நீதிமானின் பண்புகள்
- Kirupakaran
- Jun 26, 2022
- 4 min read

தேவன் ஒவ்வொரு மனிதனுக்கும் தார்மீக ரீதியாக சரியானதைச் செய்யத் தேர்ந்தெடுக்கிறோமா என்பதைத் தெரியப்படுத்துகிற உள்ளான எச்சரிக்கை உணர்வை (விழிப்புணர்வு) கொடுத்துள்ளார். இது நமது உள் ஆத்துமா மற்றும் சாட்சியாக இருக்கிறது. இது மனசாட்சி என்று அழைக்கப்படுகிறது. நாம் இதைப் பற்றி அதிகம் பேசுவதில்லை ஆனால், இது மிகவும் முக்கியமானது. இது ஒருவரை நீதிமானா இல்லையா என்று அழைக்கத் தூண்டுகிறது.
நமது நடத்தை, நாம் சரியான அல்லது தவறான காரியத்தை செய்யும்போது நமது உள்ளுணர்வால் தீர்மானிக்கப்படுகிறது. எனினும்,விசுவாசியின் மனசாட்சிக்கும் அவிசுவாசியின் மனசாட்சிக்கும் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது.
அவிசுவாசியின் மனசாட்சி அவர் வாழும் உலகத்தால் பயிற்றுவிக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு சரி மற்றும் தவறு மட்டுமே தெரியும். இது நம்மைச் சுற்றியுள்ள உலகத்தின் பார்வையால் வரையறுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்வது தவறாகக் கருதப்பட்டது, ஆனால் இன்றைய உலகில் இது சரி என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தன்னைச் சுற்றியுள்ள உலகம் ஏற்றுக்கொண்டதால், அவிசுவாசியும் அதைச் சரி என்றே எடுத்துக்கொள்கிறார். பாவம் நாம் வாழும் காலத்தால் தீர்மானிக்கப்படுகிறது, இது காலத்தோடு தொடர்புடையது.
ஆனால், ஒரு விசுவாசி, தன் மனசாட்சியை தேவனுடைய ஆவியால் பயிற்றுவித்து, தேவனுடைய வார்த்தையால் பிரகாசிக்கிறான். சரி, தவறு மட்டுமல்ல, நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வித்தியாசத்தையும் நாம் அறிவோம். அதில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. நன்மையையும் தீமையையும் தேவனின் வார்த்தையில் இருந்து அறிந்து கொள்ளலாம். அது நிலையானது. அது வீடு, பள்ளி, பணியிடம் என்று இடத்திற்கேற்ப மாறாது. நாம் எந்த வயதினராக இருந்தாலும் சரி, எந்த நூற்றாண்டாக இருந்தாலும் சரி அது மாறாது.
பவுல் கொரிந்தியருக்கு எழுதிய வார்த்தையை நான் தியானித்துக் கொண்டிருந்தேன். அவர் அவர்களுக்காக நிறைய எழுதியுள்ளார். அவர்கள் வாழ்ந்த ஒழுக்கக்கேடான வாழ்க்கையை அவர்களுக்கு புரிய வைப்பதில் அவர் பெரும் போராட்டத்தை மேற்கொண்டதாக இறையியலாளர்கள் கூறுகிறார்கள். மேலும் அவரிடம் வந்த பல குற்றச்சாட்டுகளை குறித்து அவர் பேசுகிறார்.
“மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது”. 2 கொரிந்தியர் 1:12
பவுல் எவ்வாறு நீதியான வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதை குறிக்கும் இந்த ஒற்றை வசனத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. நாம் எப்படி வாழ வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கும், நீதியுள்ள ஆண் / பெண்ணின் குணங்களையும் இது வரையறுக்கிறது.
நீதிமானின் இருதயம்
“நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது”.
எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது - இங்கே, பவுல் தனது பெருமையை சரியான பொருளில் கூறுகிறார். எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது - இதை “ஏதாவது ஒன்றைப் பற்றி மகிழ்வதற்கும் புகழுவதற்கும் காரணம்” என்று படிக்கலாம். பவுல் தான் கொரிந்தியருக்கு கற்பித்ததை செயல்படுத்தினார். "எழுதியிருக்கிறபடி, மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக" 1 கொரிந்தியர்1:30
பவுல் கொரிந்து மக்களால் குற்றம் சாட்டப்படுகிறார் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். “நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே”
நம்மில் பெரும்பாலோர் (என்னையும் சேர்த்து) ஏதாவது ஒரு காரணத்திற்காக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறோம். ஒருவேளை நாம் ஏதாவது தவறு செய்திருக்கும் போது, நமக்குள் எங்கோ குற்றம் இருப்பதாக தானாகவே கருதுவது தான் இதற்குக் காரணம். ஆண்டவர் இயேசு சீடர்களுடன் இருந்த கடைசி ராத்திரியை நினைவுகூருங்கள். அவர் அவர்களைப் பார்த்து, "உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்" என்றார். அங்கிருந்த யாருமே யூதாஸ் பக்கம் திரும்பவில்லை. ஏன் தெரியுமா? யூதாஸ் அப்படி செய்வான் என்பதை முதல் நாளிலிருந்தே இயேசு அறிந்திருந்தார். ஆனால், அவர் அதை ஒருபோதும் யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. அவர் மற்றவர்களை நேசித்தது போலவே யூதாஸையும் நேசித்தார். என்ன நடந்தது என்றால், பேதுரு, "ஆண்டவரே, அது நானா?" என்றும், யோவான் “ஆண்டவரே, அது நானா?” என்றும் கேட்டார்கள். ஏன் தெரியுமா? ஏனென்றால் அவர்களின் மனசாட்சி அவர்களைக் குற்றம் சாட்டியது. அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் ஏற்கனவே அதே மாதிரி செய்த சூழ்நிலைகள் இருந்திருக்கலாம். சில நாட்களுக்குப் பிறகு, சீமோன் பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலித்தார். மேலும், அவர் சபித்து, "நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறியேன்" என்று கூறியதாக மாற்கு புத்தகம் சொல்கிறது. அவர்களுக்குள் ஏதோ ஒன்று அவர்களை குற்றம் சாட்டவும், கண்டிக்கவும் செய்தது. எனவே தான் அவர்கள் தாங்களாக இருக்குமோ என்று நினைத்தார்கள்.
எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே - நம் மனசாட்சி தேவனின் ஆவி மற்றும் அவருடைய வார்த்தையால் இயக்கப்படும்போது, நம் மனசாட்சி நமக்கு சாட்சியளிக்கிறது, அது நம்மைக் கண்டிக்காது. அது நம்மைக் குற்றம் சாட்டுவதில்லை, அது நம்மைப் பாதுகாக்கிறது. மனசாட்சி, உள்ளான சாட்சி தேவனின் பரிசுத்த ஆவியானவரால் அதிகாரமளிக்கப்படுகிறது, அது நம்மை பாதுகாக்கும்.
ஒருவர் உங்களைக் குற்றம் சாட்டும்போது எப்படி வாழ வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? பவுல் வாழ்ந்தது போல் தெளிந்த மனசாட்சியுடன் நாமும் வாழ வேண்டும். அப்பொழுது தான், நீங்கள் குற்றம் சாட்டப்பட்டாலும், உங்களைப் பற்றி ஜோடிக்கப்பட்ட ஏதோவொன்றின் காரணமாக நீங்கள் மற்றவர்கள் முன் நிறுத்தப்பட்டாலும், உங்கள் மனசாட்சி உங்களைக் குற்றம் சாட்டாததால் நீங்கள் அதன் நடுவில் அமைதலோடு இருக்க முடியும். ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் தூய்மையான உள்ளத்தோடு நன்மை செய்திருப்பதால் அது உங்களைப் பாதுகாக்கும். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்தினால் மட்டுமே இது நடக்கும். இதுவே ஒரு நீதிமானின் இருதயம்.
நீதிமானின் நோக்கம்
“கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே”
பவுல் குறிப்பிடும் இரண்டு நோக்கங்கள்
கபடமில்லாமல் - இது நேர்மையைக் குறிக்கும். நேர்மை என்பது சரியானதைச் செய்வதும், என்ன நோக்கத்துடன் திட்டமிடப்பட்டதோ அதை நிறைவேற்றுவதும் ஆகும், நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதில் மறைவான திட்டங்கள் எதுவும் இல்லை. இங்கே பவுல், “நான் உங்கள் மத்தியில் தூய்மையான இருதயத்துடனும், என் வாழ்க்கையைப் பற்றி உங்களுடன் நேர்மையாகவும் வாழ்ந்தேன். எனக்குள் மறைவானது ஒன்றும் இல்லை” என்று கூறுகிறார்.
திவ்விய உண்மை
உண்மை என்றால் என்ன என்று நமக்குத் தெரியும், ஆனால் திவ்விய உண்மை என்றால் என்ன?
ஒருவன் உண்மையாக இருக்கும்போது, அவனது வாழ்வில், அவனது நோக்கத்தில், அவனது இதயத்தில் புளிப்பு இருக்காது. புளிப்பு என்பது பாவம் என்று பார்க்கிறோம். புளிப்பு என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலும் இருக்கலாம். கேக் செய்யும் பொழுதோ அல்லது மாவு தயார் பண்ணும் பொழுதோ ஈஸ்ட் என்று அழைக்கப்படும் புளிப்பைப் போடுவோம். அது மாவை உப்பச் செய்து, பஞ்சு போலாக்கும். ஜனங்கள் கட்டுண்டு கிடந்த பாவங்களிலிருந்து விடுபட ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதே பவுலின் நோக்கமாக இருந்தது. பவுல் மூலம் வாழ்ந்த கிறிஸ்துவே திவ்விய உண்மையை உருவாக்கினார்.
கிறிஸ்து நம் மூலம் தம்முடைய வாழ்க்கையை வாழ நாம் அனுமதிக்கும்போது கிறிஸ்து நம்மில் உருவாக்குவது தான் திவ்விய உண்மை. 2 கொரிந்தியர் 2 ஆம் அதிகாரம் பவுலின் பிரசங்கத்தின் நோக்கத்தை விவரிக்கிறது; ஆனால் அது தேவனிடம் இருந்து வர வேண்டும் என்ற உண்மையையும் அவர் அதோடு இணைக்கிறார். “அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்”. 2 கொரிந்தியர் 2:17
நீதிமானின் சார்புகள்
“மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால்”
ஞானம்
இங்கே, பவுல் தான் உலக ஞானத்தை சார்ந்து இருக்கவில்லை என்று கூறுகிறார். ஏனென்றால், மனித ஞானம் தேவனின் பார்வையில் முட்டாள்தனமானது.
“இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது”. 1 கொரிந்தியர் 1:25
அதற்கு பதிலாக பவுல் தேவனின் ஞானத்தை நம்பினார். அது பரிசுத்த ஆவியானவரால் நாம் தேவனோடு நடக்கும்போது நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது.
“அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்”. 1 கொரிந்தியர் 2:6-7
தேவ கிருபை
பவுல் இரண்டாம் வசனத்தில் பேசிய அதே கிருபையைக் குறித்து இங்கே பேசுகிறார்.
“நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக”. 2 கொரிந்தியர் 1:2
பவுல் 1 கொரிந்தியர் 15 இல் பேசிய அதே கிருபை தான் இது. “ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது”. 1 கொரிந்தியர் 15:10
பல நேரங்களில் நாம் தேவனின் கிருபை இருப்பதாகக் கருதி, சிறிது வேகத்தைக் குறைக்கிறோம் அல்லது சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம், சிலர் வேலை செய்வதைக் கூட நிறுத்திவிடுவார்கள். (அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.) தேவனுடைய கிருபையை அலட்சியமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை உறுதிசெய்வதற்காக பவுல் மற்றவர்களை விட கடினமாக உழைத்ததாகக் கூறுகிறார். அவருடைய பலவீனத்தில் கிருபை அவரோடு இருந்தது. ஆஹா! என்ன ஒரு மனோபாவம். இதை நாம் அனைவரும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
சுருக்கம்
பவுலிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் நம்மை நீதிமான்களாக்க அவருடைய நடத்தையைப் பின்பற்றுவோம்..
நீங்கள் செய்வதற்கு முன்
யாராவது உங்களைப் பொய்யாகக் குற்றம் சாட்டும்போது உங்கள் மனசாட்சி உங்களுக்கு சாட்சியாக இருக்கிறதா அல்லது உங்களைக் கண்டிக்கிறதா என்று சரிபார்க்கவும்.
நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் கபடமில்லாமல் நேர்மையுடன் செயல்படுகிறீர்களா?
நீங்கள் காரியங்களை உண்மையோடே செய்கிறீர்களா?
நீங்கள் உங்கள் சொந்த ஞானத்தை சார்ந்திருக்கிறீர்களா அல்லது தேவ ஞானத்தை சார்ந்திருக்கிறீர்களா?
நீங்கள் தேவ கிருபையுடன் கடினமாக உழைக்கிறீர்களா அல்லது மந்தமாக இருக்கிறீர்களா?
தேவனிடம் சரணடைந்து நீங்கள் பவுல் போல் ஆவதற்கு உதவும்படி அவரிடம் கேளுங்கள். பவுலை உருவாக்கிய அதே ஆண்டவர் தான்,உங்களையும் என்னையும் உருவாக்கினார். அவருடைய வல்லமையால் நாமும் பவுலைப் போல நீதிமான்களாக மாறலாம்.

Comments