ஆவிக்குரிய வாழ்வில் எங்கே நிற்கிறீர்கள்?
- Kirupakaran
- Sep 14
- 4 min read

தேவன் படைத்த அனைத்திலும் வளர்ச்சி கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு விதை மண்ணில் புதைந்தே கிடக்காது - அது உடைந்து, முளைத்து, பழம் தரும் மரமாக வளருகிறது. ஒரு குழந்தை என்றென்றும் குழந்தையாகவே இருக்காது - அது வளர்ந்து சிறுவனாகவும் பின்பு முழுமையான மனிதனாகவும் மாறுகிறது. இதே கொள்கை நமது ஆவிக்குரிய வாழ்க்கையிலும் பொருந்துகிறது. ஆனாலும், பல நேரங்களில், விசுவாசத்தின் தொடக்க நிலையைத் தாண்டி செல்லாமல், குருட்டுத்தனத்திலும் ஏமாற்றத்திலும் சிக்கிக்கொண்டு ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறோம். ஆனால் கிறிஸ்துவுக்குள் குழந்தைகளாக இருந்து, பின்பு பிள்ளைகளாக வளர்ந்து, இறுதியில் அவரது சித்தத்தை சுமந்து, அவரது இருதயத்தை பிரதிபலிக்கும் குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் நாம் மாற வேண்டும் என்பதே தேவனுடைய திட்டமாக இருக்கிறது.
இயேசுவின் மீது விசுவாசம் வைக்கும்பொழுது நாம் தேவனுடைய புத்திரராகிறோம்.
நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. கலாத்தியர் 3:26
கிறிஸ்துவுக்குள் சிறு குழந்தைகளும்
மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று. நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை. பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா?. 1 கொரிந்தியர் 3:1-4
கொரிந்திய திருச்சபை ஆவிக்குரிய வளர்ச்சியடைந்து, தேவனுக்கு முக்கியமானவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று பவுல் ஏங்கினார்.
ஆனால் ஆவியால் வழிநடத்தப்படும் விசுவாசிகளாக வாழ்வதற்குப் பதிலாக, அவர்கள் இன்னும் முதிர்ச்சியற்றவர்களாகவும், பிரிந்தும், மாம்சப்பிரகாரமாகவும் உலகத்தாரைப் போல நடந்துகொண்டு இருந்தனர்.
இரட்சிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் அவிசுவாசிகளைப் போலவே வாழ்ந்து கொண்டிருந்தனர்.
குழந்தைகளுக்குத் தேவையானது பால் தான், திட உணவு அல்ல - அவர்கள் ஆழமான சத்தியங்களுக்குத் தயாராக இல்லை.
“…மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று” என்று பவுல் கூறுகிறார் - அவர்கள் ஆவியில் வளர விரும்பாமல், தங்கள் பழைய வழிகளில் சிக்கிக் கொண்டிருந்தார்கள்.
பவுல் அவர்களுக்கு பாலைக் குடிக்கக் கொடுத்ததாகக் கூறுகிறார், ஏனெனில் அவர்கள் திட உணவுக்கு வளர்ந்து செல்ல மறுத்துவிட்டனர். தேவன் தம்முடைய ஊழியர்கள் மூலம் கொடுத்த போதனைகளையும் பராமரிப்பையும் அவர்கள் புறக்கணித்தனர்.
அன்புடனும் ஐக்கியத்துடனும் இருப்பதற்குப் பதிலாக, அவர்கள் சண்டையிட்டுக் கொண்டு ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்த்துஅவிசுவாசிகளைப் போல நடந்து கொண்டனர். "பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால்,நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?"
உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்:
நீங்கள் தேவனை பொருட்களுக்காகவும் உலகத் தேவைகளுக்காகவும் மட்டுமே தேடுகிறீர்களா? அல்லது உங்கள் வாழ்க்கையில் அவருடைய அழைப்பையும் நோக்கத்தையும் நிறைவேற்ற அவரைப் பின்தொடர்கிறீர்களா? தேவனுடனான உங்கள் உறவைக் கொண்டு உலகப் பொருட்களை மட்டுமே கேட்டுக்கொண்டு இருந்தால், நீங்கள் இன்னும் கிறிஸ்துவுக்குள் ஒரு குழந்தையாகவே இருக்கிறீர்கள்.
கிறிஸ்துவில் தேவனுடைய பிள்ளை
1. தேவனுடைய குடும்பத்தில் பிறப்பு
வீடற்ற ஒரு குழந்தை ஒரு புதிய வீட்டில் சேருவது போன்று மனித ரீதியான தத்தெடுப்பு போல், நாம் தேவனின் குடும்பத்தில் நுழைவதில்லை - தேவனின் குடும்பத்தில் நுழைவதற்கான ஒரே வழி மறுபிறப்பு (இரட்சிப்பு), அதாவது கிறிஸ்துவுக்குள் மீண்டும் பிறப்பதே ஆகும்.
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவான் 3:3
2. விசுவாசத்தினால் தேவனுடைய பிள்ளைகள்
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். யோவான் 1:12-13
மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14
கிறிஸ்துவின் மீதான விசுவாசம் புதிய பிறப்பைக் கொண்டுவருகிறது. அந்தப் புதிய பிறப்பினால் (இரட்சிப்பினால்) , நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாகிறீர்கள்.
3. ஆவிக்குரிய குழந்தைப் பருவத்தின் நிலை
பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை. தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான். கலாத்தியர் 4:1-2
ஆனால், பிள்ளையானது சுதந்தரவாளியாக இருந்தாலும், இன்னும் சிறுபிள்ளையாகவே இருக்கிறது என்பதை பவுல் நமக்கு நினைவூட்டுகிறார். தேவன் வாக்களித்த அனைத்திற்கும் நீங்கள் சுதந்தரவாளியாக இருந்தாலும் இன்னும் காரியக்காரரின் கீழ் இருக்கிறீர்கள் என்பதே இதன் பொருள்.
இந்த நிலையில், தேவனுடைய வரங்கள் உங்களிடம் இருந்தாலும் அவரது சித்தத்தின்படி முழுமையாக நடக்க நீங்கள் இன்னும் தயாராக இல்லை.
ஒரு சிறுபிள்ளை சட்டப்படி ஒரு பரம்பரைச் சொத்தின் உரிமையாளராக இருந்தாலும், அதை அனுபவிக்க முடியாததைப் போல், ஒரு ஆவிக்குரிய குழந்தையும் இன்னும் கட்டுப்பாடுகளுடன் வாழ்கிறது.
4. அடிமைத்தனம் மற்றும் கிறிஸ்துவில் விடுதலை
அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாயிருந்த காலத்தில் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம். கலாத்தியர் 4:3
ஒரு குழந்தையாக, தேவனுடைய சித்தத்தை செய்ய விருப்பம் இருக்கும், ஆனால் அதை நிறைவேற்றுவதற்கு முழுமையான வளர்ச்சி இல்லாமல் இருக்கும்.
பழைய பழக்கவழக்கங்கள், மீதமுள்ள இணைப்புகள் மற்றும் உலகின் அடிப்படை சக்திகள் இன்னும் உங்களை அடிமைத்தனத்திற்கு இழுக்கக்கூடும். நீங்கள் இன்னும் கிறிஸ்துவில் முழுமையான சுதந்திரத்தில் நடக்கவில்லை.
நீங்கள் வளரும் வரை, ஒருபுறம் கிறிஸ்துவுக்காகவும், மறுபுறம் உலகத்துடன் கட்டப்பட்டவராகவும் பிரிந்து வாழலாம்.
உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்:
கிறிஸ்துவுக்குள் மீண்டும் பிறந்த பின்பும் இன்னும் உலக இன்பங்களால் ஈர்க்கப்படுகிறீர்களா?
நீங்கள் உங்களுக்காக ஜெபிக்க எப்போதும் பிறரைத் தான் நம்பியிருக்கிறீர்களா?
உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் அழைப்பை அறிந்திருக்கிறீர்களா? - நீங்கள் அதில் நடக்கிறீர்களா?
அல்லது பாவத்தின் பழைய அடிமைத்தனம் இன்னும் அவருடைய நோக்கத்திலிருந்து உங்களைத் தடுத்து நிறுத்துகிறதா?
அப்படியானால், நீங்கள் தேவனின் குழந்தையாக இருக்கலாம், ஆனால் அவர் உங்களை கிறிஸ்துவில் வளர அழைக்கிறார். உங்களைக் கட்டி வைத்திருக்கும் சங்கிலிகளை விட்டுவிட்டு, கிறிஸ்துவின் சுதந்திரத்திற்குள் அடியெடுத்து வைக்கும்போது உண்மையான முதிர்ச்சி வருகிறது. உங்களை அழைத்த அவருடைய சித்தத்தைச் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்கும் பழைய அடிமைத்தனங்களிலிருந்து விடுபடுங்கள்.
கிறிஸ்துவின் குமாரர்களும் குமாரத்திகளும்
அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். 2 கொரிந்தியர் 6:18
கிறிஸ்து உங்களைப் பழைய பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கின்றபோது நீங்கள் இனிமேலும் ஒரு குழந்தை அல்ல - கிறிஸ்துவின் குமாரராகவோ குமாரத்தியாகவோ ஆகிவிடுகிறீர்கள்.
இது வெறும் ஒரு பட்டம் (பதவி) அல்ல. குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் தேவனுடைய சுதந்தரவாளிகளாக நமக்கு முழு உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய். கலாத்தியர் 4:6-7
புத்திரனாயிக்கும் போது, தேவன் பரிசுத்த ஆவியானவரால் நம்மை முத்திரிக்கிறார் (2 கொரிந்தியர் 1:21-22). இந்த முத்திரை நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் என்பதை உறுதி செய்கிறது. உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே. அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார். 2 கொரிந்தியர் 1:21-22
இந்த முத்திரை, ஆசீர்வதிக்கப்பட்ட திரித்துவத்துடன் (திரித்துவம் - பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன் மற்றும் பரிசுத்த ஆவியாகிய தேவன்) இணைந்து செயல்படுவதற்காக அவருடைய சொந்த பரிசுத்த ஆவியின் மூலம் நமக்கு வழங்கப்படுகிறது.
தேவனுடைய குமாரனாக குமாரத்தியாக இருப்பது நாம் சுதந்திரமாக வாழ அதிகாரம் பெற்றவர்கள், பிதாவின் அதிகாரத்தில் நடக்கக்கூடியவர்கள் மற்றும் அவர் சித்தத்தை நிறைவேற்றும்படி அழைக்கப்பட்டவர்கள் என்பதைக் குறிக்கிறது — இருளில் இருப்பவர்களை அவருடைய அற்புதமான ஒளிக்குள் அழைக்க பயன்படுத்தப்படுகிறோம்.
குமாரனுக்கு தந்தையின் இயல்பு உண்டு. நாம் கிறிஸ்துவை விசுவாசிக்கும் பொழுது, பரிசுத்த ஆவியானவர் நம்முள் வாசம் செய்ய வருகிறார். இதற்கு, நாம் திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாக ஆகிறோம் என்று அர்த்தம். இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 2 பேதுரு 1:4
விசுவாசியின் இருதயத்தில் ஆவியானவர் கிரியை செய்து, தேவன் மீதான அன்பை உயிர்ப்பித்து அதிகரிக்கச் செய்கிறார். “ஆவியின் கனியோ, அன்பு…“ (கலா. 5:22). தேவன் மீதான அன்பு அதிகரிக்கும்போது, அவர்கள் சுயத்தை விட பிதாவின் விருப்பத்தைத் திருப்திப்படுத்த வேலை செய்யத் தொடங்குகிறார்கள், அப்படித்தான் நீங்கள் கிறிஸ்துவில் வளர்கிறீர்கள்.
இந்த குமாரத்துவ ஆவி, கிறிஸ்து சிலுவையில் செய்தது போல, சிலுவைக்கு சரணடைந்து பிதாவின் சித்தத்தைச் செய்ய விரும்புகிறது. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம். கலாத்தியர் 5:24-25
ஆவிக்குரிய முதிர்ச்சி என்பது, கிறிஸ்துவில் ஒரு பாலகனாக இருந்து, பின்னர் குழந்தையாக, இறுதியில் தேவனுடைய குமாரனாக வளர்வது (இரட்சிப்பு) வரை ஒரு பயணம். இந்த வளர்ச்சி நாம் அவருடைய வார்த்தையில் ஆழமாக வேரூன்றி, ஜெபத்தில் உண்மையாக இருந்து, அவருடன் ஒவ்வொரு நாளும் ஐக்கியத்தில் நடக்கும் போது வருகிறது. அவருடைய பிரசன்னம் மட்டுமே நம்மை மாற்ற முடியும், பழைய அடிமைத்தனங்களின் ஒவ்வொரு சங்கிலியையும் உடைத்து, குமாரர்களாக குமாரத்திகளாக உண்மையான சுதந்திரத்திற்கு நம்மை வழிநடத்தும். ஆனால் வளர்ச்சிக்கு பசி தேவைப்படுகிறது - அவருடைய சத்தியத்தின் திட உணவுக்காக ஆவலுடன் வேண்டாவிட்டால், நாம் முதிர்ச்சியற்றவர்களாகவே இருப்போம். தேவன் நம்மை வடிவமைக்கவும், உள்ளேயும் வெளியேயும் நம்மைச் சுத்திகரிக்கவும், அவரது அழைப்பின் முழுமைக்கு நம்மை உயர்த்தவும் ஏங்குகிறார்.



Amen