ஆவிக்குரிய ஞானம்
- Kirupakaran
- May 22, 2022
- 5 min read

ஞானம் - மனிதர்களாகிய நாம் இந்த ஞானத்திற்காக ஏங்குகிறோம். நம்மில் பலர் காலையிலேயே ஞானத்தைப் பற்றிய மேற்கோள்களைத் தேடுகிறோம். அது நம் நாளை நேர்மறையான ஆற்றலுடன் நிரப்புகிறது. ஆனால், ஞானம் கர்த்தரிடத்தில் இருந்து வருகிறது என்று வேதம் கற்பிக்கிறது. நாம் அவருக்கு பயப்படும் போது அது தொடங்குகிறது. “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" நீதிமொழிகள் 1:7. நாம் ஆவிக்குரிய ஞானத்தைக் குறித்து ஆழமாக சிந்திப்பதற்கு முன் உலகப்பிரகாரமான ஞானத்தைக் குறித்துப் பார்ப்போம்.
உலகப் பார்வையில் ஞானம்
முதலில் ஞானம் என்றால் என்ன? என்பதை புரிந்து கொள்வோம். ஞானம் என்பது அனுபவம், அறிவு மற்றும் நல்ல தீர்ப்பு ஆகிய பண்புகளைக் கொண்டது. அது புத்திசாலியாக இருக்கும் நிலை.
ஞானத்திற்கு மூன்று குணங்கள் உண்டு.
அனுபவம் - உண்மையில் அனுபவம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வருகிறது. நீங்கள் முயற்சி செய்து , தோல்வியடையும் போது வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்கிறீர்கள். அப்பொழுது அதனுடன் அனுபவமும் வருகிறது.
அறிவு - பள்ளிகள் / கல்லூரிகளில் சென்று பயில்வதன் மூலமும், அதிகமான புத்தகங்களைப் படிப்பதன் மூலமும், மக்களுடன் தொடர்புகொள்வதன் மூலமும், சமூகத் திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலமும் அறிவை வளர்த்துக் கொள்ளலாம். அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வரும். நமது ஆரம்ப பள்ளி நாட்களில் நமது அறிவு குறைவாக இருக்கும், ஆனால் காலம் செல்ல செல்ல அனுபவத்தின் மூலமாகவும் அறிவைப் பெறுகிறோம்.
தீர்ப்பு - ஒருவரின் சுய உள்ளுணர்வின் அடிப்படையில் தீர்ப்பு செய்யப்படுகிறது. அது ஒரு விஷயத்தைப் பற்றி ஒருவருடைய அறிவைக் கொண்டு வருகிறது. சில தீர்ப்புகள் ஒருவரை உயரவோ அல்லது தாழவோ வைக்கிறது.
இந்த மூன்றிலும் தேர்ச்சி அடைந்தவுடன் நீங்கள் ஒரு புத்திசாலி அல்லது ஆழ்ந்த ஞானம் கொண்டவர் என்று அழைக்கப்படுவீர்கள்.
பழைய ஏற்பாட்டின் பார்வையில் ஞானம்
“சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது. அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்”. பிரசங்கி 1:14,18
எல்லாம் "மாயை" என்று கூறுகிறது.
மனித ஞானத்துடன் “சலிப்பு” வருகிறது, நீங்கள் எவ்வளவு அறிவாளியாக இருக்கிறீர்களோ, அவ்வளவு “துக்கம்” உண்டாகிறது.
பிரசங்கியை எழுதியவர் எருசலேமை ஆண்ட சாலமோன் ராஜா, அவர் தனது அனுபவத்திலிருந்து எழுதுகிறார்.
புதிய ஏற்பாட்டின் பார்வையில் ஞானம்
பவுல் கொரிந்து நகரத்தில் இருந்தபோது மனித ஞானத்தைப் பற்றிய ஒரு பார்வையைக் கொடுக்கிறார்.
கொரிந்து பட்டணம் பல்வேறு நாடுகளை சேர்ந்த மனிதர்கள் வாழும் ஒரு ஒரு பரந்த நகரம். அங்கே நிறைய கிரேக்கர்களும் யூதர்களும் இருந்தனர்.
ஒருவர் பேசும் திறனை வைத்து கிரேக்கர்கள் ஞானத்தை மதிப்பிடுவர். யூதர்கள் சட்ட நுணுக்கங்களில் குறிப்பாக இருந்தனர். பவுல் இரண்டு வெவ்வேறு மாறுபட்ட மக்களைக் கையாண்டு கொண்டிருந்தார். பவுல் தாமே ஒரு யூத அறிஞர் என்பதையும், யூத சட்டங்களை நன்கு அறிந்தவர் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
மனித ஞானம் பற்றிய பவுலின் வரையறை
“ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக; இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன். இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது.அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும், ஞானிகளுடைய சிந்தனைகள்வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது”. 1கொரிந்தியர் 3 :18 -20
பவுல் உலக ஞானத்தை தேவனின் பார்வையில் "பைத்தியம்" என்று ஒப்பிட்டார். ஒருவரை பைத்தியம் என்று அழைப்பது மிகவும் கடுமையான வார்த்தை.
பழைய ஏற்பாடு , மனித ஞானம் துக்கத்தைக் கொண்டு வருவதாகவும் அதிக அறிவு அதிக நோவு என்றும் கூறுகிறது. புதிய ஏற்பாட்டில், தேவன் இந்த உலகத்தின் ஞானிகளை பைத்தியங்களாகப் பார்ப்பதாக பவுல் கூறுகிறார். தேவனுடைய ஞானத்தை நாம் புரிந்து கொண்டால், அவர் ஏன் பைத்தியம் என்று அழைக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
தேவ ஞானம்
தேவனின் ஞானத்தைக் குறித்து பவுல் கொரிந்தியரில் விளக்குகிறார்.
“உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்”. 1கொரிந்தியர் 2 :7
கர்த்தரின் ஞானம் என்பது மறைந்திருக்கும் இரகசியம்.
அவரது ஞானம் காலம் தொடங்குவதற்கு முன்பே தொடங்கியது, “உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும்”.
மனிதனின் ஞானம் காலத்திற்கு உட்பட்டது, தேவனின் ஞானம் காலங்கள் தொடங்குவதற்கு முன்பே தொடங்குகிறது. வித்தியாசத்தைப் பாருங்கள்.
"அனுபவம்", "அறிவு" மற்றும் "தீர்ப்பு" ஆகிய இம்மூன்றைக் கொண்டிருந்தால் மனித ஞானத்தை பெற்றுக் கொள்ளலாம். மாறாக, தேவ ஞானம் மறைந்திருக்கும் இரகசியம். அவரை நேசிப்பவர்களுக்கு மட்டுமே அது வெளிப்படும்.
அடுத்து வரும் வசனங்களில் பவுல் இதை விவரிக்கிறார். “அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை”. 1 கொரிந்தியர் 2 : 8-9
இரகசியமாயிருக்கும் தேவ ஞானத்தை நாம் பெறுவது எப்படி?
தேவன் மீதான அன்பு – “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளை” - இந்த ஞானம் அவரை இருதயத்தில் இருந்து நேசிப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நாம் அவரை நேசிக்கிறோம், தேவாலயத்திற்குப் போய் வந்த பிறகு நாம் நம்முடைய பழைய வழக்கங்களுக்கு திரும்புகிறோம். இங்கே பேசப்படும் அன்பு அப்படியானது அல்ல. இங்கே பவுல் பேசும் அன்பு, ஒருவர் தன்னை நேசிப்பதை விட அதிகமாக தேவனை நேசிப்பதாகும். தேவன் மீது பைத்தியமாக இருப்பது என்று சொல்லலாம்.
தேவன் மீதான சார்பு - பவுல் ஒரு சிறந்த அறிஞராக இருந்தார். இருந்தும் கிரேக்கர்கள் மற்றும் யூதர்களுடனான தனது வாதத்தில், அவர் தன்னைப் பற்றி எப்படி விவரித்தார் என்பதைப் பாருங்கள்.
“இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.
அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன்.உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது”. 1 கொரிந்தியர் 2:2-5
அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறுகிறார், ஒரு யூத சட்ட வல்லுநர் எப்படி கூறுகிறார் பாருங்கள், “வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்”.
அவர் அவர்களிடம் வந்து, “பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும்” என்ற மனப்பான்மையுடன் பேசினார்.
அவருடைய பிரசங்கம் புத்திசாலித்தனமாவும் தூண்டக் கூடியதாகவும் இல்லை, ”என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல்”.
ஆனால் அவர் பரிசுத்த ஆவியின் வல்லமையையே சார்ந்திருந்தார், “ஆவியினாலும் பெலத்தினாலும்”. அவர் தொடர்ந்து, தனது நம்பிக்கை மனுஷஞானத்தின் மேல் இல்லாமல் தேவனிடத்தில் இருப்பதாக கூறுகிறார், “உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு”.
அவர் ஞானமுள்ளவராக இருந்த போதிலும் தேவனை விசுவாசித்து அவரையே சார்ந்திருந்தார். நான் பவுல் போல இருந்திருந்தால், பவுல் செய்ததற்கு நேர்மாறாக செய்திருப்பேன் என்று நம்புகிறேன். நம்மில் பலர் அப்படியே செய்வோம் என்று நம்புகிறேன்.
அவருடைய சார்பு பரிசுத்த ஆவியின் மீது இருந்தது.
3. பரிசுத்த ஆவியானவர்
“நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்”. 1 கொரிந்தியர் 2:10
தேவன் தம்முடைய இரகசியங்களை நமக்கு அவிழ்த்து, அவர் தேர்ந்தெடுத்தவர்களுக்கு ஞானத்தை வழங்குவதற்கான ஒரு கருவியாக பரிசுத்த ஆவியைப் பயன்படுத்துகிறார் – “நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்”.
கிறிஸ்தவர்களாக இருக்கும் பலருக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இல்லை. இது இல்லாமல் அவர்கள் தேவனுடைய ஞானத்தைப் பெற முடியாது.
பரிசுத்த ஆவியானவரின் குணங்கள் – “அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்”. ஆவியானவர் தேவனின் ஞானத்திலிருந்து ஆழமான விஷயங்களையும் தேடுகிறார். அவருடைய உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதை அறியும் அதிகாரம் பரிசுத்த ஆவியானவருக்கு மட்டுமே உள்ளது. அவரைத் தவிர வேறு யாருக்கும் அது தெரியாது.
தேவனை நேசிக்கிறவர்களுக்கும் அவரை சார்ந்து இருப்பவர்களுக்கும் இது இலவசமாக வழங்கப்படுகிறது. "நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்". 1 கொரிந்தியர் 2:12
ஒருவர் தேவனை சார்ந்து நடக்கிறார் என்றால், அவரால் கற்பிக்கப்படும் எந்த ஒரு வார்த்தையும் அல்லது அவர் செய்யும் எந்த ஒரு செயலும், பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலால் செய்யப்படுகிறது. “அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்”. 1கொரிந்தியர் 2:13
தேவனின் பார்வையில் இது ஏன் இரகசியமாயிருக்கிறது என்பதையும் மனுஷ ஞானம் ஏன் "பைத்தியமாயிருக்கிறது" என்பதையும் இப்போது இது விளக்குகிறது.
தேவ ஞானத்தின் விளைவுகள்
“ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்”. 1 கொரிந்தியர் 2:14-15
இந்த ஆவிக்குரிய பார்வை இல்லாதவர்கள் அவர்களை பைத்தியமாகப் பார்க்கிறார்கள். அவரால் சொல்லப்படும் எந்தவொரு பார்வையும் "பைத்தியம்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அதற்கு ஆதாரம் காட்ட நியாயமும் ஆதரவும் தேவை. இதைத்தான் பவுல் விளக்குகிறார், “ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்”.
இயற்கையான மனிதனுக்கு ஆவிக்குரிய விஷயங்கள் முட்டாள்தனமாகத் தெரிகிறது. நீங்கள் பணம் சம்பாதிக்கவோ அல்லது மகிழ்ச்சியாகவோ இருக்க முடியும் போது "ஆவிக்குரிய" விஷயங்களில் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்?.
ஜென்ம சுபாவமான மனிதனுக்கு தேவனின் காரியங்கள் தேவையில்லை. ஏனென்றால் அவன் அவற்றை பைத்தியமாக கருதுகிறான். மேலும் என்னவென்றால், தேவனின் விஷயங்களை (அவன் விரும்பினாலும்) அவனால் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவை ஆவிக்குரிய வழியில் புரிந்து கொள்ளப்படுகிறது. மனிதன் ஆவிக்குரிய விஷயங்களைப் பார்க்க வேண்டும், மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.
சுபாவ மனிதன் இரட்சிக்கப்படாதவன். பல கிறிஸ்தவர்கள் சுபாவ மனிதர்களைப் போல சிந்தித்து, ஆவிக்குரிய ரீதியில் விஷயங்களைக் கண்டறிய மறுக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் சில சான்றுகள் மற்றும் ஆதரவுடன் உலகில் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதில் அக்கறை கொண்டுள்ளனர்.
“கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது”.1 கொரிந்தியர் 2:16
தேவனிடமிருந்து இந்த ஞானத்தைப் பெற்ற ஒருவரால் தீர்ப்பளிக்க முடியும், அவருடைய திறமையினாலோ அல்லது அறிவாலோ அல்ல. இது கிறிஸ்துவின் சிந்தையால் ஆகும். பவுல் அதைத்தான் செய்தார், அவர் ஒரு அறிஞராக இருந்தபோதிலும், அவர் தனது ஞானத்தைப் பயன்படுத்தவில்லை, தன்னை வழிநடத்த அவர் தேவனை நம்பி இருந்தார்.
நாம் கிறிஸ்துவின் சிந்தையை பெறுவோம் – “எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது”.
நம்மிடத்தில் எந்த பெருமையும் இருக்காது. தாழ்மையுடன் இருப்போம். நாம் பலவீனமான மனிதர்களாக இருந்தும் கூட தேவ சிந்தை நம்மிடத்தில் இருக்கும் போது நாம் அவருடைய எல்லா குணங்களையும் பெற்றுக் கொள்வோம்.
உங்கள் ஞானம் தேவனிடம் இருந்து வந்ததா? அல்லது மனிதனிடமிருந்து வந்ததா? என்று சிந்தித்துப் பாருங்கள். அநேக சமயங்களில் தேவனின் ஞானத்தை நம்புவதை விட மனித ஞானத்தை தான் சார்ந்து இருக்கிறோம். ஏனெனில் தேவ ஞானம் பைத்தியமானது, அதில் எந்த தர்க்கமும் இல்லை / நம் கடந்தகால அனுபவத்தில் எதுவும் நடக்கவில்லை என்றெல்லாம் சாத்தான் பொய் சொல்லி நம்மை வஞ்சிக்கிறான். ஆனால் தேவனின் ஞானம் காலத்திற்கு முன்பே ஆரம்பித்து என்றென்றும் நித்தியமாக இருக்கும்.
ஆகவே, உங்கள் சொந்த ஞானத்தையும் அறிவையும் நம்புவதை விட்டுவிட்டு, ஆவிக்குரிய ஞானத்தைப் பெற தேவனுடைய ஞானத்தை நம்புங்கள். அவருடைய நிபந்தனையற்ற அன்பிற்கு நீங்கள் ஒப்புக் கொடுத்து, அவருடைய பரிசுத்த ஆவியை தரும்படி அவரிடம் கேட்டால் மட்டுமே அது கிடைக்கும். உங்கள் இருதயத்திலிருந்து நீங்கள் அவரை நேசிக்க வேண்டும் என்ற ஒரே முன்நிபந்தனையோடு அவர் இதை இலவசமாகக் கொடுக்கக் காத்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லாவற்றிலும் அவரைச் சார்ந்து இருங்கள், அவர் பரிசுத்த ஆவியின் மூலம் உங்களுக்கு ஆவிக்குரிய ஞானத்தைத் தருவார்.



Encouraged. Thank you. very well written.