பயமா? விசுவாசமா?

நாம் ஏதாவது ஒன்றை விரும்பும்போது, வழக்கமாக தேவனிடம் திரும்பி, அதற்காக ஜெபித்து, அவரிடமிருந்து ஒரு வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொள்கிறோம். அது வேலையாக இருக்கலாம், நமக்குத் தேவையான வீடாக இருக்கலாம், நமது குழந்தையின் கல்லூரி சேர்க்கையாக இருக்கலாம், ஊழியத்திற்கான புதிய வாசலாக இருக்கலாம், அல்லது நமது குடும்பத்தில் உள்ள ஒருவரின் இரட்சிப்பாக இருக்கலாம். பின்னர், தேவன் செயல்படுகிறதற்கான முதல் அறிகுறிகளைக் காண்கிறோம்.
சிறிது காலத்திற்குப் பிறகு, தேவன் வாக்களித்ததற்கு அல்லது நாம் எதிர்பார்த்ததற்கு நேர்மாறான காரியங்களைப் பார்க்கத் தொடங்குகிறோம். திருமணம் ஒரு போராட்டத்தைச் சந்திக்கிறது. அந்த வேலை நாம் எதிர்பார்த்ததை விட அதிகமான சவால்களைக் கொண்டுவருகிறது. வீட்டை வாங்குவது ஒரு போராட்டமாக மாறுகிறது. மெல்ல மெல்ல, தேவன் நமக்குக் காட்டிய காரியம் மிகவும் பெரிதாகவும், ஆபத்தானதாகவும், வெகு தொலைவிலிருப்பதாகவும் தோன்றத் தொடங்குகிறது.
ஆகவே, நாம் பின்வாங்கி நம் சொந்த பலத்தை நம்பத் தொடங்குகிறோம். கவலையும் பயமும் நம்மை ஆட்கொள்கின்றன. நாம் வெற்றி பெறுவோமா இல்லையா என்ற பயம் மீண்டும் மீண்டும் எழுகிறது. அந்தச் சோதனையைக் கடந்து செல்வதற்காக நாம் நமது சொந்த பலத்தின் மீது சாய்ந்து, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் ஆலோசனை நாடுகிறோம். பயமும் கவலையும் நம்மை விட்டு ஒருபோதும் விலகுவதில்லை. அது ஒரு சவாலிலிருந்து அடுத்த சவாலுக்குச் சுழன்று சென்று, இறுதியில் நம்மை முடக்கிப் போடுகிறது.
நாம் அந்த வாக்குத்தத்தத்தை இழந்ததற்கு, எதிரி பலமாக இருந்தது காரணம் அல்ல; மாறாக, தேவனின் வார்த்தையை விட பயத்தின் சத்தம் உரக்க ஒலித்ததும், அதை நாம் கேட்டதுமே காரணம். நமக்கே தெரியாமல், நம் வாக்குத்தத்தத்தின் திறவுகோல்களை நாம் எதிரியிடமே திரும்பக் கொடுத்துவிட்டோம்.
கானான் தேசத்தின் எல்லையில் இஸ்ரவேலர்களுக்கு நடந்ததும் இதுவேதான். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைக் கண்டார்கள். அதன் கனிகளைத் தங்கள் கரங்களில் ஏந்தினார்கள். இருப்பினும், அவர்கள் அதைவிட்டு விலகிச் சென்றார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தேவன் தங்களுக்கு அளித்த வாக்குத்தத்தத்தை இழந்தனர்; ஏனெனில், பயம் தேவனுக்கு எதிரான நம்பிக்கையின்மைக்கு வழிவகுத்தது. எண்ணாகமம் 13, 14 ஆம் அதிகாரங்கள் இன்றைக்கும் நம்மிடம் பயமா? அல்லது விசுவாசமா? என்ற அதே கேள்வியை வைக்கின்றன.
"நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும்" — வாக்குத்தத்தம் முதலில் வந்தது
[எண்ணாகமம் 13:1-2] கர்த்தர் மோசேயை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார்.
தேவன், "உன்னால் சமாளிக்க முடிந்தால் நான் தருவேன்" என்று சொல்லவில்லை; "நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும்" என்றே சொன்னார். அவர்கள் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு முன்பே அந்தத் தேசம் ஒரு பரிசாகக் கொடுக்கப்பட்டிருந்தது.
தேவன் ஒரு வாக்குத்தத்தத்தைச் சொன்னால், அது நிறைவேறிவிட்டதற்குச் சமம்.
ஆனால், அதைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பு தேவன் அவர்களுக்கு ஒரு சோதனையைக் கொடுத்தார். தேசத்தை உளவு பார்த்து வருவதற்கு ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு தலைவனை அனுப்புமாறு அவர் கேட்டார்.
அந்த உளவு பார்த்தல் தேசத்தை எடுத்துக்கொள்வதா, வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதற்காக அல்ல; மாறாக, அதைப் பெற்றுக்கொள்ள அவர்களைத் தயார்படுத்துவதற்காகவே இருந்தது.
தேவன் ஏற்கனவே அவர்களுக்கு முன்பாகச் சென்றிருந்தார். அது கர்த்தர் என்பதை மோசே பிற்காலத்தில் அவர்களுக்கு நினைவூட்டினார். [உபாகமம் 1:33] இரவில் அக்கினியிலும் பகலில் மேகத்திலும் உங்களுக்குமுன் சென்றாரே. இப்படியிருந்தும், இந்தக் காரியத்தில் நீங்கள் அவரை விசுவாசியாமற்போனீர்கள்.
கற்க வேண்டிய பாடம்
தேவனின் வாக்குத்தத்தம் என்றால், அது நிறைவேறிவிட்டது என்று அர்த்தம். [எண்ணாகமம் 23:19] பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?
நாம் வாக்குத்ததத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பு அவர் நமக்கு பல சோதனைகளைக் கொடுக்கிறார்; இந்தச் சோதனைகள் தாமதப்படுத்துவதற்கோ அல்லது தகுதியற்றவராக்குவதற்கோ அல்ல, மாறாக நம்மைத் தகுதிப்படுத்துவதற்கும் அதைப் பெற்றுக்கொள்ளப் பழக்குவதற்கும் ஆகும்.
தீர்மானிக்க அல்ல, உளவு பார்க்க அனுப்பப்பட்டனர்
புறப்படுவதற்கு முன்பு மோசே அந்தப் பன்னிரண்டு தலைவர்களுக்கும் தெளிவான அறிவுறுத்தல்களைக் கொடுத்தார்.
[எண்ணாகமம் 13:17-20] அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி, தேசம் எப்படிப்பட்டதென்றும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும், அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும், நிலம் எப்படிப்பட்டது அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும்; அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாயிருந்தது.
இது ஏதோ உல்லாசப் பயணம் அல்ல; தேவன் ஏற்கனவே தங்களுக்குக் கொடுத்துவிட்ட, எதிரிகள் வசமிருந்த தேசத்திற்குள் செய்யப்பட்ட ஒரு உளவுப் பணியாகும். மேலும், அவசரமாகப் பார்த்துவிட்டு வருவதாக இல்லாமல், அதைச் சரியாக உற்றுநோக்குவதற்கு தேவன் அவர்களுக்கு நாற்பது நாட்களைக் கொடுத்தார் (13:25).
அவர்கள் மூன்று காரியங்களைக் கவனிக்க வேண்டியிருந்தது: ஜனங்கள் (பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ), தேசம் மற்றும் அதன் பட்டணங்கள் (நல்லதோ கெட்டதோ, திறந்தவெளியா அல்லது மதில் சூழ்ந்ததா)) மற்றும் அதன் கனி (சிலவற்றைத் திரும்பக் கொண்டுவர வேண்டும்).
நமக்கும் இதுவே பொருந்தும். பல நேரங்களில் தேவன் நமக்கு வாக்குத்தத்தத்தைக் காட்டுகிறார், ஆனால் நமக்கும் அந்த வாக்குத்தத்தத்திற்கும் இடையே தடைகள் நிற்கின்றன: மனிதர்களிடம், நம்மைச் சுற்றியுள்ள சூழலில் மற்றும் நமது சொந்தக் கனிகளில். அவர் வாக்குத்தத்தத்தை நம்மிடம் ஒப்படைப்பதற்கு முன்பாக, நாம் அந்தத் தடைகளைத் தெளிவாகப் பார்த்து, ஜெபத்தின் மூலம் அவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
மனிதர்கள் — உங்களுக்கும் வாக்குத்தத்தத்திற்கும் இடையே நிற்பவர்கள்
அலுவலகத்தில், உங்கள் உயர்வைத் தடுக்கும் ஒரு மேலாளராகவோ, உங்கள் வேலையைக் கேலி செய்யும் அல்லது உங்களைத் தவறான பாதையில் நடத்தும் சக ஊழியர்களாகவோ இருக்கலாம். வீட்டில், கிறிஸ்துவில் உங்களுக்கிருக்கும் விசுவாசத்தை உற்சாகமிழக்கச் செய்யும் ஒரு குடும்ப உறுப்பினராக இருக்கலாம். ஊழியத்தில், உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களாக இருக்கலாம். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களையே எதிரியானவன் ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறான். உண்மையில் மனிதர்கள் பிரச்சனை இல்லை; அவர்களுக்குப் பின்னால் இருக்கும் எதிரியே உண்மையான பிரச்சனை. தேவன் தம்முடைய விசுவாசிகளைத் தம்முடைய கருவிகளாகப் பயன்படுத்துவது போல, சாத்தான் தேவனின் மக்களுக்கு எதிராக எழும்புவதற்கும், அவருடைய திட்டத்தை எதிர்ப்பதற்கும், அவர் தீர்மானித்த காரியங்களுக்கு எதிராகச் செயல்படுவதற்கும் மனிதர்களைப் பயன்படுத்துகிறான்.
மோசேயிடமிருந்து கற்றுக்கொண்டு அவருடைய கேள்விகளைக் கேளுங்கள்: அவர்கள் பலமுள்ளவர்களா? அல்லது பலவீனமானவர்களா? அவை சிலரின் குரல்களா அல்லது அது முழு அமைப்பா? பிறகு, அவர்களின் பெயர்களைச் சொல்லி ஜெபியுங்கள், ஏனென்றால் தேவனால் எந்தவொரு இருதயத்தையும் திருப்ப முடியும். [நீதிமொழிகள் 21:1] ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.
தேசமும் அதன் பட்டணங்களும் — வாக்குத்தத்தத்தைச் சூழ்ந்திருப்பவை
தேசம் என்பது நமது சூழல்: பணியிட கலாச்சாரம், நமது நிதிநிலைமை, நமது சுற்றுப்புறம், மற்றும் நமது குடும்பத்தில் உள்ள பாரம்பரியங்கள்.
மதில்கள் சூழ்ந்த நகரங்கள் என்பது பல ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் பழக்கவழக்கங்கள்: ஒருபோதும் முடியாதது போல் தோன்றும் கடன், தலைமுறை தலைமுறையாகத் தொடரும் ஒரு பழக்கம், அல்லது அலுவலகத்தில் "எல்லாரும் செய்வதுதானே" என்று சமரசம் செய்யும் கலாச்சாரம். இவற்றில் சில மதில்கள் வானத்தை எட்டுவது போல் தோற்றமளிக்கும்.
அந்த மதில்கள் தகர்க்கப்பட்டால் ஒழிய, நமக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை.
கனி — தேவன் நம்மிடம் வளர வேண்டும் என்று எதிர்பார்க்கிறவை
தேவன் ஒரு வாக்குத்தத்தத்தை வழங்குவதற்கு முன்பாக, நம்மிடம் சில கனிகளை எதிர்பார்க்கிறார்: விசுவாசம், கீழ்ப்படிதல், நற்குணம், மற்றும் நம்மிடம் ஏற்கனவே இருப்பவற்றில் உண்மைத்தன்மை ஆகியவையே அவை. அந்தக் கனிகள் இல்லாவிட்டால், இன்னும் பெரிய பொறுப்புகளை அவர் எப்படி நம்மை நம்பித் தருவார்?
ஒரு பதவி உயர்வைத் தாங்கிச் செல்ல நேர்மை தேவை. ஒரு ஊழியத்திற்குத் தாழ்மை தேவை. நம் குடும்பத்தில் உள்ள ஒருவரின் இரட்சிப்பிற்கு, முதலில் வீட்டில் நம்முடைய சாட்சியமும், முன்மாதிரியான வாழ்க்கையும் தேவைப்படுகின்றன. [லூக்கா 16:10] கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான்; கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
கற்க வேண்டிய பாடம்
இம்மூன்றையும் நாம் எவ்வாறு பார்க்கிறோம்? ஜெபத்தின் மூலமாக மட்டுமே நாம் இந்த மூன்று அரண்களையும் தகர்க்க முடியும்.
தேவன் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். வாக்குத்தத்தமே முக்கிய திறவுகோல்; தேவன் யார் என்பதை நினைவில் வையுங்கள் [எண்ணாகமம் 23:19].
அதற்கு எதிராக நிற்கும் அரண்களை அடையாளம் காணுங்கள்: மனிதர்கள், தேசம் மற்றும் அதன் பட்டணங்கள், மற்றும் உங்கள் சொந்த உள்ளான வாழ்க்கையில் இன்னும் விடுபட்டிருக்கும் கனிகள்.
ஒவ்வொன்றையும் தேவனின் பாதத்தில் வைத்து, அவற்றை உடைக்கும்படி அவரிடம் கேளுங்கள். முதலாவது கனியிலிருந்து தொடங்குங்கள். அவருக்கு முன்பாக நமது சுயம் உடைக்கப்படும்போது, மற்ற மதில்கள் மிகவும் எளிதாக விழுந்துவிடும், ஏனெனில் தேவன் நீதிக்காகப் போராடுகிறார். நமக்குள் இருக்கும் நீதியைத் தடுக்கும் காரியங்களை நாம் சரிசெய்யும்போது, நாம் இனி நம் சொந்த பலத்தில் போராடுவதில்லை. தேவனின் சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக்கொண்டு போராடுகிறோம், அப்போது மதில்கள் உடைகின்றன.
அவருடைய உதவியின்றி, இந்த அரண்களை நம்மால் சொந்தமாக உடைக்க முடியாது. [2 கொரிந்தியர் 10:4] எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.
ஒரே உண்மை, இருவேறு அறிக்கைகள்
நாற்பது நாட்களுக்குப் பிறகு, அந்தப் பன்னிருவரும் திரும்பி வந்து, மோசேயின் முன்பாகவும் ஒட்டுமொத்த சமூகத்தின் முன்பாகவும் நின்றார்கள்.
[எண்ணாகமம் 13:27-33] அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய் வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி. ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம். அமலேக்கியர் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள்; ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் மலைநாட்டில் குடியிருக்கிறார்கள்; கானானியர் கடல் அருகேயும் யோர்தானண்டையிலும் குடியிருக்கிறார்கள் என்றார்கள். அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான். அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ: நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள். நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்து வந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.
அவர்கள் மோசே கேட்ட அதே மூன்று காரியங்களையும் பார்த்தார்கள், ஆனால் பயம் ஒவ்வொன்றையும் புரட்டிப் போட்டது.
மனிதர்கள்
அவர்கள் கண்டது: பலம்பொருந்திய மனிதர்கள் மற்றும் ஏனாக்கின் வம்சத்தினர். அது உண்மை.
பயம் சேர்த்தது: “அவர்கள் நம்மைப் பார்க்கிலும் பலவான்கள்... நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப் போல் இருந்தோம்…”. அவர்கள் சத்துருவைப் பார்வையிட அனுப்பப்பட்டார்கள், ஆனால் அவர்கள் திரும்பி வந்தபோது தங்களையே அளவிட்டுக் கொண்டிருந்தனர்.
தேசமும் அதன் பட்டணங்களும்
அவர்கள் கண்டது: பாலும் தேனும் ஓடுகிற தேசம் மற்றும் பெரிய மதில்களால் சூழப்பட்ட பட்டணங்கள். இவை இரண்டும் உண்மைகள்.
பயம் சேர்த்தது: "…அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்...". அது உண்மையல்ல. ஒரே தேசம் பாலும் தேனும் ஓடுகிற தேசமாகவும், அதே நேரத்தில் தன் ஜனங்களைப் பட்சிக்கிற தேசமாகவும் இருக்க முடியாது.
கனிகள்
அவர்கள் கண்டது: இருவர் தடியில் சுமந்து வரும் அளவுக்கு மிகப்பெரிய ஒரு திராட்சைக் குலை (13:23). அதை யாராலும் மறுக்க முடியாது. அந்த கனி அவர்களின் பயத்திற்கு எதிராக தேவன் தந்த சான்றாக இருந்தது.
பயம் செய்தது: அவர்கள் கனியை எடுத்துக்கொண்டு வந்தார்கள், ஆனால் அது இல்லவே இல்லை என்பது போலப் பேசினார்கள்.
அவர்கள் தங்களை அந்த அரக்கர்களோடு அளவிட்டுப் பார்த்தார்களே தவிர, அந்த அரக்கர்களை தேவனோடு அளவிட்டுப் பார்க்கவே இல்லை.
[ஏசாயா 40:22] அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
எதிரி தங்களை வெட்டுக்கிளிகளாகப் பார்க்கிறான் என்றும் அவர்கள் தவறாக நினைத்துக்கொண்டார்கள். ஆனால், நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, கானான் தேசம் உண்மையில் என்ன நினைத்துக்கொண்டிருந்தது என்பதை ராகாப் அடுத்த தலைமுறைக்குத் தெரிவித்தாள்.
[யோசுவா 2:9] கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்களென்றும் அறிவேன்.
இஸ்ரவேலர்கள் எதிரியைக் கண்டு பயந்து உருகிக் கொண்டிருந்த அதேவேளையில், எதிரியோ அவர்களைக் கண்டு பயந்து உருகிக் கொண்டிருந்தான்.
இரண்டு அறிக்கைகளின் ஒப்பீடு இதோ:
பத்து பேர் | இருவர் (யோசுவா மற்றும் காலேப்) |
இராட்சதரைக் கண்டனர் | வாக்குத்தத்தத்தைக் கண்டனர் |
அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது | நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் |
அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம் | அவர்கள் நமக்கு இரையாவார்கள் |
நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம் | கர்த்தர் நம்மோடே இருக்கிறார் |
துர்ச்செய்தியைப் பரப்பினர் | தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு கெஞ்சினர்.
|
வாதையால் செத்தார்கள் (14:37) | தேசத்திற்குள் நுழைந்தனர்; காலேப் எபிரோனைக் கைப்பற்றினார். |
கற்க வேண்டிய பாடம்
மனிதர்களைப் பார்க்கும்போது: நமக்கு எதிராக நிற்கும் மேலாளர், உறவினர்கள் அல்லது பிற மனிதர்களைப் பார்த்துவிட்டு, "அவர்கள் மிகவும் பலமுள்ளவர்கள். நான் அவர்களுக்கு எதிராக எப்படி நிற்க முடியும்?" என்று கேட்கிறோம். எதிர்ப்பக்கத்தினர் உண்மையில் பலமுள்ளவர்களாகவே இருக்கலாம். நாம் காண்பது பொய்யல்ல, நமது தேவனும் அதை அறிந்திருக்கிறார். ஆனால் அந்தத் தருணத்தில், "அவர்கள் பலமுள்ளவர்கள் என்பதை நான் காண்கிறேன், ஆனால் நான் எதிர்கொள்ளும் மனிதர்களை விட என் தேவன் பெரியவர்" என்று சொல்கிறோமா? இதையே அவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
கனிகளைப் பார்க்கும்போது: தேவனின் திட்டங்களைத் தடுக்கும் வகையில் நீங்கள் செய்துள்ள சமரசங்களையும் மாற்றங்களையும் கவனியுங்கள்.
தேசத்தைப் பார்க்கும்போது: உங்களிடம் இல்லாதவற்றைப் பார்க்காதீர்கள். தேவனால் என்ன வழங்க முடியும் என்பதைப் பாருங்கள். அவரே பூமியின் ராஜா, சகலமும் அவராலும் அவருக்காகவும் படைக்கப்பட்டது.
உங்களை இராட்சதர்களோடு அளவிடாதீர்கள். இராட்சதனை தேவனோடு அளவிட்டுப் பாருங்கள். எதிரியை முறியடிப்பது அவரது வேலை, ஏனெனில் நமக்குத் தேவையானதை தருவதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் பல நேரங்களில் நாம் அந்தப் பிரச்சனையை நம் சொந்தக் கைகளில் எடுத்துக்கொண்டு, அவர் நமக்காகப் போராட அனுமதிப்பதில்லை.
தேவனோடு நீங்கள் நடக்கும்போது, யோசுவா மற்றும் காலேபின் ஆவி உங்களுள் இருக்கும்படி ஜெபியுங்கள்.
திறவுகோல்களை எதிரியிடம் ஒப்படைத்தல்
எதிரியின் மிகப்பெரிய சொத்து பயம் ஆகும். தேவன் கொடுத்ததை அவனால் பறிக்க முடியாது, எனவே நாம் அதைத் திரும்பத் தந்துவிடும்படி அவன் வேலை செய்கிறான். நமது சரீரக்கண்கள் இராட்சதர்களை மட்டுமே பார்க்கின்றன. வாக்குத்தத்தத்தையோ விசுவாசக் கண்களினால் மட்டுமே காண முடியும். பயம் நம்மை ஆட்கொள்ளும்போது, நாம் அந்தத் திறவுகோலை எதிரியிடமே திருப்பிக் கொடுத்துவிடுகிறோம், தேவன் நமக்காக வைத்திருப்பவற்றின் மீது அவன் ஆட்சி செய்கிறான்.
உளவு பார்த்தவர்கள் கண்ட எதிரிகள், இன்று நாம் எதிர்கொள்ளும் அதே வகையான பயங்கள்தாம்:
ஏனாக்கியர் — "நான் மிகவும் சிறியவன்". அந்த இராட்சதர்கள் பார்ப்பதற்குப் பெரிதாக இருந்தது மட்டுமல்லாமல், உளவு பார்த்தவர்கள் தங்களைப் பற்றியே மிகவும் சிறியவர்களாக உணரச் செய்தனர். இது நமது அடையாளத்தின் மீது எதிரி தொடுக்கும் தாக்குதலாகும்.
அமலேக்கியர் — நுழைவாயிலில் தாக்குதல். அவர்கள் தென்புறமான தேசத்தில் வசித்தனர் (13:29), மோசேயும் அவர்களிடம் அந்தப் பாதையில்தான் செல்லுமாறு கூறியிருந்தார். நாம் தொடங்கும் தருணத்திலேயே பெரும்பாலும் எதிர்ப்பு எழுகிறது: கீழ்ப்படிதலின் முதல் படி, வீட்டில் நடத்தப்படும் முதல் ஜெபக்கூட்டம்.
கானானியர் — நம்மைச் சுற்றியுள்ள அமைப்பு. தேவனின் வழி இங்கு வேலை செய்யாது என்று நமக்குச் சொல்லும் கலாச்சாரம், பாரம்பரியங்கள் மற்றும் "எல்லாரும் செய்வதுதானே" என்ற மனப்பான்மை.
அரணிப்பான பட்டணங்கள் — இயற்கையான வழியில் தீர்வு காண முடியாத தடைகள். கடன், நோய், அல்லது குடும்பத்தில் உள்ள கடினமான ஒரு மனம். பிற்காலத்தில் எரிகோவின் மதில்கள் இராணுவ வியூகத்தால் அல்ல, மாறாக தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்ததினாலேயே வீழ்ந்தன [யோசுவா 6].
[2 தீமோத்தேயு 1:7] தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
கற்க வேண்டிய பாடம்
பயம் என்பது வெறும் உணர்வு அல்ல; அது ஒரு திறவுகோல், அந்தத் திறவுகோலை யார் வைத்திருக்க வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்கிறோம்.
சூழ்நிலையைக் குறித்த கவலை நம் சொந்த பலத்தைச் சார்ந்திருக்க வழிவகுக்கிறது, இதுவே பயத்திற்கு இடமளிக்கிறது. சூழ்நிலையைக் குறித்து எவ்வளவு அதிகமாகக் கவலைப்படுகிறீர்களோ, அவ்வளவாக பயத்தின் திறவுகோலைச் சாத்தானிடம் கொடுக்கிறீர்கள் — கவலையைக் குறித்து மத்தேயு நற்செய்தியில் உள்ள தேவனின் வாக்குத்தத்தத்தைப் பாருங்கள்: [மத்தேயு 6:31-34] ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.
உங்கள் ராட்சதனின் (பிரச்சனையின்) பெயரைச் சொல்லுங்கள், பிறகு உங்கள் தேவனின் பெயரைச் சொல்லுங்கள். [1 யோவான் 4:4] "... ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்".
பயம் நமக்கு எதைக் கொண்டு வரும்?
இஸ்ரவேலர்களின் அனுபவத்திலிருந்து பயம் என்ன கொண்டு வரக்கூடும் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம் – துர்ச்செய்தி பத்து மனிதர்களுடன் தங்கவில்லை. ஒரே இரவில் முகாம் முழுவதும் பரவியது.
[எண்ணாகமம் 14:1-4] அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம். நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டு வந்தது என்ன? எகிப்துக்குத் திரும்பிப் போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள். பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
அவர்கள் அழுதார்கள்: யாரோ இறந்துவிட்டது போல, இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள்.
தேவனுக்கு எதிரான முறுமுறுக்கும் ஆவி: அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள், ஆனால் உண்மையில் தங்களுடைய கூடாரங்களில் நின்றுகொண்டு தேவனைத்தான் குற்றம் சுமத்தினார்கள்: "...கர்த்தர் நம்மை வெறுத்து..." [உபாகமம் 1:27].
தேவன் செய்தவைகளை அவர்கள் மறந்தார்கள்: எகிப்தின் வாதைகள், செங்கடல் பிளந்தது, மன்னா, கன்மலையிலிருந்து வந்த தண்ணீர், பகலில் மேகஸ்தம்பம், இரவில் அக்கினிஸ்தம்பம் ஆகிய அனைத்தையும் அவர்கள் கண்ணாரக் கண்டும், எல்லாவற்றையும் முற்றிலும் மறந்துபோனார்கள்.
அவர்கள் எகிப்தை திரும்பிப் பார்த்தார்கள்: வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை விட எகிப்தே மேல் என்றும், அங்குள்ள அடிமைத்தனமே பாதுகாப்பானது என்றும் கூறினார்கள்.
அவர்கள் தேவனுடைய தலைவர்களை நிராகரித்தார்கள்: தங்களை மீண்டும் எகிப்திற்கே அழைத்துச் செல்ல ஒரு புதிய தலைவனை ஏற்படுத்த விரும்பினார்கள்; மேலும், தேவனுக்காகப் பேசிய யோசுவாவையும் காலேபையும் கல்லெறியவேண்டும் என்று சொன்னார்கள் [எண்ணாகமம் 14:10].
தேவன் இதைத் தமது சொந்த கண்களின் வழியே எப்படிப் பார்க்கிறார் என்று பாருங்கள். இங்கே, உண்மையில் என்ன நடக்கிறது என்பதைத் தேவன் பெயரிட்டுக் காட்டினார். மக்கள் நம்மை இழிவாக நடத்தும்போது நாம் எப்படி மனவேதனை அடைகிறோமோ, அதேபோல நாம் இத்தகைய ஆவிகளை நமக்குள் சுமந்து கொண்டிருக்கும்போது, தேவனும் நம்மைக் குறித்து அதேபோலத்தான் உணர்கிறார். [எண்ணாகமம் 14:11] கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?
பயம் அவிசுவாசமாக வளர்ந்தது, அவிசுவாசம் கலகமாகவும், பின்னர் உண்மையற்றத்தனம் என்ற பாவமாகவும் மாறியது. நமக்குள்ளும் இதேபோன்ற கேள்விகள் உள்ளன: "இதனால் நான் இன்னும் எவ்வளவு காலம் துன்பப்பட வேண்டும்?", "தேவன் என் ஜெபத்தைக் கேட்கிறாரா?", "இத்தகைய போராட்டங்களைச் சந்திப்பதற்கு நான் என்ன செய்தேன்?”. நாம் செல்லும் இடமெல்லாம் முறுமுறுப்புதான் இருக்கிறது, அது நமக்கான தேவனுடைய திட்டத்தைத் தோற்கடிக்கும் விதமாக ஒரு கெட்ட வாசனையைப் பரப்புகிறது.
கற்க வேண்டிய பாடம்
பயம் சாத்தானுக்கு நம் வாழ்க்கையில் புதிய பிரச்சனைகளைக் கொண்டுவருவதற்கும், நம்மை தேவனை விட்டு தூர விலக்குவதற்கும் கதவைத் திறக்கிறது: சாத்தானுக்கு எதிர்த்து நில்லுங்கள், அவன் ஓடிப்போவான், அவன் ஒரு கோழை என்று தேவன் கூறுகிறார் — [1 பேதுரு 5:9] விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.
பயம் தேவனுக்கு எதிரான முறுமுறுக்கும் ஆவியைக் கொண்டுவருகிறது: முறுமுறுத்தல், அவரை நிராகரித்தல், நம்மையே சார்ந்து அவரைக் குற்றம் சாட்டுதல். இவை சாத்தானின் சொந்த குணாதிசயங்கள், மேலும் தன்னுடைய குணத்தை நமக்குள் உருவாக்க அவன் செயல்படுகிறான்.
இப்போது யுத்தம் பயத்திற்கு எதிரானது மட்டும் அல்ல: தேவனுடைய திட்டங்களை நாம் சுதந்தரித்துக் கொள்வதற்கு முன்பாக, நாம் இந்த நான்கு அல்லது ஐந்து ஆவிகளையும் கூட வெல்ல வேண்டும்.
பயம் மற்றவர்களுக்கும் தீப்போல பரவி தேவனுடைய நாமத்தை கனவீனப்படுத்துகிறது: நம்முடைய நெருங்கிய வட்டத்தில் உள்ள மனிதர்கள் இதைப் பார்த்து, "நீ தேவனிடம் சென்றாய், ஆனால் உனக்குக் கிடைத்தது இதுதானா?" என்று பரியாசம் செய்கிறார்கள். ஆனால் தேவன் கொடுக்கவில்லை என்று அல்ல; நம்முடைய சொந்த விசுவாசமின்மையால் அதை இழந்தோம்.
பயத்திலிருந்து உண்மையற்றத்தனம் வரை மற்றும் அதன் விளைவுகள்
ஓரேபிலிருந்து காதேஸ்பர்னேயாவிற்குச் செல்லும் பயணம் பதினொரு நாட்கள் மட்டுமே பிடித்தது [உபாகமம் 1:2]. ஆனால், அவர்களுடைய அவநம்பிக்கையின் காரணமாக, அந்தத் தேசத்திற்குள் பிரவேசிக்கும் பயணம் நாற்பது ஆண்டுகள் நீடித்தது.
[எண்ணாகமம் 14:33-34] அவைகள் வனாந்தரத்திலே விழுந்து தீருமட்டும், உங்கள் பிள்ளைகள் நாற்பது வருஷம் வனாந்தரத்திலே திரிந்து, நீங்கள் சோரம்போன பாதகத்தைச் சுமப்பார்கள். நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்.
அவர்களை வனாந்தரத்தில் வைப்பது ஒருபோதும் தேவனுடைய திட்டமாக இருக்கவில்லை. அவருடைய திட்டம் "நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும்" என்பதாகவே இருந்தது. அந்த நாற்பது ஆண்டுகள், அவர்களுடைய நம்பிக்கையின்மையினால் எழுந்த தேவனுடைய கோபத்தினால் வந்ததாகும். [எண்ணாகமம் 32:13] அப்படியே கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின் மேல் மூண்டது; கர்த்தருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்த அந்தச் சந்ததியெல்லாம் நிர்மூலமாகுமட்டும் அவர்களை வனாந்தரத்திலே நாற்பது வருஷம் அலையப்பண்ணினார்.
அவர்கள் என்ன பேசினார்களோ அதைப் பெற்றுக் கொண்டார்கள்: “இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்” என்று அவர்கள் சொல்லியிருந்தார்கள். அதற்கு தேவன் பதிலளித்தார்: [எண்ணாகமம் 14:28] நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்ன பிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.
துர்ச்செய்தியைப் பரப்பிய அந்தப் பத்து பேரும் வாதையினால் செத்துப்போனார்கள் (14:37). மறுநாள் காலையில் மக்கள் தேவனுடைய உதவி இல்லாமல் மலைக்கு ஏறிச் செல்ல முயன்றார்கள்; அப்போது அவர்கள் எதைக் கண்டு பயந்தார்களோ அதே அமலேக்கியரும் கானானியரும் அவர்களைத் தோற்கடித்துப் பின்வாங்கச் செய்தனர் (14:44-45).
புதிய ஏற்பாடு இதற்கான இறுதியான தீர்ப்பைத் தெளிவாகக் கூறுகிறது: [எபிரேயர் 3:19] ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற் போனார்களென்று பார்க்கிறோம்.
இது நம்முடைய வாழ்க்கையிலும் நடக்கும் ஒன்றுதான். தவறவிட்ட பல ஆசீர்வாதங்களுக்காக நாம் தேவனைக் குறை கூறுகிறோம். "தேவன் அந்த வாசலைத் திறக்கவில்லை," "ஒருவேளை இது அவருடைய சித்தமாக இருக்காது" என்று கூறுகிறோம். ஆனால் பல நேரங்களில் வாசல் திறந்தே இருந்தது, நாம்தான் அதற்குள் நடந்து செல்லவில்லை. வாக்குத்தத்தம் தவறவில்லை, நம்முடைய விசுவாசம்தான் தோற்றுப்போனது. பயத்திலிருந்து பிறக்கும் இந்த நம்பிக்கையற்றத் தன்மையே நாம் பல வாக்குத்தத்தங்களை இழந்துபோவதற்குக் காரணமாகிறது.
இருப்பினும், தேவனுடைய வாக்குத்தத்தம் மரித்துப்போகவில்லை. அவர்கள் சாக்காகப் பயன்படுத்தியப் பிள்ளைகளே அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக் கொண்டார்கள்: [எண்ணாகமம் 14:31] கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளையோ நான் அதில் பிரவேசிக்கச் செய்வேன்; நீங்கள் அசட்டைப்பண்ணின தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள்.
கற்க வேண்டிய பாடம்
எல்லா தாமதங்களும் தேவனுடைய சித்தம் அல்ல. சில கடினமான காலங்கள், நம்முடைய சொந்த நம்பிக்கையின்மையின் விளைவுகளே ஆகும்.
தவறவிட்ட ஒரு ஆசீர்வாதத்திற்காக தேவனைக் குறை கூறுவதற்கு முன்பாக, உங்களை உள்ளே நோக்கிப் பார்த்து உங்கள் மனதில் நீங்கள் இடமளித்த அனைத்துப் பயங்களையும், பிற எதிர்மறை எண்ணங்களையும் நீக்கிவிடுங்கள்.
தேவனின் வாக்குத்தத்தம் ஒருபோதும் மரித்துப்போவதில்லை. அதை விசுவாசிக்கும் ஒருவருக்காக அது காத்திருக்கிறது.
மாறுபட்ட ஆவி — விசுவாசப் போர்வீரர்கள் (காலேபும் யோசுவாவும்)
அழுது கொண்டிருந்த கூட்டத்தின் மத்தியில், இரண்டு மனிதர்கள் எழுந்து நின்றனர்.
[எண்ணாகமம் 14:6-9] தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்த தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்த தேசத்தை நமக்குக் கொடுப்பார். கர்த்தருக்கு விரோதமாக மாத்திரம் கலகம்பண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்.
பத்து பேர் இராட்சதர்களைக் கண்டு வாக்குத்தத்தத்தை மறந்துவிட்டார்கள். அந்த இருவரோ வாக்குத்தத்தத்தைக் கண்டு, இராட்சதர்களைக் கடந்து சென்றனர்.
அந்தப் பத்து பேர், "அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்" என்றார்கள். யோசுவாவும் காலேபும் “அவர்கள் நமக்கு இரையாவார்கள்" என்று அதை மாற்றிச் சொன்னார்கள். எதிரி என்பவன் பயத்திற்கு உணவல்ல; அவன் நம்பிக்கைக்கு அப்பம் ஆவான்.
அவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டார்கள். அவர்கள் வெறும் சொற்பொழிவு ஆற்றவில்லை; மாறாக, மக்களின் அவிசுவாசத்தைக் கண்டு துக்கப்பட்டார்கள்.
தேவன் காலேபிடம் இருந்த வித்தியாசமான தன்மையைக் கண்டார்.
[எண்ணாகமம் 14:24] என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றி வந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.
நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, காலேப் 85 வயதில், ஒற்றர்கள் இராட்சதர்களைக் கண்ட மலைநாட்டைக் கேட்டார். [யோசுவா 14:12] ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.
எபிரோனில் உளவு பார்த்தவர்கள் கண்ட அதே சேசாய், அகீமான், தல்மாய் ஆகிய மூன்று இராட்சதர்களையும் அவர் துரத்தி அடித்தார் [யோசுவா 15:14; எண்ணாகமம் 13:22]. பத்துப் பேரை வெட்டுக்கிளிகளைப் போல உணர வைத்த அந்த இராட்சதர்கள், தேவனை விசுவாசித்த ஒரு மனிதனுக்கு முன்பாக வீழ்ந்தார்கள்.
வனாந்தரத்தில் பிறந்த பிள்ளைகளாகிய அடுத்த தலைமுறையினர், யோசுவாவுடன் அந்தத் தேசத்திற்குள் பிரவேசித்தார்கள். அவர்கள் தங்கள் பெற்றோர் இருக்க மறுத்த விசுவாசப் போர்வீரர்களாக மாறினார்கள்.
கற்க வேண்டிய பாடம்
விசுவாசம் இராட்சதர்களை இல்லை என்று மறுப்பதில்லை; மாறாக, தேவனைப் பெரியவராகப் பார்க்கிறது.
வயதும் தாமதமும் ஒருபோதும் வாக்குத்தத்தத்தை ரத்து செய்வதில்லை; காலேப் நாற்பத்தைந்து ஆண்டுகள் காத்திருந்த பின்னரும், அதே மலையைத் தனக்குத் தருமாறு கேட்டார்.
வாக்குத்தத்தங்களை ஜெபத்தின் மூலம் திரும்பப் பெற்றுக்கொள்ளுதல்
நாம் ஒருபோதும் நெகேவ் பாலைவனத்தின் வழியாக நடப்பதோ அல்லது யோர்தான் நதியைக் கடப்பதோ இல்லையென்றாலும், தேவன் இன்றும் தம் மக்களுக்கு நான் தருகிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறார்: நமது குடும்பங்கள், பணித்தளம், சுகம், ஊழியம் மற்றும் நமது தேசத்திற்கான வாக்குத்தத்தங்கள் அவை. யோசுவாவும் காலேபும் செய்தது போல நாமும் விசுவாசத்தினாலும் ஜெபத்தினாலும் அவற்றைச் சுதந்தரித்துக் கொள்வோம். ஜெபத்தில் இந்தப் பயணத்தை மீண்டும் கடந்து செல்லுங்கள்:
தேவன் சொன்னதைப் பற்றிக்கொள்ளுங்கள்: அவர் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை எழுதி வையுங்கள். தேவன் தம் மனதை மாற்றுபவர் அல்ல, அவருடைய "நான் … கொடுக்கும்" என்ற வாக்கு இன்றும் நிலைத்திருக்கிறது.
வல்லமைமிக்க எதிரிகளை எதிர்கொள்ள முழங்கால்படியிடுங்கள்: உங்கள் எதிரிகள், உங்கள் முன் உள்ள மதில்கள் மற்றும் உங்களிடம் இன்னும் இல்லாமல் இருக்கும் கனிகளைப் பெயரிட்டுச் சொல்லுங்கள். முதலில் கனிகளிலிருந்து தொடங்குங்கள்; தேவன் முதலாவது உங்களுடன் கிரியை செய்ய இடங்கொடுங்கள்.
உண்மைகளை விசுவாசத்தோடு வாசியுங்கள்: இராட்சதர்களைப் பாருங்கள், ஆனால் அவர்களை தேவனுடைய வல்லமையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் ஏற்கனவே பெற்ற கனிகளையும் அற்புதங்களையும் நினைவுகூருங்கள்: உங்களின் சொந்தச் செங்கடலையும், சொந்த மன்னாவையும் யோசித்துப்பாருங்கள்.
பயத்திடமிருந்து திறவுகோலைத் திரும்பப் பெறுங்கள்: கவலை அதிகரிக்கும் போது, அதை எதிரியிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக தேவனிடம் கொடுங்கள். வீட்டில், வேலை செய்யும் இடத்தில் மற்றும் ஜெபத்தில் பயத்தைப் பேசாமல் விசுவாசத்தைப் பேசுங்கள். நாம் பேசுவதை தேவன் கேட்கிறார் [எண்ணாகமம் 14:28].
பயம் கொண்டுவரும் காரியங்களுக்குக் கதவை அடையுங்கள்: முறுமுறுப்பது, எகிப்தைத் திரும்பிப் பார்ப்பது, தேவனைக் குற்றப்படுத்துவது போன்ற தவறுகளை அறிக்கையிட்டு, அந்த ஆவிகளுக்கு மீண்டும் இடம் கொடாதிருங்கள்.
ஒரு வேறுபட்ட ஆவியைக் கேளுங்கள்: யோசுவா மற்றும் காலேபின் ஆவிக்காக ஜெபியுங்கள்: கர்த்தரை முழு இருதயத்தோடு பின்பற்றுவதற்கும், அவருடைய பிரசன்னத்திற்கு முன்னேயும் செல்லாமல் பின்னேயும் தங்கிவிடாமல் பிரசன்னத்தோடு இணைந்து நடப்பதற்கு ஜெபியுங்கள்.
நாம் ஜெபிக்கும்போது, ஏற்கெனவே பெற்றுக்கொண்டவர்களாகவே ஜெபிக்கிறோம்.
[மாற்கு 11:24] ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.
வேலை, வீடு, குடும்ப உறுப்பினரின் இரட்சிப்பு, நாம் கண்டும் கூட நழுவவிட்ட வாசல்: ஒருவேளை தேவன் அதை ஒருபோதும் அடைத்திருக்க மாட்டார். ஒருவேளை, நாமே அதன் சாவியைத் திரும்பக் கொடுத்துவிட்டிருக்கலாம். இன்று ஜெபத்தில் அதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான நாள்.
[2 கொரிந்தியர் 1:20] எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.
பயம் இராட்சதர்களைப் பார்த்துவிட்டு, திறவுகோல்களைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறது. விசுவாசம் வாக்குறுதியைப் பார்த்து தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்கிறது.



Comments