வெதுவெதுப்பான ஆவிக்குரிய நிலை
- Kirupakaran
- Jun 27, 2021
- 4 min read

வெப்ப நீரூற்று - இது நாம் இந்தியாவில் கேள்விப்படாத, பார்த்து அனுபவிக்காத ஒன்று. ஒரு நீரூற்றில் இருந்து வெளியேறும் நீர் இயற்கையாகவே சூடாக இருப்பதே வெப்ப நீரூற்று ஆகும். சற்றுத் தள்ளி அதே நீரூற்றுகளிலிருந்து வரும் தண்ணீர் சூடாகவோ அல்லது குளிராகவோ இல்லாமல் வெதுவெதுப்பாக இருக்கும். இது நம் உடலுக்கு ஏற்ற விதத்தில் இருப்பதால் நம் கால்களை நனைக்கவோஅல்லது சிறிது நேரம் நீரில் நீந்தவோ நன்றாக இருக்கும். இது ஒரு இயற்கை மூலமாக இருப்பதால், கோடை மற்றும் குளிர்கால நாட்களில் கூட ஆண்டு முழுவதும் நீர் வெப்பநிலை அப்படியே இருக்கும். அமெரிக்காவில் பல வெப்ப நீரூற்றுகள் (ஹாட் ஸ்பிரிங்ஸ்) உள்ளன. அமெரிக்காவில் வசிக்கும் மக்கள் இந்த வெப்ப நீரூற்றுகளை அனுபவித்திருக்கலாம்.
வெளிப்படுத்துதல் 3: 14-21 வசனங்களைத் தியானிக்கும் போது இந்த செய்தியை எழுத கடவுள் எனக்கு வெளிப்படுத்தினார்.
வெளிப்படுத்துதல் 3: 14-21, யோவான் இதை லவோதிக்கேயா தேவாலயத்திற்கு எழுதுகிறார். லவோதிக்கேயா பிரதேசம் இன்றைய துருக்கியில் உள்ளது. முன்பு அது குறிப்பிடத்தக்க அளவிலான யூத மக்களைக் கொண்ட ஒரு முக்கியமான மற்றும் வளமான நகரமாக இருந்தது. இப்பகுதியில் உள்ள மற்ற நகரங்களைப் போலவே, இது சீசர் வழிபாட்டிற்கும், “அஸ்கெல்பியோஸ்” என்ற குணப்படுத்தும் கடவுளின் வழிபாட்டிற்கும் ஒரு மையமாக இருந்தது. அவர்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாட்டு பிரச்சினை இருந்ததால் அதை வைத்துலவோதிக்கேயாவை முற்றுகை மூலம் தாக்கக்கூடியதான ஒரு சூழல் இருந்தது. எனவே, லவோதிக்கேயாவின் தலைவர்கள் எப்போதுமே எந்தவொரு சாத்தியமான எதிரியையும் பொறுத்துக் கொண்டிருந்தார்கள். எப்போதும் சண்டையிடுவதற்குப் பதிலாக பேச்சுவார்த்தை மற்றும் சமரசம் செய்ய விரும்பினர். தண்ணீர் வெப்ப நீரூற்றுகளிலிருந்து வந்ததால், அது மந்தமாக வந்தது. பவுல் இந்த தேவாலயத்தைப் பற்றி கொலோசெயர் 2: 1 மற்றும் 4:16 இல் குறிப்பிடுகிறார்.
வெதுவெதுப்பான ஆவிக்குரிய நிலை
இந்தப் பகுதி லவோதிக்கேயா தேவாலயத்துக்கு எழுதப்பட்டது. ஆனால், அது இன்றும் நமக்கும் பொருத்தமாக இருக்கிறது.
'உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். 'வெளிப்படுத்தின விசேஷம் 3:15-16
“நீ குளிருமல்ல” - ஆவிக்குரிய ரீதியில் குளிர் என்றால் என்ன - இது இயேசுவை நம்முடைய சொந்த இரட்சகராக ஏற்காமல் / அறியாமல், இயேசுவின் மீது நம்பிக்கை வைக்காத நிலையைக் குறிக்கும்.
“நீ குளிருமல்ல அனலுமல்ல” – ஆகவே, ஆவிக்குரிய ரீதியில் அனல் என்னவென்றால் - இயேசுவை விசுவாசிப்பதும், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் கடவுளை கண்ணியப்படுத்துவதும் ஆகும். முழுக்க முழுக்க கடவுளை மையப்படுத்தி இருக்கும் ஒரு வாழ்க்கை. வேதத்தில் நாம் காண்கின்ற யோவான், பவுல் போன்றோர்களின் வாழ்க்கையை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
“இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால்” - ஆவிக்குரிய ரீதியில், வெதுவெதுப்பு என்பது அலட்சியம் மற்றும் சமரசத்தின் ஒரு செயல். இது நடுத்தர நிலையை வெளிப்படுத்தும். இந்த நிலையில் குளிர்ச்சியாகவும் இல்லாமல் மிகவும் சூடாகவும் இல்லாமல் சூழ்நிலைக்கேற்றவாறு இரண்டு விஷயங்களாகவும் இருக்க முயற்சிப்பது. ஆம் பிரியமானவர்களே, நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் நம்மில் பலர் இப்படிப்பட்டவர்களாகத் தான் வாழுகிறோம்.
வெதுவெதுப்பான கிறிஸ்தவருக்கு சடங்காச்சாரமான வாழ்க்கையுடன் மதத்திற்கான ஏக்கத்தைப் பூர்த்தி செய்ய இயேசு தேவைப்படுகிறார். ஆனால் அவர்கள் ஏசுவை நித்திய ஜீவனுக்குப் போதுமானதாக தேடுவதில்லை.
ஆலயத்திற்குச் செல்வதன் மூலம் அவர்கள் மதக் கடமையைப் பூர்த்தி செய்கிறார்கள். ஆவியின் சித்தத்தின் படி காரியங்களைச் செய்ய மாட்டார்கள். கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு, மரபுகள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறதோ அதைச் செய்வார்கள். தேவன் என்ன நோக்கத்திற்காகப் படைத்தார், ஏன் அவர்கள் அங்கே இருக்கிறார்கள் என்ற அர்த்தத்தை அறியாமல் செயல்படுவார்கள்.
அவர்கள் பிரார்த்தனைக் கூட்டங்களில் பங்கு பெறுவார்கள். ஆனால் ஆன்ம ரீதியாக அல்லாமல், பெயருக்கு பிரார்த்தனைக் கூட்டங்களில் பங்கெடுப்பார்கள். அவர்கள் நடத்தும் கூட்டங்கள் மந்தமான கூட்டங்களாக இருக்கும். தேவனிடத்தில் தங்கள் உணர்ச்சிகளைக் காட்ட மிகவும் வெட்கப்படுவார்கள் .
அவர்கள் வேத வகுப்புகள், போதனைகள் மற்றும் எல்லா வகையான தேவ வேலைகளையும் செய்து கொண்டிருக்கலாம். ஆனால் அவைகளினாலே எந்த ஒரு பலனும், நன்மையும் வெளிவருவதில்லை. அதற்கு பதில் அவர்கள் இவைகளில் பங்கு பெறாமலே இருக்கலாம்.
ஆலயத்தில் உள்ள போதகர் தம்முடைய போதனைகள் மூலம் மக்களுக்கு ஒரு விடி வெள்ளி போல் இல்லாமல் மந்த நிலையில் வழிநடத்துவார்.
எல்லாமே அரை மனதுடன், ஜீவனில்லாமல் செய்யப்படுகின்றன. அந்த நிலையில் இருப்பதற்கு , இல்லாமல் இருப்பதே மேல் என்ற நிலை.
வெதுவெதுப்பான கிறிஸ்தவர்கள் தங்கள் பார்வையில் தங்களை நீதியுள்ளவர்கள் என்று எண்ணுவார்கள்.
"நான் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்" என்று தேவனுடைய வார்த்தை சொல்கிறது. எனவே, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் அப்படி வாழ்கிறோமா என்று ஆராய்ந்து பார்ப்போம். நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம். கடவுளுக்குக் கோபத்தை வரவழைத்து அவருடைய வாயிலிருந்து துப்பப்படுகிற நிலையைத் தவிர்ப்போம். ஏனெனில்,கடவுள் வெதுவெதுப்பான கிறிஸ்தவ வாழ்க்கையை மிகவும் வெறுக்கிறார் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம்.
ஆவிக்குரிய வாழ்வில் ஒன்றும் இல்லாத நிலை
வியாபாரத்தில் திவால்நிலை என்பது அவர்களிடம் உள்ள எல்லாவற்றையும் இழந்து வியாபாரத்திலிருந்து வெளியேறும் நிலை ஆகும்.
'நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான்ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்; 'வெளிப்படுத்தினவிசேஷம் 3:17
வெதுவெதுப்பான கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய ரீதியில் வெறுமையாக இருக்கின்றோமா என்று தெரிந்து கொள்ள இந்த வசனத்தை சற்றுசிந்திந்து, ஆராய்ந்து பாருங்கள்.
“நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும்”
லவோதிக்கேயாவில் உள்ள ஆலயத்தில் ஆவிக்குரிய உணர்வு இல்லை. அவர்கள் தங்களை ஆவிக்குரிய விஷயத்தில் “ஐசுவரியவான்” என்று சொன்னார்கள். அவர்கள் சுய ஆராய்ச்சிக்குப் பின் தங்களை "திரவியசம்பன்னன்" என்று கூறுகிறார்கள். பின்னும் அவர்கள் தங்களுக்கு "ஒரு குறைவுமில்லை" என்றும் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்வைக் குறிப்பிடுகின்றனர். தங்களுடைய செல்வத்தை வைத்து அவர்கள் வாழும் கிறிஸ்தவ வாழ்வில் எல்லா காரியங்களையும் செய்துகொண்டு கடவுள் பார்வையில் "ஐசுவரியவான்" என்றும் கத்துகின்றனர்.
லவோதிக்கேயா ஆலயத்தினர் தங்கள் உலக சொத்தை வைத்து தாங்கள் "ஐசுவரியவான்" என்று கருதினர். அவர்களிடத்தில் தேவன் மீதான வைராக்கியமும் / அன்பும் இல்லாமல் வெறும் சடங்காச்சாரமான ஒரு அன்பு மட்டுமே இருந்தது. அவர்களைப்போன்று தான் பல கிறிஸ்தவர்கள் உள்ளோம்.
"'நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல்" என்று தேவன் அவர்களை மிக மோசமாக மதிப்பிடுகிறார். ஆனால், அவர்களோ அவர்களை "ஐசுவரியவான்" என்று கருதினர். இப்படித் தான் நம்மில் பலரும் நம் பார்வையில் உத்தமராகவும் தேவனுடைய பார்வையில் மிக மோசமாகவும் உள்ளோம்.
ஆண்டவருடைய பார்வையில் கீழ்கண்டவாறு இருந்தார்கள் :
நிர்ப்பாக்கியமுள்ளவன் - இயேசு அவர்களின் வாழ்க்கையை பயனற்றதாகக் கருதினார். அவர்களுடைய செல்வம் இயேசுவுக்கு ஒன்றும் பெரிதில்லை. அந்த செல்வத்தை வைத்து நம்முடைய தேவனை வாங்க முடியாது.
பரிதபிக்கப்படத்தக்கவன் - இயேசு அவர்களின் வாழ்க்கையை பரிதாபகரமானதாகவும், பயங்கரமானதாகவும் பார்த்தார்.
தரித்திரன் - இயேசு அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் அவர்களை ஏழைகளாகவே பார்த்தார், அதேசமயம் அவர்கள் தங்களை பணக்காரர்களாகவே கருதினார்கள்.
குருடன் - உலக வாழ்க்கையில் அவர்கள் சாத்தானின் செயல்களால் பிணைக்கப்பட்டு இருந்ததால், இயேசு அவர்களை குருடர்களாகவே பார்த்தார்.
நிர்வாணி - இயேசு அவர்களை நிர்வாணமாகக் கண்டார், அவர்களுடைய பாவ ஆசைகள், செல்வத்திலிருந்து வரும் காமம் எல்லாம் அவருடைய கண்களுக்கு நிர்வாணமாகத் தெரிந்தது.
இது யோவான் நமக்காக எழுதிய ஒரு அழகான விழிப்புணர்வு பார்வை. இதைக் கொண்டு உங்கள் வாழ்க்கையைக் குறித்து தேவனின் பார்வை எப்படி இருக்கிறது என்பதை சற்று ஆராய்ந்து பாருங்கள்.
தேவனுடைய அழைப்பு
தேவன் நம்மை நேசிப்பதால், மனந்திரும்புதலின் இந்த செய்தியை அவர் நமக்குச் சொல்கிறார். மேலும், நம்முடைய ஆவிக்குரிய வாழ்வை அனலாக மாற்றுவதற்கு நம்மிடம் "மனந்திரும்புதலை" எதிர்பார்க்கிறார்.
'நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. 'வெளிப்படுத்தின விசேஷம் 3:19
அவர் கேட்பதெல்லாம் மனந்திரும்புதல் - உங்கள் இதயத்திலிருந்து மனந்திரும்பி அவரிடம் திரும்பி வாருங்கள். அவருடன் நெருக்கமாக நடந்து கொள்ளுங்கள் .
நீங்கள் மனந்திரும்பி அவரிடம் வந்தவுடன், அவர் உங்களை மாற்றி புது மனிதனாக மாற்றுவார். பழையவை ஒழிந்து போகும். இதுவே அவர் நமக்கு அளிக்கும் வாக்குறுதியாகும்.
நீங்கள் அவரிடம் திரும்பும்போது, அவர் இந்த வாக்குறுதியை உங்களுக்கு அளிக்கிறார்.
'நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம்தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீபார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். 'வெளிப்படுத்தின விசேஷம் 3:18
“உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்” – நீங்கள் தினமும் அவரைத் தேடி, அவருடன் நடக்கும்போது, அவர் உங்களுக்கு ஆலோசனை கூறுவார். நீங்கள் தேவனால் அறிவுறுத்தப்படுகையில், உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை வெதுவெதுப்பில் இருந்து அனலாக மாறும்.
“நீ ஐசுவரியவானாகும்படிக்கு” – இங்கே விவரிக்கப்பட்டுள்ள ஐசுவரியவான் என்பது உலக ஐசுவரியம் அல்ல. ஆடம்பரமான வாழ்க்கை வாழ தேவன் நம்மை அழைக்கவில்லை. ஆவிக்குரிய வாழ்க்கையில் நம்மை ஐசுவரியம் நிறைந்தவர்களாக மாற்றுவார்.
“நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும்” - ஒரு தங்கம் பிரகாசிக்க, அது நெருப்பில் காயப்பட வேண்டும். நீங்கள் அவருடன் நடக்கும்போது, அவர் உங்கள் ஆசைகளை எரித்து, இயேசுவின் மீதான வைராக்கியத்தை உங்களில் ஒளிரச் செய்து, இயேசுவின் அக்கினி நம்முடைய வாழ்வில் தங்கத்தைப் போலப் பிரகாசிப்பதைக் காணச் செய்வார்.
“உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும்” – இயேசுவின் தூய்மையை நாம் பெற்றுக் கொள்ளும் போது, அவருடைய நீதியானது நம்மை உடுத்தி, உலகில் வெளிப்படும் வெட்கக்கேடான நிர்வாண விஷயங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். நாம் இயேசுவுக்கு பொறுப்பான வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிடுவோம்.
“நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும்” – நாம் குருடர்களாய் இருப்பது சாத்தானால் ஏற்படும் நிலை. நம் பாவங்களை மறைத்து / ஏமாற்றி நம்மை குருடராக மாற்றுவான். நாம் தேவனோடு நடக்கும் போது, நம் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படுகின்றன. இதன் மூலம் வெதுவெதுப்பான நிலையில் இருந்து அனலான நிலைக்குமாற்றப்படுவோம்.
எனவே, உங்கள் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்து பாருங்கள். நீங்கள் செல்லும் தேவாலயம், நீங்கள் வாழும் வழிகள் என உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பகுத்து ஆய்வு செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை இயேசுவில் ஒரு குளிர் வாழ்க்கையா? அல்லது வெதுவெதுப்பான வாழ்க்கையா? அல்லது அனலான வாழ்க்கையா?
ஒரு வேளை குளிர் அல்லது வெதுவெதுப்பானதாக இருந்தால் - மனந்திரும்பி, உங்கள் வழிகளை இயேசுவிடம் அர்ப்பணியுங்கள்.
உங்கள் வாழ்க்கை அனலாக இருந்தால், தொடர்ந்து தேவனிடத்தில் தாழ்மையான வாழ்க்கையை வாழுங்கள். தேவனுக்குப் பிரியமான ஒரு புனிதமான வாழ்க்கையை நடத்துவதற்கு உங்கள் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்யுங்கள். பவுல் வாழ்ந்த வாழ்க்கை போல வைராக்கியத்துடன், இயேசுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழுங்கள். பேதுரு சொல்வது போல, மந்தமான நிலைக்குச் செல்லாதபடி நிதானமாக இருங்கள்.
'தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல்எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். '1 பேதுரு 5:8

Comments