top of page

நிபந்தனையற்ற சரணடைதல்

  • Kirupakaran
  • May 31, 2021
  • 4 min read


கிறிஸ்தவர்களான நாம், நம்முடைய தேவனோடு பல உறவுகளைக் கொண்டுள்ளோம். தந்தை-பிள்ளை உறவு, செம்மறி ஆடு -மேய்ப்பர் உறவு, நண்பர் உறவு மற்றும் ஒரு குடும்பம் போன்ற உறவு எனப் பலவாறு நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை நாம் சிந்தித்திருக்கிறோம். ஒரு குடும்ப உறவில் முக்கியமானது நம்பிக்கை மற்றும் விசுவாசம். நம்முடைய கிறிஸ்தவ ஐக்கியத்தில், தேவனுக்கும் நமக்கும் உள்ள உறவு ஒரு குடும்பம் போன்றது என்று சொன்னால், அவர் நம்மிடத்தில் ஒரு ஒற்றை உறவை எதிர்பார்க்கிறார்.


'விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா? 'யாக்கோபு 4:4-5


இந்தப் பகுதியில் நாம் இரண்டு காரியங்களைப் பார்க்கலாம்.


'விபசாரரே, விபசாரிகளே – கிறிஸ்தவர்களான நாம் தேவனை அறிந்த பிறகு, உலகத்துடனும், அவர் மீது ஒரு பகுதியுடனும், இரட்டை வாழ்க்கை வாழத் தேர்வு செய்கிறோம். தேவனுடனான உறவை நாம் ஏமாற்றுகிறோம் என்று அவர் உணர்கிறார். ஒரு துரோக வாழ்க்கைத் துணையால், துரோகம் செய்யப்படுபவருக்குள் இருக்கும் உள் வலி மற்றும் சித்திரவதைகளைப் பற்றி சிந்தியுங்கள். நான் அவர்களுக்கு உண்மையுள்ளவன், ஆனால் அவர்கள் எனக்கு உண்மையுள்ளவர்கள் அல்ல என்று தேவன் நம்மைப் பார்க்கிறார்.


தேவனுக்குப் பகைஞனாகிறான் – உலகிற்கு நெருக்கமான வாழ்க்கையை வாழ்ந்தால், அவர்கள் (கிறிஸ்தவர்கள்) கடவுளின் எதிரி என்று அவர் கூறுகிறார். நம் மீதான அன்பு மற்றும் நம்முடைய உறவு அவரை சார்ந்து இருக்க வேண்டும் என்ற ஒரு வைராக்கியத்தின் நிமித்தமே அவர் இவ்வாறு கூறுகிறார்.


நீங்கள் ஆழமாகத் தியானித்துப் பார்த்தால் அவர் ஏன் தனது பிள்ளைகள் மீது இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் (“விபச்சாரி” மற்றும் “பகைஞன்”) பயன்படுத்தினார் என்பது உங்களுக்குப் புரியும். நாம் உலகத்திற்கு நெருக்கமான வாழ்க்கையை வாழுவதன் மூலம் பாவமான வழிகளில் செல்லத் தொடங்கி விடுகிறோம். ஆனால் தேவனோ நாம் பரிசுத்தமாகவும், பாவமற்றும் வாழ வேண்டும் என்று விரும்புகிறார். நம்முடைய உலகத்தின் சிநேகம் இதற்குத் தடையாக உள்ளது.


அப்படியானால், உலகத்தை சாராமல் எப்படி வாழ்வது என்று நாம் கேட்கலாம். உலகத்துடன் நெருக்கமாக இல்லாமலும், கடவுளுடன் நெருக்கமாகவும் இருக்க வேண்டும். இது எப்படி முடியும் ?


நாம் தேவனோடு உறவில் இருக்கும்போது அவரையே முதன்மை ஆதாரமாக வைத்திருக்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார். உலகில் வாழ நமக்கு உலகப் பிரகாரமான காரியங்கள் தேவை என்பதை அவர் அறிவார். உலகில் உள்ள எல்லாவற்றையும் அவர் நமக்குக் கொடுப்பார். உலகின் விருப்பங்களை / விஷயங்களை அவர் விரும்புவதை அவர் உங்களுக்குக் கொடுப்பார். நாம் விரும்புவதை அல்ல (நாம் அநேக நேரம் பலவற்றை விரும்புவோம்).


நாம் இந்த உறவில் நடக்கும்போது, உலக ஆசீர்வாதங்களைப் பெற்றிருப்பது தேவனின் சித்தம் என்று எண்ணி இருப்போம். நம்மில் பலர் இவ்வாறு ஆசிர்வாதங்களைப் பெற்றவுடன் , தேவனுடைய அன்பில் இருந்து விலகி உலகத்தின் அடிமைத்தனத்தில் சிக்கிக் கொள்கிறோம். தேவனை நாம் இரண்டாம் நிலைக்குத் தள்ளி வைத்துப் பாவமான வாழ்க்கைக்கு வகை செய்கிறோம்.


ஒரு பரிசுத்தமான வாழ்க்கையை வாழ நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் நம்முடைய பிறப்பால் நாம் பாவத்திற்கு அடிமைகளாக உள்ளோம்.


'அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. '



தேவ வசனம் இவ்வாறு தொடங்குகிறது, “அதிகமான கிருபையை அளிக்கிறாரே”. தேவ பிள்ளைகளாக நாம் தேவனோடு நடந்து, நாம் பாவத்தில் விழும்போது தேவனின் "அதிகமான கிருபையை" அவர் தந்து நம்மைப் பாவத்தில் இருந்து மீட்டு எடுக்கிறார்.


ஸ்பர்ஜன் என்ற ஒரு தேவ மனிதர் கூறுகிறார் - பாவம் நுழைய முயல்கிறது, கிருபை கதவை மூடுகிறது; பாவம் தேர்ச்சியைப் பெறமுயற்சிக்கிறது, ஆனால் பாவத்தை விட வலிமையான கிருபை எதிர்க்கிறது, அதை அனுமதிக்காது. பாவம் சில சமயங்களில் நம்மைவீழ்த்தி, அதன் பாதத்தை நம் கழுத்தில் வைக்கிறது; கிருபை நம் மீட்புக்கு வருகிறது ... பாவம் நோவாவின் வெள்ளத்தைப் போலவருகிறது, ஆனால் கிருபை பேழை போன்ற மலைகளின் உச்சியில் சவாரி செய்கிறது.


மேற்கூறியவை மிகவும் உண்மை, தேவனின் பிள்ளைகளாகிய நமக்கு கிருபை உண்டு.


கடவுளின் கிருபையை நாம் எவ்வாறு பெறுவது?


'ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். ' யாக்கோபு 4:7-8


I. நிபந்தனையற்ற சரணடைதல் – ஒரு கைதி தோல்வியில் சரணடைகிறது போல, தேவனிடத்தில் நீங்கள் சரணடையுங்கள். உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அவரிடம் ஒப்படையுங்கள். வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில விஷயங்களை மட்டும் ஒப்புக்கொடுக்காமல் அனைத்தையும் (தனிப்பட்ட ஈகோ, பெருமைமிக்க இதயம், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிகளையும்) எந்த நிபந்தனையும் இல்லாமல் அவரிடம் ஒப்புக்கொடுக்க வேண்டும். “ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்” என்பதன் பொருள் இது தான்.


II. பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் – தேவன் நமக்கு ஒரு கட்டளை தருகிறார். “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” இங்கே குறிப்பிடப்படும் பிசாசு உலகத்துடனான நம்முடைய நெருக்கம். உலகில் பல விஷயங்களால் நாம் சோதிக்கப்படுகிறோம். உங்களை அடிமைப் படுத்தும் சோதனையிலிருந்து விடுபடும்படி இயேசுவின் நாமத்தினால் நீங்கள் கேட்கும் போது அந்த இச்சையின் பிசாசு உங்களை விட்டு நீங்கும்.


III. தேவனிடத்தில் சேருங்கள், – தேவனிடத்தில் நெருங்கி வரும்படி அவர் கேட்கிறார்.

  1. வழிபாட்டிலும், புகழுவதிலும், ஜெபத்திலும் தேவனை நெருங்கி வருவது இதன் பொருள். இது ஒரு முறை செய்யும் காரியம் அல்ல, இது நம் வாழ்வின் தினசரி செயலாக இருக்க வேண்டும்.

  2. தேவனின் ஆலோசனையைக் கேட்பதன் மூலம் நெருங்கி வருவது என்று பொருள். உலக வாழ்க்கையில் நாம் பல சவால்களை எதிர்கொள்ளும்போது, எதை எடுக்க வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், என்னென்ன விஷயங்கள் நம்மை தேவபக்தியிலிருந்து தேவபக்தியற்ற காரியங்களுக்கு அழைத்துச் செல்லும் என்று அவர் நமக்கு அறிவுரை கூறுவார்.

  3. தேவனோடு ஐக்கியத்தில் நெருங்கி வருவது இதன் பொருள். நம் வாழ்க்கையில் நடைகளை எவ்வாறு எடுத்து வைக்க வேண்டும் என்று நாம் கேட்கும் போது, நாம் அவரைச் சார்ந்து இருப்பதால், நம் வாழ்க்கையின் ஜி.பி.எஸ் போன்று,அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவர் நமக்கு வழிகாட்டுவார்.


நாம் இவ்வாறு கீழ்ப்படிந்தால், உலகில் நம்முடைய பாவங்களிலிருந்து விலகி இருக்க, எது தேவையோ அதைக் கொண்டு நமக்கு உதவுவார். அவருடைய நித்திய மகிமைக்கும், நியாயத்தீர்ப்புக்கும் நம்மைத் தயார்படுத்துவார்.


  1. தேவனிடம் நெருங்கி வருவது நாம் தூய்மையாக மாற நமக்கு உதவுகிறது. அவர் நம்மை பரிசுத்தமாக்குவார், இது ஒரு நிலையானப் போர். ஆனால் அவர் நம் வாழ்க்கையைப் படிப்படியாக பரிசுத்தத்தின் பாதையில் மாற்றுவார்.

  2. தேவனிடம் நெருங்கி வருவது நம்முடையப் பாவத்தை ஒப்புக்கொள்ள உதவுகிறது. நம் இதயத்தில் நாம் செய்த பாவத்திற்காக வருந்துகிறோம். தேவனின் பார்வையில் சரியாக இல்லாத ஒன்றை நாம் செய்யும்போது நம் ஆன்மா அதற்காய் பரிதவிக்கும்.

  3. தேவனிடம் நெருங்கி வருவது மற்றவர்களிடம் நன்றாக - கனிவாகப் பேச உதவுகிறது. இது மற்றவர்களுக்கான அன்பைப் பெற்று கொள்ளச் செய்கின்றது. தேவ அன்பு நம்மிடம் வந்து நாம் அதை அவருடைய மகிமைக்காகப் பயன்படுத்துவோம்.

  4. தேவனிடம் நெருங்கி வருவது நித்திய விஷயங்களைப் பற்றி சிந்திக்க உதவுகிறது. அவருடைய ஊழியத்திற்காக எவ்வாறு பணியாற்றுவது என்பதைப் பற்றி அவர் சிந்திக்க வைப்பார்.நம்மில் உள்ள நற்செய்தியை எவ்வாறு பகிர்ந்து கொள்ளுவது என்ற சிந்தனை வரும். இதை மற்றவர்களிடம் எவ்வாறு கூறலாம் என்று தோன்றும். நம்முடைய தேவ அன்பை மற்றவர்களுக்கு சேவை செய்யும் எண்ணமாக மாற்றுவார். இது ஜெபத்தின் மூலமோ , உதவி செய்யும் மன நிலை மூலமோ நமக்கு வரும்.

தேவனின் கிருபையை நாம் பெற்றவுடன், அவர் நம்மைக் கழுவி, எல்லா பாவங்களிலிருந்தும் தூய்மைப்படுத்துவார்.


இவ்வாறாக, கிருபை பாவத்தை மேற்கொள்ளும் – “பாவம் தேர்ச்சியைப் பெற முயற்சிக்கிறது, ஆனால் பாவத்தை விட வலிமையானகிருபை எதிர்க்கிறது,”


கடவுளிடமிருந்து வரும் ஆசீர்வாதம்


நீங்கள் பாவத்தை கிருபையால் மேற்கொண்டுள்ளீர்கள். நீங்கள் மேலும் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற விரும்பினால், கடவுளிடம் “தாழ்மையாய்” நடந்து கொள்ளுங்கள்.


“தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.”' யாக்கோபு 4:6


  • நாம் தேவனுக்கு முன்னால் தாழ்மையுடன் இருக்கும் போதுதான் அவருடைய கிருபையைப் பெற முடியும்.

  • தேவனின் கிருபையைப் பெற நம்மில் உள்ள பெருமையில் இருந்து விடுபட வேண்டும்.

  • "அதிக கிருபை" நமக்கு வழங்கப்படுவது, நாம் பாவத்தை லேசாக எடுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பாவம் செய்யலாம், இன்னும் நமக்கு கிருபை கிடைக்கும் என்று அல்ல . நாம் பாவம் செய்யும் போது அதைக் குறித்து கடவுளுக்கு முன்னால் “தாழ்மையுடன்” பாவ மன்னிப்பு கேட்கும் போது தான் இந்தக் கிருபை "அதிக கிருபை" ஆகக் கொடுக்கப்படுகிறது.

  • நாம் தாழ்மையுடன் இருந்தால் அவர் நம்மை உயர்த்துவார். மேலும் நம் வாழ்க்கையில் பல ஆசீர்வாதங்களையும் தருவார் 'கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். 'யாக்கோபு 4:10

  • தேவனிடத்தில் நம்மைத் தாழ்த்தி சரணடைந்ததும், அவர் நம்மைக் காப்பாற்றி உயர்த்துவார்.' 'அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். ' ரோமர் 10:11,13

எனவே, இதை நினைவில் கொள்ளுங்கள் – “பாவம் சில சமயங்களில் நம்மை வீழ்த்தி, அதன் பாதத்தை நம் கழுத்தில் வைக்கிறது; கிருபை நம் மீட்புக்கு வருகிறது” தேவனிடம் நிபந்தனையற்ற சரணடைதல் மனப்பான்மையுடன் இருந்தால் மட்டுமே நீங்கள் அந்தக் கிருபையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page