ஆவிக்குரிய வாழ்வில் தேக்க நிலை
- Kirupakaran
- May 29, 2022
- 6 min read

சிறு குழந்தைகளை வளர்த்த அல்லது வளர்த்துக் கொண்டிருக்கும் நம்மில் பலர், அவர்கள் வளர்வதைப் பார்க்க விரும்புவோம். இரண்டு மகள்களை வளர்த்த எனது அனுபவத்திலிருந்து இதை என்னால் சொல்ல முடியும். அவர்கள் இப்போது பதின்வயதினர். அவர்கள் பிறந்தபோது, நான் அவர்களின் கால்களைப் பார்த்து, என் உள்ளங்கையால் அளந்திருக்கிறேன். அவர்கள் வளரும்போது, பாலிலிருந்து திட உணவிற்கு மாறியது, தவழ்வதில் இருந்து எழுந்து நிற்க ஆரம்பித்தது, நடக்க ஆரம்பித்தது, பேசியது, பிறகு அங்குமிங்கும் ஓடியது என ஒவ்வொரு நாளும் அவர்கள் எப்படி வளர்ந்தார்கள் என்பதை பார்த்து ரசித்திருக்கிறேன். இன்றும் அவர்கள் வாலிபப் பெண்களாக ஆனபிறகும் கூட அவர்கள் பேசும் / நடந்துகொள்ளும் விதம் போன்றவற்றைப் பார்த்து ரசிக்கிறேன்.
என் வாழ்க்கையின் எல்லா நல்ல விஷயங்களுக்காகவும் தேவனைத் துதிக்கிறேன். குழந்தைகள் கர்த்தரின் ஆசீர்வாதம். என் மனைவி,குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கிறதா என குழந்தை நல மருத்துவரிடம் பலமுறை பரிசோதித்தது எனக்கு நினைவிருக்கிறது. குழந்தை எவ்வளவு சதவிகிதம் வளர்ந்திருக்கிறது, சரியான வளர்ச்சியில் இருக்கிறார்களா என்பதை படம் வரைந்து விளக்குவதற்காக மருத்துவர் குழந்தைகளின் தலை, உடலின் நீளம் மற்றும் எடையை அளந்தது எனக்கு நினைவிருக்கிறது. குழந்தை சரியாக வளராதபோது பெற்றோருக்கு அது ஒரு சோகமான விஷயம், குழந்தைகள் வளராமல் இருப்பது பெற்றோருக்கு பெரும் துன்பம்.
ஆவிக்குரிய விஷயத்திற்கும் இது பொருந்தும். நாம் கர்த்தரிடம் வரும்போது, கிறிஸ்துவின் குடும்பத்தில் குழந்தைகளாக இருக்கிறோம். ஆவியில் வளரும்போது நம் பிதா இயேசு நம்மை ஆவலுடன் நேசிக்கிறார். அவருடைய முன்னிலையில் நாம் வளரும்போது நம் ஒவ்வொரு செயல்களையும் அவர் கண்டு மகிழ்கிறார். நீங்கள் இரட்சிக்கப்பட்டு, இயேசுவின் மீது உங்கள் விசுவாசத்தை வைக்கும்போது அது தொடங்குகிறது. நாம் விசுவாசிகளான உடன் வளர்ச்சி கடிகாரம் ஆரம்பிக்கிறது. அது அங்கேயே நின்று விடுவதில்லை. வளர்ச்சியின் நடைமுறையில், நாம் அவரைச் சந்திக்கும் வரை, அவர் நம்மை அழைத்துச் செல்ல விரும்பும் பல நிலைகள் உள்ளன. தேவனை சந்தித்து நாம் இயேசு கிறிஸ்துவின் சாயலில் இருக்கிறோம் என்ற நிச்சயத்தைப் பெற்றுக் கொள்ளும் வரை தாங்கள் முழுமையாக வளர்ந்துவிட்டதாக யாரும் கூற முடியாது. இந்த பாதையில், நம்மில் பலர் வளர மறுத்து, “ஆண்டவரே, நீங்கள் சொல்வதை நான் செய்யப் போவதில்லை. நான் வளரப்போவதில்லை” என்று கூறுகின்றனர். அது பாவமான காரியம்.
1 கொரிந்தியர் 3 ஆம் அதிகாரத்தை வாசிக்கும் பொழுது இதைப் புரிந்துகொள்ள தேவன் எனக்கு ஞானத்தைக் கொடுத்தார்.
“மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று. நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை .பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா?” 1 கொரிந்தியர் 3: 1- 4
ஒவ்வொன்றிற்கும் ஒரு நேரம்
“மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று”. 1 கொரிந்தியர் 3:1
கிறிஸ்துவுக்குள் குழந்தையாக இருப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது என்று பவுல் இங்கே சுட்டிக்காட்டுகிறார், “நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று”. அவர் அவர்களுடன் இருந்த கடந்த காலத்தில் அவர்களிடம் ஆவிக்குரிய மனிதர்களிடம் பேசுவதைப் போல் பேச முடியாமல் இருந்ததை சுட்டிக்காட்டுகிறார். “தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை” கற்பிக்க போதகர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேவை என்று எபிரேயரும் அதையே கூறுகிறது.
“காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்க வேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்”. எபிரேயர் 5:12
அவர் 2 ஆம் வசனத்தில் அதை மீண்டும் உறுதிப்படுத்துகிறார். “நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்;” என்று கூறுகிறார். அவர் புரிந்து கொள்ள எளிதான ஒரு ஒப்புமையை பயன்படுத்துகிறார். ஆவிக்குரிய வாழ்க்கையில், நமக்குத் தேவையான அனைத்தையும் கொண்டு பிறக்கிறோம். தேவன் தொட்டு, எல்லா ஆவிக்குரிய DNA வையும் நமக்குத் தருகிறார். அதை எப்படி பயன்படுத்துவது என்று நமக்குத் தெரியவில்லை. இந்த தாலந்துகளை எவ்வாறு பயன்படுத்துவது என்று நாம் அறியும் வரை, தேவன் நமக்கு பால் உணவை ஊட்டுகிறார்.
பால் (வசனம் 2a) - ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஆரம்பகால விசுவாசிகளாக இருந்தபோது ஒரு விஷயத்தையும் பின்னர் வேறு விஷயத்தையும் பவுல் கற்பித்தார் என்று அர்த்தம் இல்லை. அவர் எப்போதும் தேவனுடைய வார்த்தையின் முழு ஆலோசனையையும் கற்பித்தார். அவர்களால் அதைக் கையாள முடியாததால், அவர்களுக்குக் கற்பித்ததை ஆழமாகவும் விரிவாகவும் எடுத்துச் செல்லவில்லை. அவர்கள் புதிதாய் பிறந்த குழந்தைகளாக இருந்தனர். அவர் மேலோட்டமாகவே இருந்தார். அதே போதனை தான், ஆனால் அவர் விரும்பும் அளவுக்கு ஆழமாகச் செல்ல அவருக்கு சுதந்திரம் இல்லை. அதை தான் “மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும்” என்று 1 ஆம் வசனத்தில் குறிப்பிடுகிறார்.
திட உணவு (வசனம் 2b) - திட உணவு "நீதியின் வசனத்துடன்" தொடர்புடையது, மேலும் வளர்வதற்கு நாம் அந்த வார்த்தையை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். தேவனின் நீதியைப் புரிந்துகொள்ள, நாம் அவருடைய வார்த்தையை தியானிக்கும் போது இதைப் பெற்றுக் கொள்ளலாம். நாம் தேவனைத் தேர்ந்தெடுக்கவில்லை. தீமையான காரியங்கள் நிரம்பியுள்ள நம் ஒவ்வொருவரையும், நம் பாவம் நிறைந்த சூழ்நிலையோடு அவர் தேர்ந்தெடுத்தார் என்பதை நினைவில் வையுங்கள். இதில் நாம் பாலுடன் தொடங்குகிறோம். நாம் அவருடைய அப்போஸ்தலராக வளர வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
அப்போஸ்தலன் என்று சொல்லும்போது, அது போதகர்களுக்கும் வேதத்தை ஆழமாக அறிந்தவர்களுக்கும் மட்டுமே என்று நாம் ஆச்சரியப்படலாம்.
தேவன், போதகர்களை மட்டுமே ஊழியம் செய்ய நியமிக்கப்பட்ட மக்களாகத் தேர்ந்தெடுப்பதில்லை. உங்களையும், என்னையும் போன்ற சாதாரண மக்களைத் தன் அப்போஸ்தலர்களாகப் பயன்படுத்துகிறார், இதுவே கிறிஸ்துவின் அழகு. நாம் தேவைப்படும் என்று நினைக்கின்ற கல்வியறிவு எதுவும் அவர் தேர்ந்தெடுத்த சீடர்களுக்கு இல்லை. அவருடைய அப்போஸ்தலராக, பிரசிங்கப்பதற்கும் தேவனுடைய ராஜ்யத்திற்காக பல வேலைகளைச் செய்வதற்கும் அவர்கள் அனைவருக்கும் திட உணவை இயேசு கொடுத்தார். ஆவியில் வளர்வதற்கு வேதாகமக் கல்லூரி படிப்பு தேவை என்றும் அது போதகர்களுக்கு மட்டுமே என்றும் சாத்தானால் நாம் ஏமாற்றப்படுகிறோம்.
ஒரு போதகர் அல்லது ஏதேனும் ஒரு கிறிஸ்தவப் பிரிவிடம் தங்களை இணைத்துக் கொண்டு வளராத பலர் இருக்கிறார்கள். மேலும் தேவன் தங்களுக்குக் கொடுத்தவற்றின் முழுமையில் எப்படி வாழ்வது என்று தெரியாததால் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு நொறுங்கிப் போகிறார்கள். அதுவே அவர்கள் வளராததற்குக் காரணம் அல்லது இந்த மனப்பான்மையால் அவர்கள் வளர்ச்சியைக் குலைத்துள்ளனர். தேவனின் நீதியைப் பெற அவர்கள் வார்த்தையை தியானிக்க விரும்பவில்லை.
போதகர்களோ, தலைவர்களோ, தேவாலயப் பிரிவுகளோ தேவையில்லை என்று நான் கூறவில்லை. கிறிஸ்துவோடு கூடிய ஆரம்பகால வாழ்க்கையில் நமக்கு பால் ஊட்டும் மக்களாக, நம்மை வழிநடத்த, போதகர்கள் அல்லது கிறிஸ்துவில் மூப்பர்கள் தேவை. நாம் அறிவைப் பெறும் போது, பரிசுத்த ஆவியின் உதவியோடு, தேவனுடைய நீதியைப் பெறுவதற்கு நாம் அவருடைய வார்த்தையை தியானிக்க வேண்டும். அது ஆவியானவர் நம்மை வழிநடத்துவதற்கும், தேவனுடைய ஊழியத்திற்காக நம்மை அப்போஸ்தலனாக ஆக்குவதற்கும் வழி வகுக்கிறது.
யாரையாவது அல்லது எதையாவது பற்றிக்கொள்ளுதல்
“பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா?” 1 கொரிந்தியர் 3: 3 – 4
ஆவிக்குரிய வாழ்க்கையில் குழந்தைகளாக இருப்பதன் சிக்கலைப் பற்றி பவுல் கூறுகிறார். “பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?”.
நாம் விசுவாசத்திற்குள் வரும்போது, பாவத்தில் இருந்து வெளியே வரும்படிக்கு நாம் நம் குறைகளோடு தேவனால் தேர்ந்தெடுக்கப்படுகிறோம். “நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும் பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்”. ரோமர் 6:6. நம்மில் உள்ள பழையவை இறந்துவிட்டது “பாவசரீரம் ஒழிந்துபோகும் பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்”. நாம் விசுவாசிக்கும் போது , தேவன் என் பழைய பாவ வாழ்க்கையை அகற்றிவிட்டார்,அவருடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் நான் கிறிஸ்துவின் புதிய வாழ்க்கையை அணிந்துள்ளேன் என்ற உறுதியை பெற்றுக் கொள்கிறோம். நமது ஆரம்ப நாட்களில் நாம் கிறிஸ்துவுக்கு அடிபணியவும், அவரிடம் ஒப்புக் கொடுக்கவும் , ஒவ்வொரு வார்த்தையையும் புரிந்துகொள்கிறோமா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் தினமும் பைபிளைப் படித்து அவருடன் நெருக்கமாக நடக்கவும் கற்றுக்கொள்கிறோம். ஒரு காலக்கட்டத்தில், நம் வேகம் குறைந்து, நம்மில் உள்ள பழையவை முன் வந்து, புதிய வாழ்க்கை பின்தங்க ஆரம்பிக்கிறது.
நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளரவில்லை என்பதற்கான முதல் அறிகுறி, நாம் இன்னும் மாம்சத்தின்படி வாழ்ந்து கொண்டிருப்பது தான். ரோமர் 6:6 ல் பவுல் சொன்னது போல் பழையது இன்னும் போகவில்லை. 1 கொரிந்தியர் 3 இல் பவுல் சொல்வது போல் “இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை. பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால்,” நாம் உலகத்தின் காரியங்களுக்காக போராடுகிறோம்.
நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளரவில்லை என்பதற்கான இரண்டாவது அறிகுறி, நாம் ஒரு நபர் அல்லது ஒரு போதகர் அல்லது உலகத்தின் காரியங்களுடன் ஒட்டிக் கொண்டிருப்பது ஆகும். இதை வாழ்க்கையின் விக்கிரக ஆராதனை என்றும் அழைக்கலாம். நாம் ஆவிக்குரிய வளர்ச்சியை ஒரு நபர் அல்லது போதகர் மூலம் மட்டுமே பெற விரும்புகிறோம். இங்கே கொரிந்து தேவாலயத்தில் சிலர் “நான் பவுலைச் சேர்ந்தவனென்றும்”, சிலர் “நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும்” கூறும்படிக்கு அவர்களோடு இணைந்திருந்தனர். இது நாம் கிறிஸ்துவுக்குள் புதியவர்களாக, ஆரம்ப நிலையில் இருக்கும்போது மட்டுமே தேவைப்படும்.
நீங்கள் தேவனுடன் ஆழமான உறவில் வளரும்போது, பரிசுத்த ஆவியானவர் உங்களோடு இருப்பதால், நீங்கள் யாருடனும் உங்களை இணைக்க வேண்டிய அவசியமில்லை. கிறிஸ்து உங்களில் இருக்கிறார், நீங்கள் அவரில் முழுமையாக இருக்கிறீர்கள், அவர் உங்களுக்கு போதுமானவர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆனால் நாம் அதை ஏற்க மறுக்கும் போது நம் வளர்ச்சியை நாமே தடுக்கிறோம். என் வாழ்வில் கர்த்தர் என்ன செய்ய முயற்சிக்கிறாரோ அந்த வழியில் நான் வருகிறேன். ஆம், அவருடைய சித்தத்தைச் செயும்படி அவர் என்னில் இருக்கிறார். நாம் அவருக்கு ஒத்துழைத்து, நாம் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாரோ அதற்கு அடிபணிவதன் மூலம் தேவசித்தம் நிறைவேறும். அவர் நம்மில் எந்த ஒரு கட்டாய வளர்ச்சியையும் செய்ய மாட்டார்.
வளர்ச்சி என்பது தேவனால் கட்டளை மட்டும் இடப்படவில்லை, அது நம்மில் வாழும் அவருடைய ஆவியானவரால் செயல்படுத்தப்படுகிறது. ஒரு விசுவாசி கர்த்தருக்குள் வளராத ஒரு வாழ்க்கையை வாழும்போது, அது தேவனுக்கு முன்பாக பாவமாகும். நீங்கள் அவருடைய வார்த்தைக்கு அடிபணிய மறுப்பதன் மூலம் ஆவியானவர் உங்கள் வாழ்க்கையில் தொடங்கியதை நீங்கள் சிதைக்கிறீர்கள்.
ஆவிக்குரியவைகளில் வளர்வது எப்படி ?
“பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரயங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்”. எபிரேயர் 5:13-14
“பழக்கமில்லாதவனாயிருக்கிறான்” என்ற வார்த்தைக்கு நீதியின் வசனத்தைக் கையாளுவதில் திறமை இல்லாதவன் என்று அர்த்தம். நாம் அவருடன் விசுவாசத்தில் நுழையும்போது, நம் ஒவ்வொருவருக்கும் இந்தத் திறமைகளை விதித்திருக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள். நம்மில் இருக்கும் திறமையை நாம் அடையாளம் கண்டு கொள்வதில்லை, இரண்டாவதாக, இந்த திறமையை வளர்த்துக் கொள்ள நாம் எதையும் செய்வதும் இல்லை.
பரிசுத்த ஆவியின் உதவியால் நம் திறமைகளைப் பயிற்றுவிக்கிறோம். தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறோம், பரிசுத்த ஆவியானவர் நம்முடன் பேசும்படி தேடுகிறோம், தேவனின் ஆவி என்ன செய்யச் சொல்கிறதோ அதைக் கடைப்பிடிக்கிறோம். ஆவியானவர் உங்கள் கடந்த கால வாழ்க்கையின் பாவங்களை பகுத்தறியவும், அவற்றை அகற்றவும் செய்து, உங்களை உள்ளிருந்து புறம்பாக மாற்றி முதிர்ச்சியடைய செய்கிறார்.
பரிசுத்த ஆவி உங்களில் வேலை செய்ய நீங்கள் ஒப்புக்கொடுக்கத் தொடங்கும்போது, தேவன் நமக்குக் கொடுத்த தாலந்துகளை அவருடைய சித்தத்தின்படி வெளிப்படுத்த அனுமதிப்பார்.
தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் உள்ள தாலந்துகளை அடையாளம் கண்டு, அவருடைய பரிபூரண சித்தத்திற்கேற்ப அதைப் பயன்படுத்துவார்.
“தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்”. 1 கொரிந்தியர் 12:28
“முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும்” - இவை தேவன் அடையாளம் காட்டும் திறமைகள். சிலருக்கு அது ஒரு திறமையாக இருக்கலாம் அல்லது பலவாக இருக்கலாம். நம்மில் சிலருக்கு அவர் நம்மைப் பயன்படுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கும் ஒரு தாலந்தாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, தேவன் எழுதும் தாலந்தைக் கொடுத்து (வழிநடத்தும் ஆவி) என்னைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுத்துள்ளார். அவர் எனக்காக வேறு என்ன திட்டமிட்டுள்ளார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒரு விஷயத்தை என்னால் சொல்ல முடியும், ஒவ்வொரு நாளும் அவர் எனக்குக் கற்பித்து, அவருடைய திட்டத்தின்படி என்னை வடிவமைக்கிறார். என் வாழ்க்கையில் அவருடைய மகிமைக்காக அவரைத் துதிக்கிறேன். அவர் என்னில் மாற்றியமைத்த பல விஷயங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் இது முன்னேற்றத்தில் உள்ள மாற்றத்திற்கான வேலை. என்னில் அவர் செய்த காரியங்களுக்காக அவருக்கு எல்லா மகிமையும் உண்டாவதாக. உங்கள் விஷயத்தில், வேறு ஒரு திறமையை தேவன் பயன்படுத்த விரும்பலாம். நாம் அனைவரும் வெவ்வேறு உறுப்புகள் ஆனால் கிறிஸ்துவில் ஒரே சரீரத்திற்காக வேலை செய்கிறோம் என்பதை நினைவில் வையுங்கள். இதன் மூலம் அவருடைய நாமம் வெளிப்படுத்தப்பட்டு, மகிமைப்படும்.
“எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்”. 1 கொரிந்தியர் 12:12
சுருக்கம்
நீங்கள் கிறிஸ்துவில் எவ்வளவு காலமாக இருக்கிறீர்கள் என்று திரும்பிப் பாருங்கள். நீங்கள் 1 வயது கிறிஸ்தவரா? அல்லது அதற்கு மேற்பட்டவரா? நீங்கள் 1 வயதுக்கு மேல் இருந்து, ஆவிக்குரிய முதிர்ச்சியைக் கற்றுக் கொள்ள ஒரு “நபர்” மீது சாய்ந்திருந்தால், நீங்கள் கிறிஸ்துவில் குழந்தை நடத்தையை உடல் ரீதியாக வெளிப்படுத்தும் ஒரு வளர்ந்த குழந்தையைப் போன்றவர்கள்.
உங்களின் ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சியைத் தடுக்கும்படி, நீங்கள் சார்ந்திருக்கும் விக்கிரக வழிபாடுகள் என்னவென்று நீங்களே ஆராய்ந்து பாருங்கள். இது ஒரு நபரா அல்லது நீங்களா அல்லது பணமா? இது போன்றவற்றைக் தேவனிடம் ஒப்புக் கொடுத்து, உங்கள் ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கும் விஷயங்களை அகற்றும்படி அவரிடம் கேளுங்கள்.
ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுப்பது பாவம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். கோபமா? பொறாமையா? உங்களுக்கு மற்றவர்களுடன் சண்டையா? பெருமையா? உங்களிடம் உள்ள கிசுகிசுக்களா? ”பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து” என்று பவுல் சொல்வது போல் அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
நீங்கள் கிறிஸ்துவின் வார்த்தைக்கு அடிபணிந்து கீழ்ப்படிந்தாலொழிய கிறிஸ்துவில் வளர முடியாது. "நீதியின் வசனம்" என்ற திட உணவை நீங்கள் பெற வேண்டும் என்றால் நீங்கள் தியானம் மற்றும் ஜெபத்தில் தேவனுடன் நேரத்தை செலவிட வேண்டும். அது ஒரு நிமிட வாட்ஸ்அப் / ஃபேஸ்புக் / இன்ஸ்டா பதிவுகளைப் படிப்பது அல்ல. இது தேவனுக்காக அர்ப்பணிக்கும் நேரம். அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நேரத்தைக் கொடுப்பவர் அவர் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
யாவருக்கும் ஒரே அளவான நேரம் வழங்கப்படுகிறது, ஆம், நாம் உலக வாழ்க்கையின் முன்னுரிமையில் மிகவும் பரபரப்பாக இருக்கிறோம், குழந்தைகளின் கடமைகள், நடைபயிற்சி / ஜிம் உடற்பயிற்சி, பள்ளி / கல்லூரி படிப்பு என நம் வேலைகள் யாவும் நிறைய நேரம் எடுக்கின்றன. இந்த செயல்கள் அனைத்தும் அவசியமானவை. ஆனால் அது உங்கள் மனப்பான்மை மற்றும் விருப்பம். நீங்கள் தேவனுக்கென்று நேரம் ஒதுக்கினால், மற்றவை தானாகவே சீரமைக்கப்படும். நமது உலக முன்னுரிமைகள் என்று சாக்குப்போக்கு எடுத்துக் கொண்டால், நாம் வளரவே மாட்டோம். கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பலர் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளராமல், கிறிஸ்துவில் குழந்தைகளாகத் தொடர்வதற்கு இதுவே காரணம்.
நான் உங்களுக்கு பல வாய் ப்புகளை வழங்கியபோது நீங்கள் உங்கள் நேரத்தை என்ன செய்தீர்கள் என்று ஆண்டவர் உங்களிடம் கேட்கப் போகிறார் என்பதை நினைவில் வையுங்கள். நாம் அவரைச் சந்திக்கும் போது அவர் என்னென்ன வாய்ப்புகளை வழங்கினார் என்பதற்கான உதாரணங்களை அல்லது நிகழ்வுகளை அவர் மேற்கோள் காட்டலாம். எந்த ஒரு சிறந்த பதிலும் உங்களை அவருடைய கோபத்திலிருந்து காப்பாற்ற முடியாது. உறக்கத்திலிருந்து எழுந்து, குழந்தையாக இருப்பதில் இருந்து விடுபட்டு, திட உணவைப் பெறத் தொடங்கும்படிக்கு, அவரது அழைப்பிற்குக் கீழ்ப்படிவதற்கான நாள் இன்று. செயல் உங்களுடையது.



Comments