்பணித்தார். அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனைசெய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான். இவரோ,பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார். ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். எபிரெயர் 10:11-14

 

6. அவர் நம் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறார்

  • நமக்கு ஒரு பிதா (இயேசு) இருக்கிறார், அவரோடு நம்முடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளலாம். அவரால் நமது மன அழுத்தங்களையும் சரீர வலிகளையும் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில் நாம் சோதிக்கப்படும்போது அவற்றை மேற்கொள்ள நமக்கு உதவும்படிக்கு அவரும் இதேப் பாடுகளை அனுபவித்தார். ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். எபிரெயர் 2:18

  • அவர் ஒரு ஜீவனுள்ள தேவன், அவர் சர்வ வல்லமையுள்ளவர்! எல்லாம் அறிந்தவர்! எங்கும் இருப்பவர். அவர் ஒரு அறைக்குள்ளோ எல்லைக்குள்ளோ கட்டுப்பட்டவர் அல்ல. நாம் என்னென்ன சூழ்நிலைகள் வழியாக செல்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளக் கூடிய,நமக்குத் தேவையான இரட்சிப்பையும் ஜீவனையும் அளிக்கக்கூடிய ஒரு தனிப்பட்ட தேவன் அவர்.

  • நாம் சாத்தானால் சோதிக்கப்படும்போது, பாவத்தின் வலையில் மீண்டும் விழாமல் இருக்க அவர் நமக்கு உதவுகிறார். "... அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்". எபிரெயர் 2:18

 

 

இந்த இரட்சிப்பை எவ்வாறு பெற்றுக் கொள்வது?

நமக்காகத் தம்மையே அர்ப்பணித்த தேவன், நம்மைத் தம்முடைய குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும், ஆசாரியர்களாகவும், ராஜாக்களாகவும் ஆக்கத் தயாராக உங்களுக்காகவும் எனக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார். இரட்சிப்பின் வரத்தைப் பெறுவதற்கு விசுவாசம் மட்டுமே தேவை - இயேசுவே கர்த்தர் என்ற எளிய, இருதயப்பூர்வமான அறிக்கை. அந்த இரட்சிப்பு இலவசம், நித்தியமானது, நீங்கள் யாராக இருந்தாலும் சரி, எங்கிருந்து வந்தாலும் சரி, அது அனைவருக்கும் கிடைக்கிறது. ஒரு கணமும் தாமதிக்க வேண்டாம் - அவர் உங்களுக்காக ஆயத்தம் பண்ணியுள்ள வாழ்க்கைக்குள் நுழைந்து, அவர் மட்டுமே வழங்கக்கூடிய விடுதலை, மகிழ்ச்சி மற்றும் நோக்கத்தை அனுபவியுங்கள்.

 

இரட்சிப்பு தேவனிடமிருந்து வரும் ஈவு, நல்ல கிரியைகளினால் நாம் சம்பாதிக்கக்கூடிய ஒன்றல்ல. கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல. எபேசியர் 2:8-9

 

ஒருவர் பின்வருவனவற்றைச் செய்யும்போது இரட்சிப்பு நிகழ்கிறது:

  • தனது பாவத்தையும் இரட்சிப்பின் தேவையையும் ஒப்புக்கொள்ளும் போது. (ரோமர் 3:23)

  • இயேசு கிறிஸ்துவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் விசுவாசிக்கும் போது. (யோவான் 3:16)

  • பாவத்திலிருந்து மனந்திரும்பி (விலகி) இயேசுவை விசுவாசிக்கும் போது. (அப்போஸ்தலர் 3:19)

  • கிறிஸ்துவில் விசுவாசத்தை அறிக்கையிட்டு அவரைப் பின்பற்றும் போது. (ரோமர் 10:9-10)

 

 

 

 

 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page