top of page

நீங்கள் சந்தேகிக்கிறீர்களா?

  • Kirupakaran
  • Sep 11, 2022
  • 5 min read

நாம் அனைவருமே சந்தேகம் என்ற பிரச்சனையுடன் போராடுகிறோம். பிரபல எழுத்தாளரும் ஆசிரியருமாகிய சி.எஸ். லூயிஸ் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கு முன்பு ஒரு நாத்திகராக இருந்தார். கிறிஸ்தவர்களுக்கு சந்தேகத்தின் தருணங்கள் இருப்பதைப் போலவே நாத்திகருக்கும் உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறார். மனிதர்களிடையே பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.


ஆண்டவருடைய இருப்பை சந்தேகிக்கும் பெருமையான சந்தேக நபர்களின் குழு உள்ளது. அவர்கள் தங்கள் சொந்த அறிவில் மகிழ்ச்சி அடைகிறார்கள். இவர்கள் (நாத்திகர்) பலவீனமான விசுவாசிகளின் நம்பிக்கையை சீர்குலைப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்கள் தேவனுடைய இருப்பு அல்லது கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான வாதங்களை, வரலாற்றில் இதுபோன்ற நுண்ணறிவுகளைக் கொண்டு வந்த முதல் சிறந்த சிந்தனையாளர்கள் போன்று முன்வைக்கிறார்கள். வேதம் இப்படிப்பட்டவர்களை முட்டாள்கள் என்று ஒதுக்கித் தள்ளுகிறது.


“தேவன் இல்லை” என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.” சங்கீதம் 14:1

தங்களை விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் மக்களும் சந்தேகத்துடன் போராடுகிறார்கள். பல நேரங்களில் இந்த சந்தேகம் கடினமான காலங்களில் எழுகிறது. இது சீடர்களுக்கும் நடந்துள்ளது. ஒருமுறை சீடர்கள் புயலில் சிக்கியபோது, இயேசு அவ்வேளையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடர்கள் அவர்களுக்கு என்ன நடக்குமோ என்று சந்தேகப்பட்டார்கள்.


அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. அவரோ நித்திரையாயிருந்தார். அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள். அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று. மத்தேயு 8:24-26


லூக்கா 1:5-64ஐ படிக்கும்போது, சகரியாவிடமிருந்தும் அவர் தேவனுடைய வார்த்தையை அவிசுவாசத்ததில் இருந்தும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அதில் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பல கற்றல்கள் உள்ளன.


படிக்க வசதியாக லூக்கா 1ல் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில வசனங்களை மட்டும் கொடுத்துள்ளேன். ஆனால் விரிவான பார்வைக்கு லூக்கா 1:5-64 ஐ படிக்கவும்.


யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர்கொண்ட ஆசாரியன் ஒருவன்இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள்.

அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான். சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான். தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.

அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்; தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன். இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான். லூக்கா 1:5-7,11-15,18-20


இந்தப் பத்தியை படித்தால், சகரியாவின் நம்பிக்கையும் பயமும் அவரைக் கைக்கொண்டதாலும், தேவதூதரின் வார்த்தையை அவர் சந்தேகித்ததாலும், சகரியாவால் அதை ஜீரணிக்க முடியவில்லை என்பதை புரிந்துகொள்வீர்கள்.


சந்தேகத்தின் பிரச்சினையைப் பற்றி சகரியா நமக்கு என்ன கற்பிக்கிறார்?

நீதிமான்களுக்கும் சந்தேகம் ஒரு பிரச்சனையே

  • இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். கர்த்தரின் பார்வையில் நீதியுள்ளவராய் இருப்பதென்றால், அவருடைய தேவபக்தியானது பரிசேயர்களின் "நீதியைப்" போல வெளிப்புறமானது அல்ல. மாறாக அது இருதயம் சம்பந்தப்பட்டது. அவர்கள் வயதானவர்கள் என்று வேதம் கூறுவதில் இருந்து, அவர் பல ஆண்டுகளாக தேவனோடு நடந்து வந்தவர் என்று அறியலாம். எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள். அத்தகைய ஒரு தெய்வீக மனிதன் சந்தேகித்தது இந்த பிரச்சனையில் இருந்து யாருக்கும் விலக்கு இல்லை என்பதைக் காட்டுகிறது.

  • சகரியாவிற்கு நடந்தது போலவே, பழைய ஏற்பாட்டில் ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் சந்தேகிக்கும் தருணங்களைக் கொண்ட அதே போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. சாராவும் இதே போன்ற சூழ்நிலையில் தடுமாறினாள். ஆபிரகாமின் மனைவிக்கு ஒரு மகன் பிறப்பான் என்று கர்த்தர் அறிவித்தபோது, அவள் சந்தேகத்தில் சிரித்தாள்.

ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள். அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.ஆதியாகமம் 18:12-14

  • ஆகவே, தேவனுடைய பார்வையில் நீதிமானாய் இருப்பவர்களுக்கும் கூட சந்தேகம் ஒரு பிரச்சனை தான். தெய்வீக மனிதர்களாகிய சகரியா, ஆபிரகாம் / சாரா சந்தேகத்தில் விழுந்திருக்கும் போது, நாம் விழுந்துவிடாதபடி கவனமாக இருக்க வேண்டும்.தேவபக்தியுள்ளவர்கள் கூட விழுந்துவிடும்பொழுது, “சந்தேகத்தின் ஆதாரம் என்ன?” என்று நாம் ஆச்சரியப்படலாம், சந்தேகம் நம் பாவ உள்ளத்திலிருந்து வருகிறது.

சந்தேகம் நம் பாவ இதயங்களில் இருந்து வருகிறது.

  • சந்தேகம் என்பது ஆதாரப் பற்றாக்குறையினால் உண்டாவதில்லை, மாறாக நம்முடைய பாவ இதயங்களிலிருந்து உண்டாகிறது.

  • "ஆண்டவர் அவர்களிடம் வந்து பேசினால் அவர்கள் நம்புவார்கள்" என்று உங்களில் சிலர் கேட்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன், ஆனால் இங்கே, சகரியா முன்பு ஒரு தூதன் திடீரென்று தோன்றி தேவனுடைய நேரடி வெளிப்படுதலை அறிவித்தபோது, அவர் நம்பவில்லை. அவர் அந்த வார்த்தையை சந்தேகித்தார்.

  • லூக்கா 1 மற்றும் ஆதியாகமம் 18 ஐ நீங்கள் படிக்கும்போது, ​​நம் பாவமுள்ள இதயம் தேவனின் வாக்குறுதியை எவ்வாறு சந்தேகிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள சகரியா, மரியாள் மற்றும் சாரா ஆகிய மூன்று தேவ மனிதர்களை ஒப்பிட வேண்டும்.

    • தேவனிடம் இருந்து நேரடியாக பெற்ற வாக்குறுதியைப் பற்றிய சாராவின் சந்தேகம். ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள். சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார். ஆதியாகமம் 18:12,15

    • ஒரு தூதன் சொன்னபோது சகரியா சந்தேகப்பட்டார்.அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்; லூக்கா 1:18

    • அதுபோல மரியாள் தேவதூதனிடம் ஒரு கேள்வி கேட்கிறாள்.தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். லூக்கா 1:30,34

  • சகரியாவின் கேள்வி மரியாளின் கேள்வியிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? என்று நீங்கள் வியக்கலாம். (லூக்கா 1:34) அவள் கர்ப்பவதியாகி இயேசுவைப் பெறுவாள் என்று தேவதூதன் அவளிடம் சொன்னபோது, “நான் கன்னியாக இருப்பதால் இது எப்படி இருக்கும்?” என்று கேட்டாள். தூதன் சந்தேகப்பட்டதற்காக அவளை எதிர்கொள்ளவில்லை. தனக்கும் சாராளுக்கும் ஒரு மகன் பிறப்பான் என்று வாக்களிக்கப்பட்டபோது ஆபிரகாம் சிரித்துக்கொண்டே அவருடைய முதுமைப் பருவத்தைப் பற்றி எடுத்துரைத்தார். சந்தேகப்பட்டதற்காக அவர் திருத்தப்படவில்லை ஆனால், சாரா திருத்தப்பட்டாள் (ஆதி. 17:17). ஆனால் சகரியா தேவதூதரிடம் ஒரு அடையாளத்தைக் கேட்ட போது, அவனுடைய சந்தேகத்திற்காக கடிந்துகொள்ளப்பட்டான். ஏன் இந்த வேறுபாடுகள்?

  • தேவன், ஒவ்வொருவரின் உள்ளத்திலுள்ள மறைவான இரகசியங்களைப் பார்க்கிறார். சகரியாவின் சந்தேகம் ஆபிரகாம் மற்றும் மரியாவிலிருந்து வேறுபட்டது. முதுமையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதை சகரியா தனது மனித இயல்பிலிருந்து பார்த்து, அது சாத்தியமில்லை என்று உறுதியாக நம்பினார். சகரியா ஒரு நீதிமான், இதற்காக அவர் பல வருடங்களாக தேவனிடம் ஜெபித்திருப்பார், இத்தனை ஆண்டுகளாக எதுவும் நடக்காததால், அவருடைய உள்ளத்தில் தேவன் மீது விசுவாசம் இல்லாமல் போயிருந்து இருக்கும் என்று நான் நம்புகிறேன். தூதன் அவருக்கு நினைவூட்டிய தேவனின் சாத்தியக்கூறுகளிலிருந்து பார்க்கத் தவறிவிட்டார்.

தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன். லூக்கா 1:19

  • இது நமக்கும் உண்மைதான். நாம் பல வருடங்கள் தேவனோடு நடந்திருக்கலாம், மேலும் சாத்தியமில்லாத சூழ்நிலையை நாம் சந்திக்க நேரிடலாம். மனித சாத்தியக்கூறுகளால் சர்வவல்லமையுள்ளவரை மட்டுப்படுத்தக்கூடிய நம் இதயங்களை நாம் பார்க்க வேண்டாம். அவர் சாத்தியமற்றவற்றின் தேவன் என்பதற்கு ஏராளமான சான்றுகளை வேதாகமத்தில் நமக்கு கொடுத்துள்ளார். அவரால் கூடாதது ஒன்றுமே இல்லை. நமது சந்தேகங்களுக்கு ஆதாரம் இல்லாதது காரணம் அல்ல. மாறாக நமது பாவ இதயங்களே காரணம்.

சந்தேகம் நீண்ட கால சோதனைகள் மற்றும் ஏமாற்றங்களுடன் தொடர்புடையது

  • சகரியாவும் எலிசபெத்தும் திருமணம் செய்து எவ்வளவு காலம் ஆனது என்பது நமக்குத் தெரியாது. கண்டிப்பாக 30 அல்லது 40 ஆண்டுகள் ஆகியிருக்கும். அந்த சமூகத்தில், குழந்தை இல்லாமல் இருப்பது அதுவும் இத்தனை ஆண்டுகளாக இருப்பது ஏமாற்றத்தை அளித்திருக்கும். தங்களுக்கு ஒரு குழந்தையைத் தந்து தங்கள் ஏமாற்றத்தைப் போக்கும்படி அவர்கள் தேவனிடம் கேட்டிருப்பார்கள், ஆனால் ஆண்டவர் பதிலளிக்கவில்லை. இப்போது அவர்கள் உடல் ரீதியாக குழந்தைகளைப் பெற முடியாத அளவுக்கு வயதாகிவிட்டதால், அவர்கள் தங்கள் ஏமாற்றத்தை ஏற்றுக் கொண்டனர். அது தேவ சித்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். ஆகவே, அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று தேவதூதன் திடீரென்று அறிவித்தபோது, சகரியா சந்தேகப்பட்டான்

  • நம்மில் ஒவ்வொருவருக்கும் சகரியா போன்ற அனுபவங்கள் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், எதற்காகவாவது நீண்ட காலம் ஜெபித்து அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போது "அது நடக்காது" என்று முடிவெடுத்து விடுவோம். பின்னர், நாம் ஜெபிப்பதை நிறுத்திய பிறகு, திடீரென்று நம் ஜெபத்திற்கு பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும். ஆனால், இந்த சூழ்நிலையில் சந்தேகம் கொண்டு "பொறுத்திருந்து பார்ப்போம்" என்று சொல்வோம். ஆனால் நம் உள்ளத்தில் தேவனை சந்தேகிக்கிறோம்.

  • ஆனால், தேவன் தம்முடைய கிருபையினால் நம் சந்தேகங்களையும் மீறி தமது ஆசீர்வாதங்களை ஊற்றுகிறார். சகரியாவின் காரியமும் அப்படித்தான். தேவன் அன்புடன் தம் ஊழியக்காரரை ஒழுங்குபடுத்தினார், சகரியாவின் சந்தேகம் தேவனின் இறையாண்மை திட்டத்தை தடுக்க முடியவில்லை. நமது சந்தேகங்களின் ஆதாரத்தைப் பற்றி புரிந்து கொள்வதே அந்த சந்தேககங்களின் தீர்வின் ஒரு பகுதியாகும். நம் பாவ இதயங்களால் நாம் அனைவரும் சந்தேகங்களுக்கு, பெரும்பாலும் ஏமாற்றங்கள் மற்றும் சோதனைகளுடன் ஆளாகிறோம்.

  • சகரியாவின் விஷயத்தில், தேவதூதன் சகரியாவை ஊமையாகவும் காது கேளாதவராகவும் தாக்கினார். (அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.லூக்கா 1:62). தேவ தூதரை சந்தேகித்ததன் மூலம், அவர் தேவனையே சந்தேகித்தார். தேவன் அதை தீவிரமாக எடுத்துக் கொண்டார். ஒரு அன்பான தந்தையாக, தவறிழைத்த குழந்தைக்கு அவர் மறக்க முடியாத பாடத்தை கற்பித்தார்.

  • நல்ல வேளை, சந்தேகம் ஆபத்தானது அல்ல. தேவனின் கிருபையான கட்டுப்பாடுகளுக்கு நாம் அடிபணிந்தால் மீண்டு வரலாம். பல மாதங்கள் மௌனமாக இருந்தபோது, சகரியா தேவனுடைய வார்த்தையை தியானித்து அவருக்கு அடிபணிந்தார். அவருடைய கிருபையான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அவர் உண்மையுள்ளவராக இருந்தததற்காக சகரியா நன்றியோடிருந்தார். அவர் இறுதியாக தனது பேச்சை மீட்டெடுக்கும்போது பொங்கி எழுந்த துதியின் ஓட்டத்திலிருந்து இது தெளிவாகிறது (லூக்கா 1:68-79). இது வேதாகமத்தின் குறிப்புகள் மற்றும் தேவன் தமது வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றினார் என்பதைப் பற்றியே நிறைந்திருந்தது. தேவன் தம்மை செவிடாகவும் ஊமையாகவும் அடித்தது எவ்வளவு நியாயமற்றது என்று அமைதியாக இருந்த அந்த நாட்களில் சகரியா முணுமுணுத்திருந்தால், அவர் அது போல துதியில் வெளிப்படுத்தி இருக்க மாட்டார்.

சந்தேகத்திற்கு தீர்வு

  • "தேவன் சொல்வதைச் செய்வார்" என்று பார்ப்பதே சந்தேகத்திற்குத் தீர்வாகும். பிரச்சனை மற்றும் தீர்வு ஆகியவற்றில் நாம் மிகவும் ஆர்வமாக இருப்பதால், அவருடைய சித்தத்தை புரிந்துகொள்வதை நாம் அடிக்கடி தவறவிடுகிறோம். சிலருக்கு இது சில நாட்கள் முதல் வருடங்கள் வரை இருக்கலாம், அங்கு தேவன் நமக்கு என்ன சொல்கிறார் என்பதை நாம் பார்க்கத் தவறிவிடலாம். இது தேவனிடம் இருந்து எப்போதாவது பதில் கிடைக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

  • சில சமயங்களில் நமது விதிமுறைகளின்படி நாம் கேட்பதற்குப் பதில் வரவேண்டும் என்று விரும்புகிறோம். தேவன் வேறு வழியைக் காட்டத் தயாராக இருக்கலாம், ஆனால் மாற்று வழியை ஏற்கத் தவறி, அவருடைய ஒவ்வொரு செயலையும் சந்தேகிக்கிறோம்.

  • சந்தேகத்திற்கான தீர்வு என்னவெனில்,

    • பிரச்சனையைப் பற்றிய உங்கள் பார்வைக்கு பதிலாக, தேவன் அதை எப்படிப் பார்க்கிறார் என்று காட்டும்படி ஜெபியுங்கள். இதில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. பல சமயங்களில் நாம் நம் பார்வையில், பிரச்சனைக்காக ஜெபித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நம் வாழ்க்கையில் உள்ள ஒரு பாவம் தேவன் நம் ஜெபங்களுக்கு பதிலளிக்காமல் தடுக்கலாம். தேவனுடைய நோக்கத்தைக் காட்டும்படி நாம் கேட்கும்போது, அதற்கேற்றபடி நாம் நடந்து அவருடைய சித்தத்தின்படி செயல்படலாம். இது நமது ஜெபங்களில் சந்தேகம் ஏற்படுவதைத் தடுக்கும்.

    • பல நேரங்களில் தேவன் சரியான நேரத்தில் பதில் அளிப்பார், அது நாம் விரும்பும் நேரமாக இல்லாமல் இருக்கலாம், அவருடைய நேரம் ஒருபோதும் தாமதமாகாது. நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். நாம் பொதுவாக செய்வது என்னவென்றால்,அவருக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக, நாம் அவரை விட அதிக சக்தி வாய்ந்தவர்கள் போல செயல்படுகிறோம், அவருடைய பதில்களுக்காக அவரை சந்தேகிக்கிறோம்.

    • தேவனுக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள். அவரிடம் உங்கள் வலிமையைக் காட்ட நாத்திகரைப் போல செய்ய முயற்சிக்காதீர்கள். நீங்கள் அவரிடம் விசுவாசம் வைத்து தாழ்மையுடன் இருந்தால் அவர் வல்லமையான காரியங்களைச் செய்வார்.

ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். 1 பேதுரு 5:6


அடுத்த முறை நீங்கள் நீண்ட நேரம் ஜெபித்த ஜெபத்தின் மீது உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அல்லது தேவன் பதிலளிப்பாரா என்பதில் சந்தேகம் இருந்தால், உங்கள் பார்வைக்கு பதிலாக பிரச்சினையைப் பற்றிய அவரது பார்வையைக் காட்டும்படி அவரிடம் கேளுங்கள். இது சந்தேகங்களைத் தீர்த்து, அவற்றை நீக்கி, அவர் மேலுள்ள விசுவாசத்தை பலப்படுத்தும்.

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page