கிறிஸ்துவில் உடன் வேலையாட்கள்
- Kirupakaran
- Aug 24
- 7 min read

அலுவலகத்தில் வேலை செய்கிற பெரும்பாலானவர்களுக்கு சக ஊழியர்கள் இருப்பார்கள். தங்களுக்கென்று கொடுக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதில் அவர்கள் அனைவரும் ஒரு பொதுவான குறிக்கோளை பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருந்து, நிறுவனத்தின் வெற்றிக்கான இலக்கை எட்ட உதவுகிறார்கள். உதாரணமாக, ஒரு கார் மெக்கானிக் கடையில், ஒருவர் காரை பழுது பார்ப்பார், மற்றொருவர் அதை சுத்தம் செய்வார், இன்னொருவர் வாடிக்கையாளரை வரவேற்பார். இப்படியாக பழுதான காருக்காக வேலை செய்பவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
கிறிஸ்துவில் உடன்வேலையாட்கள்
நமது அன்றாட வேலைகளில் சக ஊழியர்கள் இருப்பது போல, நமது ஆவிக்குரிய வாழ்க்கையிலும் உடன் வேலையாட்கள் உண்டு. நாம் (அனைத்து விசுவாசிகளும்) கிறிஸ்துவில் உடன்வேலையாட்களாயிருக்கிறோம்.
நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள். 1 கொரிந்தியர் 3:9
பெரும்பாலும், தேவனின் உடன் வேலையாட்கள் என்றால் போதகர்கள், மிஷனரிகள் அல்லது முழுநேர ஊழியத்தில் இருப்பவர்களைத் தான் நினைக்கிறோம். ஆனால் வேதம் "நாங்கள்" என்று கூறுகிறது - அதாவது ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவில் ஒரு உடன் வேலையாளாக இயேசுவுடனான இந்த ஐக்கியத்திற்குள் அழைக்கப்படுகிறார்கள்.
தேவன் நம்மை அவருடைய குணப்படுத்துதல், தேவைகள் (வேலை, வீடு, நல்ல வாழ்க்கை, வாழ்க்கைத் துணை) போன்ற உலக ஆசீர்வாதங்களை அனுபவிக்க மட்டும் அழைக்கவில்லை. மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கவும், நம்முடைய வாழ்க்கைக்கான அவரது சித்தத்தை நிறைவேற்றவும் நம்மை ஆசீர்வதிக்கிறார். அதை நாம் எப்படி செய்வது? அவருடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் அதைச் செய்யலாம்: சுவிசேஷத்தை விதைத்தல், விசுவாசத்தை வளர்த்தல், அன்புடன் ஊழியம் செய்தல் மற்றும் மக்களை அவருடைய ராஜ்யத்திற்குத் திரும்ப வழிநடத்துதல் இவற்றின் மூலம் செய்யலாம்.
1 கொரிந்தியர் 3:9–15 இல், கிறிஸ்துவில் உடன் வேலையாட்களாக இருப்பதன் அர்த்தத்தை பவுல் தெளிவாக விளக்குகிறார்.
1. நாம் அனைவரும் தேவனின் ராஜ்யத்திற்காக ஒன்றாக பணியாற்றுகிறோம்
நாம் அனைவரும் தேவனின் வேலையில் பங்காளிகள். பிரசங்கிப்பது, கற்பிப்பது, சேவை செய்வது, குணப்படுத்துவது அல்லது வேறு எந்த ஊழியமாக இருந்தாலும் அது கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புவதின் ஒரு பகுதியாகும் - தேவனுடைய பண்ணை மற்றும்தேவனுடைய மாளிகை. (1 கொரிந்தியர் 3:9).
பண்ணை என்பது உலகில் மக்களை வளர்ப்பதற்கான தேவனின் பணியைக் குறிக்கிறது. மாளிகை என்பது அவரது திருச்சபையைக் கட்டுவதைக் குறிக்கிறது - அனைத்து விசுவாசிகளின் ஒன்றிணைந்த சரீரம்.
இந்த வேலைக்கு மக்களை அழைத்து, தயார்படுத்துபவர் தேவன் தான். அவர் ஒவ்வொருவரையும் வெவ்வேறு பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கிறார். ஆனால், எல்லோருக்கும் எச்சரிக்கை ஒன்று தான் : எந்தவொரு தனிநபருக்காகவும் அல்ல, தேவனுடைய ராஜ்யத்திற்காக வேலை செய்யுங்கள். “கவனத்துடன்” ராஜ்யத்தை கட்டியெழுப்ப வேண்டும் - அதாவது, தேவனுக்கான அன்புடனும், தனிப்பட்ட ஈடுபாடுடனும், ஆழமான அக்கறையுடனும் இந்த வேலையை செய்ய வேண்டும் என்று பவுல் எழுதுகிறார். எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன். 1 கொரிந்தியர் 3:10
2. கிறிஸ்துவே ஒரே அஸ்திபாரம்
அஸ்திபாரம் ஏற்கனவே போடப்பட்டுள்ளது, இயேசு கிறிஸ்துவே அந்த அஸ்திபாரம். போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. 1 கொரிந்தியர் 3:11
கிறிஸ்துவைத் தவிர வேறு எதுவும் அஸ்திபாரமாக இருக்க முடியாது. வேறு எதன் அடிப்படையிலும் - அதாவது கூட்டத்தைப் பிரியப்படுத்துவதற்காகவோ உலகப் பிரகாரமான செல்வத்தைத் துரத்துவதற்காகவோ, ஒரு போதகரின் பெயரை / அகங்காரத்தை மையமாகக் கொண்டதாகவோ அல்லது தனிப்பட்ட ஆதாயத்தைத் தேடுவதற்காகவோ எந்த ஒரு சபையோ அல்லது ஊழியமோ, கட்டப்பட்டால் அது நிலைத்து நிற்காமல் நொறுங்கிவிடும். நியாயத்தீர்ப்பு நாளில், அத்தகைய வேலை என்னவென்று அம்பலப்படுத்தப்படும். பவுல் இதனை ஒரு கட்டிடத்தை நெருப்பால் சோதிப்பதைப் போல் விளக்குகிறார் - தங்கம், வெள்ளி மற்றும் விலையேறப்பெற்ற கற்கள் நிற்கும், ஆனால் மரம், புல், வைக்கோல் ஆகியவைகள் எரிந்து போகும். ஒருவன் அந்த அஸ்திபாரத்தின் மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். 1 கொரிந்தியர் 3:12-13
சகோதரர் செய்யும் வேலை கிறிஸ்துவை மேம்படுத்தவும் மகிமைப்படுத்தவும் வேண்டும். நீங்கள் ஜெபித்து ஒருவரை குணப்படுத்தினால், அது உங்கள் பெலத்தினால் அல்ல, கிறிஸ்துவின் வல்லமையினால் குணப்படுத்துகிறீர்கள். சக ஊழியர்களின் மனப்பான்மை பவுல் விவரிப்பது போல இருக்க வேண்டும். ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.1 கொரிந்தியர் 10:31
3. உடன் வேலையாள் சோதிக்கப்படுவார் - நாம் தேவனுக்காக செய்த பணி சோதனையில்
நிலைத்து நின்றால், நாம் அதன் கூலியைப் பெறுவோம் (வச.14). ஆனால் அது வெந்துபோனால் நஷ்டமடைவோம் - எந்த வெகுமதியும் இல்லை - ஆனாலும், இரட்சிக்கப்படுவோம், "அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினது போலிருக்கும்" (வச. 15). இரட்சிப்பு இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே உண்டாகும் நமது கிரியைகளின் மூலம் அல்ல, ஆனால் நமது கிரியைகள் நித்தியத்தில் நாம் பெறும் வெகுமதிகளைத் தீர்மானிக்கும் என்பதே இதன் பொருள்.
அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினது போலிருக்கும். 1 கொரிந்தியர் 3:14-15
பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத்தேயு 25:11-12
4. களத்தில் உடன் வேலையாட்களின் மனப்பான்மை - கிறிஸ்துவில் ஒரு உண்மையான சக ஊழியர் பரிசுத்த ஆவியை முழுமையாக நம்பி, இயேசுவிடமிருந்து மட்டுமே பலத்தைப் பெறுகிறார். நமது மனித இயல்பு தேவனின் பணியை செய்ய பெரும்பாலும் அறிவிலும் திறமையிலும் சார்ந்திருக்க முயற்சிக்கிறது, ஆனால் நாம் மூடன் போன்ற மனத்தாழ்மையுடன் ஊழியம் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம் என்று பவுல் எச்சரிக்கிறார். தேவனுடைய ராஜ்யத்தில் ஒரு ஊழியன் உலகத்தின் பார்வையில் பைத்தியமாகத் தோன்றத் தயாராக இருக்க வேண்டும், அப்பொழுது தான் தேவனுடைய பார்வையில் அவன் உண்மையான ஞானியாக இருப்பான். ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக; இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன். 1 கொரிந்தியர் 3:18
கிறிஸ்துவில் உடன் வேலையாட்களுக்கான எதிர்பார்ப்புகள்
இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம். இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. 1 தெசலோனிக்கேயர் 3:2-3
1. நற்செய்தியை தைரியமாகப் பிரசங்கியுங்கள் - பண்ணையில் வேலை செய்து கிறிஸ்துவின் அஸ்திபாரத்தின் மீது கட்டுவது தான் நமது முக்கியப் பணியாகும் (1 கொரி. 3:9). ஒவ்வொரு உடன்வேலையாளும் இயேசுவின் மூலம் இரட்சிப்பின் நற்செய்தியை தைரியத்துடனும் தெளிவுடனும் முன்னெடுக்க அழைக்கப்படுகிறார்கள். நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம். (V2).
2. விசுவாசிகளைப் பலப்படுத்தவும், ஊக்கமளிக்கவும் செய்யுங்கள் - சோதனைகளின் நேரங்களில் கூட, மற்ற விசுவாசிகளுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் வாழ வேண்டும். துன்பங்களில் நாம் பொறுமையுடன் நிலைத்திருக்கும்போது, அது கிறிஸ்துவில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் விடுதலையையும் மற்றவர்களுக்குக் காட்டுகிறது. உடன் வேலையாட்கள் தங்களில் கிறிஸ்துவால் உண்டான உண்மையான மாற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவர்கள் கிறிஸ்துவுக்கான சாட்சிகளாக இருக்கிறார்கள். பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:8
3. சோதனைகளில் உறுதியாக நில்லுங்கள் - பாடுகள் என்பது கிறிஸ்துவில் ஒவ்வொரு விசுவாசிக்கும் சக ஊழியருக்கும் ஆச்சரியமானதல்ல, அது ஒரு நியதி (1 தெச. 3:3; 1 பேதுரு. 4:12).
இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. 1தெசலோனிக்கேயர் 3:3
பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடையய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார். 1 பேதுரு 4:12-14
4. விசுவாசத்தின் அஸ்திபாரம் சோதனைகளால் கட்டமைக்கப்படுகிறது - சோதனைகள் பொறுமையை உருவாக்குகின்றன, மேலும் ரோமர் 5:3,4 சொல்வது போல், பொறுமை விசுவாசத்தை பலப்படுத்துகிறது - ஏனெனில் கவனம் சுயத்தை சார்ந்திருப்பதிலிருந்து கிறிஸ்துவை முழுமையாகச் சார்ந்திருப்பதற்கு மாறுகிறது. அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். ரோமர் 5:3,4
5. பயம் எனும் ஆயுதத்தை எதிர்த்து நில்லுங்கள் - விசுவாசத்தை பலவீனப்படுத்த சாத்தான் பயத்தைப் பயன்படுத்துகிறான் (1 பேதுரு 5:8–9). விழிப்புடன் இருங்கள், வார்த்தையில் வேரூன்றி இருங்கள், விசுவாசத்தில் உறுதியாக இருங்கள், அப்பொழுது அவனுடைய திட்டங்கள் உங்கள் பணியைத் தடம் புரளச் செய்யாது. "இயேசுவின் நாமத்தினாலே, நான் உன்னை ஓடிப்போகக் கட்டளையிடுகிறேன்!" என்று அதிகாரத்துடன் அவனை எதிர்த்து நில்லுங்கள், அவன் ஓடிப்போவான். தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே. 1 பேதுரு 5:8-9
6. கிறிஸ்துவின் துன்பங்களில் பங்கு கொள்ளுங்கள் - யோபுவைப் போலவே, தேவனிடமிருந்து நன்மையையும் தீமையையும் பாவம் செய்யாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் (யோபு 2:10). துன்பம் என்பது கிறிஸ்துவின் உடன் வேலையாளின் பயணத்தில் ஒரு பகுதியாகும், மேலும் அது நம்மை நித்திய வெகுமதிக்காக வடிவமைக்கிறது. யோபு அழைத்ததைப் போலவே பவுலும் கூறுகிறார்.
அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை. யோபு 2:10
ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. பிலிப்பியர் 1:29
7. சிறைப்பட்டவர்களை விடுவித்தல் - கிறிஸ்துவின் சக ஊழியர்களாக, நாம் பரிசுத்த ஆவியின் வல்லமையோடு ஊழியம் செய்கிறோம், மக்களை எல்லா வகையான அடிமைத்தனத்திலிருந்தும் (ஒன்பது வடிவங்கள்) விடுவிக்கும் பணியை நிறைவேற்றுகிறோம். இந்த அழைப்பு ஏசாயா 61:1-3 இல் விவரிக்கப்பட்டுள்ள பணியை பிரதிபலிக்கிறது. கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரகவருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள். ஏசாயா 61:1-3
உடன்வேலையாட்களுக்கான எச்சரிக்கை - இறுமாப்பும் ஆவிக்குரிய பெருமையும்
உடன்வேலையாட்களைத் தோல்வியடையச் செய்கின்றன
பவுல் கொரிந்திய திருச்சபையை அவர்களின் இறுமாப்பைக் குறித்து எச்சரித்தார் - இது சாத்தானின் கலகத்தை பிரதிபலிக்கும் ஒரு ஆபத்தான பெருமை. தனது கடிதத்தில் இரண்டு முறை (1 கொரி. 4:6,18), அவர் அவர்களின் இறுமாப்பு மனப்பான்மையைக் குறிப்பிட்டு, தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகிறார். சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனினிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன். நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதற்காகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள். 1 கொரிந்தியர் 4:6,18
இறுமாப்பு சாத்தானின் அடையாளம் - லூசிபர் (சாத்தான்) பெருமையின் காரணமாக வீழ்ந்தான் (ஏசா. 14:12–15; எசே. 28:12–17), அவன் தேவனுக்கு மேலாக தன்னை உயர்த்த முயன்றான். அதே ஆவி விசுவாசிகளைத் தங்களின் வரங்கள், ஊழியம், வல்லமை யாவும் தங்களிடமிருந்து வருவதாக நினைக்கத் தூண்டுகிறது. ஆனால் எல்லா வல்லமையும் கிறிஸ்துவிடமிருந்து வருகிறது என்பதை நாம் மறந்துவிடும் தருணத்தில், ஆபத்தான பாதையில் காலடி எடுத்து வைத்துவிடுகிறோம். அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். லூக்கா 10:18
இறுமாப்பு பெருமைமிக்க இருதயத்திலிருந்து உருவாகிறது - அதுவே சாத்தானின் இயல்பு. நமது ஆவிக்குரிய நடையையும், களத்தில் பணி செய்வதையும் தடுப்பதற்கு அவன் இந்த ஆவியை விதைக்கிறான். பெருமை வேரூன்றியவுடன், ஒருவரை பொய்த் தீர்க்கதரிசியாக மாற்றி, தேவனுடைய ராஜ்யத்திற்குள் சக ஊழியர்களைக் காயப்படுத்தவும், தவறான போதனைகளால் திருச்சபையை வீழ்த்தவும் அவர்களைப் பயன்படுத்துகிறான்.
பவுல் இதைத் தெளிவுபடுத்துகிறார்: ஒரு உண்மையான ஊழியன் மனத்தாழ்மையுடனும், ஊழிய மனப்பாங்குடனும் வழிநடத்துவான். ராஜ்யத்தில், வல்லமை மனித பலத்திலிருந்து அல்ல, தேவ ஆவியினால் வருகிறது. ஆகவே, தேர்வு நம்முடையதே - நாம் அன்பினால்
திருத்தப்படப்போகிறோமா அல்லது பிரம்பை எதிர்கொள்ளப்போகிறோமா? தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது. உங்களுக்கு என்ன வேண்டும்? நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ? 1 கொரிந்தியர் 4:20-21
இறுமாப்பு ஆவிக்குரிய பெருமைக்கு வழிவகுக்கிறது, இது ஒரு உடன்வேலையாளின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது.
கிறிஸ்துவில் உடன்வேலையாட்கள் / பவுலுடன் இணைந்து பணியாற்றியவர்கள்
பவுலின் நிருபங்களில், அவருடன் இணைந்து பணியாற்றிய கிறிஸ்துவின் பல்வேறு உடன்வேலையாட்களை சந்திக்கிறோம். இவர்களைக் குறித்து சுருக்கமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது - தேவனுடைய ராஜ்யத்தில் அவருக்கு ஊழியம் செய்வதற்கான உத்வேகம் பெறவும், அவர்கள் செய்த பணிகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் இந்த உடன்வேலையாட்கள் ஒவ்வொருவரையும் ஆழமாக தியானிக்க உங்களை ஊக்குவிக்கிறேன்.
1. தீமோத்தேயு
நகரங்கள்: லீஸ்திரா, தெசலோனிக்கே, கொரிந்து, எபேசு
பவுலால் வழிநடத்தப்பட்ட இளம் சீஷர் (அப்போஸ்தலர் 16:1–3)
பல நிருபங்களில் பவுலுடன் சேர்ந்து எழுதியவர் (1 & 2 தெசலோனிக்கேயர், பிலிப்பியர், முதலியன).
எபேசுவில் உள்ள சபையை வழிநடத்த பவுலால் நியமிக்கப்பட்டார் (1 தீமோத்தேயு 1:3).
2. சீலா
நகரங்கள்: பிலிப்பி, தெசலோனிக்கே, பெரோயா, கொரிந்து
பவுலுடன் அவரது இரண்டாவது மிஷனரி பயணத்தில் பயணம் செய்தார் (அப்போஸ்தலர் 15–18)
பிலிப்பியில் பவுலுடன் சேர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார் (அப்போஸ்தலர் 16:25–26)
3. லூக்கா
நகரங்கள்: துரோவா, பிலிப்பி, செசரியா, ரோமாபுரி
லூக்கா சுவிசேஷம் மற்றும் அப்போஸ்தலர் நடபடிகளை எழுதியவர்
பவுலின் பயணத் துணை மற்றும் வைத்தியர் (கொலோசெயர் 4:14).
பவுலுடன் கடைசி வரைக்கும் இருந்தவர் (2 திமொத்தேயு 4:11).
4. பர்னபா
நகரங்கள்: அந்தியோகியா, சீப்புரு, இக்கோனியா, லீஸ்திரா
முதல் மிஷனரி பயணத் துணை (அப்போஸ்தலர் 13–14).
சிறந்த ஊக்குவிப்பாளராக அறியப்பட்டவர் (அப்போஸ்தலர் 4:36).
5. தீத்து
நகரங்கள்: கொரிந்து, கிரேத்தா, எருசலேம்
கடினமான திருச்சபை காரியங்களில் உதவினார் (2 கொரிந்தியர் 7:6–7).
கிரேத்தாவில் உள்ள சபையை ஒழுங்குபடுத்தும்படி அனுப்பப்பட்டார் (தீத்து 1:5).
6. எப்பாப்பிரோதீத்து
நகரம்: பிலிப்பி
சிறையிருப்பின் போது பவுலுக்குத் தூதுவராகவும் உதவியாளராகவும் இருந்தார் (பிலிப்பியர் 2:25–30).
7. பெபேயாள்
நகரம்: கெங்கிரேயா (கொரிந்துவுக்கு அருகே)
உதவிக்காரியாகவும் அநேகருக்கு ஆதரவாயுமிருந்தவள் (ரோமர் 16:1–2).
பவுல் ரோமர்களுக்கு எழுதிய நிருபத்தை கொண்டு சென்றவர் என்று கருதப்படுகிறார்.
8. ஒநேசிமு
நகரம்: கொலோசே
பவுலால் கிறிஸ்துவுக்குள் நடத்தப்பட்ட முன்னாள் அடிமை, பிலேமோனுக்கு எழுதப்பட்ட கடிதத்துடன் திருப்பி அனுப்பப்பட்டார்.
9. காயு
நகரங்கள்: கொரிந்து, தெர்பை
பவுலையும் சபையையும் ஆதரித்தவர் (ரோமர் 16:23; அப்போஸ்தலர் 20:4).
10. தீகிக்கு
நகரங்கள்: எபேசு, கொலோசே
கடிதங்களை எடுத்துச் செல்லும் நம்பிக்கைக்குரியவர் மற்றும் ஊக்கமளிப்பவர் (எபேசியர் 6:21; கொலோசெயர் 4:7).
11. ஆக்கில்லா & பிரிஸ்கில்லாள்
மணமான தம்பதிகள் மற்றும் கூடாரத் தொழிலில் ஈடுபட்டவர்கள் (அப்போஸ்தலர் 18:2–3).
கொரிந்துவில் பவுலைச் சந்தித்து கிறிஸ்துவில் அவருடைய நெருங்கிய உடன் வேலையாட்களானார்கள்.
பவுலுடன் எபேசுவுக்குப் பயணம் செய்து அங்குள்ள திருச்சபையைப் பலப்படுத்த உதவினார்கள் (அப்போஸ்தலர் 18:18–19).
அப்பொல்லோவுக்கு தேவனுடைய மார்க்கத்தை அதிகத் திட்டமாய் விவரித்துக் காண்பித்தார்கள் (அப்போஸ்தலர் 18:26).
பவுலுக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர் (ரோமர் 16:3–4).
தங்கள் வீட்டில் ஒரு சபையை நடத்தினர் (1 கொரிந்தியர் 16:19).
சுருக்கம்
சிந்தித்துப் பாருங்கள் - நீங்கள் வெறும் விசுவாசியா, அல்லது கிறிஸ்துவின் உண்மையான உடன் வேலையாளா? நாம் அவருடன் பாடுபட அழைக்கப்பட்டுள்ளோம். தேவனைத் தேடி, "ஆண்டவரே, என்னிடமிருந்து நீர் என்ன விரும்புகிறீர்?" என்று கேளுங்கள். அவர் உங்களை அவருடைய பண்ணையில் வேறு யாரும் செய்ய முடியாத ஒரு தனித்துவமான பணியில் அமர்த்துவார். உங்கள் வரங்களும் அழைப்பும் கிறிஸ்துவிடமிருந்து மட்டுமே வருகிறது - அவருடைய சரீரத்தைக் கட்டியெழுப்ப நீங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அவரால் மட்டுமே வடிவமைக்க முடியும். சிலருக்கு, இது முழுநேர ஊழியத்தையும் சிலருக்கு பகுதிநேர ஊழியத்தையும் குறிக்கின்றது. தேவன் நம் பலவீனத்தின் மூலம் செயல்படுகிறார். ஏனென்றால் அவர் கற்றவர்களையோ அல்லது ஞானிகளையோ தேர்ந்தெடுக்காமல் சமூகத்தில் படிப்பறிவில்லாத பலவீனமான மக்களை (மீனவர்களை) தமது சீஷர்களாக சுவிசேஷத்தை அறிவிக்கவும், தேவனுடைய ராஜ்யத்தை முன்னெடுக்கவும் தேர்ந்தெடுக்கிறார்.
Comments