பாசாங்குத்தனம்
- Kirupakaran
- Oct 9, 2022
- 5 min read

நம் அனைவருக்கும், உலகம் நம்மைப் பார்க்கும் நல்ல பகுதி மற்றும் நாம் மட்டுமே பார்க்கும் நம் கெட்ட பகுதி என இரண்டு பக்கங்கள் உள்ளன. பல சமயங்களில் நம்மைப் பற்றிய நமது கெட்டப் பக்கத்தை மற்றவர்கள் பார்ப்பதை நாம் விரும்புவதில்லை. ஏனெனில், அது நம்மைப் பற்றிய பிம்பத்தை அம்பலப்படுத்தி, நம்மை உலகிற்கு மோசமாக காண்பிக்கும் என்ற பயம் நமக்கு உள்ளது. லூக்கா 12 ஆம் அதிகாரத்தை தியானித்துக் கொண்டிருந்தபோது, தேவன் எனக்கு பாசாங்குத்தனத்தைக் குறித்து பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார், அதை உங்களுக்கும் கொடுக்க விரும்புகிறேன். அதனால் நான் தேவனின் வார்த்தையிலிருந்து கற்றுக்கொண்டதை நீங்களும் கற்றுக்கொள்ளலாம்.
பாசாங்குத்தனத்திற்கு என்ன காரணம்?
பாசாங்குத்தனத்தின் அடிப்படையில் பயம் மற்றும் தாழ்வு மனப்பான்மை உள்ளது.
நமது குறைகளை பார்க்காமல் இருக்க பாசாங்குத்தனத்தை பயன்படுத்துகிறோம்.
நம்முடைய நம்பிக்கை சிறந்தது, உன்னதமானது மற்றும் நேர்மையானது என்பதால் மற்றவர்களை விட நாம் சிறந்தவர்கள், எனவே மற்றவர்களைப் போல் நாம் அதே தரத்தில் இருக்கக்கூடாது என்று நம்புகிறோம்.
பாசாங்குத்தனத்தின் அடிப்படையில் நேசிக்கப்படுவதற்கும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் ஒரு வலுவான ஆசை உள்ளது.
தாழ்மை மற்றும் நியாயத்தீர்ப்பு பற்றிய பயம் மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே அந்த சூழ்நிலையை எதிர்கொள்வதைத் தவிர்க்க விரும்புகிறோம்.
நமக்குள் இருக்கும் பாசாங்குத்தனத்தின் வடிவங்கள் என்னென்ன?
முரண்பாடு - நீங்கள் ஒருவரிடம் ஒன்றை சொல்வீர்கள், ஆனால் சொன்னதற்கு மாறாக செய்து கொண்டிருப்பீர்கள். மற்றவர்களுக்கு சொல்வது உங்களுக்கு பொருந்தாது.
நடிப்பு அல்லது பொய் - நீங்கள் வெளியே சொல்வது நல்லது, உண்மையானது என்பதை நிஜமாக்குவதற்காக பல முறை போலியாக நடிக்கிறீர்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் குறைபாடுகளை மறைக்க உங்கள் நிலைமையைப் பற்றி மற்றவர்களிடம் பொய் சொல்கிறீர்கள்.
பழி - உங்கள் பலவீனம் அல்லது பிரச்சினைகளை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக உங்கள் பிரச்சனைக்காக மற்றவர்களைக் குறை கூறுகிறீர்கள், இது வெளியரங்கமாவதை தவிர்ப்பதற்காக பிசாசு செய்யும் ஏமாற்று உத்தியாகும்.
மனநிறைவு - நீங்கள் எப்பொழுதும் நல்லவர் மற்றும் சரியானவர் என்றும் மற்றவர்கள் எப்போதும் தப்பானவர்கள் என்றும் நீங்கள் கருதுகிறீர்கள். அது நம் பாவத்தை மறைக்க பிசாசு சொல்லும் ஒரு பெரிய பொய்.
பாசாங்குத்தனம் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
முதலாவது இது ஒரு பாவம்.
"... அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்". லூக்கா 12:1
இது ஒரு ஈஸ்ட் போன்றது, நம்மிடம் சிறிய அளவில் இருக்கும்போது இது நமக்குள் பரவுகிறது.
இயேசு நம்மை இந்த மாய்மாலத்தில் இருந்து காத்துக்கொள்ளவும், சிறியதாகக் காணும்போதே, மேலும் பெரிதாக வளராதபடி அதை சுத்தமாக்கவும் எச்சரிக்கிறார்.
பாசாங்குத்தனத்தைக் குறித்த சாத்தானின் பொய்கள்
பல நேரங்களில், நாம் ரகசியமாகச் சொன்னது ரகசியமாகவே இருக்கும் என்று நம்புகிறோம். நாம் தனிப்பட்ட முறையில் என்ன செய்தோம் என்பது ஒருபோதும் வெளிப்படாது என்று நினைக்கிறோம். இது ஒரு நாள் வெளிப்படும். ( நாட்கள் / வாரங்கள் / மாதங்கள் அல்லது ஆண்டுகளில்) என நேரம் மட்டுமே மாறுபடும்.
இயேசு லூக்கா 12:2-3 இல் கூறுகிறார், “வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை. ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும்”.
ஏசாயா தீர்க்கதரிசி இதை குறித்து பேசுகிறார், “தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார்? என்கிறவர்களுக்கு ஐயோ! ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ? உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ?” ஏசாயா 29:15-16
சங்கீதக்காரன் எழுதுகிறார், “எங்கள் அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்”. சங்கீதம் 90:8
தேவன் யாவற்றையும் அறிந்தவர் மற்றும் காண்கிறவர். உங்கள் எண்ணங்களுடன் நீங்கள் ஒருபோதும் தனியாக இருப்பது இல்லை. நீங்கள் செய்யும் செயல் எதுவும் தேவன் பார்க்காமல் இல்லை. நமது பாசாங்குத்தனம் மனிதர்களை முட்டாளாக்கலாம், ஆனால் அது தேவனை முட்டாளாக்க முடியாது. எரேமியா 17:10 இல், "கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்"என்று கர்த்தர் கூறுகிறார்.
நாம் அந்தரங்கமாகச் செய்தது அந்தரங்கமாகவே இருக்கும் என்று சாத்தான் நம்மை நம்ப வைக்கிறான். அது, பாசாங்குத்தனமான பாவத்தைச் செய்ய அவன் நமக்குச் சொல்லும் பெரிய பொய். நீங்கள் தேவனிடம் வர அனுமதிக்கும் அவருடைய கிருபையால் இப்போதைக்கு நீங்கள் அந்த பாவத்திலிருந்து விடுபடலாம், ஆனால் அது விரைவில் தொடர ஆரம்பிக்கும். (அது சில நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பிறகு இருக்கலாம்).
பாசாங்குத்தனத்தை எவ்வாறு அகற்றுவது?
1. தேவனுக்குப் பயப்படுங்கள்
நீங்கள் தேவனுக்குப் பயப்பட வேண்டும். அவருக்குப் பயப்படும்பொழுது, நீங்கள் செய்யும் பாவங்களுக்குப் பயப்படுவீர்கள். அவற்றை மறைக்க நீங்கள் பாசாங்குத்தனத்துடன் கடினமாக இருக்க முடியாது.
இயேசு லூக்கா 12:4-5 இல், “என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள். நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று கூறுகிறார்.
"மனுஷருக்குப் பயப்படுவதை நிறுத்திவிட்டு கர்த்தருக்குப் பயப்படுங்கள்" என்று இயேசு கூறுகிறார். உங்களுக்கேத் தெரியும், நாம் உண்மையாக இருக்க பயப்படுகிறோம், நம் பலவீனங்களைக் காட்ட பயப்படுகிறோம், நம் பாவங்களை ஒருவருக்கொருவர் ஒப்புக்கொள்ள பயப்படுகிறோம். பிறர் நம்மைப் பார்த்து சிரிப்பதற்கு, கிசுகிசுக்கப்படுவதற்கு அல்லது சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மறுக்கப்படுவதற்கு பயப்படுகிறோம். ஆனால் அந்த பயத்தின் காரணமாக, நாம் பாசாங்குத்தனத்தில் வாழ ஆரம்பிக்கிறோம். முகமூடிகளை அணிந்து கொண்டு "எல்லாம் என் வசத்தில் தான் உள்ளது, நான் நன்றாக இருக்கிறேன்" என்று கூறுகிறோம். ஆனால் நாம் அவ்வாறு செய்யும்போது, தேவனுக்கு முன்பாக கண்டனம் செய்யப்படுகிறோம். ஏனென்றால் அது மாய்மாலம், அது பாவம். இயேசு கூறுகிறார், "அந்த முகமூடியை மறந்து விடுங்கள், மனிதர்களுக்கு பயப்படுவதை நிறுத்துங்கள், மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும். மனிதர்களுக்கும் தேவனுக்கும் முன்பாக உண்மையாக இருங்கள்" என்று கர்த்தர் சொல்கிறார். யோசுவா இவ்வாறு கூறுகிறார், "ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள்". யோசுவா 24:14
உள்ளொன்று புறமொன்று என்று இரட்டை வாழ்க்கை வாழாதீர்கள். தேவனுக்கும் மனிதனுக்கும் பொதுவான ஒரு வாழ்க்கையை வாழ முயற்சி செய்யுங்கள்.
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானம், அறிவு, போதனை, புரிதல், ஆயுளை நீட்டிக்கும், உறுதியான நம்பிக்கை என்று பைபிள் சொல்கிறது. இறுதியாக, நீதிமொழிகள் 8:13 "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்..." என்று கூறுகிறது. மற்றும் ஒருவனை தீமையிலிருந்து விலக்கி வைக்கிறது. கர்த்தருக்கு பயப்படுவதே மாம்சத்திற்கு எதிராகவும், தீமைக்கு எதிராகவும், பாவத்திற்கு எதிராகவும் உங்கள் வலுவான பாதுகாப்பாக இருக்கிறது. மாய்மாலக்காரனாக வாழ்வதை மறந்துவிட்டு, வெளியில் உண்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள். கர்த்தருக்குப் பயப்படுங்கள், அப்பொழுது மிகவும் பரிசுத்தமாக இருப்பீர்கள்.
நீங்கள் கர்த்தருக்குப் பயப்படும் பொழுது, அவர் உங்கள் வாழ்க்கையின் பாசாங்குத்தனமான பகுதிகளைக் காட்டுவார்.
2. இயேசு கிறிஸ்துவிடம் ஒப்புக்கொள்ளுதல்
இயேசுவின் முன் பாவத்தை ஒப்புக்கொள்வது நம்மில் உள்ள மாய்மாலமான நடத்தையை அகற்றுவதற்கான முதல் படியாகும்.
எனவே, தேவன் எல்லா பாவங்களையும் கண்டு, எல்லா பாவங்களையும் நியாயந்தீர்க்கும்போது, ஒருவன் எவ்வாறு பாவத்திலிருந்து காப்பாற்றப்பட முடியும்? ரோமர் 10:9-11ல் பவுல் எழுதுகிறார், "என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது".
தேவன் உங்களுக்கு வெளிப்படுத்திய பாவத்தை உங்கள் வாயால் ஒப்புக்கொண்டு, உங்கள் இருதயத்திலிருந்து விசுவாசத்தால் இரட்சிக்கப்படுவீர்கள். “தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்” என்று பவுல் கூறுகிறார். சிலுவையில் மரணத்தை வெல்வதற்காக இயேசுவை உயிரோடெழுப்பிய அதே ஆண்டவர் உங்கள் பாவங்களைக் கழுவுவார்.
இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்ததால், அவருடைய இரத்தம் நம்மைச் சுத்திகரித்து, நம்முடைய பாவங்களைக் கழுவி, நம்மைப் புதிய மனிதனாக்குகிறது. நம்மில் உள்ள பழையவை அகன்று, நாம் கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய மனிதராக மாறுகிறோம். "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்". 1 யோவான் 1:7 NIV
ஆண்டவரிடம் நம் பாவங்களை ஒப்புக்கொண்டால் நாம் வெட்கப்படுவோம் என்று சாத்தான் சொல்லும் ஒரு பொய் இருக்கிறது. அந்த பயம் நம்மை போலியான வாழ்க்கை வாழ வைக்கிறது. ஆனால், “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை” என்று வார்த்தை தெளிவாகக் கூறுகிறது.
இப்போது மனிதர்களுக்கு முன்பாக இயேசுவை ஒப்புக்கொள்ள உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், நாம் பிதாவுக்கு முன்பாக நிற்கும் ஒரு நாள் வரும். அப்பொழுது இயேசு நம்மை பிதாவிடம் அறிக்கையிடுவார் அல்லது மறுதலிப்பார். இந்த இரண்டில் ஒன்று நடக்கும். நீங்கள் மனிதர்களுக்கு முன்பாக இயேசுவை ஒப்புக்கொண்டிருந்தால், "அப்பா, இவர் சரியானவர்" என்று அவர் கூறுவார்.
ஆனால் நீங்கள் இயேசுவை ஆண்டவர் என்று ஒப்புக்கொள்ளாமல், தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று உங்கள் இருதயத்தில் விசுவாசிக்காமல், நீங்கள் அவரை மனிதர்களுக்கு முன்பாக மறுதலித்திருந்தால், அவர் பிதாவின் முன் நின்று, "நான் இந்த மனிதனை அறியேன்" என்று கூறுவார். மேலும் அழுகையும் பற்கடிப்பும் உள்ள நரகத்திற்கு நீங்கள் நித்தியத்திற்குத் தண்டிக்கப்படுவீர்கள்.
3. வெட்கத்தைப் பற்றிய பயம்
பைபிளில் லூக்கா அதிகாரத்தில் ஒரு கதை உள்ளது. “பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார். அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து, அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து,அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள். நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள். ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி; அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்”. லூக்கா 7:36-38,46-48.
ஒரு பெண் "பாவமான வாழ்க்கை வாழ்ந்தாள்" என்று நாம் இங்கே படிக்கிறோம். இந்த பெண் செய்த பாவங்கள் என்ன என்று நமக்கு சொல்லப்படவில்லை. அவள் உண்மையிலேயே ஒரு பாவி என்பது நமக்கு உறுதியாகத் தெரியும், ஏனென்றால் அவள் பாவியாக இருந்தாள் என்று இயேசு இந்த பத்தியில் பின்னர் கூறுகிறார். அவளுடைய பாவங்கள் மிகவும் பகிரங்கமானவை, நகர வாழ்க்கையுடன் தொடர்புடையவை என்பதை நாம் அறிவோம். அவளுக்கு கெட்ட பெயர் இருந்தது என்றும் ஒரு இழிவான பெண்ணாக அங்கீகரிக்கப்பட்திருந்தாள் என்பதையும் அறிவோம். அவளுடைய பாவங்கள் மிகவும் மோசமானவை, மேலும் அநேகம் இருந்தன. அவள் மரியாதைக்குரிய, நீதியுள்ள, மத மக்களால் ஒழுக்கத்தில் "தீண்டத்தகாதவள்" என்று கருதப்பட்டாள்.
இயேசு இந்தப் பரிசேயரின் வீட்டில் இருப்பதைக் கேள்விப்பட்டு, அந்தப் பெண்மணி தன்னைப் பற்றிய பயத்தை நீக்கி, அவரை நோக்கிச் சென்றாள். ஒரு பரணியில் மிகவும் விலையுயர்ந்த மற்றும் மணம் மிக்க பரிமளதைலம் கொண்டு வந்தாள். இயேசுவின் அன்பான தோழியான மரியாள் வந்து, விலையுயர்ந்த வாசனை திரவியத்தை, முழுவதையும் நம் இரட்சகரின் மீது ஊற்றி, அவருடைய அடக்கத்திற்கு ஆயத்தப்படுத்தியதையும் பைபிள் நமக்குச் சொல்கிறது. நம் இரட்சகருக்கு விலையுயர்ந்த வாசனை திரவியத்தை ஊற்றியவர்கள் 2 பேர் மட்டுமே. அவர்களில் இந்தப் பெண்ணும் ஒருத்தி.
நாம் பாவங்களை அறிக்கையிட்டால், அவை நம்மோடு இணைக்கப்பட்டு, என்றென்றும் நினைவில் வைக்கப்படும் என்று சாத்தான் பொய் சொல்கிறான். இது உண்மையல்ல. கிறிஸ்துவுக்குள் பிறந்த அநேகர், கடந்த காலத்தில் தங்கள் வாழ்க்கையை மிகவும் சிக்கலாக்கிக் கொண்ட போதகர்கள், யாவரும் இப்போது அர்ப்பணிப்புள்ள மாற்றப்பட்ட நபராக இருப்பதை நாம் காண முடியும். அதை ஆதரிக்கும் வகையில் பைபிளில் பல உதாரணங்கள் உள்ளன.
அந்தக் கதை தொடங்கிய விதத்தை பார்த்தால், "பாவமான வாழ்க்கை" வாழ்ந்த பெண்ணைப் பற்றி படிக்கிறோம். இயேசுவின் பாவ மன்னிப்புக்குப் பிறகு அவளுடைய பாவத்தைப் பற்றி நாம் பேசுவதில்லை. அவள் இயேசுவின் மீது ஊற்றிய பரிமளதைலத்தின் மீதே கவனம் செலுத்துகிறோம். இயேசு நம்மைக் கழுவியவுடன் பாவத்தில் இருந்து வெட்கத்தைப் பற்றிய பயம் போய்விடும். தேவன் நமக்குள் ஒரு புதிய வாழ்க்கையை கட்டவிழ்த்து விடுகிறார், அது பழைய பாவத்தை அகற்றுகிறது. நம்மை புதுப்பிக்கவும், தூய்மையாக ஆக்குவதற்கும் ஒரு புதிய சிருஷ்டியைத் தருகிறார். "இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின". 2 கொரிந்தியர் 5:17.
நமக்கென்று ஒரு பாசாங்குத்தனம் இருக்கிறது. நான் ஒரு பாவி, என்னைக் கழுவி சுத்திகரியும் தகப்பனே என்று தேவனை நோக்கி தைரியமாக அடியெடுத்து வைத்தால் மட்டுமே அதை வெளியே எடுக்க முடியும். நம்முடைய பாவங்கள் எதுவாக இருந்தாலும், எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் நம்மைக் கழுவக் காத்திருக்கிறார்.
முதல் படியை தொடங்குங்கள்!! அவருக்கு எல்லாம் தெரியும். ஆனாலும் நீங்கள் எப்பொழுது வந்து முதல் அடி எடுத்து வைப்பீர்கள் என்று அவர் கிருபையைத் தந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இயேசு தம் இரத்தத்தில் நம்மைக் கழுவக் காத்துக் கொண்டிருக்கிறார்.

Comments