top of page
  • Kirupakaran

தேவனுடைய கவசம்


பாதுகாப்பு படையில் (இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை) சேவை செய்யும் பலர் தங்கள் குழந்தைகளை தேசியபாதுகாப்பு அகாடமியில் சேர்க்க விரும்புவார்கள். இது பாதுகாப்பு படையின் மிக உயர்ந்த நிறுவனம். இதன் மூலம் போர் காலத்தில் நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரு அதிகாரியாக அவர்களால் உருவாக முடியும் . நீங்கள் பாதுகாப்பு அகாடமியில்நுழைந்தவுடன் உங்களை பலப்படுத்த தீவிர பயிற்சி அளிப்பார்கள் .


தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறோம். நம்முடைய தேவன் நம்மை "பாதுகாப்பு அகாடமி” யில் பயிற்சி பெற்றவர்களைப் போலவே இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். அப்பொழுது தான், சாத்தான் நம்மைத் தாக்கும் போது நம்மால் எதிர்கொள்ள முடியும்.


கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் எபேசியர் 6:13 -17 ஐ அறிந்திருக்கலாம், அங்கு பவுல் கடவுளின் கவசத்தைப் பற்றி பேசுகிறார். இந்த போதனையை நாம் பலர் போதித்து கேட்டு இருப்போம். இருந்தாலும் எனக்கு ஆண்டவர் கூறியதை இங்கு வரையறுத்து உள்ளேன்.


நாம் ஏசுவோடு நடக்க அழைக்கப்படுகையில், பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுகிறோம் என்பதை எப்பொழுதும்நினைவில் கொள்ளுங்கள் - தினமும் தேவனை சார்ந்து இருக்க வேண்டும். அப்பொழுது உங்கள் தேவை என்ன என்று அறிந்துதேவனுடைய சித்தத்தின்படி உங்களை ஆசீர்வதிப்பார் (உலகில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய வழி அல்ல), இந்த பாதையில்பல சோதனைகள் மற்றும் தூண்டுதல்கள் வரும். ஆனால் தேவன் உங்களுக்கு என்ன தேவை என்று அறிந்து உங்களுக்குபூர்த்திசெய்வார்.


'அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்துஇரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடையசகோதரருக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்தது. ஆதலால், அவர்தாமே சோதிக்கப் பட்டுப்பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.' எபிரெயர்2:17-18


நாம் உலகில் வாழ்வதற்கு என்னென்ன சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை இயேசு அறிந்திருக்கிறார், வேதம் கூறுகிறது அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்”, அதை ஜெயிக்க அவர் நமக்கு அளிக்கும்கருவிகளில் ஒன்று தேவனுடைய கவசம்.


 

நாம் ஏன் தேவனுடைய கவசத்தை வைத்திருக்க வேண்டும்?


'கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள்பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும்தரித்துக் கொள்ளுங்கள். ' எபேசியர் 6:10-11


1. உங்கள் பலத்தால் போராட்டங்களை வெல்ல முடியாது. வேதம் கூறுகிறது “கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின்வல்லமையிலும் பலப்படுங்கள்”, நம் தேவனை எதிர்க்க எவராலும் முடியாது,அவர் சர்வவல்லமை உள்ள தேவன். ஆதலால் நாம் அவரைச் சார்ந்து இருந்தால் துன்பம் நம்மை அணுகாது.


2. தேவனுடைய பிள்ளைகளுக்கு இந்த தேவனுடைய கவசம் இலவசமாக கொடுக்கப்படுகின்றது. இயேசு ஒரு ஜீவனுள்ள தேவன் என்று நம்புகிற யாவருக்கும் இந்த தேவனுடைய கவசம் கொடுக்கப்படும்.


3. பிசாசின் திட்டங்களுக்கு எதிர்த்து நிற்க தேவன் நமக்கு தேவனுடைய கவசத்தைக் கொடுக்கின்றார். வேதம்கூறுகிறது, “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்றுவகைதேடிச் சுற்றித்திரிகிறான்”. பிசாசின் தந்திரங்களை முறியடிக்க தேவன் இந்தக் கவசத்தை தம்முடையப் பிள்ளைகளுக்கு இலவசமாக தருகின்றார்.


தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகியபிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச்சுற்றித்திரிகிறான். ' 1 பேதுரு 5:8


தேவனுடைய கவசம் - நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்.


  1. நம் எதிரியை புரிந்து கொள்ளுதல்

  2. கிறிஸ்தவர்களுக்கு தேவையான பயிற்சி

  3. ஆன்மீக போர்


 

நம் எதிரியை புரிந்து கொள்ளுதல்


ஒரு போராளி போருக்கு செல்லும் முன் தன்னுடைய எதிரியின் பலத்தையும் / பலவீனத்தையும் அறிந்து கொள்வதுஅவசியம். அது போல தான் நாம் சாத்தானை குறித்து அறிவதும் மிக அவசியம்.


'ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத் தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்த கார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின்சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. 'எபேசியர் 6:12


1. கிறிஸ்தவர்களாகிய நம் போரட்டங்கள் ஆட்சியாளர்களுக்கோ ,அதிகாரிகளுக்கோ , அல்லது சக மனிதர்களுக்கோஎதிரானதல்ல. இந்த போராட்டம் சாத்தானுக்கு எதிரானது – “இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.


2. ஒரு வேளை நீங்கள் ஒரு கஷ்டத்தின் மத்தியில் இருப்பீர்கள் என்றால், அந்த கஷ்டம் ஒரு மனிதரால் வந்து இருக்ககூடும் என்று நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் அதற்கு பின்னால் சாத்தானுடைய ஆவியின் தூண்டுதல் இருக்கும். அதன் நிமித்தமே அது உங்களுக்கு வந்திருக்கும் . சாத்தானுடைய ஆவி இருளின் ஆவி, அது நம்முடைய தேவனின்சித்தத்திற்கு எதிராய் செயல்படும்.


3. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், இதே போல் நம்முடைய தேவனுக்கும் சாத்தான் பாடுகளைக் கொடுத்தான் , பலசுய இச்சைகளையும் கொடுத்தான். ஆனால் நம் இயேசு கல்வாரியின் சிலுவையில் சகலத்தையும் ஜெயம் கொண்டார் .அவர் வானத்தையும் பூமியையும் ஆளுகிற ஒரு உயிர்த்தெழுந்த ராஜா. பாவத்தின் மூலம் வரும் சாவை வென்றவர் . சாத்தானுடைய எந்த ஆவியும் தேவனிடத்தில் ஒன்றும் செய்யமுடியாது, தேவன் தம்முடைய பிள்ளைகளைக் காக்க வல்லவர். ஒரு கோழி எப்படி தன் குஞ்சுகளைக் காக்குமோ அதை விட ஆயிரம் மடங்கு நம்மைக் காக்கும் வல்லதேவன் அவர்.


 

கிறிஸ்தவர்களுக்கு தேவையான பயிற்சி


போருக்கு போகும் முன் ஒரு போராளிக்கு மிக கடினமான பயிற்சி கொடுத்து போருக்கு அனுப்புவார்கள். ஒரு "நேவிசீல்" என்றால் அவருக்கு மிக கடினமான உடற்பயிற்சி மற்றும் மனப்பயிற்சி கொடுக்கப்படும், இதன் மூலம் அவர் எந்தகடினமான போரையும் எதிர்கொள்ளமுடியும்.


அது போல தான் கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஒரு "நேவி சீல்" போன்ற பயிற்சி தேவை. ஆனால் பல கிறிஸ்தவர்கள், பயிற்சி இல்லாமல் சாத்தானோடு போராட செல்லுகின்றார்கள்.


பயிற்சியில் ஒழுக்கம் மிக முக்கியம். ஒரு ராணுவ வீரரைப் பார்த்தால் , காலையில் ஓடுவது , ஷூட்டிங் செய்வது போன்ற பயிற்சிகளை அவர் தவறாமல் செய்வார்.


'ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும்திராணி யுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை யும் எடுத்துக்கொள்ளுங்கள். சத்தியம்என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்க வசத்தைத் தரித்தவர்களாயும்; சமாதானத்தின் சுவிசேஷத்திற் குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; ' எபேசியர் 6:13-15


அதே போன்று தான் கிறிஸ்தவர்கள் ஆகிய நமக்கு, நம் தேவனுக்குண்டான காரியங்களில் ஒழுக்கம் மிக அவசியம் . மூன்று காரியங்களில் நமக்கு பயிற்சி தேவை.


a. சத்தியம் என்னும் கச்சையை தரித்துக் கொள்வது – தேவனுடைய சத்தியம் (பைபிள் ), அதுவே நம்முடைய முதல் கவசம். இதை நம்முடைய இடுப்பில் தரித்துக் கொள்ளுமாறு பவுல் கூறுகிறார். ஒரு போராளியின் பெல்ட் பல ஆயுதங்களை மாட்டி கொள்ள உதவும். அது போன்று தான் இந்த சத்தியம்(பைபிள்) நாம் தேவனிடத்தில் ஒன்றுசேர உதவுகின்றது.


கடவுளின் வார்த்தை உண்மையானது என்றும் மாறாதது.


இந்த உண்மையை அறிந்து கொள்ள நாம் வேதத்தை தினமும் தவறாமல் வாசிக்கவேண்டும். வேதம் எல்லா வகையான மனிதர்க்கும் ( மாணவர் , அரசர் , பெற்றோர் , அதிகாரி மற்றும் அனைவருக்கும் ) உன்னதமான வழிமுறைகளை போதிக்கும்.


வாசிப்பது ஒரு கடமை , என்ற எண்ணத்தோடு வேதத்தை வாசிக்காதீர்கள். ஒரு தேடலோடு வேதத்தை வாசிக்கும் போது, நாம் கடவுளின் திட்டத்திலிருந்து எங்கே விலகியிருக்கிறோம் என்பதை நம் ஆத்துமா நமக்கு வெளிப்படுத்தி நாம் ஆண்டவரோடு இணைந்திருக்கச் செய்யும். தினமும் காலையில் வேதத்தை வாசித்து நாம் அந்த நாளை தொடங்கும் போது , நம் வாழ்க்கையில் ஆண்டவரை நாம் முதல் இடத்தில் வைத்திருக்கிறோம் என்று தேவனிடம் கூறுகிறோம்.


மொபைல் போனில் வேதம் வாசிப்பதை தவிர்த்து முடிந்தவரை பைபிளை ஒரு புத்தக வடிவில் படியுங்கள். நாம் புத்தக வடிவில் படிக்கும் பொழுது மனப்பாடம் செய்து, வசனங்களைக் கோடிட்டு நாம் கற்றுக் கொண்டதைக் காத்துக் கொள்ளலாம். மேலும் இது மொபைல் போனின் பல கவனச்சிதறல்களிலிருந்து விடுபட உதவுகிறது.தினமும் வேதம் வாசிக்க நேரம் ஒதுக்கப் பழகுங்கள்.


b. நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரியுங்கள் - பவுல் "நீதியென்னும் மார்க்கவசத்தை" என்று குறிப்பிடுகிறார், இது தேவனுடைய பரிசுத்த ஆவியை குறிக்கின்றது.


நீங்கள் வேதத்தை வாசிக்கும் போது ஆண்டவரின் பரிசுத்த ஆவி உங்களிடத்தில் பேசி சமாதானத்தை தருவார். அந்த வார்த்தை உங்களுக்குள் ஒரு கிரியை செய்யும் . நாம் தேடலுடன் படிக்கும்போது தான் அந்த ஆவி நமக்குள்கிரியை செய்யும்.


அநேக நேரங்களில் நமக்கு பல காரியங்களை நம்முடைய சுயத்தில் இருந்து செய்யத் தோன்றும். நாம் தேவனைசார்ந்து இருக்கும் போது ஆண்டவரின் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் என்ன எண்ணங்கள் வரவேண்டும்என்பதைக் குறித்து வழிநடத்திடுவார். பல நேரங்களில் வீண் எண்ணங்கள் நம்மிடத்தில் வராமல் காத்துக் கொள்வார்.


நாம் எல்லோரும் டாக்ஸியில் பயணிக்கும்போது “கூகிள் மேப்ஸ்” பார்த்து இருப்போம், இது “ஜிபிஎஸ்” என்ற ஒருசெயலி மூலம் வேலைசெய்கின்றது. அதுபோல நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் பரிசுத்த ஆவி தேவனுடையபிள்ளைகளை ஆண்டவரின் சித்தத்திற்கு இணங்க வழிநடத்தும்.


பல நேரங்களில் சாத்தான் ஆண்டவரின் சித்தத்திற்கு எதிரியாய் செயல்படுவான், ஆனால் பரிசுத்த ஆவி இதில்இருந்து நம்மைக் காத்துக்கொள்ளும்.



c. சமாதானத்தின் நற்செய்தியை பெற்றுக்கொள்ளுங்கள் - தேவனிடத்தில் நாம் ஜெபித்த உடன் வரும் சமாதானம் தான் "சமாதானத்தின் நற்செய்தி" என்று பவுல் கூறுகிறார். கிறிஸ்தவர்களுக்கு ஜெபம் ஒரு சுவாசம் போன்றது. இதன் மூலம் நாம் நம்முடைய தேவனிடத்தில் பேச முடியம்.


பல கிறிஸ்தவர்கள் கஷ்டம் வரும்போது தான் ஆண்டவரைத் தேடுகிறார்கள். ஆனால் தேவனுடைய கவசத்தைகொள்ள வேண்டும் என்றால் அனுதினமும் ஜெபிக்க வேண்டும் . சந்தோஷத்திலும் , கஷ்டத்திலும் எல்லாவற்றிலும்நாம் ஜெபிக்க வேண்டும்.


'நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களைஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள்சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். ' பிலிப்பியர் 4:6-7


முதலாவது காலை எழுந்தவுடன் ஜெபியுங்கள். இது மிக முக்கியமான ஒரு பயிற்சி. இதன் மூலம் ஆண்டவரே முதல் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஆண்டவருடைய பரிசுத்த ஆவி உங்களை அனுதினமும் வழிநடத்தும். ஒருவேளை நீங்கள் சோர்வாய் இருந்தால் தேவனுடைய சமாதானம் உங்கள் மனதை சமாதானப்படுத்தும்.


உங்கள் பிரச்சனைகளை தேவனிடத்தில் ஜெபத்தின் மூலம் சொல்லுங்கள். நம் தேவன் அதைக் கேட்டு அதற்குஉண்டான வழியைக் காட்டுவார். ஜெபித்தவுடன் உங்களுக்கு தேவனுடைய சமாதானம் உண்டாகும் அது தான்"சமாதானத்தின் நற்செய்தி" என்று பவுல் கூறுகிறார்.


போராட்டங்கள் அதிகமாக இருந்தால் உபவாசம் இருந்து ஜெபியுங்கள். நம்முடைய தேவன் நம் உணர்வை புரிந்துகொள்ளும் ஒரு உன்னதமான தகப்பன்.


 

ஆன்மீக போர்


ஒரு போராளி, எதிரிகளை எதிர்த்துப் போராடுவதற்கு தனது எல்லா உபகரணங்களுடனும் போர்க்களத்திற்குள் செல்வதைப்போல, கிறிஸ்தவர்களான நாம் போராட்டங்கள் வரும்போது தேவன் கொடுக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தவேண்டும்.


நாம் ஆண்டவரை பின்பற்றும்போது சோதனைகள் , கஷ்டங்கள் நமக்கு அதிகம் உண்டாகும். இது பல வடிவங்களில் நமக்கு வரும், நம் சொந்தங்கள் மூலம் , நம்முடைய ஆபீஸ் சகாக்கள் மூலம் , நம்முடைய உடல் நோய் மூலம் இன்னும் பல வடிவங்களில் பல கஷ்டங்கள் வரும். இதைக் கண்டு பயந்து விடாதிருங்கள் . சாத்தான் நமக்கு பயம் / பதட்டம் மூலம் ஆண்டவரின் ஆவியை நம்மிடத்தில் இருந்து பிரிக்க உபயோகிப்பான்.


இந்த போராட்டத்தின் போது மூன்று காரியங்களைக் கடைபிடிக்க பவுல் நமக்கு போதிக்கிறார்.


'பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும்மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர் களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும்தலைச்சீராவை யும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். எந்தச் சமயத்திலும்சகலவிதமான வேண்டுத லோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்தமனவுறுதியோடும் சகல பரிசுத்த வான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள். ' எபேசியர் 6:16-18


இந்த போராட்டத்தை ஒரு போராளிக்கு ஒப்பிடுகிறார்


a. விசுவாசமென்னும் கேடகத்தை - விசுவாசமென்னும் கேடகம் போரில் ஒரு முக்கியமான கருவி. எல்லாபோராட்டத்தின் மத்தியிலும் நம் தேவன் நம்மைக் காத்து நடத்துவார் என்ற விசுவாசம் மிக முக்கியம்.


'விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன்அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். ' எபிரெயர் 11:6


தேவனிடத்தில் விசுவாசம் என்பது நம் சூழல் நமக்கு எதிராய் இருக்கும் நேரத்தில் நாம் ஆண்டவர் மீது கொள்ளும்விசுவாசம் தான் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் விசுவாசம். அந்த சூழலில் என்ன நடக்கும் என்று தெரிந்துதேவனிடத்தில் விசுவாசிப்பது விசுவாசம் அல்ல, என்ன என்று தெரியாத போது இருக்கும் விசுவாசம் தான் மிகமுக்கியம்.


தேவனை நம்புங்கள். அவர் உங்கள் சூழ்நிலைகளைக் காட்டிலும் பெரியவர். அவர் நாம் எதிர்பாராத விதத்தில்இருந்து வழிகளைக் காண்பிப்பார். ஆனால் நாம் அவர் மீது விசுவாசம் வைத்து இருக்கவேண்டும் , உங்கள் சூழ்நிலைஎப்படி சென்றாலும் இந்த விசுவாசம் மாறக்கூடாது.


சொல்வது எளிது ஆனால் செய்வது கடினம். இதைக் குறித்து தேவனிடத்தில் கேளுங்கள். அவரை சார்ந்து இருக்கும் சக்தியை அவர் உங்களுக்குத் தருவார். ஒரு வேளை உங்களுக்குள் அவிசுவாசம் உண்டாகும் போது ஜெபம்பண்ணுங்கள்.



b. இரட்சணியமென்னும் தலைச்சீராவையும் – “இரட்சணிய மென்னும் தலைச்சீரா”, தேவனுடைய ஆவியைக் குறிக்கிறது.


ஒரு போரில் தலைக்கவசம் மிக முக்கியமான ஒன்று. தலையில் அடிபட்டால் நம் உடலைக் காப்பது மிகக் கடினம். அதுபோலத்தான் நம் ஆன்மீகப் போராட்டங்களில் இந்த தலைச்சீராவைக் காப்பதும் மிக முக்கியம்.


போராட்டத்தின் போது நாம் நம்முடைய தேவனை சார்ந்து இருக்கவேண்டும் (விசுவாசத்தின் மூலம்) என்று பார்த்தோம். அப்படி விசுவாசிக்கும் போது நம் தேவன் நம்மைத் தம்முடைய ஆவியினால் வழிநடத்திடுவார்.


இந்த ஆவியானவர் பல நேரம் வேத வசனம் மூலம் பேசுவார். பல நேரம் நம் நண்பர்கள், பெற்றோர் மூலம், சில நேரம்நாம் எதிர்பாராத இடத்தில் இருந்து நமக்கு வழிகளை அனுப்பிக் கொடுப்பார். இது தேவனுடைய ஆவியின் நிமித்தமேநடக்கின்றது. சாத்தான் என்ன திட்டங்கள் போட்டாலும் அது தேவனிடம் போராடமுடியாது.


இந்த ஆவி ஜெபத்தின் மூலம் நமக்குக் கொடுக்கப்படுகின்றது.



c. தேவவசனமாகிய ஆவியின் பட்டயம் – தேவவசனமாகிய ஆவியின் பட்டயம் - நம்முடைய வேதம் மற்றும் ஜெபம்


'நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களைஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள்சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும். ' பிலிப்பியர் 4:6-7


நாம் இந்த ஆவிக்குரிய போராட்டத்தில் தேவனை சார்ந்து இருப்பதைக் குறித்து படித்தோம். அவ்வேளையில் நாம்வேதத்தைத் தியானித்து ஜெபிக்கும் போது, அந்த போராட்டத்துக்கு உகந்த வார்த்தைகளை தேவன் நமக்குத் தருவார். நீங்கள் ஜெபிக்கும் போது தேவனுடைய சமாதானம் உங்கள் ஆவியின் மூலம் வழிநடத்தும் . ஆண்டவர் உங்களுக்குஎட்டாத காரியத்தில் இருந்து பல கதவுகளைத் திறப்பார்.


ஒரு வேளை, ஜெபித்த பிறகும் உங்களுக்கு ஒன்றும் நடக்காவிடில், இன்னும் உபவாசம் இருந்து ஜெபம் செய்யுங்கள்.கர்த்தர் அந்த போராட்டங்களை முறியடிப்பார்.


ஒருபோதும் தேவனைக் குறை சொல்லாது இருங்கள் . என்ன பிரதர் நான் ஜெபம் பண்ணினேன், ஆண்டவர் ஒன்னும் செய்யலை, ஆண்டவர் இருக்கிறாரா இல்லையா தெரியல னு சொல்லாதீங்க. அது தான் அவிசுவாசம். அப்படி சொன்னால் அது ஆண்டவருக்கு உகந்த பேச்சு அல்ல.


 


சுருக்கம்


  1. நம் ஆண்டவர் வலிமையானவர், வல்லமை வாய்ந்தவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் கல்வாரிசிலுவையில் மரணத்தை வென்றார். சாத்தானை ஜெயித்தார். நமக்கு உண்டாகும் ஆவிக்குரிய போராட்டங்கள்கடவுளிடம் மிக நெருக்கமாக இருக்க செய்யும் செயல்கள்

  2. தேவனுடைய கவசம் - தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

    1. நம் எதிரியை புரிந்து கொள்ளுதல் - இந்த போராட்டம் - அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம்

    2. கிறிஸ்தவர்களுக்கு தேவையான பயிற்சி

      1. சத்தியம் என்னும் கச்சையைத் தரித்துக் கொள்ளுங்கள்

      2. நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரியுங்கள்

      3. சமாதானத்தின் நற்செய்தியை பெற்றுக்கொள்ளுங்கள்

    3. ஆன்மீக போர்

      1. விசுவாசமென்னும் கேடகம்

      2. இரட்சணியமென்னும் தலைச்சீரா

      3. தேவவசனமாகிய ஆவியின் பட்டயம்


 


290 views1 comment

Recent Posts

See All
bottom of page