அமைதியான போராட்டங்கள்
- Kirupakaran
- Aug 31
- 7 min read

வாழ்க்கையின் போராட்டங்களும் சவால்களும் நம் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டவையாக இருக்கின்றன. சில போராட்டங்கள் வெளிப்படையாக, பிறரால் எளிதில் காணக்கூடியவையாக இருக்கின்றன. ஆனால் சில அமைதியாகவும், உள்ளுக்குள் ஆழமாகவும் மறைந்திருக்கின்றன. இந்த அமைதியான போராட்டங்கள் பல நேரங்களில் மிகவும் ஆபத்தானவையாக இருக்கின்றன. ஏனென்றால் அவை காணப்படாமலும், பேசப்படாமலும், சில சமயங்களில் அவற்றுடன் போராடும் நம்மால் கூட அடையாளம் காணப்படாமலும் போகின்றன. இந்த மறைந்திருக்கும் போராட்டங்கள் மெதுவாக நம்முடைய வலிமையைக் குறைத்து சோர்வடையச் செய்யக்கூடும்; இவை நமது சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் விசுவாசத்தையும் கூட மாற்றக்கூடியவை. அதே நேரத்தில் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நாம் என்ன எதிர்கொள்கிறோம் என்பதைப் பற்றி எதுவும் தெரியாமல் இருக்கக் கூடும்.
மாய்மாலம் என்ற பாவம் அத்தகைய ஒரு அமைதியான போராட்டமாகும் - அது இருதயத்தில் செயலற்ற நிலையில் இருந்து, நம்பிக்கை மற்றும் நன்மையின் வெளிப்புறத் தோற்றங்களுக்குப் பின்னால் தன்னை மறைத்துக் கொள்ளும்.
வெளிப்படையான மற்றும் எதிர்கொள்ளக்கூடிய பாவங்களைப் போன்று இல்லாமல் மாய்மாலம் உள்ளிருந்து பண்பை அமைதியாக அரிக்கிறது. இதனால், இதைக் கண்டறிவதும் குணப்படுத்துவதும் கடினமாக இருக்கிறது.
பல சமயங்களில், இந்த அமைதியான எதிரி தனது மனப்பான்மைகள், தேர்வுகள் மற்றும் தேவனுடனான உறவை வடிவமைத்து வருகிறான் என்பதை ஒருவர் உணர பல ஆண்டுகள் ஏன் வாழ்நாள் முழுவதும் கூட ஆகும். உண்மையான ஆவிக்குரிய சுதந்திரத்தில் வாழ, இந்த கண்ணுக்குத் தெரியாத போராட்டங்களை அடையாளம் கண்டு, அவற்றை கிறிஸ்துவின் வெளிச்சத்திற்குள் கொண்டு வர நாம் கற்றுக்கொள்ள வேண்டும், அவரால் மட்டுமே மறைந்திருப்பதை குணப்படுத்த முடியும்.
கலாத்தியர் 2:11-21 இல், மாய்மாலத்தனத்தின் பாவம் குறித்து பவுல் கேபாவை எதிர்க்கும் ஒரு சம்பவத்தைக் காண்கிறோம்.
மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன்.
12எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான். மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான். இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்து கொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம்பண்ணலாம்? புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே. கலாத்தியர் 2:11-16
இந்த கேபா யார்?
இயேசு சீமோனுக்கு “கேபா” என்று பெயரிட்டார்: பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம். யோவான் 1:42
“பேதுரு” என்பது “கேபா” என்பதற்கான கிரேக்க மொழிப்பெயர் (பெட்ரோஸ்).
எனவே, கேபா = பேதுரு = சீமோன் (அனைத்தும் ஒரே நபரின் பெயர்கள்).
அவர் இயேசுவின் அப்போஸ்தலராக இருந்தார்.
அவர் இயேசுவின் நெருங்கிய சீஷர்களில் ஒருவராக (யாக்கோபு மற்றும் யோவானுடன்) இருந்தார்.
கேபாவின் ஆவிக்குரிய வலிமையை எடுத்துக்காட்ட, அவருடைய சாதனைகளை கோடிட்டுக் காட்டுகிறேன்.
பேதுரு ஒப்புக்கொண்டார்: "சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்" (மத் 16:16).
பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலித்தார் (லூக்கா 22:54–62).
பேதுரு இயேசுவால் மீட்டெடுக்கப்பட்டார் (யோவான் 21:15–19).
பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு பிரசங்கித்தார் (அப்போஸ்தலர் 2).
பேதுரு தான் தனது தரிசனத்திற்கும் கொர்னேலியுவின் மாற்றத்திற்கும் பிறகு புறஜாதியாரை திருச்சபைக்குள் வெளிப்படையாக வரவேற்ற முதல் நபர் (அப்போஸ்தலர் 10–11).
பேதுரு (கேபா) அந்தியோகியாவில் இருந்தபோது (கலா 2:11–14), விருத்தசேதனக் குழுவினருக்கு பயந்து, புறஜாதியாரையும் தேவனுடைய சபையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தனது முந்தைய நிலைப்பாட்டிற்கு முரணாக நடந்துகொண்டார்.
கேபா (பேதுரு) சம்பவத்தை இன்று நம்முடைய வாழ்க்கையுடன் எவ்வாறு தொடர்புபடுத்தலாம்?
உண்மையாகவே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒரு விசுவாசியை கற்பனை செய்து கொள்ளுங்கள். முதன்முதலில் இயேசுவை சந்தித்தபோது, தனது பழைய வாழ்க்கையிலிருந்து விலகி, தனது வீட்டில் இருந்த பொய்யான தெய்வங்களின் விக்கிரகங்களையும் அடையாளங்களையும் அகற்றி, கடந்தகால பாவங்களுக்காக மனம் வருந்தி, ஒரு காலத்தில் தன்னை வரையறுத்த பாரம்பரியங்களையும் விட்டுவிட்டார்.
தேவாலயத்திற்குச் செல்வது, விசுவாசமாக ஜெபிப்பது, சபையின் அன்றாட பணிகளில் தீவிரமாக செயல்படுவது, பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பெறுவது, மற்றவர்களைக் குணப்படுத்துவது சுவிசேஷத்தை பிரசங்கிப்பது மற்றும் மக்களை அவர்களின் விசுவாசத்தில் ஊக்குவிப்பது என்று கிறிஸ்துவில் ஒரு புதிய வாழ்க்கையை ஏற்றுக்கொண்டார்.
ஆனால் ஒரு நாள் அவர் இன்னும் கிறிஸ்துவுக்கு வெளியே அதே பழைய மரபுகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் தனது பழைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தை மீண்டும் சந்திக்கிறார். அந்த நேரத்தில், தனது விசுவாசத்தில் உறுதியாக நிற்பதற்குப் பதிலாக அவர் பின்வாங்குகிறார் - முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக அல்லது அவர்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக, அவர் இன்னும் அந்த பழைய வாழ்க்கை முறையைச் சேர்ந்தவர் போல் செயல்படுகிறார்.
பேதுரு என்று அழைக்கப்படுகிற கேபாவுக்கும் இதுதான் நடந்தது. வெளிப்புறமாக, அவர் சுவிசேஷத்தின் உண்மையை அறிந்து அதன்படி வாழ்ந்தார், ஆனால் அழுத்தமான சூழ்நிலைகளில் சமரசம் செய்துவிடுகிறார் - கிறிஸ்து அளித்த சுதந்திரத்தில் நிலைத்திருக்காமல், பழைய மரபுகளுடன் ஒத்துப்போவதுபோல் நடிக்கிறார். இது இன்று நம்மில் பலர் எதிர்கொள்ளும் அதே போராட்டமல்லவா? நமது விசுவாசத்தை புரிந்துகொள்ளாமல் இருப்பவர்களின் முன்னிலையில், நாம் கிறிஸ்துவுக்காக தைரியமாக நின்றால் அவர்கள் நம்மை நிராகரிக்கலாம் என்ற பயத்தில் நம்முடைய விசுவாசத்தை மறைக்கவும் தளர்த்தவும் உந்தப்படுகிறோம்.
கேபா என்ன செய்தார்?
மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன். எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான். கலாத்தியர் 2:11-12
அப்போஸ்தலர் 10-11 ஐ படிக்கும்போது, இயேசு பேதுருவைப் பயன்படுத்தி புறஜாதியாருக்கு சுவிசேஷம் அறிவித்ததையும் பரிசுத்த ஆவியானவர் இறங்கியதையும் காண்கிறோம். எந்த மனிதனும் அசுத்தமானவன் அல்ல என்கிற செய்தியைக் காண்பிக்கின்ற ஒரு தரிசனத்தை தேவன் பேதுருவுக்குக் கொடுத்து புறஜாதியாருக்கு நற்செய்தியை எடுத்துச் செல்ல அவரைத் தயார்படுத்துகிறார். ரோமானிய நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியுவின் வீட்டிற்கு பேதுரு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே அவர் கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பிரசங்கித்தார். யூதர்களைப் போலவே புறஜாதியாரின் மீதும் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இறங்கியது. தம்மை விசுவாசிக்கிற யாவரையும் தேவன் ஏற்றுக்கொள்கிறார் என்பதை இது நிரூபிக்கிறது. அப்போஸ்தலர் 11 இல், பேதுரு எருசலேம் நகரத்து விசுவாசிகளுக்கு இதை விளக்குகிறார், தேவன் யூதர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் இடையிலான தடையை உடைத்து புறஜாதியாருக்கு இரட்சிப்பின் கதவைத் திறந்துள்ளார் என்பதைக் காட்டுகிறார்.
இப்போது கலாத்தியர் 2 -க்கு திரும்புவோம், இங்கே கேபா (யூதராகிய பேதுரு) புறஜாதியினருடன் சேர்ந்து சாப்பிட்டார். இது அப்போஸ்தலர் 10/11 -இல் அவர் பெற்ற தரிசனத்திற்கும், பிரசங்கித்த சத்தியத்திற்கும் ஏற்றபடி உள்ளது. இது யூத பிரமாணங்களின் அடிப்படையில் சிந்திக்க முடியாத ஒன்று, ஆனால் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு இசைவானது (அப்போஸ்தலர் 10/11).
யாக்கோபினிடத்திலிருந்து சிலர் (யூத மதத்தினர் அல்லது கடுமையான யூத கிறிஸ்தவர்கள்) வந்தபோது, கேபா விமர்சனத்திற்கு பயந்து விலகிப் பிரிந்தார்.
பவுல் வெளிக்காட்டும் முரண்பாடு என்ன? பேதுருவின் செயல்கள் (விலகிப் பிரிந்தது) அவரது நம்பிக்கைகளுடன் (புறஜாதியினர் யூத பிரமாணமில்லாமலேயே கிறிஸ்துவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்) பொருந்தவில்லை.
கேபாவின் இந்த மாய்மாலமான நடத்தைக்கு என்ன காரணம்? இது விமர்சனத்தின் பயத்தில் இருந்து வந்தது.
பெரும்பாலான நேரங்களில் நாம் தேவனுடன் நடக்கும்போது மனிதர்களின் அங்கீகாரத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம், இது நம்மை பாவத்திற்குள் விழச் செய்கிறது.
நான் அந்த விழாவிற்கு செல்லாவிட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?, நான் அதைச் செய்யவில்லை என்றால் என்ன சொல்வார்கள்? என்று அடிக்கடி நினைக்கிறோம். இவ்வாறாக நாம் அழைக்கப்பட்டுள்ள சுவிசேஷத்தின் சத்தியத்திற்கு சமரசம் செய்கிறோம்.
சமூக அழுத்தத்தின் பயம் தான் கேபாவை மாய்மாலத்தின் பாவத்திற்குள் விழச் செய்தது. மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான். கலாத்தியர் 2:13
இந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
வலிமையானவர்கள் கூட தடுமாறலாம். கேபா ஒரு புதிய விசுவாசி அல்ல. அவர் அனுபவமும், ஆவியால் வழிநடத்தப்படும் அதிகாரமும் நிறைந்த ஒரு முன்னணி அப்போஸ்தலராக இருந்தார். இருந்தும், அவர் மாய்மாலத்தில் விழுந்தார். தேவனுடன் நாம் எவ்வளவு ஆழமாக நடந்தாலும், நம்மில் யாரும் பாவத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. ஆவிக்குரிய முதிர்ச்சி என்பது பாவத்திற்கு எதிரான பாதுகாப்பு அல்ல.
மாய்மாலம் பெரும்பாலும் மனிதர்கள் மீதான பயத்தில் மறைந்து கொள்கிறது. விருத்தசேதனமுள்ளவர்களின் விமர்சனங்களுக்குப் பயந்து கேபா புறஜாதியினரிடமிருந்து விலகிச் சென்றார். அது போலவே, நாமும் தேவனின் ஒப்புதலைவிட, மனிதரின் ஒப்புதலை அதிகமாக விரும்பும் போது, சமரசம் செய்கிறோம். மனிதர் மீது உள்ள பயம், நம்மை மாய்மாலத்தில் சிக்க வைக்க சாத்தான் பயன்படுத்தும் கூர்மையான ஆயுதங்களில் ஒன்றாகும்.
ஆவிக்குரிய பெருமை ஆபத்தானது. நாம் ஆவியால் நிரப்பப்பட்டு சுறுசுறுப்பாக ஊழியம் செய்யலாம், ஆனால் நாம் ஒருபோதும் நமது முதிர்ச்சியில் பெருமை கொள்ளக்கூடாது. தேவனின் கிருபையை நம்புவதற்குப் பதிலாக நம் சுயத்தை சார்ந்திருந்தால் விழுந்துவிடுவோம் என்பதை கேபாவின் வீழ்ச்சி காட்டுகிறது. மனத்தாழ்மைக்கான இயேசுவின் அழைப்பு சுய ஏமாற்றத்திற்கு எதிரான பாதுகாப்பாகும்.
நமக்குக் கண்காணிப்பு தேவை. கேபாவை பவுல் பகிரங்கமாகத் திருத்த வேண்டியிருந்தது. சில சமயங்களில், நம்மால் பார்க்க முடியாத காரியங்களை வெளிப்படுத்த தேவன் பிறரைப் பயன்படுத்துகிறார். உண்மையான மனத்தாழ்மை என்பது காயப்பட்டால் கூட, திருத்தங்களை மனதார ஏற்றுக்கொள்ளும் தன்மையைக் குறிக்கிறது.
சுவிசேஷம் எப்போதும் மையமாக இருக்க வேண்டும். கேபாவின் செயல்கள் சுவிசேஷத்தின் உண்மையை பாதிப்பதாக இருந்ததால் பவுல் அவரை எதிர்கொண்டார் - இரட்சிப்பு மனித மரபுகள் மூலம் அல்ல, கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே வருகிறது என்பதே சுவிசேஷத்தின் மையப் பொருள். நம்மைப் பொறுத்தவரை, ஒவ்வொரு முடிவும் இது நற்செய்தியை ஆதரிக்கிறதா அல்லது அதை சமரசம் செய்கிறதா? என்ற கேள்வியால் அளவிடப்பட வேண்டும்.
மறைந்திருக்கும் பாவம் தேவனின் பணியை எவ்வாறு பாதிக்கிறது?
தேவனை மறுதலிக்கும் இந்த சிறிய செயல்களை நாம் பெரும்பாலும் சாதாரணமானவையாகவே நினைத்து அவைகளை எளிதாக தவிர்த்து விடுகிறோம். ஆனால் நாம் உணரத் தவறுவது என்னவென்றால், தேவனின் பார்வையில், இந்த 'சிறிய' சமரசங்கள் கூட நீடித்த பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை. ஒரு பக்கம் நிற்கும் இந்த சிறிய செயல் கூட தேவனின் பணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தேவனுடைய ராஜ்யத்தை பாதிக்கும் நான்கு முக்கியமான விஷயங்களை இங்கே பார்க்கலாம்:
1. திருச்சபையின் ஒற்றுமையைக் குலைக்கிறது
இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்து கொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம்பண்ணலாம்? கலாத்தியர் 2:14
திருச்சபை ஒருபோதும் கலாச்சாரம், இனம் அல்லது மரபால் பிரிக்கப்பட வேண்டியதல்ல - பரிசுத்த ஆவியானவர் தான் யூதர்களையும் புறஜாதியினரையும் கிறிஸ்துவில் ஒரே சரீரமாக இணைக்கிறார்.
ஆனால், புறஜாதி விசுவாசிகளிடமிருந்து விலகிப் பின்வாங்கிய பேதுருவின் செயல் அந்த ஒற்றுமையை பாதித்தது. ஒருவரின் தீர்மானம் அது பலவீனத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் கூட, சபை முழுவதிலும் அதின் தாக்கத்தை ஏற்படுத்தி பிரிவினையை ஏற்படுத்தக்கூடும்.
முரணாக, பேதுருவே எருசலேம் கூட்டத்தில், தேவன் நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார் என்று அறிவித்திருந்தார். விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார். அப்போஸ்தலர் 15:9
ஆனால் அந்தியோகியாவில், அவரது மாய்மாலம் தேவன் அழித்த இடத்தில் ஒரு கோட்டை வரைந்தது.
சகோதரனை சகோதரனிடமிருந்து பிரிக்கும் அல்லது கலாச்சாரத்தை கிறிஸ்துவுக்கு மேலே உயர்த்தும் எந்தவொரு செயலும் சுவிசேஷத்தை மறுப்பதாகும் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.
“இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது” - பவுல் பேதுருவை வெளிப்படையாக எதிர்த்து நின்றது சரியாக இருந்தது.
2. விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்கப்படுவதை பலவீனப்படுத்துகிறது
யூதர்கள் மற்றும் புறஜாதியினருக்கு இடையேயான ஒற்றுமை அவர்களுடைய பொதுவான மரபுகளின் அடிப்படையில் உண்டாகாமல் கிறிஸ்துவின் மீதான பொதுவான விசுவாசத்தின் அடிப்படையில் இருந்தது. விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார். அப்போஸ்தலர் 15:9
புறஜாதியினரிடமிருந்து விலகியதன் மூலம், “கிறிஸ்துவில் விசுவாசம் மட்டும் போதாது. ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு புறஜாதியினர் யூதர்களைப் போல நடந்து கொள்ள வேண்டும்” என்பதே பேதுரு மௌனமாகக் கூறியது.
யூதர் மற்றும் புறஜாதியினர் இருவருமே கிருபை தேவைப்படும் பாவிகள் தான் என்ற நீதிமானாக்கப்படுவதின் சத்தியத்தையே இது மறுத்தது - அது இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; ரோமர் 3:22-24
3. நியாயப்பிரமாணத்தினின்று பெற்ற சுதந்திரத்தை பயனற்றதாக மாற்றுகிறது
பவுல் பேதுருவுக்கு நினைவூட்டுகிறார்: நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே. கலாத்தியர் 2:16
எருசலேமில், மோசேயின் நியாயப்பிரமாணம் ஒரு “பாரமான நுகம்” என்று பேதுரு தைரியமாக அறிவித்தார் (அப்போஸ்தலர் 15:10). இப்போது, தனது செயல்களால், அதே நுகத்தை அவர் தனது தோள்களில் சுமந்து கொண்டிருந்தார். இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்? அப்போஸ்தலர் 15:10
"பேதுருவே, நீர் இடித்துப்போட்டவைகளையே மீண்டும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவரென்று நிரூபிக்கிறீர்" என்ற பவுலின் வாதம் குத்துவதாக இருந்தது. நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன். கலாத்தியர் 2:18
கிருபையை அனுபவித்த பிறகு பிரமாணங்களுக்குத் திரும்புவது என்பது சிலுவையை நிராகரிப்பதற்கு சமம். நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே. கலாத்தியர் 2:21
"முடிந்தது!" என்ற கிறிஸ்துவின் கூக்குரல், (யோவான் 19:30), அவரில் இரட்சிப்பு முழுமையானது என்று அறிவித்தது. நியாயப்பிரமாணம் “செய்” என்று கூறுகிறது. கிருபை “முடிந்தது” என்று கூறுகிறது. நியாயப்பிரமாணத்திற்குத் திரும்புவது என்பது அவருடைய தியாகத்தைக் குறைவாக கருதுவதாகும்.
4. மாய்மாலம் மற்றவர்களைப் பாவத்திற்குள் இட்டுச் செல்கிறது
இந்தக் கதையின் மிகவும் சிந்திக்க வைக்கும் பகுதி: பவுலின் நம்பிக்கைக்குரிய சக ஊழியரான “ஆறுதலின் மகன்” என்று அழைக்கப்படும் பர்னபாஸ் கூட பேதுருவின் மாய்மாலத்தால் வழிதவறிச் சென்றார் (கலாத்தியர் 2:13).
பவுலுக்கு ஆதரவாக உறுதியளித்த, புறஜாதி விசுவாசிகளை ஊக்குவித்த, ஆலோசனைச் சங்கத்தில் சுதந்திரத்திற்காக நின்ற பர்னபாஸ், பேதுருவின் செயலால் தடுமாறினார்.
பேதுரு ~ கேபா, கிரேக்க மொழியில் "Κηφᾶς" என்பது அரமேய மொழியிலுள்ள "கேபா" என்ற சொல்லின் மாற்று எழுத்தாக்கம் ஆகும், அதற்கு "பாறை" என்று பொருள். பர்னபாஸ் என்பதற்கு "ஊக்கத்தின் / ஆறுதலின் மகன்" என்று பொருள்.
இது மாய்மாலம் எவ்வளவு தூரம் பரவக்கூடியது என்பதைக் காட்டுகிறது. வலுவான தலைவர்கள் - "பாறை" (பேதுரு) மற்றும் "ஊக்கமளிப்பவர்" (பர்னபாஸ்) - இருவரும் தடுமாறி, யாரும் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை நிரூபித்தனர்.
இயேசுவின் வார்த்தைகள் உண்மையாகத் தொனிக்கின்றன: ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். மத்தேயு 23:3
மாய்மாலம் மற்றவர்களை கெடுப்பதால் தேவன் அதை வெறுக்கிறார், அதுவும் குறிப்பாக ஆவிக்குரிய தலைவர்களிடமிருந்து வரும்போது.
சுருக்கம்
பவுலின் கடிந்துகொள்ளுதலுக்கு பேதுரு (கேபா) அளித்த பதில் குறித்து எழுத்துப்பூர்வ பதிவு எதுவும் நம்மிடம் இல்லை, ஆனால் அவர் தனது தவறை மனத்தாழ்மையுடன் ஒப்புக்கொண்டு மீண்டும் ஐக்கியத்தில் இணைந்ததாக வேதம் கூறுகிறது. அவரது பிற்கால செய்திகள் (1 மற்றும் 2 பேதுரு) கிருபையின் சுவிசேஷத்துடன் சமரசம் செய்ததற்கான எந்த தடயத்தையும் காட்டவில்லை. உண்மையில், 1 பேதுரு "தேவனுடைய மெய்யான கிருபையை" (5:12) வலியுறுத்துகிறது, மேலும் கிருபை என்ற வார்த்தை ஒவ்வொரு அத்தியாயத்திலும் தோன்றுகிறது.
தானும் பவுலும் முழு உடன்பாட்டில் இருந்ததை பேதுரு தெளிவுபடுத்துகிறார். 2 பேதுரு 3:15–16 பவுலின் ஞானத்தையும், அவருடைய கடிதங்களின் அதிகாரத்தையும் உறுதிப்படுத்துகிறது, மேலும் சில போதனைகளைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தாலும், அவை யாவும் வேதவாக்கியங்களே என்பதையும் ஒப்புக்கொள்கிறார்.
மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்; எல்லா நிருபங்களிலும் இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள். 2 பேதுரு 3:15-16
பயம் என்பது நம்மை பாவத்தில் தள்ளுவதற்கு எதிரி பயன்படுத்தும் ஆயுதம். ஆனால் தடுமாறுபவர்களை தேவன் மீட்டெடுத்து பலப்படுத்துகிறார். கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார். சங்கீதம் 145:14
விழிப்புணர்வோடு இருப்பது நம் சொந்த பலத்தால் சாத்தியமில்லை. கிறிஸ்துவின் சுத்திகரிக்கும் இரத்தம் மட்டுமே நம்மை விழிப்புடனும் தூய்மையுடனும் வைத்திருக்கிறது, ஏனென்றால் அவர் பாவத்தையும் ஆவிக்குரிய சக்திகளையும் வென்றெடுத்த நமது மீட்பர் (கொலோசெயர் 2:15).
உங்கள் முந்தைய வாழ்க்கையிலிருந்து, உங்கள் வளர்ச்சியைத் தடுக்கும் அல்லது அவருடைய திருச்சபையைப் பாதிக்கும் பழைய பழக்கங்களை வெளிப்படுத்தும்படி தேவனிடம் கேளுங்கள். அவற்றை அவருக்கு முன்பாகக் கொண்டு வந்து, விடுதலையையும் புதுப்பித்தலையும் கேளுங்கள். உங்களை உயர்த்துவதற்கு அவர் தயாராக இருக்கிறார்.



Amen