top of page

அத்திமரத்தின் சோதனை

  • Kirupakaran
  • 4 days ago
  • 6 min read

நாம் வாழும் உலகில், ஒரே மாதிரி தோற்றமுடைய பொருட்கள் எங்கும் காணப்படுகின்றன. நகல் தயாரிப்புகளால் பல நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன; இதன் விளைவாக பெரும் சந்தைப்பங்குகளை இழக்கவும் நேரிடுகிறது. குறிப்பாக பிராண்டட் ஆடைகளில், ஒரே மாதிரியான தோற்றமுடையவைகள் அதிகமாக காணப்படுகின்றன. தூரத்திலிருந்து பார்க்கும்போது, அவை அசல் போலவே தோன்றும். சில நேரங்களில் அசலை விடவும் கவர்ச்சிகரமாக இருக்கின்றன. ஆனால் கூர்ந்து கவனித்தால், அவற்றில் உண்மையான தரமும், மதிப்பும், நம்பகத்தன்மையும் இல்லாததை உணர முடியும்.

 

மத்தேயு 21 ஆம் அதிகாரத்தில் இயேசு அத்திமரத்திடம் சென்றபோது, இதே உண்மையை காண்கிறோம். அவர் அதன் வெளிப்புற தோற்றத்தை மட்டும் பார்க்காமல் அதில் கனிகள் உள்ளதா என்று தேடினார். இலைகள் நிறைந்திருந்தும் கனிகள் இல்லாத அந்த மரம், வெளிப்புறமாக ஆவிக்குரியவராகத் தோன்றினாலும், உள்ளார்ந்த முறையில் தேவனுடைய சாயல் இல்லாத வாழ்க்கையின் வலுவான அடையாளமாக இருக்கிறது. இந்த நிகழ்வு, தேவன் நம்மில் பிரதிபலிக்க விரும்பிய உருவத்திற்கும் சாயலுக்கும், உண்மையில் நம்மில் காணப்படும் இயல்பிற்கும்  இடையிலான வேறுபாட்டை வெளிப்படுத்துகிறது.

 

அத்திமர சோதனை, நமது வாழ்க்கை உண்மையிலேயே கிறிஸ்துவின் பசியைத் திருப்திப்படுத்தும் கனிகளைத் தருகிறதா அல்லது அவர் கூர்ந்து நோக்கும் போது நிலைத்திருக்க முடியாத வெளிப்புற தோற்றமான இலைகளை மட்டுமே காட்டுகிறதா என்பதை சோதித்துப் பார்க்க நம்மை அழைக்கிறது.

 

 தேவனுடைய சாயலும் ரூபமும்

பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1:26-27

 

தேவன் மனிதகுலத்தைப் படைத்த போது, தம்முடைய சொந்த ரூபத்திலும் சாயலிலும் உருவாக்கினார். முதல் பார்வையில் இந்த இரண்டும் ஒரே அர்த்தமாகத் தோன்றினாலும், இவை தனித்தனி அர்த்தங்களைக் கொண்டுள்ளன என்றும், நாம் அவற்றைப் புரிந்துகொள்ளுதல் மிகவும் முக்கியம் என்றும் வேதம் வெளிப்படுத்துகிறது.

 

ஒரு குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவை சிந்தித்துப் பாருங்கள். ஒரு குழந்தை பெற்றோரின் சாயலுடன் பிறக்கிறது - அவர்களின் அடையாளத்தையும், தோற்ற ஒற்றுமையையும் கொண்டு பிறக்கிறது. காலப்போக்கில், அந்தப் பிள்ளை வளரும்போது, ​​​​தன் பெற்றோரின் சாயலை வளர்த்துக் கொள்கிறது - அவர்களின் மதிப்புகளையும், நடத்தையையும், குணநலன்களையும் பிரதிபலிக்கிறது.

 

அதேபோல

  • ரூபம் என்பது தேவன் நமக்குக் கொடுத்த அடையாளத்தைக் குறிக்கிறது - நாம் யார்?

  • சாயல் என்பது கீழ்ப்படிதலின் மூலம் தேவன் நம்மில் உருவாக்கும் குணத்தைக் குறிக்கிறது - நாம் யாராக மாறுகிறோம்?

 

பாவம் மனித வாழ்க்கையில் நுழைந்த பிறகு, மனிதன் தேவனுடைய சாயலிலிருந்து விலகி, மனித இயல்பையே பிரதிபலிக்கத் தொடங்கினான். ஆதியாகமம் 5:1-3 இல், ஆதாம் தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே சேத் என்ற மகனைப் பெற்றான் என்று வாசிக்கிறோம். இந்த மாற்றம், மனிதகுலம் தேவனுடைய பாவமில்லாத ஆரம்ப வடிவமைப்பிலிருந்து விலகி ஆதாமிடமிருந்து பெறப்பட்ட சிதைந்த பாவ இயல்புக்கு நகர்ந்ததை வெளிப்படுத்துகிறது. ஒரு காலத்தில் தேவனுடைய பரிசுத்தத்தை பிரதிபலிக்க உருவாக்கப்பட்டது, பாவத்தால் குறிக்கப்பட்ட சாயலுக்கு ஒப்பாக மாற்றப்பட்டது.

 

தேவனுடைய சாயல் சிருஷ்டிப்பின் போது கொடுக்கப்பட்டது, பாவத்திற்குப் பிறகும் அது இழக்கப்படவில்லை.

  • மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது. ஆதியாகமம் 9:6

  • அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். யாக்கோபு 3:9


ஆதியாகமம் 9:6; யாக்கோபு 3:9 இல் நாம் பார்த்தபடி, பாவம் இருந்தாலும், சிருஷ்டிப்பின் போது கொடுக்கப்பட்ட தேவ சாயல் நிலைத்திருக்கிறது.

 

தேவ சாயல் என்றால் என்ன?

  • தேவனுடைய சாயல் அடையாளத்தைப் பற்றியதல்ல; மாறாக அது நாம் எவ்வாறு வாழ்கிறோம், வளர்கிறோம் என்பதைப் பற்றிப் பேசுகிறது. ஒரு குழந்தை பெற்றோரின் சாயலாக வளர்கிறது — காலப்போக்கில் அவர்களின் மதிப்புகளையும், நடத்தையையும், குணங்களையும் பிரதிபலிக்கத் தொடங்குகிறது.

  • அதேபோல:

    • ரூபம் என்பது தேவன் நமக்குக் கொடுக்கும் அடையாளத்தைக்  குறிக்கிறது - நாம் யார்?

    • சாயல் என்பது தேவன் நம்முள் உருவாக்கும் குணங்களைக் குறிக்கிறது - நாம் யாராக மாறுகிறோம்?

  • தேவசாயல் பின்வருவனவற்றைப் பிரதிபலிக்கிறது:

    • பரிசுத்தம்

    • நீதி

    • அன்பு

    • கீழ்ப்படிதல்

    • தினந்தோறும் தேவனுடைய இயல்பைப் பிரதிபலிக்கும் வாழ்க்கை

  • தேவசாயல் தேவ மகிமையுடன் இணைக்கப்பட்டுள்ளது (2 கொரிந்தியர் 4:6).

 

பாவம் தேவனுடைய சாயலை எவ்வாறு சேதப்படுத்தியது?

  • பாவம் உலகத்தில் நுழைந்தபோது (ஆதியாகமம் 3), மனிதன் தேவனின் ரூபத்தை இழக்கவில்லை, ஆனால் அந்த சாயல் சேதமடைந்தது.

  • ஆதாமுக்கு அவனுடைய ரூபத்திலும் சாயலிலும் சேத் என்ற குமாரன் பிறந்தான் (ஆதியாகமம் 5:1–3). இது ஒரு துயரமான மாற்றத்தை வெளிப்படுத்துகிறது - மனிதகுலம் தேவனுடைய பரிசுத்த சாயலை பிரதிபலிக்காமல் பாவமுள்ள மனித சாயலை பிரதிபலிக்கத் தொடங்கியது.

  • யோவான் 8:44 இல் இயேசு இந்த நிலையை விளக்குகிறார். தேவனுக்கு எதிராக சாத்தான் நடந்துகொண்டதுபோலவே விழுந்த மனிதகுலமும் தேவனுக்கு எதிரான ஒரு இயல்பை பிரதிபலிக்கத் தொடங்கியது என்பதை அவர் காட்டுகிறார். நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். யோவான் 8:44

  • ரோமர் 1:28–32 இல் பவுல் கூறியதைப் போல, பாவம் நமது சாயலை சிதைத்து, தீமையான இயல்பை உருவாக்கியது. இதில் அவர், தேவ சாயலை முறித்து நம்மை இழிவானவர்களாகவும், வீழ்ந்தவர்களாகவும் மாற்றுகின்ற 21 வகையான பாவங்களைப் பட்டியலிடுகிறார். இதன் விளைவாக:

    • மனம் இருளடைகிறது (எபேசியர் 4:17–18).

    • இருதயம் கடினமடைகிறது.

    • வாழ்க்கை தேவனிடமிருந்து பிரிக்கப்படுகிறது.

  • தவறான நண்பர்களின் தாக்கத்தால் ஒரு குமாரனின் குணம் கெட்டுப்போவது போல, நாமும் பாவத்தின் காரணமாக வழிதவறிவிட்டோம்.

  • தேவனுடைய சாயலுக்குத் திரும்புவதற்காகப் பல பிரசங்கங்களை கேட்கிறோம், எண்ணற்ற வாய்ப்புகளும் நமக்கு கொடுக்கப்படுகின்றன. நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம். வேதத்தில் முன்னறிவிக்கப்பட்டபடி, பலர் தங்களுடைய துன்மார்க்கமான இச்சைகளைப் பின்பற்றி பரியாசக்காரர்களாக மாறுவார்கள். நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள். கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. யூதா 1:17-18


தேவ சாயலை மீட்டெடுத்தல் – அத்திமரத்தின் சோதனை

காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பிவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதினிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங்காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று. சீஷர்கள் அதைக் கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப்போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப்பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.  மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். மத்தேயு 21:18-22

 

  • மத்தேயு 21:18-22 இயேசுவின் ஊழியத்தில் நடந்த ஒரு ஆழமான சம்பவத்தைப் பதிவு செய்கிறது. அதிகாலையில், இயேசு தமது தனிப்பட்ட ஜெபத்திற்குப் பிறகு திரும்பி வந்தபோது, ​​அவர் பசியடைந்திருந்தார். வழியோரத்தில் இலைகள் நிறைந்த ஒரு அத்திமரத்தைக் கண்டு,கனியை எதிர்பார்த்து அதன் அருகே சென்றார். ஆனால், இலைகளைத் தவிர வேறு எதையும் அவர் காணவில்லை, அவருடைய வார்த்தையின் பேரில் மரம் உடனடியாகப் பட்டுப்போயிற்று.

  • இந்த நிகழ்வு ஒரு அற்புதத்தைக் காட்டுவதற்கும் மேலாக இன்றும் கூட நிலவி வரும் ஒரு ஆவிக்குரிய நிலையை வெளிப்படுத்துகிறது.

  • வெளிப்புறமாக அந்த அத்திமரம் ஆரோக்கியமாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் தோன்றியது. அதேபோல், இன்று பலருடைய வாழ்க்கைகள் ஜெபம், ஆவிக்குரிய செயல்கள், வெளிப்புற பக்தி ஆகியவற்றால் நிரம்பி வெளிப்புறமாக மதப்பூர்வமான தோற்றத்தைக் கொடுக்கின்றன. ஆனால் இரட்சகர் தம்முடைய சாயலைத் தேடிப் பார்க்கும்போது, பெரும்பாலும் கனியற்ற நிலையையே அவர் காண்கிறார். அவர் தேடும் கனி என்னவென்றால் — அவருடைய பசிக்கு பதிலளிக்கும் ஒரு வாழ்க்கை, அதாவது அவருடைய சித்தம் நிறைவேறுவதையும், அவருடைய நோக்கங்கள் நம்மூலம் செயல்படுவதையும் காணும் வாழ்க்கை.

  • நாம் தேவனோடு நடந்து வளரும்போது, தேவன் நம்மிடமிருந்து கனிகளை எதிர்பார்க்கிறார். அவருடைய சாயலும் மகிமையும் நம்மில் உருவாகும்போது உண்மையான கனி உருவாகிறது.

  • அவர் மகிமைக்குப் பயன்படாத அனைத்தும் இறுதியில் வாடி உலர்ந்து போகும். அத்திமரம் அதன் நோக்கத்தை நிறைவேற்றத் தவறியபோது, இயேசு அதை சபித்தார். எல்லாமே அவர் மூலமாகவும் அவருக்காகவும் படைக்கப்பட்டன என்பதை வேதம் நமக்கு நினைவூட்டுகிறது (கொலோசெயர் 1:16). அவருடைய நோக்கத்திற்கு ஒத்துப்போகாதவை நிலைத்திருக்க முடியாது. நம்மில் வெளிப்புறமாக மிகவும் பக்திபூர்வமாகத் தோன்றும் வாழ்க்கை அவருடைய சோதனையைத் தாங்க முடியாது.

  • அத்திமரத்தின் உலர்ந்த இலைகள் நமது சுயசந்தோஷத்தையும் உலகத்தின் மீதானப் பற்றுதலையும் சுட்டிக்காட்டுகின்றன. பலர் வெளிப்புறமாக செழிப்பாகத் தோன்றினாலும், தேவனுடைய விருப்பங்களைத் தேடுவதற்கான உள்ளார்ந்த அக்கினி அவர்களுக்குள் இல்லை.

  • தேவனுடைய மகிமை உள்ளிருந்து வெளிப்படுவதற்குத் தடையாக பல காரணிகள் உள்ளன. அவற்றில், பின்வரும் ஐந்து மனப்பான்மைகள் தேவனுக்கு மிகவும் பிரியமில்லாதவைகளாக தனித்து நிற்கின்றன:

    • தேவனிடத்தில் அன்பின்மை – நாம் தேவனை நேசிப்பதாக கூறினாலும், பல நேரங்களில் நமது இருதயம் தேவனைவிட உலகத்தையும் அதன் இன்பங்களையும் அதிகமாக நாடுகிறது.

    • சுயநலம் – தேவன் தமது நோக்கங்களுக்காக நம் மூலம் எவ்வாறு செயல்பட விரும்புகிறார் என்பதை நாடுவதற்குப் பதிலாக, நமது சொந்த ஆசைகளையும் தேவைகளையும் முன்னிலைப்படுத்துகிறோம்.

    • விசுவாசமின்மை - இஸ்ரவேலர்களைப் போலவே, தேவனின்   உண்மைத்தன்மையை அனுபவித்த பிறகும், நாம் முறையிடுகிறோம் அவரை முழுமையாக நம்புவதற்குப் போராடுகிறோம், இது அவர்மீது சார்ந்திராத இருதயத்தை வெளிப்படுத்துகிறது.

    • மாய்மாலம் / பாசாங்குத்தனம் – ஞாயிற்றுக்கிழமை ஒரு விதமாகவும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை வேறொரு விதமாகவும் வாழ்கிறோம். பொது ஆராதனையில் ஒரு முகத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையில் இன்னொரு முகத்தையும் காட்டுகிறோம். ஒன்றை சொல்லிவிட்டு வேறொன்றை செய்கிறோம். இப்படியான இரட்டை வாழ்வை தேவன் ஆழமாக வெறுக்கிறார்.

    • சுயநீதி - பல விசுவாசிகள் வேதத்தை வாசிக்கும் போது, அதில் உள்ள எச்சரிக்கைகள் மற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கருதுகின்றனர். நம்மை நீதிமான்களாக எண்ணி, பெருமை கொண்டு, திருத்தத்திற்கு நம் கண்களையும் காதுகளையும் மூடிக்கொள்கிறோம்.

 

அத்திமர சோதனை என்றால் என்ன?

இயேசு அத்திமரத்தை அணுகிப் பார்த்தபோது, ​அது இலைகளால் நிறைந்திருந்தாலும் கனிகள் இல்லாததாக இருந்தது. அதேபோல், நமது வாழ்க்கையையும் நாம் சோதித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம். நாம் உண்மையிலேயே கனிகளைத் தருகிறோமா? அல்லது இலைகளை மட்டும் காட்டுகிறோமா? அல்லது தேவ சாயல் வெளிப்படுவதற்குத் தடையாக இருக்கும் உலர்ந்த கிளைகளையும் வாடிய இலைகளையும் சுமந்து கொண்டிருக்கிறோமா? என்பதைக் கண்டறிய வேண்டும்.

 

  • அத்திமர சோதனை என்பது நேர்மையான சுய பரிசோதனைக்கான அழைப்பு. தேவனுடைய வார்த்தை நம்மை உள்நோக்கிப் பார்த்து நம் விசுவாசத்தைச் சோதித்துப் பார்க்க வலியுறுத்துகிறது: நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்;உங்களை நீங்களே பரீட்சித்துப்பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள். 2 கொரிந்தியர் 13:5

  • பல நேரங்களில், நம்மை நாமே சோதித்துப் பார்க்கும் போது, எல்லாம் சரியாகவே இருப்பது போல் நமது கண்களுக்குத் தோன்றும். அதனால், தேவனிடம் ஜெபத்தில் முழுமையாக ஒப்புக்கொடுத்து, தாவீது ஜெபித்ததைப் போல் ஜெபியுங்கள். தேவனே, என்னை ஆராய்ந்து,என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.  வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும். சங்கீதம் 139:23-24

  • நாம் ஜெபத்தில் தேவனுக்கு முன்பாக வரும்போது, ​இத்தகைய மனப்பான்மைகளை நமக்குள் இருந்து அவர் அகற்றத் தொடங்குகிறார். யோவான்ஸ்நானகன், கர்த்தர் ஒரு தூற்றுக்கூடையைப் பிடித்து, கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்த்து, பதரை அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பதைப் பற்றிப் பேசியபோது, ​​இந்தப் பிரிக்கின்ற செயல்பாட்டை விவரித்தார்.

    • தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான். மத்தேயு 3:12

    • பதரானது தானியத்தில் இறுக்கமாக ஒட்டிக்கிடக்கிறது போல, இந்த தேவையற்ற மனப்பான்மைகளும் நம் வாழ்வில் ஒட்டிக்கிடக்கின்றன. தேவனுடைய சுத்திகரிக்கும் அக்கினியால் அவை வெளிப்பட்டு அகற்றப்பட்டு, உண்மையானதும் பலனுள்ளதும் நிலைத்திருக்க அனுமதிக்கப்படுகின்றன.

  • தேவன் நமக்குப் பல ஆசீர்வாதங்களையும் வரங்களையும் தந்தருளி, அவற்றைத் தம்முடைய மகிமைக்காகப் பயன்படுத்த விரும்புகிறார். இருந்தும், பல சமயங்களில் இந்த வரங்களை நம் சொந்த நலனுக்காக இருப்பது போல் கருதி, தேவனுடைய நோக்கத்திற்குப் பதிலாக நம்மை முன்னேற்றுவதற்காகப் பயன்படுத்துகிறோம். இந்த அஸ்திபாரத்தின் மீது கட்டப்பட்ட ஒவ்வொரு வேலைப்பாடும் அக்கினியினாலே சோதிக்கப்படும் என்று பவுல் நமக்கு நினைவூட்டுகிறார். ஒருவன் அந்த அஸ்திபாரத்தின் மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல்,மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினது போலிருக்கும். 1 கொரிந்தியர் 3:12-15

  • நிலைத்திருப்பவை வெகுமதி பெறும்; நிலைத்திருக்காதவை நஷ்டப்பட்டுப் போகும். இந்த சோதனை நமது வாழ்க்கையும் உழைப்பும் தேவனுடைய மகிமையால் வடிவமைக்கப்பட்டதா அல்லது சுயத்தால் இயக்கப்பட்டதா என்பதை வெளிப்படுத்துகிறது.

  • அத்திமர சோதனையின் வழியாக, விசுவாசம் நிறைந்த ஜெபத்தின் மூலம் உள்ளார்ந்த சுத்திகரிப்பு எவ்வாறு நடைபெறுகிறது என்பதை இயேசு தமது சீஷர்களுக்குக் கற்றுத்தருகிறார். அத்திமரம் சீக்கிரமாய்ப் பட்டுப்போனதைக் கண்ட ​​சீஷர்கள் ஆச்சரியப்பட்டார்கள். சந்தேகமில்லாத விசுவாசம் தெய்வீக அதிகாரத்தை உடையது என்று இயேசு விளக்கினார். அத்திமரத்தை வாடச் செய்த அதே வல்லமை எல்லா விசுவாசிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது - அது மலைகளை அகற்றி, நமது வாழ்க்கையில் தேவனின் சித்தத்துக்குப் புறம்பான அனைத்தையும் வேரோடு அகற்றுகிறது (மத்தேயு 21:20–22).

    • சீஷர்கள் அதைக் கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப்போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப்பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். மத்தேயு 21:20–22

 

முடிவுரை - உண்மையான கனி தருதல்

அத்திமர சோதனை, தேவன் வெளிப்புற தோற்றங்களுக்கு அப்பால் பார்க்கிறார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. உண்மையான ஆவிக்குரிய நிலை என்பது பரிசுத்தமாகவோ அல்லது மதரீதியாகவோ தோற்றமளிப்பது அல்ல - அது அவருடைய சாயலையும் மகிமையையும் பிரதிபலிக்கும் கனிகளைக் கொடுப்பதாகும். நேர்மையான சுயபரிசோதனை, அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசம் நிறைந்த ஜெபத்தின் மூலம், தேவன் நம் இருதயங்களைச் செம்மைப்படுத்துகிறார், தேவையில்லாததை அகற்றி, நமக்குள் அவருடைய பண்புகளை மீட்டெடுக்கிறார். நமது வாழ்க்கையை அவருடைய சித்தத்துடன் இணைக்கும்போது, ​​வெறும் இலைகளைக் காண்பிப்பதில் இருந்து கிறிஸ்துவை திருப்திப்படுத்தி, அவருடைய நாமத்தை மகிமைப்படுத்தும் நிலையான கனிகளை உண்டாக்கும் நிலைக்கு  நகர்கிறோம்.

 

 

 

 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page