யூதாஸ்காரியோத்: ஒரு விசுவாசியின் எச்சரிக்கை
- Kirupakaran
- Jan 11
- 8 min read

திருச்சபையின் கதையில் ஒரு வில்லன் இருப்பதாகக் கூறினால், அதில் யூதாஸ் மிகவும் துயரமிக்க பாத்திரங்களில் ஒருவராகத் திகழ்கிறார். அவர் கற்பனைக்கு அப்பாற்பட்ட மிகக் கொடிய செயல்களில் ஒன்றைச் செய்தார் - இது ஒரு கணநேரத் தவறல்ல; இயேசுவை அதிகாரிகளிடம் அடையாளம் காட்டும் அவரது திட்டமிட்ட செயல் தான், இயேசுவைக் கைது செய்ய வழிவகுத்தது.
யூதாஸின் வாழ்க்கையைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, அவர் ஒரே இரவில் இப்படியாக மாறவில்லை என்பதைக் காண்கிறோம். அவரது துரோகம் நீண்ட கால உள்மனத் தீர்மானங்களின் விளைவாகும் - சிறிய சமரசங்கள், கட்டுப்பாடற்ற ஆசைகள், புறக்கணிக்கப்பட்ட எச்சரிக்கைகள் இவை அனைத்தும் காலப்போக்கில் ஒன்றிணைந்து ஒரு பேரழிவு தரும் செயலாக வளர்ந்தன. பலமுறை ஆண்டவர் அவருக்கு மனந்திரும்பும் வாய்ப்புகளைத் தந்த போதும் யூதாஸ் அவற்றை புறக்கணித்தார்.
பல வேளைகளில் நாம் யூதாஸில் நம்மைக் காண்கிறோம். நாம் கிறிஸ்துவோடு நடப்பவர்களாகவும், நம்மை விசுவாசிகளென அழைத்துக்கொள்பவர்களாகவும், ஆவிக்குரிய செயல்பாடுகளுக்கு நெருக்கமாக இருப்பவர்களாகவும் இருக்கலாம் - ஆனால் உண்மையான அர்ப்பணிப்பிலிருந்து வெகுதூரமாக வாழக்கூடும். இத்தகைய எச்சரிக்கை அறிகுறிகள் புறக்கணிக்கப்படும்போது, ஆபத்து உண்மையானதாக மாறுகிறது: வெளிப்படையில் நெருக்கமாக இருந்தும், உள்ளார்ந்த முறையில் தொலைவாக இருக்கும் யூதாஸைப் போன்ற விசுவாச நிலைக்கு நாமும் செல்லக்கூடும்.
இந்தப் பதிவு யூதாஸை மகிமைப்படுத்துவதற்காக அல்ல, மாறாக அவருடைய தோல்விகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளுவதற்காகவே எழுதப்படுகிறது - இதனால் நாம் நம் இருதயங்களை ஆராய்ந்து, காலதாமதமின்றி மனந்திரும்பி, அவருடைய அழிவுக்கு வழிவகுத்த பாதையைத் தவிர்க்கலாம். யூதாஸைப் பார்ப்பதற்கு முன், மரியாளின் செயலைப் பார்ப்போம். இதன் மூலம் யூதாஸின் மனப்பான்மையையும் இருதயத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
மரியாளின் செயல்
அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது. யோவான் 12:3
லாசரு மற்றும் மார்த்தாளின் சகோதரியான மரியாள், விலையுயர்ந்த வாசனை திரவியத்தை இயேசுவின் பாதங்களில் ஊற்றி, அவருடைய பாதங்களைத் தன் தலைமுடியால் துடைத்ததன் மூலம் அவர் மீதுள்ள தனது ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தினாள். இந்த செயல் இயேசு யார் என்பதை உண்மையாக அறிந்திருந்த ஒரு இருதயத்திலிருந்து வந்தது.
இயேசுவைப் பற்றி பேசும்போது, அவர்கள் அவரை ஆசிரியர் அல்லது ரபி என்றழைத்தனர்; ஆனால் அவரிடம் நேரடியாகப் பேசும்போது, "ஆண்டவரே" என்று அழைத்தனர். அவர்களின் வார்த்தைகள் அவர்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தின. மார்த்தாள் இயேசுவை இரண்டு முறை "ஆண்டவரே" என்று அழைத்தாள் (யோவான் 11:21, 27). மரியாள் அவரை ஒரு முறை "ஆண்டவரே" என்று அழைத்தாள் (யோவான் 11:32).
மரியாள் நளதம் என்னும் தைலத்தை ஊற்றிய செயல் உணர்ச்சிவசப்பட்டு செய்தது அல்ல - அது ஆழ்ந்த விசுவாசத்தினால் வந்தது.
அன்பும் நன்றியுணர்வும் - இயேசு தன் சகோதரன் லாசருவை மரணத்திலிருந்து எழுப்பியதை அவள் நேரில் கண்டிருந்தாள்.
இயேசுவின் அடையாளத்தை உணர்தல் - இயேசு மேசியா என்பதை மரியாள் புரிந்துகொண்டாள், அவருடைய வரவிருக்கும் மரணத்தை உணர்ந்தாள். அவளது செயல் தீர்க்கதரிசனமாக இருந்தது, அது அடக்கத்திற்கு முன்னதாக அவரை அபிஷேகம் செய்ததாக அமைந்தது (யோவான் 12:7).
ஆராதனையும் கனமும் – அந்த வாசனை திரவியம் ஒரு வருட சம்பளத்திற்குச் சமானமாய் இருந்தாலும், மரியாள் அதை முழுவதுமாக ஊற்றியதன் மூலம் இயேசு செல்வத்தையும் உடைமைகளையும் விட மேலானவர் என்பதைக் காட்டினாள்.
சுருக்கமாகச் சொன்னால், இயேசுவின் கட்டளைப்படி மரியாள் வாழ்ந்தாள்: இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; மத்தேயு 22:37
மற்றவர்கள் வீணாகக் கண்டதை மரியாள் ஆராதனையாக அர்ப்பணித்தாள் - ஏனென்றால் அவளுக்கு இயேசு உண்மையிலேயே ஆண்டவராக இருந்தார்.
மரியாளின் ஆராதனை செயலுக்கு யூதாஸ் காட்டிய எதிர்வினை
அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது. அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டி கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து: இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான். அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான். யோவான் 12:3-6
இயேசுவுக்கு பன்னிரண்டு சீஷர்கள் இருந்தனர், யூதாஸ் அவர்களில் ஒருவராக இருந்தார்.
யூதாஸ் மரியாளின் செயலை பணத்தின் பார்வையிலே பார்த்தார். மரியாள் ஆராதனையாக அர்ப்பணித்ததை யூதாஸ் வீண் என்று எண்ணினார் - ஏனென்றால் இயேசுவை கனம் பண்ணுவதைக் காட்டிலும் யூதாஸ் பணத்தையே அதிகமாக மதித்தார்.
யூதாஸ்காரியோத்தைப் பற்றி நாம் அறிந்தவை
1. யூதாஸ் பணத்திற்கு பொறுப்பாளராக இருந்தார்
யூதாஸின் இருதயத்தை இயேசு அறிந்திருந்தாலும் கூட, 12 சீஷர்களில் அவரிடமே பணப்பை ஒப்படைக்கப்பட்டது.
சீஷர்களின் தேவைகளுக்காக பொதுப் பணம் இருந்தது (யோவான் 13:29). யூதாஸ் பணப்பையை வைத்துக்கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள். யோவான் 13:29
அவருடைய பதவி அவருக்கு அணுகலையும் வாய்ப்பையும் அளித்தது. பணப்பையை கையாளும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால், அவர் எல்லாவற்றையும் பணத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினார்.
2. இயேசு யூதாஸின் இருதயத்தையும் துரோகத்தையும் அறிந்திருந்தார்
தன்னைக் காட்டிக் கொடுப்பவர் யார் என்பதை இயேசு ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தார் (யோவான் 6:64, 70–71). 64ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்: 70. இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார். 71சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரிலொருவனாயிருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனாயிருந்தபடியினால் அவனைக் குறித்து இப்படிச் சொன்னார். யோவான் 6:64, 70-71
பின்னர் சாத்தான் யூதாசுக்குள் புகுந்து, காட்டிக்கொடுக்கும்படி அவரைத் தூண்டினான் (லூக்கா 22:3). யூதாஸைக் குறிப்பிட்டு, உங்களில் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்று இயேசு வெளிப்படையாகக் கூறினார். அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான். லூக்கா 22:3
யோவான் சுவிசேஷத்தில் யூதாஸ் எட்டு முறை குறிப்பிடப்படுகிறார். இது அவரது பங்கின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது.
யூதாஸ் ஒரு அவிசுவாசி (யோவான் 6:64-71), எனவே சாத்தானின் தாக்குதல்களை எதிர்கொள்ள விசுவாசத்தின் கவசம் அவரிடம் இல்லை.
3. யூதாஸ் ஒரு திருடன்
மரியாள் விலையுயர்ந்த வாசனை திரவியத்தைப் பயன்படுத்தியதை யூதாஸ் எதிர்த்தார் (யோவான் 12:4–6).
தரித்திரர் மீதான அவரது கவலை உண்மையானதல்ல. அவர் ஒரு மாய்மாலக்காரர்.
வேதம் தெளிவாகக் கூறுகிறது: அவன் தரித்திரரைக் குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான். யோவான் 12:6
யூதாஸின் இருதயம்: சுயநலம் மற்றும் பேராசையின் மாதிரி
யூதாஸின் பணவெறி ஒரு தனி தவறு அல்ல, அது அவரது இருதயத்தின் பழக்கமாய் இருந்தது. ஆரம்பத்திலிருந்தே, அவர் தேவனை விட சுயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, மனநிறைவுக்குப் பதிலாக பேராசையைத் தேர்ந்தெடுத்தார். இறுதியில், மனஸ்தாபப்பட்டார், ஆனால் மனந்திரும்புதலுக்கும் ஜீவனுக்கும் வழிவகுக்கும் நம்பிக்கை அவருக்குத் தோன்றவில்லை.
யூதாஸ் சுயத்தை மகிழ்விக்க வாழ்ந்தார்
யூதாஸ் மூன்று ஆண்டுகள் இயேசுவுடன் நடந்தார்.
அவருடைய போதனைகளைக் கேட்டார், அவருடைய அற்புதங்களைக் கண்டார், அவருடைய அன்பை அனுபவித்தார், ஆயினும் அவரது இருதயம் மாறாமல் இருந்தது. அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும்,பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான். யோவான் 12:6
யூதாஸ் இயேசுவுடன் நடந்திருந்தாலும், அவர் பணத்திற்கு முன்னுரிமை கொடுத்ததால் அன்பு மற்றும் சீஷத்துவத்தின் செய்தி அவரை ஒருபோதும் பாதிக்கவில்லை.
யூதாஸின் பேராசையும் சுயநலமும் அவரை ஆண்டன
சுயத்திற்கு மரிப்பதற்குப் பதிலாக (லூக்கா 9:23), யூதாஸ் தனது சுயவிருப்பத்தையும், பண ஆசையையும், அதிகாரத்துக்கான விருப்பத்தையும் வளர்த்துக் கொண்டார்.
யூதாஸ் இரட்சகரை விட வெள்ளியை மதித்தார். அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்: நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். மத்தேயு 26:14-16
யூதாஸ் தனது சுயநலத்தின் காரணமாக சாத்தானுக்கு ஒரு திறந்த வாசலாக மாறினார். அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார். யோவான் 13:27
தொடர்ச்சியான பாவம் சத்துருவுக்கு பிடிமானம் ஏற்படுத்துகிறது. அது சிறியதாக இருந்தபோதே அவர் அதை அகற்றவில்லை - அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். யாக்கோபு 1:14-15
யூதாஸின் கட்டுப்பாடற்ற ஆசை (சுயநலம்) துரோகத்திற்கு வழிவகுத்தது, மேலும், துரோகம் அழிவுக்கு வழிவகுத்தது.
சுயநலம் விரக்தியிலும் மரணத்திலும் முடிவடைகிறது
இயேசுவைக் காட்டிக் கொடுத்த பிறகு, யூதாஸ் ஆழ்ந்த மனஸ்தாபப்பட்டார், ஆனால் தேவனிடம் திரும்பவில்லை. அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக்கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். மத்தேயு 27:3-5
அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார், ஆனால் மன்னிப்பை நாடவில்லை.
பேதுருவைப் போல இரக்கத்திற்காக இயேசுவிடம் ஓடுவதற்குப் பதிலாக, அவர் மரணத்தை நோக்கி ஓடினார்.
இயேசுவிடம் நெருக்கமாக இருப்பதும் இயேசுவுக்கு முழுமையாக அர்ப்பணிப்பதும் ஒன்றல்ல என்பதை யூதாஸின் வாழ்க்கையும் அவரது வாழ்க்கை சம்பவங்களும் காட்டுகின்றன.
யூதாஸ் இரட்சகருடன் வாழ்ந்தாலும் சுயத்தைத் தேர்ந்தெடுத்தார், சுயம் எப்போதும் அழிவில் முடிகிறது.
யூதாசைப் போல் மாறாமல் இருப்பது எப்படி?
தன்னை இரட்சகரிடம் முழுமையாக அர்ப்பணிக்காதது அவரது வீழ்ச்சிக்கு காரணமாகியது, யூதாஸ் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இதுவே. யூதாஸ் இயேசுவிடம் இந்த வசனத்தைக் கேட்டிருந்தாலும் இதற்கு ஒருபோதும் கீழ்ப்படியவில்லை, பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். லூக்கா 9:23
பல சமயங்களில், நாம் யூதாஸைப் போலவே இருக்கிறோம். நம்மில் சிலர் பல ஆண்டுகளாக, தலைமுறை தலைமுறையாகக் கூட கிறிஸ்துவில் விசுவாசிகளாக இருக்கிறோம், சிலர் தேவனுடைய ராஜ்யத்தில் புதியவர்களாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில், அனைவரும் வைராக்கியமுள்ளவர்களாகவும், தேவன் மீது அன்பு நிறைந்தவர்களாகவும் இருக்கிறோம், ஆனால் ஆவிக்குரிய பயணத்தில் வளரும்போது, ஆதியிலிருந்த அந்த அக்கினி மங்கிவிடுகிறது.
நாம் கர்த்தருடன் எவ்வளவு தொலைவு எவ்வளவு காலம் நடந்திருந்தாலும், நாம் பலமாக இருந்தாலும் பலவீனமாக இருந்தாலும், சாத்தான் எப்போதும் நம்மை வழிதவறச் செய்ய முயல்கிறான். அதனால்தான் யூதாஸைப் போல மாறுவதைத் தவிர்க்க கீழ்க்கண்ட இந்த மூன்று விஷயங்களையும் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம். நாம் இயேசுவிற்கு வெளிப்படையாகத் துரோகம் செய்யாமலிருக்கலாம், ஆனால் நமது மறைமுகமான செயற்பாடுகள் பல நேரங்களில் அதிகமான தீங்குகளை உண்டாக்குகின்றன - சில சமயங்களில் யூதாஸின் செயல்களை விட இரண்டு மடங்கு அதிகமாக கூட பாதிப்பை உண்டாக்கலாம்.
1. சுயத்தை சிலுவையில் அறைதல் - கலாத்தியர் 2:20
பவுல் கலாத்தியர் 2:20 இல் கூறுகிறார்: "கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் ...".
இதன் பொருள் கிறிஸ்துவின் ஜீவன் நம்மில் பாயக்கூடிய வகையில், பழைய மனிதனை - நமது பாவ இயல்பு, பெருமை மற்றும் சுயநல ஆசைகளை அழிப்பதைக் குறிக்கிறது.
2. கிறிஸ்துவை தரித்துக்கொள்ளுதல் – ரோமர் 13:14
பவுல் ரோமர் 13:14 இல் கூறுகிறார்: துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
நம் சுயத்தை சிலுவையில் அறையும்போது, இயேசுவின் குணங்களை - அவருடைய நீதி, அன்பு, தாழ்மை மற்றும் கீழ்ப்படிதலை "தரித்துக்கொள்கிறோம்".
3. ஜீவபலியாக வாழ்தல் – ரோமர் 12:1–2
ஆபிரகாம் ஈசாக்கை தேவனுக்கு அர்ப்பணித்தது போல, நாமும் நம் மனதையும், சரீரத்தையும் தேவனுக்கு ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்கும்படி பவுல் கூறுகிறார். இது தேவனுக்குப் பரிசுத்த ஆராதனையாகவும் அவருக்குப் பிரியமான செயலாகவும் இருக்கிறது. அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12:1-2
சுயம் சிலுவையில் அறையப்பட்ட பிறகு, நமது முழு வாழ்க்கையையும் ஆராதனையாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும் போது, அவர் நமது சிந்தனைகள், பழக்கங்கள் மற்றும் ஆசைகளை மாற்ற அனுமதிக்கிறோம்.
மனம் வார்த்தையால் புதுப்பிக்கப்படுகிறது; அவருடைய ஒளியின் வழிநடத்துதலால் சுயம் அகற்றப்படுகிறது. அவருடைய புதிய சரீரம் நம்முள் முழுமையாக நிலைபெற்று, நம்மில் அவரது செயல்களை செய்ய வழிநடத்துகிறது.
உங்களை முழுமையாக அர்ப்பணித்துவிட்டால், சாத்தானுக்கு உங்கள் சுயம் சரீரம் மற்றும் மனத்தின் மீது எந்த அதிகாரமும் இருக்காது.
இயேசுவின் வேறுபாடு: இயேசு மனிதர்களை அணுகும் விதம்
இந்தப் பகுதியை தியானித்தபோது, நான் என்னையே கேட்டுக்கொண்டேன் - இவ்வளவு குறைகளுள்ள ஒருவரை முடிவை அறிந்தே, நான் தேர்ந்தெடுத்திருப்பேனா? நம்மில் அநேகர் அப்படிச் செய்ய மாட்டோம். ஆனாலும் இயேசு யூதாஸைத் தேர்ந்தெடுத்தார், அந்தத் தேர்வின் மூலம், அவருடைய ஞானம், கிருபை ஆகியவற்றின் வழியாக நமக்கு விலைமதிப்பற்ற பாடங்களைக் கற்றுக்கொடுத்தார்.
1. யூதாஸைத் தேர்ந்தெடுத்ததில் இயேசுவின் குணம்
இயேசுவின் இருதயத்தின் அற்புதமான உதாரணம்! பன்னிரண்டு சீஷர்களில் அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்காரியோத்துக்கு நெருக்கமான உறவும் நம்பிக்கையும் வழங்கப்பட்டன.
யூதாஸ் ஒரு திருடன் என்று வேதாகமம் கூறுகிறது (யோவான் 12:6). இறுதியில் சாத்தான் அவருக்குள் நுழைந்தான் (யோவான் 13:27).
ஆயினும் தன்னைக் காட்டிக் கொடுக்கப் போவது யார் என்பதை இயேசு ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தார் (யோவான் 6:64).
நமக்கு இப்படிப்பட்ட ஒரு சீஷர் இருந்தால் நாம் எப்படி நடந்துகொள்வோம்? நானாக இருந்தால் அவனைக் கடிந்து, அவமானப்படுத்தி, திட்டி, அவனுடைய பாசாங்கைக் கண்டித்திருப்பேன்.
நம்மில் பலரும், ஒருவரின் மாய்மாலம் அல்லது மறைவான பாவத்தை அறிந்தால், அவற்றை எதிர்கொண்டு, வெளிப்படுத்துவோம் அல்லது அகற்றிவிடுவோம். ஆனால் இயேசு அப்படி செய்யவில்லை. அதற்கு பதிலாக, அவர் யூதாஸை இறுதிவரை முழுமையாக நேசித்தார் (யோவான் 13:1), காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில் கூட அவரது கால்களைக் கழுவினார் (யோவான் 13:5).
2. யூதாஸ் பாவம் செய்த போதிலும் இயேசுவின் அன்பு
எந்த கண்டித்தலும் வெளிப்படையான அவமரியாதையும் இல்லை - இயேசு யூதாஸை ஒருபோதும் பகிரங்கமாகக் கடிந்துகொள்ளவோ அவமானப்படுத்தவோ இல்லை, ஆனால் அவர் பல முறை அன்புடன் எச்சரித்தார்.
நிலையான இரக்கம் - இயேசு மற்ற சீஷர்களை நடத்தினது போலவே யூதாஸையும் அதே இரக்கத்துடன் நடத்தினார்.
மனந்திரும்புவதற்கான வாய்ப்பு - கடைசி இராப்போஜனத்தில், இயேசு யூதாஸுக்கு அப்பத்தை நீட்டினார் (யோவான் 13:26) - இது யூத கலாச்சாரத்தில் நட்பின் அடையாளமாகும் - யூதாஸ் திரும்பி வருவதற்கான இறுதி வாய்ப்பாக இது இருந்தது.
இது தேவனுடைய அன்பு நம் குணத்தைச் சார்ந்ததல்ல, அவரது இயல்பைச் சார்ந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. யூதாஸின் துரோகம் இயேசுவின் அன்பை மாற்றவில்லை.
இயேசு தமது இறுதி வார்த்தைகளில் இவ்வாறு கூறினார்: "... பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்...". லூக்கா 23:34 - இது பொதுமக்களுக்கானது மட்டுமல்லாமல், யூதாசுக்கும் சேர்த்து சொல்லப்பட்டது.
தன்னைக் காட்டிக் கொடுத்தவனை, பணிகளுக்காக சேகரிக்கப்பட்ட பணத்தைத் திருடியவனை மன்னித்ததில் இயேசுவின் அன்பு வெளிப்பட்டது.
3. பணத்தை அல்ல, இயேசுவை நம்புங்கள்
யூதாஸ் திருடுவதை அறிந்திருந்தும், இயேசு யூதாஸை பணப்பைக்கு பொறுப்பாக வைத்தார் (யோவான் 12:6).
ஏன்? தேவனுடைய ராஜ்யம் ஒருபோதும் பணத்தின் மீது கட்டப்படவில்லை, கீழ்ப்படிதலிலும் விசுவாசத்திலும் கட்டப்படுகிறது என்பதைக் காட்டுவதற்காக.
பவுலும் ஆதி திருச்சபையும் இந்த உண்மையைப் பிரதிபலித்தனர்: காணிக்கைகள் அப்போஸ்தலர்களின் காலடியில் வைக்கப்பட்டன (அப்போஸ்தலர் 4:34–35), அதிகாரம் அல்லது அந்தஸ்தைப் பெற பயன்படுத்தப்படவில்லை.
4. தீர்க்கதரிசன நிறைவேறல்
யூதாஸின் துரோகம் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல, அது தேவனுடைய திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
தீர்க்கதரிசனத்தை முழுமையாக நிறைவேற்ற யூதாஸை அந்தப் பொறுப்பில் இருக்க அவர் அனுமதித்தார் (சகரியா 11:12-13, சங்கீதம் 41:9; யோவான் 13:18).
உங்கள் பார்வைக்கு நன்றாய்க் கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள். கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன். சகரியா 11:12-13
என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். சங்கீதம் 41:9
உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். யோவான் 13:18
இயேசுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை
உங்களைத் தோல்வியுறச் செய்பவர்களை நேசியுங்கள் - இயேசுவால் யூதாஸ் மீது அன்பு காட்ட முடிந்தால், நாமும் நம்மைக் காயப்படுத்துபவர்களையும் நமக்கு துரோகம் செய்பவர்களையும் நேசிக்க அழைக்கப்படுகிறோம் (மத்தேயு 5:44). இதைச் சொல்வது எளிது, ஆனால் வாழ்வது கடினம். இது தேவனிடம் நமது பலவீனத்தை உண்மையாய் ஒப்புக்கொண்டு, அவர் யூதாஸிடம் காட்டிய அதே அன்பால் நம்மை நிரப்பும்படி கேட்பதன் மூலம் தொடங்குகிறது - அப்பொழுது நாம் அந்த அன்பை மற்றவர்களுக்கும் பரப்ப முடியும்.
தேவனுடைய திட்டத்தை மனிதர்கள் செய்யும் தீங்கு நிறுத்த முடியாது - சாத்தான் தீங்கு செய்ய நினைத்ததை தேவன் இரட்சிப்பாக மாற்றினார் (ஆதியாகமம் 50:20; அப்போஸ்தலர் 2:23). இந்த உலகத்தை ஆள்பவனை விட தேவன் மிகவும் பெரியவர் மற்றும் வலிமையானவர். எல்லா வல்லமையும் அதிகாரமும் அவருக்கே சொந்தமானது, அவருடைய சுவாசம் சாத்தானின் அனைத்து சக்தியையும் வெல்ல போதுமானது.
மனந்திரும்பும் வாய்ப்பு எப்போதும் திறந்திருக்கும் - யூதாஸுக்கு மனந்திரும்ப வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அதற்குப் பதிலாக அவர் துயரத்தைத் தேர்ந்தெடுத்தார் (மத்தேயு 27:3–5). உண்மையான துயரம் அவரது பாவம் அல்ல, மாறாக அவருக்கு வழங்கப்பட்ட கிருபையை ஏற்க மறுத்ததே. நாம் எவ்வளவு தூரம் அலைந்து திரிந்திருந்தாலும், எவ்வளவு கீழே விழுந்திருந்தாலும் (கெட்ட குமாரனைப் போல), இயேசு திறந்த கரங்களுடன் நமக்காகக் காத்திருக்கிறார். அவர் எப்போதும் இரட்சிக்கத் தயாராக இருக்கிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம்மைப் பிதாவிடம் அர்ப்பணித்து, "பிதாவே, நான் என்னை உங்களிடம் ஒப்படைக்கிறேன். என் வாழ்க்கையை உங்கள் ராஜ்யத்திற்காகப் பயன்படுத்துங்கள்" என்று சொல்வது தான்.



Comments